அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


பட்டப் பகலில். . . ! ( 3 )

கனவின் தன்மை -
மேனாட்டார் கனவுகள்

தம்பி!

களத்தில் கடும் போரிட்டுக் களைத்துப்போன வீரன், ஆற்றோரத்தில், அந்திசாயும் நேரத்தில், படுத்தபடி, எதிர்ப்புறம் நடமாடிக்கொண்டிருந்த எதிரிநாட்டுப் படையினரைக் கண்டு கலங்கினான், மனம் பாடுபட்டது; ஏதேதோ எண்ணிக் கொண்டான்; விழித்த நிலையிலேயே கனவு காண்கிறான் - என்று குறிப்பிட்டிருந்தேன். அவன் எண்ணம் என்ன என்று அறிய ஆவலாக இருந்திருப்பாய் என்பது தெரியும்; தெரிந்து? என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? சென்ற கிழமை ஓய்வே இல்லை! தரப்படவில்லை!! இப்போது மட்டும் என்னவாம்! உனக்கு மடல் தீட்டிக்கொண்டிருக்கிறேன் - துவக்குகிறேன் - கீழே சித்தாத்தூர், தூசி, உக்கல், வெங்களத்தூர் என்று ஊர்ப் பெயர்களையும், அங்கு செல்லவேண்டிய நேரம் பற்றியும், வடாற்காடு வட்டத் தோழர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். திருமண வீட்டிலே சாப்பாட்டுக்கு எப்போது அழைப்பார்கள் - சாப்பிடாமல் போய்விட்டால் சங்கடப்படுவார்கள் - நேரமோ அதிகமாகிறது - எப்போது அழைப்பார்களோ - என்று எண்ணியபடி, எதிர்வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தபடி, கலியாண வீட்டையே பார்த்தபடி இருப்பது உண்டல்லவா? அடிகள், அப்படி உட்கார்ந்துகொண்டிருக்கிறார், எதிர்த் திண்ணையில். எனக்கு உள்ள கஷ்டம் தெரியும்; எனவே வற்புறுத்த மனம் இடம் தரவில்லை; ஆனால் தம்பிக்குக் கடிதம் இல்லை என்றால், தவிப்பு ஏற்படுகிறது, அதனையும் கவனித்தாக வேண்டும், அந்த நிலையில் அடிகள்!

ஆனால், இந்த நிலை இன்னல் நிரம்பியதாகுமா? கன்னலைத் தின்னும்போதுகூடத்தான், இரத்தம் கசியும்படியான குத்தல் ஏற்பட்டுவிடுகிறது.

ஆற்றோரம் இருக்கிறானே, ஆற்றல் மறவன், அவன் நிலை இன்னல் நிரம்பியது.

தாயகம் தாக்கப்படுகிறது; துடித்து எழுகிறான்! போரிடு கிறான்; எதிரியிடம் படைபலம் மிகுதி; பலர் மடிந்தனர்; சிலர் சிதறியோடினர்; சிலர் இவன்போல், பதுங்கிக்கொண்டுள்ளனர், நல்ல வாய்ப்பை எதிர்பார்த்தபடி.

என்னென்ன எண்ணம் தோன்றும் அந்நிலையில் வீரனுக்கு?

"நமக்கேன் இந்த வீண் வேலை! எவன் இந்த நாட்டை ஆண்டால் நமக்கு என்ன? அவனவன் பிழைப்பு அவனவனுடைய உழைப்பைப் பொறுத்து இருக்கிறது! கொடி மரத்திலே, எந்தக் கொடி பறந்தால்தான் நமக்கென்ன? கொலு மண்டபத்திலே எவன் கோலாகலமாகக் கொலுவிருந்தால்தான் நமக்கென்ன? நாமுண்டு, நமது உழைப்பு உண்டு! நாம் பணிந்துவிடுவதுதான் நல்லது. காட்டு மிருகம்போல், பதுங்கிப் பதுங்கி, பயந்து பயந்து, இருப்பதைவிட, தோல்வியை ஒப்புக்கொண்டு, வென்றவன் நாடாளட்டும் என்று இருந்துவிடவேண்டியதுதான்!'' என்றா எண்ணுவான். அவ்விதம் எண்ணுபவன், வீரனா? வீரமரபினன் ஆவானா? ஒருக்காலும் இல்லை.

உறங்கவில்லை! விழித்தபடி கனவு காண்கின்றான். ஒரு கனவு அல்ல; பல; மாறி மாறி!!

ஒரு அடவி! அடர்ந்த காடு. எதிரிப்படைப் பிரிவின் தலைவன் முகம் ஒருபுறம்! அதற்குச் சற்றுத் தொலைவிலேயே படைவீரர் தங்க, இருக்க, அமைக்கப்பட்டுள்ள பாசறைகள் - சிறு சிறு அளவில்;

தலைவன் முகாமுக்குள் இருந்து சிரிப்பொலி! இசையொலி! கையொலி! வளையொலி!

இவன் முகம் சிவக்கிறது! வெற்றி பெற்றுவிட்டோம் என்ற மமதையில் மதுவும் மங்கையும் தேடி, மகிழ்ச்சி வெறி கொள்கிறான், இந்த மடையன்!! ஆடிப்பாடிப் பிழைக்கும் எவளையோ இழுத்துவந்து, பொழுது போக்குகிறான்! நம் நாட்டில்!! நமது நாட்டுப் பெண்ணொருத்தி! நமது நாட்டை வீழ்த்தியவனுக்கு. . . செ! எப்படித் தாங்கிக்கொள்வது?

"ஆடு என்பான்; அவள் ஆடுவாள்! மறுக்கவா முடியும்! கத்தி கடாரி கரம்கொண்டிருந்த என் போன்றார்களே காடுமேடு பதுங்கி இருக்கும் நிலை! அவள் என்ன செய்வாள், பாவம்! ஆடுவாள்!! இவன் பாடுவான்!''

"ஆடாதே! நிறுத்து! நமது நாட்டை நாசமாக்கியவன் முன்பு, ஏ! பெண்ணே! ஆடிடுவது தகுமா!! நாட்டுப் பற்றற்றவளே! நமது கோட்டையை அழித்தான், கொலு மண்டபத்தைக் குலைத்தான்! மன்னனைச் சிறையிட்டான்! வீரர்களைக் கொன்று குவித்தான்! அடி, விவரம் கெட்டவளே! அவன் அமர்ந்திருக்கிறானே, வேலைப்பாடு மிகுந்த பட்டு விரிப்பு, அது நம்முடைய அரசியாரின் பொற்கரங்களால் ஆக்கப்பட்டது!! அதன்மீது, அவன் மாற்றான்! மதிகெட்ட மாதே! மதுக்குடம், அதன்மீது அரசியாரின் அருமைக் குமாரர் இருவரும், ஒருவரோடு ஒருவர் மற்போர் நடத்தி, இந்தப் பட்டு விரிப்புமீதுதான், உருளுவார்கள் - அரசியார், கைகொட்டிச் சிரிப்பார்கள்! அந்தப் பட்டு விரிப்புமீது எங்கிருந்தோ வந்தவன், இறுமாப்புடன் இருக்கிறான். இளித்தபடி, அவன் எதிரே நின்று, ஆடுகிறாய்! ஆடாதே! நாட்டின் மானம் போக்காதே!

ஆடற்கலை பயின்றாய், இந்த அக்ரமனுக்காக அல்ல!! ஆடாதே! ஓடு! களம் நோக்கிக் கடுகி ஓடு! நமக்காக, நமது நாடு காக்க, மரபு காத்திட, மானம் காத்திட, போரிட்டு மடிந்தனர் உடன்பிறந்த உத்தமர்கள்! பிடிசாம்பலாகிப் போயினர்!! அந்தச் சாம்பற் குவியலின்மீது நின்று ஆடு; நாடு அழிந்ததுபற்றி அழுதுகொண்டே ஆடு! எதிரியின் தலைகளைக் கொய்து, கிழே போட்டுக் காலால் துவைப்பதுபோல ஆடு! கால்கள் ஓயும்வரை ஆடு! கனைத்துக் கீழே விழும் வரையில் ஆடு! ஆடிக்கொண்டே கிட! ஆவிபோகும் வரையில் ஆடியபடி கிட! அங்கு! இடுகாட்டில்! கழுகுகளும் நரிகளும் வட்டமிடும் இடத்தில்! உடலைக் கொத்தும் கழுகு; இவன் நமது உரிமையைக் கொத்தி அழித்துவிட்டவன்! உதிரம் குடிக்கும் நரி; இவன், மது குடிக்கிறான்; நமது நாட்டு மானத்தைக் குடித்து விட்டோம் என்ற மண்டைக்கனம்கொண்ட நிலையில்! இவன்முன் ஆடாதே! ஆடாதே!''

ஆமாம்! ஆடமாட்டேன்! வெட்டிச் சாய்க்கட்டும். துண்டான கால்கள் துடிக்கட்டும், கரங்கள் துடிக்கட்டும், அந்த நாட்டியத்தைக் காணட்டும்! உயிரோடு இருக்கும் நான், ஆடமாட்டேன்!! இந்த நாடு, என் நாடு! இந்த மண், இந்த நாட்டு மக்களுடைய இரத்தம், வியர்வை, கண்ணீர் பட்டுப்பட்டு மணம் பெற்றுவிட்டது! புனிதமாகிவிட்டது! இதிலே, குழந்தையாகத் தவழ்ந்தேன்; குமரியாக நடந்தேன்; இன்று கூலிக்காரியாக ஆட முனைந்தேன்! நல்ல நேரத்திலே வந்தீர்கள், எனைத் தடுக்க. நான் ஆடப்போவதில்லை! நாட்டைப் பிடித்துவிட்டோம் என்று இறுமாந்து கிடக்கிறான் இவன். இடிபாடுகளையும், பிணங் களையும்தான் காணவேண்டும்; மாளிகைகளையும், அங்கு அடிமை நிலையில் உலவும் ஆடவரையும் பெண்டிரையும் அல்ல. நம்முடையதாக இருக்கும் வரையில்தான் நாடு! மாற்றானிடம் சிக்கினால், நாடாகுமா? காடு! சுடுகாடு!!

அங்கம், தங்கம்! - என்றனர்; அழைத்து வா, என்றேன்! இழுத்துவந்து நிறுத்தினார்கள்! என் மடியில் இருக்கத் தக்கவள் தான் என்று எண்ணினேன்! அடி, ஆடிப்பிழைப்பவளே! வலுவிழந்ததால், நாடிழந்தான்! திறமைமிகுதியால் வெற்றி வீரனானேன்! அவன் ஏதோ உளறுகிறான்; அவன் உரைகேட்டு, ஆடுவதை நிறுத்திவிட்டாயே! ஆகுமா இந்த அகந்தை!! மாற்றானின் மண்டையைப் பிளந்த கரங்கள் இவை! மலரணையில், உன் கால்களை வருடத் தயாராக உள்ளன!! பொறிபறக்கும் கண்ணினனாய்ப் போர்க்களத்திலே சுற்றினேன்; வெற்றி பெற்றேன்; காலமெல்லாமா, கரியுடன் கரி போரிடுவதை, கால்கை இழந்தவர்கள் துடிதுடிப்பதைக் கண்டபடி இருப்பது; கண்களுக்குக் கனிவு வேண்டாமா! உன்னைக் கண்டேன்! பாலைவனம் நடந்துசென்று, நெடுந் தொலைவில், பனி நீரோடையைக் கண்டவன்போலானேன்! அள்ளிப் பருகப் போகும்போதே அது கானல் நீராகிடவா வேண்டும்!! அவன் அனுபவமற்றவன். பிழைக்கத்தெரியாத அப்பாவி நாடகம்! பற்றாம்! மரபாம்! மாண்பாம்! பொருளற்ற வார்த்தைகள்! இவன் நாட்டின் இலட்சணம் தெரியாதா, எனக்கு எங்கு பார்த்தாலும் பொட்டல் காடுகள்! எவரும், கடினமாக உழைத்தாக வேண்டும். பொன்விளையும் பூமியோ இது!! அது, எங்கள் நாடு! பொன்! முத்து! பவழம்! வீரம்! வெற்றி! செல்வபுரி!! அங்கு, கொடி பிடிக்கும் வேலையில் அமர்ந்தாலும் நிம்மதியாக வாழலாம். அதை அறியாமல், அவன் உழல்கிறான்; அவன் உளறுவது கேட்டு, நீ ஆடலை நிறுத்திவிட்டாய்!! ஆபத்தைத் தேடிக் கொள்ளாதே! அழிவைக் கூவி அழைக்காதே! உயிரோடு இருக்கிறவரையிலேதான், அழகு, இளமை, துடிப்பு, எல்லாம்! பிறகு பிணம்! காக்கைக்கும் கழுகுக்கும்! மண்ணுக்கும் நரிக்கும்! நான், காக்கை, கழுகு, நரி ஆகியவைகளைவிடக் கேவலமா!! உன் எழிலை நான் ரசிப்பேன் - கழுகும், நரியும், உன் சதையைப் பிய்த்துத் தின்னும். எனக்கு உன் இன்மொழி போதும், சுவைதர! அவை உன் இரத்தத்தை அல்லவா குடிக்கும்!! எனக்கு விருந்தானால், எந்நாளும் உனக்குத் திருநாள்! அவைகளுக்கு விருந்தானால் பிறகு மறுநாள் என்பது உனக்கு ஏது? வாடி. வடிவழகி! வட்டநிலா முகத்தழகி! தொட்டால் போதுமென்று எட்டிநின்று ஏங்கிடும் ஏத்திழையார், எத்தனையோ பேர் களுண்டு. எதனையும் அறியாமல், எனைவிட்டு விலகுகிறாய்!! குறி தவறிப் போகாது களத்திலே மட்டுமல்ல!!

ஐயோ!! அடப்பாவி!! இதயத்திலே பாய்ந்து. . .

வீரன் வீசிய கட்டாரி மார்பிலே பாய்ந்துவிட்டது; படைத் தலைவன் மார்பிலிருந்து, இரத்தம் குபுகுபுவெனக் கிளம்புகிறது! கீழே சாய்கிறான்!

ஆடலழகி ஓடோடி வருகிறாள் வீரனிடம்.

வீரர்கள் இருவரையும் பிரிக்கிறார்கள்.

சிறை! தூக்குத் தண்டனை! பலமான பாதுகாப்பு ஏற்பாடு!!

தூக்குக் கயிற்றினை எடுத்து முத்தமிட முனைகிறான், மாற்றானை வீழ்த்திய பெருமையுடன் மடிவது மாவீரனுக்குப் பெரும் புகழ் என்ற எண்ணத்துடன்.

கண்களை ஒருகணம் மூடுகிறான்; அவளைக் காண; மனக் கண்ணால்!

திறக்கிறான்! அவளே எதிரே நிற்கிறாள்; முத்தமிடத் துடித்திடும் அதரம் தெரிகிறது!! கனவு - பட்டப் பகலில்!

இளைஞன்! எனவே, நாட்டின் நிலை குறித்து உள்ளத்து எழுந்த வேதனையினூடேயும், அவன் ஆடலழகியைக் காண்கிறான். ஆனால், அவளும், ஆதிக்கக்காரனை எதிர்த்து நிற்கும் துணிவுபெற்றவளாகிறாள் - இளைஞனின் நினைப்பு அப்படி!

இளைஞன் அல்லாமல் ஒரு முதியவர், நாட்டுக்கு வந்துற்ற கேடுபற்றி உள்ளத்தில் எழும் வேதனை கொண்ட நிலைபெற்றார் என்றால், அவருடைய நினைப்பு - பட்டப்பகலில் அவர் காணும் "கனவு' ஆடலழகி பற்றியதாக இராது - நாட்டுப் பெருமையுடன் தொடர்புகொண்டதாக இருக்கும்.

தம்பி! நேற்றுமாலை மடல் எழுதிக்கொண்டிருக்கும் போதே குறிப்பிட்டிருந்தேனல்லவா - வடாற்காடு மாவட்டத் தோழர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று. சென்றுவந்து, பிறகுதான் எழுதுகிறேன். சென்ற ஊர்களிலே ஒரு சிற்றூரின் பெயர் ஐம்படையூர் - இப்போது பெயர், மருவி, கொச்சையாகி விட்டிருக்கிறது; உச்சரிப்பில் சிற்றூர்! அங்கு நான் நமது கழகக் கொடியினை ஏற்றிவைக்கும்போது இரவு மணி பதினொன்று. சிற்றூர் என்றேன், தம்பி! சிறப்பான வரலாறு இருக்கிறது அந்தச் சீரூருக்கு.

வடபுலத்து மன்னன் புலிகேசி என்பானை, இங்கிருந்து படை எடுத்துச்சென்று தோற்கடித்து, வாதாபி எனும் நகரை அழித்து, வெற்றிவாகை சூடிய, பல்லவப் பெரும்படைகள் ஐந்து, திரும்புகாலையில், இந்தச் சிற்றூரில் தங்கி இருந்தனவாம்! கூத்தனார் என்பவர், ஐந்து படைகட்கும் இங்கு, தங்கியிருக்க வசதிகளைச் செய்தளித்தாராம்.

நள்ளிரவில், திராவிட நாடு திராவிடருக்கே! என்ற முழக்க மெழுப்பியபடி, அந்தச் சிற்றூரில், நமது கழகத் தோழர்கள் அணிவகுத்துச் சென்றனர். அந்தச் சிற்றூருடன் இணைந்துள்ள வரலாறுபற்றி அறிந்திருந்த எனக்கு, என்ன நினைப்பு எழுந்திருந்திருக்கும் என்பதை விளக்கவா வேண்டும்.

சிறுசிறு குடில்கள்! செல்வம் கொழிக்கும் இடமல்ல! சேறும் சகதியும் நிரம்பிய வழிகள்! ஈச்சை, பனை, முட்செடிகள் புஞ்சைக்காடு, வயல், இவை உள்ள நிலை! அங்கு முன்னே இருவர் வழிகாட்ட, பின் இருந்து பதின்மர் தள்ளிவிட, உளைச் சேற்றில் புதைந்திடாமல் உருண்டுசெல்லும், மோட்டாரில், நாங்கள் செல்கிறோம்.

இந்த வழியிலே, ஐந்துபடைகள், வாகை சூடிய படைகள், வாதாபியை வென்ற படைகள், பவனி வந்தனவாமே! - என்று எண்ணினேன் - என் மனக்கண்முன், கரியும் பரியும், தேரும் திருவும், கட்கமேந்தியோரும் கட்டியம் கூறுவோரும், முரசு கொட்டுவோரும் கவிதை புனைவோரும், கொடிகளும் தோரணங்களும், வடுக்களைக்கொண்ட வீரர்களும் அவர்கள் கொண்டுவந்த பொருட்களும், தெரியவில்லை என்றா எண்ணுகிறாய். மிக நன்றாகத் தெரிந்தன! வெற்றிபெற்ற படைகளை, மக்கள் வரவேற்கும் ஆரவாரம், வாழ்த்தொலி கூடத்தான், செவியிலே வீழ்ந்தது! செல்வதோ, சேறு நிரம்பிய பாதையில், பழையதோர் மோட்டாரில்! நினைப்போ, வெற்றி ஈட்டிய வேற்படையினர் விழாக்கோலம்பூண்டு, அவ்வழி நடந்த வரலாறுமீது!!

இடமும் நேரமும், இயல்பும் தொழிலும், பருவமும், மனப்பக்குவமும், நோக்கமும், எங்ஙனம் உளதோ, அதனைப் பொறுத்து, பாரதியார் குறிப்பிட்ட, பட்டப் பகலில் காணும் கனவு இருக்கிறது.

அந்தக் கனவும், காண்பவரின் களிப்பு, சிறப்பு, வாய்ப்பு, வல்லமை என்பதுபற்றியதாக இல்லாமல், பொதுநலனுக்கு உகந்ததாக, நாட்டு நிலையினை உயர்த்துவதாக, மக்களுக்கு மாண்பளிப்பதாக இருப்பின் மட்டுமே, அது பாராட்டப்பட வேண்டியதாகிறது. அப்படிப்பட்ட "கனவுகள்' உலகு திருத்தப் படத்தக்க உணர்வுகளை, வேகத்தை, திறமையைத் தந்தன.

கனவுதானே! கண்ணாடிக் கடைக்காரன் கனவு தெரியு மல்லவா என்று கூறிக் கெக்கலிசெய்திடத் தோன்றும், நுனிப்புல் மேய்ந்திடும் போக்கினருக்கு. ஆமாம் தம்பி! அப்படி ஒரு கதை உண்டு, அறிந்திருப்பாய். அல்நாஷர் எனும் பெயரினன்; அங்காடியில் கண்ணாடிக்கடை நடத்திவந்தான்; பகற்போதினிலே உறங்கினான்; கனவு கண்டான். கண்ணாடிக் கடையில் இலாபம் குவிகிறது - குன்றுபோல்! பெரிய இடம்! பெரிய கடை! மலைபோல இலாபம்! மாடமாளிகை! எடுபிடி! பட்டுப் பட்டாடை! வாகனாதிகள்! ஊரே, ஏவலுக்குக் காத்து நிற்கிறது! அரசன் அறிகிறான்! அவன் மகளையே தருகிறான்! அரண்மனையில் வாசம்! அந்தப்புறம்! அம்ச தூளிகா மஞ்சம்! கால்வருடுகிறாள் மன்னன் மகள்! காலை உதறுகிறான், அல்நாஷர் கண்ணாடிச் சாமான்கள் உடைபடுகின்றன! கனவு கலைகிறது! பெருநட்டம் ஏற்பட்டது கண்டு, கனவுகண்ட அல்நாஷர் கதறுகிறான். இது கதை! இதைக்காட்டிப் பகற்கனவு வீண் நட்டம் கொடுக்கும் என்ற பாடம் புகட்ட முனைகிறார்கள்.

தம்பி! இந்தக் கனவுக்கும், பாரதியார் குறிப்பிட்டாரென்று சொன்னேனே அந்தக் கனவினுக்கும், அடிப்படையில் உள்ள மாறுபாடு, கவனித்தனையா? அல்நாஷர் கண்ட கனவு அவன் உயர்வுபற்றி!! நான் விளக்கிக்கொண்டு வருகிற வகைக் கனவுகள், காண்போருக்குக் களிப்பும் உயர்வும், இலாபமும், சுவையும் தருவன அல்ல; மக்களுக்கு, நாட்டுக்கு, நிலைமை திருந்துதற்கு! மாண்பு! இதிலேதான் இருக்கிறது. இத்தகைய கனவு காண்போர், புத்தம் புதிய உணர்வுகளை மற்றவர் பெறச் செய்கின்றனர்.

பல்வேறு நாடுகளிலே, பல்வேறு காலங்களிலே, இத்தகு கனவுகள் கண்டனர் பலர்; சிலர் கவிதைகளாக்கினர்; சிலர் கருத்துமிக்க ஏடுகள் தீட்டினர், எதிர்காலம்பற்றி! அப்போ தெல்லாம், அவைகளின் உட்திறம் அறிய இயலாதார், எள்ளி நகையாடினர். "கனவு காண்கிறான்! பகற்கனவு!'' என்று கேலி செய்தனர்.

பாலைவனம் சோலைவனமாக வேண்டும்! அங்கு பசுங்கிளிகள் கொஞ்சி விளையாடவேண்டும்! கோலமிகு மயில்கள் ஆடிடவேண்டும்! கோதையுடன் கூடி இசை பயின்றிடவும் வேண்டும்!! - என்று கனவு கண்டோர்கள் பலர்.

வேதனை தரும் நிலையில், நாடு இருக்கும்போது விம்மிடுவர் சிலர்; சிலர் கொதித்தெழுவர்; சிலர் இந்நிலை மாறி நல்லதோர் நிலை எழாதா என்று ஏக்கமுற்று, எண்ணிப்பார்ப்பர்; அந்த எண்ணத்திலே ஓர் "எழிலுடை எதிர்காலம்' தெரியும்; அகமும் முகமும் மலரும்; அருங்கவிதையோ, உணர்ச்சியூட்டும் உரைநடையோ உருவெடுக்கும்; உலகுக்கு ஒரு புதிய உணர்வு கிடைக்கும்.

மக்கள் குறித்தும், நாட்டு ஆட்சிமுறை குறித்தும், இத்தகைய கனவு கண்டவர்கள், எழுதியுள்ள ஏடுகள் பல மேனாடுகளிலே காணக்கிடக்கின்றன!

சர் தாமஸ் மூர் என்பவர் யுடோபியா - Utopia என்றோர் நூல் எழுதினார். ஒரு நாடு எங்ஙனம் அரசாளப்படவேண்டும். மக்கள் எவ்விதம் இருக்கவேண்டும், தொழில் முறைகள் எவ்வண்ணம் இருக்கவேண்டும் என்பனபற்றி எல்லாம் அவர் மனதிலே உருவாகிய கருத்துக்களை உள்ளடக்கிய ஏடு அது.

யுடோபியா எனப் பெயரிட்டார், அவர் காணவிரும்பிய முறைகள் திகழ்ந்ததாக ஒரு தீவினைக் கற்பனை செய்து.

யுடோபியா என்று மூர், தமது கற்பனைத் தீவுக்குப் பெயரிட்டார் - பெயரிலேயே பொருளும் இழைந்திருந்தது.

யுடோபியா - Utopia எனும், அந்த ஆங்கிலச் சொல்லுக்கு மூலம், இரண்டு லத்தீன் மொழிச் சொற்கள். ஞன் என்றோர் சொல்; அதற்குப் பொருள், இல்லாத என்பதாகும். பர்க்ஷர்ள் என்பது மற்றோர் சொல்; அதற்குப் பொருள் இடம் என்பதாகும். இந்த இரு லத்தீன் சொற்களையும், ஒரு ஆங்கிலக் கூட்டுச் சொல்லாக்கி, இல்லாத இடம் என்று பொருள் கொண்ட யுடோபியா, மற்ர்ல்ண்ஹ என்று, தமது கற்பனைத் தீவுக்குப் பெயரிட்டார், சர். தாமஸ். மூர்.

இம்முறையினைத் தொடர்ந்து வேறு பலரும், பல்வேறு கற்பனை நாடுகளை, கற்பனை அரசுகளை, ஏட்டிலிட்டுக் காட்டினர்.

இவைகள் யாவும், அவர்கள் பட்டப் பகலில் கண்ட கனவுகள்! அவை பலிக்குமா பலிக்காதா என்பது, அவைகளுக் காகப் பாடுபட, எத்துணைபேர் முன்வருவர், அவர்தம் தாங்கும் திறமை எத்தகையது என்பதைப் பொறுத்து இருக்கிறது.

ஒருவன் தன் சுகத்துக்காக, தன் இலாபத்துக்காக, தன் உயர்வுக்காகக் காணும் கனவுகள் - அல்நாஷர் கனவுகள் - மற்றவர்களை, முயற்சி எடுத்துக்கொள்ள வைக்காது. கனவு கண்டவர்களே, எண்ணி எண்ணி ஏங்கவேண்டும்; அல்லது முயற்சி செய்து பார்க்கவேண்டும்; அவர்கள் கண்ட கனவு பலித்திட, மற்றவர்கள் பாடுபட முன்வருவர் என்று எதிர் பார்ப்பது பேதமை. பொது நோக்கத்துக்காக, மக்கள் வாழ்வு செம்மை அடைவதற்காகத் தூயநோக்குடன் சிலர் பட்டப் பகலிலே காணும் கனவுகள், பலித்திட, கனவு கண்டவர்கள் மட்டுமல்ல, கூறக் கேட்டவர்கள் முயற்சிக்கலாம்; முயற்சிக்க வேண்டும்; முயற்சித்துள்ளனர்!

ஒருவன், தன் நலனுக்காகக் காணும் கனவுபற்றி அல்நாஷர் கண்டானாமே அஃதுபோல - வெளியே எடுத்துரைக்கக்கூடக் கூச்சப்படுவான்! கூச்சத்தை அடக்கிக்கொண்டு கூறினாலும், கேட்போர் கைகொட்டிச் சிரிப்பர், கேலியாக!!

பொது நோக்குக்காக, மக்கள் நலனுக்காக, நாட்டு உயர்வுக்காக, கனவு காண்போர், எழுச்சியுடன் அதனை எடுத்துரைப்பர்; மற்றவர்களும் அதனை மகிழ்ச்சியுடன் கேட்பர்.

கேட்போருக்கு முதலிலே வியப்பும், பிறகு சுவையும் கிடைக்கும்; மெள்ள மெள்ள, அதனைப் பெறவேண்டும் என்ற எண்ணம் எழும் - முயற்சியில் ஈடுபட ஆவல் தோன்றும் - ஈடுபட்ட பிறகு, உறுதி வளரும்.

எனவேதான், தூய பொதுநோக்குடன் பட்டப்பகலில் கனவு காண்பவர்கள், பிறரைச் சிந்திக்கவும் செயலாற்றவும் செய்து விடுகிறார்கள்.

தம்பி! ஆற்றோரத்தில் களைத்துப் படுத்திருந்த வீரன் கண்ட "கனவு' அவனைத் தூக்குமரம் அழைத்துச் சென்றது, அல்லவா? அதனால், என்ன பலன்? அவனுக்காகட்டும், அவன் தன் கனவினை உரைக்கக் கேட்டிடும் மற்றவர்களுக்காகட்டும்? - என்று கேட்பாயேல், கூறுகிறேன். அயலான் நாட்டைப் பிடித்துக் கொண்டான் என்றால், அடங்கிக்கிடப்பது, அடிமையாகிவிடுவது என்பதல்ல, ஒவ்வொருவரும், ஆடிப்பிழைப்பவளானாலும், வாட்போர் வீரனானாலும், ஒவ்வொருவரும், தத்தமக்குக் கிடைக்கும் வாய்ப்புக்குத் தக்கபடி, வல்லமைக்கு ஏற்றவண்ணம், ஆதிக்கக்காரனை எதிர்த்து ஒழித்திட முனையவேண்டும் - அந்த முயற்சியிலே, உயிர்போவதாயினும்! இந்த அரிய பாடம் இருக்கிறதல்லவா, வீரன் கண்ட கனவில்! அதனை அறிவோர், எத்துணை வீர உணர்ச்சிபெற இயலும் என்பதை எண்ணிப்பார், தம்பி! அப்போதுதான், அத்தகைய கனவுகள் காண்பதால், கிடைத்திடத்தக்க பலன்கள் விளங்கும்.

அடிமையாக்கப்பட்ட ஒவ்வொரு நாட்டிலேயும், விடுதலை பற்றிய கனவுகளைக் கண்டவர்கள், வீரத்தை, தியாக உணர்வை, அவை மூலம், நாட்டு மக்கள் பெற வைத்தனர் - அதனால், அவர்கள் கண்ட கனவுகள் நனவுகளாயின! நிறைவேறின! பலித்தன!

எண்ணிடச் சுவை தருகிறது என்பதற்காக மட்டுமே, நினைப்புகளை ஏற்படுத்திக்கொள்வதும், கேட்போருக்கு இனிப்பு அளிக்கிறது என்பதற்காகவே, சுவைபடக் கூறிடுவதும் பலன் தருவதாக அமையாது. சுவை இருக்கவேண்டும், அதேபோது, பெற இயலும் என்ற எண்ணத்தைத் தரவல்லதாகவும், பெற்றாக வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுவதாகவும், பெறுவதற்காக எந்த இழப்பையும் பொருட்படுத்தக்கூடாது என்ற உறுதியையும் தரவல்லதாக, அந்தக் கனவு இருத்தல்வேண்டும்.

வானவில்லைக் கண்டவன், வியந்து மகிழ்ந்திடுவது, முழுப் பலன் பெறும் செயலாகாது. வானவில்லிலே கண்ட வண்ணங் களை, நினைவிலே கொண்டு, அத்தகைய வண்ணங்களை மற்றப் பொருட்களிலே ஏற்றிடத்தக்க கலவை முறையினை அறிந்திட முயற்சித்து வெற்றிபெற்றால் மட்டுமே, வானவில்லைக் கண்டதால் ஏற்பட்ட வியப்பும், மகிழ்ச்சியும் முழுப் பயன் அளித்தது என்று கூறமுடியும்.

வீரவரலாற்றுச் சுவடிகளைச் சொல்லழகுக்காக மட்டுமே படிப்போர் வானவில்லைக் கண்டு வியப்போர் போன்றார்!

வரலாற்றுச் சுவடிகளிலே கிடைக்கும் வீர உணர்ச்சியை, அடிமைத் தளைகளை உடைத்தெறியும் செயலுக்காகப் பயன் படுத்துவோர், வானவில்லிலே காணப்படும் வண்ணங்களை, கலவை முறையால், ஆடைகளிலும், பிற பொருள்களிலும், ஏற்றி பயன் காண்போர் போன்றார்!

ஆகவே, தம்பி! உள்ள நிலைமைகளால் உளம் வெதும்பிச் செயலாற்றவும் சிந்திக்கவும் இயலா நிலை பெற்றுவிடாமல், தன்னலமற்று, பொதுநோக்குடன், நல்ல நிலைமை காண விரும்பி, தூய்மையாளர் கொள்ளும், சுவையும் பயனும் தரத்தக்க கற்பனைதான், பட்டப் பகலிலே காணப்படும் கனவு!

கொடுமைக்கு ஆளானோர், குமுறிக் கிடப்போர், அனைவருமே இத்தகைய கனவுகள் கண்டுவிட முடியும் என்று கூறமுடியாது.

கொடுமைகளைக் கண்டும் மனம் குலையாமல், நிலைமையைச் செம்மைப்படுத்தி ஆகவேண்டும் என்ற துடிப்புக் கொண்டோர் மட்டுமே, எதிர்காலம்பற்றிய, செம்மைபற்றிய, கனவு காண முடியும்; கண்டனர்; அந்தக் கனவுகள் யாவும் பலித்துமுள்ளன. அதனாலேயே, யார் என்ன செய்யமுடியும்? இவன் நடமாடும் அழிவு அல்லவோ? என்று மக்கள் கண்கசிந்து கரம் பிசைந்து குமுறத்தக்க நிலையினை உண்டாக்கிய கொடுங்கோலர்கள், இறுதியிலே அழிந்தொழிந்து போயினர். அடிமைப் படுகுழியில் வீழ்ந்துவிட்டது நாடு; இனி அது தலை நிமிர்ந்து, தன்மானம் பெற்று, தன்னரசு பெற்று வாழ முடியாது என்று மிகப் பெரும்பாலான மக்கள் எண்ணி மனம் உடைந்து போன நிலையை உண்டாக்கி வைத்த ஆதிக்க அரசுகள், கடைசியிலே, அடியற்ற நெடும்பனையாயின! சிட்டுகள் வல்லூறை எதிர்த்தன! சீமான்களைப் பராரிகள் விரட்டினர்! மாளிகைகள் மண்மேடுகளாயின! குப்பைமேட்டுக்காரன் கோலேந்தியைக் குப்புறத் தள்ளினான்! தம்பி! இவைகளெல்லாம், எங்ஙனம் நடைபெற்றன? யாரோ சிலர் கண்ட கனவுகள், இவர்களை உணர்ச்சிப் பிழம்புகளாக்கிவிட்டன!

இறுதி வெற்றி கிட்டும் வரையில், நடைபெறப் போவது குறித்து நாலாறு பேர், கூறி வந்ததைக் கற்பனை என்றும், கவைக்குதவாதது என்றும், காட்டுக் கூச்சலென்றும், பகற் கனவு என்றும்தான் மிகப் பலர் கூறினர்.

அங்ஙனம் கூறிடுவோர், எவரெவர் என்பது குறித்து எண்ணிப் பார், தம்பி! சுவைமிகு உண்மைகள் பல தெரியும்.

அசைக்கவே முடியாது! என்று இறுமாந்து கிடக்கும் ஆதிக்கக்காரன், விடுதலைக்கான முயற்சிகள் உருவாகிக்கொண்டு வருவதாக எவரேனும் கூறினால், கண் சிமிட்டுவான், கரம் அசைப்பான், கேலிச் சிரிப்பொலியுடன் பேசுவான்; மனப்பிராந்தி என்பான்! மமதை மதியை மாய்த்துவிட்ட நிலை அது.

கற்பனைகள் - கனவுகள் என்பவைகள் பலித்திருக்கின்றன என்ற வரலாறு அறியாதவர்கள், விடுதலை உணர்வு எழுப்பி விடும் கற்பனையைக் கவைக்குதவாத பேச்சு என்று கருதித் துச்சமென்று தள்ளிவிடுவர்.

விடுதலைக்காகப் பாடுபடுவது நெருப்பாற்றில் நீந்திச் செல்வதுபோன்றதாகும் என்பது தெரிந்து பீதிகொள்வோர், இழப்புகளுக்குத் தயாராக இல்லாதவர்கள், வெல்வெட்டு மெத்தையினர் அல்லது அத்தரத்தினருக்கு வட்டில் ஏந்தி நிற்போர், வெள்ளை வேட்டிகள் அல்லது அதுபோல வெளிச்சம் போட்டுக் கிடப்போர், இவர்களும், விடுதலை உணர்வு எழுப்பி விடும் கற்பனையைக் கனவு என்று கதைப்பர்! கோழைத்தனத்தை மறைத்திட, மேதாவித்தனம் என்று எழுத்துப் பொறிக்கப்பட்ட சல்லாத் துணியால், தம்மை அலங்கரித்துக் கொள்வார்கள்.

ஒவ்வொரு நாட்டிலேயும், விடுதலைக் கிளர்ச்சிக் கட்டத்திலே, இத்தகைய வீணர்கள் இருந்தனர், விடுதலை வீரர்களை இகழ்ந்துகொண்டு, அவர்தம் இலட்சியங்களைப் பழித்துக்கொண்டு எழிலுடைய எதிர்காலம் குறித்து அவர்கள் கூறுவனவற்றை, வெட்டிப் பேச்சு என்று பேசிக்கொண்டு, கட்டி வைத்த குக்கல் கண்டவரைப் பார்த்துக் குலைத்திடும் வாடிக்கை போல இருப்பர்.

தம்பி! ஆதிக்கக்காரனின் கூர்வாள், அடக்குமுறையின் கொடிய கூரிய பற்கள் என்பவைகள் மட்டுமல்ல, இத்தகை யோரின் இழிமொழிகளையும், விடுதலை விரும்பிகள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டி வருகிறது! ஏற்றுக்கொண்டுள்ளனர். நஞ்சல்லவா கொடுத்தனர் சாக்ரடீசுக்கு! கல்லால் அடித்தல்லவா துரத்தினர், நபிகள் நாயகத்தை! முள்முடி அல்லவா சூட்டினர், ஏசுவுக்கு!

அவர்களுக்கே அக்கதி என்றால், தம்பி! மிகச் சாமான்ய மானவர்கள், மிகப் பெரிய இலட்சியத்துக்காகப் பாடுபட முன் வந்தால், ஏசவா ஆட்கள் இருக்கமாட்டார்கள்!! தாங்கிக் கொண்டனர்! தாங்கிக் கொள்வோம்!! கனவுகள் பலிக்கும்; ஏனெனில் அந்தக் கனவுகள், நமக்கு ஒரு மாளிகை, நம்மைச் சுற்றிலும் ஆலமேற்ற விழியினர். நம் எதிரில் பேழைகள். அவைகளிலே அணிபணிகள் என்ற இம்முறையில் அல்ல!

நம்மை நோக்கி வாட்கள்! நமது பிடரியில் ஆதிக்கக் காரனின் கரம்! கரமா? பார், தம்பி! எனக்கு ஏற்படும் எண்ணத்தை, கரம் என்கிறேன் - கரத்தாலாவது நெட்டித் தள்ளட்டும் என்று; கரமல்ல, தம்பி! கரம் அல்ல! ஆதிக்கக்காரனின் கால்! நமது உடலில் புண் - கசையடியால் ஏற்பட்டவை! நமது இருப்பிடம், சிறை எனும் இருட்டறை! நமக்குப் படுக்கை, வைக்கோல் தூவப்பட்ட அல்லது அதுவுமற்ற கட்டாந்தரை! நமக்குக் கலயம் மண்ணாலானது! அதிலே உள்ளது புழுத்தது புளித்தது; அழுகல், நாற்றம் நிரப்பியது!! - இவைபோன்ற இன்னல்கள் நம்மை எதிர்நோக்கி இருப்பது தெரிந்தும், நாடு தன்மானம் தழைக்கும் இடமாக, தன்னாட்சிக் கூடமாகத் திகழவேண்டும் என்றல்லவா எண்ணுகிறோம். எத்துணை ஆத்திரம் பிறக்கும், ஆதிக்கக்காரர் களுக்கு, உறுமுகின்றனர்! அந்த உறுமலைக் கேட்டுக் குலைநடுக்கம் கொள்பவர்கள், நம்முடன் எங்ஙனம் இணைந்து இருக்க இயலும். நாடு மீட்டிடும் நற்பணியிலே ஈடுபட்டிருக்கும் நம்முடன் இருக்க, கூடிப் பணியாற்ற இயலாதார், தமது இயலாமையையா வெளியே எடுத்துரைப்பர்!! கூச்சமாக இருக்குமல்லவா? எனவே அவர்கள், நமது எண்ணம் ஈடேறாது, திட்டம் வெற்றி பெறாது, கற்பனை கவைக்குதவாது, கனவு பலிக்காது என்று பேசித் திரிகின்றனர். வேறென்ன செய்வர்!

தம்பி! அரவம் கேட்டதும் அச்சம் கொண்டு, தலையை ஓட்டுக்குள் இழுத்துக்கொள்வது ஆமை மட்டுமல்ல, சில ஆடவரும் உளர்!!

ஆமையாவது, தன்னடக்கத்துடன், தன் நிலைமைபற்றி வாதிடுவதில்லை. வாய்மூடிக் கிடக்கிறது. இவர்கள் ஆமையா! ஆடவர்களல்லரோ! ஆர்ப்பரிக்க வாயும் இருக்கிறதே; ஆர்ப்பரிக்கக்கூட முன்வருகின்றனர்! வாய்! பேசத்தானே!! இதைத்தான் பேசவேண்டும், இப்படித்தான் பேசவேண்டும், பேசுவதிலே பொருத்தம் இருக்கவேண்டும், பொருள் இருக்க வேண்டும் என்றா கவனிக்க முடியும்!! பேச, வாய்! எனவே பேசுகின்றனர்!!

தம்பி! இயலாமை காரணமாக, சிலர், இலட்சியத்தை, தூய்மையாளர்களின் எண்ணங்களை, கற்பனைகளை இகழ்ந் திடுவர்; பொருட்படுத்தாதே! இதனை உனக்குக் கூறவே, பட்டப் பகலில் காணும் கனவுபற்றிப், பாட்டுக்கொரு புலவன் பாரதியடா! என்று நாட்டுக்குரியர் கூறிப் பாராட்டிடும் பாரதியாரின் பாடலை நினைவுபடுத்தினேன். மற்றோர் முறை அந்தப் பாடலைப் படித்துப்பார்.

அண்ணன்,

24-9-61