அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


சந்தனம் அரைத்த கரம்
1

இந்திய சர்க்காருக்கு வரிப்பணம் -
வெளிநாட்டாருக்கு விருந்தும் வரவேற்பும் -
திட்ட ஊழல் -
ஏழை துயரம்.

தம்பி!

ஒரு ஓலைக்கொத்துக் குடிசைக்குள்ளே நடைபெற்றுக் கொண்டிருக்கும், அவலச் சுவைமிக்க சம்பவம் கூறுகிறேன், கேள். மாட மாளிகைகளிலே நடைபெறும் சம்பவமாக இருந்தால், கேட்கத் தித்திக்கும், இது...? என்று எண்ணி, அலட்சியமாக இருந்து விடாதே, பலப்பல ஆயிரம் குடிசைகள் பாடுபட்டால் தான் ஒரு மாளிகை; கவனமிருக்கட்டும்.

"கையைத் தூக்கவே முடியவில்லை. ஒரே குத்தல், குடைச்சல். நானும் எப்படி எப்படியோ சமாளித்துப் பார்க்கிறேன், முடியல்லே... பிராணனை வாட்டுது...''

"பாரடி அம்மா, உங்க அப்பன், சுளுக்குக்கு இந்தக் கூச்சல் போடறதை! கை சுளுக்கிக்கிட்டுதாம், அதுக்கு உசிரு போகுது, தாளமுடியல்லேன்னு ஒரே அமக்களம் பண்ணுற கூத்தைப் பாரு...''

"பெரிய கிராதகிடி, நீ. நான் என்ன, துடியாத் துடிக்கறேன். மூணுநாளா நான் பல்லைக் கடிச்சிக்கிட்டு, நோவை பொறுத்துக்கிட்டு இருந்தேன் - என்னாலேயும் வதாள முடியாததாலே கூச்சல் போடறனே தவிர, வேணும்னு வேஷமாப் போடறேன்...''

"இருக்கும்மா! அப்பா எப்பவும், எப்படிப்பட்ட வலியையும் பொறுத்துக்கிட்டு இருப்பவராச்சே. பாவம்! என்னமா வலிக்குதோ என்னமோ...''

Missing Page


"கொழந்தைப் புள்ளெக்குக் கூடத் தடவலாம். புண்ணு ஏன் ஆவுது? போடி, இருட்டிவிட்டா, அந்தப் பக்கம், கன்னிம்மா கோயில் சர்ப்பம் உலாத்தும்...''

"ஆமாம் பொண்ணு, பார்த்துப்போ...''

"அது என்ன பண்ணும்? கன்னிம்மா! கன்னிம்மான்னு மூணுதடவை சொன்னா, மாயமா மறைஞ்சிடும்...''

"எதுக்கும் ஜாக்கிரதை வேணும் போயிட்டு சுருக்கா, வாம்மா. என்ன இழவெடுத்த சுளுக்கோ தெரியல்லே, உசிரை வாட்டுது...''

களிமண் தடவி, நோய், நொடியிலே போய்விடும் என்று உபசாரம் பேசி, அவனை அன்றிரவு உறங்கவைக்க, தாயும் மகளும் வெகுபாடு பட்டனர். காலையில் எழுந்ததும், வலி அதிகமாயிற்றே தவிர குறைய வில்லை.

"அப்ப இது, நோய் அல்ல; கன்னியம்மா குத்தம்' என்று தீர்ப்பளித்துவிட்டு, கோயில் சுற்றக் கிளம்பிவிட்டாள் கோவிந்தம்மா. கந்தப்பன், வேலைக்குப் போகமுடியாதே, என்ன கோபம் செய்துகொள்வார்களோ, வேறு ஆளை வைத்து விடுவார்களோ என்று பயந்தான். ஆனால் என்ன செய்வது, இப்படிப் பயந்து பயந்துதான், வலி இருக்கும்போதே அதைப் பொருட்படுத்தாமல், மூன்று நாட்களாக வேலைக்குச் சென்று, வலியை அதிகமாக்கிக்கொண்டான்.

"ஏன், அந்தச் சோம்பேறி, இன்னைக்கு மட்டம் போட்டுட்டுதா...?''

என்று ஒரு குரலும், அதற்கு ஆதரவாக,

"இப்பத்தான் இதுகளுக்கெல்லாம் திமிர் தலைவிரித்து ஆடுதே''

என்று வேறோர் குரலும் கிளம்புவது, கந்தப்பனுக்குக் கேட்பது போலவே இருந்தது. இருந்தாலும் பரவாயில்லை, தேவையைவிட அதிகமாகவே சரக்கு தயாரித்து வைத்தாயிற்று; இன்று ஒரு நாள் வேலை செய்யாததாலே காரியம் குந்தகப்பட்டுவிடாது என்ற தைரியத்தில் கந்தப்பன் இருந்தான். தைலம் வாங்கிவரச் சொல்லி தன் மகள் முத்தம்மாளை அனுப்பிவிட்டு, அம்மா! அப்பா! அம்மம்மா! ஐயயோ...! அடடடா! - என்று முனகியபடி படுத்துக் கிடந்தான்.

சுளுக்கு, எலும்பு முறிவு ஆகியவைகளுக்குப் பச்சிலைத் தைலம் தடவிக் குணப்படுத்தும் பரம்பரை ராஜ வைத்தியர் ராமண்ணா வீட்டில் இல்லை. அன்று செந்திலாண்டவன் கோயிலில் முருகனுக்குச் "சந்தனக் காப்பு' உற்சவம், பிரமாதம், அதைத் தரிசிக்கப்போயிருந்தார் வைத்தியர்.

முருகனுக்குச் சந்தனக் காப்பு உற்சவம் தடபுடலாக நடைபெற்றது.

பல ஆயிரக்கணக்கான பக்தர்கள், கண்டு களித்தனர்.

மேளம் வாணவேடிக்கை எல்லாம், செலவு பற்றிய கவலையற்ற முறையில், ஏற்பாடாகி இருந்தது.

"சந்தனக்காப்பு' சேவை முடிந்ததும், சந்தனம் பக்தர்களுக்குத் தரப்பட்டது - விலைகொடுத்து அல்ல, காணிக்கை செலுத்தி, சந்தனம் பெற்றுக்கொண்டனர்.

அத்தரும் பன்னீரும், அரகஜாவும் பிறவும் கலந்துதான் பார், என் செந்திலாண்டவன்மீது அப்பப்பட்ட சந்தனத்துக்கு உள்ள மணம், இருக்கிறதா என்று பார்! இருக்கவே இருக்காது! சந்தனக் காப்பு முடிந்ததும், தனியாக ஒரு தெய்வீக மணம், சந்தனத்துக்கு ஏற்பட்டு விடுகிறது! மல்லிகை முல்லை, மருவு மருக்கொழுந்து, ரோஜா, மகிழம்பூ, மனோரஞ்சிதம், எனும் புஷ்பங்களிலே எல்லாம் கிடைக்கும் "வாசனை' அவ்வளவும் ஒன்றாகச் சேர்ந்து விட்டதுபோலிருக்கும். செந்திலாண்டவன் கோயில் சந்தனக்காப்பு உற்சவம் என்றால், தேசமுழுவதும் தெரியும் - என்றெல்லாம் பக்தர்கள் பேசிக்கொண்டனர்.

எலுமிச்சை அளவு, விளாங்காய் அளவு, குண்டுமணி அளவு, உருத்திராட்சைக் கொட்டை அளவு, இப்படிப் பக்தர்கள் அவரவர் செலுத்தும் காணிக்கைக்குத் தக்கபடி, சந்தனப் பிரசாதம் பெற்றுச் சென்றனர்.

தெய்வீக மணம் பொருந்தியது என்று நம்பப்பட்ட இந்தச் சந்தனம் முழுவதும், குடிசையிலே குமுறிக்கொண்டிருக்கிறானே கந்தப்பன், அவன் அரைத்தெடுத்துக் கொடுத்தது!

செந்திலாண்டவன் கோயிலில், சந்தனம் அறைத்துக் கொடுக்கும் "ஊழியக்காரன்' இந்தக் கந்தப்பன்.

பல ஊர்களிலிருந்தும் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள், பகவத் பிரசாதம் என்று பயபக்தியுடன் காணிக்கை செலுத்திப் பெறுவதற்காகத் தயாரிக்கப்பட்ட சந்தனம், இந்தக் கந்தப்பன், கை வலிக்க வலிக்க அறைத்தெடுத்துக் கொடுத்தது.

சந்தனக்காப்பு உற்சவத்தை முன்னிட்டு, கந்தப்பன், இரவு பகலாகச் சந்தனம் அறைத்தெடுத்துக் கொடுத்துத்தான், கை சுளுக்கிக்கொண்டுவிட்டது.

மார்பில் பூசிக்கொண்டும், நெற்றியில் பொட்டாக வைத்துக்கொண்டும், சந்தனம் "கமகம வென்று இருப்பது குறித்துக் களிப்புடன் பேகிறார்கள், பக்தர்கள்!

கன்னத்தில் தடவி மகிழ்பவரும், மார்பிலே பூசிக்கொண்டு மந்தகாசமாக இருப்போரும், மாளிகைகளிலே உள்ளனர்.

உண்ட ருசியான பண்டம் "ஜீரணம்' ஆவதற்காகப் பூசிக்கொண்டு முருகா! கடம்பா! கந்தா! வடிவேலா! - என்று கூறிப் புரண்டுக்கொண்டிருக்கிறார்கள். சில பக்தர்கள், கோயில் அர்ச்சகர், தனக்கு வேண்டியவாளுக்காகப் பிரத்யேகமாக, வெள்ளி வட்டிலில் சந்தனத்தை வழித்தெடுத்து வைத்திருக் கிறார்; வத்சலாவோ சபலாவோ, அபரஞ்சிதமோ அம்சாவோ, அதன் மணம் பெற்று மகிழப் போகிறார்கள்.

காட்டில் கிடைக்கும் மரம் - அதிலே கவர்ச்சியூட்டும் மணம்! - அரைத்தெடுத்திட உழைப்பாளிக்கு முடிகிறது. சீமான்களின் மாளிகையாக இருந்தால் கூட கந்தப்பன், இவ்வளவு கடினமாக உழைத்திருக்கமாட்டான்; கைசுளுக்கு ஏற்பட்டிருந் திராது. செந்திலாண்டவன் கோயிலின் சந்தனம் அரைத்துக் கொடுப்பது என்பது "புண்ய காரியம்' என்பது அவனுக்குக் கூறப்பட்டது.

"கேவலம் கூலிக்காக, சோற்றுக்காகவாடா, கந்தப்பா நீ வேலை செய்கிறாய்? சகல சித்திகளையும் அருளவல்ல, முருகப் பெருமானுக்கு நீ செய்யும் கைங்கரியம் இது - ஊழியக்காரனல்ல நீ பக்தன்! தெரிகிறதா! எனவே, கஷ்டத்தைப் பாராதே, காசு எவ்வளவு தருவார்கள் என்று கேளாதே பகவானுக்கு நாம் சேவை செய்கிறோம் என்ற எண்ணத்தோடு வேலை செய், வேல் முருகன், உனக்குத் தக்க சமயத்தில் தக்க விதமாக அருள் பாலிப்பார், என்று திருப்புகழ் பஜனைக் கூடத்தாரும், கோயில் தர்மகர்த்தாவும் கூறினர்; அவர்களெல்லாம் மெத்தப்படித்த வர்கள், அவர்கள் கூறுவது சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை கந்தப்பனுக்கு. எனவேதான், கை தழும்பேறியதைக் கவனியாமல், சுளுக்கு ஏற்பட்டு உயிர் துடிக்கும் விதமான வலி உண்டாகும் அளவுக்கு, சந்தன அரைப்பு வேலையைச் செய்திருக்கிறான்.

முருகனுக்குச் சந்தனக் காப்பு நடைபெற்றது, சன்னதியே நறுமணம் பெற்றது.

பக்தர்கள் சந்தனப் பிரசாதம் பெற்றனர் - மகிழ்ந்தனர். கோயில் நிருவாகத்தினர், வரவு-செலவு கணக்குப் பார்த்தனர். நல்ல ஆதாயம், எனவே, மிகுந்த மகிழ்ச்சி அவர்களுக்கு. அவர்களின் இல்லங்களிலெல்லாம் சந்தன மணம் கமழ்ந்தது! கந்தப்பன் வீட்டிலேயோ, எருக்கம் பால் வாடை மூக்கைத் துளைத்தது. கந்தப்பன் அரைத்துக் கொடுத்த கலவைச் சந்தனம், பலருடைய உடலுக்கு அழகும் மணமும் அளித்தது கந்தப்பன் உடலில், களிமண் பூசப்பட்டிருக்கிறது. எருக்கம் பால், தடவி இருக்கிறார்கள்; மூதாட்டி ஒருத்தி சொல்லிவிட்டுப் போயிருக்கிறாள், "இதெல்லாம் எதுக்கு? பசுமாட்டுச் சாணியைக் கொதிக்கவைத்துத் தடவு, நோய் பட்டுன்னு விட்டுப்போகுது பாரு'' என்று.

இந்திய சர்க்காருக்கும் தம்பி, மக்கள், கோடி கோடியாகப் பணத்தைக் கொட்டிக் கொடுத்துவிட்டு, கைசுளுக்குக்கு எருக்கம் பால் தேடிடும் கந்தப்பன் போல, தங்கள் வாழ்க்கை வசதிக்கு, தகுந்த அளவும் வகையும் பொருள் கிடைக்காமல், திண்டாடித் தேம்புகிறார்கள்.

சந்தனம் அரைத்துக் கொடுத்ததால் உண்டான வலி தீர்ந்தால் போதும் என்ற நிலையில், கந்தப்பன் இருப்பதுபோல, நாளுக்கு நாள் ஏறிப் பாரமாகிக்கொண்டு வரும் வரித் தொல்லையைத் தாங்குவதற்காவது வலிவு வேண்டுமே, அதை எப்படிப் பெறுவது என்று, ஏழை மக்கள் ஏங்கித் தவித்து கிடக்கிறார்கள்.

சந்தனக் காப்பு உற்சவம், பார்க்கப் பதினாயிரம் கண் வேண்டும் என்று பக்தர்கள் பரவசத்துடன் கூறுவதுபோல் இந்திய சர்க்கார், மந்திரிகளின் கௌரவம் உயர்த்தப்படுவதற்கும், மதிப்பு பெருகுவதற்கும் செலவிடும் தொகையையும் வகையையும் கண்டால், சுயராஜ்யத்தின் "சுதந்தர சொரூபம்' தெரிகிறது என்று தெந்தினம் பாடிடப் பலர் உளர்.

"கேவலம் கூலிக்காகப் பாடுபடுவதாக எண்ணிக் கொள்ளாதே, இது பகவத் கைங்கரியம், எனவே "விசுவாசத்துடன்' சேவை செய்ய வேண்டும்'' என்று கந்தப்பனுக்கு உபதேசிக்கப் படுவது போலவே, "அன்னிய ஆட்சியின் போது, வரி கொடுக்க, உங்கட்கு, மனக்கசப்பும் கொதிப்பும் இருப்பது சகஜம்; இப்போது அப்படி இருக்கக் கூடாது; இது சுயராஜ்யம்; எனவே முகத்தைச் சுளிக்காமல் பாரம் என்று குமுறாமல், முடியவில்லையே என்று கூறிக் கண் கசக்கிக்கொள்ளாமல், கேட்கும் வரிப்பணத்தைக் கொடுக்கவேண்டும்; அதுதான் தர்மம் தேசபக்தி'' என்று உபதேசிக்கும் காங்கிரஸ் தலைவர்கள், உரத்த குரலில் பேசுகிறார்கள்.

களிமண் தடவினால் வலிபோகுமா, எருக்கம் பாலடித்தால் சுளுக்கு நீங்குமா என்று கந்தப்பன் பரதவிப்பது போலவே, என்னென்ன பாடுபட்டால் பிழைக்கலாம், எந்தெந்தத் தேவைகளைக் குறைத்துக் கொள்ளலாம், என்னென்ன துணைத் தொழில்கள் தேடிடலாம், கூடை முடைவோமா, கோழி வளர்ப்போமா, கொல்லன் பட்டரையில் வேலை செய்வோமா, என்ன செய்தால், நமக்கு இன்னும் ஒரு கவளம் கிடைக்கும் என்று ஏக்கத்துடன் எண்ணி எண்ணி, "போதாமை'யால் தாக்குண்டு கிடக்கிறான், ஏழை! அவனுக்குப் போதிக்கப்படும் தேசீயமோ, குமுறாமல் கொடு, குறை கூறாமல் கொடு, வரியாகக் கொடு, கடனாகக்கொடு, நகைக்குச் செலவிடாதே, "நல்லது பொல்லதுக்கு' என்று பணத்தை வீணாக்காதே, நாங்கள் அடிக்கடி கடன் கேட்போம், உன் கடமை என்று எண்ணிக்கொண்டு கழுத்துத் தாலியில் உள்ள குண்டுமணிப் பொண்ணாக இருந்தாலும், எடுத்துக் கொடு, தேசபக்தன் என்ற கீர்த்தி உனக்குக் கிட்டும் - என்று பிரசாரகர்கள் பேசுகிறார்கள்.

கந்தப்பன், கையைத் தூக்கமுடியவில்லையே, என்று கதறிக் கிடக்கிறான்.

வாழ்வு சுமையாகிவிட்டது, தலைநிமிர்ந்து நிற்க முடியவில்லை என்று பொதுமக்கள் புலம்புகிறார்கள்.

செந்திலாண்டவனுக்குச் சந்தனக் காப்பு உற்சவம் "சம்பிரமமாக' நடைபெறுகிறது; சவுதி அரேபியா சுற்றுப்பயணத் துக்காக நேரு பெருமகனார் தம் "ஜமா'வுடன் தயாராகிக்கொண் டிருக்கிறார். அவர் பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்து ஒரு திங்கள் ஆகிறது, இதற்குமேல் அவருக்கு இங்கு இருக்கப் பிடிக்கவில்லை, சவுதி அரேபிய மன்னரின் விருந்தினராகிறார்! அன்றலர்ந்த ரோஜா தினமும் விமான மூலம் நேருவுக்குக் கொண்டுவந்து தர ஏற்பாடாம். சவுதி அரேபிய மன்னரின் இரம்மியமான ஒரு அரண்மனையில் நேரு துரைமகனார் தங்கி இருக்க ஏற்பாடு! நேருவுக்குப் பிரியமான உணவு வகைகளைச் சமைத்திட, இங்கிருந்தே திறமையான சமயற்காரர்கள்! சவுதி அரேபிய மன்னர், கோடீஸ்வரர்! அவருடைய விருந்தினராகத் தங்கி இருக்கும் நாட்களில், ரோஜாவின் மணமும் ராஜோபசாரமும், சலாமிட்டு நிற்கும் பணியாட்களின் குழைவும், சர்வதேச நிலைமை பற்றிய பேச்சும், நேருவுக்கு மனச் சந்துஷ்டி அளிக்கும்; மகனைத் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியாக்கிவிட்டு மாரடித்து அழுது கொண்டிருக்கும், தாய்மார்களின் கதறல் அல்லவா அவருக்கு இங்கு காது குடையும் அளவுக்குக் கிடைக்கிறது! கண்ணீர்க் குண்டு வீச்சினால் கிளம்பும் புகையும், பிணவாடையும், நாள் தவறாமல் இங்கு! எப்படி நேரு பெருமகனார் இந்தக் "கண்றாவி'க் காட்சியைக் காண்பது! நிம்மதி இராதே! இதற்கோ அவர் இந்தியாவின் முடிசூடா மன்ன ரானார்! மோதிலாலின் திருக்குமாரன், தங்கத்தொட்டிலில் தாலாட்டி வளர்க்கப்பட்ட செல்லப்பிள்ளையாமே!

கண்ணே! கண்வளராய்

கட்டிக்கரும்பே! கண்வளராய்

என்று தாலாட்டுப்பாடித் தாதியர் தொட்டிலாட்டி யிருப்பர். அப்படி வளர்ந்த ஆனந்த பவனத்தாருக்கு, இங்கு, ஐயோ! அப்பா! அம்மவோ! என்ற அலறலும் கதறலும், எப்படி இனிப்பளிக்கும்? எனவே சவுதி அரேபியா செல்கிறார்! பன்னீரில் குளிக்கலாம், பரிமளகந்தம் பூசலாம், சிரித்திடும் ரோஜாவையும் புன்னகை பூத்திடும் இராஜதந்திரிகளையும் கண்டுகளிக்கலாம். தேன் பாகிலே பதமாக்கப்பட்ட பேரீச்சம்பழமும், கனிச்சாறும் அவருக்கு, மொழி வழி அரசு, எல்லைத் தொல்லை என்பன போன்றவைகளால் ஏற்பட்ட எரிச்சலைப் போக்க உதவக்கூடும்.

மறந்தே போனேனே தம்பி, இந்தியாவின் மதிப்பு உயரும்!!

இதனாலா? இங்கு மக்கள் இல்லாமையில் இடர்ப்பட்டுக் கொண்டு கிடக்கும்போது, இவர் சவுதி அரேபியா சென்று இராஜோபசாரம் பெறுவதாலா இந்தியாவின் மதிப்பு உயரும்? என்று - உனக்குக் கேட்கத் தோன்றும்! அப்படித்தான் அவர்கள் சொல்லுகிறார்கள், நம்பாதவனைத் தேசத் துரோகி என்று ஏசுகிறார்கள்.

"என்ன சந்தனக் காப்பு உற்சவமோ! கைசுளுக்கு என் பிராணனை வாட்டுவது எப்படி வலி எடுக்கும் அளவுக்கு நான் அரைத்தெடுத்த சந்தனந்தானய்யா அது "என்று செந்திலாண்டவன் கோயிலில் சந்தனம் அரைத்திடும் கந்தப்பன் சொன்னால், சும்மா விடுவார்களா! செந்திலாண்டவன் கூட அல்ல, அங்கு வரும் காவடி தூக்கியும், காவிகட்டியும், மொட்டையும் பிறவு குன்றோ, கந்தப்பன்மீது வசைபொழியும்!