அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


ஓட்டுச்சாவடி போகுமுன்பு...
2

பூவிருந்தவல்லியிலே மொரார்ஜி வந்து பேசிவிட்டுச் சென்றார்; என் மாநிலத்திலேகூட இந்த அளவுக்கு எனக்கு மதிப்பளிப்பார் இல்லை, இங்கு என் புகழ்க்கொடி சிறப்புறப் பறக்கிறது என்றுகூட மகிழ்ந்திருக்கக்கூடும்; ஆனால் இங்கு அவர் - "தமிழ், என் மொழி! தாய் மொழி! தமிழ் நாடு! தனி நாடு என்றெல்லாம் பேசுவது தீது, தவறு, தேசியமாகாது'' என்றெல்லாம் பேசினாரே, அதுபோல, பக்தவத்சலனாரை குஜராத்திலே சென்று பேசச் சொல்லு, பார்ப்போம்; அழகேசரை ஆமதாபாத் போகச் சொல்லு; காமராஜரை பூனா போய், "மராட்டிய மக்களே! ஏன் உங்கள் மதி இப்படிக் கெட்டுவிட்டது!'' என்று கேட்கச் சொல்லு, பட்டாளம் அணிவகுத்து நின்றாலும், இவர்கள் தலைதப்புவது கஷ்டமாகி விடும்! ஆமாம், தம்பி, அந்த அளவுக்கு அங்கெல்லாம் உரிமை உணர்ச்சி கொழுந்துவிட்டு எரிகிறது! இங்குதான் அபிசீனிய மன்னர் வரலாம், அகவல் எதுக்கு, ஆங்கிலப் பாடல் போதாதோ என்று பேசலாம், தலாய்லாமா வரலாம், திருவாசகம் எதுக்கு எமது திருப்பாதம் வீழ்ந்து வணங்கினால் போதாதோ என்று வினவலாம், தாழ்ந்து கிடக்கும் இந்தத் தமிழகத்திலேதான், தருக்கரின் பிடியிலே சிக்கிவிட்ட தமிழகத்திலேதான், உலகின் எந்தக் கோடியிலிருந்தும் எந்த வகையான தலைவரும் வரலாம், தமிழரின் மரபினை இகழலாம், தமிழரைக் கண்டித் துரைக்கலாம்; அதற்கு அவர் தமக்கு மாலையிட்டு மகிழ்விக்க, போற்றிப் புகழ்ந்திட, இங்கு பக்தவத்சலனார் படை வரிசை இருக்கிறது! வேறெங்கும் இந்நிலை வரவிடமாட்டார்கள்! ஏதுமற்ற நிலையைக்கூடப் பொறுத்துக் கொள்வர், எவர் வேண்டுமாயினும் எதைவேண்டுமானாலும் கூறிடும் இழிநிலைக்கு மட்டும் இடமளிக்கமாட்டார்கள்! பிச்சை எடுப்போன்கூடத் தம்பி, இல்லை போ! என்றால் ஏக்கத்துடன் சென்றிடுவான். மச்சு வீடுடையோனாயினும் அவனைப் பார்த்து, "ஏ! பிச்சைக்காரப் பயலே!'' என்று பேசினால், எச்சிற் பண்டத்தைப் போட்டு வைத்திருக்கும் குவளையால் அடித்துவிட்டுக் கூறுவான், "மச்சு வீடு என்றுமே உனக்கு நிலை என்ற எண்ணமோ, நானும் எனக்கென்று ஓர் "குச்சி' இருந்து அதிலே வாழ்ந்தவன்தான்! ஏன் உனக்கு இந்த வாய்த்துடுக்கு?'' என்று கோபத்துடன் கேட்பான். போலீஸ் சுற்றியபடி இருப்பதால், இன்று மச்சு வீட்டுக்காரனுக்கு இது நேரிடாதிருக்கிறது!! தம்பி! அதனினும் இழிந்த நிலையிலன்றோ நாம் வைக்கப்பட்டிருக்கிறோம். சர்கசில் காண்கிறோமே, காட்டரசனாம் சிங்கத்தைக் கூட்டிலே நிற்கச் செய்து, அதன் முதுகின்மீது ஆட்டுக் குட்டியைச் "சவாரி' செய்ய வைக்கிறானல்லவா, கரத்திலே துப்பாக்கி வைத்திருக்கும் கரடி' வித்தைக்காரன்! அதுபோலத்தான் தமிழக நிலைமை இருந்திடக் காண்கிறோம்!! அது போன்ற நிலைமை என்றால்கூடப் போதாது; இங்க "ஆடு' வீரம் பேசிட, அரிமா அடக்க ஒடுக்கமாக அதனைக் கேட்டுத் தீரவேண்டி இருக்கிறது.

மொரார்ஜிகள் பேசும்போது, மரபு மறவாத தமிழர் ஒவ்வொருவருக்கும் இதுபோன்ற எண்ணம்தானே ஏற்பட்டிருக்க முடியும்!! தேர்தலுக்கு எப்படி இது பயன்படப்போகிறது!!

"இந்தியா' ஒன்று, என்று நமக்காகப் பேசிடும், இங்குள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கேகூட, குட்டும், குத்தும் வதருமள வுக்கு ஏற்படுகிறபோது, என்ன பேசுகிறார்கள் என்பதை நாடு மறந்தா போய்விட்டது! எத்தனை எத்தனை முறை குமுறி இருக்கிறார்கள். இவர்கள் தம் நாத்தழும்பேறப் பேசுகிறார்களே "தேசியம், அது அப்போதெல்லாம் ஏன் மறைந்து விடுகிறது?

டில்லி பாராளுமன்றத்திலேயே டாக்டர் லங்காசுந்தரம் என்பார், "அரசியல் அதிகாரம் அனைத்தும் வடநாட்டிலேயே குவிக்கப்பட்டிருக்கிறது'' என்று பேசுகிறார்; 1955 டிசம்பர் 14 இல்!

பொருள் என்ன இதற்கு? இத்தனைக்கும் இந்த டாக்டர்கள், நம்மை எல்லாம், நாட்டைப் பிடித்தாட்டும் "நோய்' என்று கூசாது பேசுபவர்கள்! அவர் போன்றாருக்கே பொறுக்கவில்லை, வடக்கே எல்லா அதிகாரங்களும் குவிந்து வைக்கப்பட்டிருக்கும் கொடுமை.

சென்னை சர்க்கார் அமைத்த ஆலோசனைக் குழுவே' 1955 மே 30 இல்,

"பெரும் தொழில்களைப் பொறுத்த மட்டில் சென்னை மாநிலம் வருந்தத்தக்க அளவு, புறக்கணிக்கப் பட்டிருக்கிறது''

என்று அறிவித்தது. ஏன், இந்த அழுகுரல்?

புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.

என்ற உண்மையையும் கூறுகிறது அந்தக் குழு; அதனால் நாடு வருந்துகிறது, வருந்தவேண்டும், என்ற எண்ணத்தையும் விளக்கிட, வருந்தத்தக்க என்றும், எழுதுகிறது! "தேசியம்' எங்கே ஓடிவிட்டது, இது போலக் கேட்கும்போது? இங்கே பெரிய தொழில்கள் இல்லையே என்ற கவலை குடைவானேன்? வருத்தம் பிறப்பானேன்? எங்கே இருந்தால் என்ன என்ற வேதாந்தம் ஏன் பிறக்கவில்லை! ஏன், புறக்கணிக்கப்பட்டுவிட்டதே என்ற துக்கம் துளைக்கிறது! அந்த உணர்ச்சி உங்கள் உள்ளத்திலே சுரக்கும் போதெல்லாம், அருமைக் காங்கிரஸ் அன்பர்களே! நீவிர் அனைவரும், தி. மு. க. ஆகிறீர்கள்! பிறகு, பதவி வேறு பக்கம் அழைக்கிறது, மோசம் போகிறீர்கள், மொரார்ஜியை அழைக்கிறீர்கள்.

சென்னை மாநிலம் வருந்தத்தக்க அளவு, புறக்கணிக்கப் பட்டிருக்கிறது என்பதையும் 1955 இல் கூறிவிட்டு, இப்போது தேர்தலில் ஓட்டு பறிப்பதற்காக, நீங்களே, தாரை தப்பட்டை யுடன் கிளம்பி, தமிழாவது தெலுங்காவது வடக்காவது தெற்காவது எல்லாம் அபத்தம், தமிழ் நாடு புறக்கணிக்கப் பட்டதாகக் கூறுவது பொய்யுரை, என்று பேசுகிறீர்களே, எதையும் ஆய்ந்தறியும் திறனும், முன்பின் பேச்சுகளை ஒப்பிட்டுப் பார்த்து உண்மை காணும் போக்கும் கொண்ட மக்கள், உமது புரட்டினைக் கண்டுகொள்ள மாட்டார்களா? என்று கேட்டால், காங்கிரசின் பெருந்தலைவர்கள் கூறும் பதில், "அவ்வளவு அறிவுத் தெளிவு உள்ளவர்கள், எத்தனைபேர் இருக்கிறார்கள்'' என்பதுதான்.

தம்பி! நம் நாட்டுப் பாமர மக்களைக் காங்கிரசார், எப்படி வேண்டுமானாலும் ஆட்டிவைக்கலாம் எதைச் சொல்லியும் நம்பவைக்கலாம், என்று மனப்பால் குடிக்கிறார்கள், மக்கள் இதோ, நான் புட்டுப் புட்டுக் காட்டுவதுபோலப் பிரச்சினை களை அலசி ஆராயாமலிருக்கலாம், ஆனால் அவர்களுக்கு உண்மையை ஒரு நொடியில் உணர்ந்துகொள்ளும் திறன் இருக்கிறது; காங்கிரஸ் தலைவர்களின் புரட்டினை, மக்கள் உணர்ந்து வருகிறார்கள்; நமது பிரசாரம் இதனைப் பலப்படுத்துகிறது!! மொரார்ஜிகள் வருவதாலே, இந்த நம் பணி குந்தகப்பட்டு விடாது!!

வடநாட்டிலிருந்து இங்கு மொரார்ஜிகள், அடிக்கடி வந்தபடி இருப்பதையும், அவர்கள் வருகிற போதெல்லாம், இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள், வணங்கி வரவேற்று, வரம் கேட்டுப் பெறுவதையும் காணும் தமிழக மக்கள், அந்த நாட்களில் இங்குவந்த வெலிங்டன், கோஷன், எர்ஸ்கின் போன்ற துரைமார்களிடம் எப்படி இளித்துப்பேசி இனிப்புப் பண்டம் பெற்றார்களோ சீமான்கள், சிற்றரசர்கள், மிட்டா மிராசுகள், அதே செயலைத்தான், இப்போது பக்தவத்சலங்கள், மொரார்ஜிகள் வருகிறபோது செய்கிறார்கள், முறை மாறவில்லை, ஆள்மட்டும்தான் மாறியிருக்கிறது என்பதையா தெரிந்து கொள்ளாமலிருக்கிறார்கள்.

"ஓட்டு' வாங்குவதற்காக, தம்பி, காங்கிரஸ் பிரசாரகர்கள், ஐந்தாண்டுத் திட்டச் சாதனைகளைப் பேசுகிறார்களல்லவா! எல்லாப் பேச்சாளர்களுமல்ல, மிகச் சிலரே, அந்தச் சிரமத்தை எடுத்துக்கொள்வர் - பெரும்பாலானவர், நம்மை ஏசிவிட்டாலே போதும், என்று எண்ணிக்கொள்கிறார்கள் - உண்மையிலேயே சிலருக்கு, மிகக் காரமாக நம்மை ஏசுவதால் ஏற்படும் நாக்கெரிச்சலே வேறு எந்த விஷயத்தைப் பற்றியும் பேச இடமளிக்காது - நான் இந்தப் போக்குக்கு விதிவிலக்கு என்று குறிப்பிடத்தக்க இரண்டொருவரைக் கூறுகிறேன் - அவர்கள் ஐந்தாண்டுத் திட்டத்திலே பெற்ற அரிய வெற்றிகளைக் கூறி, ஓட்டு கேட்கிறார்கள் என்று வைத்துக்கொள். மக்கள், அதைக் கேட்கும்போது உள்ளபடி திகைக்கிறார்கள். பெருமைப்படத்தக்க, மகிழ்ச்சி கொள்ளத்தக்க வெற்றிகள் கிடைத்துள்ளன; நாடு, நலிவு போக்கிக் கொண்டது; எல்லோருக்கும் இன்பவாழ்வுக்கு வழி ஏற்பட்டுவிட்டது; என்றெல்லாம் பேசும்போது, மக்கள் தம்மைச் சூழ இருக்கிற வறுமையைப் பார்க்கிறார்கள்; தமது சொந்த வாழ்விலே கப்பிக்கொண்டிருக்கும் சோகத்தைப் பார்க்கிறார்கள்; என்ன அதிசயம், இது! ஐந்தாண்டுத் திட்டத்தின் அரிய வெற்றியாலே பாலும் தேனும் ஓடுவதாகச் சொல்கிறார், இந்தப் பாழும் கண்களுக்கு ஒன்றும் தெரியவில்லையே; நாம் பார்க்கும்போது, பழங்கலமும் அதிலே உள்ள பழஞ் சோறும், அதிலே நெளியும் பூச்சிப் புழுவும் தெரிகிறது! இவர், ஏதோ, இங்கு வளம் கொஞ்சுவதாகக் கூறுகிறாரே! எங்கே அந்த வளம்? யாருக்குப் பயன்படுகிறது அந்த வளம்! என்றுதான், எண்ணித் திகைக்கிறார்கள்.

ஐந்தாண்டுத் திட்டத்திலே அரிய வெற்றிகள் ஏற்படவே இல்லையா? என்று கேட்டால், ஏற்பட்டது! எப்படி ஏற்படாமலிருக்கும், இரண்டாயிரம் கோடி ரூபாயைச் செலவிட்டிருக்கும்போது! ஆனால், நமது கேள்வி, நாட்டு மக்களின் கேள்வி. அதனால் ஏற்பட்ட பலன், யாரை வாழ வைத்திருக்கிறது என்பதுதான்! இதற்கு மொரார்ஜிகள் தரக்கூடிய பதில் என்ன? இதோ என்னிடம் உள்ள பட்டியல்! நீயும் படித்துப் பார்.

முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் நீர்ப்பாசன திட்டங்கள்:

1. நந்திகொண்டா
2. கோசி
3. காக்ராபர்
4. ஹரிகே
5. துங்கபத்ரா
6. (டி. வி. சி.) தாமோதர்
7. கோய்னா
8. ஹிராகூட்
9. பக்ரா - நங்கல்
10. ரீகண்டு
11. மயூராட்சி
12. சாம்பால்
13. பத்ரா
14. கட்டபிரபா
15. தூத்வா
16. கீழ் பவானி
17. மச்சகந்த்
18. சாரதா
19. ஜோக்
20. மாஹி
21. காந்தி சாகர்.

இவைகளெல்லாம் முதல் ஐந்தாண்டுத் திட்ட வெற்றிகள்.

இவைகளில், இங்கு பலன் தந்திருப்பது, எத்தனை என்று கேட்டுப் பார், அதற்காகச் செலவிடப்பட்ட தொகை எவ்வளவு என்ற கணக்கு கேள், வடக்கே உள்ளவை எத்தனை? செலவிடப்பட்ட தொகை எத்தனை? என்று கணக்குக் காட்டச் சொல்லு பிறகு ஓட்டுச்சாவடிக்குப் போகட்டும் மக்கள்!

"நீயும் நானும் ஒற்றுமையாக இருக்கலாம்! உன் கைக்கடியாரத்தை என்னிடம் கொடுத்துவை! உனக்குத் தேவைப் படும்போது, நான் மணி பார்த்துச் சொல்லுகிறேன்'' - என்று பாரிஸ் பட்டினத்து எத்தன் ஒருவன் சொன்னதாக நான் படித்திருக்கிறேன். மொரார்ஜிகளும், அவர்களின் அடிதாங்கி, அரசியலில் இலாபம் தேடுவோரும், பேசும் "ஒற்றுமை' இதுபோன்றதுதான், வேறில்லை!

நாடு இதனை, மெள்ள மெள்ள அறிந்துகொண்டு வருகிறது; தேர்தலின்போது மேலும் தெளிவு ஏற்படப்போகிறது! நிச்சயமாக!! தொழில் வளர்ச்சித் திட்டங்களில் தென்னிந்தியா இந்தியப் பேரரசால் ஒதுக்கித் தள்ளப்பட்டிருக்கிறது.

என்று, சென்ற ஆண்டு ஜூலையில் மைசூர் சட்டசபையில், மைசூர் தொழில் மந்திரி, சென்ன பாசப்பா பேசி இருக்கிறார்.

இவர் என்ன, ஓட்டுக்கேட்க வரும், தி. மு. கழகமா? அல்லவே!! நாடு, எண்ணிப்பார்திடவே செய்யாதா? எண்ணிப் பார்த்திடும்படி செய்யும் பணியினைத்தானே நாம், மேற் கொண்டிருக்கிறோம். அது எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறது என்பதைப் பொறுத்துத்தான், தேர்தலில் நாம் வெற்றி பெறுவது இருக்கிறது.

நாடெங்கும், வீடெங்கும், இந்தப் பேச்சு எழவேண்டும்; அதை ஆக்கித் தரும் பணிதான், தம்பி, உன்னிடம் நான் எதிர்பார்க்கிறேன்.

தாயும் மகனும்

மகன் : எப்போதும் அழுதுகொண்டே இருக்கிறாயே ஏனம்மா?

தாய் : மகனே! என்னடா செய்வது, உன் அப்பாவுக்கு இன்னமும் ஒரு வேலை கிடைக்கவில்லையே! அந்த வேதனைதான்!

மகன் : அப்பா ஏனம்மா வேலைக்குப் போகாமலிருக்கிறார்?

தாய் : வேலை கிடைக்கவில்லையடா மகனே!

மகன் : போம்மா! அப்பா ஏமாற்றுகிறார்! வேலைதான் நிறைய கிடைக்கிறதாமே!

தாய் : யாரடா அப்பா, சொன்னது?

மகன் : நேற்று, கூட்டத்திலே ஒரு மந்திரி சொன்னார், அம்மா! ஐந்தாண்டுத் திட்டம் போட்டார்களாம் - நாடு சுபிட்சமாகிவிட்டதாம் - வேலை எல்லோருக்கும் கிடைக்கிறதாம்.

தாய் : காங்கிரஸ் கூட்டமாடா மகனே!

மகன் : ஆமாம்மா!

தாய் : அங்கு அப்படித்தான் மகனே! பொய்யை மளமள வென்று கொட்டுவார்கள்... சுபிட்சமாகிவிட்டதாமா, நாடு... நம் வீட்டைப் பார்த்தால் தெரியவில்லையா இலட்சணம்! வேலையா கிடைக்கிறது, வேலை! யாருக்கு? இந்தக் காங்கிரசுக்குப் பக்கமேளம் அடிக்கிறவர்களுக்கு வேலை கிடைக்கிறது! அதுவும் என்ன வேலை? இவர்களை இந்திரன், சந்திரன் என்று புகழ்கிற வேலை! வயிற்றெரிச்சலை ஏண்டா மகனே, கிளப்புகிறாய்...

மகன் : ஏம்மா, அப்படியானா, பொய்யா பேசறாங்க...

தாய் : எலக்ஷன் வருதடா, மகனே! அதனாலே, மக்களை ஏமாளியாக்கி ஓட்டுவாங்க அதுபோலப் பேசுகிறார்கள்.

மகன் : நான் ஒரு சின்னப் பொய் பேசினா, காதைப் பிடித்துக் கிள்ளி, கன்னத்திலே அறைகிறே...!

தாய் : போடா, குறும்புக்காரா!...

மகன் : காங்கிரஸ்காரர், நாடு சீர்பட்டுவிட்டது, எல்லோருக்கும் வேலை கிடைத்துவிட்டது என்று பொய்யை வாரி வாரி வீசறாங்க... அவங்களை, என்ன செய்தே...?

தாய் : என்ன செய்தேனா... தேர்தல் வருது... மகனே! அப்போது தானே, அவங்களுக்குப் புத்தி புகட்ட வேணும்... பார், அப்போது...

மகன் : ஆமாம்மா! பெரிய மனுஷருங்க பொய் பேசுகிறபோது, புத்தி சொல்லாமே விட்டுவிட்டா என்னைப்போல சின்னப் பசங்கக்கூடக் கெட்டுப் போயிடுவாங்கம்மா...

தாய் : ஆமாண்டா, மகனே! இப்படிப் பொய்யைப்பேசி ஜனங்களை ஏமாத்துகிற காங்கிரசுக்கு மறுபடியும் ஓட்டுப்போட்டா, நாடேகெட்டுப்போகும். நான் மட்டுமில்லடா, நம்ம பக்கத்து வீட்டு பங்கஜம், எதிர் வீட்டுத் தாத்தா, கோடிவீட்டுக் குப்பி, நம்ம மாமன் வீடு, எல்லோருமே இதே முடிவுக்குத்தான் வந்திருக்கிறோம்...

மகன் : நான்கூட அம்மா, யாராரைப் பார்க்கிறேனோ, அவங்களிடமெல்லாம், இதைத்தான் சொல்லப்போகிறேன்.

தம்பி! எண்ணற்ற இல்லங்களிலே, இதுபோன்ற உரையாடல் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளது.

எது பற்றியும் கவலைகொள்ளாத இல்லங்கள், நம்மால் என்ன ஆகும் என்று எண்ணும் இல்லங்கள், இவைகளில் எல்லாம்கூட, இதுபோன்ற உரையாடல்கள் எழச் செய்ய வேண்டிய பொறுப்பு, உன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

ஓட்டுச் சாவடி போகுமுன்பு, நாட்டு மக்கள், எல்லாப் பிரச்சினைகளையும் அறிந்திடத்தக்க முறையிலே, ஏசுவோருக்குப் பதிலளிக்க வேண்டும் என்ற எண்ணத்துக்கே இடமேற்படாத முறையில். இனிய எளிய, பிறரிடம் பகை காட்டாத தன்மையில், தம்பி, நீ அறிந்துள்ள உண்மைகளை, மக்களுக்கு எடுத்துக் கூறு, அதுபோதும்; ராஜாக்களும் கோடீஸ்வரர்களும் முகாமிட்டுள்ள காங்கிரஸ் நம்மை ஒன்றும் செய்துவிடாது! நாட்டு மக்கள், மீண்டும் ஓர்முறை, கேட்டினை மூடிவிடும் காங்கிரசைக் கட்டி அணைத்திட மாட்டார்கள்! அவர்கள், பட்டது போதும் என்ற நிலையில் உள்ளனர். ஓட்டுச்சாவடி போகுமுன்பு நாட்டு மக்களிடம் நிலைமையைக் கவனப்படுத்தினால், போதும்; நாம் மகிழத்தக்க பலன், நிச்சயம் கிடைக்கும். தொடர்ந்து பணியாற்று! வெற்றிக்கு வழிகாட்டு !!

அன்பன்,

30-12-1956