காஞ்சியில் காணக்
கிடைக்காதவரைக் காணப் பெருந்திரள்
திருச்சியில் கண்டவரையே காணப் பெருந்திரள்
நாவலரிடம் நமது கழகம்
தம்பி!
நன்றி! உளங்கனிந்த நன்றி!
அன்பு கலந்த நன்றி! மகிழ்கிறேன், பெருமைப்படுகிறேன், பூரித்துப்
போகிறேன். கவிதை தீட்டக்கூடக் கருத்து துள்ளுகிறது -
என் செய்வேன்! என் சிந்தையெல்லாம், தோள்களெல்லாம் பூரிக்குது!!
வெற்றி! மகத்தான வெற்றி!
மறக்கொணா வெற்றி! வரலாற்றுச் சுவடியில் இடம் பெறத்தக்க
வண்ணம் நிரம்பிய வெற்றி!
உன் செயல் வண்ணம் கண்டேன்!
எதிரே நின்று உருட்டி மிரட்டிய ஓராயிரம் இன்னலும் பிடரியில்
கால்பட ஓட்டம் பெருநடையாய்ச் சென்றிடக் காண்கிறேன். உள்ளம்
உவகைக் கடலாகிவிட்டது - ஒன்றின்மீதொன்றாக, ஒன்றைத் துரத்திக்
கொண்டு மற்றொன்று என்ற முறையில் நெஞ்சில் களிப்பு அலைகள்!!
அல்லும் பகலும் ஆயாசமும்,
அச்சமும் பிடித்தாட்டிய நிலையில் இருந்தேன். - அண்ணா என்ற
குரல் கேட்டுத் திரும்பினேன், என் அருமைத் தம்பி! உன்னை
நான் கண்டேன் - உன் கை வண்ணத்தை எழிலோவியமாக அமைத்த "வள்ளுவர்
நகர்' எடுத்துக் காட்டிற்று! உன் ஆர்வத்தை வானளாவப் பறந்த
நம் கழகக்கொடி காட்டிற்று! எங்கும் உன் முழக்கம் கேட்டேன்
- புதியதோர் இன்பம் கண்டேன். போற்றுகிறேன் உன்னை. "புவியோரே!
புவியோரே! காண்மின் இக்காட்சியை! கையில் ஊமையரோ! கருத்தழிந்த
நிலையினரோ! செய்தொழில் மறந்தவரோ மனித உருக்கொண்ட பதுமைகளோ!
என்றெல்லாம் எண்ணி எண்ணி ஏங்கிக் கிடந்தோம் - எள்ளி நகையாடியும்,
இழிமொழியால் தாக்கியும் ஏதறிவர் தீது பேசலன்றி என்று
இயம்பியும் எம்மை வாட்டிய வன்கணாளரைத் தாங்கி கிடக்கும்
வையகமே! இதோ காண்பாய், செயல் வீரர் தரும் சித்திரவதை,
கொள்கைக் கோமான்கள் கட்டியுள்ள கோட்டையினைப் பாராய்,
அவர்தம் படைக்கலனாகத் திகழும் ஆர்வம் காண்பாய், அவர்தம்
களிப்பொலி எனும் முரசம் கேட்டாய். அதோ, அதோ இங்கு,
அங்கு, எங்கும் ஆயிரக்கணக்கில் பல்லாயிரக் கணக்கில், இலட்சக்கணக்கில்
- நெடுஞ்சாலைகளெல்லாம் அணி அணியாக வந்த வண்ணமிருக்கும்
இந்த வீரர் கூட்டத்தைப் பாராய், இங்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சியை,
இன எழுச்சியை, விடுதலைப் பேரார்வத்தை எடுத்துக் கூறாய்''
- என்றெல்லாம் குன்றேறிக் கூவத் தூண்டுகிறது.
திருச்சி மாநில மாநாட்டில்
வெற்றியை நிச்சயமாக எதிர்பார்த்தேன். ஆற்றல்மிக்கதோர்
அணிவகுப்பு நம் தாயக விடுதலைக்காகத் தயாராகிவிட்டதை அறிந்தவன்
என்பதால், நான் மாநில மாநாடு மகத்தானதோர் வெற்றியாகவே
திகழும் என்பதிலே நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால், தம்பி,
என்னைத் திக்குமுக்காடச் செய்துவிட்டாய் - தேடித் தேடிப்
பார்க்கிறேன் தெள்ளு தமிழில் - வெற்றி என்ற சொல் போதவில்லை,
நாம் பெற்றதை விளக்க, புத்துயிர்பெற்றோம் என்பதா - புதியதோர்
உலகு கண்டோம் என்பதா - பொற்காலத்துதயம் என்பதா - மாற்றார்
புறமுதுகிடும் காட்சியினைக் கண்டோம் என்பதா - நான் திணறுகிறேன்
தம்பி, திட்டமான ஓர் சொல் கிட்டவில்லை.
வெற்றிகள் பல நாம் பெற்றிருக்கிறோம்.
தியாகத் தழும்பு எனும் விருதுகளைப்
பெற்றிருக்கிறோம்.
நமது மாநாடுகளே, அறிவும்
திருவும் நடமிடும் மன்றங் களாகத்தான் எப்போதும் காட்சி
தருவன. ஆனால், திருச்சியில் நான் கண்டது வெறும் வெற்றியா.
. . அல்ல தம்பி, அல்ல! தமிழகம் தன்னிகரற்ற எழிலுடன் என்
முன் நின்று, ஏடா, மூடா, நானிருக்க, நீ கவலைகொள்வது எதுக்கு?
என் மடியில் தவழ்ந்திடும் பேறு உனக்கு இருக்கும்போது
எத்தரும் பித்தரும் சத்தமிடுவதுபற்றி நீ ஏன் ஆயாசப்படுகிறாய்?
- இதோ நான் உன் முன் நிற்கிறேன் - என் எழில் விழி உமிழும்
ஒளி, மாற்றாரின் வஞ்சனையைச் சுட்டுக் கருக்கிப் பிடிசாம்பலாக்கிவிடும்
- அஞ்சற்க; ஆயிரம் எண்ணி அயர்ந்துபோய், செயலற்று இருந்து
விடாதே, விழி, எழு, இதோ நான் - உனக்காக நான் - என்றல்லவா
முழக்கமிட்டது.
அந்திசாயும் வேளையிலே, ஆற்றோர
வெண் மணலில், மென்காற்றுத் தாலாட்ட மெல்லியதோர் துயி-னில்
வீழ்ந்து பட்ட வீரனிடம், துயில் நீக்கி எழுந்து வாராய்,
தோகையாள் அழைக்கின்றேன், ஆரத் தழுவிடாயோ, அன்பு முத்தம்
தாராயோ என்று வீணாகானத்துடன் பாடி, வண்ண மங்கை அருகே
வந்தால். . . வந்த வனிதையும் அந்த இளைஞன் உள்ளத்தில் நீண்ட
பெரு நாட்களாக இடம் பெற்றிருந்த இளமங்கைதான் எனின். .
. எவ்வண்ணம் இருக்கும்.
தம்பி, திருச்சி உன்போன்ற
இளைஞர்கட்கெல்லாம், இது போலல்லவா அமைந்தது.
தாயே, உன் நிலை கண்டு உளம்
நொந்து, உனக்கு வந்துற்ற இடரும் இழிவும் உடைத்திடவும்
துடைத்திடவும் ஆற்றலற்றுப் போனேனே என்று எண்ணி அயர்ந்திருந்த
என்முன் நின்று, மகனே, சுரந்தெழும் உன் உள்ளன்பு, என்
கண்ணீரைத் தடுத்து விட்டது - விலங்குகள் என்னை வருத்தமுறத்தான்
செய்கின்றன. எனினும், அதனை உடைத்திடும் ஆற்றல்பெற்ற மகன்
நீ இருக்கிறாய் என்று அறிவதால் ஏற்படும் ஆனந்தம், என்
அல்லலைக்கூட ஓரளவு குறைக்கின்றது, மகனே! புலம்பியது போதும்,
புறப்படு. இதோ என் ஆசி உனக்குக் கவசமாகி நிற்கும், என்
வரலாறு, உனக்கு வீரமூட்டும், புறப்படு, போரிடு, வெற்றி
பெறு - என்று தாயகம், உச்சிமோந்து கூறிடும் காட்சியாகக்
காணப்பட்டது, திருச்சி மாநாடு - அகநானூற்றுப் பருவத்தைக்
கடந்துவிட்ட என்போன்றோருக்கு.
அனைவருக்கும், தம்பி, இது
வெறும் வெற்றியாக மட்டும் தோன்றவில்லை - மாநாட்டிலே சம்பத்
எடுத்துச் சொன்னபடி இலட்சியப் பாதையிலே நாம் எத்துணை
நெடுந்தூரம் முன்னேறி இருக்கிறோம் என்பதை மட்டுமல்ல,
குறிக்கோள் வெற்றி பெற, இன்பத் திராவிடம் காண, நாம் மேலே
செல்லவேண்டிய பாதை அதிகமில்லை என்பதனையும் திருச்சி மாநில
மாநாடு காட்டிற்று. வெற்றி என்ற சொல் மட்டும், எங்ஙனம்,
இந்த நிலையினை விளக்கிடப் போதுமானதாகும்.
தம்பி, மோனநிலை என்று மதத்துறையினர்
ஓர் கட்டத்தைக் கூறுவர். எண்ணவேண்டியதை எல்லாம் எண்ணி
யான பிறகு, சொல்லவேண்டுவனவற்றைச் சொல்-யான பிறகு, மோனநிலை
பிறக்கும் என்கிறார்கள். அப்போது, ஏதும் சொல்வதும் தேவைப்படுவதில்லையாம்.
மணம் வீசும் சந்தனம், மரமாக இருக்கும்போது, ஒலியும் கிளப்புகிறது
- அரைபட்டு உடலில்போய்ச் சேர்ந்தான பிறகு - மணம் மட்டுந்தானே
இருக்கிறது, ஒலியில்லை.
நான் "மோனநிலை'யில் இருந்திட
விரும்புகிறேன்.
மாநில மாநாட்டின் வெற்றி,
அதன் மகத்தான தன்மை, அதற்கான காரணங்கள், இவைகளைக் குறித்தெல்லாம்
பேச, எழுதக்கூடத் தோன்றவில்லை. அந்தக் கட்டத்தைக் கடந்ததோர்
நிலை - மோனநிலை என்கிறார்களே அது, இதுதான்போலும்.
"என்னடி பெண்ணே! புன்னகைக்குக்
காரணம்? கிள்ளையும் இல்லை எதிரே; சுழலாடவும் காணோம்!
தானாகப் புன்னகை புரிந்தபடி இருக்கிறாயே. . .'' - தாய்
கேட்கிறாள்.
"ஒன்றுமில்லை அம்மா!'' -
அவ்வளவுதான் மங்கையால் கூற முடிகிறது.
"இதென்ன வேடிக்கை; பித்துப்
பிடித்த பெண்ணே, காரண மற்றுக் களிப்பு வருமோ?'' என்று
தாய் கடாவுகிறாள், உண்மையை உணர முடியாத தாயே, உன்னிடம்
நான் எப்படிச் சொல்வேன், என் புன்னகையின் காரணத்தை! -
என்று மகள் கூறவில்லை, எண்ணிக்கொள்கிறாள் - புன்னகை மேலும்
மலருகிறது!! அகநானூற்று நிலையுடன் தமிழக இல்லங்கள் இருந்த
நாட்களில் காணக் கிடந்த காட்சி இதுபோன்றது. மாநில மாநாட்டு
வெற்றி தரும் மகிழ்ச்சியை என்னாலும் இப்போது எடுத்து
இயம்பவும் முடியவில்லை - சுவையுள்ள தேன், சுகமளிக்கும்
தேன் - என்று கூறிக்கொண்டிருக்க முடிகிறதா, தேன் பருகும்போதும்
சரி, தேன்மொழியாளரிடம் சொல் விருந்து பெறும்போதும்
- அதுபோல்தான், மாநில மாநாடு அளித்த மகிழ்ச்சியைச் சுவைத்துக்கொண்டு
மற்ற எல்லாவற்றையும் மறந்து கிடக்கிறேன் - மோனநிலை, -
எனவே, அதிகமாகக்கூடப் பேச விருப்பம் எழவில்லை.
மாநாடு எப்படி?
வெற்றி.
மக்கள் திரளாக வந்தனரோ?
வெள்ளம்போல்
என்னென்ன சிறப்புகள் மாநாட்டிலே,
சொல்லு கேட்போம்.
சிறப்புகளா. . .? மாநாட்டுச்
சிறப்புகளா. . .? - என்று வாய்விட்டுக் கூறுகிறேன், மேலால்
பேச விருப்பம் எழவில்லை, என் உள்ளத்தை விட்டு நீங்காத
அந்த எழிலைக் காண்கிறேன், இன்புறுகிறேன் - எடுத்தியம்பும்
நிலையையும் இழந்து கிடக்கிறேன்.
இதோ நான், இதனை எழுதிக்கொண்டிருக்கும்
நேரத்தில், நானிருக்கும் இடத்திலிருந்து ஆறேழு கல் தொலைவில்
வினோபா இருக்கிறார்.
அவருடைய வருகைக்காக "சர்வோதய
நகரம்' காஞ்சியின் மற்றோர் கோடியில் இருக்கிறது. இடையில்
மூவாயிரம் போலீஸ் வீரர்களும், சில நூறு அதிகாரிகளும்,
பல கோடி ரூபாய்களின் சொந்தக்காரரும் உள்ளனர். சர்வோதய
நகரின் பந்தல் அமைப்புக்கும் பாதை அமைப்புக்கும், உண்டி
உறைவிடம் அமைப்பதற்கும் ஊராள்வோர், நிபுணர்களைக்கொண்டு
திட்டம் தீட்டி பயிற்சி பெற்றோரைக்கொண்டு உருவாக்கி
வைத்துள்ளனர்.
நேற்றைவிட இன்று வண்டிகள்
அதிகம் - நாளைக்கு மேலும் அதிகமாகும் - பாதை நடுவில் செல்லாதீர்கள்
- ஓரமாகச் செல்லுங்கள் - என்று அறிவுரை புகன்றபடி போலீஸ்
வான் செல்லுகிறது. காஞ்சி நகரில், பெரியதோர் நிகழ்ச்சியாக
இஃது உருவாக்கப்பட்டு வருகிறது. வினோபா வருகிறார் என்றாலே,
போதும், விசேஷமான மாநாடாக்கிவிடலாம். இங்கோ வினோபா
மட்டுமல்ல, பாபு ராஜேந்திரர் வருகிறார், - ஜெயப் பிரகாஷ்
நாராயணன் வருகிறார், - கவர்னர் பிரகாசா வருகிறார், - முதலமைச்சர்
காமராஜர் வருகிறார், - வேறு மாநிலங்களின் காமராஜர்கள்
சிலர் வருகின்றனர் - ஆசிரியப் பெருங்குழு வருகிறது, -
கல்வித்துறை நிபுணர்கள் வருகிறார்கள் - கலாச்சாரக் கோஷ்டிகள்
வருகின்றன - கனதனவான்கள் வருகின்றனர் - வந்துகொண்டு இருக்கின்றனர்
- இவற்றை எல்லாம்விட 40 இலட்சம் ஏக்கருக்குமேல் "தான நிலம்'
இருக்கிறது - பங்கு போட்டிடும் திட்டம் தயாரிக்கப் போகிறார்கள்.
வினோபாவை அடிக்கடி காண
முடியாது.
ஜெயப்பிரகாசரும் வந்த வண்ணம்
இருப்பவரல்ல.
எனவே, காணக் கிடைக்காத காட்சியைக்
காண, பெருந் திரள் குவியலாம் காஞ்சியில்.
இப்போதைக்குப் பெரும்
போலீஸ் படை குவிந்துவிட்டிருக்கிறது.
சர்க்காருடைய நிர்வாக யந்திரம்,
மும்முரமாகவும், திறம்படவும் ஒரு புறம் பணியாற்றுகிறது;
"சாது சன்யாசிகள்' வரிசையில் சேர்ந்து சன்மார்க்கம் போதிக்கும்
வினோபாவின் செல்வாக்கு மற்றோர்புறம் பணியாற்றுகிறது.
இதனால் இங்கு எழிலும் ஏற்றமும், பெருங் கூட்டமும் பிரமுகர்
நடமாட்டமும் மிகுதியும் இருந்திடக் காரணமிருக்கிறது.
இவ்வளவுக்கும் பிறகு, நடைபெற
இருக்கும் வரதர் தேர் திருவிழாவின் துணையையும் நாடுகின்றனர்.
தம்பி! வறண்ட தலையினர் கூடினோம்
திருச்சியில். வாழ்ந்துகெட்ட இனத்தினர் கூடினோம். வீழ்ச்சியுற்ற
நிலையி னின்றும் மீட்சிபெற, எழுச்சிபெறக் கூடினோம். எண்ணி
எழுபது போலீஸ் உண்டா? ஏற்பாடுகளைக் கவனிக்க வசதிகள் உண்டா?
பிரமுகர்களின் கடைக்கண் பார்வை உண்டா? இல்லை. இல்லை! நீ!
உன் உள்ளத்தில் உள்ள உவகை! திருச்சியின் எழிலுக்கு இவை
தான் இருந்தன. ஆனால் இவை எவ்வளவு மகத்தானவை என்பதை நான்கு
நாட்கள் கண்டேன் - நான் மேற்கொண்டுள்ள பணியின் மேன்மையிலே
எனக்கு எப்போதும் உள்ள நம்பிக்கை, ஆயிர மடங்கு மேலோங்கி
வளர்ந்தது.
ஒரு இலட்சம் என்று முதல்
நாள் கூறினார் - நாலாம் நாள், மூன்று இலட்சத்துக்குக்
குறையாது என்றனர் - நமது தோழர்கள் அல்ல - ஊரார்.
யாரைக் காணக் கூடினர்? காண்பது
பெரும் பேறு என்று கருதத்தக்க நிலைபெற்ற ஞானவான்களையா?
மனமருளை ஓட்டி, அஞ்ஞானத்தை விரட்டிடும் ஆற்றல் பெற்ற அருளாளர்களையா?
திடுக்கிடவைக்கும் திட்டம் தந்தோர், உலகு கண்டு பதறத்தக்க
போர்வகை கண்டோர் ஆகியோர்களையா? கவர்னரையா? முதலமைச்சர்களையா?
மூதறிஞர்களையா? இல்லை தம்பி, இல்லை. சாமான்யர்களைக் காணக்
கூடினர் - சதாசர்வ காலமும் யாரை, சந்தைச் சதுக்கத்திலும்,
அங்காடிப் பக்கமும் ஊருணித் திட-லும் காணுகின்றனரோ, அவர்களையே
காணத்தான்.
நாவலர் நெடுஞ்செழியன் என்பவர்
யார்? எப்படி இருப்பார்? எங்கிருந்து வருகிறார்? - என்று
ஆவலுடன் கேட்டு, ஆர்வம் கொந்தளிக்கும் நிலைபெற்று மக்கள்
குவிந்தனர் என்றா கொள்ள முடியும்! அவரைத் தமிழகம் அறியும்;
மிக நன்றாக அறியும். மாநாட்டுக்கு முன்பு மூன்று திங்களுக்கு
ஓர் முறை யேனும் திருச்சி அவர் உரை கேட்டிருக்கும். மதுரையில்
அவர் முழக்கம் பழக்கமானதாகிவிட்டது. பட்டிதொட்டிகளிலும்
அவர் அடிக்கடி நடமாடி வருபவர்.
மற்றையோர் அதேபோல, எப்போதும்
மக்கள் மத்தியிலே உலவியபடி இருப்பவர்கள்.
காணக் கிடைக்காத தங்கங்களல்ல
- சாமான்யர்கள்.
அவர்கள்தான் மாநாட்டில்
- மூன்று இலட்சம் மக்கள் அங்கு கூடுகின்றனர்.
பொருள் விளங்குகிறதா தம்பி!
பொருள் என்ன என்பதை மாற்றார் உணருகிறார்களா என்று கேட்டுப்பார்.
சாமான்யர்கள் அழைக்கிறார்கள்
- ஜனசமுத்திரம் கூடுகிறது.
அவர்களுக்கு முன்னும் பின்னும்
அதிகாரிகள் படை வரிசை இல்லை.
அவர்கள்மீது ஏதும் புத்தம்
புது மெருகு பூசப்படவில்லை.
அவர்கள் நேற்று வந்தார்கள்
- பேசினார்கள் - நாளை வருவார்கள் பேசுவார்கள் - நாடு அறியும்
- எனினும் அவர்கள் மட்டுந்தான் வருகிறார்கள் என்று தெரிந்தும்,
3 இலட்சம் மக்கள் கூடினர் - நாலு நாட்கள் ஆர்வத்தைச் சொரிந்தனர்
- காலையில் 9 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கி விடியும் வரையில்
நடைபெறும் - அவ்வளவிலும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
இந்த மகத்தான நிகழ்ச்சியின் உட்பொருளை உணர்வோரே, காலத்தின்
கருத்தை அறியமுடியும். பிறர் தம்மைத்தாமே ஏமாற்றிக்கொண்டோம்
என்று பின்னையோர் நாள் கை பிசைந்து கூறிக்கொள்ளவேண்டி
நேரிடும்.
மாநில மாநாடு, மாபெரும்
தலைவர்களைத் தரிசிக்க ஏற்பட்ட ஏற்பாடல்ல - நாட்டின் விடுதலை
வேட்கையை, விழிப்புணர்ச்சியை எடுத்துக் காட்டும் ஏற்பாடு.
இதனை உணர்ந்ததால்தான், பல
நூறு தடவை, யாரார் உரைகளைக் கேட்டிருக்கின்றனரோ, அவர்களேதான்
மாநில மாநாட்டிலே பேசுவர் என்பதை அறிந்திருந்தும், நாம்
அறிந்த வர்கள்தானே என்று அலட்சியமாக இல்லை. நாம் பல தடவை
கேட்ட பேச்சுத்தானே என்று அக்கறையற்றுக்கிடவில்லை. நமது
மாநாடு கூடுகிறது, நாம் அதிலே கலந்துகொண்டாக வேண்டும்
என்ற கடமை உணர்ச்சியுடன் மூன்று இலட்சம் மக்கள் கூடினர்.
பிற கட்சிகளில் இருப்பினும்,
சிந்தனைத் திறனை இழந்திடாமலிருக்கும் பெரியவர்களை, இதுபற்றி
எண்ணிப் பார்த்து, உட்பொருளை உணர்ந்து, உலகுக்கு உரைத்திடச்
சொல்கிறாயா, தம்பி? முயன்று பார்.
என்ன இதன் உட்பொருள், தம்பி!
சாமான்யர்களின் மாநாடு. ஏன் இத்துணைச் சிறப்புடன் விளங்கிற்று?
காரணம் உண்டு, கருத்துள்ளோர் அறிவர் - அறிந்திடும் மாற்றார்
கலங்குவர்.
கை கொட்டிச் சிரித்தனர்
தலைக்கனம் கொண்டவர்கள்.
கரியும் பரியும் மந்தை மந்தையாக
உள்ளன. தேர்ப் படையும் காலாட் படையும் பெரிதும் உடையேம்,
எமது வீரத்தின் எதிர் நிற்பார் எவர் உளர் என்று இறுமாந்து
பேசினர்.
அவன் இளைஞன், எது செய வல்லான்
- என்று உளையக் கூறினர் - இளைஞனாக இருந்த தமிழ்க் காவலனை
- பேரரசர்கள்.
இளைஞன்தான் - எனினும் ஏச்சும்
பேச்சும் கேட்டாக வேண்டுங்கொல்!
படையின் தொகை மிகுதியாக
இல்லாதிருக்கலாம், ஆயின் அதனைக் காட்டி என் வீரத்தைப்
பழிக்கப் போமோ?
பேரரசராயின் ஆகுக. அதுபற்றி
அவர் சிற்றரசர்தமைச் சீரழிவாகப் பேசுதல் முறையோ, - என்றெல்லாம்
இளஞ்சீய மன்னனான அத்தமிழன் எண்ணினான்.
உள்ளம் வெதும்பிற்று, அது
வீரத்தைக் கருக்கிவிடவில்லை - வீரம் கொழுந்துவிட்டெரிந்தது.
வஞ்சினம் கூறினான்.
நாவடக்கமற்று எனை இழித்தோரை
எதிர்த்து அறிவு புகட்டுவேன்.
களத்திலே அவருடன் போரிட்டு,
அவர்தம் முரசு பறிப்பேன்.
அங்ஙனம் யான் செய்யாதொழியின்,
கொடுங்கோலன் என்ற வசையைத் தாங்கித் தாழ்வுறுவோனாகக்
கடவேன். புலவர் பாடிடத் தகுதிபெறாத நாட்டுக்குரியோன்
என்ற இழிநிலை பெற்றவனாகக் கடவேன். இரப்போருக்கு ஈந்திடும்
நிலையையும் இழந்தவன் என்ற ஏச்சுக்கும் பேச்சுக்கும் இலக்கானவன்
ஆகக் கடவேனாக - என்றெல்லாம் வஞ்சினன் கூறினன்.
நகுதக் கனரே நாடுமீக் கூறுநர்
இளையன் இவனென உளையக் கூறிப்
படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள்
நெடுநல் யானையும் தேரும் மாவும்
படையமை மறவரும் உடையம் யாமென்று
உறுதுப்பு அஞ்சாது உடல்சினஞ் செருக்கிச்
சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
என்று.
இதுகளுமன்றோ ஓர் கட்சி
நடாத்துகின்றன!
அன்னக்காவடிகளுக்கு அரசியலில்
என்ன வேலை?
இந்து உண்டோ? மித்திரன்
உண்டோ? பேழை உண்டோ? பெரும் பண்ணை உண்டோ? யாது உளதெனக்
கழகம் கண்டனர் - என்று சிறுசொற் சொல்லிய சிறு மதியாளர்கட்குப்
பாடம் கற்பிக்க விரும்பினர் தம்பி நமது கழகத் தோழர்கள்
- அதுதான் திருச்சி மாநாடு.
எமது கழகம்பெற்றுள்ள ஏற்றம்
எத்தகையது என்பதை மாற்றாரே, மதியற்றாரே உணரும் விதத்தில்,
திருச்சியில் வெள்ளம்போல் தமிழர் கூட்டமொன்றை, வெற்றிகொள்
வீரர் கூட்டமொன்றைத் திரட்டிக் காட்டிடுவோம். காணீர்.
அங்ஙனம் செய்யாதுபோயின், எமக்கென ஓர் கொடி வேண்டோம்,
கழகம் வேண்டோம், குறுந்தடிகொண்டோர் காலடி வீழ்ந்தழிந்து
போவோம் - என்று, தம்பி, நீயும் நானும் சேர்ந்து வஞ்சினம்
கூறினோம்.
சினங்கெழு வேந்தர், சிறுசொற்
கூறினர். வஞ்சினம் கூறினன் வேந்தன்; இளையன்!! யாது கூறினன்?
அருஞ்சமம் சிதையத் தாக்கின்
முரசமொடு
ஒருங்கு அகப்பட்டே (எ)ன் ஆயிற் பொருந்திய
என்னிழல் வாழ்நர் சென்னிழல் காணாது
கொடியன்எம் இறையெனக் கண்ணீர் பரப்பி
குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற்
புலவர் பாடாது வரைகவென் நிலவரை
புரப்போர் புன்கண் கூர
இரப்போர்க் கீயா இன்மையா னுறவே!
(புறநானூறு 72)
இது அந்த வீர மன்னன் கூறிய
வஞ்சினம்.
இழித்தும் பழித்தும் பேசிடும்
அரசர் தம் முரசு பறிப்பேன் - அஃது நான் செய்யாதுபோயின்,
கொடுங்கோலன் என்று இகழட்டும் என்னை, புலவர் பெருமக்கள்
என் நாட்டைச் சிறப்பித்துப் பாடாது இருக்கும் இழிவைப்
பெறுவேனாக! - தம்பி, - தமிழ்ப்புலவரிடம் பொருள் கேட்டுப்பெற்று
இன்புறுவாய்.
இளையோன், பெரும் படையற்றோன்
என்று கூறி நகைத்தோர் செயல்கண்டு வஞ்சினம் கூறினன் ஓர்
தமிழ் மன்னன் - வீரன் - இளைஞன் - என்பதையும் - அவன் வஞ்சினம்
- கூறியதற்கொப்பச் செரு வென்றனன், போரில் வெற்றி பெற்றனன்
என்பதை மட்டுமே, மாந்தரை நிறையுடையோர் ஆக்கத்தக்க தமிழ்
இலக்கியத்தில் குறையறிவு மட்டுமே கொண்ட நான் உனக்கு எடுத்துக்காட்ட
முடியும் - சுவையும் பயனும் மிகுதியும் பெறத்தம்பி, நமது
நாவலரை நாடு!
வஞ்சினம் கூறினன் முரசு
பறிப்பேன் என்று.
பகை முடித்தனன் களத்தில்
நின்று - அன்று - தமிழ் மன்னன்.
இன்று, நம்மை ஏதுமிலாதார்,
இல்லாமையால் இடர்ப் படுவோர், இலட்சியம் பேசுவர் எனினும்
அதிலே வெற்றி காணும் வசதிகளற்றோர் என்று இறுமாந்து கூறினர்,
பொருள் உடையாரும், புகழ் சுமப்போரும், பதவிபிடித்தோரும்.
நாமும் வஞ்சினம் கூறினோம். திருச்சி மாநாடு, நமது வெற்றியாகத்
திகழ்ந்தது. தம்பி! கேட்டால் உடல் புல்லரித்துப் போகும்,
இதோ நான் தரப்போகும் செய்தி கேட்டு.
வஞ்சினம் கூறிச் செருவென்ற
அம்மன்னன் யார் அறிவாயோ?
தலையாலங்கானத்துச்
செருவென்ற நெடுஞ்செழியன்
நமக்குக் கிடைத்திருப்பவரும்
நெடுஞ்செழியன்.
வஞ்சினம் கூறினோம்; வெற்றி
கண்டோம் திருச்சியில்.
ஆயின், களத்திலே நின்றுள்ள
நாம், சிறு சொற் சொல்-ய சிறு மதியாளர் அகலக் கண் திறந்து
ஆச்சரியப் படத்தக்க வெற்றியை, மகத்தான மாநாடு கூட்டிக்காட்டியதன்
மூலம் பெற்றோம் - ஆனால், நாம் பெறவேண்டிய வெற்றி வேறொன்றுளது.
அதனைப் பெறுதற்கே நமக்கோர் நெடுஞ்செழியன் கிடைத்துள்ளார்.
நாமும் நமது கழகத்தை அவரிடம் ஒப்படைத்திருக்கிறோம். தமிழ்
மரபறிந்த அவர் தலைமையில் சிறுசொற் கூறிடும் சிறுமதியாளர்களின்
கொட்ட மடக்கி, மாங்குடி மருதன்போன்ற பெரும் புலவர்கள்
பாடிப் போற்றிய இத் திருவிடத்தை வடவர் பிடியி-ருந்து
விடுவித்து, வாகைசூடத்தான் போகிறோம். தம்பி, விழி திறந்திருக்கட்டும்
- வாள் கூர்மையாக இருக்கட்டும் - தாயகத்தின் தளையினை உடைத்திடும்
அறப்போருக்கு அஞ்சா நெஞ்சமும் நமது பொதுச் செயலாளரின்
அழைப்புக் கிடைத்ததும், நெடுநல்யானையும் தேரும் மாவும்
கொண்டு இறுமாந்து கிடந்த மன்னர்களைச் செருவென்றதுபோல,
பண பலம், பதவி பலம், பத்திரிகைப் பலம் படைத்தோரை, நாம்
நமது தூய உள்ளத்தில் துளிர்த்தெழும் அறப்போர்த் திறத்தால்,
வீழ்த்துவோம் - விடுதலைபெற்ற தாயகம் கண்டு வாழ்த்துவோம்.
திருச்சி மாநில மாநாடு, நமக்கு இந்த வீர உணர்ச்சியை அளித்திருக்கிறது.
எல்லாம் உன் அறிவாற்ற-ன் விளைவு! உன் உழைப்பின் பலன்!
உன் உள்ளத்தில் ஊற்றெடுத்துவரும் உணர்ச்சியின் காரணமாகக்
கிடைத்தது. தம்பி! உன் ஆற்றல் வளரட்டும் - புகழ் ஓங்கட்டும்
- வாழ்த்துகிறேன் உன்னை.
அண்ணன்,

27-5-1956