அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


பட்டப் பகலில். . . ! (1)

பட்டப் பகலில் கண்ட கனவு -
காளையும் கன்னியும்

தம்பி!

இதய மலரே!
இன்பப் பெருக்கே!
முத்தே! முழுநிலவே!
செந்தேனே! என் மானே!

இதுபோலெல்லாம் பண்பாடிடத் தெரியாப் பாவை - கண் உறக்கம் கொண்ட நிலையில் கவிதை தீட்டப்பட்ட மடலெனத் திகழ்கிறாள். தொட்டலின் ஓரத்தில் ஒரு கரம் - மற்றொன்று தரையில்! அவள் ஏழை! இல்லம் இல்லாமையின் இருப்பிடம்; செல்வம் தொட்டிலில்! அந்தச் செல்வத்தைப் பெற்றுப் பெருமாட்டியாகிட வைத்தவன், கழனி அருகே, காவல் காத்து நிற்கிறான் - களஞ்சியம் போய்ச் சேரவேண்டிய நெல்லை எவரும் களவாடாதிருக்க. அவன் கண்களிலே அறுவடைக்குத் தயாராகி நிற்கும், பயிரா தெரிகிறது! இல்லையே! கதிரின் கனம் தாளமாட்டாமல், சிறிது கீழே தாழ்ந்தபடி பயிர் இருக்கிறது. "இன்னும் இரண்டே மாதம்! பிறகு பாரேன்!'' என்று கனிவு வழிந்திடச் சொன்னபோது, அவன் தோள்மீது துவண்டு வீழ்ந்து, "உங்களுக்கு எப்போதும் கேலிதான்!'' என்று பேசியபடி ஒரு பார்வையைச் செலுத்தினாளே, அந்தப் பாவை அல்லவா தெரிகிறாள்.

அவளோ அயர்ந்து துயிலுகிறாள். ஓடி ஆடி வேலை செய்த அலுப்பு! அலுப்பைக் கவனித்தால், அங்கம் வளர்க்க வேண்டாமா? அதோ தங்கம்! அதற்காக உழைப்பு - உழைப்பினால் களைப்பு; அயர்ந்து தூங்குகிறாள்; கலாபத்தை மடக்கிக்கொண்டு துயிலும் மயிலனையாள்.

அவன், கழனிப்பக்கம்! தவளைச் சத்தம் காதைக் குடைகிறது. பாம்புகள் சீறுவதுபோன்ற ஒலியும் கேட்கிறது. காற்றினால் அசைந்தாடும் பயிர், கதிர்முற்றிய நிலையில் இருப்பதால், கொஞ்சும் சதங்கை அணிந்தவள் கோலம் காட்டி நடக்கையிலே எழும் ஓசைபோல இசை எழுப்புகிறது.

ஆயிரம் வேலிக்கு அதிபனாம்! மூன்றடுக்கு மாடிவாழ் மன்னனாம்! இருந்தும் என்ன? தானாகச் சென்று, அவரவரைக் கண்டு, நான்தான் நாலூர் மிட்டாதாரன்! என்று கூறிக் கொள்ளத்தானே வேண்டிவரும் - அவனை உலகறியச் செய்திட வல்ல மகவு இல்லையெனில்.

தொட்டிலிலே படுத்துத் துயிலும் தும்பைக்கு இந்த எண்ணம்போலும். என்னைக் காணுங்கள் - என் எழிலைக் காணுங்கள் - என் தந்தை தெரிகிறாரல்லவா! என் அன்னையும் தெரிகிறாரல்லவா!! உலகம் மெச்சும் அவர்கள் வாழ்வது எவரால்? என்னால்! ஆமாம், சின்னஞ்சிறு சிட்டு என்று மட்டுமே எண்ணிக்கொள்ளாதீர்கள். நான் எந்தைக்கு ஏற்றம் கிடைத்திடச் செய்யும், செந்தாமரை! தெரிகிறதா? - என்று பேசிடும் பருவமல்ல! முகப்பொலிவு அதுபோன்றே விளங்குகிறது.

உன்னோடு உறவாட எண்ணியே, ஓங்கி வளர்ந்து வருகிறேன்! தொட்டால் மெய் சிலிர்க்கும் - ஆகவேதான், என் கரங்களை நீட்டியபடி நிற்கிறேன்! வா! வா! என்றும் அழைக்கிறேன் - என்று தென்னை, நிலவை நோக்கிப் பேசிட இயலுமா! கீற்றுகள் ஆடுவதும் அசைவதும் அதனைத்தான் காட்டுகின்றன.

தொழுவத்தில், தன் கன்றின் முதுகை, நாவினால் நீவியபடி நிற்கிறது பசு! அதன் கழுத்திலே கட்டப்பட்டுள்ள மணியின் ஓசைதான் இசை! அந்தக் கன்றுக்குத்தான் எத்துணை பெருமை! நான் வேண்டுமென்றே ஒரு முறை என் காதை அசைத்தாலும் போதும்; கண்களால் கனிவு காட்டி, என்ன? என்ன? என்று கேட்டாள் என் தாய்; கழுத்தை அசைத்து அசைத்து! - என்று கூறுவதுபோலக் குதித்தாடுகிறது கன்று.

தொட்டிலிலே அரசு செலுத்தும் மகவின் முகத்திலே வந்து வந்து போகும் களையும் விந்தை விந்தையான சேதிகள் எதனை எதனையோ கூறுவதுதான் போலும்!

அந்த அணங்கின் முகத்திலேயும் அகத்தின் பொலிவு ஒளிவிடுகிறது. புன்னகை இதழிலே! பல்வேறு வகையான புன்னகை! பெருமிதம் காட்டும் வகை! குறும்புணர்ச்சி காட்டும் வகை! கூச்சத்தைக் காட்டும் வகை! இங்ஙனம் பலப்பல! ஆனால், எல்லாவற்றிலும் ஓர் இனிய எழில்!!

எண்ணம் பலப்பலவும், கனவு வடிவம் கொண்டு, காரிகைக்கு துயிலில் விருந்தாகிவிடும் நிலைபோலும்!

அதோ! அதோ! அந்தப் புன்னகைக்கு என்ன பொருளோ? எழுப்பிக் கேட்டிடலாம்! எழுந்ததும், இன்பக் கனவினை ஏன் கலைத்தாய்? முழுதும் நான் கண்டு மகிழ இருந்தேனே! பாதியிலே எனை எழுப்பிப் பாழடித்துவிட்டாயே! தின்னப் பழம் எடுத்துத் தோல் நீக்கி நிற்கையிலே, மந்தி பாய்ந்துவந்து பறித்தோடிச் சென்றிட்ட பழங்கதைபோல்!! என்றெல்லாம் கேட்டு மிக எரிச்சலும் காட்டுவளோ! ஏன் எழுப்பி அவள் மகிழ்வைப் போக்குவது; வேண்டாம்! என்று தோன்றும்.

இதழோரம் எழில் கூட்டும் அந்தப் புன்னகையில், ஏதோ ஒரு நினைவால் வந்துற்ற கூச்சமது நிச்சயமாய்த் தெரிகிறது. உண்மை, கூச்சம் எதன் பொருட்டு? குடத்தை இடுப்பேற்றி, குளிர்மதியைக் கண்ணேற்றி, மலருக்கு மணமூட்ட, கூந்தலிலே தானேற்றி, மையுண்ட கண்ணாள், மையலூட்டும் பருவத்தாள், வானகத்தினும் வையகமே சிறந்ததென வாயால் மொழியாமல், கண் வழியாய்க் காட்டிடும் காளையர் நெஞ்சினிலே கனலேற்றி நடக்கின்றாள்; புனல்கொண்டு வருவாளாம்! புன்னை பூத்திருக்கும் பொன்னில் மணமிருக்கும் என்றே புலவோர் கூறிடவே, மலர்க்குவியல் ஆங்கிருக்கும்! அன்னம் தவழ்ந்தாடும்! அணிகள் குதித்தோடும்! வண்ணம் பல கொண்ட வண்டுகள் இசை பயிலும்! கோலேந்தும் மன்னனது கூடம்தனில் வீரர் வந்தமர்ந்து வாழ்த்தொலிக்கும் வேளையிலே, வந்து நின்று! அவையோரின் அஞ்சலிதனை ஏற்கும் அரசகுலம் இவள் காணீர் எனும் விதமாய் வருகின்றாள்.

நாளைக்கு இருவேளை காளையைக் குளிப்பாட்டிப் பாதுகாத்திடச் சொன்னார் பரிவுமிகு என் தந்தை! அதற்கே நான் வந்தேன்! என்று கூறுகின்றான்; இவனை யார் கேட்டார்கள்? மலர்நாடி வந்திடும் வண்டினை எவர் கேட்பர்? கூறுகின்றான் குமரன், வேறேதும் அறியானாம்! வேல் விழியைக் காணானாம்! கழுத்தைக் காலென்றும், காதினை கண்ணென்றும் தவறாக எண்ணியன்றோ, தன் வேலை செய்கின்றான்! காளையும் வாய்விட்டுச் சிரித்துக் கேலி செய்யும் இவன் போக்கை அறிந்ததனால்!

நெற்றியிலே பூத்திட்ட முத்துக்களைத் தரைமீது, தையல் வீசுகிறாள். இவனுக்குத்தான் அதனால் எத்தனை தவிப்பு!! கல்லோ அவர் மனமும், கன்னிக்குக் கடினமிகு வேலை பல தந்திட்டார்! மலருக்கு அனல் காற்று! ஆகுமோ? கருகாதோ! மானை ஏர்தனில் பூட்டி, மதியலியும் உழுதிடானே! மங்கை இவள் வியர்வை மண்ணில் விழும் அளவு, பாடுபடச் செய்கின்றார்; பாவிகள்; பெற்றோராம்!! - என்றெல்லாம் கேட்டிடத்தான் துடிக்கின்றான்; அவன் நினைப்பை, கண்ணோரம் தன்னால் கண்ட அவள், "களுக்'கெனச் சிரித்திடாமல், அடக்கிக் கொண்டதுதான் விந்தை!

"மாடோட்டி வந்தவனே! மன்னாரின் மகன்தானே! சின்னான், உன் பேர்! - ஆமாம் சிலம்பத்தில் வல்லவனாம்; சொன்னார்கள் பல பேர்கள்! வயலூர் தோப்பினிலே, வகையான பலனாமே! ஆயிரத்துக்கு மேலே இலாபமாம் இவ்வாண்டு; உண்மைதானே! கால்காசும் செலவழிக்காக் கஞ்சன் மகன் என்றாலும், பசியோடு வந்தவர்க்கு பரிந்து உணவளிப்பாயாம்! பாமாலை தொடுப்பாயாம். பன்னிருகையன் சொன்னான்! ஆமாம் உனக்கு இன்னும், ஆகவில்லையே, மணமும்! அத்தைக்கோ மகள் இல்லை! சொத்தைப் பல்லாம், சொக்கிக்கு! உன் அக்கா மகள்! எவள் வந்து உன் மனையில் எழில்கூட்டி நிற்பாளோ! இனியா பிறக்க வேண்டும்! இருப்பாள் பருவமங்கை! ஏடா! குறுநகையோ? பல்போன கிழவனுக்குப் பாவை கதை தெரிவதுண்டோ என்றெண்ணிப் பரிகாசம் செய்குவாயோ!! பழுத்துள்ள நானும் முன்னம் "பிஞ்சாக' இருந்தவனே! ஆனால், இதனைக் கேள்; அங்கும் இங்கும் அலைந்து அலர் கிளப்பி வாழ்ந்ததில்லை! ஆரணங்கே வேண்டாம், நான் அடவி செல்வேன் என்று அகடவிகடம் பேசி அடம் செய்தும் இருக்கவில்லை. அவளா? இவளா? என்று எடைபோட்டுப் பார்த்ததுண்டு! மனதில் இடம் பிடித்த மங்கையிடம் பணிந்துவிட்டேன்! மலர்த்தோட்டமாகியது மண்குடிசை, அவள் கால்பட்டு! இருக்கும் நாற்பதாண்டுக்கும் மேலாக! இலுப்பைத் தோப்பாக இருந்தது, இன்றுள்ள மணிக்கூண்டு! ஏலப்பப் பிள்ளை வீட்டில் ஏது மோட்டாரெல்லாம் அப்போது! சின்ன மாடி வீடு! சத்திரம் கட்டியதில், சரியாகத் தட்டிவிட்டார்! பழைய கதை அதெல்லாம்! ஆமாம்! ஆனால் அன்றுபோலத்தான் இன்றும், ஊரணியில் வருகிறார்கள், உறவு முறை பெறுகிறார்கள்! உன்மத்தனாடா நீ! ஒரு நாழிகைப் பொழுது ஓயாமல் நான் பேசி நிற்க, பதிலேதும் கூறாமல், காளை உடலை, கல்லென்று எண்ணிக்கொண்டு, தேய்த்தபடி இருக்கிறாயே! வாய்விட்டா அது சொல்லும். போதுமய்யா தேய்ப்பு என்று! வாயுள்ளதுகளெல்லாம், கண்ணால் பேசிடும் காலமல்லவோ இதுவும்! வருகிறேன், உன் வீடு! இரவு, எட்டுக்கு மேலாக! பார்! பார்! மன்னார், நான் கூறப்போவது கேட்டு, உனைப் படுத்தப்போகும் பாடு! ஊர்கூட்டி உனை நிறுத்தி வாழத் தெரியாதான், வகையில்லான் என் மகனும்! வழிகாட்டும் விளக்கு வேண்டும், இல்லையேல் வழுக்கிடுவான்! திருவிளக்கு இது காணீர்! திருவினரே! வாழ்த்துவீரே! என்று மன்றமுள்ளோர் எல்லோர்க்கும் மகிழ்ச்சி பொங்கப் பொங்கக் கூறி, உனை மனையறம் பயிலும் வேலை ஏற்றிடச் சொல்வான், பார்! பார்! - என்றெல்லாம் முதியவர் மொழிகிறார், அவளும் கேட்க! ஆயிரத்தெட்டுப் பேர்க்கு, அவர் மணம் முடித்ததுண்டு! ஏடெடுத்தால், பார்வை மங்கியது விளங்கும் அவர்க்கு! மடுவும் மாந்தோப்பும், ஊருணிக் கரையும் உச்சி மாகாளிக் கோயிலும், "சந்திப்பு' இடமாகும், சேதி காதில் வீழ்ந்திட்டால் போதும்; செல்வார்; கண்ணொளி நிரம்பி நிற்கும்; காட்சியும் காண்பார்; மனதில் உள்ள கருத்தையும் காண்பார் இந்தப் பொல்லாத புலவன்! அவர்தான், இந்தப் புறநானூற்றுக்கேற்ற புனலோரம் காணுகின்றார் அகநானூற்றிலொன்று மகிழ்கின்றார்.

கேட்டது போதும், இஃதே இன்றெல்லாம் எண்ணி எண்ணி மகிழ்ந்திடத்தக்கது. ஆமாம்! தாயும், என்னவோ, ஏதோ வென்று ஏங்குவாள் நேரம் சென்றால்! இவர்கட்கு என்ன வேலை! திருக்குறள்தனையே வள்ளுவர் செய்துமே அளிக்காவிட்டால்; ஒவ்வொரு குறளில் காணும் ஒவ்வொரு கருத்திற்கும், பாரதம் பாடிக் காலம் பாழ்படச் செய்வார், ஓயாப் பேச்சிலே வல்லவர்கள்! செல்வோம் வீடு! புன்னைக்கு அருகிலேயே புது வீடு கட்டிக்கொண்டு, இருந்துவிடுவதுதானே, ஏனம்மா இங்கு வந்தாய்? என்றெல்லாம், அம்மா பேசி, எனைத் தலைகுனிய வைப்பாள்! என்னவோ எண்ணிவிட்டாள், என்னைக் குறித்துமேதான்! இவர் என்ன எனைக் காணத்தானா, இங்கு வந்தார்? எவர் சொன்னார்? எவரெவர் வருகிறார்கள் என்பதை அறிந்திடவோ நான் உள்ளேன்! ஏன் வீண்வேலை! "ஏனய்யா எனையே நோக்கி நிற்கிறீர்?'' என்றா கேட்டேன்; பார்த்திடுவாரை எல்லாம் காரணம் கேட்க நானும், பைத்தியமா! காளையைக் காண்பேன், சிலவேளை! தொழுவத்தில கட்டும்போதும், முட்டுமோ அவரை என்று எண்ணுவதுண்டு! துளியும் அவர்மீது நினைவு அல்ல; காளைமீதே! இதனைக் கண்ட எவரோ சென்று, எதையோ கூறி என் அன்னை மனதில் ஐயம் ஏற்றிவிட்டார்; தெரிந்துகொண்டேன். இனி என்ன இங்கு வேலை! எதிர்வீட்டுப் பாட்டி வந்தால், "என்னடி குட்டி, எமக்கும் இருக்கட்டும் கொஞ்சம் தண்ணீர்! எல்லாவற்றையும் நீயே எடுத்துச் சென்றிடாதே! போதும்; வீடு, போ! போ!'' என்று பேசிப் பொக்கை வாயால் பொய்க்கோபம் காட்டுவாளே! அவள், இவர் மண்பிசையும் குழவியாக இருந்தபோது, இடுப்பினில் தூக்கி வைத்து, "என் அரசே, தங்கக்கட்டி! எவர் நிகரே சிங்கக் குட்டி!'' என்றெல்லாம் பாட்டுப்பாடிக் கொஞ்சுவது உண்டாம்! சொன்னார்! சின்ன வயதிலே கெக்கச் செவேலென இருப்பாராம், பாவம் வேலை; மேனி செப்பாகிப் போனநிலை! அது சரி! நமக்கென்ன அதுபற்றிய கவலை! யாருக்கு அவர் சொந்தம் ஆவாரோ, யார் கண்டார்கள்! - என்றெல்லாம் மனதிலெண்ணி மங்கை நடக்கின்றாள், குடம் குலுங்க; பாதிதான் நீர் - முழுவதும் நீர் நிரம்ப மறந்தனள்; அதற்கா வந்தாள்?

"பேரென்ன'' - "அழகி'' "பேரழகி'' "மயிலேதான்'' "அடக்கம்'' "அன்னை?'' "சொர்ணம்'' "அப்படிச் சொல்லு! தாயேதான் மகள்! தங்கத்தாலான சிலை!''

போவோர் வருவோரெல்லாம் பேசுகின்றார், இம்முறையில், இவளைக் கண்டு.

"தாயேதான் மகள்! தங்கத்தாலான சிலை!'' - என்ற பேச்சுக் கேட்டுத்தான், இதழோரம் புன்னகை கொண்டாள். இளமங்கை, துயிலுகையில். பதினெட்டு ஆண்டுகட்குப் பிறகு பாவையாகிப் பெற்ற பெருமாட்டியினை, மகிழவைப்பாள். இதுபோது மகவாக உள்ள செல்வி! இதற்குள் அன்னைக்கு, புன்னைமரம், காளையின் கனவு, முதியவர் பேச்சு, எல்லாம்! கனவில்!! தாயைப்போல மகள்!! தங்கத்தாலான சிலை! என்று ஊரார் பேசுவது, உதட்டோரம் சிரிப்பளித்து, இனிப்பளித்து நிற்கிறது. கரும்பறியாச் சுவைதானும், கலந்திருப்பதுபோல, நினைப்பில் இனிப்பேற்றும் நிலைபெறப் போவதனை அறியாது குழந்தை, அழகு துயில்கொள்கிறது.

பதினெட்டு ஆண்டுகளைக் கடக்கவேண்டும், செல்வி பாவையாகிக் குறுநகைக் குமரனின் மனமதை வென்று, அவன், பைந்தமிழ்ப் பாடலின் பொருட்சுவை யூட்டிடும் புலவரின் பேச்சிலே கிடைத்திடும் இனிமையை நுகர்ந்திருந்த நிலைமாறி, "கண்டுபோல் மொழி! வண்டுசேர் குழல்! கண்களோ சேல்! மதி, முகம்! வேய், தோள்! என்றெல்லாம் அவளைப்பற்றி நெஞ்சு நெகிழப் பேசவும், அவன் ஆடல் பாடல் கூடம் மறந்து, அடலேறன்ன தோழர்கள் போர்முறை பயிலும் இடத்தை மறந்து, பழமுதிர் சோலை நோக்கிப் பறந்திடும் புள்ளேபோன்றும், நீர்நிலை நாடிச்செல்லும் புள்ளி மானினமேபோன்றும் சேல்விழி மாது செல்லும் ஊருணிப்பக்கம் சென்று, உலவிடும் போக்குக் கண்டோர், மலரணிக் கொண்டைச் சொருக்கிலே, மதுநிறை அவள்மொழிச் செருக்கிலே, நிலவெறி அங்கக் குலுக்கிலே, மனமது அழிந்த நிலையிலே மையல்கொண்டு அலைகிறான் விணிலே, தொழிலையும் இழப்பன் சின்னாளிலே' என்று கடிந்துரைத்திடக் கேட்டு, "காதலின் மேன்மைதனை உணர்ந்திடா மனத்தினார், கடுமொழி பேசுகின்றார்! விழிவலை வீழ்ந்தே னென்று வீணுக்கு ஏசுகின்றார்! இவர் எனை அறியமாட்டார்; என்நிலை காணமாட்டார்! கதிரொளி பட்டதாலே தாமரை இதழ் விரித்திடும், அந்த இயல்பினைக் கரையும் காக்கை அறியுமோ, கூறீர் ஐயா! புள்ளினம் இசையைத் தானே எழுப்பிடும் போதில், ஆங்கு செவிப்புலன் கெட்டோன், என்ன செப்புவான், அறியோமா நாம்! பறை ஒலி மிகுந்தபோது, பண்ணொ- படுமோ காதில்! அடுப்பினில் ஏற்றியுள்ள பானையில் கொதியும் ஏறித், தளதளவென்றே சத்தம் கேட்டிடும் போது பித்தன், பானைக்கு என்ன நோயோ? பாவம் அழுகிறதே என்பான்; பானையுள் பாற்சோறு தானும் காணான்! அதுபோல, நீர்கொண்டு செல்லவந்தாள், என் நெஞ்சமே கொண்டு சென்றாள்! குளித்திட நானும் வந்தேன், நீரிலே நெருப்பே கண்டேன்! மறுப்பவர், உண்டு, ஆமாம்; மனதைப் பறிகொடுத் திடாதே என்று மதியுரைப்போரும் உண்டு. அன்னார் மறக்கின்றார் ஓர் உண்மைதன்னை! கண்ணொடு கண்ணுமேதான் கலந்திட்டதாலே, காதல் அரும்பிற்று, மலராயிற்று, அறிந்திட இயலாதார்கள், அறிவுரை என்று எண்ணி அனல்வாரி வீசுகின்றார், சுடுவது நெருப்பு, ஆமாம், எனினும் மனமது உலையே ஆகி தழ-ங்கு ஓங்கும்போது, இவர் தரும் சுடுசொல் தானும் என் செய்யும்; ஏன் இதை அறியவில்லை; ஊருணிக் கரையோ, அன்றி ஊர்க்கோடித் தோப்போ, எங்கோ முன்னம் எப்போதேனும் ஓர்நாள், இவர்கள் முறுவல் காட்டி நின்றவ ரல்லரோ? அவர்க்கு அன்று இருந்ததேபோல், எனக்கின்று இலையே என்று ஏன் இவர் எண்ணிடாமல், ஏதேதோ பேசுகின்றார்! எங்கு இவர்க்குப் பதிலைத் தேடி, வீசிடுவதற்கோ, நேரம்? என் மனம் கொள்ளைகொண்ட ஏந்திழை நடக்கும் பாதை இப்படி முள்ளும் கல்லும் நிரம்பி இருந்திடலாமோ? என்பதை எண்ணி எண்ணி ஏக்கமே கொண்டேன், நானும் என்ன நலமா? என்று கேட்கிறார், கேலியாக!! துளையில்லாக் கம்புதானும், குழலது ஆகாதன்றோ? நாணிலா வில்லால், என்ன காரியம் ஆகும், கூறீர்! திரியிலா விளக்கேபோலும், திருஇலா உருவம் போலும், பொன்னிலாப் பேழைபோலும் இருக்கின்றார்; வாழ்கின்றாராம்!! உண்பதும் உறங்குவதும், உற்றதோர் வேலைகள்தாம்! ஆயினும், வேறு இன்றி, இதனையே தொடர்ந்து செய்யும் பேதையர் தம்மைப் பெருமைக்குரியவர் என்றா சொல்வர்; பாவையைப் பெற்ற பின்னர், கடுகாகும் மலைகள் தாமும்! பட்டது விட்டுத்தள்ளு! என்றிவர் கூறிடக் கேட்டேன் நானும். பட்டது துளிர்த்ததென்று பேசுவர், புதுப்பாங்கு கண்டு, தொழிலிலே வெற்றி காண்பேன், தோகையாள் துணையைக் கொண்டு - என்றவன் எண்ணமிட்டபடி, புன்னை மரமிருக்கும் ஊருணிப் பக்கமதில் உலவுவான்! பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு!

இளமாதோ, இப்போதே காண்கின்றாள், அந்த இன்பச் சூழ்நிலையை; விழியும் திறந்தில்லை; விந்தை இஃதன்றோ!

விந்தை அல்ல! மனதிலே கொள்ளை ஆசை, மாதாகிப் போனவட்கு! மதலை மங்கையாவாள், மங்கையின் செங்கை களுக்கு, வளைகளையிட்டும் வாரியே அணைத்துக்கொண்டும், வாழ்வினை அளிக்கவல்லான், வருவான் உரியபோதில்; எங்கு இவர் சந்திப்பார்கள்? என்னென்ன பேசுவார்கள்? என்றெல்லாம் எண்ணும் உள்ளம்; இயற்கைதான், வியப்பென்ன இதிலே!

மதலைகள் குதலைபேசி, மாமனை மாடு ஆக்கி, மனைகளில் ஆடிப்பாடி, பின்னர் மங்கையராகி, மணவாளர் தம்மைக் கொண்டு, மலர்ந்திடும் முல்லைதானும், மணம் பரப்பிடுதல் போல, இல்லறம் தன்னில் நறுமணம் கமழ வாழ்ந்திடும் நிலையைக் கண்டாள்; தன் மகவு படுத்துறங்கும், தொட்டலின் பக்கம் கீழே படுத்துறங்கிடும் போதினிலே. கண்ட காட்சியால் கொண்ட எண்ணங்கள், கனவெனும் உருவம் தன்னில் உறவாடக் காணுகின்றாள்; வியப்பென்ன? வினாக்கள் ஏன்? அன்னைக்கு உண்டன்றோ, ஆசை மகவு என்னென்னவிதமான ஏற்றம் பெறவேண்டுமென்ற நெஞ்சைத் தித்திக்க வைக்கும் நினைப்புகள் பற்பலவும்.

கனவென்று அதனைத் தள்ளிக் கருத்தறியாது போயின், கனிமீது தோல்கண்டு, சுவை ஏது என்றெண்ணி, சுவை காணும் வாய்ப்பிழக்கும் போக்கினர் போலாவர்.

அன்னை காணும் கனவு, தன் மகவுக்கான எதிர்காலம் எங்ஙனம் இருத்தல்வேண்டுமென்று திட்டமிடுவதின் விளைவு! கனவு கனவாகவே இருந்துவிடும் என்றெண்ணும் போக்கினர், பேதையர்! பேரறிவாளர் கண்ட கனவெல்லாம் நனவாகி, மாநிலத்தவர்க்கு இன்று மகிழ்வளிக்கக் காண்கின்றோம். எண்ணெய் திரியிட்டு ஏற்றிவைத்த விளக்கிருக்க, இந்த விளக்கைவிட ஒளிமிகுந்த நிலைபெற்று, எண்ணெய் திரியுமின்றி, எரியாதோ ஓர் விளக்கு, என்றெண்ணிக் கிடந்தவனை, இளித்தவாயன் என்றார், ஏனிந்தக் கனிவு என்றார் - ஆயினும் அதுபோன்ற கனவுகளால், அகிலம் பெற்ற பேறு அளவிட்டுக் கூறப்போமோ!

பெற்றோம் ஒரு மகவு - கிடத்தினோம் தொட்டிலிலே! யாருக்கு யார் உறவு? எத்தனை நாள் இவ்வுறவு! தூங்கி விழிக்கையிலே, துவண்டிடலாம். இச் சிசுவும் தொட்டில் கயிறறுந்து, பொத்தென்று கீழே விழுந்து, ஆவி பிரிந்திடலாம், படுத்துறங்கும் குழவிக்கு மாந்தம் கண்டிடலாம், மார்ச்சளி பிடித்திடலாம்; தத்தி நடக்கையிலே கொத்திடலாம் ஓர் பாம்பு! யார் கண்டார், என்னென்ன ஆபத்து வருமென்று! சின்னஞ்சிறு விழிகள், வண்டுகளாய் உள்ளன! நன்று நன்றென்று நாலுபேர் கூறுகின்றார். அம்மை நோய் வந்தால், அழகான இக் கண்கள், "பூ' விழுந்துபோனாலும் போய்விடலாம்; யார் கண்டார்! மாடு முட்டிடலாம், வெறிநாய் கடித்திடலாம்; அப்பன் வெறிபிடித்து அடித்து உடலை வாட்டிடலாம்! அத்தனைக்கும் தப்பி, ஆரணங்காய் வளர்ந்தாலும், உற்ற துணை கிடைக்காமல், உதைப்போனுக்கு வாழ்க்கைப்பட்டு அழுது கிடப்பாளோ, கிணற்றில் வீழ்வாளோ, என்னென்ன விபத்துகளில் இவள் சிக்கிக்கொள்வாளோ? என்னாகுமோ, இவளின் எதிர்காலம்! யாரறிவார்! - என்றெல்லாம் தாய் எண்ண, பேயுள்ளம் இருக்க வேண்டும்.

தாயுள்ளம் இருந்திடுமோர் பாங்கினையே, கூறிவந்தேன்; தாய் வயிற்றிலுதித்தோர், எவருமே மறுத்திடார்கள்!

ஈன்றெடுத்த மகவினுக்கு எதிர்காலம் இருந்திடவேண்டும் விதம், யாது என்று எண்ணமிட்டாள், அஃதே கனவு; அஃது கனவாகிப் போய்விடாது; காண்பாள், பெற்ற மகளின் பருவம் வளர்ந்த நிலை! "வண்ணக் கிளியே வா! வா! கன்னல் தமிழே வா! வா! முல்லை மொட்டே வா! வா! அல்லி மலரே வா! வா! அந்தி அழகும் நிலவழகும், அணி அழகுள்ள தமிழழகும் ஒன்றாய்த் திரண்டு வந்துள்ள உயிரே, வா! வா!'' என்றெல்லாம் கனிவுடன் கூறிடவும், எதிர்காலம் குறித்துத் திட்டமிடவும், தாய் உள்ளத்தால் முடியும்.

தான் ஈன்றெடுத்த குழந்தைக்கு, பொன்னும் மணியும் பூட்டிப் புது ஆடைகள் அணிவித்துப் பொட்டிட்டுப் பூமுடித்து, போகவரப் பார்த்துப் பூரித்துப் பெருமைப்படுவது தாய் இயல்பு. தொட்டிலிலே துயிலுகின்ற மயில், தோகை விரித்தாடும் நாளை நினைவிலிருத்தி, கருத்தைக் கரும்பாக்கி மகிழ்வதுவும் தாய் இயல்பு. கனவுகள் காண்பதுவும், நினைவாக மாற்றிடும் மனதுடன்தான்; அதனை மறந்திடுதல் கூடாது.

கழனி காத்திடும் கணவன் - தொட்டிலில் துயிலும் குழவி - படுத்துறங்கும் பெருமாட்டி - இவைகளே, இந்த நேரத்தில், உருவாக, உண்மையாக உள்ளன. அந்த உண்மை நிலையுடன், தாயன்பு (பற்று, பாசம்) இணைந்து பிணைந்து, இழைந்து குழைந்து எண்ணம் பல சுரந்து, இன்பக் கனவாகி, எதிர்காலம் உருவாகிறது.

கழனியில் காவலிருக்கும் கணவனுக்குப் பதில், ஒரு சோளக்கொல்லைப் பொம்மை!

தொட்டிலில் படுத்துறங்கும் குழந்தைக்குப் பதிலாக கூரைமீது வீழ்ந்துகிடக்கும் ஒரு மரப்பாச்சி!

தரையில் படுத்துறங்கும் தையலுக்குப் பதிலாக ஒரு ஓவியம்!

தம்பி! இந்த நிலையிருப்பின், எண்ணமும் இல்லை; எண்ணத்துடன் இணைந்து பிறக்கும் இன்பக் கனவும் இல்லை; அதன் தொடர்பாகவும், விளைவாகவும் ஏற்படும் எதிர்காலத் திட்டங்களும் இல்லை.

நடைபெறக்கூடியது; நடைபெற இயலும் என்பதை உறுதிப் படுத்தும் விதமான, அடிப்படை நிலை; இந்த அடிப்படை நிலையை வைத்து, என்னென்ன விதமான, ஏற்றமிகு செயல்களை, செம்மைகளை, சீர்களைப் பெறமுடியும் என்பதற்கான எண்ணம் - இவை இருப்பின், எண்ணம் ஈடேற வழி கிடைக்கும்; எத்தனை பேர், ஏளனம் பேசிடினும்.

பருத்திச் செடி கண்டு, துணிபற்றி எண்ணிடலாம்; துணி கிடைக்கும் வழி உண்டு, பருத்தி மூலப் பொருளாக இருப்பதனால்.

வில்வக்காய் கண்டு, நூலாக்கித் தரி அமைத்து நெய்து ஆடைதனைப் பெற்றிடலாம் என்று எண்ணிடுவது பேதமை.

உண்மை நிலையுடன் உயர்வளிக்கும் கற்பனை கலந்து விட்டால், இன்பக் கனவுகளை, விழித்த நிலையிலும் காண்பர், வித்தகர்கள்.

பட்டப் பகலிலே
பாவலர்க்குத் தோன்றுவதாம்
நெட்டைக் கனவின்
நிகழ்ச்சி

என்றார் பாரதியார்.

தம்பி! புன்னை மரம் நிற்கும் புனலிடம் சென்ற பூவை, கடிமணம் செய்யும் நோக்குக்கொண்ட காளையைக் கண்டாள் என்று தாய் மனம் கொண்ட எண்ணம், கனவினில் உருவம் பெற்றதுபற்றிக் கூறினேன். அவள் அதனையே, கழனியினின்றும் திரும்பிய தன் கணவனிடம் கூறுவளேல் என்ன சொல்வான்?

காவல் காத்திருந்த அலுப்பின் மிகுதியால், அவன் வாடிக் கிடப்பானேல், "சரி சரி! இதுமட்டுமா, கனவு காண்பாய்! எட்டடுக்கு மாடியிலே, உன் செல்வி இருப்பது போலவும், பத்துப் பதினெட்டுத் தோழியர்கள் அவளைப் புடைசூழ நிற்பது போலவும், தங்கத்தாலான பல்லக்குதனில் ஏறி, நீ அவளைக் காணச் செல்வதுபோலவும்கூடக் கனவு காண்பாய்! கனவுதானே!! காலால் வைரத்தை உதைக்கலாம், கண்ணால் "கைலாய'த்தைக் காணலாம், விதைக்காமலே அறுத்தெடுக்கலாம், விண்ணிலவு வீட்டு விளக்காகக் காணலாம்!'' - என்று கேலி செய்திடக்கூடும்.

அவன் மனமும் உடலும் களைப்பினால் தாக்கப்படாம லிருந்தால், "என்ன? என்ன? சொல்லு? சொல்லு! இன்னொரு முறை சொல்லு! புன்னை மரமா? பெரிய மரமா! நிறையப் பூவா! நமது செல்வி அங்கு சென்றாளா? குடமெடுத்தா? தங்கக் குடமா!

அவ்வளவு தூரமா நடந்து சென்றாள்! கால் என்ன வலித்திருக்கும். . . . .'' என்று கேட்பான், களிப்புப்பெறுவான், களிப்பூட்டுவான்.

இருவருக்குமே, பிறிதோர் நாள், மனநிலை சரியாக இல்லையெனில்,

கனவுகாண வேண்டியதுதான்! வேறு; என்று சலித்துக் கொள்ளக்கூடும்.

கனவுகண்ட கன்னிபோல, ஒரு இல்லத்துப் பெண் தன்னைச் சிற்றரசன் சிறை எடுத்து, வாயுவேக மனோவேகமான குதிரைமீது அமர்த்திக்கொண்டு, தடுத்திட வந்தவர்களின் தலைகளைக் கொய்துவிட்டுக் கடுகிச் சென்றான் என்று கனவு கண்டு, அப்படிப்பட்ட சிற்றரசன் வரவு நோக்கிக் காத்துக் கிடக்கலாமா? என்று கேட்பார் உளர்.

எனவேதான்! தம்பி! தாய், தன் மகவுபற்றிக் கொண்டிடும் எண்ணம், கனவு வடிவமெடுத்தால், எங்ஙனமிருக்கும் என்பது பற்றிக் கூறினேன். தமது எதிர்காலம், தமது குடும்ப எதிர்காலம், தாம் நடத்தும் தொழிலின் மேம்பாடான எதிர்காலம், இவைபற்றித் தோன்றிடும் ஆசைகள் கனவு வடிவமாகினால், வடிவமாகியதுடன், அது நடைமுறையில் பலித்தும்விட்டால் அதனால் பலன், அந்தக் குடும்பத்துக்கு மட்டுந்தான்.

நாடு பற்றி, சமுதாயத்தைப் பற்றி, நல்லோர்கள் கொள்ளும் எண்ணம், அவர்கள் நாட்டினிடம் சமுதாயத்தினரிடம் கொண்டுள்ள பற்று எத்தகையது என்பதைத்தான் முக்கியமாகக் காட்டிடும்.

நாட்டிலேயும் சமுதாயத்திலேயும், காணக்கிடக்கும், மூண்டுகிடக்கும், சீர்கேடுகள் நலிவுகள் ஆகியவற்றினைக் கண்டு, மனம் உளையும் நிலைபெற்ற சீலர்கள், அந்தச் சீர்கேடுகள் ஒழிக்கப்பட்டுச், செம்மை ஏற்பட்டு, நாடோ, சமுதாயமோ, நல்ல நிலைமைபெற வேண்டும்; அதற்கு வழிவகை என்ன என்று எண்ணுவர் - பட்டப் பகலிலே தோன்றும் கனவு அது.

அத்தகைய கனவு பலித்துவிடுகிறது. கனவு காண்கிறான் கருத்தற்றவன்! - என்று கூறிடுவர், தம்மை நிறை அறிவு பெற்றவரெனக் கருதிக்கொள்ளும் மண்டைக்கனம் பிடித்தோர்.

கனவு காண்கின்றான்! - என்று பலருடைய எண்ணத்தைக் கேலி பேசினர் - நாடு இன்று அத்தகைய கனவு கண்டவர்களின் கனவு நனவாகி நிற்பதைக் கண்ணுற்று!!

கனவுகளின் தன்மையைவிட, எத்தகைய விதமாகவெல்லாம் கனவு காண்கின்றனர்; காண இயலும் என்பது குறித்தும், அதனால் கிடைத்த பலன்பற்றியும், அடுத்த கிழமை எழுதுகிறேன்.

அண்ணன்,

 

3-9-61