அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


பட்டப் பகலில். . . ! ( 2 )

நினைவு மறத்தல் -
இட்லரின் போர் முறை -
கனவு நனவாதல்

தம்பி!

சென்ற கிழமை, தொட்டிலில் படுத்துத் துயிலும் தன் மகவு குறித்துத் தாய் காணும் கனவுபற்றி எழுதியிருந்தேன்; மேலும் எழுதுவதாகவும் வாக்களித்திருந்தேன்.

உனக்குக் கடிதம் எழுதி முடித்த பிறகு தொடங்கிய சுற்றுப்பயணம், சற்றுக் கடுமையானது, தம்பி! ஆனால், தவிர்க்கவே முடியாத, தவிர்க்கக்கூடாத நிகழ்ச்சிகள்; எனவே, இந்தக் கிழமை உனக்குக் கடிதம் எழுதத் தொடங்கும்போது உள்ளபடி அலுப்புத்தான் - ஆயினும், அதைப் போக்கிக்கொள்ளக்கூட உன்னுடன் உரையாடுவது மெத்தப் பயன்படும் மாமருந்தல்லவா!!

ஒவ்வொருவருக்கு, அவ்வப்போது ஏற்படும் நினைவுகளே கூடச் சிறிது போதில் கலைந்தும், சிதறியும், சிதைந்தும், குறைந்தும் போய்விடுகிறது, அறிவாய்.

என்னமோ நினைத்தேன் - மறந்துவிட்டேன். . . . என்று பேசுவது கேட்டிருப்பாய். நன்றாகக் கவனப்படுத்திச் சொல்லு - ஒன்றுக்கு மற்றொன்று சொல்லிவிடாதே! நினைவு படுத்திக் கொண்டு சொல்லு - என்று மற்றவர்கள் கூறுவதும் கேட்டிருப்பாய்.

நேற்று நடந்தது, இன்று அவனுக்கு நினைவிலிருக்காதே! அவ்வளவு தெளிவு!! - என்றும்,

அவனுக்கு அதெல்லாமா நினைவிலே இருக்கும் - பெரிய ஆள் அல்லவா - எத்தனையோ வேலை - இந்தச் சாதாரண விஷயமா நினைவிலே இருக்கும் - என்றும்,

உனக்கு எங்கே அப்பா, இதெல்லாம் இப்போது நினைவிலே இருக்கப்போகிறது - காலம் மாறிவிட்டதல்லவா, உன் நிலையும் மாறிவிட்டது, நினைப்பும் மாறிவிட்டது - என்றும்,

கேலியாகவும், கோபத்துடனும், இடித்துரைக்கும் போக்கிலும் ஒருவரைப்பற்றி அவருடன் தொடர்புகொண்ட மற்றவர் பேசுவது கேட்டிருப்பாய்.

நினைவு என்பதே பல்வேறு காரணங்களாலே கலைந்தும், குலைந்தும், சிதைந்தும் சிதறியும் போவதுண்டு.

அப்பாவித்தனம், அகம்பாவம், தொல்லைகள், நிலைமையில் மாற்றம், இவைபோன்ற காரணங்களால் நினைவு மாறி விடுவதுண்டு.

சிலர், வேண்டுமென்றே, நினைவு இல்லாததுபோல, நடிப்பதுண்டு - தமது வசதிக்காக!

சிலர், எதிலேயும், தாம் பற்றற்றவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ளவேண்டியேகூட, எதுவும் தமது நினைவிலே தங்குவது இல்லை என்று கூறி, அப்படிக் கூறிக்கொள்வதிலேயும் பெருமை இருப்பதாக எண்ணிக்கொள்வதுண்டு.

தலையைச் சொரிந்துகொள்வது - நெற்றியைத் தடவிக் கொள்வது - புருவத்தை நெரித்துக்கொள்வது - இப்படி எல்லாம், செய்வர், நினைவிலே இருந்து கலைந்துவிட்ட எண்ணத்தை மீண்டும் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டுவர!

ஒருநாள், மரப்பொந்து ஒன்றிலே குடியிருந்து வந்த சிறு பறவையின் குஞ்சு, கீழே தவறி வீழ்ந்துவிட்டது; பல ஆண்டு களுக்கு முன்பு என் கரத்தில் சிக்கிற்று. கொள்ளை ஆசை எனக்கு, அதனை வளர்க்க வேண்டும் என்று என்னதான் ஆசையுடன் நான் இருப்பினும், அதன் தாயன்பு அதற்கு என்னிடம் கிடைக்குமா? கிடைக்காது! கிடைக்காது! உன்னால் முடியாது! நீ, பழம் தருவாய், பால் ஊற்றித் தருவாய்! வேளையறியாமல், என் விருப்பம் தெரியாமல்! ஆனால், என் தாயின் அரவணைப்பிலே எனக்குக் கிடைக்கும் "கதகதப்பு' இருக்கிறதே, அது அல்லவா, எனக்குப் பேரின்பம் ஊட்டி வளர்க்கிறது! உன்னிடம் ஏது, அந்தக் "கதகதப்பு' அளிக்கும் வல்லமை! நீயோ, மனித இனம் - வேட்டைக்கார ஜாதி! நானோ, பறவை இனம் - உன் பிடியில் சிக்காமல், தயவு நாடாமல், வானத்தில் வட்டமிடும், வானம்பாடி! என்னை விட்டுவிடு! என் இச்சையாக நான் சிறகடித்துப் பறந்திடுவேன் - சிந்துகளும் பாடிடுவேன்! தொலைவிலே இருந்து கேட்டு இன்பம் பெறு - அதற்காக எனக்கொன்றும் தர வேண்டாம்!! தாயன்பு பெறுவதைத் தடுத்திடாதே, விட்டுவிடு! - என்றெல்லாம், பேசுவதுபோலக் குருவிக்குஞ்சு கிறீச்சிடுகிறது - அதனாலேயே அலுத்தும் போகிறது; தன் வலிவற்ற மூக்கினால் என் விரலைக் கொத்துகிறது; வலி தாளமாட்டாமல் துவண்டுபோகிறது!

தம்பி! இந்த நிலையில், வேறு மரம் சென்றிருந்த தாய்ப்பறவை வந்தது; சரேலெனப் பொந்து நுழைந்தது; அடுத்த கணம், கிறீச்சிட்டபடி வெளியே வந்தது, கிளையின் அருகே சுற்றிச் சுற்றி வட்டமிட்டது; இங்கும் அங்கும் தேடுகிறது, பாடும் பறவை! மீண்டும் கூட்டுக்குள் போய்ப் பார்க்கிறது, வெளியே வருகிறது, வேதனையும் கோபமும் கலந்த குரலில் கூவுகிறது.

நாடகம் தீட்டுவோர், சேயினைக் காணாது தவிக்கும் தாய், என்னென்ன விதமாகத் தத்தளிப்பாள், ஏதேது கூறிக் கதறுவாள், என்னென்ன விதமாகக் கூவி அழைப்பாள், எங்கெங்கு தேடிடுவாள், எவரெவரைக் கேட்டிடுவாள் என்பதுபற்றி அழகுறத் தீட்டுவர் - பார்த்திருக்கிறோம் - இந்தப் பாடும் பறவையின் பரதவிப்பினை, எத்துணை திறம் படைத்த நூலாசிரியராலும் அப்படியே சித்தரித்தளிக்க முடியாது. கண்டால் மட்டுமே விளங்கும். கூறக் கேட்கும்போது, மிகைப்படச் சொல்வதாகக் கூடத் தோன்றும்.

தம்பி! எனக்குச் சிறிதளவு அச்சமேகூட ஏற்பட்டுவிட்டது போயேன்! அந்தக் குருவி, என் உள்ளங் கையில், தன் இன்பம், சிறைபட்டு இருப்பது அறிந்து, எங்கே என் கண்களைக் கொத்திவிடுகிறதோ என்று பயந்தேன்.

மற்றொன்று கேள், தம்பி! பறக்கக்கூடத் தெரியாத அந்தக் குஞ்சு, என் பரிவு, பச்சாதாப உணர்ச்சியினைப் பெற்ற அந்தக் குருவிக்குஞ்சு, தாய்க்குருவியின் குரல் கேட்டு, அச்சத்தையும் அலுப்பினையும் மறந்து குரல் கொடுக்கிறது!! ஆமாம், தம்பி! தன்னைத் தாய் தேடுகிறாள் என்பதறிந்து, "இதோ! இதோ இருக்கிறேன்! இவனிடம் சிறைபட்டுக் கிடக்கிறேன்!'' என்று தெரிவிக்கிறது.

விட்டுவிட்டு, மாறிமாறி இரு குரல்கள்! பாசத்துடன் தேடும் பாடும் பறவையின் அழைப்புக் குரல்!! பரிவுடன் பதில் அளிக்கும் குரல்!!

கோபந்தான் எனக்கு - ஒரு சின்னஞ்சிறு குருவி, மரப்பொந்து வாழும் தாய்க் குருவிக்காக, இத்தனை கத்துக் கத்துவதா!! நம்மை அவ்வளவு துச்சமாக மதிக்கிறது! - என்று எண்ணினேன். உள்ளங்கையிலிருந்து அதனை விடுத்தேன் - தத்தித்தத்தி நடந்தது - தாய்க் குருவி கண்டுவிட்டது - தம்பி! நல்ல இசை நிகழ்ச்சியின்போது, பக்க வாத்தியக்காரர்களின் "வாசிப்பை'க் கேட்டிருக்கிறாயல்லவா? இவரா? அவரா? மிருதங்கமா? கஞ்சிராவா? எவருடைய வாசிப்பிலே, நயமும் லயமும், மிடுக்கும், எடுப்பும் மிகுந்து காணப்படுகிறது என்று மன்றத்துள்ளோர், வியந்து எண்ணியபடி இருப்பர்! இறுதிக் கட்டத்தில், இருவரும் ஒன்றாக இணைந்துவிடுவர். ஒலிகள் இழைந்துவிடும், இனிமை மிகுந்துவிடும்! அதேபோல, இங்கு, தாய்க் குருவியின் குரல், குஞ்சு எழுப்பும் குரலோசை, நிந்தி நிந்தி நிந்நின்னி, தத்தததத்த இந்த ஒலிகளின் இனிமைபோல, இரு குரலிசை, மாறிமாறி, விட்டுவிட்டுப் பிறகு இணைந்து, இழைந்து ஒரே இனிமையாகிவிட்ட நிலை; அழைத்துக்கொண்டே போய் விட்டது தாய்க் குருவி, குஞ்சினை! பொந்துக்குள்ளே, தாயும் சேயும்! கதகதப்பும்! மகிழ்ச்சி மிக்க கிறீச்சொலி! எனக்கே, கோபம் மாறி, மகிழ்ச்சி பிறந்தது! இயற்கையாக இருக்கவேண்டிய நிலை இது!! - என்று எண்ணினேன் - இந்த நிலை கெட்டல்லவா போயிருக்கும், அந்தக் குருவிக் குஞ்சினை நாம் கூண்டிலிட்டு வளர்த்தால் என்றுகூடத் தோன்றிற்று.

தம்பி! பல ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி; இப்போது, ஏன் என் நினைவிற்கு வந்தது? நினைவு எப்படி யெப்படிச் சிதையும், கலையும், மீண்டும் அதனைத் தேடிப்பெற என்னென்ன செயல் வேண்டும் என்று எண்ணியபோது, பொந்திலிருந்து தவறிப்போன குஞ்சுதனைத் தேடித் தாய்ப் பறவை தத்தளித்த நிகழ்ச்சி நினைவிற்கு வந்தது.

நமது நினைவு, சிதறிப்போய், மீண்டும் அதனைத் தேடிப் பெறுவதுகூட, இதுபோலத்தான் தத்தளிப்பு! தவிப்பு! அழைப்பு! கண்டுபிடிப்பு! களிப்பு! திரும்பப் பெறுவது! முழு மகிழ்ச்சி!!

"அப்பாடா! இப்போதுதான் நினைவிற்கு வந்தது!!'' - என்று வெற்றிக் களிப்புப் பொங்கிடும் நிலையில் பேசுகிறோ மல்லவா சில வேளைகளில் - இதுதான் தம்பி! தாய்க்குருவியும் அதன் குஞ்சும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டன!! - என்று பொருள். பேழைக்குள் போட்டு வைத்திருக்கும் பல பொருள்களுக் கிடையிலே, சிக்கிக்கொள்ளும் ஏதேனும் ஒரு பொருளைத் தேடும்போது, எப்படி இருக்கிறது நிலைமை! அதேதான்!! பல விஷயங்கள் நினைவிலே இருக்கும், - ஏதோ ஒன்று மட்டும் நினைவிலிருக்காது - அடே அப்பா! - அதை மீண்டும் நினைவிலே கொண்டுவர, என்ன பாடுபடவேண்டியிருக்கும் தெரியுமா? ஆனால், தம்பி! சிதறியதும் கிடைத்துவிட்டால், நினைவிலிருந்து விலகியது மீண்டும் நினைவிற்கு வந்துவிட்டால், எத்துணை களிப்பு என்கிறாய்!! ஏதேனும் ஒரு அலுவலிலே, பொருளிலே, எண்ணத்திலே, நாம் நம்மை மிகுதியும் ஈடுபடுத்திக்கொண்டு விடுவோமானால், அதிலேயே, நமது நினைவு முழுவதும் இணைந்துபோய் விடுமானால், வேறு பல விஷயங்களிலே நமக்கு நினைவுக் குறைவு மிகுதியாக ஏற்பட்டுவிடும்.

ஏதோ நினைப்பிலே, இதனை மறந்துவிட்டேன்! - என்று பலர் பேசக் கேட்டிருக்கிறாய் அல்லவா?

நீண்ட நாட்களாகத் தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற கணவன், வீடு திரும்பும் சேதி கேட்டால், துணைவிக்கு அந்த ஒரு நினைப்பே மிகுதியாகிவிடும் - வேறு எதுவும் நினைவிலே இராது என்பர் புலவர். கழுத்தணியைத் தலையிலிட்டும், சூட வேண்டியதைச் சொருகியும், சொருகவேண்டியதைச் சூடியும், அஞ்சனத்தைப் புருவத்துக்கிட மறந்தும் போவராம் மாதர்.

காதலால் கட்டுண்டு கிடப்போர் அப்படித்தான் - நினைவு தடுமாறியிருப்பர் என்று எண்ணிவிடாதே, தம்பி! எந்த ஒரு உணர்ச்சி மேலிட்டு, நாம் அதன் வயப்பட்டுப் போய்விட்டாலும், இதே நிலைதான்!

பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவர் - உடற்கூறு பற்றிய நுண்ணறிவு மிக்கவர், ஒருநாள் மாணவர்கட்கு, தவளையின் உடற்கூறு எவ்விதம் உளது என்பதுபற்றிய பாடம் நடத்த எண்ணிப் பெரிய தவளையொன்றினைக் காகிதத்தில் சுற்றித் தம் சட்டைப்பையில் திணித்துக்கொண்டார். உணவு உட்கொள்ளக் கூட நேரமில்லை. போகிற வழியிலேயே தின்றுகொள்ளலாம் என்று ரொட்டித்துண்டு ஒன்றினை வேறோர் காகிதத்தில் வைத்து எடுத்துக்கொண்டார். வழி நடந்தார்.

தவளையின் உடலைக் கீறிக்காட்டி, அமைப்பு உள்ள விதம் பற்றி விளக்கம் அளித்து, மாணவர்க்கு நல்லறிவு புகட்டவேண்டு மென்பது பற்றிய எண்ணமே மேலிட்டிருந்தது; அந்த எண்ணம் அவரை ஆட்கொண்டுவிட்டது.

வகுப்பறை சென்றார்; மாணவர்களை அழைத்து, "மாணவர்களே! இன்று, தவளையின் உடற்கூறு பற்றிய பாடம்; தவளையின் உடலமைப்பு எப்படி இருக்கிறது என்பதைக் காட்ட, இதோ ஒரு தவளை கொண்டுவந்திருக்கிறேன்'' என்று கூறியபடி, பொட்டலத்தை எடுத்து மேஜைமீதுவைத்துப் பிரித்தார்; ரொட்டித்துண்டு இருந்தது; திகைத்தார்; சட்டையின் மற்றப் பையைத் துழாவினார் - ஏதும் இல்லை!!

"நன்றாக நினைவிருக்கிறதே! தவளையைக் காகிதத்தில் சுற்றிச் சட்டைப்பையிலே, வைத்த நினைவு தெளிவாக இருக்கிறதே! காணோமே!'' என்று கூறித் திகைக்கிறார்.

தவளையைக் காகிதத்திலே சுற்றிச் சட்டைப் பையிலே வைத்த நினைவு பழுதுபடவில்லை; நினைவு, சரியாகவே இருக்கிறது.

அந்த நினைவுமட்டுமே அவரிடம்!

தவளையை இப்படி இப்படிக் கீறிக் காட்ட வேண்டும்; அதன் உடலமைப்புப்பற்றி இன்னின்ன விளக்கம் அளிக்க வேண்டும் என்ற எண்ணமே, அவர் மனதில்; வேறு நினைவு இல்லை! என்ன செய்கிறோம் என்ற நினைவுகூட இல்லை!! அவ்வளவு இரண்டரக் கலந்துவிட்டார், தவளை பற்றிய பாடத்தை மாணவர்க்குக் கூறவேண்டும் என்ற நினைப்பில். அதனால் வருகிற வழியில், என்ன செய்கிறோம் என்ற நினைவு கொள்ளாமல், பொட்டலத்தைப் பிரித்து, ரொட்டித்துண்டு என்று எண்ணிக்கொண்டு பாவம் தவளையையே மென்று தின்று விட்டார்!

தம்பி! நல்லவர்! எனினும் இப்பேராசிரியர், ஏதோ ஒரு நினைப்புக்கே தம்மை முழுக்க முழுக்க ஒப்படைத்துவிட்டுக் கவனிக்கப்படவேண்டிய வேறு விஷயங்களைப் பற்றிய நினைப்பே இல்லாது போனார்; இந்த விபரீதம் ஏற்பட்டது.

ஒரு பொருளில் அல்லது எண்ணத்திலே, நம்மைப் பிணைத்துக்கொள்வதிலேகூட ஏற்பட்டுவிடக்கூடிய, கெடுதல் குறித்து விளக்க, தவளை தின்ற பேராசிரியர் கதையைக் கூறுவர்.

நினைவிலே நிற்பது, எத்துணை வலிவுமிக்க ஆதிக்கம் செலுத்துகிறது என்ற பாடமும் இதிலிருந்து பெற இயலும்!

ஒன்றில் மனம் ஈடுபட்டுவிட்டால், மற்றதெல்லாம் நினைவிலே தங்காது என்பதற்கும், இஃது ஓர் எடுத்துக்காட்டு.

ஒன்றுகூட நினைவிலிருந்து தவறிவிடவே செய்யாது! ஒவ்வொரு விஷயமும், தகவலும், விவரமும், இவருக்கு நினைவிலிருக்கும் என்று சிலர் பற்றிச் சொல்வார்கள். அவ்வளவு நினைவுத் திறமைகொண்டவர் என்பர்.

சிலர், உள்ளபடி, நினைவுத்திறமை மிகுதியும் உடையவர் களாகவும், அந்தத் திறமையை வளமாக வைத்திருப்போராகவும் இருக்கிறார்கள்.

அந்தத் திறமையினைச் செம்மையாக வைத்துக்கொள்வதை ஒரு கலையாகவே கொள்கின்றனர்.

தம்பி! வேறு சிலர் உளர்; எதையும் மறவாமல் நினைவிலே பதியவைத்துக்கொள்ளும் திறமை தம்மிடம் இருப்பதனால், தாம் மற்ற எல்லாத் துறைகளிலுமே திறமைமிக்கவர் என்று கூறுபவர்; மற்றவர்களையும் அதனை ஏற்றுக்கொள்ளச் செய்பவர்.

எதனையும் நினைவிலே கொள்பவர்; நினைவு தவறாதவர்; என்ற அந்த ஒரு திறமையினைக்கொண்டே மற்றவர்களை மிரட்ட முனைபவர்களும் உண்டு.

ஜெர்மன் நாட்டு அதிபராகி உலகை உருட்டி மிரட்டிய ஹிட்லர் அப்படிப்பட்டவரென ஒரு நூலாசிரியர் கூறுகிறார்.

எல்லாம் தமக்குத் தெரியும்!

எல்லாம் தமக்கு மட்டுமே தெரியும்!!

என்று கூறுபவர் ஹிட்லர்; பிறரும் அதனை நம்பும்படி அவருடைய பல நடவடிக்கைகள் இருக்குமாம்,

ஹிட்லரைக் காட்டிலும் போர்த்திறன் மிக்கவர்கள், போர் முறை கற்றறிந்தவர்கள், போர்ப் பயிற்சி பெற்றவர்கள், பலர் இருந்தனர், அவரைச் சூழ்ந்தபடி.

அவர்களே வியந்து பாராட்டும்படி, அச்சப்படும்படி, அவர்களின் துறைகள் பற்றிய நுணுக்கங்களை, அவர்கள் கேட்டு வெட்கும்படி, ஹிட்லர், மளமளவென்று பேசுவார்; கேள்விகள் கேட்பார்; திருத்தங்கள் தருவார், திகைக்கவைப்பார்!! எடுத்துக் காட்டுக்கு இது.

இன்ன நாட்டின் பேரில் இந்த மாதம் இத்தனையாம் நாள் படையெடுத்துச் செல்ல வேண்டும் - டாங்கிப் படைகளை அனுப்ப வேண்டும்.

என்று ஹிட்லர் உத்தரவு பிறப்பிப்பார். டாங்குப்படைப் பிரிவின் தலைவன், அந்த நேரம் படை எடுப்புக்கு ஏற்றது அல்ல என்ற எண்ணம் கொண்டவர்.

அவர் போர் பல நடாத்தியவர்! களம் பல கண்டவர்!!

ஹிட்லரைக் கண்டு தமது கருத்தை அறிவிக்க வருகிறார்.

ஹிட்லரிடம் முறையிடுகிறார்; படை எடுப்புக்கு இது ஏற்ற நேரம் அல்ல என்பதற்கான காரணங்களைக் கூற, மனதிலே அவைகளைத் தொகுத்துத் தம்மைத் தயாரித்துக்கொள்கிறார்.

ஹிட்லர், அந்தப் படைப்பிரிவின் தலைவனிடம், முடுக்காகப் பேச்சைத் துவக்குகிறான்.

டாங்கிப் படைப் பிரிவின் தலைவன், நீ?

ஆம்! வழிபாட்டுக்குரிய தலைவரே!

இப்போது உன் வசம் உள்ள டாங்கிகள் எத்தனை?

ஆயிரத்து நானூறு!

பழுதானவை?

சில டாங்கிகள். . . . .

அதாவது, உனக்கு அந்தக் கணக்குத் தெரியாது?

கவனிக்கவில்லை, குறிப்பு எடுத்துக்கொண்டு வர வில்லை. . . . .

சரி! பெட்ரோல், எவ்வளவு இருக்கிறது?

போதுமான அளவு. . . . .

போதுமான அளவு என்றால்? எதற்குப் போதுமான அளவு! உம்! பெட்ரோல், எவ்வளவு இருக்கிறது என்பது, உனக்குத் திட்டவட்டமாகத் தெரியாது. . . . .

மன்னிக்க வேண்டுகிறேன். . . . .

டாங்கிப் படையினரில், இப்போது நோய்வாய்ப்பட் டிருப்போர் எத்தனை பேர் என்று தெரியுமா? மருத்துவப் பிரிவினருக்குத்தான், அந்தத் தகவல் தெரியும். . . .

உனக்குத் தெரியாது?

ஆம்! அதிபரே! உன்னிடம் உள்ள டாங்கியின் உருளை, எத்தனை டன்? எடை? தெரியாது!

தெரியாது!!

டாங்கி ஓட்டுபவர்களின் சட்டையில், எத்தனை பொத்தான்கள்?

சட்டை என்ன நிறம்?

பழுப்பு நிறமாக. . . .

முன்பு! இப்போது, நிறம் மாற்றப்பட்டது. . . உத்தரவு பிறந்திருக்கிறது. உனக்குத் தெரியவில்லை. சட்டையிலே உள்ள பொத்தான்கள் 13. உனக்குத் தெரியவில்லை. டாங்கியின் உருளை, மூன்று டன்! உனக்குத் தெரியாது! நோய்வாய்ப்பட்டுள்ள டாங்கி ஓட்டுபவர்கள் 77! உனக்குத் தெரியாது. பெட்ரோல் மூன்று இலட்சம் காலன் இருக்கிறது! உனக்குத் தெரியாது! பழுதாகியுள்ள டாங்கிகள் பதினாறு. உனக்குத் தெரியாது! நீ, டாங்கிப் படைப் பிரிவின் தலைவன் - உனக்கு, நீ தொடர்பு கொண்டுள்ள துறையிலே தெரிந்திருக்கவேண்டிய இவ்வளவு தகவல்கள் தெரியவில்லை! அப்படிப்பட்ட நீ, உனக்குத் தெரியாததை எல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டுள்ள எனக்குப் புத்தி கூற வருகிறாய், துணிவாக! படை எடுப்புக்கு இது ஏற்ற சமயம் அல்ல என்று!! உன் மேற்பார்வையிலே இருப்பது பற்றியே உனக்குத் தெரியவில்லை! நான் கூறவேண்டி இருக்கிறது! நீ, போர் முறைபற்றி எனக்குப் புத்திமதி கூறத் துணிவு கொண்டுவிட்டாய். . . .

மன்னிக்க வேண்டும் முற்று முணர்ந்த மூலவனே! எங்கும் இருப்பதும், நடப்பதும், இருந்த இடமிருந்தே, அறிந்துகொள்ளும் ஆற்றலரசே!

என் அகந்தையை அழித்தீர்! அறிவு புகட்டினீர்! வாழ்க அதிபர்! வாழ்க அரசு! வருகிறேன் தலைவா!

சென்று வா! எதிரியைக் கொன்று குவித்துவிட்டு வா!!

தம்பி! டாங்கிப்படைப் பிரிவுத் தலைவனே, கேட்டு மலைத்துப் போகும்படியான "தகவல்களை' ஹிட்லர், அறிந்திருந்தது எப்படி தெரியுமா?

டாங்கிப் படைப் பிரிவுத் தலைவன் தன்னைக் காண வருகிறான் என்று தெரிந்ததும், தன்னிடம் உள்ள தகவல் சேகரிப்புத் துறையினனைக்கொண்டு, ஒரு படைத்தலைவன், சாதாரணமாகக் கவனிக்கத்தக்கவை அல்ல என்று ஒதுக்கி விட்டிருக்கக்கூடிய விவரங்களைக் கொண்டுவரச் செய்து, அவைகளைக் கொட்டிக் காட்டி, படைத்தலைவனைத் திணற அடிப்பது, ஹிட்லர் முறை!!

இந்த விவரங்கள், படைத்தலைவனுடைய நினைவிலே இருக்கத் தேவைகூட இல்லை! இருக்காது. இந்த விவரங்களைப் பற்றிய நினைப்பிலே அவர் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு விட்டால், மிக முக்கியமான, முடிவெடுக்கத்தக்க நுண்ணறிவு பெற நேரம்கூடக் கிடைக்காது. எனவேதான், பழுதான டாங்குகளின் எண்ணிக்கை, சட்டையில் உள்ள பொத்தான்களின் எண்ணிக்கை, உள்ள பெட்ரோலின் அளவு போன்றவைகள் அவன் நினைவில் இல்லை. ஹிட்லர், இவைகளைப்பற்றிக் கேட்கக்கூடும் என்று அவன் எதிர்பார்த்திருக்கக்கூடமாட்டான். வேறு முக்கியமான பிரச்சினைகள் குறித்துப் பேசுவார்; எதிரி நாட்டிலே உள்ள ஏற்பாடுகளின் தன்மைபற்றி எடுத்துரைக்கலாம்; போர் செய்திடப் பொன்னான வாய்ப்பு, மூன்று திங்களிலே ஏற்படும் என்பதற்கான காரணங்களை விளக்கலாம் என்று அவன் சென்றான். ஹிட்லரோ, சட்டையிலுள்ள பொத்தான்கள் எத்தனை என்று கேட்டுவிட்டார்; தெரியவில்லை கூற; திணறுகிறான்; ஆனால் உலகை ஒரு குடைகீழ் ஆளும் வல்லமை மிக்கோன், தந்தையர் நாட்டுக்குப் புதியநிலை ஏற்படுத்திக் கொடுத்த தலைவன், இந்தப் பொத்தான் கணக்கினைக்கூட அறிந்துவைத்திருக்கிறானே! நாம் இதனை அலட்சியப் படுத்தினோம் - நம் அதிபனோ, இதனையும் அறிந்து வைத்திருக்கிறான்! இல்லாமலா, அதிபர் என்ற நிலைக்கு, ஆண்டவன் இவரை உயர்த்தியிருக்கிறார். இத்துணை அறிவாற்றல் மிக்கவர், படை எடுப்புக்கு நாள் குறித்தால், எல்லாம் அறிந்துதான் குறித்திருப்பார்! நாம், யார், அதைக் குறை கூற; ஐயப்பாடு எழுப்ப! அதிபர்! அறிவார் அனைத்தும்!! - என்றுதான், படைப் பிரிவுத் தலைவனே எண்ணுவான், பேசுவான், பாராட்டுதலுடன்.

ஆனால், உண்மையில் ஹிட்லர், போர்த்துறைப் பிரச்சினை களிலே வல்லவன் அல்ல என்பது, அவன் ஒரே நேரத்தில், பல முனைகளில் களங்களை உண்டாக்கிக்கொண்டு கெட்டொழிந்த தால் விளக்கமாகிறது.

அந்த முடிவு எழுகிற வரையில், ஹிட்லர் கொட்டிக் காட்டிய, "தகவல்கள்' - எதுவும் தன் நினைவிலே பதிந்து இருக்கும் என்று எடுத்துக்காட்டியது ஆகியவற்றைப் பார்த்து உடனிருந்தோர் மட்டுமா, உலகினரே மலைத்துக் கிடந்தனர்.

தம்பி! இதுபோலவே, மிகச்சாதாரணமான, அடிப்படை யல்லாத தகவல்களைச் சேகரித்து நினைவிலே வைத்துக் கொண்டு, உடனிருப்போரைத் திணற அடிக்கும் கருத்துக் கழைக்கூத்தர் நிரம்ப இருக்கிறார்கள்; பார்த்திருப்பாய்.

அவர்கள் தம்மை, ஆதாரமளிக்கும் ஆற்றல் மிக்கோர் என்றும், புள்ளிவிவரப் புலிகளென்றும், பிறர் எண்ணிக் கொள்ளும்படி நடந்துகொள்வர்.

உழவர்களுக்குப் பொறுக்கு விதைகளின் அருமை பற்றிய தகவல் அளிப்பர்; ஏர் பூட்டி ஓட்டி அறியார்! வணிகர்களுக்கு, ஜாவா சர்க்கரையால் கிடைக்கக்கூடிய இலாபம் பற்றி எடுத்துரைப்பார்கள்; ஒரு தொழிலிலும் ஈடுபட்டு இலாபம் பெற்றவர்களாக இருக்கவே மாட்டார்கள்.

இசைவாணர்களின் இல்லத்தின் அளவிலிருந்து அவர்கள் பூசிக்கொள்ளும் கலவை விலை வரையில் தகவல் தருவார்கள்; பல்லவிக்கும் அனுபல்லவிக்கும் உள்ள தொடர்புகூடத் தெரிந்திருக்காது. மூன்றடுக்கு மாடிவீடு எவ்வளவு சிக்கனமாகக் கட்டி முடிக்க முடியும் என்ற திட்டம் தருவார்கள்; தாம் இருக்கும் வீட்டிலே கூரையில் ஒழுக்கல் இருக்கும்.

தம்பி! இப்படிப்பட்டவர்கள் நிரம்ப இருக்கிறார்கள்!

இவர்கள், பல தகவல்களை நினைவிலே வைத்துக் கொள்வர்; கேட்பவர்களை மலைக்கச் செய்ய; வேறு கவைக்குதவும் விதமாக அல்ல.

நான் குறிப்பிட்ட "நினைவு', இவை போன்றது அல்ல.

ஆய்ந்தறிந்துகொண்ட நினைவுகள்!

அந்த நினைவுகளேகூடச் சில வேளைகளிலே, கலைந்தும் குலைந்தும் போகின்றன; சிதைந்தும் சிதறியும் போய்விடுகின்றன என்றால், "கனவு', கண்டது கண்டபடியேவா, நினைவிற்கு வரும்? வாராது! ஆனால், கனவுகள் கண்டனரே, பலர்!! தாம் கண்ட கனவுகளைப் பிறருக்கும் எடுத்துக் கூறியுள்ளனரே! அம்மட்டோ! கனவுகள் நனவாகக் கண்டும் உள்ளனரே? அஃது எங்ஙனம் எனின், அவர்கள் கண்ட கனவுகள், பட்டப் பகலில்! கண்விழித்த நிலையில்!! அவர்களின் கனவு என்பது அவர்கள், தமது எண்ணத்தை வண்ணக்குழம்பாக்கி, அதுகொண்டு தீட்டிய ஓவியம் - தமது நெஞ்சத் திரையிலே தீட்டிவைத்த ஓவியம்! அதனைக் காணவேண்டின் அவர்தம் நெஞ்சத்தை அறிதல் வேண்டும்.

ஊமை கண்ட கனவு ஊருக்குத் தெரியாது!

உலுத்தன் காணும் கனவை, ஊருக்கு உரைக்கமாட்டான். உத்தமரின் கனவுகள், நனவாகிவிடுகின்றன; உருப்படாதாரின் நனவுகள் கனவாகிப் போகின்றன.

எல்லாம் வெறும் கனவு! என்று ஏளனம் கிளப்பக் கேட்டிருக்கிறோம்.

கனவில்தானே! எல்லாம் காணலாம்!! என்ற கேலிப் பேச்சுக் கேட்டுள்ளோம்.

கனவு காண்கிறான்! என்று ஆதிக்கக் குரலிற் பேசக் கேட்டிருக்கிறோம்.

ஆனால், தம்பி! கனவுகள் நனவாகியுள்ளன!

விடுதலை வரலாறுகள், விஞ்ஞான வெற்றிகள், கனவுகள் நனவானதன், விளைவுகள் - அறியோமா!!

ஆற்றோரம்! அந்தி சாயும் நேரம்! ஊர்ந்து செல்லும் நிலையிலுள்ளான், உடலெங்கும் புண்பட்டான்!! போர் வீரன் - வாளிழந்தான், உடல் வலிவிழந்தான், உயிர் இழக்குமுன், வெற்றி பெற்றாகவேண்டும் என்ற எண்ணத்தான். இக்கரையில் படுத்தபடி, எதிர்ப்புறம் நெடுந்தொலைவில், தெரியும் எதிரிகளின் நடமாட்டத்தைக் காண்கிறான்; கோபம் கொப்பளிக்கிறது! கண்களிலே ஓர் ஒளி - வெறிகொண்டவனோ என்று எண்ணுவர்,அதனைக் காண்போர்! கண் எதிரே மாற்றார் கட்கமேந்த இயலவில்லை!! நெஞ்சம் நெருப்புடை உலையாகிறது! ஏதேதோ எண்ணுகின்றான்!! தம்பி! முகத்திலே ஓர் மகிழ்ச்சிக் குறி தெரிகிறது! ஏன்? எதையோ காண்கிறான் - எதிர்காலத்தில் ஒரு சிறு பகுதியை!! கனவு காண்கிறான், தம்பி! கனவு. கேட்போமா! அவனை, வீரனே! நீ காணும் கனவு என்ன என்று. பாவம், களைப்பு மேலிடுகிறது அவனுக்கு; பிறகு கேட்போம்!

அண்ணன்,

 

10-9-61