அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


படமும் பாடமும் (1)

தேர்தலின் முடிவும் விளைவும் -
வசவாளர்கள் -
காமராஜரின் வெற்றி

தம்பி!

நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறோம்! எத்தனை எத்தனை நாட்களாகிவிட்டன, நாம் உரையாடி!!

என்ன இருந்தாலும் இப்படியா ஒரே அடியாகவா வாய்மூடிக் கிடப்பது?

மறந்தே விட்டீர் என்றல்லவா எண்ணிக் கொண்டேன்!

இப்போதாவது இப்படி ஒரு கடமை இருப்பது நினைவிற்கு வந்ததே!!

இவ்விதமும், இதற்கு மேலும் பலப்பல கூறிட எண்ணுகிறாய் - நானறிகிறேன் - ஆனால் அடுத்த கணமே, உனக்கு ஒரு புன்னகை மலர்ந்திடுகிறது, நான் காண்கிறேன்! பாவம், நமது அண்ணன்மீது தவறு இல்லை, அந்த அளவுக்குக் கடுமையாக உழைக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது - அந்தக் காரியத்தைச் செம்மையாகச் செய்துதீர வேண்டுமல்லவா, அதனாலேதான், கிழமைதோறும் நம்மிடம் பேசி மகிழும் வாய்ப்பையும் இழந்து, நின்றிட நேரிட்டது என்று தம்பி உன் மனமே எடுத்துக் கூறுகிறது, முகம் மலருகிறது! ஆனால் உண்மையில், அது சமாதானமல்ல - இத்தனை கிழமைகளாக, இந்தக் காரணம் காட்டி, சந்திக்காமலிருப்பது, முறையே அல்ல! வேலை, ஆயிரம் இருக்கட்டும்! உழைப்பு கடுமையாகத்தான் ஏற்படட்டும்! அதற்காக அன்புடன் உரையாடும் வாய்ப்பைக் கூடவா ஒதுக்கித் தள்ளிவிடுவது! அஃது எங்ஙனம் சரியாகும்! சரியல்ல! முறையல்ல! நான் ஒப்புக்கொள்ளவே மாட்டேன்!!

அவ்விதமானால், அண்ணா! நீ, என்னதான் சமாதானம் கூறப்போகிறாய்? நாம் இத்தனை கிழமைகளாகச் சந்திக்காத தற்குக் காரணம் என்ன காட்டப்போகிறாய்? என்று கேட்கிறாயா தம்பி! கேள்!!

தம்பி! நாம், இத்தனை கிழமைகளாகச் சந்திக்காததற்குக் காரணமல்லவா, கேட்கிறாய்! நாம் சந்திக்காதிருந்தால்தானே, காரணம் காட்டவேண்டும்! நான் எங்கே, உன்னைக் காணாமல் இருந்தேன்! ஒவ்வொருநாளும் நான் உன்னைப் பார்த்துப் பார்த்துப் பூரித்துக்கிடந்தேனே! ஒவ்வொரு புன்னகையிலும் பெருமூச்சிலும், வியர்வைத் துளியிலும் வீர முழக்கத்திலும் வாழ்த்தொலியிலும், வரவேற்பு உரையிலும், நான், உன்னைத்தானே கண்டேன்!! நான் எப்போது உன்னைக் காணாமலிருந்தேன், காணாததற்குக் காரணம் காட்ட!,

எண்ணங்களை எழுதிக்காட்ட இயலவில்லையே தவிர நான் எந்தக் கணமும் உன்னைக் குறித்து எண்ணாமலிருந்த தில்லையே! வேறு என்னதான் இருக்கிறது, எனக்கு எண்ணி எண்ணிப் பெருமைப்பட, பூரிப்படைய!! எப்போதும், உன் நினைப்புத்தான்! எந்த இடத்திலும், உன்னைத்தான் கண்டேன்!!

காடு கரம்புகளிலே சுற்றிய போதும், கழனி வெளிகளில் நடந்த நேரத்திலும், ஏரிக்கரைகளில் நடந்தபோதும், உளைகளைத் தாண்டிச் சென்ற சமயத்திலும், பட்டி தொட்டிகளிலேயும் சாலை சோலைகளிலேயும் உலாவிய போதும், பாட்டியிடமும் பெரியவரிடமும், துள்ளி விளையாடும் பிள்ளைப் பருவத்தினரிடமும், அரும்பு மீசை வாலிபரிடமும் நான் உற்சாகத்தைக் கண்ட போதும், உன்னைத்தானே சந்தித்தேன்! எனவேதான், நீண்ட நாட்களாக நாம் சந்தித்தோமில்லை என்ற பேச்சே எழவில்லை; ஆகவே அதற்குக் காரணம் தேடிடவும் தேவை ஏற்படவில்லை! நாம், சில பல நாட்களாக, சந்திப்பதையும் உரையாடி மகிழ்வதையும், வழக்கமான முறையிலே அல்ல, புதியதோர் முறையிலே நடத்திக் கொண்டிருந்தோம். அந்தக் கட்டம் முடிவுற்றது. இனி நமது பழைய முறை துவக்கப்படுகிறது!!

அப்பப்பா! இந்த இரு திங்களுக்கு மேலாக, நாம் எத்துணை கடுமையாக உழைத்திட வேண்டி நேரிட்டது; என்னென்ன விதமான தொல்லைகளையும் துயரங்களையும், இன்னல்களையும் எதிர்ப்புகளையும் காணவேண்டி வந்தது; புதியதோர் பொறுப்பை ஏற்றுக்கொண்டோம். அதனைத் திறம்பட நடாத்திக் காட்டியாக வேண்டுமே என்ற கடமை உணர்ச்சி, நம்மை எல்லாம் கடுமையாக உழைக்கச் செய்தது; எரிதழலில் தள்ளிவிட்டோம், இனி இதுகள் சாம்பலாகிப் போகும் காணீர்! என்று கருதினர்; தழல் பெரிது, கொடிது! எனினும், கழகம், குப்பை கூளமல்ல, குச்சிமிலாரல்ல, சாம்பலாகிப்போக! புடம்போட்டு எடுக்கப்பட்ட தங்கம் என்பார்களே அதுபோல, வெந்தழலில் கிடந்தது; தழல் அணைந்தது, தங்கம் கருகுமா? கழகம் இன்று தணலிலிட்ட தங்கமாகி நிற்கிறது. ஆனால் தம்பி, இந்த அரும் நிலைமையை அடைவதற்கு முன்பு, தணலில் தள்ளப்பட்டுக்கிடந்த நாட்களிலே எத்துணை எத்துணை தவிப்பு! இவ்வளவையும், நம்மால் தாங்கிக்கொள்ள முடிந்ததே என்பதை, இப்போது எண்ணிக்கொள்ளும்போது, களத்திலே பெற்ற "வடு' மீது காதலியின் கூந்தலிலே செருகப்பட்டுள்ள முல்லை பட்டால் என்னவிதமான களிப்பு ஏற்படுமோ அதுபோலல்லவா இருக்கிறது.

நான் தம்பி, நமது கழகத்தின் வலிவுபற்றியும், தாங்கிக் கொள்ளும் சக்திகுறித்தும், எப்போதுமே நம்பிக்கையற்று இருந்ததில்லை. எனினும் தேர்தலில் நாம் ஈடுபடுகிறோம் என்ற நிலை உருவானதும், பீறிட்டுக் கிளம்பிய பேய்க்காற்றைக் கண்டபோது சிறிதளவு நானே கலங்கிப்போனேன், கழகம் தாங்கிக்கொள்ளுமா என்பது குறித்து!! கரடி, கால்களைப் பிடித்து இறுக்கிட, மலைப்பாம்பு மரத்திலே சுற்றிக்கிடந்த நிலையில் வாய்திறந்து கழுத்தருகே அசைந்தாட, கரும்புலி மேலே பாய, தொலைவிலிருந்து செந்நாய்கள் சீறிட, புதரருகே நின்றபடி நரிக்கூட்டம் இரத்தம் குடித்திடச் சமயம் பார்த்திருக்க, கழுகுகள் மேலே வட்டமிட்டபடி இருக்க, வளைந்த வாளைக் கரத்திலே ஏந்திய ஓர் வீரன் இந்நிலையினின்றும், தன்னை விடுவித்துக் கொள்ளப் போரிடும் காட்சியை மனக் கண்ணாலே பார் தம்பி! அது போலல்லவா, தேர்தல்களத்திலே நமது நிலைமையிருந்தது! எப்படிச் சமாளித்தோம்!! எங்ஙனம் தாங்கிக்கொள்ள முடிந்தது!! எங்கிருந்து பெற்றோம், இத்துணை பயங்கர எதிர்ப்புகளையும் எதிர்த்து நிற்கும் ஆற்றலை! எனக்கு வியப்புதான்! அதனாலேதான், இந்தத் தேர்தலில், நமக்கு வேதனை தரும் தோல்விகள் பல ஏற்பட்டபோதிலும், கழகத்தைப்பற்றிய நமது மதிப்பு உயர்ந்திருக்கிறது; கலக்கமடையவோ, மனம் உடைந்திடும் நிலைபெறவோ தேவையில்லை என்று கூறிட முடிகிறது.

மண்ணைக் கவ்வினார்கள்!
டிபாசிட் இழந்தார்கள்!
படுதோல்வி அடைந்தார்கள்!
பத்திலோர் பாகம்தான் கிடைத்தது!

என்று கொட்டை எழுத்துக்களில் நம்மைக் குறித்து, எழுதுகிறார்கள். பார்க்கிறோம் - ஆனால் பதைக்கவில்லை - பீதி அடையவில்லை - ஏன்?

ஏன்? என்பதற்கு, மாற்றார்கள் விடைகாண முயலு கிறார்கள். முடியவில்லை!!

தம்பி! உன் ஆற்றலையும், தாங்கிக்கொள்ளும் சக்தியையும் அவர்களால் கணக்கெடுக்கத் தெரியவில்லை, எனவேதான், அவர்கள், பல இடங்களிலே இந்தப் பயல்கள் படுதோல்வி அடைந்தும், மண்ணைக் கவ்வியும், துளிகூட துக்கம் துளைத் திடும் நிலைபெறாமல், எப்போதும்போல "எக்காள'மிட்டபடி இருக்கிறார்களே - ஏன்? ஏன்? என்று கேட்டுக் கேட்டுக் கலக்க மடைகிறார்கள்.

வேதனை தரும் தோல்விகள்
வெட்கப்படத்தக்க தோல்விகள்
எரிச்சலூட்டும் ஏமாற்றங்கள்
நம்பி மோசம்போன இடங்கள்

இப்படிப் பலப்பல கண்டோம்! இவைகளை. கேசெய்வதற்காக, கேவலப்படுத்துவதற்காக, இழித்தும் பழித்தும் பேசுவதற்காக மற்றவர்கள் கூவிக் கூவிக் காட்டுகிறார்கள்! அவர்கள் எந்த நோக்கத்துடன், அவ்விதம் செய்வதாயினும் பரவாயில்லை, விடாமல் அவர்கள் அவ்விதம் குத்திக்குத்திக் காட்டவேண்டுமென்று நான் பணிவன்புடன் வேண்டி வேண்டிக் கேட்டுக்கொள்ளுவேன்!! தம்பி! உன் அரிய உழைப்புக்குப் பிறகும், அற்புதமான ஆற்றலுக்குப் பிறகும், உயரிய பணிக்குப் பிறகும், தூய தொண்டுக்குப் பிறகும், நாம் பல இடங்களில்,

டிபாசிட் இழந்தோம்
படுதோல்வி அடைந்தோம்

என்ற உண்மையை நாம், எக்காரணம் கொண்டும் மறந்திடக் கூடாது! நமது நெஞ்சிலே பாய்ச்சப்படும் இந்த உண்மை, வேதனையையும் வெட்கத்தையும் தருகிறது என்பதற்காக, நாம் இதனை வீசுவோர்மீது சினம்கொள்வது கூடாது - நான் சீலம் போதிக்கிறேன் என்று கேலிபேசாதே, தம்பி! அவர்கள் இந்தக் கணைகளை நம்மீது ஏவியபடி இருந்தால்தான், நாம், நமது நிலைமையைத் திருத்திக்கொண்டாக வேண்டும் என்ற உள்ளத் தெளிவினைப் பெறமுடியும்!

எவ்வளவு பாடுபட்டோம், எத்துணை உழைப்பை அளித்தோம், மக்களிடம் எவ்வளவு கனிவுரை கூறி, ஆதரவு கேட்டோம், எனினும்,

பல இடங்களில் படுதோல்வி அடைந்தோம்.
பல இடங்களில் டிபாசிட் இழந்தோம்.

என்பதை மறவாதிருப்பதுதான், இனி இத்தகைய வேதனை தரும் தோல்விகளும், எரிச்சலூட்டும் ஏமாற்றங்களும் நம்மைத் தாக்காது இருக்க, நாம் என்ன முறையில் நடந்துகொள்ள வேண்டும், நமது முறைகளில் எதனை எவ்விதம் திருத்திக்கொள்ள வேண்டும், மக்களின் பேராதரவைப் பெறுவதற்காக மேலும் எம்முறையிலே பணியாற்ற வேண்டும் என்பனவற்றினை ஆய்ந்தறிந்து செயலில் ஈடுபடவைக்கும். இந்தப் பேருதவியைத்தான் நம்மைத் தூற்றுவோர் புரிகிறார்கள்! முன்னமோர் முறை, வாழ்க வசவாளர்கள்! என்று நான் எழுதியது நினைவிலே இருக்கிறதல்லவா! பொருளும் புரியுமே இப்போது.

கோபக்கனலை உமிழ்ந்திடும் குணாளர்களே! தூற்றலைத் தொண்டாக்கிக்கொண்ட தூயவர்களே! இழிமொழி பொழிந்து இன்பம் காணும் பெரியீர்! தூற்றுங்கள்! தூற்றுங்கள்! தூ! தூ! என்று நாள் தவறாமல் நாக்கு வரண்டிடு மட்டும் தூற்றிக் கொண்டே இருங்கள். கைகொட்டிச் சிரியுங்கள்! கெக்கசெய்யுங்கள்!

டிபாசிட்டு இழந்தனர்
படுதோல்வி அடைந்தனர்

என்பதைப் பன்னிப் பன்னிக் கூறுங்கள் - பதைக்கப் பதைக்கப் பேசுங்கள்!! ஆமாம், அன்பர்காள்! இந்தக் காரியத்தில் அகில முழுவதும் ஆசானாகத்தக்க அளவுக்கு ஆற்றலைப் பெற்று விளங்கிடும் அரசர்க்கரசர்காள்! அயர்ந்துபோகாமல் இந்த நாராசத்தை எடுத்தெடுத்து வீசுங்கள்! அப்போதுதான், எமக்கு,

சூடும்
சுறுசுறுப்பும்
சூழ்நிலை விளக்கமும்
செயல்படு முறையும்
தரமும் திறமும்
வழியும் வகையும்

நிரம்ப நிரம்பக் கிடைக்கும் - கிடைக்கப் பெற்றால்தான், இன்றைய பதினைந்து, நாளை ஐம்பதாகும் அறுபதாகும். வேதனை தரும் தோல்விகள் மிரண்டோடும். செந்தேனென இனிக்கும் வெற்றிச் செய்திகள் விருந்தாகக் கிடைக்கும். எனவே, ஏசலை ஏவிப் பூசலை எதிர்பார்க்கும் இணையற்ற வீரர்காள்! நித்த நித்தம் தூற்றுங்கள், நிரம்ப நிரம்ப ஏசுங்கள். எம்மிலே செயலற்றுக் கிடப்பவனும் துடித்தெழுந்து செயலாற்றும் செம்மலாக உதவுங்கள்.

தம்பி! இந்தத் தேர்தலில் நாம் வேதனைப்படத்தக்க தோல்விகளைப் பெற்றோமே, அவை, நம்மை கவலைக் கடலிலே ஆழ்த்திவிட்டிருக்கும், கரை காணாமலும், உயிர்த்தெழ இயலாமலும் நாம் அதிலே அமிழ்ந்து போயிருப்போம். நமக்கென்றே தமிழகத்தில் தனிச்சிறப்புடன் அரசோச்சி வருகின்ற வசவாளர்கள் மட்டும் கிளம்பி, வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சாதிருந்தால்! அவர்தம் இழிமொழிதான், நம்மை, சோகக்கடலிலே ஆழ்ந்துபோவதினின்றும் தப்பவைக்கிறது - அந்தோ! அயராது உழைத்த எமக்கு, அருள்தொண்டாற்றும் எமக்கு, தூயதோர் பணியிலே ஈடுபட்டுள்ள எமக்கு, தாய்த் திருநாட்டின்மீது பூட்டப்பட்டுள்ள தளைகளை நொறுக்கி எறிந்து, தன்னரசு காணவேண்டுமென்று தளராது உழைக்கும் எமக்கு, மக்கள் தம் ஆதரவு இன்னின்ன இடத்திலே இன்னமும் கிடைக்கவில்லையே, தோல்வியன்றோ துரத்தி வந்து தாக்கிற்று, நமது விளக்கமும் வேண்டுகோளும் தெளிவாக இல்லையோ, நமது பணியின் மாண்பு மேலும் பண்பு பெறவேண்டுமோ, மக்களை அணுகி அளவளாவுவதிலே நாம் எடுத்துக்கொண்ட முயற்சி போதாதோ, காரணம் யாதோ? நம்மைச் சிலபல இடங்களிலே வெற்றிபெற ஒட்டாது செய்துவிட்டனரே. நம்மைக் கெடுத்தாலும் தடுத்தாலும் பரவாயில்லை, அங்ஙனம் செய்வதன் மூலம், நாம் எந்த இலட்சியத்தைப் பரப்புகிறோமோ, அந்த இலட்சியத்துக்கு இழிவும் இன்னலும் ஏற்பட்டுவிடுமோ, இனி அதுபோன்றதோர் காரியத்துக்கு ஒரு இடையூறு நேரிடாதிருக்க, நாம் வெற்றிக்கானும் வகையில் நமது முறைகளைத் திருத்தி அமைக்கவேண்டும், ஆற்றலைப் பெருக்கிக்கொள்ள வேண்டும், கூட்டுச் சக்தியைத் தேடிப்பெறவேண்டும். மக்களிடம் உள்ள தொடர்பு மேலும் கனிவுள்ளதாகிட வழிகோலவேண்டும் - என்ற இன்னோரன்ன பிற எண்ணங்களை நாம் பெறவும், பெறுவதன் மூலம் எதிர்கால வெற்றிகளுக்கான அச்சாரம் காணவும், இழிவினைப் பழியினை, இல்லாததை இட்டுக் கட்டியதை, எரிச்சலை, குமுறலை, காய்ச்சலை, கசப்பை, பொல்லாங்கை பொச்சரிப்பை, நச்சு நினைப்புகளை, நாசக்கருத்துகளை, வாரி வாரி வீசிடும் உத்தமர்களல்லவா உதவுகிறார்கள்! வாழ்த்திடத் தவறலாமா!! அதனால்தான், தம்பி, மீண்டும் அவர்களை எண்ணி, நெஞ்சு நிறைந்த மகிழ்ச்சியுடன்.

வாழ்க வசவாளர்!

என்று வாழ்த்துகிறேன்! சோகம் கப்பிக்கொண்ட நம் உள்ளத்துக்கெல்லாம், சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் சுரந்திடச் செய்யும் சுடுசொல் வீசி, நம்மை எழச் செய்கிறார்கள்!! எழுந்து நின்று, துக்கத்திரையை நீக்கியபடி, சூழ்நிலையை மீண்டும் பார்க்கிறோம். ஆங்காங்கு தாரகைகள் மின்னிடத்தான் செய்கின்றன! வெற்றிக் கதிரொளியும் தெரியத்தான் செய்கின்றது! பெருமைப்படவும் பேசிப்பேசி மகிழவும் தக்க சீரிய வெற்றிகள் சிற்சில கிடைத்துத்தான் இருக்கின்றன! பாலைவனம் என்றெண்ணிப் பதைக்கிறோம். நீரோடைகள் நிரம்பித்தான் உள்ளன!! வேதனைப்படத்தக்க தோல்விகளை நாம் கண்டு கவலைப்படத்தான் செய்கிறோம்; ஆனால் அதே போது, உற்றுப் பார்க்கும்போது, கைகளைப் பிசைந்துகொண்டும், கண்களைக் கசக்கிக்கொண்டும், முணுமுணுத்துக்கொண்டும், சபித்துக் கொண்டும் நிற்கும் அன்பழிக்கும் அருங் குணத்தார்களைக் காண்கிறோம். காரணம் என்ன என்று கேட்கிறோம், அவர்கள்

ஆயாசப்படத்தக்க
அச்சப்படத்தக்க
ஐயோ! அம்மா! என்று அரற்றிடத்தக்க!!
அவனா! அவனா! அவனா!
என்று கொதித்துக் கூவிடத் தக்க வெற்றிகளையும் பெற்றிருக்கிறோம்!! என்பது புரிகிறது!!

அந்த வெற்றிகளால் நாம் அடக்கமுடியாத நம்பிக்கைப் போதை கொள்ளாது தடுத்திட, வேதனை தரும் தோல்விகளும், அவைதமைக் குறித்து வீசப்படும் வெந்தழலினும் கொடிய வசைமொழிகளும் பயன்படுகின்றன; அதுபோன்ற, நாம் அடைந்த தோல்விகள் நம்மைத் துளைத்துத் துளைத்துச் செயலற்றவர்களாக்கிடும்போது, பெற்ற ஒருசில வெற்றிகள் பளிச்சிட்டுக் காட்டி, நம்மை, பாதையை மறவாதீர்! பணிபுரியத்தவறாதீர்! சோகக் கடலில் ஆழ்ந்திடாதீர்! சொல்லம்பு கண்டு நிலைகுலையாதீர்! வெற்றி இதோ காணீர்! வேதனையைத் துடைத்துக்கொண்டு, புதிய வேகத்துடன் பணியாற்றி, மேலும் பலப்பல வெற்றிகள், வேதனையைத் துடைத்திடத்தக்க வெற்றிகளைப் பெறவாரீர்! என்று அழைத்திடக் காண்கிறோம் - தன்னடக்கமும் பெறுகிறோம், தன்னம்பிக்கையையும் மீட்டுக்கொள்கிறோம். தம்பி! இதுதான், இன்று நமது நிலைமை!! சிந்தித்துப் பார், சிறிதளவு உன்னிப்பாக - பிறகு, மீண்டும் ஒரு முறை படித்ததைத் திரும்பப் படித்துப் பார். படமும் தெரியும் பாடமும் கிடைக்கும்!!

"நூறு இடங்களுக்குமேல் தேர்தலில் போட்டியிட்ட "இதுகள்' கேவலம் பதினைந்து இடங்களிலேதான் வெற்றிபெற முடிந்தது'' என்று பேசுகிறார்களல்லவா, தம்பி, அவர்களை, நான் மூன்று வகையினராகக் காண்கிறேன்.

1. அதனையும் செய்ய இயலாதார்.

2. அதைக் கண்டே அச்சம்கொண்டார்.

3. அது நமக்குப் போதுமே என்று அங்கலாய்ப்போர்! அண்ணா! இப்படி ஏன் சுற்றிவளைத்துப் பேசுகிறாய், சுருக்கமாக இன்னின்ன கட்சிகள் என்றுதான் கூறிவிடேன் என்று கேட்கிறாய், தம்பி தெரிகிறது, நீயேதான் அந்த வேலையைச் செய்து விடேன்!

காங்கிரஸ் கட்சி, நம்மைவிட அதிகமான இடங்களிலே தேர்தலில் ஈடுபட்டது, பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது, முறையும் நெறியும், பிறகு கவனிப்போம் - வெற்றிபெற்றிருக்கிறது - எனினும், மிகமிகக் குறைந்த அளவு இடங்களையே பெற முடிந்த, நம்மிடம் அந்தப் பெரிய கட்சி அலட்சியமாகவா நடந்துகொண்டது!! ஊர் உலகம் அறியுமே, நம்மை வீழ்த்த, காந்தியாரின் கண்ணீரைப் பன்னீராக்கிக் குளித்து மகிழ்ந்திடும் அந்தக் கட்சி, எவ்வளவு உழைத்தது, உழன்றது, ஊரை அடித்து உலையில் போடுபவனுடைய கரத்தைப் பிடித்துக்கொண்டு, இது கையல்ல... ... என்று என்னென்ன சொல்லி, கெஞ்சிக் கூத்தாடிற்று, எவ்வளவு எவ்வளவு கொட்டிற்று என்பதனை எல்லாம் அறியாதார் யார்?

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு போதுமல்லவா, பதம் பார்க்க! இதோ, பார்!!

சாத்தூர் தொகுதியில் தேர்தலுக்கு நின்றார் முதலமைச்சராக இருக்கும் காமராஜர்! அந்த முலாம் கலையாதிருக்கும் நிலையுடன்!!

காமராஜருக்கு, பெரியாரின் பேராதரவு எனும் புதிய கவசமும் கிடைத்தது!

ஆச்சாரியாரை வீழ்த்தியவர் என்ற "விருது' வேறு அவருக்கு ஏற்கனவே இருக்கிறது.

தேர்தல் காரியத்திலே "அசகாயச் சூரர்' என்று புகழ் சூட்டப்பட்டவர்.

களத்திலே ஈடுபடுமுன்பே உழைப்பாளர் கட்சியை ஒழித்துக் கட்டியதன் மூலம், ஒரு பலமான எதிரியைப் பக்குவமாகத் தன் முகாமுக்கு இழுத்துக் கொண்டவர்.

இவ்வளவு ஆற்றலுள்ளவர் - காமராஜர் - தேர்தலுக்கு நின்ற இடமோ, சொந்தத் தொகுதி!

எதிர்த்து நின்றாரே ஜெயராம ரெட்டியார், அவரை, தம்பி உனக்குத் தெரியுமா? ஊராரைக் கேட்டுப் பார், தெரியுமா என்று.

ஜெயராம ரெட்டியாரின் அறிவாற்றல், தேசத் தொண்டு, தகுதி திறமை, நேர்மை நாணயம் ஆகியவைபற்றி, இந்துவோ மித்திரனோ, தினமணியோ, கல்கியோ, விகடனோ வேறு இதழ்களோ எழுதிப் படித்ததுண்டா - நீயோ, நாடோ? இல்லை!

அவருடைய படங்களைப் பத்திரிகைகள் வெளி யிட்டனவோ? இல்லை!

அவர்தான், ஊரறிந்த, உலகறிந்த, முதலமைச்சராகவும் பெரியாரின் பேரன்பராகவும் கொலுவீற்றிருக்கிற காமராஜருக்குப் போட்டி!!

டிபாசிட் கிடைக்கலாமா? இப்படிப்பட்ட, அசகாயச் சூரரை எதிர்க்கிறவருக்கு!!

தலைமுறை தலைமுறையாகத் தமிழர்கள், காமராஜரைப் பூஜை செய்யவேண்டும் என்று, பூஜாமுறைகளே புரட்டு என்று ஐம்பதாண்டுகளாகப் போதித்துவரும் பெரியாரே பேசுகிறார். அப்படிப்பட்ட, தமிழரின் பாதுகாவலர் தேர்தலுக்கு நிற்கும் போது, யார், எவர் என்று ஊரார் ஆவலுடன் கேட்டுக்கேட்டு விவரம் கிடைக்கப் பெறாமல் திண்டாடும் நிலையில், ஒருவர் போட்டியிடுகிறார். அவரை வீழ்த்திய விருதுநகரார், பெற்ற அதிக "ஓட்டுகள் எத்தனை? தம்பி! சாத்தூரில், காமராஜர் போட்டியிட்டாரே, நமக்குத்தான் காமராஜரை கவிழ்ப்பதுதான் வேலை என்ற அரசியல் இரகசியத்தை பெரியார் தமது முழு ஆற்றலையும் கொண்டு கண்டுபிடித்து, உலகம் உய்யட்டும் என்ற உயர்ந்த நோக்குடன் இந்த உண்மையை நாளைக்குப் பத்து கூட்டங்கள் மூலம் எடுத்துரைத்து வந்தாரே,- அவருடைய அபூர்வ கண்டுபிடிப்பு உண்மை என்றால், நாம் சாத்தூர் சென்று, காமராஜருக்கு ஓட்டுப்போடாதீர்கள் என்று பேசியிருக்க வேண்டுமல்லவா?

நானோ, ஆசைத்தம்பியோ, அன்பழகனோ, சம்பத்தோ, கருணாநிதியோ, கண்ணதாசனோ, சிற்றரசோ, சண்முகமோ, சத்தியவாணியோ, நடராசனோ, யாராவது சாத்தூர் சென்றோமா? சென்று ரெட்டியார் நல்லவரோ கெட்டவரோ ஒருபுறம் அது கிடக்கட்டும்,

சங்கரலிங்கனாரைச் சாகடித்தவருக்கு
சென்னைக்குத் தமிழ்நாடு என்ற பெயர் வைக்காதவருக்கு
தேவிகுளம் பீர்மேடு பறிகொடுத்தவருக்கு
ஓட்டுப் போடாதீர்கள்!

என்று பேசி இருக்கக் கூடாதா? நமது பிரச்சாரம் அங்கும் மும்முரமாகி இருந்தால், காமராஜரின் வெற்றிக்கு ஆபத்து ஏற்பட்டிருக்காதா? நெஞ்சில் கை வைத்து சொல்லச் சொல்லுங்கள் - நெஞ்சில் நேர்மைக்கு இடம் தருபவர்களை!! அரசியல் நாகரிகம், நம்மை சாத்தூர் பக்கம் போகவிடாமல் தடுத்தது! ஆனால் அவர்? ஆழம் தெரியாமல் காலை விடுகிறார்கள் - அகப்பட்டுக் கொண்டு விழிக்கப் போகிறார்கள் என்று அரசியல் பேசுகிறாரே அந்தக் காமராஜர், 100க்கு 15 என்ற கேலிக்கு இலக்காகி உள்ள நாம், தேர்தலில் ஈடுபட்டபோது,

வராத இடம் உண்டா?
வரிந்து கட்டாத நாள் உண்டா?
பம்பரம் போல் சுழன்றாடவில்லையா?

இப்போது மூன்று வகையினர் குறிப்பிட்டிருக்கிறேனே, அதிலே இரண்டாவது வகை யார் என்று யோசித்துப் பாரேன்! புரிகிறது!! அதுபோன்றே மற்ற இரண்டு குறித்தும், சிந்தித்துப் பார், படமும் தெரியும் பாடமும் கிடைக்கும்.

அண்ணன்,

31-3-57