அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


பற்று - (1)
1

விருப்பம், பற்று என்பனவற்றின் விளக்கங்கள்
பற்றுகளின் வகைகளும் தரங்களும்
நாட்டுப்பற்றே சிறந்தது என்பதற்கான விளக்கங்கள்
ஜனநாயக நாடுகளிலேயே நாட்டுப்பற்று மிகுதி

தம்பி,

உனக்குப் பற்று எதன் மீது என்ற கேள்வியைப் பலர் பல்வேறு சமயங்களிலே எழுப்பி இருந்திருக்கிறார்கள் - ஆமல்லவா?

அவனுக்கு அதன்மீதுதான், அல்லது இன்னார் மீதுதான் "பற்று' அதிகம் என்ற பேச்சும்,

எதிலே பற்று இருந்தாலும் இல்லாவிட்டாலும், "அதிலே' மட்டும் அவனுக்குப் பற்று மிகுதியாக என்ற பேச்சும்,

இதிலே "பற்று'க் காட்டாதவன் மனிதனா - நம்மவனா? என்ற கோபப் பேச்சும். ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்றிலே "பற்று' என்ற பேச்சும்,

பற்று எனக்கு உண்டு என்று சொல்கிறான், ஒப்புக்கு! உண்மையான பற்று இருந்தால் இப்படியா நடந்து கொள்வான் என்ற பேச்சும்,

மெள்ள மெள்ள எனக்குப் "பற்று' ஏற்பட்டுவிட்டது. என்ன செய்வது என்ற பேச்சும்,

"பற்று' உள்ளவர்கள் அனைவரும் ஒன்றுகூட வேண்டா மோ என்ற பேச்சும், அடிக்கடி காதினில் விழுந்திருக்கும், தம்பி! நீயே கூடப் பலமுறை பேசியிருப்பாய்.

எனக்கு இருப்பதெல்லாம் இந்த ஒரே "பற்று'த்தான், வேறு எதிலும் பற்று கிடையாது என்று பேசக் கேட்டிருப்பாய்; கேட்டிருக்கிறேன். இந்தப் "பற்று'ப் பற்றித்தான் இன்று கூற முனைகிறேன் - சுவையும் சிக்கலும் நிரம்பிய பிரச்சினை; ஆனால், எவரும் வேண்டாமென்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாத பிரச்சினை - அடிப்படைப் பிரச்சினை.

முற்றும் துறந்த முனிவர்கள் "பற்று' அற்றவர்கள் என்கின்றனர்; "பற்று' என்பது எவரையும் பற்றிக் கொள்ளும்; அதனிடமிருந்து தப்பிடுவோர் முனிவர்கள் மட்டுமே என்பர் இதிலிருந்து முனிவர்களின் பெருமையை விளங்கிக் கொண்டால் போதாது, இந்தப் "பற்று' இருக்கிறதே, அது எத்தனை வலிமை வாய்ந்தது என்பதனைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

"பற்றற்றான்' என்று கடவுளுக்கு ஓர் இலக்கணம் கூறிடுவர்; ஆயினம், அந்தப் பற்றற்றானும் "ஆன்ம கோடிகள்' உய்வு பெற வேண்டும் என்பதிலே பற்றுக் கொண்டோன் என்ற சுவை மிகு கருத்தினையும் இணைத்துக் கொண்டனர்.

பற்றற்றானைப் பற்றிக் கொண்டால், பரமபதம் சேர்ந்திடலாம், பற்று அற்று இருந்திடலாம் என்கின்றனர் "மார்க்க போதகர்' பலர்.

பற்றுக பற்றற்றான் தாளினை. எனும் மொழி அறிவாயன்றோ?

பற்று அற்றவர் எவரெவர் என்பது பற்றிய பிரச்சினை ஒருபுறம் இருக்கட்டும் - "பற்று' என்பது என்ன? எனும் இலக்கணத்தையல்லவா முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

பற்றிக் கொண்டான் என்கிறோம் - பிடித்துக் கொண்டான் என்பதனை உணர்த்த.

ஒரு பொருளையோ, கருத்தையோ, அமைப்பையோ, ஆளையோ, நமக்குத் தேவை என்று உணர்ந்து, நம்முடையது ஆக்கிக் கொள்வதனைத்தான் "பற்று' என்கிறோம்; இல்லையா?

விருப்பம், விழைவு, ஆவல், ஆசை என்ற உணர்ச்சிகளைக் குறிப்பிடும் வலிவு மிக்க சொல் பற்று என்று கூறுவர். ஆனால், பற்று, விருப்பம் எனும் இரண்டும் முழுக்க முழுக்க ஒன்று என்று கூறிடலாகாது, விருப்பத்தைக் காட்டிலும், அழுத்தம்மிக்க உணர்ச்சி பற்று.

என் விருப்பம் அது, என்றாலும் உன் விருப்பத்தைத் தட்டிட மனம் இல்லை; ஆகவே, என் விருப்பத்தையும் விட்டுக் கொடுத்துவிட்டு உன் விருப்பப்படி நடந்து கொள்கிறேன் என்று பேசுகிறோம்; நட்புக் காரணமாகவோ, சலிப்புக் காரணமாகவோ, இலாப நோக்கம் கொண்டோ, "விருப்பம்' நாம் விரும்பும்போது விட்டுவிட இடந்தருகிறது; பற்று அவ்விதமல்ல!

பற்று - பற்றிக் கொள்வது! எளிதில் விட்டுவிட முடியாதது, ஓசையையே கவனித்தாயல்லவா தம்பி! பற்று!! வலிமை மிகுந்துள்ள ஓசை!

விருப்பம், ஒரு நிலையை நினைப்பைக் காட்டுவது, ஒருவித உணர்ச்சியைக் காட்டுவது.

பற்று என்பது, தம்பி! உணர்ச்சிக்கும் அந்தச் சொல்தான்; செயலுக்கும் அந்தச் சொல்லேதான், கவனித்தனையா?

என்ன அண்ணா! இலக்கண வகுப்பா என்று கேட்டு விடாதே தம்பி! கடினத்தைக் காட்ட அல்ல, நான் இந்தச் சொல்லாராய்ச்சியில் ஈடுபடுவது? சுவையும் பயனும் இதிலே மிகுந்திருப்பதனால்தான்.

பற்று - ஒரு உணர்ச்சி - ஒரு செயல் - இரண்டுக்கும் பயன்படும் ஒரு சொல்!

பசு - பதி - பாசம் என்பது குறித்து, சைவப் பெரியார்கள் பேசிடக் கேட்டதுண்டா! ஆன்மாக்களுக்கும் அரனுக்கும் அமைந்துள்ள "பற்று' பற்றியதே, அவர் தரும் விளக்கம்.

பற்று பற்றிடாதார் எவரும் இலர்! உணர்ச்சி உள்ளார் எவரும் "பற்று'க் காட்டியே தீருவர், ஏதேனும் ஒரு பொருளிடம், ஒரு கருத்திடம், ஒரு முறையிடம்.

ஏதேனும் ஓர் பொருளிடம் "பற்றுக்' கொண்டார், அப்பொருள் பெற்றிட முனைந்திடுவர்; அப்பொருள் கிட்டுமட்டும் தேடிடுவர்; கிடைத்த பின்னர் களித்திடுவர்; கிடைத்ததனை இழந்திட ஒருப்படார் வேறு எப்பொருளைத் தருவதாக எவர் கூறிடக் கேட்டிடினும், எப்பொருளின் மீது பற்றுக் கொண:, பற்றிக் கொண்டனரோ அப்பொருளைத் தந்திட இசையமாட்டார். இப்பொருளிடம் எனக்குள்ள "பற்று' அறிந்தும், கேட்டிடலாமோ, இஃது அறமாமோ என்றெல்லாம் பேசிடுவார்.

பற்று உள்ளத்தில் எழுந்திடும் உணர்ச்சி மட்டுமல்ல, உள்ளத்தில் இடம்பிடித்துக் கொண்டு, வெளியேற மறுத்திடும் வலிவுமிக்க உணர்ச்சி.

உயிரே போவதாயினும் இதனை மட்டும் தர சம்மதியேன் என்றும்,

இதனை நான் இழந்திடின் உயிர் தரித்திரேன் என்றும்,

வேறு எதை வேண்டுமானாலும் கேள், தரத் தயங்கிடேன், ஆனால் "இதனை' மட்டும் கேட்காதே, தர இயலாது, அத்துணைப் "பற்று' எனக்கு இதனிடம் என்றும் பலர் பேசக் கேட்கின்றோம்.

"பற்று' எனும் உணர்ச்சி வலிவு பெற்று விட்டிருப்ப தனையும், அவனோடு இரண்டறப் பிணைந்து விட்டிருப்ப தனையும் குறிப்பனவே அந்தப் பேச்சு.

விருப்பம் என்ற விதமாகத்தான் "பற்று' துவங்குகிறது. ஆனால், வளர்ந்து வளர்ந்து, ஆழ வேர்விட்டு இதயத்தில் கெட்டியான விதத்தில் நிலைத்து விடுகிறது, பற்று ஆகிவிடுகிறது.

சுவையையோ, பயனையோ அறிந்துதான் முதலில், எதனிடமும் விருப்பம் எழுகிறது. கிடைக்காதிருக்கும் காலம் வளர்ந்திடும்போது ஆவல் வளருகிறது, அப்பொருள் கிடைத்த பிறகு "திருப்தி' ஏற்படுகிறது, மகிழ்ச்சி பிறக்கிறது, சுவை காண்கிறோம். பிறகு இந்தத் திருப்தி, சுவை, மகிழ்ச்சி என்னும் உணர்வுகளோடு ஒரு பயம் நுழைகிறது, கிடைத்தது கைவிட்டுப் போய்விட்டால் என்ன செய்வது என்ற பயம்; கிடைத்தது தீர்ந்துபோனதும் மேலும் கிடைக்காது போய்விட்டால் என்ன செய்வது என்ற பயம்! அந்த உணர்ச்சி காரணமாகப் பெற்றதைப் பாதுகாத்திட வேண்டும் என்ற உறுதி பிறக்கிறது. அந்த உறுதி, பிறகு, "பற்று' ஆகிவிடுகிறது; பறிக்க முடியாததாகவும், அவனிடமிருந்து பிரிக்க முடியாததாகவும் ஆகிவிடுகிறது; அந்த உணர்ச்சி வன்மை மிக்கதாகி விடுகிறது.

விருப்பம் எழுவதும், விழுவதும் எளிது - பெற்ற பிறகு விழுவதும் உண்டு, பெற முடியாதபோது மறைவதும் உண்டு, மேலெழுந்தவாரியான உணர்ச்சி, அந்த விருப்பம்.

விருப்பம் கொண்டதுடன், விரும்பியதைப் பெற்றே தீருவது என்ற உறுதி பிறந்திடும்போதுதான், விரும்பியதைப் பெற முனைவர்; முனைந்து பெற்றிடுவரேல் பெற்றதனை இழந்திட லாகாது என்ற உறுதி இணைந்திடும்; "பற்று' பற்றிக் கொள்ளும்.

மண்ணைப் பற்றிக் கொண்டு மரம் எழுகிறது, மரத்தைப் பற்றிக் கொண்டு கொடி படருகிறது, கொடியினைப் பற்றிக் கொண்டு இலையும் பூவும் காயும் உள்ளன!

ஒன்று மற்றொன்றைப் பற்றிக் கொள்ள, ஆழப் பதிந்திருத்தல், சேர்ந்து இருந்திடுதல் எனும் நிலை இருந்தாக வேண்டும்.

ஆழப்பதிந்திருத்தல், ஒன்றுக்கொன்று பொருத்தம் சரியாக இருந்தால் மட்டுமே இயலும், மண்ணைப் பற்றிக் கொண்டு மரம் எழுவது, மரத்தின் வேர் ஆழப் பதிந்திட மண் இடந்தருவதால்; அதற்கேற்ற பொருத்தம் அமைந்திருப்பதால்,

மணற்பாங்குமிக்க இடத்திலும், மலைப் பாறை மிகுந்த இடத்திலும், "ஆழப்பதிந்திருத்தல்' இல்லையல்லவா!!

விதை விழுந்ததும், மண் அதற்கு இடமளித்து, இதமளித்து வாழ வழி அமைத்து விடுவதனால்தான் செடியாகி மரமாகிச் செழித்திருத்தல் காண்கின்றோம். அதே விதையினை மண்ணி -டாமல், பாதையிலோ பாறை மீதோ, பளிங்கு அறையிலோ பட்டாடை மீதோ தூவிடின், முளைவிடுமா! இல்லை! ஏன்? பொருத்தம் இல்லை! ஆழப்பதியவில்லை! சேர்ந்து இருந்திட வில்லை; பற்று ஏற்படவில்லை!!

மண் விதையையும், விதை மண்ணையும் பற்றிக் கொண்டாலன்றி, முளைவிடுவதில்லை!

விதையின் வகைக்கு ஏற்றவிதமாக மண் இருத்தல் வேண்டும் என்பதும், உழவு முறை இருத்தல் தேவை என்பதும், நான் மேலே கூறிய அடிப்படை உண்மைக்கு மாறானதல்ல; அந்த உண்மையின் பல முனைகளிலே ஒன்று.

நஞ்சைக்கும் புஞ்சைக்கும் வேறுபாடு இருக்கிறது - மண்ணின் தரத்தில், பாசன முறையில், உழவு வகையில்; ஆனால் நான் குறிப்பிட்ட,

ஆழப் பதிந்திடல்
கூடி இருந்திடல்

எனும் "விதி' இங்கும் உண்டு; இல்லையேல், முளை இல்லை; வளர்ச்சி இல்லை.

தம்பி! எதன் மீதாவது "பற்று' ஏற்பட வேண்டுமானால், விருப்பம் எனும் உணர்ச்சி நம் மனத்தில் ஆழப் பதிந்திருத்தல் வேண்டும். மனத்திலே கூடி இருந்திடுதல் வேண்டும். அஃது இல்லையெனில், காற்றிடைப்பட்ட இதழ் இங்குமங்கும் சிதறி எதற்கும் பயன்படாது போவது போல, எழும் விருப்பம், அலை அலையாய்க் கிளம்பி, உருப்பெறாது போய்விடும்.

கண்டதன் மீது மனத்தைச் செலுத்தி, வீணுக்கு அலையாதே! - என்கிறார்களே பெரியவர்கள், இந்தக் கருத்தைத் தான் "கொச்சை'யாகக் கூறுகிறார்கள், அதுபோல!

விருப்பம் எழுந்திடும்போது, நாம் விரும்பும் பொருளின் தன்மையையும், பெறத்தக்க பயனையும், தெளிவுடன் அறிந்திட வேண்டும்; அறிந்திடும்போது விருப்பம் சிலவற்றை விலக்கிடவும் வழி கிடைக்கும். பெற்றே தீர வேண்டிய விதமானது அப்பொருள், அத்துணைப் பயன் தருவது என்று தோன்றுமானால், முயற்சியில் ஈடுபடல் வேண்டும், பெற முனைந்திடுதல் வேண்டும், அதற்கேற்ற ஆற்றலுடன்.

சிறுவயதில் பட்டுப் பூச்சிகளைக் கண்டதும் "விருப்பம்' - எழுகிறது; பிடித்திட முயற்சிக்கிறோம்; முயற்சி எளிதாகப் பலன் தராதபோது, விருப்பம் தன்னாலே போய்விடுகிறது; முயற்சியிலே வெற்றி பெற்று, அந்த வண்ணப் பூச்சி நம் கரம் சிக்கியதும் மகிழ்கின்றோம்; விளையாடுகின்றோம்; ஆனால், விரும்பியதைப் பெற்றாகி விட்டது. அதனால் கிடைத்திடக் கூடிய மகிழ்ச்சி கிடைத்தாகிவிட்டது என்றதும், மனத்திலே வேறு விருப்பம் எழுகிறது, வண்ணப் பூச்சி மீது இருந்த விருப்பம் குறைகிறது, மறைகிறது; பூச்சியை விட்டுவிடுகிறோம்; புதுப் பொருளில் நாட்டம் காட்டுகிறோம்.

இந்த விருப்பம், விவரம் அறியாத ஒன்று, எனவேதான் வேகமாக எழுகிறது, வேகமாக மறைகிறது.

ஆனால், தம்பி! பூச்சிகளின் இயல்பினை ஆராய்ந்திடுவதில் பற்றுக் கொண்ட "அறிவாளர்' இதுபோன்றிருப்பதில்லை. நாளெல்லாம், விதவிதமானவைகளைப் பெறுவதிலும், பெற்றவற்றினைக் கண்டு கண்டு கருத்துப் பெறுவதிலும், தம்மை மறந்து இருந்திடுவர் - அவர்களுக்கு அத்தகைய "பற்று' பூச்சிகள் பற்றிய உண்மைகளைத் தேடிக் கண்டறிந்திடும் துறையினில், பணியினில்.

விருப்பம், பற்று ஆக வடிவமெடுப்பது எங்ஙனம் என்று அறிந்திடச் சில கூறினேன்; விருப்பத்தில் உள்ள வகை பல என்பதனையும் கூறினேன். விருப்பங்கள் எல்லாம், "பற்று' என்ற வடிவம் பெற்றுவிடுவதில்லை; விருப்பங்களிலே பலப்பல, வடிவம் பெறுமுன்பே கூடக் கலைந்துவிடுகின்றன.

ஒன்றின் மீது விருப்பம் கொள்கிறோம்; அது கிடைக்கவில்லை என்றால், "அதுபோல, வேறொன்று' கிடைத்திடப் பெற்று, சரி! இதுபோதும்! என்றெண்ணி மகிழ்ச்சி பெற்றிடுகிறோம்; மறுத்திடமாட்டாய். சிறுவர்களுக்கு வேடிக்கைப் பாட்டுப் பாடுகிறார்களே, வாலு போயி, கத்தி வந்தது என்று அதுவும், நாடகத்திலே பாடுகிறார்களே, மயிலுக்கு நான் கண்ணி வைத்தேன், தங்கமே! தங்கம்! குயிலுக்குஞ்சி மாட்டிக்கிட்டுது, தங்கமே! தங்கம் என்று, இவையெல்லாம், ஒன்றை விரும்பிப் பெற நினைத்து அது கிடைக்காதபோது, வேறு ஒன்றைப் பெற்று "போதும்' என்ற திருப்தியைத் தருவித்துக் கொள்ளும் இயல்பினை விளக்கிடும், வேடிக்கைக் கதைகள், வேறென்ன!

ஒன்றை விரும்பி அது கிடைக்கப் பெறாமல், கிடைத்த வேறொன்றைக் கொண்டு திருப்திப்படுவது போல, ஒன்றின் மீது பற்றுக் கொண்டு, வேறொன்று பெற்று, போதும் என்று இருந்திடல் முடியாது!

விருப்பம், பலப் பல; பலவகையின; பல தரத்தன; பல நிலையின! பற்றும், பலவகையின.

ஆனால், விருப்பம் - பற்று எனும் இரண்டுக்கும், தரம், நிலை, வகை எது எனினும், அடிப்படையிலே அமைந்துள்ள வேறுபாடு உண்டு. விருப்பம், நீக்கிக் கொள்ளத் தக்கது; பற்று, விட்டுவிடக் கூடியது அல்ல.

தம்பி! பொருள், கருத்து, முறை, குழு, தனி ஆள் என்று நாம் பற்றுக் காட்டத்தக்கவை பல உள்ளன.

பொருளின் மீது மிக்க "பற்று' உள்ளவன், அதனைப் பெற்றிடும் முறை பற்றிக் கவலை கொள்ளான். பெற்றிடுவதால் விளைந்திடும் பயன் யாது என்று கூட ஆராய்ந்திட மாட்டான்.

பொன்னைப் பெற வேண்டும் பொதி பொதியாக என்று ஓர் "ஆசை' மைடாஸ் எனும் மன்னனுக்கு ஏற்பட்டதாம்! தேவன் வரமளித்திட வந்தான்! மைடாஸ், எனக்குக் குன்றளவு பொன் வேண்டும் என்றா கேட்டான்! அவன் ஆசைக்கு அளவில்லை, ஆகவே, இவ்வளவு பொன் வேண்டும் என்று கேட்டிடவில்லை. தேவா! நான் தொட்டதெல்லாம் பொன்னாதல் வேண்டும்; வரம் அருளும்! என்று கேட்டான்; பெற்றான், பெற்று!. . . உண்ண முடியவில்லை, ஒரு முழுங்கு தண்ணீர் பருக முடியவில்லை. தொட்டதும் பொன்னாயின, உணவும், நீரும்! என் செய்வான்! தொட்டதெல்லாம் பொன்னாகிறது, ஒரு கவளம் சோறு இல்லை! பசிக் கொடுமை! நா உலருகிறது!! துடிக்கிறான்!!

கதைதான், தம்பி! ஆனால், விளைவு யாதாகும் என்பது அறியாது விருப்பம் கொண்டோன், அந்த விருப்பம் நிறைவேறப் பெற்று, மகிழ்ச்சி அல்ல, வேதனையைத்தான் பெறுகிறான் எனும் கருத்தினை விளக்கிட வல்லது.

ஆகவே, கொள்ளத்தக்கது, தள்ளத்தக்கது என்று விருப்பத்தைத் தரம் பிரித்திட வேண்டுமானால் விருப்பம் நிறைவேறப் பெற்றால் ஏற்படும் விளைவு என்ன என்று ஆராய்ந்து பார்த்திட வேண்டும்.

இதுபோல ஆராய்வதனால், விருப்பம் கொள்ளத்தக்கதா அல்லவா என்று அறிந்துகொள்ள முடிவது மட்டுமல்ல, ஆராய்ந்திட ஆராய்ந்திட விருப்பம் வலிவு பெறுகிறது. பற்று அளவுக்கு வளருகிறது.

"பற்று' என்பதற்கும், "விருப்பம்' என்பதற்கும் உள்ள மற்றோர் வேறுபாட்டினைக் கூடக் காணலாம்:

ஒருவன் தான் கொண்ட விருப்பத்தை மற்றப் பலரும் கொண்டிடல் வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை, அதே விருப்பத்தைப் பலரிடம் புகுத்த முனைவதில்லை; வாணிபம் நடாத்துவோர் தவிர.

ஒருவன், ஒருவிதமான உணவிலே "விருப்பம்' கொண்டுள் ளான் என்றால், அதுபற்றி மெத்த ஆர்வத்துடன் பேசுவான். மற்றவர்களுக்கும் அந்த உணவு மீது விருப்பம் எழுப்பிட முயல்வான்; ஆனால், அந்தப் பணியிலேயே முனைந்து நிற்கமாட்டான் நீ அறிய மாட்டாய் அந்தச் சுவை! - என்று கூறிவிட்டுச் சென்றிடுவான். ஆனால் "பற்று'க் கொண்டவர் களோ, மற்றப் பலரும் அதேவிதமான "பற்றுக்' கொண்டிட வேண்டும் என்பதிலே நாட்டம் மிகுதியாகக் கொண்டிடுவர், அதற்கான பணியினில் முனைந்திடுவர்.

அதனால், விருப்பம் பெரும்பாலும், தனி மனிதர்களிடம் காணப்படும் உணர்ச்சியாகவும், "பற்று' தனி மனிதர்களிடம் பிறந்து சமூகத்தில் பலர் கொண்ட குழுவினிடம் இடம் பெற்றிடும் முறையில் வளர்ந்திடவும் காண்கிறோம்.

எனக்கு இதன் மீது விருப்பம்; நீங்களும் அதனையே விரும்புங்கள் என்று எடுத்துக் கூறிடும் போக்கினை அதிக அளவில் காண முடியாது; ஆனால் எனக்கு இவ்விதமான பற்று உண்டு, அது சாலச் சிறந்தது; அந்தப் பற்று உங்கட்கும் ஏற்பட வேண்டும், அந்தப் பற்றினைப் பெற்றிடுக! என்று ஆர்வத்துடன் எடுத்துக் கூறிடும் போக்கினை நிரம்பக் காணலாம்.

விருப்பம், பெரிதும் தனி மனித உணர்ச்சியாகி விடுகிறது, "பற்று' தனிமனித உணர்ச்சி என்ற அளவிலிருந்து, சமூகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் இடம் பெற்றிடும் "பொது உணர்ச்சி' எனும் நிலையை அடைகிறது.

இது பற்றித் தம்பி! அறிந்திடக் கொள்கைகள், முறைகள், கோட்பாடுகள், மார்க்கங்கள் ஆகியவைகளின் வரலாறு காண வேண்டும். எவரெவர், அவர் கொண்டிருந்த "பற்று' மற்றவர்க்கும் ஏற்பட வேண்டும் என்பதற்காகப் பாடுபட்டனர், எத்தனை தொல்லைகளைத் தாங்கிக் கொண்டனர் என்பன பற்றி அறிந்திடும்போது ஒரு எழுச்சியே ஏற்படும்.

"பற்று' எத்தகையது என்பதனையும் விருப்பம் என்பதிலிருந்து எந்த முறையில் மாறியிருக்கிறது என்பதனையும் வளர்ச்சி பற்றியும் கூறினேன் - ஓரளவுதான். முழு அளவு தெரிந்துகொள்ள முயன்றுபார், சுவையும் பயனும் நிரம்பக் கிடைத்திடும். "பற்று' பலவகை உண்டு என்று அறிகின்றோம். இவற்றில் எளிதாக எவர்க்கும் புரிந்திடுபவை,

நாட்டுப்பற்று
மதப்பற்று
மொழிப்பற்று
இனப்பற்று

என்று கூறிடலாம்; எவரும் கூறிடுவர்; பிறகு மெல்லிய குரலில் கூறிடுவர், குடும்பப்பற்று என்பதனையும்.

நாட்டுப்பற்று என்பதிலேயே, வட்டாரப்பற்று, நகரப்பற்று, வீதிப்பற்று, வீட்டுப்பற்று என்பவைகள் உள்ளடங்கி உள்ளன; இவைகளைத் தனித்தனியே கூறிடுதல் கூச்சப்படத்தக்கது என்ற கருத்தில், பலரும் மொத்தமாக நாட்டுப்பற்று என்று மட்டுமே கூறுவர்; மற்ற "பற்று' தரக் குறைவானது என்ற எண்ணத்தில்.

தரம் குறைவா, இல்லையா என்பதிருக்கட்டும்; இப்படிப் பலவகை உண்டு. மறந்திடுதல் தேவையில்லை; மறுத்திடுதல் வீண் வேலை.

இந்தத் தொழிற்சாலை இங்கேன் துவக்கவில்லை?

எமது ஊரில் இன்னும் ஓர் கல்லூரி வேண்டும், மறுக்காதீர்.

எமது ஊரில் பாய்ந்தோடும் ஆற்று நீரை மற்றவர்க்கே தருகின்றீர்; இங்கே தேக்கம் கட்டி எமக்களிப்பீர், பாசன வசதி.

எமதூர் எழிலூராக எட்டு இலட்சம் பரிந்தளிப்பீர், தப்பாமல்.

எங்களூர் தொழிற்கூடந் தன்னில் எவரெவர்க்கோ வேலையா! இங்குள்ள நாங்களெல்லாம் என்ன கதியாவதய்யா! ஊரில் உள்ள தொழிற்சாலை தன்னில் பாதிக்கு மேல் ஊர் மக்கள் பங்குபெற வழி செய்யும்.

இவ்விதமெல்லாம் கேட்பவர்களுக்கு நாட்டுப்பற்றே கிடையாது என்று கூறிவிடுவது முறையாகாது. இவர்கள் தமது வட்டாரம் வளர்ச்சிபெற, நகரம் எழில்பெற வாதாடுகின்றார்கள், ஏன்? நாட்டுப்பற்று அற்றதனாலா? அல்ல! அல்ல! அந்த வட்டாரம் நாட்டில் ஒரு பகுதி! எனவே, அதற்காக வாதாடல் நாட்டுக்கு வாதாடல் ஓர் விதத்தில் என்பதனால்.

தம்பி! எளிதாகப் புரிந்திடுவதும், எவர்க்கும் தெரிந்திருப் பதுமான, நாட்டுப்பற்று, இனப்பற்று, மொழிப்பற்று எனும் இந்தப் "பற்று' தனித்தனி மனிதர்களின் உணர்ச்சி மட்டுமல்ல, கூட்டு உணர்ச்சி - இன்று நேற்றுத் தோன்றியதல்ல. நெடுங்கால மாக வளர்ந்து வந்திருப்பது.