அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


புலித்தோலும் எலிவாலும்...
2

ஆந்திர அரசு அமைந்தான பிறகு, என்ன அல்லலும் அவதியும் வந்துற்றது?

உறவு கெட்டு விட்டதோ? அல்லது உள்ளன்பு பட்டுப் போயிற்றோ? இல்லையே!

ஆந்திர மாகாணக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கூறுவது போல, பிரிந்து சென்று தனி ராஜ்யம் அமைத்துக்கொண்ட பிறகு, ஆந்திரர் தமிழரிடம் முன்பெலாம் கொண்டிருந்த கசப்பும் கிலேசமும் போக்கப்பட்டு, இன்று அன்பராய், நண்பராய், தொடர்பு கொண்டு மகிழ்கின்றனர்.

அது போன்றே, மொழிவழி அரசு அமைந்துவிட்டால், பாரதம் பிளவு பட்டுவிடும் என்று பீதி காட்டினர். ஆந்திர அரசு, பிளவுச் சக்தியாகவா இன்று உளது?

எனின், இன்று மொழிவழி அரசு கூடாது, கேடு பயப்பது, என்று கூறிடக் காரணம் என்ன?

தம்பி! கொண்டைக்கு ஒரு செண்டு மல்லிகை கேட்டாளாம், கொண்ட கணவனிடம்; அந்தக் குணக்கேடனோ, கொண்டை உள்ளமட்டும் இவள் செண்டு கேட்டுத் தொல்லை தந்தபடிதான் இருப்பாள், எனவே, செண்டு தேடிடும் சங்கடம் நமக்கு இல்லாமலிருக்க, இவள் கொண்டையை அறுத் தெறிவோம் என்றானாம்.

மொழிவழி அரசு என்ற திட்டத்தின்படி பம்பாய் மராட்டியருக்கு, தேவிகுளம் பீர்மேடு ஆகிய தமிழ் வட்டாரங்கள் தமிழ்நாட்டுக்கு என்பது குறித்து, கிளர்ச்சி இருக்கிறது; இதிலே அநீதியான தீர்ப்பு வழங்கினார் நேரு; எதிர்க்கின்றனர், உரிமை வேட்கை கொண்டோர்; இதனைக் கண்டு, கொண்டை இருந்தால் அல்லவா மல்லிகைச் செண்டு வேண்டும் என்பாள், இதோ, பிடித்திழுத்து வா, கொண்டையை அறுத்து எறிகிறேன் - என்கிறார் பண்டிதர். மொழிவழி அரசு என்று பேசுவதால் அல்லவா, இது யாருக்கு, அது யாருக்கு என்று சச்சரவு கிளம்புகிறது, மூலத்துக்கே வேட்டு வைத்து விடலாம் என்று கூறுகிறார். நீதியா? வணிகப் பெருங்குடியினரே! வாழ்வளிக்கும் தொழில் பல புரிவோரே! நாட்டின் கண்மணிகளாம் மாணவத் தோழர்காள்! நீதிதானா? கூறுங்கள்.

உமது தீர்ப்பு, பிப்ரவரி 20-இல், நாடறியச் செய்ய வேண்டும்.

காந்தியார் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை வெட்டிப் புதைக்கிறார்கள்.

முப்பதாண்டுகட்கு மேலாக நாட்டவருக்குத் தரப்பட்ட வாக்குறுதி மீறப்படுகிறது.

தேர்தல் சிலவற்றிலும் மக்களுக்குத் தரப்பட்ட நம்பிக்கை தகர்க்கப்படுகிறது.

ஆந்திரர் பெற்றுப் பயன்காணும் மொழிவழி அரசு, நமக்கு மறுக்கப்படுகிறது.

மொழிவழி அரசு கேட்டால், விழியில் ஒன்றினை இழந்துவிட வேண்டுமாம் - தேவிகுளம், பீர்மேடு கிடையாதாம்!

தேவிகுளமும் பிறவும் தேவை என்று நாம் கேட்டாலோ, மொழிவழி அரசு கிடையாதாம்!

கொண்டை மிஞ்சவேண்டுமானால், செண்டு கேட்காதே! - நேரு கூறுகிறார்.

நேர்மையுள்ளம் படைத்தோரே! இதனை மாற்றிட வழி இருக்கிறது. எல்லா ஜனநாயக நாடுகளிலும் கையாளப்பட்டு வெற்றி அளித்திட்ட வழி, காந்தியார் கைகண்ட மருந்தாக உபயோகித்த வழி, கடை அடைப்பு, பொது வேலை நிறுத்தம்.

நீதி மறுக்கப்படுகிறபோது, நேர்மை நசுக்கப்படுகிறபோது, உரிமை அழிக்கப்படுகிறபோது, தன்மானம் தகர்க்கப்படுகிற போது, அன்பர்கள்! பழந்தமிழ் வீரன், கட்கமேந்திச் சென்றான் களம் நோக்கி. நாங்கள் உங்களைக் கேட்டுக் கொள்வதெலாம், பிப்ரவரி 20, ஒரு நாள் மட்டும் கடை அடைப்பும் பொது வேலை நிறுத்தமும் செய்து, இந்தப் புனிதமான காரியத்தில் பங்கேற்றுக் கொள்ளுங்கள், - என்பதனைத் தம்பி, அங்காடியிலும் அலுவலகங் களிலும் உள்ள அன்பர்களிடமெலாம், கூறு.

தம்பி! காங்கிரஸ் கட்சியினரில் சிலருக்கு நாம் ஈடுபட்டுள்ள இந்தக் காரியத்தைக் கெடுப்பது, ஏதோ ‘தேசிய கைங்கரியம் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. ‘தினமணி’ இதற்கான திருத் தொண்டினை நடத்தி வைத்து இருக்கிறது.

காலிகள் இதனைப் பயன்படுத்திக்கொள்வர் என்று கிலி மூட்டியும், பலத்த போலீஸ் வளையம் உங்களுக்குப் பாதுகாப்பளிக்கும், கடைகளைத் திறவுங்கள் என்று ஆசை காட்டியும், இப்போது ஒரு முடிவும் தமிழருக்கு விரோதமாகச் செய்யப்படவில்லை என்று நயவஞ்சகம் பேசியும், அந்த ‘அன்பர்கள்’சர்வகட்சிக் கூட்டணியின் முயற்சியைக் கெடுக்கலாம் என்று எண்ணி வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

சிலர், இந்தக் கூட்டணியினரைக் கூண்டிலே தள்ளி விடுங்கள் முதலில், பிறகு நாங்கள் மற்ற ஏற்பாடுகளைக் கவனித்துக் கொள்கிறோம் என்று சர்க்காரிடம் ‘காவடி’ எடுக்கிறார்கள் என்றும், ஆச்சாரியார் செய்த அதே தவறை நாமும் செய்வதா, ஆப்பை அசைப்பானேன், பிறகு அதனால் அவதிப்படுவானேன் - நடப்பது நடக்கட்டும் என்று கண்ணை மூடிக்கொண்டு இருந்து விடுவோம் என்று சிலரும் பேசுகின்றனராம்!

கடைகள் மூடிக்கிடக்கட்டும், செயலற்றுக் கிடக்கட்டும் நாடு, நாங்கள் மறுதினம் ‘சேதி’யை முழுவதும் இருட்டடிப்பு நடத்திவிட மாட்டோமா! என்று தேசிய இதழாசிரியர்கள் பேசுகிறார்களாம்.

கண்ணை மூடிக்கொண்ட பூனை, உலகமே இருண்டு விட்டது என்று எண்ணிக் கொண்டதாமே, அதுபோல,

இருட்டடிப்பு மூலமோ, இடர் தருவதன் மூலமோ, எதன் மூலம் நமது ஏற்பாட்டினைக் கெடுத்திட எண்ணினாலும், தம்பி! நாம் நமது கடமையைக் கண்ணியத்துடன் செய்து முடித்தோமா என்ற ஒரே எண்ணம்தான், உனக்கு இருக்க வேண்டும்.

எவ்வளவு குத்தினாலும், சகித்துக்கொள்ள வேண்டும்.

தாக்கினால், தாங்கிக் கொள்ள வேண்டும்.

சிறையில் தள்ளினால் சிரித்த முகத்துடன் செல்ல வேண்டும்.

இன்று நமது தூய்மை நிரம்பிய இந்தக் காரியத்தைக் கெடுத்திடக் கருதும் காங்கிரஸ்காரர்கள்கூட, அவர்கள் ஏசினாலும் எரிச்சலூட்டினாலும், எதிர்த்தாலும், இழிமுறையால் தாக்கினாலும், தம்பி! தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும். உன் உள்ளத்தில் ஒரு துளியும் ஆத்திரம் எழலாகாது. உள்ளத்து உறுதியும், கஷ்டநஷ்டத்தை ஏற்றுக்கொள்ளும் திறனையும் கண்டு, அந்தக் காங்கிரஸ் நண்பர்களேகூட தமது போக்கினை மாற்றிக் கொள்வர்.

தம்பி! நாமென்ன கண்டோம்? இன்று நமக்கு ‘விரோதம்’ செய்யும் காங்கிரஸ்காரர்களிலே எத்தனை பேர். எதிர்காலத்தில் நமது கிளைக் கழகச் செயலாளர்களாகப் போகிறார்களோ!!

அவர்களெல்லாம், இன்று இல்லாவிட்டால் நாளை, நமது "முகாம்' வந்து சேருவர் என்ற எண்ணத்துடனேயே, உன் பணி அமைந்திருக்க வேண்டும்.

அவர்கள் சிறிதளவு சிந்தித்துப் பார்த்தால் பிப்ரவரி 20-ல் நாம் மேற்கொண்டுள்ள, அறநெறியின்படி அமைந்துள்ள காரியம், அவர்களின் தன்மானத்தையும் சேர்த்துக் காப்பாற்றிடுவதற்கே என்பது புரியும்.

தேவிகுளம் பீர்மேடு ஆகியவை, தமிழ்நாட்டுக்குத்தான் என்பதை, காங்கிரஸ் அமைச்சர்கள் உட்பட ஆதரித்தனர். சென்னைச் சட்டசபைகளிலே தீர்மானம், ஆர்வத்துடன் நிறைவேற்றப்பட்டது.

காங்கிரஸ் கமிட்டியிலும் இதே கோரிக்கை!

கக்கன் அவர்களும் இதற்கு உறுதிமொழி அளித்தார்.

காமராஜரோ, நான் கவனித்துக்கொள்கிறேன் என்றார்.

சுப்பிரமணியம், கனம் - புள்ளி விவரங்களாகக் கொட்டிக் காட்டினார், நமக்குத் தேவிகுளம் என்று பூரிப்புடன், நேருவுக்குத் தமிழர் என்றாலே தனியான அன்பு, ஆகவே அவர் நியாயம் வழங்குவார் என்றார்.

நாம், தேவிகுளம் பற்றிப் பேசிய போதெல்லாம், எதுக்கு இதுகள் வீண் கூச்சலிட்டுக் கிடக்கின்றன? எமது தலைவர்கள் தேவிகுளத்தைப் பெற்றே தீருவர் என்று காங்கிரஸ் நண்பர்கள் கூறினர்.

இன்று, எல்லோருடைய ஆசையிலும் மண்விழுந்து விட்டது. நாமெல்லாம், எதிர்க்கட்சிக்காரர்கள். எனவே நம்மைத் துச்சமாக மதிக்கிறார்கள். சரி, பொறுத்துக்கொள்வோம். காமராஜர் சுக்கன், சுப்பிரமணியம், பக்தவத்சலம், மேல்சபை, கீழ்சபை, கரங்கிரஸ் கமிட்டி, தீர்மானம், எல்லாமே இன்று துச்சமாக ஒதுக்கித்தள்ளப்படுகிறதே, இதற்கென்ன சொல்லு கிறார்கள்? அந்த வெட்கக்கேட்டால் விளையும் வேதனையை எண்ணியாவது, வேலை நிறுத்தத்தில் காங்கிரசார் பங்கு கொள்ள வேண்டும்.

பாசமும், நேசமும், பயமும், பக்தியும், பணிவும், கட்டுப் பாடும் இருக்கட்டும் மலை அளவுக்கேனும்; தன்மானத்தில் பற்றுதல் இருக்க வேண்டாமா?

எனவே, தம்பி! நீ மட்டும் உண்மையை அவர்கள் உணரு மட்டும், பொறுமையை இழக்காமல், ஆர்வம் குன்றாமல், துணை தருவோர் அதிகமா, தொல்லை தருவோர் மிகுதியா என்பது பற்றிய வேலையற்று, நமது கடமையை நாம் செய்கிறோம் - என்ற பொறுப்புணர்ச்சியுடன் பணியாற்று. பார், தம்பி! பிறகு அவர்களிலே எத்தனை பேர், ‘நம்மவர்’ ஆகிறார்கள் என்று!

இன்றே இல்லையா நமது கழகத்தில் - மாஜி காங்கிரஸ்காரர்கள்.

ஒன்று மட்டும் உறுதியாக வைத்துக்கொள்.

இந்த நற்காரியத்திலே ஈடுபடும்போது, அடக்குமுறை எந்த வடிவிலே வீசப்பட்டாலும், அதனை நாம் தாங்கிக் கொள்ளும் திறமிருக்கிறதே, அது, தாயக விடுதலைக்கான உறுதி அளிக்கிறது. தியாகத் தழும்புகள் ஏறாமுன்பு நாட்டு விடுதலை எங்ஙனம் கிடைக்கும்? தம்பி ! நாம், எத்தகைய மரபினிலே வந்துற்றோம், அறிவாயே!

அன்பே! இந்த "வடு' . . . என்று கேட்டிடும் அஞ்சுகத்தை ஆரத் தழுவிய ஆணழகன், "கட்டழகி! கலிங்கப் போரிலே நான் பெற்ற வடு இது. . . . இதோ பார், இது நான் சிங்களச் சீமையிலே பெற்றது, கடாரம் தந்த தழும்பு இது,'' என்றெல்லாம் அவன் கூறிட, அது கேட்ட காரிகை என் கணவன், கண்ணுக்கு இனியவன் மட்டுமல்ல, கருத்துக்கு மிகு இனியவன், அவன் அம்புலி காட்டவும் அருவியில் நீந்தவும் மட்டுமே பழகியவனல்ல, சீறிப்போரிட, செந்நீர் சிந்திட வல்லவன். புகழக் குறிகளாம் போர்த் தழும்பு பெற்றவன்! என்று பூரித்துப் போவாள்!

அத்தகைய தமிழகத்தில் பிறந்தோம்.

இற்றை நாளில் கொற்றம் இழந்தோம். எனினும் நமது இயல்பு பட்டுப் போகவில்லை!!

இன்றேகூட, தமிழகத்தில் ஆறாயிரம் தோழர்களேனும் உளர், தமது உள்ளத்தை வென்றாரிடம் உவகையுடன் தியாகத் தழும்புகளைக் காட்டி இது முன்ஷி வந்தபோது கிடைத்த முத்திரை, இது மேதாப் வந்தபோது ஏற்பட்டு வடு, இது தடை உத்தரவை மீறியபோது ஏற்பட்ட சிறுகாயம், இது ஆச்சாரியார் ஆட்சி தந்த தழும்பு என்றெல்லாம் காட்டி நிற்போர்!

எனவே, தம்பி! எனக்கு நம்பிக்கை நிரம்ப உண்டு! பிப்ரவரி 20-ல் என் உள்ளம், மேலும் பெருமிதம் கொள்ளத்தக்க விதத்தில், நீ பணியாற்றி வெற்றி பெற்றுத் தருவாய் என்பதும் தெரியும்.

கடுமையான அடக்குமுறை வீசப்படலாம் என்றாலும், அதற்காகக் கலங்கவா போகிறோம்? இல்லை!

உட்பகை கூடாது, ஊர்க் கலகம் ஆகாது, கட்டுப்பாடு கெடலாகாது, கண்ணியம் பாழ்படக் கூடாது, பலாத்காரம் தலை காட்டவே கூடாது என்பது பற்றித்தான் எனக்குக் கவலையை தவிர, கடுமையான அடக்குமுறை கொண்டு, நம்மைத் தாக்கிடுவரோ துரைத்தனத்தார் என்பதுபற்றிக் கடுகளவும் கவலை கொள்ளேன். கொள்பவனும் என் தம்பி அல்ல.

தம்பி! காட்டிலே வேட்டையாடி, கொன்ற புலியின் தோலினைக் காட்டி மகிழ்பவனைத்தான் வீரன் என்று உலகு ஏற்குமே தவிர, காரக் கருவாட்டைப் பக்குவமாக வைத்து பொறியில் விழச் செய்து, நான் கொன்ற எலியின் வால் காணீர் என்று கூறுபவனையா, உலகு மதிக்கும்?

புலித்தோலுக்கும் எலிவாலுக்கும் உள்ள வேற்றுமை, ஒரு வீரனுக்கும் ஒரு வீணனுக்கும் உள்ள வேறுபாட்டினையன்றோ விளக்குகிறது!

எனவே, உயிர் போவதாயினும் உரிமை பறிபோக விடமாட்டோம் என்ற உறுதிப்பாடு கொண்ட என் தம்பிமார்களிடம் எனக்குத் தளராத நம்பிக்கை உண்டு. எனவே, எதிர்ப்புகள் மலை என வளரினும், வெற்றிபெற்றுத் தருவர் என்று உறுதி கொண்டிருக்கிறேன்.

தமிழ்நாடு ஒரு நாதியற்ற நாடாகி விட்டது என்று பெரியாரின் ‘விடுதலை’ கூறும் போது, நாமும் நம்மாலானதைச் செய்து தமிழ்நாட்டில் தமிழர் சிலரேனும் உளர் என்பதைக் காட்ட வேண்டாமா?

பெரியார், இந்தக் கிளர்ச்சியை விரும்பவில்லையாமே என்று கேட்கிறாயா தம்பி! உண்மை அது அல்ல; பெரியார் இந்தக் கிளர்ச்சியையும் இதைவிடத் தீவிரமான கிளர்ச்சியையும் விரும்புகிறார். அவர், நம்மைத்தான் விரும்பவில்லை - இனி அவரும் நம்மை விரும்பும் வகை ஏற்பட வேண்டுமானால், அவரே பார்த்து, "பயல்கள் பரவாயில்லையே, ஓரளவுக்குச் செம்மையாகவே செய்து காட்டினார்கள்'' என்று கூறத்தக்க விதமாகக் காரியமாற்றிக் காட்ட வேண்டும்.

மும்முனைப் போராட்டத் துவக்கத்தின் போதும் அவர் இப்படித்தான், "இன்றைய வழிப்போக்கர்களின் மனமகிழ்ச்சிக்காக, இதுகளுக்கு ஒரு போராட்டமா!' என்று ஏளனம் பேசினார்; ஆனால், தம்பி! நாடே கண்டு ஆச்சரியப்படத்தக்க அளவில் கிளர்ச்சி வளர்ந்து இருட்டடிப்பினையும் கிழித்துக் கொண்டு, நாள் தவறாமல், நமது கழகச் சேதிகள், எல்லா ஏடுகளிலும் வெளி வந்தது கண்டு, அவரே அல்லவா சென்னைக் கடற்கரையில் கூட்டம் நடத்தினார். நம்மீது சர்க்கார் அடக்குமுறை வீசியது கொடுமை என்று! இன்று, மீண்டும் ஏளனம் செய்கிறார் என்று கேள்விப்படுகிறேன்! இதிலே கவலைப்படவோ கோபப்படவோ என்ன இருக்கிறது! - நாம் அவருடன் ஒன்றாக இருந்த போது கூட இப்படித்தான் வேடிக்கையாகப் பேசுவார், ஏளனத்தால் குத்துவார், எல்லாம், நாம் நமது காரியத்தைச் சரியாக செய்ய வேண்டுமே என்கிற அக்கறையினால்தான்!!

பெயரளவில் தமிழ்நாட்டில் தமிழர்களே எட்டுக்கு ஏழு பேர் மந்திரிகளாக இருக்கிறார்கள் என்றாலும், ஒருவருக்காவது தமிழர் இனம், தமிழ்மொழி, தமிழர் ஆட்சி என்கின்ற உணர்ச்சியே இருப்பதாகத் தெரிவதற்கு அடையாளம் இல்லை.

முதலாவது, தமிழன் என்பதற்கு அறிகுறியாகத் தமிழ் மொழி உணர்ச்சியாவது எந்தத் தமிழ் மந்திரிக்காவது இருக்கிறதா என்று பார்த்தால், ஏதோ தமிழரை ஏமாற்றி ஓட்டு வாங்குவதற்காக நடக்கிற முறையில்தான் தமிழ் உணர்ச்சியைக் காட்டுகிறார்களே தவிர, காரியத்தில் காட்டுவது மிகமிக அருமையாக இருக்கிறது.

எனவே, தமிழ்நாடு ஒரு நாதியற்ற நாடாக ஆகிவிட்டது. இந்த மந்திரிசபை காலத்திலாவது இந்த விஷயங்களில் ஏதாவது கவனம் செலுத்தப்படுமா என்று பார்த்தால், நாள் எண்ணவும், சம்பளம் வாங்கவும், நாட்டில் பவனி வரவும், விருந்து, நாட்டியம், கோலாகல வாழ்வு அனுபவிக்க பெரு நேரம் செலவாகிவிடுகிறது.
-9-8-55 ‘விடுதலை’ தலையங்கம்.

தமிழர்களிடம் இருக்கின்ற தமிழ் மொழிப்பற்று, தமிழ் இனப் பற்று, வடமொழி எதிர்ப்பு, ஆரிய வெறுப்பு ஆகியவற்றை ஒழித்துக் கட்டுவதற்காகவே இம்முயற்சி (தட்சிணப் பிரதேசம்). . . . .

இம் முயற்சியில் ஈடுபடுவார்களானால் என்ன நடக்கும் தெரியுமா?. . . .

தமிழ்நாட்டில் இரத்த ஆறு ஓடும்படியாக மாபெரும் இரத்தப் புரட்சியே நடக்கப்போகிறது. . . . .

தமிழ்நாட்டைச் சுடுகாடாக்கி, பிணக்காடாக்கி விட்டுத் தான் தட்சிணப் பிரதேசம் என்ற புது இணைப்பைக் காணப் போகிறார்கள் மேலிடத்திலுள்ள காங்கிரஸ்காரர்கள். இவர்களுக்கும் இவர்கள் கட்சிக்கும் அழிவுகாலம் நெருங்கி விட்டதென்றே கூறலாம்.
-9-9-55 "விடுதலை' தலையங்கம்.

இப்போது என்ன சொல்லுகிறாய் தம்பி! பெரியாரின் மனம் என்ன பாடுபடுகிறது பார்த்தனையா, நாட்டிலே காங்கிர சாட்சியினர் செய்யும் அலங்கோலம் கண்டு?

இதற்காகத்தானே நாம் எதிர்க்கிறோம், பிப்ரவரி 20-ல்.

பிறகு, பெரியாருக்கு ஏன் கோபம் வரப்போகிறது?

சரியாகச் செய்வார்களோ, இல்லையோ என்பது அவருக்குள்ள சஞ்சலம். தம்பி! உன் வெற்றி மூலம் அவருக்கு உள்ள சஞ்சலத்தையும் போக்க முடியும். செய்வாயா?

காங்கிரஸ் கட்சிக்காரர்கள், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், தட்சிணப் பிரதேசப் பிரச்சினைபற்றி வாய்மூடி இருந்து வந்தனர். பிற கட்சிகள் கண்டித்தன. அந்தக் கண்டனம் இப்போதே ஓரளவுக்குப் பலன் அளித்திருக்கிறது.

டில்லியிலிருந்து திரும்பிய காமராஜர், தட்சிணப் பிரதேச திட்டத்தைப் பலரும் கண்டிப்பது தனக்குத் தெரிகிறது என்று நிருபர்களிடம் கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சிக்காரர்கள் மவுனமாக இருந்ததுபோல நாமெல்லாம் இருந்து விட்டிருந்தால், நாடு, தட்சிணப் பிரதேச திட்டத்தைக் கண்டிக்கிறது என்பது நேருவுக்கோ காமராஜ ருக்கோ எப்படித் தெரிந்திருக்க முடியும்? இதனால்தான், தக்க சமயத்தில் முற்போக்குக் கட்சிகள், தீமை பயக்கும் திட்டங்கள் கிளம்பியதும், கண்டனம் தெரிவிக்க வேண்டியது ஜனநாயகக் கடமையாகிறது!

அதே கடமை உணர்ச்சிதான் பிப்ரவரி 20-க்கும் காரணம். காமராஜர், இது தேவையுமில்லை, விரும்பத்தக்கதுமல்ல என்கிறார்.

தேவிகுளம் பீர்மேடு ஆகிய எல்லை குறித்து, டில்லியின் தீர்ப்பு அமுலுக்கு வராது என்றோ, அந்தப் பகுதி மக்களிடம் வாக்கெடுப்பை நடத்திப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள நேரு சம்மதமளித்திருக்கிறார் என்றோ காமராஜர் உறுதியளிக்கவில்லை.

அர்த்தால் செய்தால், விரும்பத்தகாத பல நிகழ்ச்சிகள் நேரிட்டுவிடும் என்பது மட்டும் அவர் காரணமாகக் காட்டுகிறார்.

பொறுப்புணர்ச்சி, அவருக்கு நம்மைவிட உடனடித் தேவை என்பது உண்மை. ஆனால், அர்த்தால் நடத்தத் திட்ட மிட்டிருக்கும் சர்வ கட்சித் தலைவர்கள், பொறுப் புணர்ச்சியற்றவர்கள் என்று காமராஜரே கூற முடியாது.

அர்த்தால், அமைதியாக, பலாத்காரமற்ற முறையில் நடத்தப்பட வேண்டும் என்பதைக் கூட்டணித் தலைவர் பி.டி. இராஜன், இப்போதும் ஓர் அறிக்கையில் வலியுறுத்தியிருக்கிறார்.

தேவிகுளம் பிரச்சினை சம்பந்தமாக நாடு எவ்வளவு மன வேதனை அடைந்திருக்கிறது என்பதை டில்லி அறிந்தாக வேண்டும். அர்த்தால் அருமையான வாய்ப்பு.

தேவிகுளம் பிரச்சினையில், காமராஜருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் அக்கறை இருப்பது உண்மையானால், தமிழரின் உரிமையையும், தமிழ் நாட்டின் எல்லையையும் காத்திட வேண்டுமென்பதிலே முதலமைச்சருக்கு அக்கறையும் நம்பிக்கையும் இருப்பது உண்மையானால், அவர் கூட்டணியின் திட்டத்துடன் ஒத்துழைத்து, வெற்றிகரமாக்கி, இந்த அர்த்தால் கட்சிப் பிரச்சினை அல்ல, நாட்டுப் பிரச்சினை என்பதை டில்லியே அறிந்திடச் செய்யலாம்.

எனவே, அர்த்தால் மூலம் ஏதேதோ நேரிடும் என்ற பீதி காட்டாமலும் கொள்ளாமலும், காமராஜர் துணிந்து பிப்ரவரி 20-ல் அர்த்தாலுக்கு தமது ‘ஆத்மீக ஆதரவு’ அளித்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

அர்த்தால் சமயத்தில், சமூக விரோதிகள், அல்லல் மூட்டுவோர் என்ற ‘தினமணி’ வாதத்தை, நாடாளும் பொறுப்பேற்றுள்ளவரும் கூறுவது அழகல்ல.

சர்வ கட்சிக் கூட்டணி அமைதியான அர்த்தாலைத்தான் திட்டமிட்டிருக்கிறது.

நாட்டின் அமைதியிலும், அதேபோது தமிழர் உரிமையிலும், ஜனநாயகக் கோட்பாட்டிலும், காமராஜருக்கு நம்பிக்கை இருக்குமானால், நிச்சயமாக அவர் நம்முடன் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.

தட்சிணப் பிரதேச திட்டம் இப்போதைக்கு இல்லை என்ற அளவு மட்டுமே காமராஜர் அறிக்கை மூலம் தெரிகிறது. இதுவே, மகிழ்ச்சிக்குரியதுதான். ஆனால், தேவிகுளம் பிரச்சினை அப்படியே இருக்கிறது என்பதை எப்படி மறந்துவிடுகமுடியும்? தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, கொச்சின், சித்தூர் ஆகிய தமிழ்ப் பகுதிகளை, கேரளத்துடன் இணைக்கும் திட்டம் உயிரோடு இருக்கிறது. அது மார்ச் மாதத்திலேயே சட்டசபைக்கு வருகிறது.

முன்பே சட்டசபை இதுபற்றி அளித்த தீர்ப்பு, டில்லியால் குப்பைக் கூடைக்குப் போடப்பட்டது.

மீண்டும் அதே கதி ஏற்படாமல் இருக்க வேண்டும்; அதற்கு பிப்ரவரி 20 வெற்றிகரமாக நடைபெற வேண்டும்.

அமைதி குலையாதிருக்கவும், கலாம் எழாதிருக்கவும், என்னென்ன முறைகளைக் கையாள வேண்டும் என்ற யோசனைகளைக் கூறவும், கூட்டணியின் ஒத்துழைப்பைப் பெறவும், காமராஜருக்கு உரிமை இருக்கிறது. ஆனால், அச்சத்தைக் காட்டி, அர்த்தாலைக் கைவிடச் சொல்வதிலே பொருள் இல்லை. எனவே, கூட்டணித் திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பை அளித்து, காமராஜர் தமிழ்ப் பண்பாட்டை எடுத்துக் காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகிறேன்.

அன்புள்ள,

19-2-1956