சட்டசபையில் காங்கிரஸ்
எம்.எல்.ஏக்கள் முறையீடு -
"விடுதலை'யும் காங்கிரசும்.
தம்பி,
"திருநெல்வேலியில் பருவமழை
தவறியிருக்கிறது; விவசாயிகள் பரிதாப நிலையில் இருக்கிறார்கள்.
சங்கரன்கோயில் தாலுகாவில். சிவகிரி பகுதியில், நாங்குனேரியில்
பெரும்பகுதி வறட்சி ஏற்பட்டிருக்கிறது. இலங்கையிலிருந்து
நாடு கடத்தப்பட்ட மக்கள் ஏராளமான பேர் திருநெல்வேலி இராமநாதபுரம்
ஜில்லாக்களில் கஷ்ட நிலையில் இருக்கிறார்கள்'' என்று செல்வராஜ்
எனும் காங்கிரஸ் எம். எல். ஏ. இப்போது நடைபெற்ற சட்டசபைக்
கூட்டத்தில் எடுத்துரைத்தார்.
பொதுத் தேர்தல் நெருங்குகிறது.
பொதுமக்களை மீண்டும் கண்டு "ஐயா! அப்பா!' என்று ஓட்டுக்
கேட்க வேண்டுமே. "ஆமய்யா M.L.A, அங்கே போய் முன்பு அமர்ந்திருந்தீரே,
என்ன சாதித்துவிட்டீர்?'' என்று யாராவது கேட்டு விட்டால்,
"நமது மக்கள் ஆலாய்ப் பறக்கிறார்கள். ஆட்சியாளர்கள் தக்க
பரிகாரம் தேடவேண்டும் என்று அடித்துப் பேசினேன் அன்பரே!
இடித்துரைத்தேன் நண்பரே! இதோ "இந்து'' பார்த்திடுக! இதோ
"மித்திரன்'' படித்திடுக!'' - என்று எடுத்துக்காட்டி,
இளித்து நிற்க இது உதவட்டும் என்பதற்காகவே இந்த M.L.A.,
இவ்விதம் சட்டசபையில் பேசினார் என்று ஏளனம் செய்யாதே,
தம்பி! காரணம் எதுவாகவேனும் இருக்கட்டும். காங்கிரசாட்சியின்
"கோணலை' ஒரு காங்கிரஸ் பிரமுகர் எடுத்துக் கூறுகிறார்
- எனவே இந்த ஆட்சியின் அவலட்சணத்தை நாம் வேண்டு மென்றே
(நன்றி மறந்து!) கண்டிக்கிறோமென்று குற்றம் சுமத்துபவர்களின்
வாய்க்கு ஆப்பாகவாவது இது பயன்படுமல்லவா? அந்தத் திருப்தி
எனக்கு.
திருநெல்வேலிச் சீமையே வளம்
குன்றித் திண்டாடுகிறது - தேயிலைக் காட்டிலே பாடுபட்டு
எலும்புந் தோலுமாகி, அந்தப் பிழைப்பின் வாயிலும் மண்
விழுந்ததால் அவதிப்பட்ட மக்கள், வேறு வாழவழி கேட்டுக்கொண்டு
வறட்சியால் வாட்டப்படும் நெல்லைச் சீமைக்கு வந்துள்ளனர்.
ஆட்சியாளர்கள் இந்த அவதி
துடைத்திடுவோம் என்று உறுதி அளிக்கக் காணோம் - அதற்கான
திட்டம் தீட்டுவதாகவும் தெரியவில்லை - அப்படி ஒரு பிரச்சினை
இருப்பதை அவர்கள் ஒப்புக்கொள்வதாகவும் தெரியக் காணோம்.
"கோயமுத்தூர் ஜில்லாவில்
மாத்திரம் 12-ஆஸ்பத்திரி களில் டாக்டர்கள் கிடையாது''
என்று வி.கே. பழனிச்சாமிக் கவுண்டர் எனும் காங்கிரஸ் M.L.A.
அதே சட்டசபையில் கூறுகிறார்.
கோவை மாவட்டம் காங்கிரசுக்குத்
தேர்தல் செலவுக்குத் தயாராக இருக்கும் பணப்பெட்டி. தொழிலதிபர்களின்
கோட்டம். இங்கு டாக்டரில்லா ஆஸ்பத்திரிகள்! இந்த வெட்கக்
கேட்டை எடுத்துக்கூறத் துணிவு காங்கிரஸ் M.L.A-க்கு ஏற்பட்டது
கண்டு எனக்கு ஒரு வகையில் மகிழ்ச்சி.
"பஞ்சமும் நோயும் நின்
மெய்யடியார்க்கோ?' என்று பாரதியார் பாடினார். ஆமாம்,
ஆமாம் என்று காங்கிரசாட்சி அறைகின்றது.
பஞ்சம் ஒருபுறம், பதைத்தோடி
வந்து பிழைக்க வழி கேட்கும் "பராரிகள்' மற்றோர் புறம்,
நோய் நொடி நெளிவது வேறோர்புறம், என்று இப்படி நிலைமை
இருக்கும்போது, மகிழ்ச்சியா பொங்கும்? என்று கேட்கத்
தோன்றும், தம்பி! மகிழ்ச்சி பொங்குமா? பொங்காது! ஆனால்
வேறொன்று பொங்கி வழிகிறது!! என்ன என்கிறாயா? இதோ கேள்,
மற்றோர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பேசுவதை.
"வீட்டுக்கு வீடு கள்ளச்
சாராயம் காய்ச்சும் தொழில் விமரிசையாக நடந்து வருகிறது!
சர்க்கார் தீவிர நடவடிக்கை எடுத்துக்கொள்ளாவிடில் காங்கிரஸ்
ஸ்தாபனத்துக்குக் கெட்ட பெயர் வந்துவிடும்'' என்று காங்கிரஸ்
எம்.எல்.ஏ. மாரிமுத்து என்பவர் பேசுகிறார்.
"சர்க்கார் ஒரு நடவடிக்கையும்
எடுக்கவில்லையோ' என்றால், இது சம்பந்தமாக எடுக்கவில்லையே
தவிர, வேறு "அதிமுக்கியமான' ஒரு நடவடிக்கை எடுத்திருக்கிறது;
"கோட்டையிலே இளைப்பாற்றிக்கொள்ளும் வகை கிடைத்த குளிர்
தருவாய்' விளங்கும் உதகமண்டலத்தில், ஒரு மகாராஜாவின் அரண்மனையப்
பல இலட்ச ரூபாய் விலை கொடுத்து வாங்கும் நடவடிக்கையில்
ஈடுபட்டிருக்கிறது!!
வெள்ளையாட்சிக் காலத்தில்,
கோடையின்போது, "ஊட்டி' செல்வர். இங்கு மேடையில் "கோடை
இடி' யெனக் காங்கிரசார் முழக்கமிடுவர், "கேளுங்கள் தேச
மகா ஜனங்களே! இங்கு கொளுத்தும் வெய்யிலில், கால் கொப்பளிக்கும்
நிலையில், கை புண்ணாகும் நிலையில், கண் பூத்துப் போகும்
நிலையில், நாம் பாடுபடுகிறோம்; மண்டை பிளந்து போகிறது
இங்கு; நமது வரிப் பணத்தைக் கொள்ளையடிக்கும் கொலைகாரக்
கும்பல், கோடை தாக்காதிருக்க, ஊட்டிக்குப் போயிருக்கிறார்கள்,
உல்லாசமாகக் காலங் கழிக்க!! இதுவா தர்ம ராஜ்யம்? இதுவா
இராம ராஜ்யம்!! - என்று வெளுத்து வாங்கினார்கள்.
கோடை இடிகள் கோலோச்சுவோராகிவிட்டனர்;
இப்போது ஊட்டியில் ஆரன்மூர் அரண்மனையை வாங்க ஏற்பாடாகி
வருகிறது.
"ஊட்டியில் இந்த ஏற்பாடு
நடைபெறுகிறது என்கிறீரே, ஊட்டியில் மதுவிலக்குச் சட்டம்
தளர்த்தப் படுகிறதாமே, உண்மையா?'' என்று தெய்வசிகாமணி
எம்.எல்.ஏ. கேட்கிறார். அமைச்சர் கூறுகிறார், "இதற்கும்
அதற்கும் சம்பந்தம் இல்லை'' என்று.
இப்படியாகத்தானே காங்கிரஸ்
இராஜ்யபாரம், நடைபெற்றுக் கொண்டு வருகிறது; இந்தவிதமான
ஆட்சியை "கேள்வி கேட்பாரற்ற'' முறையிலே விட்டுவிடக் கூடாது,
அடுத்த தேர்தலில் கடும்போட்டி இருக்கவேண்டும், ஜனநாயகத்துக்கு
அப்போதுதான் சிறிதளவாவது வாய்ப்பு ஏற்படும் என்ற நோக்குடன்,
நமது கழகம் தேர்தலில் போட்டியிடத் திட்ட மிட்டாலோ, "எமது
கண்ணுக்குக் கண்ணாக உள்ளவர் காமராஜர்; அவருக்கா எதிர்ப்பு?
அடபாவிகளா! நீங்கள் நாசமாய்ப்போக!! கருவேப்பிலைக் கொத்துப்போல
அவர் கிடைத்திருக்கிறார்!! அவருக்கு "உலை' வைக்கலாமா?''
என்று கேட்கின்றனர்.
திராவிட நாடு பிரிவினையை
ஒப்புக்கொள்பவன் நண்பன்; இல்லை என்பவன் எதிரி! இதுதான்
இனி ஒரே பிரச்சினை - என்ற பேச்சு "பழங்கதை'யாகிவிட்டது.
இப்போது உள்ள ஒரே பிரச்சினை, உயிர்ப்பிரச்சினை, காமராஜர்
மீண்டும் முதலமைச்சராக வேண்டும், அதை இந்த கண்ணாரக் காண
வேண்டும் என்று கூறுகின்றனர்.
பஞ்சம் பட்டினி போக்காவிட்டாலும்,
சொந்த நாட்டான் பிச்சை எடுப்பதைக் கண்டு ஒரு சொட்டுக்
கண்ணீர் விடாவிட்டாலும், சோற்றுக்கில்லாதானே! செத்துத்
தொலை! என்று இலங்கையில் உள்ள சர்க்கார், தமிழனைச் சுட்டுத்
தள்ளக் கண்டும் துளி பதறாவிட்டாலும், கள்ளச்சாராயம் பொங்கு
வதையும் கள்ளமார்க்கட் பெருகுவதையும் கண்டும் காணாதது
போலிருந்துவிட்டாலும், மீண்டும் காமராஜர் ஆட்சிதான் வரவேண்டும்
என்று காங்கிரஸ்கட்சி கருதக் கடமைப்பட்டிருக்கிறது.
"காங்கிரஸ் கட்சியானது
இந்துமதக் கோவில்களிலுள்ள மண்டபங்களைப் போலிருக்கிறது.
உள்ளே புகுந்தால் ஒரே இருள். வௌவால் புழுக்கை துர்நாற்றம்.
அண்ணாந்து பார்த்தால் வௌவால்கள் தொங்கிக்கொண்டிருப்பதைத்
தவிர வேறெந்தக் கலையையும் காணமுடிவதில்லை. கோயில் மண்டபம்
என்ற பக்திக்காக அதன் துர்நாற்றத்தை வெளியில் கூற வெட்கப்படுகின்ற
பக்தர்போல், இன்றுஞ் சிலர் அந்தக் காலத்துக் காங்கிரஸ்
ஆச்சே, அதைக் குறை கூறலாமா? என்று கருதிக்கொண்டு மூக்கைப்
பிடித்துக் கொண்டு அந்த இருட்டு மண்டபத்திற்குள் இன்னமும்
நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.
திருட்டுக்கும் கொலைக்கும்
தவிர ஆயிரக்கால் மண்டபம் வேறு ஏதேனும் நல்ல காரியத்துக்குப்
பயன்படுகிறதா? காங்கிரஸ் கட்சியின் நிலையும் அதேதான்.
அந்த மண்டபத்துக்குள்ளிருந்து வருகிறவர்களைக் கண்டாலுமே
யோக்கியர் சந்தேகப்பட மாட்டார்கள்''
இது, தம்பி, பெரியார் கருத்து;
விடுதலை மூலம் நாட்டுக்கு அளிக்கப்பட்டது.
காமராஜர், அந்த மண்டபத்தில்தான்
கொலுவீற்றிருக்கிறார்!
பக்தர்கள்தான், வௌவால்
புழுக்கையின் துர்நாற்றத் தையும் சகித்துக் கொண்டு, அந்த
நாள் மண்டபம் எனப் பாராட்டுகிறார்கள்; நமக்குமா அதே நிலைமை?
பக்தர்களே கூட, நாற்றம்
அதிகமாகிவிட்டால், பதை பதைக்கிறார்கள் -- மண்டபத்தைச்
சுத்தம் செய்தாக வேண்டும் என்று கூக்குரலிடுகிறார்கள்.
எல்லை குறைகிறதென்றால் "விடமாட்டேன்''
என்று வங்கம் சீறுகிறது; பம்பாய் உங்களுக்கில்லை என்றால்,
மராட்டியர் "பார்க்கிறோமே ஒருகை'' என்கிறார்கள்; குஜராத்
தனி மாகாணமாக அமையாது என்றால், மந்திரியின் வீடு புகுந்து
தாக்குகிறார்கள் குஜராத்திகள்.
இங்கு தேவிகுளம் பீர்மேடு,
நெய்யாற்றங்கரை, கொச்சின் சித்தூர், செங்கோட்டையில்
ஒரு பகுதி, பறிபோயிற்று! வந்தே மாதரம் - என்று வாளா இருந்துவிடச்
சொல்லி விட்டார் காமராஜர்.
யாராவது வாய் திறந்தாலோ,
அவர்கூட, நியாயந்தானே, உரிமை பறிபோனதால் மனம் குமுறுகிறார்கள்
என்று கூறுவார் போலிருக்கிறது; மற்றவர்களல்லவா, "காமராஜர்
மீது எதிர்ப்பு எழலாகாது' என்கிறார்கள்.
ஆந்திர தமிழக எல்லைத் தொல்லைக்கு
இன்று வரை பரிகாரம் காணோம். என்றாலும் கடை அடைப்புச்
செய்து கண்டனத்தை காட்டினால், காலித்தனம் என்று கூறவும்,
மனம் இடம் தருகிறது!
"காங்கிரசை இப்போது மட்டும்,
கடையனே! ஆதரிக்கவா செய்கிறோம். அது, ஐயா சொன்னது போல,
வௌவால் புழுக்கை துர்நாற்றமடிக்கிற பாழ்மண்டபந்தான்;
எங்களுக்கு அந்த மண்டபத்தின் மீது வெறுப்புத்தான்; எப்போதும்
போல; ஆனால், காமராஜர் நல்லவர், இன உணர்ச்சி உள்ளவர்,
ஏதோ நாம் எண்ணுகிறபடி, சொல்லுகிறபடி, நல்ல காரியங்கள்
செய்து வருகிறார். எனவேதான் மீண்டும் அவர் வரவேண்டும்
என்று ஆதரிக்கிறோம்; இது புரியவில்லையா?'' என்று கேட்டுக்
கெக்கசெய்யும் தோழர்கள் இருக்கிறார்கள். தம்பி! காமராஜர்,
தமது இன உணர்ச்சியை எந்த வகையில் காட்டிக்கொண்டு வருகிறார்
என்று கூடக் கேட்க வேண்டாம் - பொதுஜன நன்மையை உத்தேசித்து
அதற்குப் பதில் அளிக்கக்கூடாது என்று கருதிக் கொண்டிருக்கக்
கூடும் - வாதத்துக்காக ஒப்புக் கொள்வோம், இன உணர்ச்சி
கொண்டவர் என்பதை; ஆனால் காங்கிரஸ் தலைவரோ, முதலமைச்சரோ,
இன உணர்ச்சி கொண்டவராக, அதன்படி நடந்து கொள்பவராக இருந்து
விட்டால், அந்தக் காரணத்துக்காக, காங்கிரசை எதிர்க்காதிருக்கலாமா?
என்பதுபற்றி எண்ணிப் பார்த்திட வேண்டுமல்லவா?
இதற்கும் எனக்குத் துணை
"பெரியாரின் பேரகராதி' தான்
இன உணர்ச்சியில் ஒமந்தூர்
ரெட்டியாரவர்கட்கு இணையான நீதிக்கட்சித் தலைவர் ஒருவர்கூட
இல்லை யென்று நாம் வெட்கமின்றி ஒப்புக் கொள்ளவும் தயாராயிருக்கிறோம்.
பழைய ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களைவிட
அதிகமான இன உணர்ச்சி கொண்ட காங்கிரஸ் தலைவர்கள் பலர்
இருக்கின்றனர் என்பது பற்றி நாம் பெருமைப்படுகிறோம்.
ஆயினும் காங்கிரஸ் ஒழிப்பு
நாள் கொண்டாடுவதன் நோக்கம் என்ன?
1. காங்கிரஸ் இயக்கம் ஏழைகள்
- பாட்டாளிகள் ஆகியோருக்குக் கேடு செய்யும் இயக்கம்.
2. காங்கிரஸ் இயக்கந்தான்
தென்னாட்டை வடநாட்டு முதலாளிகளுக்கு அடமானம் வைத்திருக்கிறது.
3. காங்கிரஸ் இயக்கந்தான்
ஜாதிகளையும் மதங்களையும் கிளறிவிட்டுக் கொண்டிருக்கிறது.
4. காங்கிரஸ் இயக்கந்தான்
தென்னாட்டுக் கலாச்சாரத்தை அழித்து வருகிறது.
இதைவிடத் தெளிவாக என்னால்
கூற முடியாது! தம்பி, இது தெளிவளிக்காவிட்டால், தெளிவு
பெறக்கூடாது என்று தீர்மானித்துக்கொண்டு திட்டமிட்டுக்
காரியம் நடக்கிறது என்பதுதானே பொருள்.
தம்பி! ஓமந்தூர் இராமசாமி
ரெட்டியார் முதலமைச்சராக இருந்த நாட்களில், உனக்கு நினைவிருக்கும்
என்று எண்ணுகிறேன், மறதி உள்ளவர்களுக்கு நினைவூட்டு, அவர்,
கதர்ச் சட்டைப் பெரியார், கருப்புச் சட்டை நண்பர் என்றெல்
லாம் பெயரெடுத்தார்.
அச்சம் தயை தாட்சணிய மற்ற
நிர்வாகி
பார்ப்பன மேலிட மிரட்டலுக்குப்
பணியாத விவேகி
வடநாட்டு மத்ய சர்க்காரிடம்
வாதிடத் துணிந்த அஞ்சா நெஞ்சர்
என்றெல்லாம், போற்றிப்
புகழப்பட்டவர்.
தர்மமும், நேர்மையும் அதே
போது நெஞ்சுஉரமும் அவர் ஆட்சியில் கொலுவிருந்தன என்று
நாமே பேசியிருக்கிறோம்.
அவருடைய பழைமை உணர்ச்சி,
பக்தி, ஆகியவை கூட, பசப்பு அல்ல, சுயநல நோக்கமுடையதல்ல
என்று பாராட்டினோம்.
அந்த நாட்களிலே, வடநாட்டுப்
பத்திரிகைகள், சென்னையை ஆட்சிபுரிவது, பெரியார் கட்சிதான்
- ஓமந்தூரார் அதற்கு ஒரு திரை - கருவி என்று எழுதின.
அப்போது "நாம்' ஒன்றாக
இருந்த காலம்.
எனக்கு, "இந்தி எதிர்ப்பு
நடத்தும் "சர்வாதிகாரி' பட்டம் கிடைத்த நேரம்.
"சிட்ரன்' கார் சவாரியும்,
மீரான் சாயபுத் தெரு மாளிகையில் ஒரு அறையும், விருந்துபசாரமும்,
சினிமா செல்வதற்குக்கூடப் பணமும், பெரியார் மூலம் அன்புடன்
தரப்பட்டு வந்த காலம்.
பழம் பெருமையை எண்ணி ஏங்க
அல்ல, இதைக் கூறுவது; அந்த நாட்களில், அப்படிப்பட்ட ஓமந்தூரார்
என்று நாம் பாராட்டிய போதிலும், அவர் நல்லவர், ஆகையால்
அவருக்காக, வௌவால் புழுக்கை துர்நாற்றத்தைச் சகித்துக்கொள்ள
வேண்டுமா என்று கேட்டோம் என்பதை எடுத்துரைக்கத்தான்.
இன உணர்ச்சி இருக்கலாம்
- இருக்கிறது ஓமந்தூராரிடம்; என்றாலும் காங்கிரசில் அல்லவா
இருக்கிறார் - என்று நாட்டு மக்களைப் பார்த்துக்கேட்டோம்
- இஃதல்லவா கொள்கை உரம் என்று நேர்மையாளர்கள் பாராட்டினர்.
அண்ணா! இது சரி, ஆனால்,
ஓமந்தூரார், "வைதீகப் பிடுங்கல்' நமது "சுயமரியாதைக்'
கிளர்ச்சிகளுக்கு வைரியாக இருந்தவர், காமராஜர் அப்படி
அல்ல; நாம் இவருடைய ஆட்சியில், எத்தனை புரட்சிகரமான சுயமரியாதைக்
கிளர்ச்சியும் செய்யலாம், இடம் தருகிறார்'' என்று வாதாட
எண்ணுவாய் தம்பி! இதுவும் சரியான வாதமல்ல - ஏனெனில்,
காமராஜரும் இப்போது கோயில்
கோயிலாகச் செல்கிறார்.
கோயில் கோயிலாகச் சென்றுகொண்டிருந்த
ஓமந்தூரார், மடாதிபதிகளின் ஆதிக்கத்துக்கே உலைவைக்க அஞ்சா
நெஞ்சுடன் அன்று கிளம்பினார்.
எத்தனை பெரிய சுயமரியாதைக்
கிளர்ச்சிக்கும் இடம் தருபவர் இந்தக் காமராஜர் மட்டுமல்ல;
ஆச்சாரியார் காலம், பிள்ளையார் உடைத்த நேரம்.
எனவே, இந்த சர்ட்டிபிகேட்
தந்து, காமராஜருக்கு ஆதரவு திரட்டுவதிலும் அர்த்தமில்லை.
மற்றோர் உண்மையையும், அறிந்து
வைத்துக்கொள் தம்பி, குமாரசாமி ராஜா முதலமைச்சராக இருந்த
நாட்களில், (13-10-51) பத்திரிகை நிருபர்கள் அவரை அணுகி,
"திராவிட கழகத்தார் கோயில்கள்
முன்பு கூட்டம் போட்டுக் கடவுள்களை பரிகசிக்கிறார்களாமே
இதைத் தடுக்க முடியாதா?''
என்று கேட்டனர், அதற்கு
குமாரசாமி ராஜா, என்ன சொன்னார்?
எந்தப் பத்திரிகை, நிருபராவது,
காமராஜரிடம் இந்தக் கேள்வி கேட்டால்,
"போங்க, போங்க, வேறே வேலையே
கிடையாதா உங்களுக்கு? உங்க கோயிலும், உங்களோட சாமிகளும்
மகாலட்சணந்தான்! திட்டினா என்ன தீயா பிடிச்சுவிடும்''
என்று கேட்டு, கேள்வி கேட்டவர்களைத்
திக்குமுக்காடச் செய்துவிடுவார் என்று பதில் கூறுவதற்குத்
துடிப்பவர்கள் என் மனக்கண்முன் தெரிகிறார்கள்.
குமாரசாமி ராஜா, இன உணர்ச்சி
ததும்பும் உள்ளத்தினர், நம்மவர் - அவர் நமது ஆதரவினைப்
பெற்றுத் தீர வேண்டியவர் - என்று நாம் கூறினது கூட இல்லை;
எனினும், தம்பி, நிருபர்களிடம் அவர் என்ன பதிலளித்தார்?
"திராவிட கழகத்தினர் கடவுள்களைத்
திட்டுவதுபற்றி யாதொரு நடவடிக்கையும் சர்க்கார் எடுக்க
முடியாது. கோயிலுக்குச் செல்லும் தனிப்பட்டோரை பரிகசித்தாலே
நடவடிக்கை எடுக்க முடியும்''
இப்படித்தான் சொன்னாரே
தவிர, "பக்தர்காள்! அஞ்சற்க! நாம் இந்தப் பாவிகளை அழித்தொழித்து
விடுகிறோம்'' என்று கூறவில்லை. இதற்கு முன்பு நமக்கு
முதல் அமைச்சராக வாய்த்திருந்தவர்களெல்லாம், வைதீகப் படைத்
தளபதிகளாக இருந்து, சுயமரியாதை இயக்க நடவடிக்கைகளை நொறுக்கித்
தள்ளியது போலவும், காமராஜர் மட்டும்தான், வைதீகர்களுக்கு
இடமளிக்காமல், சுயமரியாதைக் கிளர்ச்சிகளுக்குப் பாதுகாப்
பாகத் தமது ஆட்சி அதிகாரத்தைத் துணை தருவதுபோலவும் வாதிடுவது,
அவரிடம் பிறந்துவிட்ட வாஞ்சனையைக் காட்டுகிறதே தவிர, வேறொன்றுமில்லை.
குமாரசாமி ராஜா, இன்னும்
தெளிவாகவே கூறினார்:
"மதச் சார்பற்ற சர்க்காரில்
மதத்தைக் கண்டித்துப் பேசுவதைத் தடுக்க முடியாது. கோவிலுக்குமுன்
ஒரு கட்சிக்குக் கூட்டம்போட இடமளிக்கையில், மற்றொரு
கட்சிக்கு மட்டும் மறுக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட இடத்தில்
பொதுக் கூட்டம் போடக் காங்கிரஸ் கட்சிக்கு அனுமதி அளித்தபிறகு,
அதே இடத்தில் கூட்டம் போடத் திராவிட கழகத்துக்கோ, இதர
கட்சிக்கோ, அனுமதி மறுக்க முடியாது''
இதைவிட, தம்பி, காமராஜர்
போக்கிலே என்ன புதுமை, புரட்சி, நேசம், பாசம், காண்கிறோம்!!
குமாரசாமி ராஜா ஓமந்தூரார்
ஆகியோர் நல்லவர்கள் - நேர்மையாக நடந்து கொண்டவர்கள்
என்பது கண்டோம் - எனினும், அப்போது,
"தென்னாட்டான் தன் நாட்டுக்குச்
செய்யவேண்டிய முதல் தொண்டு காங்கிரசை ஒழிப்பதுதான்!''
என்று அழுத்தந்திருத்தமாக
விடுதலை எழுதக் கண்டு, தம்பி, நீயும் நானும் தோள்தட்டிக்
கொண்டு கிளம்பினோம், காங்கிரசை எதிர்க்க, கவனமிருக்கிறதல்லவா!!
ஏனெனில், நமக்கு "விடுதலை'
எடுத்துக் காட்டிற்று, அவருக்கு இன உணர்ச்சி இருக்கலாம்,
இவர் நேர்மையாளராக இருக்கலாம், ஆனால் அதற்காக நாம் மயங்கிவிட
முடியாது, வௌவால் புழுக்கை துர்நாற்றத்தைச் சகித்துக்
கொள்ள முடியாது என்று அறிவூட்டியது.
காங்கிரஸ் கட்சி பிர்லாகட்சி,
டாட்டா கட்சி, முத்தைய்யா செட்டியார் கட்சி - வடபாதிமங்கலம்
கட்சி.
காங்கிரஸ் கட்சி பிராமணப்
பாதுகாப்புக்கட்சி - வட நாட்டுச் சுரண்டலை ஆதரிக்கிற கங்காணி
கட்சி.
காங்கிரஸ் கட்சி அடக்குமுறை
ஒன்றையே நம்பி வாழ்கின்ற பணநாயக் கட்சி.
என்று அன்று "விடுதலை' எழுதிய
நிலையில்தான் இன்றும் காங்கிரஸ் இருக்கிறது.
அந்தக் காங்கிரஸ் வெற்றி
பெற்றுத்தான் காமராஜர் முதலமைச்சராக வேண்டும்.
அந்தக் காமராஜர் வெற்றி
பெற்று முதலமைச்சராக வேண்டும் என்று, "வௌவால் புழுக்கையின்
துர்நாற்றத்தை எப்படிச் சகித்துக் கொள்வது'' என்று கேட்ட
"விடுதலை' இன்று வாதாடுகிறது.
"பேரகராதி'யைப் பார்க்கிறேன்
- திடுக்கிட்டுப் போகிறேன்.
தம்பி! என்னைப் பற்றி இழித்து
எழுதுவது கண்டு நீ, வருத்தப்பட்டு, எனக்கு ஆறுதல் கூறுகிறாய்.
எனக்கு நிச்சயமாக என்னைப்பற்றி எழுதப்படுகின்ற இழிமொழி
பற்றி எரிச்சல் கிளம்புவதில்லை. எனக்கு இருக்கிற ஒரே திகைப்பு,
வௌவால் புழுக்கையின் துர்நாற்றம் சகிக்க முடியவில்லை
என்றல்லவா, பேரகராதி எழுதிற்று... இப்போது...? என்று
எண்ணித்தான், திடுக்கிட்டுப் போகிறேன். உனக்கு எப்படி
இருக்கிறதோ? ஊரார் என்ன எண்ணுகிறார்களோ!
அன்பன்,

26-8-1956