அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


படமும் பாடமும் (3)
2

அதுவும் தவறு - முறைகள் ஒன்றோடொன்று குழைந்து போயே விட்டன, என்று கூறுவார் உளர்.

அவர்களெல்லாம், அகலக் கண்களைத் திறந்து பார்ப்பர், பாட்னா இதழ் தரும், இந்த ஆய்வுரையைக் கண்டு.

ஆரியம் என்பது பழமையின் பாசறை - திராவிடம் புதுமை பூத்திடும் பூங்கா - என்று நாம் கூறும்போது, அடுக்குமொழி பேசுகின்றனர் மயக்க என்று அலட்சியம் செய்தனரே, அவர்கள், இந்திய பூபாகத்தில் இருவேறு பகுதிகளை ஆரியக் கலாச்சாரம் பிடித்துக்கொண்டுள்ள இடம், திராவிடப் பண்பாடு நிரம்பிய இடம் என்று வேறுபடுத்திக் காட்டி, அந்த வேறுபாட்டினுக் கேற்றபடி, அரசியல் நிலைமைகள் உருவாகின்றன என்பதை பாட்னா பத்திரிகை விளக்கும்போது, என்ன பதில் அளிக்கின்றனர்!!

பாட்னாவில் உள்ள இந்த இதழுக்கும், நமது கழகத்துக்கும் தொடர்பு துளியும் இல்லை.

இல்லாததால்தான், கேரளத்தில் கம்யூனிஸ்டு பெற்ற வெற்றிக்குக் காரணம், அந்த நாட்டிலே உள்ள திராவிடப் பண்பாடு, என்று எழுத முற்பட்ட இதழ், திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயருடனேயே பணியாற்றி, குறிப்பிடத்தக்க வெற்றிபெற்ற நம்மைக் குறித்து ஏதும் எழுதவில்லை.

Home Land - ஆங்கில இதழ் வெளிவந்த பிறகு, கருத்துத் தொடர்பு ஏற்படக் கூடும்; அப்போது நமது கழகத்தின் செல்வாக்கு எத்திறத்தது என்பதனை இன்று அறியாமலிருக்கும் பலரும் அறிந்திட வாய்ப்புக் கிடைக்கும்.

வம்பு வல்லடிக்காரர்கள், வறட்டுக் கூச்சலிடுவோர், வகுப்புவாதம் பேசுவோர், வரைமுறை அழித்திட ஆர்ப்பரிப்போர் என்றெல்லாம், ஏளனமும் எரிச்சலும் கலந்து குரலிற் பேசி வந்தோரெல்லாம், இப்போதுதான் சிறிதளவு விழிப்புற்று நம்மைப்பற்றி அறிந்திட ஆவல் காட்டுகின்றனர். தம்பி! நமக்குக் கிடைத்தது 15 இடங்களேதான் என்றாலும் இதுவரையில் இல்லாத அளவிலும், முறையிலும், நமக்கு மக்களின் இதயத்திலே இடம் கிடைத்திருக்கிறது.

இடங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து மட்டுமே மதிப்பு அளிக்கப்பட வேண்டும் என்று ஜனநாயகக் கோட்பாடு கூறிடவில்லை.

அதிக எண்ணிக்கை உள்ள இடங்களைக் கைப்பற்றி விட்டால், உடனே காங்கிரஸ் வட்டாரம், கன்னத்தில் போட்டு கொண்டு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறதா என்றால் அதுவுமில்லை.

நாம்தான், பல இடங்களில் டிபாசிட் இழந்தோம், பலமாகத் தோற்றோம், பதினைந்தே இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றோம், எனவே பரிகாசம் செய்கின்றனர் என்று வாதத்துக்கு ஒப்புக்கொள்வோம். நிரம்ப இடங்களைப் பிடித்துவிட்டால் மட்டும் மதிப்பளிக்கின்றனரோ? அந்த மாண்பு இருக்குமானால், மராட்டிய மக்கள் பெற்றுக் காட்டிய மகத்தான வெற்றிகண்ட காங்கிரசார் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, இழைத்த அநீதியைத் துடைத்திட அல்லவோ முற்படுவர்! செய்தனரோ? அதுதான் இல்லை! மொழி வெறி ஊட்டி, மக்களை பெருமளவு ஏய்த்துவிட்டனர் என்று குற்றம் சாட்டி, மராட்டிய மக்கள் பெற்ற வெற்றியின் மதிப்பைக் குறைத்துப் பேசுகின்றனர்.

மராட்டிய மண்டலத்தில் மட்டும் 135 - இடங்களில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் 32 - இடங்களைத் தான் பிடித்திட முடிந்தது; 100 - இடங்கள் சம்யுக்த மராட்டிய சமிதிக்குக் கிடைத்தது. மலையைக் கெல்லினர் எலி பிடித்தனர் காங்கிரசார் என்று கூறிப் பார், ஆர்ப்பரிப்பர், அந்தத் தலைவர்கள்! செய்யாத முயற்சி இல்லை - வீசாத பணம் இல்லை - பேசாத தலைவர் இல்லை - எனினும் பலன் கிட்டவில்லை.

டில்லி பாராளுமன்றத் தேர்தலில், 23 - இடங்கள்; இதில் 2 - இடங்கள்தான் காங்கிரசுக்கு!

மராட்டிய மக்கள் தாயகத்திடம் செலுத்தவேண்டிய அன்பினைத் தெளிவுபடக் காட்டிவிட்டனர்.

தடியடியும் துப்பாக்கிப் பிரயோகமும் நடாத்திய காங்கிரஸ் தர்பாருக்குத் தக்க பாடம் புகட்டி விட்டனர்.

உற்றார் உறவினர் என்றும், உலகம் மெச்ச வாழ்ந்திடுவோர் என்றும், உயர்ந்த இடத்தில் அமர்ந்தோர் என்றும் என்ன கித்தாப்பு பேசினாலும், அவர்கள் உரிமையை அழித்திடுவோர் என்றால், அவர் அடிவருடமாட்டோம் உரிமைக்காக வீரப் போரிட்டே தீருவோம் என்று மராட்டிய மக்கள், செயலால் காட்டிவிட்டனர்! 135-க்கு 32!! - காங்கிரசுக்கு!

இந்த தெளிவான முடிவுக்குப் பிறகாவது, காங்கிரஸ் கட்சி தோல்வியை ஒப்புக்கொண்டு, தன் எதேச்சாதிகாரத்தை விட்டொழித்ததா? இல்லை! இல்லை! 135-ல் 100 - இடங்களில் வெற்றி பெற்ற "சமிதி'யைக் கேவலப்படுத்தித்தான் பேசி வருகிறது.

"நாக நாடு' உரிமைக்காகக் கிளர்ச்சிகள் நடத்திப் பலன் காணாததால், பிசோ என்னும் தலைவனுடைய ஆணையின்கீழ் திரண்டெழுந்து போர்க்கொடி உயர்த்தி விட்டிருக்கும் நாகர்கள் - சிதறுண்டு போயினர், சரணடைந்தனர், இந்திய ராணுவமும் ராஜதந்திரமும் சேர்ந்து நடத்திய தாக்குதலால் எதிர்ப்பு அழிந்தொழிந்து, தனிநாடு கேட்பது தீது என்ற தெளிவுபெற்ற நாகர்கள், இப்போது இந்திய சர்க்காருடன் ஒத்துழைக்கத் துடிக் கின்றனர், தோழமையைப் பெற விழைகின்றனர் என்றெல்லாம், "டில்லி' பிரசாரம் செய்ததல்லவா? பிசோ பிடிபட்டு அடிபணிய வேண்டியது ஒன்றுதான் பாக்கி, அவன் வலது கரம் - அவன் கண் - அவனுடைய காது - அவனுடைய மூளை - போன்ற "சகாக்கள்' பிடிபட்டனர், அறிவூட்டப் பெற்றனர், அடங்கி விட்டனர் என்றெல்லாம் அறிக்கைகளை வெளியிட்டு, டில்லி தர்பார் மகிழ்ச்சி தெரிவித்ததல்லவா, அந்த நாகநாடு இந்தத் தேர்தலிலே என்ன பாடம் தந்திருக்கிறது தெரியுமோ!

கடந்த பொதுத் தேர்தலின்போது, "எம்மை அடிமைப் படுத்திய டில்லி நடத்தும் தேர்தலில் நாங்கள் கலந்து கொள்ளப்போவதில்லை; உரிமையை உயிரினும் மேலெனக் கருதிடும் நாகர் எவரும், இந்தத் தேர்தலில் பங்கு கொள்ளக்கூடாது'' என்று நாகநாடு காணக் கிளர்ச்சி நடத்துபவர் கூறினர். நாகநாடு, அடியோடு தேர்தலை வெறுத்துத் தள்ளிவிட்டது. "நாகநாடு' பகுதிக்கென இந்திய சர்க்கார் 3 - பாராளுமன்ற உறுப்பினர்கள் உண்டு என்றனர்; ஒரு இடத்துக்கும் "ஆள்' கிடைக்கவில்லை, தேர்தலுக்கு நிற்க!!

இந்தத் தேர்தலின்போதும் ஒரு தொகுதிக்கு யாருமே அபேட்சகராக நிற்க முன்வரவில்லை!

மற்ற இரண்டு தொகுதிகளிலும், நாகநாடு தனி அரசு ஆக வேண்டும் என்ற உரிமைத் திட்டத்தை ஆதரிக்கும் சுயேச்சைகள் தான் வெற்றிபெற முடிந்தது - காங்கிரஸ் அல்ல!

நாக நாடு பகுதியில், 19 - சட்டசபைத் தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி, பெற்ற வெற்றி என்ன என்று கேட்டுப்பார்! நேரு பண்டிதரை உலகமே புகழ்கிறது என்கிறார்கள் - ஆனால் தனி அரசு கோரும் நாகர்கள், அந்தப் புகழொளி கண்டு மயங்கிட மறுத்து விட்டனர். 19-ல் 1-இடமே காங்கிரசுக்கு! ஒன்றே ஒன்று!!

குன்றுக்குக் குன்று, விடுதலை வேட்கை தாவுகிறதாம் அங்கு!

இங்கு அணைத்துவிட்டோம், அங்கு அணைத்து விட்டோம் என்று கூறி முடிப்பதற்குள், நாகநாடு உரிமைக்காக எழுந்துள்ள தியாகத்தீ, வேறு இடத்திலே கொழுந்துவிட்டு எரியக் காண்கின்றனர். வீழ்ந்துபட்டனர் என்றெண்ணி, வீழ்த்த எடுத்துக் கொண்ட உழைப்பினால் ஏற்பட்ட வியர்வையை இந்திய ராணுவத்தினர் துடைத்துக்கொண்டிருக்கும்போதே, வேறோர் இடத்திலே எதிர்ப்பு வெடிக்கிறது.

இந்த நிலைமையைக் கண்டாவது, காங்கிரஸ் தலைவர்கள், நாகநாட்டினர் வீறுகொண்டு எழுந்துள்ளனர், எம்மால் அவர்களை அடிமைப்படுத்த முடியவில்லை - வேட்டு முறையிலும் அவர்களை அழிக்க முடியவில்லை, ஓட்டு முறையாலும் ஒடுக்க இயலவில்லை, நாகநாடு தனி அரசு ஆகவேண்டும் என்பவர்களே, பெருவாரியான இடங்களிலே வெற்றி பெற்றனர் 19-ல் 1-தான் காங்கிரசுக்குக் கிடைத்தது - என்று கூறி, நாகநாடு கேட்பவரிடம் மதிப்பு காட்டுகின்றனரா? இல்லை! இல்லை! இந்த நாகர்கள், தலைவெட்டிக் காலந்தள்ளுபவர்கள், வெளிநாட்டாரின் கைப்பாவைகள், காட்டுப்போக்கினர் என்று இழிமொழி பேசுகின்றனர்.

தேர்தலில், மக்களின் தீர்ப்பு எங்ஙனம் அமைகிறது என்பதைக் கண்டறிந்து, காங்கிரஸ் கட்சி தன் போக்கை மாற்றிக்கொள்வதாக இல்லை.

காரணம் வேறு ஏதேனும் காணவும் பெற்ற வெற்றிக்குக் களங்கம் கற்பிக்கவும் முற்படுகின்றனரேயொழிய, மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்க முன்வருவதில்லை.

எதிர்க்கட்சிக்கு வெற்றி எத்தனை இடங்களில் என்பதைப் பொறுத்து காங்கிரஸ், தன் நோக்கையும் போக்கையும் அமைத்துக்கொள்ள மறுக்கிறது.

எனவே தம்பி, நமக்குக் கிடைத்த இடங்கள் எத்தனை என்பதுகூட அவ்வளவு முக்கியமல்ல.

எவ்வளவு எதிர்ப்புக்குப் பிறகு!

என்பதுதான் மிகமிக முக்கியமானது. இந்த வெற்றி, அளவிலே எப்படியோ இருக்கட்டும், தரம் எப்படிப்பட்டது என்றால்,

அனைவருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

தமிழகத்தில் புதியதோர் வலிவு பொலிவுடன் எழுகிறது என்ற எண்ணத்தை உண்டாக்கி வைத்திருக்கிறது.

மக்கள் மனதிலே புதியதோர் ஆவல், அன்பு, நம்பிக்கை உணர்ச்சி எழுந்திருக்கிறது. இவ்வளவு ஏற்றமும், நமது கழகம், தன்னந்தனியே நின்று போராடிப் பெற்றது; துணை - கூட்டு - ஒத்துழைப்பு - என்பதேதும் இல்லை என்று அறியும் போது மக்கள் நமது கழகத்துக்கு உள்ள வலிவினை உணர முடிகிறது.

சிலாக்கியமான கொள்கைகள் உள்ளன; எவரும் போற்றிப் புகழ்ந்திடத்தக்க கொள்கைகள்; நாட்டுக்கு மிகமிகத் தேவையான கொள்கைகள் என்பதிலே ஐயமில்லை. ஆனால் அந்தக் கொள்கைகளைப் பரப்புவதாகக் கூறிக்கொண்டு உலவும் இந்தப் பேர்வழிகள், சரியான ஆட்களல்லவே, தரமற்றவர்கள், திறனற்றவர்கள், நேர்மையற்றவர்கள்; எனவே கொள்கை வெற்றி பெறாது; கொள்கை சிலாக்கியமானது என்பதற்காக, இப்படிப் பட்ட தரம் கெட்டவர்களுடன் கூடிப் பணியாற்ற முடியுமா! - என்று சில கட்சிகளைக் குறித்து எடுத்துக் கூறிடுவதுண்டு.

"ஆசாமிகள்' நல்லவர்கள், நாணயமானவர்கள், திறமை மிக்கவர்கள், மதிக்கத் தக்கவர்கள், அறிவாற்றலுள்ளவர்கள் - அதிலே ஒருவருக்கும் ஐயமில்லை; ஆனால் அவர்கள் எடுத்துக் காட்டும் கொள்கைகள் சரியானவைகளல்லவே, கேடு பயப்பன, நாட்டுக்குக் கேவலத்தைத் தருவன, மக்களை நாசப்படுத்துவன வாக உள்ளனவே; என்ன செய்வது? ஆசாமிகள் நல்லவர்கள் என்பதற்காக, அவர்களுடன் கூடி நாட்டைக் கெடுக்கும் கொள்கைக்கு ஆக்கம் அளிக்கலாமா - அறிவுடைமையாகுமா, ஆபத்தல்லவா அது? என்று சில கட்சிகள் குறித்துச் சிலர் கூறுவதுண்டு,

தம்பி! நம்மைப்பற்றிப் பலரும் கூறிவந்ததோ,

கொள்கையும் கேடானவை நாமும் தரமற்றவர்கள் என்பதல்லவா?

கொள்கை ஏது இவர்களுக்கு, வகுப்புவாதம் நாசமூட்டுவ தாகுமே, நாட்டைப் பிளக்கும் நாசகாலர்களுக்குக் கட்சி ஒரு கேடா, வறட்டுக் கூச்சலிட்டுக் கொண்டு நாட்டைக் குட்டிச்சுவராக்கும் ஒரு கும்பலுக்கு, கொடி ஒன்று வேண்டுமா!! - நம்மைக் குறித்து மாற்றுக் கட்சிகள் கூறுவனவற்றை மெத்தக் கஷ்டப்பட்டு, நாகரீகமாக்கித் தரமுயன்றிருக்கிறேன்.

இதுவரையில் எந்த ஒரு கட்சியையும் இவ்வளவு கேவலமாக, ஒருவர் பேசி ஏசியதில்லை.

அவர்கள் நம்மைப்பற்றிக் கூறியுள்ள "இழிமொழிகளை'த் தாங்கிக் கொள்ள முடிந்ததொன்றே, பலருக்கு பெரிய ஆச்சரியமாக இருக்கிறது.

இவ்வளவு கேவலப்படுத்தப்பட்ட நமது கழகம், மக்களிடம் இந்த அளவுக்கு மதிப்புப்பெற முடிந்தது என்றால், நாம் உள்ளபடி பெருமைப்படாமலிருக்க முடியுமா?

எத்துணை கேவலப்படுத்திக் காட்டினோம், இவர்களை வளரவிடாதீர்கள் நாட்டுக்கு நாசம் என்று எச்சரித்தோம், எனினும் பதினாறு இலட்சத்துக்குமேல் வாக்குகளை இந்த மக்கள் கொட்டித் தந்தனரே! - என்று எண்ணும்போதே, நம்மை ஏசி வருபவர்களின் வயிறு "பகீர்' என்கிறது, நெஞ்சு பதறுகிறது, மக்களையே, துரத்தித் துரத்தி அடிக்கலாமா என்று துடிக்கிறார்கள்.

பதினைந்து இடங்களைப் பிடித்து விட்டார்களாம் - பதினைந்து!! - பூ! இது ஒரு பிரமாதமா என்று பரிகாசம் பேசுகிறார்களே, அதன் உண்மையான பொருள் இதுதான்; மக்களின் இதயத்திலே நமக்கோர் மதிப்புள்ள இடம் கிடைத்துவிட்டது என்ற உண்மை அவர்களின் உள்ளத்தைச் சல்லடைக் கண்ணாகத் துளைக்கிறது; துடியாய்த் துடிக்கிறார்கள்.

அவர்கள் வீட்டில் சிறுவர்கள், கள்ளங் கபடமற்ற நிலையில், "அப்பா! பத்தும் ஐந்தும் கூட்டினால், எவ்வளவு?'' என்று கேட்டுவிட்டால்கூடப் போதும். அவர்கள் பாபம் பதறி, "பாவீ! பாதகா! கண்ணீர்த்துளிகளின் "வெற்றி'யையா கொண்டாடுகிறாய்! என் எதிரிலா? அவ்வளவு ஆணவமா உனக்கு? எதைக் கண்டு மயங்கி விட்டாயடா, ஏமாளி! அந்தப் பயல்களின் பேச்சைக் கேட்டா? எழுத்தைப் பார்த்தா? பாடல் கேட்டா? படம் பார்த்தா? பத்தும் ஐந்தும் கூட்டுவதா? பத்தும் ஐந்தும் பதினேழு! போ! ஆமாம்! அப்படித்தான் சொல்லுவேன்! கூரைமீது ஏறிக் கூவுவேன்! கோபுரத்தின்மீது ஏறிக் கொக்கரிப்பேன்!'' என்றெல்லாம்கூட, குளறுவர்! நல்லவர்கள்தான், பாபம், ஆனால் அவர்கட்கு வந்துற்ற நோய் அப்படிப்பட்டது!!

அண்ணன்,

14-4-57