அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


படமும் பாடமும் (4)
2

அங்கு ஐந்து அபேட்சகர்கள் காங்கிரசை எதிர்த்தனர்.

ஒவ்வொருவரும், காங்கிரசை வீழ்த்தக்கூடியவர்கள் என்ற நம்பிக்கையை. வாக்காளரிடம் பரப்பியதில், மக்கள் குழப்ப மடைந்து, எந்த "அம்பு' காங்கிரசை வீழ்த்தும் கூருள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடியாது போய்விட்டது.

வேணுகோபால் ரெட்டியார் 8,908
துஷ்யந்தராஜா 7,768
மாரிமுத்து 3,998
P.B. ஜீவரத்னம் 3,152
கன்னைய்ய நாயுடு 888

மொத்தம் கூட்டிப் பார்க்கும்போது கமலாம்புஜம் அம்மையாருக்கு கலக்கமாகத்தானே இருக்கும்! 24,714 வாக்குகள், காங்கிரசுக்கு எதிர்ப்பாக!! அம்மையாருக்குக் கிடைத்ததோ 9,002!!

துஷ்யந்தராஜாவும் வேணுகோபாலரும், அல்லது மாரிமுத்துவும் துஷ்யந்தராஜாவும், நிலைமையைப் பரிசீலனை செய்து, தோழமை தேடி காங்கிரசை வீழ்த்த நமக்குள் போட்டி இருக்கக்கூடாது என்ற முடிவுக்கு வந்து விட்டிருந்தால்? எண்ணும்போதே, வெற்றி பெற்ற அம்மைக்கு முகம் எப்படி இருக்கும்?

வேணுகோபால ரெட்டியாரும் கன்னைய்ய நாயுடுவும் தோழர்களாகி விட்டிருந்தால்கூட அல்லவா ஆபத்து!!

பெட்டிகள் பல - அதன் பலன், காங்கிரசுக்குத்தான்!

மதுரையில் கழகம் இத்துணை எழிலும் ஏற்றமும் பெற்றும், வெற்றி காங்கிரஸ் அபேட்சகர்களுக்குக் கிடைத்ததே என்று நம்மில் பலர் திகைத்திடுகிறோம். உண்மை என்ன? காங்கிரஸ் வெற்றிபெறவில்லை - காங்கிரஸ் அபேட்சகர் வெற்றி அடைந்திருக்கின்றார்! வாக்காளர்களிலே பெரும்பாலோர் காங்கிரசுக்கு எதிர்ப்பாகத்தான் தீர்ப்பு அளித்தனர். - ஆனால் நாலு வெவ்வேறு பெட்டிகளில் அந்த எதிர்ப்பு ஓட்டுகள் பிரிந்து பிரிந்து விழுந்தன; காங்கிரஸ் அபேட்சகரின் பெட்டிக்கு 20,305 வாக்குகள் வீழ்ந்தன - அவர் வெற்றிபெற்றார் 9,872 வாக்குகள் நமது முத்துவுக்கும், பாகுலேயன் என்னும் பிரஜா சோμயலிஸ்டு 7,873 வாக்குகளும், விசுவநாதன் எனும் கா. சீ. க. 4,565, முத்துமாலை என்பவர் 523 வாக்குகளும் பெற்று, காங்கிரஸ் அபேட்சகரை வெற்றிபெற வைத்துவிட்டனர்.

முசிரி தொகுதியில் நமது கழகத்தோழர் முத்துக்கருப்பன் 18,657 வாக்குகள் பெற்றார் - முத்தையா எனும் காங்கிரஸ் அபேட்சகர் 34,427 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்; அவ்வளவு செல்வாக்கா காங்கிரசுக்கு என்று மலைக்கத் தோன்றுகிறதல்லவா? விளக்கத்தைக் கண்டால், வேறோர் உண்மை புலனாகும். கா. சீ. க. அபேட்சகர் 15,936, கம்யூனிஸ்டு தோழர் 11,543, சுயேச்சை 4,206 வாக்குகள் பெற்றனர் - மொத்தத்தில் காங்கிரசுக்கு எதிர்ப்பாக 50,342 - வாக்குகள்!! எதிர்ப்பாளர் பலர்!! எனவே காங்கிரஸ் அபேட்சகர் வெற்றிபெற முடிந்தது.

தூத்துக்குடியிலும் இதே சேதி! சட்டசபை உறுப்பினராக முடியாது போய்விட்டதல்லவா நமது கழகத் தோழர் சிவசாமி அவர்களால்! பெற்ற வாக்குகள் 15,298 - ஆனால் அவர்போல காங்கிரசை எதிர்த்து கம்யூனிஸ்டு முருகானந்தம் 14,665 வாக்குகள் பெற்றார் - இருவருமாக, காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுகளைப் பங்குபோட்டுக் கொண்டதால் 17,438 - வாக்குகள் பெற்ற காங்கிரஸ் அபேட்சகர் சட்டசபைக்கு வெற்றி வீரராக வருகிறார்.

தி. பழுர் தொகுதியில் நமது கழக அபேட்சகர் 15,602 வாக்குகள் பெற்றார் - காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகளை கா.சீ.க. தோழர் 7,276 பிரித்துக் கொண்டார் - காங்கிரஸ் அபேட்சகர் 17,522 வாக்குகள் பெற்று, வாகை எனக்கு என்றார்.

கடலூரில், 30,135 வாக்குகள் காங்கிரசுக்கு எதிர்ப்பாக! ஆனால் அது அவ்வளவும் ஒரே பெட்டியில் இல்லை. நமது கழகத்து இளம்வழுதி 13,091 பெற்றார், S.K. சம்பந்தம் 17,044 பெற்றார் - காங்கிரசு அபேட்சகர் 21,100 வாக்குகள் பெற்று எம்.எல்.ஏ. ஆகிறார்!

ஆம்பூர் தொகுதியில், நமது கழகத் தோழர் சம்பங்கி, 25,105 வாக்குகள் பெற்றார் - 25,562 வாக்குகள் காங்கிரஸ் அபேட்சகருக்குக் கிடைத்து வெற்றி கிட்டிற்று - ஆனால், தம்பி! இந்த வேதனையைப்பார், காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுகளில் 14,592, ஒரு கா. சீ. க. மடக்கிக்கொண்டார். ஆம்பூர் மக்கள் போரில் குறை கூற என்ன இருக்கிறது? 39,697 பேர் காங்கிரசு கூடாது, ஆகாது என்று தீர்ப்பு அளித்துத்தான் இருக்கிறார்கள்.

வடசென்னை காங்கிரசுக்கு எதிர்ப்புக் கோட்டை என்று எக்காளமிட்டு வந்தீர்களே, ஏன் உங்கள் ஜீவரத்தினம் தோற்றார் என்று காங்கிரசில் தரம்குறைந்த சிலர் கேட்கும்போது, எனக்கு வேதனையாகத்தான் இருக்கிறது - தரம் குறையாத காங்கிரஸ்காரர் 11,770 வாக்குகள் வாங்கினார் என்பதையும், நமது ஜீவரத்தினம் 11,279 - வாக்குகள் பெற்றார் என்பதையும் அறிகின்றனர் - அகமகிழ்ச்சிக்கோ பெருமைக்கோ இடமில்லை என்பதை உணருகின்றனர்; அது கிடக்கட்டும் ஒருபுறம்; வடசென்னையில் காங்கிரசுக் கட்சிக்குச் செல்வாக்கு இருக்கிறதா? இதென்ன பைத்தியக்காரத்தனமான கேள்வி - மாயாண்டி நாடார் வெற்றி பெற்ற பிறகு, உனக்கு அந்தச் சந்தேகம் எழலாமா என்று சிலர் கேட்பர். மாயாண்டி நாடார் எனும் காங்கிரஸ் அபேட்சகர் வெற்றி பெற்றார் என்பதை மறந்து பேசவில்லை; அவர் வெற்றி பெற்றார். ஆனால் அது காங்கிரசுக்கு வெற்றியாகுமா? காங்கிரசுக்கு எதிராக வடசென்னைத் தொகுதி குவித்துள்ள வாக்குகள் 28,143!! ஆதரவாகக் கிடைத்தவை 11,770!! நால்வர், பங்கு போட்டுக்கொண்டனர், எதிர்ப்பு வாக்குகளை! நோட்டு துண்டாக்கப்பட்டுவிட்டது!!

இதுபோலப் பலப்பல தொகுதிகள்! ஸ்ரீவில்லிபுத்தூரில் காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுகள் 57,992 - காங்கிரஸ் ஆதரிப்பு ஓட்டுகள் 49,498!!

பென்னாகரத்தில், காங்கிரசுக்கு ஆதரவு அளித்தோர் 8,791 - எதிர்ப்பு தெரிவித்தோர் 19,042!!

மன்னார்குடியில் காங்கிரஸ் வெற்றிபெற விடமாட்டோம் என்று 31,171 வாக்காளர்கள் தீர்ப்பளித்தனர் - பெட்டிகள் மூன்று - எனவே 25 ஆயிரம் வாக்குகள் பெற்ற காங்கிரஸ் அபேட்சகர் வெற்றியை அணைத்துக் கொண்டார்.

புள்ளி விவரங்களைப் பார்க்கப் பார்க்க, வேதனை தருவதாக மட்டுமல்ல, காங்கிரஸ் அபேட்சகர்கள் வெற்றி பெற்றார்களே தவிர, காங்கிரஸ் கட்சி வெற்றி பெறவில்லை என்பது விளக்கமாகும்.

எதிர்ப்பாளர்களுக்குள்ளே இருந்துவந்த பிளவு, காங்கிரஸ் அபேட்சகர்களுக்குச் சாதகமாகி விட்டது; வேறென்ன.

இதுபோலெல்லாம் பிய்த்துப் பிய்த்துப் பார்த்திடலாமா? பத்து ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருவது போலவே, இனியும் காங்கிரஸ் கட்சிதானே ஆட்சி செய்யப் போகிறது! - என்று கேட்பார் உளர்.

ஆம்! அதிலே ஐயம் இல்லை! ஆனால் ஆதிக்கம் செலுத்தும்போது, இனி காங்கிரஸ் கட்சிக்கு உள்ளூற அச்சம் இருந்து வரும் என்பதை, காங்கிரசுக்கு எதிராகக் குவிந்துள்ள "ஓட்டுகள்' காட்டுவதை, கருத்துக் குருடரன்றி பிறர் யாரும் உணராமலிருக்க முடியாது.

பத்து ஆண்டுகளாக ஆட்சி நடாத்தி வருகிற காங்கிரஸ் கட்சி தன் சாதனைகளைப் பகட்டான முறையிலே விளம்பரப் படுத்திக் கொண்டும், பல்வேறு நாட்டுத் தலைவர்களை வாழ்த்தி வரவேற்று, "ராஜோபசாரம்' நடாத்தி, தாஜ்மஹாலையும் அஜந்தாவையும் காட்டி, புலிவேட்டைக்கும் யானை மீது அம்பாரி அமைத்துச் சவாரி செய்யும் பவனிக்கும் ஏற்பாடு செய்து வைத்து, மாமல்லபுரத்துச் சிற்பங்களையும் மகாத்மாவின் சமாதியையும் காட்டி, "புகழுரைகளை'ப் பெறுவதிலும், ஈடில்லா ஆற்றலைக் காட்டி வருகிறது; அதுமட்டுமின்றி, இன்றளவு வரையில் நாட்டை மீட்டவர்கள் என்ற விருது காட்டி, மக்களை மயக்கத்திலாழ்த்தி வைத்து வருகிறது. எனினும், காங்கிரசுக்கு எதிராக மக்கள் அளித்துள்ள ஓட்டுகள் காங்கிரசுக்கு ஆதரவாக உள்ளதைவிட அதிகம். ஜனநாயகத்தில் இந்தக் குறியை அலட்சியமாகக் கருதமாட்டார்கள்.

தம்பி! உன் உழைப்பின் பலனாக, நானும் மற்றும் பதினான்கு நண்பர்களும் சட்டசபை செல்கிறோமல்லவா? அங்கு எவரெவரைக் காணப்போகிறோம் என்பதை எண்ணிப் பார்க்கும்போதே, கழகத்துக்குக் கிடைத்த வெற்றி போலப் பத்து மடங்கு வெற்றி காங்கிரசுக்குக் கிடைத்திருப்பினும், அந்த வெற்றியைப் பெற, எத்தகைய விலை கொடுக்கப்பட்டது என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

ராஜா சர். முத்தையா செட்டியார், "கெம்பீரமாக' அமர்ந்திருக்கக் காண்பேன் - அவரும் நானும் சந்திக்கும்போது என்னென்ன எண்ண அலைகள் எழும், இருவர் உள்ளங்களிலும்!

சர்தார் படேல் தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்து, காங்கிரசுக்கு நிதி திரட்டினார் - தமிழர்கள் ஏமாளிகள், வடநாட்டுத் தலைவர்களிடம் பணத்தை இழந்துவிட்டுப் பல்லிளிக்கப் போகிறார்கள் - இதை நாம் தடுத்தாகவேண்டும் என்று தீர்மானித்த ராஜா சர். என்னை வரவழைத்து, படேலிடம் பணம் கொடுக்காதீர்கள் என்று மக்களைக் கேட்டுக்கொள்ள ஒரு அறிக்கை தயாரிக்கச் சொன்னார் -

படேல் வருகிறார்
பணப்பை ஜாக்ரதை!

என்ற தலைப்புடன், அந்த அறிக்கை தயாரானதும், ராஜா. சர். எவ்வளவு குதூகலமடைந்தார்! அவர் காங்கிரஸ்காரராக! நான் எதிர்க்கட்சியில்!! அன்றும் அவர் "ராஜா'! இன்றும் அதே!! அன்றும் அவர் ஆளும் கட்சியிலே ஓர் உன்னத இடம் பெற்றிருந்தார்! இன்றும் அவருக்கு அதே அந்தஸ்து!! நான், காங்கிரஸ் ஆட்சியை, மக்களுக்கு உகந்ததல்லாதன செய்யும் போது கண்டித்துப் பேச முற்பட்டால், ராஜா. சர், "காரசாரமாக' என்னைத் தாக்கக்கூடும்! காங்கிரஸ் கட்சியின் திட்டம் கவைக்கு உதவாது! அதன் போக்கு காட்டுத்தனமானது! என்று அன்று பேசினார் - இன்று கழகமாம் கழகம் - என்ன களகம், மகாகளகம் என்று பேசுபவர்களின் நடுவில் அமர்ந்து ஒளிவிட இருக்கிறார்.

தம்பி! இந்தக் காட்சியைக் கொண்டு பார்க்கும்போது, கனதனவானின் வெற்றி என்று தலைப்பிடத் தோன்றுகிறதா காங்கிரஸ் கட்சியின் வெற்றி என்று தலைப்பிடத் தோன்றுகிறதா என்று கருத்திலே சிறிதாவது நேர்மை உணர்ச்சியுள்ள காங்கிரஸ் அன்பர் இருந்தால் கேட்டுப்பாரேன்!!

காங்கிரஸ் கட்சி 150 இடங்களைப் பிடித்ததாக எக்காள மிடுகிறார்களே, மக்கள் ஏதுமறியாதவர்கள் என்று எண்ணிக் கொண்டு, பிடித்த இடங்களில் அமர்ந்துள்ள பெரியவர்களின் இலட்சணம் என்ன என்று கூறிடச் சொல், கேட்போம்!!

அன்று போலவே அடையாறு அரண்மனை, அரசியலில் தனக்கென ஓர் தனிச் செல்வாக்கைத் தேடிக்கொள்ளும், சுவையையும் சூட்சமத்தையும் நிரம்பப் பெற்றிருப்பது இதிலிருந்து புரிகிறதே தவிர, காங்கிரஸ் கட்சியின் வெற்றியா, இதிலே மணம் வீசுகிறது!!

ராஜா. சர். காங்கிரஸ் அபேட்சகராக நிறுத்தப்பட்டாரே, அந்தச் சம்பவத்தையே, காங்கிரசின் வெற்றி என்றா கூறுவர், உண்மைக் காங்கிரஸ்காரர். "ராஜா. சர். அவாளோட யோக ஜாதகம் அப்பேற்பட்டதாகும்!'' என்றுதான் வாழ்த்தி இருப்பார்களே தவிர, காங்கிரஸ் கட்சியையா, பாராட்டியிருப்பார்கள்.

அடிபட்டவனும் அவதிப்பட்டவனும், "தியாகி' என்ற பட்டம் மட்டும் பெற்று, வறுமை கொட்ட, வேலையில்லாத் திண்டாட்டம் வாட்ட கவனிப்பாரற்றுக் கசிந்து கண்ணீர் மல்கிக் கிடக்கின்றனர். இதோ கொலு வீற்றிருக்கிறார் கோடீஸ்வரர்!

அந்தப் "பாவ'த்திலே தம்பி தெரிந்து அல்ல, தெளிவு இல்லாததால், தவறு செய்ய நேரிட்டு விட்டதால், நமக்கும் பங்கு இருக்கிறது.

ராஜா. சர். இரண்டாயிரத்துச் சொச்சம் ஓட்டுகள் அதிகம் பெற்று, "வெற்றி' பெற்றார்; அந்த இரண்டாயிரத்துச் சொச்சம் ஓட்டுகளை, நமது கழக அபேட்சகர்தான் மடக்கிக்கொண்டார் - அந்த ஓட்டுகள் காங்கிரசை எதிர்த்து நின்றவருக்குப் போய்ச் சேர்ந்திருக்கும் - ராஜா, சர். தோற்றிருப்பார் - தவறு நம்முடையது, நம்முடையது என்று எண்ணும்போதெல்லாம், நான் வேதனை அடைகிறேன், மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளத் துடிக்கிறேன்.

இது போலப் பல தவறுகளைச் செய்துவிட்டோம் - போதிய அனுபவம் இல்லாததால்!!

இவைகளெல்லாம் சேர்ந்துதான், 150 - இடங்களைக் காங்கிரஸ் கட்சிக்குப் பெற்றுத் தந்தனவே தவிர, மக்கள் தங்கள் ஆதரவைக் காங்கிரஸ் கட்சிக்கு, "இதயபூர்வ'மாகத் தந்துவிடவில்லை.

பெற்ற வெற்றியின் தன்மையும் தரமும் ஒருபுறம் இருக்கட்டும் - தம்பி! காங்கிரஸ் கட்சியின் சார்பிலே நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றிருக்கிறார்களே, அவர்களிலே எத்தனை பேர்.

காங்கிரஸ்காரர்கள்
சத்யாக்கிரகிகள்
காந்தீயவாதிகள்
தியாகிகள்
பட்டம் பதவி விட்டவர்கள்
ஏழை பங்காளர்கள்

என்று கூறிடச் சொல்லு, கேட்போம்.

உண்மையிலேயே, 150 இடங்களிலே, 100 இடங்களுக்கு மேல், காங்கிரஸ் வெற்றி பெற்றது என்று கூறுவதைவிட தந்திரம் தெரிந்தோர் காங்கிரசைக் கைப்பற்றிக்கொண்டனர் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

இந்த வெற்றியைப் பெருமைக்குரியதாகக் கருதும், காங்கிரஸ்காரர்கள், சில ஆண்டுகள் கொடிகட்டி ஆளவும், அதன் பயனாக இலாப வேட்டை ஆடவும் வசதி கிடைத்தது என்பதற்காக வேண்டுமானால் குதூகலப்படலாமே தவிர, இது காங்கிரஸ் வெற்றி என்று எங்ஙனம் கூறமுடியும்?

"அடா! அடா! இவ்வளவு எளிதாகக் காங்கிரசை வீழ்த்திட வழி இருக்கும் என்று தெரிந்திருந்தால், நான் மிகச் சிரமப்பட்டு, எதிர்ப்புறம் இருந்துகொண்டு காங்கிரசை வீழ்த்தப் பாடுபட்டிருக்கமாட்டேனே! தொட்டால் துவண்டுவிடும் இந்தத் தோகை மயிலாளுக்காக, நான் தோட்டத்துச் சுவருக்கல்லவா கன்னம் வைத்துக் கஷ்டப்பட்டேன்! என்றல்லவா, ராஜா சர்கள், பேசிப் பேசிச் சிரித்துக்கொண்டு கிடக்கிறார்கள்.

திடலில் கூட்டம் போட்டு, தீர்த்துக் கட்டிவிட்டோம் கழகத்தை என்று தீப்பொறி பறக்கப் பேசுகிறார்கள் காங்கிரஸ் பேச்சாளர்கள்; அதேபோது, மாளிகை பலவற்றிலே மந்த காசத்துடன் சீமான்கள், காங்கிரஸ் கட்சியை எவ்வளவு எளிதாக ஏய்த்துவிட முடிந்தது என்றல்லவா, கூறிக் களிநடமாடுகிறார்கள்.

யாரார், எப்பாடு பட்டேனும், எவ்வளவு பணம் செலவிட்டேனும், என்னென்ன சூது சூழ்ச்சிகள் செய்தேனும், ஆளும் குழுவினராக அமர்ந்தால் மட்டுமே, ஆதிக்கமும் சுயநலமும் அழியாதிருக்கும் என்ற திட்டம் கொண்டவர்களோ - யாரார், மக்களாட்சியிலே தமது உடைமைகளுக்கும் சுரண்டும் தொழிலுக்கும் கேடு வந்துவிடுமோ என்ற அச்சம் கொண்டு, அந்த ஆபத்து வராதிருக்க, மக்களாட்சியை வீழ்த்தவேண்டும் என்று எண்ணுபவர்களோ - அவர்களையே அழைத்து, ஆட்சி மன்றத்திலும், ஆட்சிக் குழுவிலும் இடம் தருவதாகக் கூறினால், கரும்பு தின்னவா கூலி கேட்பர் - தாராளமாகச் சேர்ந்திட லாயினர் - ஏராளமாகப் பணத்தை வீசினர் - வெற்றி கிட்டிற்று - காங்கிரசுக்கு அல்ல - கனவான்களின் கபட திட்டத்துக்கு!! எதிர்த்து அழிக்க முடியாததை அடுத்துக் கெடுத்திட முடிகிறது!!

பிடிபட்டால் தலைபோகுமே என்று கிலி கொள்பவனைப் பிடித்திழுத்து, தலையாரி தன் மருமகனாக்கிக் கொள்வது போலிருக்கிறதல்லவா!!

இம்முறையில் பெற்ற வெற்றிகள், காங்கிரஸ் கட்சிக்கும் ஊருதான் தரும் - நாட்டுக்கும் நல்லது கிடைக்காது.

தம்பி! இந்தச் சூழ்நிலையில், நாம் 15 இடங்களைப் பெற்றோம்; 16 இலட்சம் வாக்குகள் மொத்தத்தில் கிடைத்தன, என்பது, அவ்வளவு அலட்சியமாகத் தள்ளிவிடக்கூடிய சம்பவமல்ல; ஏசிடுவோர்கூட புதியதோர் எழுச்சியைக் கண்ட மருட்சியால்தான், தமக்கும் தம்மை நம்பியுள்ள கடைசிப் பிரிவினருக்கும் "தாஜா' தேடிக்கொள்ளும் முறையில், தாறு மாறாகப் பேசி வருகின்றனர். நாடு மகிழ்கிறது; வரவேற்கிறது.

15 - இடங்களில் வெற்றி பெற்றதற்காக, நமது கழகம் நடத்திய கடற்கரைக் கூட்டத்தையும் நான் கண்டேன் - 150 - இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி அதே கடற்கரையில் நடத்திய கூட்டத்தையும் காண நேரிட்டது. மக்கள் மிகமிக அறிவாளர் என்பதை நான் உணருகிறேன்!!

"அன்று கடற்கரைக் கூட்டத்தை ஒரு முறை சுற்றிப் பார்க்கலாமென்று சென்றேன் - பாதி வளையம் சென்றதும் மேலால் நடக்க முடியாமல், களைத்துப் போய் உட்கார்ந்து விட்டேன்'' என்று நண்பர் எஸ். எஸ். பி. லிங்கம் என்னிடம் சொன்னார் - காங்கிரஸ் வெற்றி விழாக் கூட்டத்தில், மேடை வரை, மிக எளிதாகச் சென்று, திரும்பி வந்த நிலையில்.

மக்கள் காட்டும் இந்தப் போக்குக்குக் காரணம் இல்லாமலில்லை.

"மகனே! வெந்நீர் தயாராகி விட்டது, வா! குளித்துவிட்டு, சாப்பிட்டுவிட்டு, படுத்துத் தூங்கு, அப்போதுதான் களைப்பு போகும். கால்கடுப்பு நீங்கும்'' என்று கனிவுடன் கூறி, தாய் மகனுக்கு அன்புடன் உபசாரம் செய்கிறாள், ஏழைக் குடிலில்.

அவன் இரண்டே ரூபாய்கள்தான், அன்று கொண்டு வந்தான்!

ஆனால், அதை அவன் தன் தாயிடம் கொடுக்கும்போது அன்னை அடைந்த அகமகிழ்ச்சி அளவிட முடியாது.

மற்றோர் மனை! மாளிகை அல்ல, குடிலுமல்ல; வாடகை இடம், சிறிது வசீகரமானது.

"இதைக் கொண்டுபோய், அலமாரியில் வைத்துப் பூட்டு'' என்று அலட்சியமாக ஒருவன், சிறு பேழையைத் தருகிறான் - விலையுயர்ந்த வைரமாலை இருக்கிறது உள்ளே!

பேழையை வாங்கும்போதே, அந்தத் தாயின் கரம் நடுக்கமெடுக்கிறது, முகத்தில் பயக்குறி படருகிறது; பெருமூச் செறிகிறாள்.

"கதவைத் தாள்போட்டுவிட்டுப் போய்ப் படு... என்ன போறாதவேளையோ! என்ன தீம்பு கொண்டுவரப் போகிறாயோ?'' என்று கலக்கத்துடன் அந்த மாது பேசுகிறாள்.

காட்சிகள் தெரியட்டும் தம்பி! மீண்டும் படித்துப்பார்!!

இரண்டு ரூபாய் கொண்டுவந்த மகனிடம் அன்பு சொரியும் தாய் - வைரமாலை கொண்டு வரும் மகனிடம் வெறுப்பும் பயமும் காட்டும் அன்னை! காரணம் என்ன?

முன்னவன், சந்தைக் கடையில் மூட்டை சுமந்தான் தம்பி! வெயிலில் பாடுபட்டான், வியர்வை கொட்டக் கொட்ட வேலை செய்தான் - அதற்குத் தரப்பட்ட கூலி, இரண்டு ரூபாய்!

நரம்பு முறிய வேலை செய்து, நாணயமான தொழில் செய்து, அவன் பெற்ற பணம், அன்னையின் கண்களிலே கனிவு கசிந்திடச் செய்கிறது.

மகனே! மகனே! மார்பு உடையப் பாடுபடுகிறாய், உன் மாதாவைக் காப்பாற்ற! சந்தைக் கடையிலே உன் தலைமீது எவ்வளவு "பாரம்' ஏற்றினார்களோ! கழுத்துச் சுளுக்கிக் கொண்டதோ, என்னவோ! எவ்வளவு சுற்றினாயோ! கால் எப்படிக் கடுக்கிறதோ! இவ்வளவு கடினமாக உழைத்துச் சம்பாதித்த பணமல்லவா இந்த இரண்டு ரூபாய்! மகனே! ஏழைக் குடும்பம்! நான் உன்னை மாளிகையிலா பெற்றெடுத்தேன்! படாதபாடு படுகிறாய்! ஆனால், நாணயமாக வாழ்ந்து வருகிறாய்! அது போதுமடா, அப்பா! உன் உழைப்பு, நமது குடும்பத்துக்கு உயிரூட்டம் தருகிறது! உத்தமனடா நீ! - என்று, தாயின் கனிவான பார்வை பேசுகிறது.

இளவரசனுக்குக்கூட அந்த வரவேற்பும் உபசரிப்பும் கிடைக்காது - இரண்டே ரூபாய் கொண்டு வரும், கடமையை நிறைவேற்றிய மகனுக்கு, அவ்வளவு கனிவுடன் உபசாரம் கிடைக்கிறது.

மற்றோர் மனையிலே, வைரமாலையைத் தருகிறானே, - மகன் அவன் தாய் ஏன் திகிலுற்றுப் போகிறாள்? அவனும் அங்காடி சென்றுதான் அந்த அரிய பொருளைக் கொண்டு வந்தான். காலையில் வெறும்கையாகச் சென்றான். மாலையில் மாலையுடன் திரும்புகிறான்! தாய் திகிலடைகிறாள்! காரணம் புரிகிறதல்லவா! தாய், உணருகிறாள், மகன் ஏமாந்தவனிடம், தட்டிப் பறித்துக்கொண்டு வந்திருக்கிறான், வைரமாலையை என்பதை. தலைக்குத் தீம்பு வருமே என்று அஞ்சுகிறாள்; மகனிடம் விவரம் கேட்டால் கோபிப்பான்; எனவே பெருமூச்செறிகிறாள்.

தட்டிப்பறிக்கப்பட்ட வைரமாலை! மூட்டை சுமந்ததால் கூலியாகக் கிடைத்த இரண்டு ரூபாய்!!

தூ! இரண்டே இரண்டு ரூபாய்தானோ, அதோ அண்டை வீட்டுக்காரியின் மகன் இன்று வைரமாலை அல்லவா சம்பாதித்துக் கொண்டு வந்தான் என்று கூறிடும் தாயும் உண்டா?

வைரமாலை - ஒரே நாளில் என் மகன் சம்பாதித்தான் பலே பேர் வழி - என்று புகழ்ந்து பேசத்தான், எந்தத் தாயாருக்காவது மனம் வருமா?

தம்பி! நாம் பெற்ற 15 சந்தை மேட்டில் மூட்டை சுமந்தவன் கொண்டுவந்து அன்னையிடம் தந்த இரண்டு ரூபாய்!!

அதனால்தான், நாடு நம்மைக் கனிவுடன் வாழ்த்துகிறது வரவேற்கிறது - பாராட்டுகிறது.

வைரமாலையைத் தட்டிப் பறித்துக்கொண்டு வந்த மகனை, வாழ்த்தி வரவேற்க முடியாத நிலையில் தாய் இருப்பது போல, காங்கிரஸ்காரர்களாலேயே 150 இடங்களில் பெற்ற வெற்றிபற்றி பெருமையாகவும் பூரிப்பாகவும் பேசமுடிவதில்லை!

அண்ணன்,

21-4-57