தேவிகுளம் பீர்மேடு
சிறப்பும் அது பற்றிய பிரச்சினையும் -
காமராஜரின் போக்கு -
அவர் தேர்தல் முறை.
தம்பி!
பச்சை மாமலைகள்!
பாங்கான காட்சிகள்!
பாடும் அருவி?
பயமற்ற மிருகங்கள்!
ஓங்கி வளர்ந்த மரங்கள்!
தேயிலைத் தோட்டங்கள்!
முக்கனி குலுங்கும் பழத் தோட்டங்கள்!
தேக்கங்கள்!
தேனாறுகள்!!
தமிழகம் தந்திடும் எழிலோவியங்களைக்
கண்டு, என்னை மறந்து கிடந்ததால், சென்றகிழமை உன்னுடன்
அளவளாவும் வாய்ப்பினைப் பெற்றேனில்லை. மலைவளமும், காட்டு
வளமும், கானாறுகளும், களிறுகளும், மான்கூட்டமும், மலர்த்
தோட்டமும், புரண்டோடும் பேராறுகளும், கெம்பீரமாகக் காணப்பட்ட
நீர் நிலைகளும், சிந்துபாடிடும் சிங்காரச் சிற்றருவிகளும்,
வாளை துள்ளிடும் வாவிகள், கெண்டை புரண்டிடும் ஆறுகள்,
பொன்பூத்திடும் வயல்கள், - தம்பி - கண்ட காட்சிகள், எதைக்
கூறுவேன், எப்படிக் கூறினால், எழிலை விளக்கிட முடியும்!
கண் கண்டது - கருத்தில் நின்றது - கவி அல்ல பாடிக்காட்ட,
ஓவியனல்ல தீட்டித்தர!! அத்தகைய காட்சிகளை, 3500 அடி உயரம்
ஏறிச் சென்று கண்டிடும் வாய்ப்புப் பெற்றேன் சென்றகிழமை!
சென்றது, மாநில மாநாட்டுக்கான நிதிபெற! கண்டது தமிழருக்கு
இயற்கை அளித்துள்ள பெரு நிதியை!!
பாண்டி மண்டலத்தில் பல்வேறு
இடங்களில் சென்று பற்றும் பரிவும், பாசம் கொள்ளத்தக்க
வகையிலே வழங்கிடும் தோழர்களைப் பெருமளவில் கண்டு மகிழ்ந்து
விட்டு, பாண்டி நாட்டுடன் ஒட்டிக் கிடப்பினும், அரசியல்
நிர்வாகத்தின் கொடுமையினால் வெட்டுண்டு கிடக்கும் பீர்மேடு
"தாலூக்காவி லுள்ள வண்டிப் பெரியாறு எனும் இடம் சென்று,
அங்கு அரும்பாடுபட்டு, நமது அகம் மகிழும் வண்ணம் கழகத்தைக்
கட்டிக்காத்து வரும் தோழர்களிடம் அளவளாவி மகிழ்ந்தேன்.
போலீஸ்! போலீஸ்! என்ற
கூக்குரலை, நான் அங்கு செல்வதற்கு ஒரு கிழமைக்கு முன்பிருந்தே,
ஆங்குள்ள சிலர் கிளப்பினராம்! தந்திகள் பறந்தனவாம், தடை
உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி! கூட்டம் நடத்த அனுமதி தரக்கூடாது
- குழப்பம் விளையும் - கொந்தளிப்பு மூண்டுவிடும் என்று
கூறினராம் மலையாள நண்பர்கள்! பாவம்! அவர்கள் மருட்சி அடைந்துள்
ளனர்! வண்டிப் பெரியாறு கூட்டம், தேவிகுளம், பீர்மேடு
தாலூக்காக்களின்மீது தமிழரின் "படை எடுப்பு'க்கான ஏற்பாடு
என்ற அச்சத்தில், மலையாளத் தோழர்கள் திருவிதாங்கூர் சர்க்காருக்குத்
"தந்திகள்' கொடுத்திருந்தனர். எனினும் "பனம்பள்ளி' சர்க்கார்
பதட்டம் கொள்ளவில்லை; கூட்டம் நடைபெற்றது; மலையாளத் தோழர்களுக்கு
"விளக்கம்' தரும் வேலையை ஓரளவுக்குச் செம்மையாகவே செய்து
முடித்தேன்.
தம்பி! தேவிகுளம் பீர்மேடு
வட்டாரத்திலே காணப்படும், மலைவளமும், காட்டுவளமும் உண்மையிலிலேயே,
திருவிதாங்கூர் சர்க்கார் திகில்கொண்டு, தீப்பட்ட குழந்தை
போல், துடிதுடித்துக் கதறச் செய்யும், வகையில்தான் அமைந்திருக்கிறது!
ஏலமும், தேயிலையும், வாழையும்
வகைவகையான பயன்தரும் தருக்களும், காணக்காட்சியாக இருக்கிறது
எங்கும்! அதோ ஓர் மேகக் கூட்டம் - வெண்மை நிறத்துடன்
- மறு விநாடி பழுப்பேறுகிறது - மெள்ளமெள்ள அணிபணி பூண்ட
ஆரணங்கு, "ஜடை' பாரம் தாங்காமல், இடை துவள நடை பயிலும்
அழகுடன் உலவுகிறது - உள்ளத்தைச் சிலிர்த்திடச் செய்யும்
ஓர் மென்காற்று வீசுகிறது - உடனே கருமுகில் ஆகிவிடுகிறது
- சூல் கொண்ட மேகம், மழை முத்துக்களை உதிர்த்திட அவை
ஏற்றுத் தாலாட்டுகின்றன, தருக்களும் செடி கொடிகளும்!
தம்பி! ஓங்கி வளர்ந்திடும்
மரங்களும், பலன் பல தரும் தருக்களும் கீழேயும்தான் காண்கிறோம்.
மலை மேலும்தான் உள்ளன - ஆனால், மகத்தானதோர் வித்தியாசம்
இருந்திடக் காண்கிறோம். கடிமணம் புரிந்தவன் காதலைச் சொரிந்தும்,
கன்னல் மொழியை வழங்கியும், இன்ப வாழ்வு நடத்திடுவதால்,
எழில் குலுங்கிடக் காட்சி தரும் ஏந்திழையின் முகத்திலே
காணப்படும் விளக்கொணாததோர் "தகத்தகாயம்' இந்தக் தருக்களிலும்
செடி கொடிகளிலும், புல்பூண்டு, உதிர்ந்து கிடக்கும் சருகுகளிலும்
கூடக் காண்கிறேன். இங்கே நாம் எப்போதும் காணும் தருக்களிடம்,
கடமை தவறாத கணவனின் பராமரிப்பிலே இருக்கும் பாவையரிடம்
காணப்படும், பொறுப்பு தெரிகிறது; அங்கு தம்பி! கண்ணாளன்
பொழிந்திடும் காதலால் காரிகை கொண்டிடும் "பொலிவு' தெரிகிறது
இலையில்? மலரில், செடியில், கொடியில்!!
சிவப்பு, வெளிர் சிவப்பு,
நீலம், வெளிர் நீலம், பச்சை, ஊதா, மஞ்சள், பொன்நிறம்
தம்பி! வண்ணம் வகைவகையாகக் கொட்டிக் காட்டப்பட்டிருக்கும்
ஓர் அற்புதமான ஓவியச் சாலைபோல், அங்கு மலர்கள்?! மலர்த்
தோட்டங்களை அங்கு யாரும் அமைத்திடும் முயற்சியில் ஈடுபட்டில்லை
- அவர்கள் காயும் கிழங்கும், கனிவகையும், தேயிலையும்,
ஏலமும், இவை போன்றவையும் பயிரிட்டுப் "பலன்' காணத்தான்
பாடு பல படுகிறார்கள். அவர்களின் உழைப்பின் திறம் கண்டு
உளம் கனிந்து, புன்னகை பூத்திடும் முகத்தினளாகி நிலமகள்.
அவர்களின் உள்ளத்துக்கு உவகை தர இந்த மலர் சொரிகிறாள்
மகிழ்ந்து என்று கூறவேண்டும் போலிருக்கிறது. உடன் வந்த
தோழர்களில் பலருக்கு அந்த மலர்களின் பெயர்களே கூடத் தெரியவில்லை
- எனக்குத் தெரியாது என்ற துணிவில் சிலர், மலர்களுக்கு
ஏதேதோ பெயர் கூறினர்.
தேயிலை தோட்டங்களால் பெரும்பொருள்
ஈட்டிடும் முதலாளிமார்கள் யாரையும் நான் பார்க்கவில்லை.
ஆனால் அந்த மாமலைகளைப் பணத்தோட்டங்கள் ஆக்குவதற்காகப்
பாடுபட்டு, பாடுபட்டு, மேனி கருத்துக்கிடக்கும் தமிழ்ப்
பாட்டாளிகளை ஏராளமாகக் கண்டேன். தேயிலைச் செடிகளை - அவர்கள்
வளர்த்திடும் திறத்தினையும், அதற்கு "நோய்நொடி' வராமல்
பாதுகாத்திடும் வகையினையும் கூறித், தமிழ்த் தொழிலாளர்களின்
இரத்தம் இந்தச் "செல்வம்' விளைவதற்காக எவ்வளவு கொட்டப்பட்டது
என்பதை, என்னிடம், தோட்ட வேலை அனுபவமுள்ள நண்பரொருவர்
எடுத்துச் சொன்ன போதுதான் எனக்குப் புரட்சிக் கவிஞர்.
சித்திரச் சோலைகளே!
உமைத் திருத்த இப்பாரினிலே
எத்தனை தோழர்கள் தம்
இரத்தம் சொரிந்தனரோ வேரினிலே!
என்று பாடியிருக்கிறாரே,
அந்தக் ‘கவிதை’யின் முழுப்பொருள் விளங்கிற்று. புலியும்
பிறவும், களிறும் காட்டெருமைகளும் ஏராளமாக உலவிடும் பெருங்காடுகளாக
இருந்த நாட்களில், அந்தப் பகுதியில், தருக்களை மலைப்பாம்புகள்
தழுவிக் கொண்டு கிடக்குமாம். காட்டாறுகள் சிலவேளைகளில்
கரிக்குட்டிகளை உருட்டிக் கொண்டோடுமாம். அங்கு காபியும்
தேயிலையும், ஏலமும் இன்னபிறவும் பயிரிட்டுப்பணம் பண்ண
இயலும் என்ற எண்ணம் எழக்கூட முடியாத நிலை இருந்ததாம்!
தமிழர்கள் எடுத்துக் கொண்ட பெருமுயற்சியும், அளித்த கடும்
உழைப்பும்தான், காடு கனியும் நிலையைத் தந்தது என்று விளக்கமளித்தனர்;
வியப்புற்றேன்!!
காடுகளை அழித்தும் களிறுகளை
விரட்டியும், காட்டெருமைகளால் தாக்குண்டும், கடும் புலிகளுடன்
போராடியும் தமிழர்கள் அமைத்துக்கொடுத்த இடங்களே இன்று
‘கண்ணன் தேவன்’ தோயிலைத் தோட்டங்கள், என்றனர்!
பாராட்டுவதா, பரிதாபப்படுவதா!
அகமகிழ்வதா அனுதாபப்படுவதா!! - என்று தெரியாமல் திகைத்தேன்!
தமிழர் பலரின் இன்னுயிரைக் குடித்து விட்டுத்தான். தோட்டங்கள்
துரைமார்கள் கொழுத்திடத்தக்க செல்வத்தைக் கொடுத்துள்ளன!!
நான் சென்று அன்றிரவு தங்கி இருந்த இடத்துக்குப் பெயரே,
ஆணைக்கல் என்றால், தம்பி! இடத்தின் முன்னாள் இயல்பு எவ்வண்ணம்
இருந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளலா மல்லவா -
ஓரளவுக்கேனும். அன்றிரவு கூட்டம் முடிந்தது, "ஆனைக்கல்'
தோழர் லியான் அவர்களுடைய இல்லத்தில் அன்பு விருந்து உண்டான
பிறகு, இரவு எட்டு மணிக்குக் ‘கீழே’செல்ல விரும்பினேன்
- தோழர் லியான், வேண்டாம் மூடுபனி பாதையைக் குறுக்கிடக்கூடும்,
அதுகூடப் பரவாயில்லை, வழி தவறி வரும் யானை குறுக்கிடும்,
பிறகு, என்று பீதியுடன் கூறினார் - நான் தைரியமாக வாதாடிவிட்டு,
பாதுகாப்பு உணர்ச்சியுடன் பயணத்தை ‘ரத்து’ செய்துவிட்டு
இரவுப் போதை அங்கு கழித்துவிட்டு, விடிந்தபிறகுதான் பயணத்தைத்
துவக்கினேன். ஆனால், தோழர் லியான் எதிர் பாராத வேறோர்
ஆபத்து குறுக்கிட்டது - அது கூறுமுன், தம்பி, வேறுசில
கூறி விடுகிறேன்.
தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை,
சித்தூர் எனும் தமிழர் பகுதிகளைத் தமிழகத்துடன் சேர்த்தாக
வேண்டும் என்பதற்காக, எத்தகைய கஷ்ட நஷ்டமும் ஏற்கும் துணிவு
கொண்ட உள்ளம் படைத்தவர்கள் நாஞ்சில் பகுதியில் நமது கழகத்தில்
ஏராளமாக உள்ளனர் என்று மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தேன்
- இப்போது இதற்கான ஆர்வம் கொண்ட தமிழர்கள் மலையில் மட்டுமல்ல,
அதைத்தொட்டுக்கொண்டும் மிக நெருங்கிய தொடர்பு கொண்டும்
உள்ள பெரியகுளம் தாலுக்கா முழுவதிலும் ஏராளமாக உள்ளனர்
என்பதைத் தெரிந்து கொண்டேன். மலை அடிவாரமாக உள்ள கூடலூர்,
ஓர் நல்ல பாசறை, கம்பம் - தேவாரம் - கோம்பை - போடி -
பெரியகுளம் - இங்கெல்லாம், நமது கழகம் மிக வலிவும் பொலிவும்
கொண்டதாக இருக்கிறது. பொதுவாகவே பெரியகுளம் வட்டாரத்தினர்,
மலை மீதுள்ள ஏலத் தோட்டங்களின் உரிமையாளர்கள் - அந்த
வட்டாரத்து வாழ்க்கைத் தரமே, மலையில் அவர்களுக்கு உள்ள
தொடர்பைப் பொறுத்துத்தான் இருக்கிறது. இந்தப் பகுதியில்
உள்ள பெரும் செல்வர்கள், காமராஜர் தமது பாதுகாப்பாளர்
என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்! ஆனால், தேவிகுளம்
பீர்மேடு பகுதிகளுக்கான கிளர்ச்சிக்கு வீரர்கள் - தியாகிகள்
- அஞ்சா நெஞ்சுடன் அறப்போரில் ஈடுபடவல்லோர் தேவைப்படும்போது,
நமது கழகம்தான், பணியாற்ற முடியும். வாய்ச்சொல் அருளவும்,
வழிவகை கூறவும் தலைவர்கள் பிற முகாம்களில் கிடைக்கக்கூடும்.
ஆனால், காரியமாற்றவும் கடும் கிளர்ச்சிகளில் ஈடு படவும்,
கழகம்தான் முன்வரவேண்டிய வாய்ப்புப்பெற்றிருக்கிறது. மலைமீதுள்ள
தமிழ்த் தோழர்களிடம் நாம் பெறக்கூடிய ஆதரவினைவிட, அளவிலும்
வகையிலும் அதிகமான அளவு பெரியகுளம் வட்டாரத்திலே திரட்ட
இயலும்-திரட்டிட வேண்டிய நிலைமைதான் ஏற்படும்.
ஒன்று மட்டும் முன்கூட்டியே
தெரிந்துகொள்வது. களம் அமைக்க பெரிதும் உதவக்கூடியது
என்று எண்ணுகிறேன் - திருவிதாங்கூர் சர்க்கார் எளிதில்
இடமளிக்காது - இணங்காது! - தமிழரின் உரிமையைப் பறிப்பது
அறமாகாது என்று கருதும் நேர்மை மலையாளநாட்டு தலைவர்களில்
ஒருவருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை - தமிழர்களைக் கூலிகள்
- பிழைக்க வந்தவர்கள் -அன்னியர்கள் - என்று மலையாளிகள்
கருதும்படி- (ஏசும்படி மட்டுமல்ல) பலமான பிரச்சாரம் நடை
பெற்றிருப்பதுடன், விளைவுபற்றி எண்ணிப்பாராமலேயே வீரத்தை
வீம்பாக்கிப் பேசிடும் வித்தகர் சிலரால், தமிழர் - மலையாளி
மனமாச்சரியம், கொழுந்துவிட்டெரியும் நிலையும் இருக்கிறது
- இதனை மறைத்தும் பயனில்லை - குறைத்து மதிப்பிடுவதும்
தவறு - இந்த மாச்சரியம் மேலும் வளரும் தன்மையில் கிளர்ச்சிகள்
உருவாக்கப்படுவதும், அங்கு உள்ள தமிழர்களுக்குப் பேராபத்தாக
முடியும். மற்றுமொன்று விளக்கமாக்கப்பட வேண்டும்-வண்டிப்
பெரியாறு கூட்டத்தில் நான் இதனை வலியுறுத்திக் கூறினேன்
- மத்திய சர்க்கார் பிரித்தாளும் சூழ்ச்சியைத் திறம்பட
நடத்தவே திட்டமிட்டு விட்டிருக்கிறது. எனவே, தமிழர் -
மலையாளி மனமாச்சரியம் வளருவதை, டில்லி புன்னகையுடன் பார்த்துக்
கொண்டு, ‘மோதுதல்’ ஏற்பட்டால் போலீஸ்! போலீஸ்! என்று
கொக்கரித்து அடக்குமுறையை அவிழ்த்துவிடவே செய்யும்.
தமிழர், தெலுங்கர், மலையாளி,
கன்னடியர் - என்போர் திராவிடர் என்ற இன உணர்வுகொண்டு,
கூட்டாட்சிக்கான வேட்கை கொள்வர். அது, நமது ஏகாதிபத்தியத்
திட்டத்தைத் தகர்த்துவிடும் என்ற கிலி டில்லிக்கு ஓரளவுக்கு
ஏற்பட்ட சமயமாக, இந்த ‘மொழிவழி அரசு’ப் பிரச்சினை கிளம்பிற்று
- இதிலே, தமிழரும் மலையாளியும், மனமாச்சரியம் கொள்வதும்,
தமிழரும் ஆந்திரரும் தகராறு மூட்டிக் கொள்வதும், தமிழர்
கருநாடகத்தார் மனக்கசப்புக் கொள்வதும், டில்லிக்கு, மிக
மிக மகிழ்ச்சி யூட்டுகிறது. டில்லியின் எதோச்சாதிகாரம்,
மார்வாடி ஆதிக்கம், நேரு ஏகாதிபத்தியம், வடநாட்டுச் சுரண்டல்,
எனும் ‘பேச்சு’ ஓரளவிக்கு நிறுத்தப்பட்டு, தேவிகுளம் யாருக்குச்
சொந்தம், திருப்பதியை ஆந்திரர் கொள்வதா, பெல்லாரியை
இழப்பதா, காசர்கோடு களவாடப்படுவது அக்ரமம், என்று இத்தகைய
பிரச்சினைகள் முன்னணிக்கு வந்துசேரும், என்பதற்கான அறிகுறி
கண்டு, டில்லி களிப்படைகிறது! ‘மொழிவழி அரசு’ நேர்மையுடனும்
உரிமை முறைப்படியும் அமைவதற்கான ‘அமளி’யை மூட்டிவிட்டு
விட்டால், இதற்காக இவர்கள் ஒருவருடன் ஒருவர் அடித்துக்கொண்டு
கிடப்பர்-நாம் தப்பித்துக் கொள்ளலாம் என்பதே டில்லியின்
திட்டம். பிரித்தாளும் சூழ்ச்சியைப் பிரிட்டிஷாரிடமிருந்து
வடநாட்டுத் தலைவர்கள் நன்றாகக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
தேவிகுளம் பீர்மேடு பிரச்சினைக்கான
கிளர்ச்சியின் போது மக்கள் மன்றத்திலே, வடநாட்டுச் சர்க்காரின்
இந்தப் பிரித்தாளும் சூதுபற்றி எடுத்துரைத்து, உண்மைப்
பகைவன் யார் என்பதைச் சுட்டிக் காட்டும் வேலையை பிறகட்சிகள்
செய்யும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை! நேருவின் நெரிந்த
புருவத்தைக் காணவும் அஞ்சுகிறார்கள் அந்த வீரர்கள்! அந்தக்
காரியத்தைச் செய்யும் ‘தனி உரிமை’யை நாம் தான் நிறைவேற்றித்
தீர வேண்டும் என்று எண்ணுகிறேன். இதற்கான ஆர்வம், இந்தப்
பகுதியில் மிக வளமாக இருக்கிறது.
நல்லார்வம் கொண்ட தோழன்
ஒருவன்தான், எங்களை மலைமீது மோடார் வானில் கொண்டு சென்றான்
-ஆர்வம் அவனைச் சளசளவென்று பேசச் செய்தது கலகல வென்று
சிரிக்க வைத்தது, பட படவென்று நடந்துகொள்ளச் செய்தது.
வண்டியோ ‘லொட லொட!!’ அதை அவன் பொருட் படுத்தியதாகவும்
தெரியக்காணோம். நாங்கள் அதனைக் கவனிக்கவும் முடியாத நிலையில்,
காட்சியின் கவர்ச்சியிலே சிக்குண்டு கிடந்தோம். மலையினின்றும்
கீழே வண்டி வருகிறது - உதைத்துக் கொள்கிறது, உறுமுகிறது
- உருளைகளிலே ஏதோ சிக்கிக் கொண்டு விட்டது போன்ற சத்தம்
கேட்கிறது - ஆர்வம் நிரம்பிய அந்தத் தோழனோ, எவ்வளவு
பழுதுபட்ட வண்டியும் தன் கைவண்ணத்தினால் செலுத்த முடியும்
என்பதை எடுத்துக் காட்டும் ஒரே நோக்கம் கொண்டவனாகக்
காணப் பட்டான். என் செய்வது?
‘பழுதுபட்டிருக்கிறதோ?’
என்று கேட்கிறார் தோழர் லியான், ஏதோ ஓர் மோட்டார் உறுப்பின்
பெயரைக் குறிப்பிட்டு-அவன் அலட்சியமாகக் கூறுகிறான், இதுதானா!
பிரேக்கே கூடத்தான் சரியாக இல்லை! என்று.
வண்டி உருண்டோடி வருகிறது
- கீழே அல்லவா இறங்குகிறோம். இரண்டு வண்டிகள் ஒரு சேரச்
செல்ல முடியாத பாதை; வளைவுகள். ஒரு புறம் மலைகள், மறுபுறம்
பெரும் பெரும் பள்ளங்கள்; கீழே இன்னும் இறங்க வேண்டியது
1,500 அடி இருக்கும். திடீரென்று மோட்டார் உருளுவது,
தேய்ந்தும் ஊர்ந்தும் செல்வது போலாயிற்று. பாதையிலே வண்டி
எக் காரணத்தாலோ ஒட்டிக்கொண்டுவிட்டது போன்ற ஒரு நிலை.
ஒரு திருப்பம் வந்தது, ‘பன்ச்சர்’ ஆகிவிட்டது போலிருக்கிறது
என்று கூறி வண்டியை நிறுத்தச் சொல்லுகிறேன். வண்டி தானாகவே
நின்றுவிட்டது; எந்தச்சக்கரத்திலே "பன்ச்சர்' ஆகி விட்டது
என்று பார்க்கக் கீழே இறங்கினேன் - உடனிருந்த தோழர்கள்
பொன்னம்பலனாரும் மதியழகனும் இறங்கினர். நான்கு சக்கரங்களில்
எது கெட்டுக் கிடக்கிறது என்று பார்க்கிறோம். வண்டியில்
மூன்று சக்கரங்கள் மட்டுமே உள்ளன! பின் சக்கரங்களிலே ஒன்றுகாணோம்!
திகைத்துப்போய் நின்றோம். நீங்கள் என்னை விட்டுவிட்டாலும்
நான் உங்களிடம் வந்து சேராமல் இருப்பேனா என்று கூறுவது
போல அந்தச்சக்கரம் பின்புறம் உண்டு வந்து கொண்டிருந்தது.
‘அச்சு’ முறிந்துவிட்டது; 1,500 அடி பள்ளம் கீழே. எதிரே
திருப்பம்; பாதையோ வளைவு! வண்டியிலேயோ மூன்று சக்கரங்கள்!
அவ்வழி வந்தவர்கள் அனைவரும்
இக்காட்சி கண்டு திடுக்கிட்டுப் போயினர். அவர்கள் பேசிக்
கொண்டதைக் கேட்ட பிறகுதான், எவ்வளவு ஆபத்தான நிலை ஏற்பட்டது
என்பதும், எவ்வளவு எதிர்பாராதவிதத்தில் தப்பித்துக் கெண்டோம்
என்பதும் எங்களுக்கே தெரிந்தது.
தம்பி! நமது இயக்கத் தோழர்களிடம்
நல்லார்வம் நிரம்ப இருக்கிறது - அதுபோலவே, நம்மிடம் உள்ள
சாதனங்கள் பழுது பட்ட நிலையில் உள்ளன - ஆர்வம்தான் துணை
நிற்கிறது - நாலுக்கு மூன்று என்றாகும் போது, எப்படியோ
நமது பயணம் நடந்தேறிவிடுகிறது. ஆனால், எத்தனை நாளைக்கு
இது போல, என்று எண்ணாமலிருக்க முடியவில்லை. எனவே, நாம்
நமது ஆர்வம் திறமை ஆகியவற்றினைச் செம்மையாக வைத்துக் கொள்வது
போலவே, ‘சாதனங்களை’யும் செம்மையாக்கிக் கொள்ள வேண்டும்.
திருவிதாங்கூர் சர்க்காரிடமிருந்து,
தமிழ்ப் பகுதிகளைப் பெற எடுத்துக்கொள்ள வேண்டிய முயற்சி
இருக்கிறதே, அது ஏறத்தாழ நான் குறிப்பிட்ட இந்தப் ‘பயணம்’
போன்றது. முதலமைச்சர் காமராஜர் எமக்கு வண்டி ஓட்டிக்கொண்டு
வந்த நண்பர் போலவே, அச்சு முறிந்தாலும் அதையும் கவனிக்காமல்
இருந்திடும் அலட்சியப் போக்கிலே தான் நடந்து கொள்கிறார்.
நிபுணர்களைச் சிந்திக்க வைக்கும் பிரச்சினையாக இருக்கட்டும்,
மக்களின் மனதிலே குழப்பமும் கொந்தளிப்பும் மூட்டிடத்தக்க
பிரச்சினையாக, இருக்கட்டும், எவ்வளவு இன்றியமையாத பிரச்சினையானாலும்,
இடர்மிகுந்ததானாலும், இவருக்கு மட்டும் சர்வ சாதாரணமாகத்தான்
எந்தப் பிரச்சினையும் காணப்படுகிறது. எதுபற்றியும் ஒரு
அக்கரையற்ற தன்மை, அலட்சியப் போக்குக் காண்கிறோம்.
ஆகட்டும் பார்ப்போம்.
அதற்கென்ன அவசரம், அது என்ன முக்கியம், அதுதானா வேலை,
ஏன் இந்தப் பிரச்சினை, என்ற பேச்சிலேயே மன்னராக இருக்கிறார்!
பிரச்சினைகளின் சிக்கல்
புரியாததால் இவ்விதம் இருக்கிறாரா, புரிந்து, நம்மால்
என்ன செய்யமுடியும் என்று திகைத்துப்போய், அந்தத் திகைப்பை
மறைத்துக் கொள்ள இவ்விதம் பேசித் தொலைக்கிறாரா, என்பதும்
புரியவில்லை !
தமிழ்நாடு என்று சென்னை
இராஜ்யத்துக்குப் பெயர் இருக்க வேண்டும் என்று, நாட்டில்
உள்ள எல்லாக் கட்சிகளும் கூறுகின்றன - அவருடைய ‘சகாக்களே’
கூடத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் கூறுகிறார்கள்.
ஒரு துளி பரபரப்பு, சிறிதளவு மன எழுச்சி கொஞ்சம் ஆர்வம்
தெரிகிறதா? இல்லை! இல்லை! தமிழ்நாடு என்று பெயரா? ஏனாம்?
அதற்கென்ன இப்போது அவசரம்? தெலுங்கரும் மலையாளி களும்,
சென்னை இராஜ்யத்தை தமிழ்நாடு என்றுதான் அழைப்பார்கள்!
நாமே நம்மைத் தமிழ்நாடு என்று அழைத்துக் கொள்ள வேண்டுமா!
- என்று கேட்கிறார்.
பெரியார் ‘தமிழ் நாடு’
என்ற பெயர் பெறக்கூட முடியா விட்டால், நாம் எதற்குத்தான்
யோக்கியதை பெற்றவர்கள் என்று இடித்துக் கேட்கிறார், காமராசர்
இளிக்கிறாரே, தவிர, ஒரு பிரச்சினையாகவே கொள்ள மறுக்கிறார்.
குடகு தனி அமைப்பாக இருத்தல்
வேண்டும் - அதைக் கருநாடகத்துடன் இணைத்தல் கூடாது என்று
கிளர்ச்சி இருக்கிறது - ஒரு ராஜ்ய முதலமைச்சராயிற்றே என்பதால்
இவரிடம் இதுபற்றி முறையிடுகிறார்கள், என்ன பதிலளிக்கிறார்
தெரியுமா இந்த நிபுணர்! குடகு தனி அமைப்பாக இருந்தால்
என்ன, கருநாடகத்தின் நிர்வாகத்தில் இருந்தால் என்ன, இதற்கு
ஏனய்யா தகராறு, இது ஒரு பிரமாதமான பிரச்சினையா? என்று
கேட்கிறார்.
தேவிகுளம், பீர்மேடு ஆகியவற்றினைத்
தமிழர்கள் பெறப் பாடுபடுவீர்களா? என்று கேட்கிறார்கள்
- பதில் என்ன தெரியுமோ? அதற்கான முயற்சியைச் சென்னை சர்க்கார்
கவனித்துக் கொள்கிறது - அதுபற்றி நீங்கள் யாரும் வீணாக
மனதை அலட்டிக்கொள்ள வேண்டாம் - முயற்சிப்போம்; பெறமுடியாது
போனாலும் குடி முழுகிப் போகாது; நாமெல்லாம் ‘இந்தியர்’கள்
தானே, எந்த இடம் யாரிடத்தில் இருந்தால் என்ன?
மைசூர் மைசூர் மக்களுக்கே,
என்கிறார்களே அது அவருக்குப் பிடிக்கவில்லையாம்! வேங்கடம்
முதல் குமரி வரை என்று தமிழர் பேசுகின்றனரே அது அவருக்கு
"அற்ப' விஷயமாகத் தோன்றுகிறதாம்! சென்னை ராஜ்யம் என்ற
பெயர் கூடாது, தமிழ் நாடு என்றுதான் இருந்தல்வேண்டும்
என்கிற விஷயம், சின்ன விஷயமாகி விடுகிறது இந்தப் பெரியவருக்கு!
வடநாடு வளருகிறது தெற்கு
தேய்கிறதே என்று பொருளாதார நிபுணர்களெல்லாம்கூடக் கலக்கமுற்றுப்
பேசுகிறார்களல்லவா, அந்தப் பிரச்சினையும் இவருக்குத் தேவையற்ற
பிரச்சினையாகத் தெரிகிறது! தொழில்கள் வடக்கே இருந்தால்
என்ன, தெற்கே இருந்தால் என்ன, எல்லாம் இந்தியாவில் தானே
இருக்கிறது என்று மிகமிக அலட்சியமாகப் பேசிவிடுகிறார்.
அவருக்குப் பாவம், இத்தகைய
பிரச்சினைகளில் உண்மையிலேயே பழக்கம் இல்லை. எனவே அக்கரை
எழக் காரணம் இல்லை! இவை போன்ற பிரச்சினைகளைப்பற்றிக்
கவனித்தாக வேண்டிய இடத்திலே அவர் அமர்ந்துவிட்டதால், இவரிடம்
இவைகளுக்கெல்லாம் விளக்கம், பரிகாரம், கேட்கிறார்கள்.
அவருக்கோ ஆச்சரியமாகவும் இருக்கிறது, அருவருப்பாகவும்
இருக்கிறது. அவர் கடந்த முப்பதாண்டுகளாக ஒரேஒரு பிரச்சினையைத்தான்
அறிந்திருக்கிறார். இன்றும் அவருக்கு அந்த ஒரே பிரச்சினையிலேதான்
அக்கரை இருக்கிறது-மாடு! மாடு!! மாடு!!
சிங்கம் - ஒட்டகம் - சைகிள்
- ஆலமரம் - குடிசை - கதிரி அரிவாள் - தாமரைப்பூ! - இவைகளெல்லாம்
தோற்கவேண்டும், ‘மாடு’ வெற்றிபெற வேண்டும். இது ஒன்றுதான்
அவருடைய பிரச்சினை - இதிலேதான் அவருக்கு அக்கரை - இதற்குத்
தகுந்த திறமையையும் வசதிகளையும் பெற்றுக்கொள்வதிலேதான்
அவர் காலங்கழிக்கிறார் - இந்த நோக்கம் வெற்றி பெறுவதற்கான
தொடர்புகள் -துணை- தோழமை - கூட்டு - இவைகளிலேதான் அவர்
அபாரமான அறிவாற்றலைக் காட்டுகிறார் - இதுதானா ஒரு ராஜ்ய
முதலமைச்சருக்கு வேலை என்று கேட்டவரிடம், இதைவிட வேறு
வேலை என்ன இருக்கிறது என்று, அவர் கேட்கவே செய்தாராம்!
ஒவ்வோர் ‘ராஜ்ய’முதல்வர்களும்,
இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில், எமக்கு இந்தத் திட்டம்
வேண்டும், இவ்வளவு தொகை வேண்டும் - இராஜ்யங்கள் புதிதாக
அமையும் போது இன்னின்ன பகுதிகள் வேண்டும், இன்னின்ன உரிமைகள்
வேண்டும் என்று கேட்டும், கிளர்ச்சி நடத்தியும் வருகிற
நேரமாகப் பார்த்து, இவர் செய்தது என்ன? ஓட்டகத்தை நுழைய
விடாதீர்கள், சிங்கத்தை விரட்டுங்கள்; அருணாசலம் நல்லவர்
ஆண்டியப்பன் வேண்டியவர், மாடு நல்ல பிராணி மறவாது ‘சூடு
போடுங்கள்’ என்று இந்த "வேலை'யைத்தான் செய்து கொண்டிருந்தார்.
இதுதான் இவருக்கு உகந்த வேலை, இதற்கு மட்டுமே இவர் தம்மைப்
பக்குவப்படுத்திக் கொண்டிருக்கிறார். எனவே நேருவாகப்
பார்த்து, நியாயத்துக்குக் கட்டுப்பட்டு, தமிழரின் உரிமைகளைத்
தந்தால் உண்டே தவிர, தம்பி! காமராஜர் தமது திறமையினால்,
தமிழரின் உரிமையைப் பெற்றுத் தருவர், என்று என்னால் துளியும்
நம்பமுடியவில்லை. கேட்பார் - புள்ளி விவரம் தரப்படும்,
அதைத் தபாலில் அனுப்புவார் - டில்லி இணங்க மறுத்தால் சரி,
போனால் போகட்டும் தேவிகுளம், இங்கு இருந்தால் என்ன அங்கு
இருந்தால் என்ன என்று கூறிவிடுவாரே தவிர, தமிழர் உரிமை
தமிழகம், இவைபற்றித் துளியும் அக்கரை காட்டமாட்டார். நாம்
தான் அவரைப் பச்சைத் தமிழர் என்று பாராட்டுகிறோம் - அவர்,
மொழி, இனம். நாட்டு உணர்ச்சிகளுக்குத் தமது உள்ளத்தில்
இடமளித்துப் பழக்கப் பட்டவரே அல்ல - அவருக்குச் சுறுசுறுப்பும்
தெம்பும் தரக்கூடிய ஒரே பிரச்சினை, ‘ஓட்டு வேட்டை' ஒன்றுதான்.
வேறு எதிலும் அவருக்கு அக்கரையும் கிடையாது, பயிற்சியும்
ஏற்பட்ட தில்லை - வேறு எல்லாப் பிரச்சினைகளும் அவருக்குச்
‘சின்ன விஷயம்’- ஆகட்டும் பார்க்கலாம் - அதனால் என்ன,
என்பவைகளே!!
அன்புள்ள,

6-11-1955