அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


புதுப் பா!
2

தமிழ்நாடா? திராவிட நாடா? என்று பேசும், இரு வேறு முகாம்கள், ஒன்றை ஒன்று எதிர்ப்பதற்காக அமைக்கப்படுகிறது என்று நிலைமை எழுந்தால், அது அந்த இரு முகாம்களுக்கு அல்ல, இந்தியப் பேரரசுக்குக் கப்பங்கட்டிக்கொண்டு, கட்டியங் கூறிக்கொண்டு, காவடி எடுத்துக்கொண்டு, மற்றவர்கள் அனைவரும் சீரிழந்து, பேரிழந்து, சிற்றினமாகக் கிடக்கவேண்டும் என்று எண்ணுபவர்களின் முகாமுக்குத்தான் வாய்ப்பு; வலிவு; மகிழ்ச்சி தரும்.

தமிழ் நாடு என்று கூறுவோர் உள்ள முகாம், திராவிட நாடு என்றுரைப்போர் உள்ள முகாம் எனும் இரு முகாம்களுமே, இந்தியப் பேரரசு எதனையும் தன் காலடியில் போட்டு மிதிக்கும் நினைப்புடன், நிலையுடன், வலிவுடன் இருத்தல் வேண்டும் என்று திட்டமிட்டுக் கொட்டமடிக்கும் முகாமுக்கு எதிர்ப்பாக அமைந்தவை என்று திட்டவட்டமாக நிலைமை தெளிவுபடுத்தப்பட்டாக வேண்டும்.

தமிழ் நாடா? திராவிட நாடா? என்ற பேச்சைப் பெரிது படுத்தி அதற்குப் பேருருவம், போருருவம் கொடுப்பதை, இந்தியப் பேரரசு புன்னகையுடன் வரவேற்கும்!

தமிழ் நாடா? திராவிட நாடா? என்று ஒரு முகாம்களும் போரிட்டு மடியட்டும், நாம் கொடிகட்டி ஆண்டிடுவோம் - கொழுத்துத் திரிந்துகொண்டிருப்போம் என்று திட்டமிடும். தமிழ் நாடா? திராவிட நாடா? என்று சச்சரவு எழட்டும், அந்தச் சச்சரவிலே இரு முகாம்களும் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது, நாம் நமது ஆதிக்கத்தை வலிவுள்ளதாக்கிக்கொள்ளு வோம் என்று "ஏக இந்திய' முகாம், எண்ணி இறுமாந்து கிடக்கும்.

தமிழ் நாடா? திராவிட நாடா? என்ற பிரச்சினையைக் கிளப்பிவிட்டுவிட்டு, "ஏக இந்தியா' எனும் "பகைமுகாம்' தன்னை நோக்கிப் பாய்ந்துவரும் எதிர்ப்பை முறியடிக்க முனையும்.

அடிப்படை பிரச்சினை, "ஏக இந்தியா' எனும் பொறி உடைக்கப்பட்டாக வேண்டும்; இந்தியப் பேரரசு எனும் திட்டம் தகர்க்கப்பட்டாக வேண்டும் என்பதுதான் என்பதை மறத்தல் ஆகாது.

இன்று, "ஏக இந்தியா' - "இந்தியப் பேரரசு' - எனும் ஆட்சி முறைத் திட்டம், ஏட்டளவிலோ, பேச்சளவிலோ, விவாத அரங்கிலோ அல்ல, சட்டமாக்கப்பட்டு, நடைமுறையில் இருந்து வருகிறது. அந்த "நடைமுறை' நிலை குலையாதிருக்க, நாளும் நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளப்பட்டு வருகின்றன.

புன்னகையுடன் நல்லுரை கூறுவோராகச் சில வேளை களிலும், புருவத்தை நெரித்தபடி மிரட்டும் பேச்சினராகச் சில வேளைகளிலும், ஏக இந்தியாக்கள் உள்ளனர். அவர்களின் ஒரே எண்ணம், தன்னாட்சி தனி அரசு என்ற உரிமை உணர்ச்சி, விடுதலை வேட்கை, எழாமல், கருக்கிவிட வேண்டும் என்பதுதான்.

இந்தியப் பேரரசுக்குக் காவலர்களாக உள்ளவர்கள், இதனைத்தான் நோக்கமாகக்கொண்டு, "தேசியம்' இருக்கின்றனர் - தேனில் குழைத்த நச்சுப்பொடி தருகின்றனர்.

தமிழ் நாடா? திராவிட நாடா? என்று விவாதம் நடத்திக் கொண்டு அவர்கள் இருக்கட்டும். . . அதுதான் நமக்கு இலாபம் - அப்படி ஒரு சச்சரவு உருவானால்தான், நம்மீது பாய, நேரமோ, நினைப்போ, வலிவோ, வாய்ப்போ கிடைக்காது போகும் என்பது, "ஏக இந்தியா'க்களின் எண்ணம்.

அந்த எண்ணம் காரணமாகத்தான், எப்போது திராவிட நாடா? தமிழ் நாடா? என்ற பேச்சு, விவாதமாக்கப்பட்டாலும், தூபமிட, தூக்கிவிட, ஏக இந்தியாக்கள் துடியாய்த் துடிக்கி றார்கள்; துந்துபி முழங்குகிறார்கள்.

ஏக இந்தியாக்களைப் பொறுத்தவரையில், தமிழ் நாடு, திராவிட நாடு என்ற திட்டம் எந்த வகையினதாக, அளவினதாக, முறையினதாக இருப்பினும் கூடாது என்பதுதான், எண்ணம் சில வேளைகளிலே, "தமிழ் நாடு' எனும் திட்டத்தினிடம் பரிவு காட்டுவதுபோலப் பொய்க்கோலம் காட்டுவர்; உண்மை நிலைமை அஃதன்று.

பெயரும் வகையும் முறையும் அளவும் எதுவாக இருப்பினும், தமிழ் நாடு என்று இருப்பினும், திராவிட நாடு என்று இருப்பினும் உரிமை உணர்ச்சியாக, விடுதலை வேட்கையாக தனி அரசுத் திட்டமாக, இருக்கும் எதனையும் "ஏக இந்தியாக்கள்' எதிர்த்து ஒழிக்கத்தான், ஆதிக்கத்தால் கிடைக்கும் ஆற்றலைப் பயன்படுத்துவரேயன்றி, இரண்டில் ஏதேனும் ஒன்றை ஆதரித்து, மற்றதை எதிர்ப்பர் என்று மதியிலியும் கூறமாட்டான்.

பிரிந்துபோகிறோம் - பேரரசுக்கு எடுபிடியாக இருக்க மாட்டோம் - தனி அரசாகிவிடப் போகிறோம் என்ற முழக்கம், எங்கிருந்து கிளம்பினாலும், தமிழ் நாடு பேசும் முகாமிலிருந்து எழும்பினாலும், திராவிட நாடு கேட்கும் பாசறையினின்று கிளம்பிடினும், ஏக இந்தியாக்களுக்கு வெறுப்புத்தான் உண்டாகும்.

இந்தியப் பேரரசு, "பேரரசாக' இருக்கவேண்டும் என்றுதான் எண்ணுகிறதேயன்றி, பிரிவினை, தமிழ் நாடாக இருந்தால் பரவாயில்லை, திராவிட நாடுதான் கூடாது என்ற நிலையில் இல்லை; இருக்க முடியாது.

பிரிவினை கூடாது - பேரரசு உடைபடக்கூடாது - தனி அரசு அமையக்கூடாது - என்ற இதிலேதான், இந்தியப் பேரரசு கண்ணுங்கருத்துமாக இருக்கும் - தமிழ் நாடா? திராவிட நாடா? என்ற அளவுபற்றிய அக்கறை கொண்டதுபோலச் சிலருக்குத் தூபமிட்டுப் பேச வைப்பதுகூட, மொத்தத்தில், "தனி அரசு' கேட்கும் உரிமை உணர்ச்சியை மாய்க்கவேயன்றி, தமிழன் என்ற உணர்ச்சியை மதித்திட அல்ல.

திராவிட நாடு கூடாது நடவாது என்று தமிழ் நாடு கேட்போர் கூறுவதாகப் பெரிதுபடுத்திப் பேசும், ஏக இந்தியாக்களின் நோக்கம், ஏக இந்தியா உடைபடாதிருக்க வேண்டும் என்பதுதான்.

அஃதேபோல, திராவிட நாடு எனும் திட்டத்தார், தமிழ் நாடு மட்டும் தனி நாடு ஆகவேண்டும் என்ற வாதத்திலே உள்ள குறைபாடுகளைப் பேசும்போது அக்கறை காட்டி அதனை எடுத்துரைப்பதும், "ஏக இந்தியா' எனும் திட்டத்தைக் காப்பாற்றத்தான்.

"திராவிட நாடு!' கேட்கும் குரல் வலிவடைந்து, நாட்டிலே ஆதரவு பெருகிடும் நிலை வளர்ந்ததும், ஆந்திரர் வேறு, கர்நாடகர் வேறு, கேரளத்தார் வேறு, எங்ஙனம் அவர்களை இணைத்து ஆட்சி நடக்கும்? ஆகாதே! கூடாதே! ஆபத்தாயிற்றே! என்று கூச்சலைக் கிளப்பி, தனி அரசுத் திட்டத்தைத் தகர்க்க நினைக்கிறார்கள் - அதற்கு, "தமிழ் நாடு' கேட்போர், "திராவிட நாடு' திட்டத்துக்கு எதிர்ப்பாகக் கூறும் காரணங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

அதுபோலவே, தமிழ் நாடு தனி நாடு ஆதல் வேண்டும் என்ற உரிமை உணர்ச்சியை உருக்குலைக்க, திராவிட நாடு கேட்பவர்கள் பேச்சினை எடுத்துப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்தியப் பேரரசினர் மேற்கொள்ளும் இந்தப் போக்குக்கு உள்ள நோக்கம், "ஏக இந்தியா' காப்பாற்றப்பட வேண்டும் என்பதாகும்.

தமிழ் நாடு தமிழருக்கே எனும் முழக்கம், எழுப்பப்பட்ட போது, எலி வளை எலிகளுக்கே என்றுதான் ஏக இந்தியாக்கள் கேலிக் குரலொலி கிளப்பின.

திராவிட நாடு திராவிடருக்கே என்ற இலட்சிய முழக்கம் எழுந்தது; திராவிடம் திராவிடம் என்று இரைச்சலிட்டன, ஏக இந்தியாக்கள்!

இப்போது, தமிழ் நாடு கேட்போரைக்கொண்டு, திராவிட நாடு திட்டத்தைத் தாக்கவைத்து, தகர்த்திடலாம் என்பது, ஏக இந்தியாக்களின் நப்பாசை!!

திராவிட நாடு திட்டத்தைத் தாக்க, தமிழ் நாடு கேட்போருக்கு வாய்ப்புத் தேடிக்கொடுத்த பிறகு, தமிழ் நாடு தமிழருக்கே என்ற திட்டத்துக்கு வலிவு ஏறிவிட்டால், ஏக இந்தியா என்ன செய்யுமெனில், முன்பு எழுப்பிய முழக்கம் இருக்கவே இருக்கிறது, எலி வளை எலிகளுக்கே? - அதனைக் கருவியாக்கிக் கொள்ளும்.

எந்த முறையைக் கையாண்டாகிலும். யாரை யார்மீது ஏவிவிட்டாகிலும், உரிமை உணர்ச்சியை, விடுதலை வேட்கையை, தன்னாட்சி ஆர்வத்தை ஒழித்தாக வேண்டும் என்பது ஏக இந்தியாக்களின் திட்டம்.

ஏக இந்தியாக்களின் இந்தச் சதித்திட்டம் புரியும் எவரும், தனி அரசு உணர்ச்சிக்கு ஊறு தேடிடத்தக்க கேடான முறையிலே, தங்கள் போக்கையும் நோக்கையும், பேச்சையும், செயலையும் ஆக்கிக்கொள்ளமாட்டார்கள். மிகுந்த விழிப்புடனிருந்து, ஏக இந்தியாக்களின் சதியை முறியடிப்பர்.

விலைக்கு வாங்கப்பட்டவர்கள் தவிர, வழுக்கி விழுந்தவர்கள் தவிர, குறுக்கு வழியில் புகழடைய நினைப்பவர் தவிர, மற்ற எவரும், ஏக இந்தியா நடத்தும் கபட நாடகத்தால், ஏமாந்து போகமாட்டார்கள் என்பது திண்ணம்.

"என்னய்யா திராவிட நாடு! தமிழ் நாடுதான் வேண்டு மென்கிறார்களே இன்னின்னார்! உன்னுடைய திராவிட நாடு கேலிக்கூத்தாமே! தமிழ் நாடுதான் சரியான திட்டமாமே!'' - என்று, ஏக இந்தியாக்கள் கேட்கும்போது, நாம் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும், அந்த "ஏக இந்தியாக்கள்' நமது நோக்கை வேறுபக்கம் திருப்பிவிட்டுத் தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறார்கள் தந்திரமாக! என்பதை.

தமிழ் நாடு கேட்பவர்களிடம், ஏக இந்தியாக்கள் சென்று, இதுபோலவே கிளறுவார்கள் - தமிழ் நாடு கூடாதாமே! திராவிடத்தார் கூறுகிறார்களே! - என்று. உடனே, தமிழ் நாடு கேட்பவர்கள், வந்தது சண்டை! இறக்கடி கூடையை!! என்ற போக்கிலே, திராவிட நாடு கேட்பவர்கள்மீது பாய்ந்தால், ஏக இந்தியாக்கள், தனியாகச் சென்று, கைகொட்டிச் சிரிப்பர்! சிண்டு முடிந்துவிட்டோம்! கண்டபடி பேசுகிறார்கள்!! - நம்பாடு இலாபந்தான்!! - என்று பேசி மகிழ்ந்துகொண்டிருக்கும்.

மாறா ஏக இந்தியாக்கள் கிளற, கிண்டிவிட, தூபமிட, தூக்கிவிட, சிண்டுமுடிந்துவிட, முனையும்போது, அடிப்படையை மறவாமல், "ஐயா! ஏக இந்தியா! உம்வேலை எமக்குப் புரியும் நன்றாக! கபடநாடகம் கண்டு கருத்தழிய மாட்டோம். எமக்குள்ள நோக்கம், இந்தியப் பேரரசு எனும் சூழ்ச்சிக்கோட்டையைச் சுக்குநூறாக்குவது. அந்தக் காரியத்தை நாங்கள் செய்யாமல் தடுக்க, சூது செய்கிறாய் - புரிகிறது. நாங்கள் பலியாக மாட்டோம். எமது எதிர்ப்பை நிறுத்திக்கொள்ளவும் மாட்டோம், மாற்றிக் கொள்ளவும் மாட்டோம் என்று கூறிடும், துணிவும் தூய்மையும் எழ வேண்டும். எழுந்திடின், ஏதேது! சிண்டு முடிந்துவிட முடியாது போலிருக்கிறதே!'' என்று உணர்ந்து, ஏக இந்தியாக்கள் மூலை செல்வர்.

தமிழ் நாடா? திராவிட நாடா? என்பதற்கான விளக்கப் பேச்சுக்கள் அதிகப்பட அதிகப்பட, இந்தியப் பேரரசின் இறுமாப்பு, ஆதிக்கவெறி, சுரண்டல்முறை, இனம் அழிக்கும் கொடுமை என்பவை குறித்த பேச்சுக் குறையும், மறையும். அந்தப் பேச்சுக் குறையக் குறைய, உரிமை உணர்ச்சி உருக்குலையும். தனி அரசுத் திட்டம் துருப்பிடித்துப்போகும், விடுதலை அணி உடைபடும்; சிதறுண்டுபோகும்.

நாம் தம்பி! ஒரு துளியும் இந்த நிலைமை எழ இடமளிக்கக் கூடாது.

வடக்கு வேறு - தெற்கு வேறு - என்ற விளக்கம் இப்போது நல்ல முறையிலே கிடைத்து, மக்கள் உணரத் தலைப்பட்டுள்ளனர்.

"வடக்கு நரகலோகமுமல்ல - வடக்கே உள்ளவர்கள் யமகிங்கரருமல்ல' என்ற புதிய சித்தாந்தம், மக்கள் காதுக்கு நாராசமாக இருக்கிறது.

எனக்குள்ள மகிழ்ச்சி, தமிழ் நாடு தனி நாடு ஆகவேண்டும் என்று கூறும் ஆதித்தனார், இப்படிப்பட்ட ஒரு ஆபாசமான சித்தாந்தத்தை ஏற்கவில்லை என்பதுதான்.

வடவரின் பிடியை எதிர்ப்பதில், இந்தியப் பேரரசு கூடாது என்பதில், ஆதித்தனார், தீவிரம் காட்டுவதை வரவேற்கிறேன், மகிழ்கிறேன் - வடநாடு நரகலோகமுமல்ல, வடவர் யமகிங்கரருமல்ல என்று அவர் கூறவில்லை. அவருக்கு இல்லை அந்தக் கெடுமதி! அந்த நிலைமைக்குத் தாழ்ந்து போகவில்லை. தலை நிமிர்ந்து நின்று, தமிழ் நாடு தமிழருக்கு என்றார்! அதுகேட்டு நான் இன்புறுகிறேன்.

இந்தியப் பேரரசு என்பது அரசியல் ஆதிக்கத்தால் இறுமாந்துகிடக்கும் ஒரு புதிய ஏகாதிபத்தியம்; வடநாட்டு முதலாளிகளுக்கு அமைந்துள்ள கோட்டை; தென்னாட்டைத் தேயவைக்கும் சுரண்டல் யந்திரம் என்ற பேருண்மையை இப்போது மக்கள், மிகத் தெளிவாகத் தெரிந்துகொண்டுவிட்டனர்.

இந்த உணர்ச்சி பாழாகும்படியான பேச்சிலே ஈடுபடுபவர் களைவிட நாட்டுக்குக் கேடு செய்பவர்கள் வேறு எவரும் இருக்க முடியாது.

தமிழ் நாடா? திராவிட நாடா? என்ற பேச்சுக்குப் பின்னாலே பதுங்கிக்கொண்டு, தென்னாட்டைச் சுரண்டிக் கெடுக்கும் வடநாட்டு முதலாளிகளின் கோட்டையாகிவிட்ட இந்தியப் பேரரசு எனும் புதிய ஏகாதிபத்தியத்துக்கு உடந்தையாக இருப்பவர் எவரேனும், அவரினும் இழிதன்மையான செயல் புரிவோர் வேறெவரும் இருக்க முடியாது.

தம்பி! என்னைப்பற்றி, என் திறமைக்குறைவு, தெளிவற்ற தன்மை, பெருந்தலைவர்களிடம் பேச முடியாத பயங்கொள்ளித்தனம் என்ற எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசி மகிழட்டும்; மகிழக்கூடியவர்களுக்கு விருந்தளிக்கட்டும். நான் துளிகூட வருத்தப்படவில்லை. ஆனால், அதே வேகத்துடன், விறுவிறுப் புடன், நம்மை அடிமைப்படுத்தி, அலைக்கழிக்கும் ஏக இந்தியா எனும் ஏற்பாட்டை, எதிர்த்துத் தாக்கினால் போதும்.

அண்ணன் என்பவன் யாரடா!
அப்படி ஒருவனெனக் கேனடா!

என்று வீரச்சிந்து கேட்போரைப் பரவசப்படுத்தும் அளவுக்குப் பாடட்டும். ஆனால், வடநாட்டு ஆதிக்கத்தால் வதைபடும் மக்களை விடுவிக்க, வீரம் கொந்தளிக்கும் வெண்பாக்கள் பாடுவதை, விட்டுவிடவேண்டாமென்றுதான் கேட்டுக்கொள் கிறேன். நான் ஒரு தனி ஆள் - மிகச் சாதாரணமானவன் - என்னை அடக்க அல்லது அழிக்க, இத்தனை பெரிய முயற்சியும் ஆற்றலும் தேவையா? அந்த ஆற்றலை, நமது மக்களை, சிங்களத்துக்கும், சிங்கப்பூருக்கும், ஜான்சிபாருக்கும், மோரிசுக்கும், நெட்டாலுக்கும் துரத்திவிட்டிருக்கிற இந்தியப் பேரரசின் - ஆதிக்கத்தை எதிர்த்திடப் பயன்படுத்த வேண்டும்.

வெண்ணெய் வெட்ட வாள் ஏன்? என்னைத் தாக்கவா இவர்களின் அறிவாற்றல் தேவைப்பட வேண்டும்?

ஐயம் ஏற்படும் நாட்டு மக்களுக்கு, இவர்களுக்கு உள்ள ஆற்றல் இந்த அண்ணாத்துரையை ஏசமட்டுமே பயன்படும் அளவுபோலும் என்று!!

அதுமட்டுமல்ல! அவனோடு இருந்தபோது, வடநாட்டு ஏகாதிபத்தியத்தைத் தாக்க, நேருவிலிருந்து நேருதாசர் வரையிலே, "ஏ! மாமிச மலைகளே! சோற்றாலடித்த பிண்டங்களே! உணர்ச்சியற்ற உருவாரங்களே!'' என்றெல்லாம் கண்டித்தார்கள், இடிமுழக்கமிட்டு, இப்போது ஒரு வார்த்தை கூறப் பயப்படுகிறார்களே! அந்த இடத்தைவிட்டு வந்துவிட்டதும் இத்துணை தொடை நடுக்கமா! - என்று ஏளனமாக எண்ணுவர்.

அதுமட்டுமல்லவே! வடநாட்டு ஏகாதிபத்தியத்தை மகிழச் செய்வதற்காகவே, இப்போது, தி. மு. கழகத்தவரைத் தூற்றிக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது என்று எண்ணுவார்கள். அந்த ஐயம் அகற்றவும், ஆற்றலைத் தக்க வழியில் பயன்படுத்தவும், வீரவெண்பாப் பாடிவர வேண்டுகிறேன். இடையிடையே என்னை இகழ்ந்து விருத்தம் பாடிக்கொள்ளட்டும் - வேண்டா மென்று சொல்ல நான் யார்? - மேட்டுக்குடியினனா? ஒட்டா? உறவா? உம்! ஆகட்டும், என்னை ஏசி, அகவல் அந்தாதி, எதெது முடிகிறதோ அவ்வளவும். ஆனால், அந்தப் பழைய போர்க்குரல் - முழக்கம் - கண்டதுண்டமாக்கிடும் வீராவேசம் - அந்தப் பக்கம் கொஞ்சம் பாயட்டும். வடநாட்டு ஏகாதிபத்தியத்தின்மீது வெகுண்டு பாடிய வெண்பாக்களை நாடு கேட்கட்டும்.

என் காதுகளிலே ஒலித்தபடிதான் இருக்கின்றன அந்த வெண்பாக்கள்.

தெற்கு வறண்டதேன்? தீக்காடாய்ப் போனதேன்?
குற்றுயிராய் வாழ்வு குலைந்ததேன்? - பொற்றொடியே!
அஞ்சாமல் கூறிடுவேன் அத்தனைக்குங் காரணந்தான்
வஞ்சனையாளர் வடக்கு.
தென்னாட்டின் செல்வமெலாஞ் சேர்த்து டில்லியில் குவித்தே
அந்நாட்டைப் பூக்காடாய் ஆக்குவதும் - இந்நாட்டில்
மிஞ்சும் தொழில்களையும் வேரறுத்து மாய்ப்பதுவும்
வஞ்சனையாளர் வடக்கு.

***

துன்பநிலை நீங்காத் தூயோர் புகழ்கின்ற "இன்பத் திராவிடம்' இங்க மைந்தால் - தென்னவர்பால் தஞ்ச மடைவதல்லால் தன்னாட்சி காணுமோ வஞ்சனையாளர் வடக்கு.

***

நெஞ்சுடையப் பாடுபட்ட நீர்மையார் தென்னாட்டில் பஞ்சடைந்த கண்ணாய்ப் பரிதவிக்க - அஞ்சாமல் மிஞ்சிய செல்வத்தை மேவிச் செழிக்குதடா வஞ்சனையாளர் வடக்கு.

***

நாடாண்ட தென்னவர்கள் நாதியற்று வாழ்விழந்து ஓடாகி நாளும் உழைத்தாலும் - வாடாமல் நெஞ்சில் இரக்கமின்றி நித்தம் வதைக்கின்றார்! வஞ்சனையாளர் வடக்கு.

***

இத்தகைய விடுதலை உணர்ச்சி கொப்பளிக்கும் வெண்பாக்கள், வீரமுழக்கங்கள், யாவுமே மாறி, இப்போது ஏன் விலகினோம் என்பதற்கான "நொண்டிச் சிந்தும்' - வடக்குக்குக் "காவடிச் சிந்தும்', நேரு பெருமகனாருக்குத் "திருப்புகழ்' பாடுவதுமாகவா, இவர்கள் மாறிவிட வேண்டும்? இதைக் காணும்போது,

வஞ்சனையாளர் வடக்கு என்ற வாயினரே!
வாஞ்சனையும் கொண்டீரோ வடவர் பாலே!
கிடக்கின்றான் காஞ்சியிலே கிழடு தட்டி!
கிளர்ந்தெழுந்து காட்டிடுவீர் உமதுவீரம் வடக்கு நோக்கி!

என்றல்லவா தம்பி! கேட்டிடத் தோன்றும்.

வெண்பாவா இது! என்று கவிதை கற்றோர் கேட்கக்கூடும். தம்பி! எனக்கு அந்த இலக்கணம் தெரியாது. ஆனால் இதுதான் இவர்தம் போக்குக் கண்டு, பேச்சுக் கேட்டு, நாடு தந்திடும் புதுப் பா!

அண்ணன்,

18-6-61