அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


பொருத்தம் - 1
2

பொருத்தத்திற்குத் திட்டவட்டமோ இலக்கணமோ இல்லை.

காலம், இடம், கருவி, முறை பொருந்தியிருக்கும்போதே பொருத்தமறிய வாய்ப்புண்டு.
காலத்துக்கேற்ற செயல், செயலுக்கேற்ற காலம்

சமூகச் செயலுக்குப் பொருத்தம் தேவை

இதனை, இதனால், இவன்: எளிய சொற்கள்: பொருள் பொதிந்த விளக்கங்கள்
உண்மை உணரத் தெளிவு, துணிவு தேவை


தம்பி,
அலுவலக உரிமையாளரைத் தாறுமாறாக ஏசி, அவர் மீது கணக்கேடுகளை வீசிக் கலகம் விளைவித்தவரைப் போலீசிடம் ஒப்படைக்க வேண்டியது முறையாயிருக்க, அதே அலுவலகத்தில் அவருக்குப் பரிசும் பாராட்டும் பதவி உயர்வும் கிடைத்த விந்தைக்கான காரணம் பற்றி அடுத்த கிழமை தெரிவிப்பதாகச் சென்ற கிழமை சொல்லியிருந்தேனல்லவா, சொல்லுகிறேன்.

உள்ளே உட்கார்ந்திருந்த முதலாளியைக் கண்டபடி ஏசினாலே போதும், அவர் கடுங்கோபம் கொண்டு இந்த வெறியனைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுங்கள் என்று முதலாளி உத்திரவிடுவார் என்றுதான் எதிர்பார்த்தார், தூற்றியவர். உள்ளே இருந்தவரோ ஆடவில்லை அசையவில்லை, ஏன் என்று ஒரு வார்த்தை கேட்கவில்லை. பிறகுதான் கணக்கேடுகளை வீசினார். அலுவலகப் பணியாளர் பலரும் வந்து குழுமினர். அப்போதும் ஒரு வார்த்தை பேசவில்லை, உள்ளே இருந்தவர்.

வீசப்பட்ட கணக்கேட்டிலே ஒன்று, தலை மீது பலமாக வீழ்ந்தது; பதறிப்போய்ப் பணியாளர்கள் உள்ளே சென்றனர் முதலாளிக்குப் பாதுகாப்பளிக்க. அவர்கள் கண்ட காட்சியோ அவர்களைத் திடுக்கிட வைத்தது.

கணக்கேடு வீழ்ந்ததால், தலைப்பாகை மட்டுமல்ல, செயற்கை முடியும் கீழே வீழ்ந்தது; உட்கார்ந்திருந்த ஆசாமி பதறி எழுந்திருக்கக் கண்டனர்.

பொய் முடி! முதலாளிபோல வேடம்! முதலாளி அல்ல!!

ஆ! ஆ! என்று அலறினர். வேடமிட்டோன் தப்பி ஓட முயன்றான்; பிடித்தனர்; நையப் புடைத்தனர்.
நடைபெற்றது என்னவென்றால், உண்மையான முதலாளி யைக் கண்டுபேசவந்த ஒரு கயவன், அவரைக் கட்டிப்போட்டு ஒரு பேழையில் அடைத்துவிட்டு, அவர் போலவே வேடமணிந்து கொண்டு, அலுவலகப் பொருளைக் களவாடிக் கொண்டு எவரும் சந்தேகிக்காதபடி தப்பிச் செல்லத் திட்டமிட்டிருந்தான்.

கயவன் செய்ததனை எவரும் அறிந்துகொள்ளவில்லை.

சற்றுத் தொலைவிலிருந்து பார்ப்பவருக்கு அவன் உண்மையான முதலாளி போலவே தோற்றமளித்தான். எவரும் எந்தவிதமான ஐயப்பாடும் கொள்ளாமல், அவரவர் தத்தமது அலுவலைக் கவனித்து வந்தனர்.

தூற்றினாரே அவராகிலும் இந்தச் சூது தெரிந்து கொண்டாரா என்றால், இல்லை. அவர் உண்மையான முதலாளியைத் தூற்றுவதாகத்தான் முழுக்க முழுக்க எண்ணிக் கொண்டிருந்தார். அவர் வீசிய கணக்கேடு, கயவன் தலைமீது வீழ்ந்து, வேடத்தைக் கலைத்து விட்டது; உண்மையை
அம்பலப்படுத்திற்று.

முதலாளி கட்டி அணைத்துக் கொள்கிறார்; அலுவலகப் பணியாளர்கள் பாராட்டுகிறார்கள்; போலீஸ் துறையினர் புகழ்கிறார்கள், திகைத்துக் கிடப்பவரை, என்ன எண்ணிக் கொண்டார்கள் என்றால், கயவன் இப்படி ஒரு சூது செய்திருக்கிறான் என்பதை எப்படியோ கண்டறிந்து, அவனைத் தூற்றியும் தாக்கியும், அலுவலகத்தாரை அவ்விடம் கூடும்படி செய்தும், தந்திரமாக முதலாளியைக் காப்பாற்றிவிட்டார், நீண்ட காலமாக அந்த அலுவலகத்தில் அக்கறையுடன் பணியாற்றி வந்தவர் என்று எண்ணிக் கொண்டனர்.

நீ இருக்கிற வரையில் எனக்கு ஒரு ஆபத்தும் வராது; ஒரு பயலும் என்னை ஒன்றும் செய்துவிட முடியாது என்பது எனக்குத் தெரியும் என்று கூறிப் பாராட்டுகிறார் முதலாளி.

முதலாளியாம், முதலாளி! முகத்தைப் பார்!! உன்னைப் போய் முதலாளி என்று கூறவேண்டி இருக்கிறதே! - என்று கூச்சலிட்டாரே, அப்போது, என்ன இப்படி வெறி பிடித்தவர் போலப் பேசுகிறாரே என்று எண்ணிக் கொண்டேன்.

இப்போதல்லவா தெரிகிறது, உள்ளே இருப்பவன் ஒரு கயவன், வேடதாரி, உண்மையான முதலாளி அல்ல என்று எப்படியோ தெரிந்து கொண்டுதான் அப்படியெல்லாம் பேசினார் என்பது என்று புகழ்கிறார் அலுவலகத்தார் ஒருவர்.

துப்பறியும் இலாக்காவிலே உள்ளவர்களுக்கு மட்டும், இவருக்கு உள்ள திறமையிலே நா-லே ஒரு பாகம் இருக்குமானால், குற்றம் செய்பவன் தப்பித்துக் கொள்ள முடியுமா என்று பெருமிதத்துடன் பேசுகிறார் பெரியவரொருவர்.

திட்டமிட்டு வேலை செய்தார் என்றே எல்லோரும் நம்பிக் கொள்கிறார்கள். அவரே மறுத்துப் பார்க்கிறார்; அடக்கத்தின் காரணமாக அவ்விதம் பேசுகிறார் என்று கூறி, மேலும் பாராட்டுகிறார்கள்.
பிறகு பரிசும் பாராட்டும் பதவி உயர்வும் எப்படிக் கிடைக்காமலிருக்கும், தமது அபாரமான திறமையால் அலுவலகத்தில் நடைபெற இருந்த கொள்ளையைத் தடுத்த தீரர் என்ற பட்டம் கிடைத்தது.

தம்பி! இதுபோலத் தற்செயலாக நடைபெற்று விடுகிற சில நிகழ்ச்சிகளைக் கொண்டு, ஒரு முடிவுக்கு வருவது மிக மிகத் தவறு.

இவர் ஒன்று எண்ணிக் கொண்டு வேலை செய்தார்; அது வேறொன்றாகப் போய் முடிந்தது. இதனை அறியாதவர்கள் என்ன முடிவுக்கு வருவார்கள்? எத்தகைய கபடத்தையும் கண்டறிந்து
உடைத்தெறியக்கூடிய திறமை படைத்தவர் இவர் என்றுதானே!!

சரியா அது! முழு உண்மையைத் தெரிந்து கொண்டவர்கள் கூறுவார்கள், இந்த முடிவு சரி அல்ல என்று.

எனவே தம்பி! ஒருவர் ஒரு குறிப்பிட்ட செயலாற்று வதற்குப் பொருத்தமானவரா என்பதனைத் தெரிந்து கொள்வது எளிதானதல்ல; இடையிலே தவறான முடிவுக்கு நம்மை இழுத்துச் செல்லும் நிலைமைகள், நினைப்புகள் நிகழ்ச்சிகள் எழக்கூடும்.

அவைகளின் தன்மையையும் கண்டறிய வேண்டும்; முழு உண்மையையும் தெரிந்து கொள்ள வேண்டும், "பொருத்தம்' இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிந்து முடிவு கட்ட, "பெரியவரே! தங்களுக்கு வயது 90 என்கிறார்களே, இவ்வளவு நீண்ட காலம் வாழ்ந்திருக்க, தாங்கள் மேற்கொண்டுள்ள முறை என்ன? தாங்கள் எவ்விதமான உணவு உட்கொள் கின்றீர்கள்? பொழுதுபோக்கு என்ன?'' என்று கேட்கப் படுவதுண்டு; நீண்ட காலமாக வாழ்ந்து வருபவர் கூறிடும்
முறைப்படி வாழ்ந்து வந்தால் நாமும் நீண்டகாலம் வாழ்ந்திடலாம் என்ற நினைப்பினால், நீண்ட காலம் வாழ்வதற்குப் பொருத்தமான யோசனையை அவருடைய பேச்சிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில்.

முதியவர் ஒருவர்; "ஐயா! நான் அதிகமாக அலைவதில்லை. அளவோடு சாப்பிடுகிறேன். எந்தவிதமான கெட்ட பழக்கமும் இல்லை. சுருட்டுக் கூடக் குடிப்பதில்லை'' என்கிறார். ஓ! நீண்ட காலம் வாழ இவர் வாழ்ந்துவந்த விதம் பொருத்தமான முறை என்று எண்ணிடத் தோன்றும்.

அலைச்சல் அதிகம் சர்ச்சிலுக்கு; பரபரப்பு மூட்டிடத்தக்க செயல்களுக்கு நடுவிலேயே உழன்றவர். ஓயாமல் பெரிய பெரிய சுருட்டுகளைக் குடித்தபடி இருந்தவர். அவரும் மிக நீண்ட காலம் வாழ்ந்திருந்தார். நீண்ட காலம் வாழ்ந்திருக்கப் பொருத்தமான முறை என்ன என்று சர்ச்சி-டம் கேட்டால் பதில் என்ன கிடைத்திருக்க முடியும்!!

"பொருத்தமானது' என்பது தம்பி! எல்லாக் காலத்துக்கும் எல்லா இயல்பினருக்கும் ஒரே விதமானதாக இருந்திடும் என்று எண்ணுவதே தவறு. தென்றல் குளிர்ச்சி தரும், வாடைக்காற்று வறட்சி தரும், குளிர் நடுக்கம் தரும், வெப்பம் புழுக்கம் தரும் என்று திட்டவட்டமாகக் கூறிட முயல்வதுபோல், "பொருத்தம்' இதற்கும் இதற்கும் இருந்திடும் என்று திட்டவட்டமாகக் கூறிட முடியாது. தென்றலும் திங்களும்கூட நெருப்பாகிவிடுமாமே, காதல் பிடியில் சிக்கிக் கலங்கிக் கிடப்பவர்க்கு.

எனவே, "பொருத்தம்' எது என்பதனைத் திட்டவட்டமாக எடுத்துக் கூறிடும், கணக்கேடு இல்லை, இலக்கண ஏடும் இல்லை; ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொருவரும் தத்தமது அறிவுத் தெளிவின் துணைகொண்டு, "பொருத்தம்' எது, எப்படி, எதனால், என்பது பற்றிக் கண்டறிய வேண்டும்.
ஆனால் சில பொதுவிதிகள் உள்ளன, "பொருத்தம்' அமைந்திட.

காலம், இடம், கருவி, முறை என்பவைகளை நன்கு ஆராய்ந்து தேர்ந்து எடுத்துச் செயல்படும்போது வெற்றி கிட்டிட வாய்ப்பு பெருமளவு இருக்கிறது.

காலமும் இடமும், கருவியும் முறையும் "பொருந்தி' இருக்கும்போது செய-லே வெற்றி கிடைத்திடுவதற்கான வாய்ப்பு நிரம்ப இருக்கிறது.

எந்தச் செய-லே நமக்கு நாட்டம் ஏற்பட்டு அதிலே நம்மை ஈடுபடுத்திக் கொள்வதானாலும் காலம், இடம், கருவி, முறை பற்றிய தெளிவு இருந்தாக வேண்டும்.

எத்தகைய செயலுக்கு எத்தகைய காலம், இடம், கருவி, முறை தேவை என்பதனை அறிந்துகொள்ளாமல், ஆற்றல் இருக்கிறது, ஆகவே நாம் மேற்கொள்ளும் செயலில் நமக்கு வெற்றி எப்படியும் கிடைத்தே தீரும் என்று எண்ணிக் கொள்வது, நம்பிக்கை அல்ல, ஏமாளித்தனம், தம்பி! காலம், இடம், கருவி முறை என்று நான் கூறும்போது, ஜோதிடர்கள் சொல்கி றார்களே, அமாவாசை கழிந்த ஆறாம் நாள் என்றும் வடமேற்குப் பக்கத்திலே இருந்துதான் உங்களுக்கு வரப்போகிறது. அதிர்ஷ்டம் என்றும், இந்தக் கங்கணத்தைப் பதினெட்டு நாள் பூஜையில் வைத்திருந்து பிறகு, வலக்கையிலே கட்டிக் கொள்ளுங்கள் நினைத்தது நடந்தே தீரும் என்றும் சொல்கிறார்களே, அதனைக் குறிப்பிடுவதாக எண்ணிக் கொள்ளாதே, நான் ஆரூடக்காரரின் துணையைத் தேடச் சொல்லவில்லை; அறிவுத் தெளிவினைத் தேடித் தேடிப் பெற்றிடக் கேட்டுக் கொள்கிறேன்.

நமது மக்களிலே மிகப் பலர் - படித்தவர்களிலேயே மிகப் பலர் - இன்னமும் இந்தப் "பொருத்தம்' காண ஆரூடக்காரரை நாடிக்கொண்டிருக்கிற அவல நிலையில் உள்ளனர்; என் செய்வது!

ராகு காலம், குளிகை காலம், கரி நாள், மரணயோகம், சகுனம் என்பவை பற்றி அழுத்தமான - ஆனால் பொருளற்ற நம்பிக்கைக் கொண்டுள்ளவர்கள் நிரம்பப்பேர் இருக்கிறார்கள்.

அந்தப் பொருளற்ற நம்பிக்கை பற்றிப் பகுத்தறிவாளர் அலசிக் காட்டிடும்போது, சிரிக்கக் கூடிச் செய்கிறார்கள்; ஆனால் அந்த மூட நம்பிக்கையின் பிடியிலிருந்து விடுபட மட்டும் மறுக்கிறார்கள்.

எங்கோ நெடுந்தொலைவிலே உள்ள விண் மீன்களே! இங்கே நடைபெறும் நல்லனவற்றுக்கும் அல்லனவற்றுக்கும், உங்கள் பேரிலே பாரத்தை தூக்கிப் போட்டுக் கொண்டி ருக்கிறார்களே மாந்தர், இதனை நீங்கள் அறிவீர்களா என்று கருத்துத் தெளிவுள்ள பேரறிஞர்கள் கேலிக் குரலில் பேசி யுள்ளனர். பயன்? நாம் மகிழத்தக்க அளவு ஏற்படவில்லை.

ஆகவேதான், காலம், இடம், கருவி, முறை என்று நான் குறிப்பிடும்போது, எனக்கே ஒரு அச்சம் வந்து விட்டது, ஆரூடக்காரன் பேசும் காலம், இடம், கருவி முறையும் நான் கூறுவதும் ஒன்று என்று எங்கே எவரேனும் எண்ணிக் கொண்டு விடுகிறார்களோ என்று.

காலமறிந்து செயலாற்ற வேண்டும்; செயலுக்கேற்ற காலத்தைக் கண்டறிய வேண்டும் என்பது பற்றி வள்ளுவர் தந்துள்ள அறிவுரை அருமை மிக்கது. எளிதில் உணர்ந்திடத் தக்கது, பக-லே காக்கை ஆந்தையை வென்றுவிடும். அறிவாய ல்லவா என்று கேட்டிருக்கிறார். ஆந்தை பகலில் கண்மூடிக் கிடக்கும்; அப்போது அதனை வென்றிடக் காக்கையால் முடியும்!

தண்ணீருக்குள் இருக்கும் முதலை எதனையும் இழுத்துக் கொன்றுவிடும், தண்ணீரைவிட்டு முதலை வெளியே வந்தாலோ, எதுவும் அதனைக் கொன்று விடும் என்கிறார்.

எந்தச் சமயத்தில், எந்த இடத்தில், எவ்விதமான வலிவு இருக்கும் என்பது பற்றிய கணக்குத் தெரியாமல், செயல்பட்டால், வெற்றி எங்ஙனம் கிட்டும்?

போர் முறை, உழவு முறை, வாணிபம், அரசியல் முறை, காதல் முறை எனும் எதிலேயும் காலம், இடம், கருவி, முறை அறிந்தாலன்றிச் செம்மையான முறையிலே செயல் அமைந்திடாது.

இந்தச் செயல் இந்தக் காலத்திற்குப் பொருத்தமானது; இந்த இடத்துக்குப் பொருத்தமான செயல், இதுவே! இந்தச் செயலுக்குப் பொருத்தமான கருவி இஃதே; இந்தச் செயலுக்கு மேற்கொள்ள வேண்டிய முறை, இதுவே என்று கண்டறியும் திறனை, ஆட்சி நடாத்துவோருக் காக மட்டுமல்ல, அனைவருக்குமே வள்ளுவர் வலியுறுத்திக் கூறுகிறார் என்று கொள்ள வேண்டும்.

காலம், இடம், கருவி என்பவை பொருத்தமாக அமைக்கப்பட்ட பிறகு செய-லே ஈடுபட்டிருக்கும்போது இடையிலே, இவைகளிலே ஒன்றோ பலவோ கெட்டுப்போவது உண்டு, ஆனால் "முறை' இருக்கிறதே, அது, இந்தப் புதிய நிலைமையில் யாது செய்திட வேண்டும் என்ற அறிவினைத் தந்திடத் துணை செய்திடும்.

காடு நுழைந்து சென்றால், மாற்றானின் பாசறையை அவன் அறியாவண்ணம் சுற்றி வளைத்துக் கொண்டு அழித்திட வாய்ப்பாக இருக்கும்; அதிலும், மேகம் கருத்திருக்கும் இந்தக் காலம் அதற்கு ஏற்றது என்று எண்ணிப் படையைச் செலுத்திடுகையில், எங்கோ நெடுந்தொலைவில் பெருமழை
பெய்ததால் காட்டாறு கரைபுரண்டு ஓடிவரக் கண்டால், இடம், காலம், முறை ஆகியவற்றினைப் பொருத்தமுற அமைத்துக் கொண்டும், எதிர்பாராத இந்த இடையூறு வந்துற்றதே என்று எண்ணிக் கலங்கிடத் தோன்றும். ஆனால், அந்த நிலைமையில், போர் முறையில் தக்க மாற்றத்தைக் கண்டறிந்து செயல்படும் நுண்ணறிவு இருந்திடுமானால், கலக்கம் பீடித்துக் கொள்ளாது; வெற்றிக்கு வழி கிடைக்கும்.

எத்தனைத் திறத்துடன் காலம், இடம், கருவி, முறை ஆகிய பொருத்தம் அமைத்துக் கொண்டாலும், ஏதாகிலும் இன்னல் கிளம்பி எடுத்த காரியத்தைக் கெடுத்திடுமோ என்ற அச்சமும்
ஐயப்பாடும் கொண்டு, காலமாவது இடமாவது, பொருத்த மாவது, பார்ப்பதாவது என்று எண்ணிக் கொள்வது பேதைமை!

இடையிலே என்னென்ன இன்னல் வந்திடக் கூடும் என்பது பற்றிய தெளிவினை நாம் போதுமான அளவு பெற முடியாமற் போய்விட்டதன் மூலம், அதற்கான தெளிவைச் செம்மைப் படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உறுதிதான் பெற்றிட வேண்டும்.
பல துறைகளிலே மனித முயற்சியும் உழைப்பும் நேரமும் நினைப்பும் பாழ்பட்டுப் போவதன் அடிப்படைக் காரணம், தெரிந்து செயல்படாததேயாகும்; பொருத்தமான முறையில் செயல்படாததேயாகும்.

நம்மில் ஒவ்வொருவரும் மேற்கொள்ளும் செயலுக்கு, காலம், இடம், கருவி, முறை இவை பொருத்தமாக இருக்கிறதா என்பது பற்றிய தெளிவு பெற்றிட வேண்டும். ஆனால் தம்பி!

எல்லாச் செயலையும் நாமே செய்து கொண்டிருக்க இயலுமா!

எத்துணை வல்லமை மிக்கவரெனினும், எல்லாச் செய-னையும் ஒருவரே மேற்கொள்ள முடியாதல்லவா! ஆகவே, நாம் விரும்பும் செயலை, அல்லது நமக்குத் தேவைப்படும் செயலை, நாமேயன்றி, மற்றவர்களைக் கொண்டும் செய்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அப்போது எந்தச் செயலுக்கு எவர் பொருத்தமானவர் என்று கண்டறியும் பொறுப்பு நமக்கு ஏற்படுகிறது இந்தப் பொறுப்பினுக்குத் தேவைப்படும் திறம் நமக்கு இருந்தாலொழிய, எந்தச் செய-லும் வெற்றி கிட்டிடும் நிலையை நாம் காண முடியாது.

மனித குலத்தின் வளர்ச்சியிலே, தம்பி! இப்போது ஏற்பட்டுள்ள கட்டம், ஒவ்வொருவரும் தத்தமக்குத் தேவையான வைகளைப் பெற்றிடத் தாமே செயலாற்றிட வேண்டும் என்ற நிலையில் இல்லை; மாறிவிட்டிருக்கிறது.

அடவி சென்று வேட்டையாடி, இறைச்சியைத் தின்று தோலை ஆடையாகக் கொண்டு, குகையினில் பதுங்கிக் கிடந்த காலத்தில் ஒவ்வொருவரும் தத்தமது தேவைகளைப் பெறத் தாமே செயலாற்றி வந்தனர், அந்தக் காலத்தில், மனிதனுடைய தேவைகளுக்கும் மிருகங்களின் தேவைகளுக்கும் அதிக வித்தியாசம் இல்லை; ஆகவே, செயல் முறைகளிலும் அதிகமான வித்தியாசம் இல்லை.

தன் வாழ்வுக்குத் தன் வலிவினையே நம்பி இருந்திட்ட நிலை.

இன்று, முறைகள் மாறிவிட்டன, தேவைகள் பெருகிவிட்டன; வளர்ந்தபடி உள்ளன; அளவு வகை இரண்டிலும்.

எனவே, தானே செய்துகொள்ளக்கூடியவை என்பவைகளுடன், தனக்காக மற்றவர்கள் செய்யக்கூடியவை என்பவைகள் சேர்ந்துவிட்டுள்ளன.

மற்றப் பலருடைய செயல் திறமையால் கிடைத்திடும் பொருள் பெற்று இன்றைய மனிதன் தன் தேவைகளைப் பெற்று வாழ முற்பட்டிருக்கிறான்.

எனவே, தானே மேற்கொள்ளும் செயலுக்குப் "பொருத்தம்' பார்ப்பது மட்டுமன்றி, தனக்காக மற்றவர்கள் செய்திடும் செயல்களுக்கும் பொருத்தம் பார்த்திட வேண்டியவனாகிவிட்டான்.

வயலில் உழவு செய்திடுகிறான், காலமறிந்து, முறை அறிந்து; அந்த வயலுக்கு உரம் வேண்டும்; முன்பு உழவன் தானே பசுந்தழையை உரமாக்கிக் கொண்டான்! இப்போது, "உரம்' வேறுவகையானதாகி விட்டது; இந்த வகையான உரத்தை உழவனே செய்துகொள்ள முடியாது; உழவனுக்காக இந்த உரம் தயாரிக்கும் வேலையை வேறு சிலர் மேற்கொண்டுள்ளனர்.

எனவே, இப்போது உழவன் காலம், இடம், கருவி, முறை இவற்றின் பொருத்தமறிந்து பண்ணையம் செய்தால் மட்டும் போதும் என்ற நிலை இல்லை; உழவனுக்காக உரம் தயாரிப்பவர்களும், காலம், இடம், கருவி, முறை ஆகியவற்றினைப் பொருத்தமுள்ளதாக்கிச் செயல்பட்டாக வேண்டும். இதுபோன்றே வேறு பலப் பல துறைகளிலும். எனவே, இன்று "பொருத்தம்' சமூகத்தில் அமைந்துள்ள எல்லாச் செயல் துறைகளிலும் செம்மையாக இருந்தாக வேண்டியதாகிவிட்டது சமூகத்தில் அமைந்துள்ள செயல் துறைகளில் ஏதேனும் ஓர் முனையில்
பொருத்தமற்ற செயல் நடைபெற்றுவிட்டால், அதனால் விளையக்கூடிய கெடுபாடு சமூகம் முழுவதிலும் பரவி விடுகிறது.

எனவே சமூகத்தில் அமைந்துள்ள ஒவ்வொரு செயல் துறையிலும், பொருத்தம் அமைந்திருக்க வேண்டும்.

இந்தப் பொருத்தம் செம்மையாக அமைந்திருக்க வேண்டிய பொறுப்பினை மேற்கொண்டிருக்கும் அமைப்பே அரசு.

இத்துணைப் பெரிய, இவ்வளவு முக்கியமான பொறுப்பினை மேற்கொள்ள வேண்டுமானால், அந்த (அமைப்பு) அரசு, அதற்குப் பொருத்தமானதாக இருந்திட வேண்டும்; அமைந்திட வேண்டும்.

அரசு அவ்விதமாக அமைந்திட வேண்டுமானால், அரசினைப் பொருத்தமானதாக அமைத்திடும் திறமை மக்களுக்கு இருக்க வேண்டும்; ஏனெனில், இப்போது அரசு அமைக்கும் பொறுப்பு மக்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

எனவே, மீண்டும் தனி மனிதனின் திறமை பற்றிய பிரச்சினைக்கே வந்து சேருகிறோம்.

பொருத்தமான அரசு அமைத்திடும் திறனைத் தனித் தனி மக்கள் போதுமான அளவு பெற்றிருப்பார்களானால், சமூகத்தில் உள்ள பல்வேறு செயல் துறைகளிலும் பொருத்தமானவர்கள்
பொருத்தமான முறையில் பணியாற்றிச் சமூக மேம்பாடு பெற்றளித்திடுவர்.

முடியாட்சிக் காலத்தில், மன்னன் இந்தப் பொறுப்பினை மேற்கொண்டிருந்தான்; அமைச்சு, போர்த்துறை, வாணிபத் துறை, உழவுத்துறை, அறிவுத்துறை எனும் பல்வேறு துறைகளில் தக்கார்
இருந்து, தக்கன செய்திட வழி கண்டிடும் பொறுப்பினை மேற்கொண்டிருந்தான். அந்தப் பொறுப்பினை மன்னன் செம்மையாக நிறைவேற்றிடத் தேவைப்படும் அறிவாற்றல் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய வழிவகை பற்றியும் எடுத்துக் கூறப்பட்டுள்ளவைகள் அனைத்தும் இன்று மக்கள் தமக்காகக் கூறப்பட்டவை என்று கொள்ள வேண்டும்; ஏனெனில், இப்போது நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்! அல்லவா தம்பி!

ஆகவே,
இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து அதனை அவன் கண் விடல் என்று திருவள்ளுவர் கூறியது அரசனுக்காக மட்டுமே, நமக்கல்ல என்று கருதிடலாகாது; நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்! ஐந்தாண்டுகளுக்கு ஒரு நாளாகிலும்!!

இதனை
இதனால்
இவன்
எவ்வளவு எளிய சொற்கள், தம்பி! எவ்வளவு தாராளமாக இந்தச் சொற்களைப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால், இந்தச் சொற்களைப் பற்றிய பொருளினை எண்ணிப் பார்த்திடேன்!

எத்தனை சரிவுகள் சருக்கல்கள்; சதுப்புகள் உள்ளன என்பது புரியும்.

இதுதானே! - என்று மிக அலட்சியமாகப் பேசி விடுகி றோம். ஆனால் "இது' என்று "எதை'ச் சொல்கிறோமோ, "அது' அவ்வளவு எளிதானது அல்ல என்பதனை "அதனை'ப்பற்றிய முழு விவரம் தெரிந்திட முனையும்போது புரியும்; புன்னகை மறையும்.

அதிலும் இன்று ஆட்சியிடம் போய்ச் சேர்ந்துள்ள பொறுப்புகளைப் பார்த்திடும்போது, தலையே சுற்றும்; அவ்வளவு பெரிய அளவு; பலவகையினதாக இருந்திடக் காண்கிறோம்.

பொருள் ஈட்டிடல், காத்திடல், வகுத்திடல் என்பவை, ஒரு திறமை மிக்க நல்லரசு இருந்தாலொழிய இயலாது என்று கூற வேண்டிய காலம்.

அரசு மேற்கொள்ளும் செயல்களின் வகை பலப்பல என்பது மட்டுமல்ல, தம்பி! அந்த வகையும் அளவும் நாளுக்கு நாள் வளர்ந்தபடி உள்ளன.

ஆகவே, "இதனை' என்ற ஒரு எளிய சொல்லுக்குள் பின்னிப் பிணைந்து கிடந்திடுபவைகளைப் புரிந்து கொள்ளுவது எளிதான காரியமல்ல.

எடுத்துக்காட்டுக்காக ஒன்று கூறட்டுமா, தம்பி! தொழில் வளர்ச்சி என்பதனை "இதனை' என்பதற்குப் பொருளாகக் கொள்வோம்.

தொழில் வளர்ச்சி (இதனை)யைத் திட்டமிட்டுச் செய்திட வல்லவன் நல்லான் (இவன்) என்று கண்டறிந்து, அந்தத் தொழில் வளர்ச்சியை (அதனை) நல்லானிடம் (அவன்கண்) ஒப்படைக்க வேண்டும் (விடல்).

புரிந்துவிடுகிறதல்லவா! ஆம்! என்கிறாய். ஆனால், தம்பி!

தொழில் வளர்ச்சி என்று பொதுவாகக் கூறிடுகிறோமே, போதுமா!

எத்தகைய தொழில் வளர்ச்சி?

எந்த முறையில் அந்த வளர்ச்சி அமைவது?

எவருடைய நலனுக்காக அந்தத் தொழில் வளர்ச்சி தேவை?

இவைகள் எண்ணிப் பார்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் அல்லவா?

டாட்டா, பிர்லா, பஜாஜ், டால்மியா, சிங்கேணியா, டி.வி.எஸ்., கோத்தாரி, சங்கர், சேஷசாயி, இப்படி ஒரு குழுவிடம் ஒப்படைத்தால் தொழில் வளர்ச்சி நிச்சயம் ஏற்படும். திட்டமிடுவதில் வல்லவர்கள்; நிர்வாகத் திறமை மிக்கவர்கள்; இலாபம் பெறத் தெரிந்தவர்கள்; இல்லை என்பார் இல்லை. ஆனால், இந்தக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டு ஏற்படும் தொழில் வளர்ச்சி, யாருக்குப்
பயன்படும்? முதலாளிகட்கு. மறுப்பார் உண்டா?

முதலாளிகளின் இலாப நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே அந்தத் தொழில் வளர்ச்சி இருந்திடும், மக்களின் வாழ்க்கைத் தேவைகளுக்கான முறையில் உற்பத்தி அமையாது; இலாபம் தரத்தக்க பொருள்களாக உற்பத்தி செய்யப்படும். வெண்ணெய் உற்பத்தியில் கிடைப்பதை விடச் சுண்ணாம்பு உற்பத்தியில் இலாபம் அதிகம் என்று கணக்குக் காட்டி டின் வெண்ணெய் உற்பத்தியை நிறுத்தி விடுவார்கள்.

தொழில் வளரும், ஆனால், அதன் விளைவாக முதலாளித்துவ முறை வளரும்.

மாளிகைகள் எழும்; வண்ணமிக்கன! ஆனால் யந்திரங்க ளாக்கப்படுவர் ஏழை மக்கள்!

பன்னீரில் குளித்திடுவர் சிலர்; பல்லோர் கண்ணீர் பொழிவர்!

அனால், எட்டே தொழிற்சாலை இருந்த இடத்தில் எண்பது எழும்! தொழில் வளர்ச்சி காட்டும்.

தொழில் வளர்ச்சிக்கான திட்டத்தை நிறைவேற்றத்தக்கவர் இன்னார், அவரிடம் தொழில் வளர்ச்சிக்கான பொறுப்பை ஒப்படைக்கலாம் என்ற முடிவெடுக்கும்போது, நாம் எந்தவிதமான தொழில் வளர்ச்சியைக் காண விரும்புகிறோம் என்பதைத் பொறுத்துத்தான் பொருத்தமான முடிவெடுக்க முடியும்.

இப்போது இதனை இவனால் என்ற இரு எளிய சொற்களுக்கும் எத்தனை சுவை சேர்ந்துவிடுகிறது.
கவனித்தனையா தம்பி! சுவை இருக்கட்டும், "இவன்' யார் என்பது பற்றிய "ஆய்வு' எத்தனை சிக்கலைக் கிளப்பி விடுகிறது என்பதனைப் பாரேன்; திகைத்திட வைக்கும்.

இடையிலே, தம்பி! ஒரு சொல்லை விட்டு வைத்துள்ளேன்; மறந்துவிடாதே.
இதனை
இவனால்
என்ற இரு சொற்களுக்கு இடையில் "இதனால்' என்றோர் சொல் இருக்கிறது.

இதனை (இந்தச் செயலை) இவன் முடிப்பான் என்று அறிந்து அந்தச் செயலை அவனிடம் ஒப்படைப்பது என்று மட்டும் கூறிவிட்டால், பொருள் முழுமை பெறவில்லையே.

இதனை இவன் முடிப்பான் என்று எதைக் கொண்டு கண்டுபிடிப்பது என்ற சிக்கல் எழுமல்லவா? ஆகவேதான், இதனை இவன் எனும் இருசொற்களுக்கு இடையில் "இதனால்' என்ற சொல்லை இணைத்தளிக்கிறார் வள்ளுவர்.

இவன், இன்ன திறனுடையான், இன்ன தகுதியுடையான், இன்ன நினைப்புடையான், இன்ன கருவியுடையான், இன்ன முறையுடையான், இன்ன அனுபவமுடையான், ஆகவே, அவனிடம் அந்தச் செயலை ஒப்படைக்கலாம் என்ற முடிவுக்கு வரச் சொல்லுகிறார்.

சிற்பி சீருடையான் பேரூரில் சமைத்த சிலை அருமை மிக்கது.

சிற்பி சீருடையானிடம் சிற்பக்கலைக்குத் தேவையான கருவிகள் பாங்குடன் உள்ளன.

சிற்பி சீருடையான் சிற்பம் செதுக்கித் தந்திடுவதில் மிகுந்த ஆர்வமுடையான்.

ஆகவே, சிற்பி சீருடையானிடம் பாராண்டான் சிலை சமைக்கும் பணியினை ஒப்படைக்கலாம்.

இப்படி ஒரு முடிவு செய்வதுபோல, "இதனை'ச் செய்திட "இவன்' என்ற முடிவு செய்திட, அவனிடம் உள்ள
திறமை
முறை
கருவி
வாய்ப்பு
ஆர்வம்
அனுபவம்
என்பவைகளை ஆய்ந்து அறிந்திட வேண்டும். இவ்வளவும், "இதனால்' என்ற சொல்லிலே அடங்கிக் கிடக்கிறது.

ஆகவே தம்பி! செய்யப்பட வேண்டியது பற்றிய தெளிவும், செய்வோனின் திறன் அறியும் தெளிவும் வேண்டும்; அந்தத் தெளிவு பெற்று "அதனை அவன்கண் விட' வேண்டும். நாம் இந்த முறையில் செயலாற்ற வல்லவர்கள் என்று நம்பித்தான், மக்களாட்சி முறை இங்கு நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால், நமக்குள்ளே பேசிக் கொள்வோம் தம்பி!
இதனை இதனால்
இவன் முடிக்கும்
என்று அறிந்து தெளிந்து, அரசு அமைக்கிற நிலையிலா நாட்டவர் உள்ளனர்? அந்த உரிமை நாட்டு மக்களுக்கு நிச்சயமாக இருக்கிறது; ஆனால், அந்த உரிமையின் சுவை மிகு பயனைப் பெறத்தக்க விதமாக மக்கள் செயல்பட முடிகிறதா! எத்தனை மயக்கம் குறுக்கிடுகிறது! எது எதை எண்ணி எண்ணித் தயக்கம் காட்ட வேண்டி ஏற்பட்டு விடுகிறது! இது எப்படி, அது எப்படி என்று எண்ணுவதாலே எத்தனைக் குழப்பம் ஏற்படுகிறது!

எந்தக் காரியத்துக்கு எவர் பொருத்தமோ அவரிடம் அந்தக் காரியத்தை ஒப்படைக்க வேண்டும் என்ற தத்துவத்தை மறுக்க மாட்டார்கள்.

ஆனால், அதனை நடைமுறைக்குக் கொண்டு வருவதிலே எத்தனை சிக்கல்!

இந்தக் காரியத்திற்குப் பொருத்தமானவர் இவர் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன், ஏழுமலை சொல்கிறார், இவர் இதற்குப் பொருத்தமே இல்லை என்று, என்ன செய்வது என்ற மயக்கம் எழுகிறது.

ஏழுமலையின் கருத்தினை ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்ன, நம்முடைய கருத்துக்கு நாம் மதிப்பளிக்க வேண்டு மல்லவா என்று எண்ணிடக் கூடாதா என்று கேட்கிறாய் தம்பி!

அவ்வளவு எளிதல்ல, ஏழுமலையின் கருத்து ஒரு மயக்கத்தை மூட்டிவிட்டிருந்தால்.

தனக்கு ஒரு கருத்து, ஏழுமலைக்கு வேறு ஒரு கருத்து, இரு கருத்துக்களில் எது சிறந்தது என்பது பற்றி ஒரு குழப்பம் என்று மட்டும் நிலை இருந்தால், சிறிதளவு தீவிரச் சிந்தனை செய்து குழப்பத்தை நீக்கிக் கொள்ளலாம்; முடியும். ஆனால், ஏழுமலை குழப்பத்தை அல்ல, மயக்கத்தை மூட்டிவிட்டால்? விடுபடுவது கடினம்.

மயக்கம் எப்படி ஏற்படுகிறது என்கிறாயா, தம்பி!

பலவகையில் ஏற்படலாம்; ஏழுமலையிடம் கடன்பட்டிருக்கிறாய் என்று வைத்துக்கொள், அடித்துப் பேச முடியுமா, நீ கூறுவது சரி அல்ல; என் முடிவுதான் சரி என்று!! முடியாதே! ஏழுமலை, ஊர்ப் பெரியதனக்காரர் என்று வைத்துக் கொள். அவருடைய கருத்தை மறுத்துப் பகையைத் தேடிக் கொள்ளலாமா!

முடியாதல்லவா? ஏழுமலை, வீட்டிலே ஒரு சுவையான விருந்தளித்துவிட்டுப் பிறகு தன் கருத்தைப் புகுத்துகிறார் என்று வைத்துக் கொள், தள்ளிவிட முடியுமா? முடியாதே!!

உயர்தரமான காரணமே காட்டுகிறேனே; ஏழுமலை இதற்கு முன்பு பல சமயங்களில் தக்கவிதமான கருத்தளித்துப் புகழ் பெற்றவர் என்று வைத்துக் கொள்ளேன்; அப்படிப் பட்டவர் சொல்லும் கருத்தை எளிதிலே தள்ளிவிட முடியுமா!

முடியாதல்லவா!!

ஆகவே, இந்த மயக்கம் பல்வேறு காரணங்களால் ஏற்படக் கூடும். இதிலிருந்து விடுபடத் துணிவு வேண்டும்.

உண்மையை உணரத் தெளிவு வேண்டும், அந்த உண்மையின் பக்கம் நின்றிடத் துணிவு வேண்டும்.

அந்தத் தெளிவும் துணிவும் பெற்று, இதனை முடித்திட இவனால்தான் ஆகும் என்று அவனிடம் அதனை ஒப்படைக்க வேண்டும் என்று தம்பி! நீயும் நானும். நம்மோடு சேர்ந்து ஒரு நாற்பது பேர்களும் கூறுகிறார்கள்; நானூறு பேர்கள் வேறு விதமான தீர்ப்புத் தருகிறார்கள் என்று வைத்துக்கொள்; நாம் கண்டறிந்த உண்மை என்ன ஆகிறது! வெற்றி பெறவில்லை. அந்த உண்மை வெற்றி பெறாதபோது, நாம் எதிர்பார்க்கும் பயன்?

கிடைக்காது! கிடைக்காதபோது, நாம் மேற்கொண்ட முயற்சி?

வீண் என்று ஆகிறது. அவ்விதம் ஆகிவிடுவதால், விளைவது என்ன? ஒருவிதமான சலிப்பு! அந்தச் சலிப்பின் விளைவு!

நமக்கேன் இந்தச் சங்கடம் என்ற நினைப்பு எழும். அந்த நினைப்பு "இந்நாட்டு மன்னர்' என்ற பட்டம் இருந்தும், இழுப்பார் பின் செல்லும் நிலையை ஏற்படுத்திவிடும்; அந்த நிலையைப் பெறவா மக்களாட்சியைக் கேட்டுப் பெற்றது? இல்லை.

எனவே, உண்மையை உணரும் தெளிவும், அதன் பக்கம் நின்றிடும் துணிவும் பெறுவதுடன், அந்த உண்மையின் பக்கம் மற்றவர்களையும் நின்றிடச் செய்திடும் பணியினையும் மேற் கொண்டாக வேண்டும். மக்களாட்சி முறைதான் பொருத்தமான ஆட்சி முறை என்பதனை ஏற்றுக் கொண்டுள்ளோம்; ஆனால், அந்த மக்களாட்சி முறைக்குப் பொருத்தமானவர்களாக நாம் நம்மை ஆக்கிக் கொண்டிருக் கிறோமா என்ற கேள்வியை நாம் ஒவ்வொருவரும் நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.

மக்களாட்சி ஒரு முறை, ஒரு கருவி! ஆனால், அந்த முறைக்கும் கருவிக்கும் பொருத்தமானவர்களாக நம்மை நாம் ஆக்கிக் கொள்ள வேண்டும்.

இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அரசியல் வித்தகர்கள், அரசு அமைக்கும் பொறுப்பினை நிறைவேற்றத்தக்க பொருத்தம் நமக்கு இருக்கிறது என்று ஒப்படைத்துள்ளனர். நாம் நமது பொருத்தத்தை மெய்ப்பித்துக் காட்டியாக வேண்டும்!

அண்ணன்,

24-10-65