அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


சொக்கப்பனிடம் பட்ட கடன்

அமெரிக்கக் கடனும் ரஷ்யக் கடனும்
புதுக் கடன் கொண்டு பழங்கடன் அடைப்பு
கடன் தீர்க்கும் அளவுக்குத் தொழில் அமைப்பு ஏற்படாமை
நேரிடைப் பதிலும் திட்டவட்ட விளக்கமும் தேவை
காமராஜரால் கழுகைக் கிளியாக்கிவிட முடியுமா?

தம்பி!

சொக்கப்பனிடம் பட்ட கடனைத் தீர்க்கச் சோணா சலத்திடம் புதிதாகக் கடன் வாங்குபவர் உண்டு; சொக்கப்பனிடம் பட்ட கடனைத் தீர்க்கச் சொக்கப்பனிடமே மேலும் கடன் வாங்குபவர் உண்டா? கண்டதுண்டா?

இல்லை என்கிறீர்கள். அப்படி ஒருவர் எப்படி இருக்க முடியும் என்று கேட்கிறீர்கள். மலைபோல இருக்கிறார் தம்பி! மலைபோல! கண்டதில்லை என்கிறாய். நான் என்னத்தைச் சொல்ல!!

சொக்கப்பனிடம் பட்ட கடனை ஏன் திருப்பித்தர முடியவில்லை என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்; மற்றவை பிறகு எளிதாகப் புரியும்.

சொக்கப்பனிடம் பட்ட கடன் விளக்காகாமல் மத்தாப்பாகிவிட்டால், வயலுக்குப் பாயாமல் விழலுக்குச் சென்றுவிட்டால், பணம் வீணாகிப்போகும் - பயன் கிடைக்காது. பயன் கிடைத்தாலல்லவா, கடனைத் திருப்பிச் செலுத்த முடியும்? கலியாணச் செலவுக்காகக் கடன் வாங்கிக்கொண்டு வந்து அதனைக் கழனி வாங்கச் செலவிட்டால் இரண்டோர் வருடத்தில் பட்ட கடனையும் தீர்த்துவிடலாம், கடன் படாமல் கலியாணத்தையும் பிறகு நடத்திக்கொள்ளலாம். அவ்விதமின்றி, கலியாணச் செலவுக்காகப் பெற்றுவந்த கடன் தொகையைக் கொண்டு காவடித் திருவிழா நடத்திவிட்டால், கலியாணந்தான் நடக்குமா, பட்ட கடனைத் தீர்க்கத்தான் வழி கிடைக்குமா!! கந்தன் அருள் கிடைக்கலாம், அங்கே! மேலே!! இங்கே? கடன் கொடுத்தவன் "பிடி வாரண்டு' அல்லவா அனுப்புவான்!

கடன்படுவது என்பதே அடியோடு தவறு அல்ல; தேவை, நேரம் இவைகளைப் பொருத்துக் கடன்படலாம்; அதனைக் கொண்டு தக்க பலன் கொடுக்கக்கூடிய செயலாற்றி, வருவாய் பெற்று, அதிலே மிச்சம்பிடித்து, பட்ட கடனையும் தீர்த்து விடலாம், புதிய உடைமையையும் காணலாம். காண்கின்றனர், கருத்துடன் காரியமாற்றுபவர். கடனோடு கடன் கந்தப்பொடி பலம் பத்து - என்பார்கள் கொச்சை மொழியில். அதுபோலக் கடன்பட்டுப் பட்டு, கவைக்குதவாத காரியத்தில் செலவிட்டு விட்டால், சொக்கப்பனிடம் பட்ட கடனைத் தீர்க்கச் சோணாசலத்தைத் தேடவேண்டியதுதான்! இதுவே தவறு, மோசம். நான் சொல்வது இதனைவிட விசித்திரம், சொக்கப்பனிடம் பட்ட கடனைத் தீர்க்கச் சொக்கப்பனிடமே கடன் வாங்குவது.

பருவச் சேட்டை மிகுந்த அரும்பு மீசைக்காரன் "ஐயா' வைத்து விட்டுப்போன அறுபது வேலி நிலத்தைக் காட்டிப் பத்து ஆயிரம்தான் கடன் வாங்குகிறான் முதலில். வட்டி வளருகிறது, கேட்டனுப்புகிறார்கள்; மீண்டும் அதே புள்ளியிடம் மற்றுமோர் கடன் வாங்கி, பழைய கடனுக்கான வட்டியைச் செலுத்துகிறான்! செலுத்துகிறானா!! அந்தப் புள்ளியே, புதிய கடன் கொடுக்கும் போது, பழைய கடனுக்கான வட்டித் தொகையை எடுத்துக் கொண்டு மிச்சத்தைத்தான் கொடுக்கிறார்.

கடைசியில் என்ன நிலை? இன்னும் இருப்பது என்ன? அந்த அரும்புமீசை மட்டுந்தான் என்று ஊரார் கேலி பேசும் நிலை.

நான் இந்த "உல்லாச புருஷனை' அல்ல, காணச் சொல்லிக் கேட்டுக்கொண்டது. இந்தியப் பேரரசு, நம்ம மாநில அரசு இவைகளையே பாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

காங்கிரஸ் அரசு, சொக்கப்பனிடம் பட்ட கடனைத் தீர்க்கச் சொக்கப்பனிடமே மறுபடியும் கடன் வாங்குவது போன்ற நிலையிலேதான் நடத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் பட்ட கடனைத் தீர்க்க மறுபடியும் அமெரிக்காவிடமே கடன் வாங்கும் விந்தை நடந்தபடி இருக்கிறது. நிலையில் இதேதான் மாநில அரசு! பேரரசிடம் பட்டுள்ள கடனைத் திருப்பித்தர, மாநில அரசுகள் மறுபடியும் பேரரசிடமே கடன் வாங்குகின்றன.

பேரரசிடம், மாநில அரசுகள் பட்டுள்ள கடன் தொகையில், 1965 - 66-ம் ஆண்டில் 274 - கோடி ரூபாய் திருப்பித் தரவேண்டும் - தவணை முறைப்படி.

மாநில அரசுகள் பேரரசிடம் பட்ட கடன் தொகையைக் கொண்டு பயன்தரும் விதமாகச் செலவிட்டிருந்தால், பட்ட கடனைத் தவணை முறையிலே திருப்பித் தருவதற்கான வருவாய் கிடைத்திருக்கும். வருவாய் அந்த முறையில் கிடைக்கவில்லை.

எந்தப் பிரச்சினையையும் ஆராயும் போக்குடையவரும், காங்கிரஸ் கட்சியினருமான திரு. சந்தானம் மாநில அரசுகள் பெற்றுள்ள கடன் தொகையில் பாதிக்கு மேல், பயன் தராத விதமாக, வருவாய் கிடைக்க முடியாத காரியங்களுக்காகச் செலவிட்டுவிட்டதாகக் கூறுகிறார்.

நாம் கூறினால், அது பக்தவத்சலனாரின் அதி அற்புதமான மூளையைக் குழப்பிவிட்டுவிடுகிறது; ஆட்சியைக் கைப்பற்ற, எம்மை விரட்டச் சூழ்ச்சி நடக்கிறது என்கிறார். இது சந்தானம் சொன்னது; எதிர்க் கட்சிக்காரர் பேச்சு அல்ல. எனவே, எரிச்சல் எழத் தேவையில்லை.

வருவாய் கிடைக்கும் விதமாகக் கடன் தொகையைச் செலவழிக்காததால், 1965-66லில் செலுத்தவேண்டியுள்ள தவணைத் தொகையான 274 - கோடி ரூபாய்க்கு வழி தெரியவில்லை மாநில அரசுகளுக்கு. என்னதான் செய் கிறார்கள்? சொக்கப்பனிடம் பட்ட கடனைத் திருப்பித் தரச் சொக்கப்பனிடமே மீண்டும் கடன் வாங்குகிறார்கள்.

274 - கோடி என்றேனே. இது அசல் தொகையில் ஒரு பகுதி.

இத்துடன் வட்டியும் கட்டவேண்டுமே! அதற்காக 135 - கோடி ரூபாய் தேவை. மொத்தத் தேவை இந்த ஆண்டுக்கு 409 - கோடி ரூபாய்.

இதற்காகப் பேரரசிடம் மாநில அரசுகள் மீண்டும் 703 - கோடி ரூபாய் கடன் வாங்குகிறார்கள். அந்தக் கடன் தொகையிலிருந்து, பழைய கடனுக்காக 409 - கோடி ரூபாயைக் கட்டப்போகிறார்கள்!

இதுபோலவே பேரரசு கதர்த்தொழில் அமைப்புக்குக் கடன் கொடுத்திருக்கிறார்கள்; அந்த அமைப்பும் 34 - கோடி ரூபாய் தரவேண்டும்! அதற்காக, பேரரசு புதிய கடன் கொடுக்கிறார்கள் அந்த அமைப்புக்கு! அந்தப் புதிய கடனைக்கொண்டு பழைய கடனை அடைக்கப்போகிறது கதர் அமைப்பு!

இதற்கெல்லாம் பேரரசுக்குத் தொகை வேண்டுமே அதற்கு வழி? பாடுபட்டுக் குவித்துள்ள வருவாயிலிருந்து எடுத்து வழங்கப் போகிறதா? இல்லை! இல்லை! அப்படி இருந்திருந்தால், பேரரசு, மாநில அரசுகளைத் தட்டிக் கேட்காதா; பட்ட கடனைக்கூடத் திருப்பித் தரமுடியாமல் புதுக் கடன் கேட்டுக்கொண் டிருக்கலாமா? இது உருப்பட வழியாகுமா? என்றெல்லாம். பேரரசு பட்டுள்ள கடன் தொகையைக் கொண்டு தக்க வருவாய் தேடிக்கொள்ளாததால் 1965-66 ஆண்டிலே மட்டும், இந்தியாவுக்கு உதவி செய்யும் கழகத்திடம் புதிதாகக் கடன் கேட்டிருக்கிறது, 560 கோடி ரூபாய்!!

மேலேயும் சரி, கீழ்மட்டத்திலும் சரி, ஒரே முறை; சொக்கப்பனிடம் பட்ட கடனைத் தீர்க்கச் சொக்கப்பனிடமே புதிய கடன் பெறுகிறமுறை.

இது நல்லதல்ல என்கிறார்கள் நிபுணர்கள்! இது கேவலம் என்கிறார் விஜயலட்சுமி பண்டிட்! இதைப் பற்றிக் கவலைப் படுகிறார்கள் பலர்; பொருளாதார நிபுணர்கள்; பொறுப்புள்ள அதிகாரிகளாக இருந்தவர்கள்!

ஒரே ஒருவர் மட்டும், இதைப் பற்றிக் கவலை இல்லை என்று கூறுகிறார்; காமராஜர்!

சொக்கப்பனிடம் பட்ட கடனைத் தீர்க்கச் சொக்கப்பனிடம் புதுக்கடன் வாங்குவது, நிலைமை எவ்வளவு மோசமாகி இருக்கிறது என்பதைக் காட்டுகிறது; காமராஜரோ, கவலை இல்லை என்று கூறுகிறார்.

சொக்கப்பனிடம் கடன்பட்டவர் எத்தப்பனாக இருந்தால், கொடுத்தவனுக்குத்தான் கவலை, வாங்கியவனுக்கு அல்ல! ஆனால், இந்தியப் பேரரசு எத்தப்பனாக முடியுமா! கொடுத்தகடனைத் திருப்பிப் பெற, கடன் கொடுத்தவன் எதை எதைத் தன்னிடம் ஒப்படைக்கச் சொல்லிக் கேட்பானோ என்ற அச்சமே வந்துவிட்டிருக்கிறது பலருக்கு.

அமெரிக்காவிலிருந்து ட.க. 480 என்ற சட்டப்படி இந்தியா பெற்றுள்ள பொருளுக்கான பணம், ரூபாயாகத் தரப்பட்டு அந்தத் தொகை இந்தியாவில் அமெரிக்காவின் கணக்கில் குவிந்து கொண்டு வந்திருக்கிறது.

இன்னும் கொஞ்ச காலத்தில் அமெரிக்கா இந்தியாவில் சேர்த்துவைத்துள்ள தொகை ஆயிரம் கோடி ரூபாயாகிவிடுமாம்! இப்போது 800 கோடிக்கு மேல் இருக்கிறதாம்.

இந்தத் தொகையை அமெரிக்கா இந்தியாவிலேயேதான் செலவிட வேண்டும் - அது நிபந்தனை.

அமெரிக்கா, வேறு சில வெளிநாடுகளுக்குத் தருவதாக ஒப்புக்கொண்டுள்ள பொருளை, இந்தியாவில் குவிந்துள்ள பணத்தைக் கொண்டு இந்தியாவிலே வாங்கி, அந்த வெளி நாடுகளுக்கு அனுப்பினால் என்ன? பணம் பாசி பிடித்துப்போகும் நிலையில் இருக்கிறதே! இந்தவிதமாகப் பயன்படுத்திக் கொண்டால் என்ன? என்ற பேச்சு அமெரிக்காவில் கிளம்பி விட்டது. இதற்கு இந்தியப் பேரரசு இணங்கவில்லை. அமெரிக்க அரசு வற்புறுத்தவில்லை, இப்போதைக்கு! இந்தக் கருத்து அமெரிக்காவில் வலுப்பெற்றால், நிலைமை எப்படி மாற நேரிடும் என்பது பற்றிக் கூறுவதற்கில்லை; ஆனால், நினைக்கும்போதே நடுக்கமெடுக்கிறது - விவரமறிந்தவர்களுக்கு.

அமெரிக்காவுக்குச் சொந்தமாகியுள்ள இந்தப் பெரிய தொகையைக் கொண்டு, இங்கே உள்ள பொருளை வாங்கி வெளிநாடுகளுக்கு அமெரிக்கா தன் கணக்கிலே அனுப்பினால் என்ன நேரிடுமென்றால், அந்த நாடுகளுக்கு அந்தப் பொருளை இந்தியா அனுப்பினால் இந்தியாவுக்குக் கிடைக்கக்கூடிய வெளிநாட்டுச் செலாவணி குறைந்துபோகும்; குறைந்துபோனால், வெளிநாடுகளிலிருந்து இந்தியா வரவழைக்கும் பொருளுக்காகப் பணம் செலுத்த முடியாத திண்டாட்டம் இந்தியாவுக்கு ஏற்பட்டுவிடும். இந்த நிலையைப் பயங்கரமானது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இத்தகைய சிக்கல்கள் பல முளைத்தபடி உள்ளன.

ஆனால், எதற்கும் அஞ்சாமல் சொக்கப்பனிடம் பட்ட கடனைத் தீர்க்கச் சொக்கப்பனிடமே புதிதாகக் கடன் வாங்கும்விந்தைச் செயலில் ஈடுபட்டபடி இருக்கிறார்கள்; எதிர்காலத்தை இடருள்ளதாக்கியபடி உள்ளனர், மெத்தத் திறமையுடன்.

கடன் கொடுக்கும் நாடுகளுக்கு ஏற்படாத கவலை உங்களுக்கு ஏன் ஏற்பட வேண்டும் என்று கேட்பவர்கள் உயர்ந்த இடத்திலே இருந்துவிடுவதனாலேயே அந்தப் பேச்சு உயர்ந்ததாகி விடாது; ஊர் மெச்ச வாழ்பவர்களின் பேச்சுக்கு எதிர்ப்புப் பேசி ஏன் வம்பை விலைக்கு வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் விவரம் தெரிந்த பலர் அந்தப் பேச்சு அறிவற்றது என்பதனை எடுத்துக் கூறாமலிருக்கிறார்கள்.

இன்று உலகிலே அமைந்துள்ள இரு பெரும் போட்டி முகாம்கள், அமெரிக்காவும் - ரஷியாவும் என்பது அனைவருக்கும் தெரியும்.

வளர்ச்சி பெறாத, புதிதாக விடுதலை பெற்ற நாடுகளை, தத்தமது முகாமுக்கு அழைத்துக்கொள்ள, அமெரிக்கா - ரஷியா எனும் இரு பெரும் அரசுகளும் போட்டி போட்டுக்கொண்டு கடன் தருவது, இனாம் வழங்குவது, தொழில் நுட்ப அறிவு அளிப்பது, கூட்டுத் தொழில் அமைப்பது என்பவைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

இந்தியப் பேரரசு, இந்த இரு முகாம்களில் எதிலும் சேராத "நடுநிலை'க் கொள்கையைக் கொண்டது.

ஆனால் இந்தியப் பேரரசு, இந்த இரு முகாம்களிலும் தாராளமாகவும் ஏராளமாகவும் கடன் வாங்கியபடி இருக்கிறது.

இன்று இந்த இரு முகாம்களும், முகத்தைச் சுளிக்காமல், கேட்ட கடனைக் கொடுத்தபடி உள்ளன.

ஆனால், பெற்ற கடனை எப்படியும் திருப்பித் தரவேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியின்படி, பணத்தைச் செலவிட்டு, தொழிலைப் பெருக்கி, வருவாய் கிடைக்கும் விதமாகப் பேரரசு நடந்துகொள்ளவில்லை.

மேலும் மேலும் கடன் வாங்கியே காலந்தள்ள வேண்டிய நிலையிலேதான் நாடு இருந்து வருகிறது.

அரசியல் பொது அறிவும் பொருளாதாரத்துறை நுண்ணறிவும் கொண்ட சமுதாயம் இந்தப் போக்கை. அபாயம் நிறைந்தது என்று கண்டிக்கவும் இந்த நிலைமைக்குக் காரணமாக இருந்த ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கும் கட்சியின் ஆதிக்கத்தை அகற்றவும் தயங்காது.

இன்று நமது நாட்டிலே அந்த நிலையில், சமுதாயம் இல்லை. சர்க்கார் பட்ட கடன் என்றால் அது ஏதோ மக்களுக்குச் சம்பந்தமில்லாத ஒரு தனி விஷயம் என்று எண்ணிக்கொண்டு விடும் மக்கள் மிகுதியாக இருக்கிறார்கள் - இன்று.

இதே நிலையில்தான் சமுதாயம் எதிர்காலத்திலும் இருக்கும் என்று எவரும் கூறிட முடியாது.

நமது கழகமும், முற்போக்குக் கருத்துக்களைக் கொண்ட பிற அரசியல் அமைப்புகளும், மக்களிடம், உண்மை நிலையை எடுத்து விளக்கியபடி இருக்க வேண்டும். விளக்கிக்கொண்டு வருவது, உடனடியாகப் பலன் தராது போகலாம் - இடையிலே தருமபுரிகள் தோன்றலாம் - ஆனால், மெள்ள மெள்ள மெய்யறிவு சமுதாயத்திலே இடம்பெற்றே தீரும்; அப்போது இவைகளுக் கெல்லாம் மக்கள் "கணக்குக்' கேட்பார்கள்! ஜனநாயக உணர்வு வளர்ந்துள்ள நாடுகளில் சர்க்காரை நடத்தும் கட்சியிடம் இவ்விதமான "கணக்கு'களை மக்கள் கேட்கிறார்கள்; கேட்பதால் எதிர்க்கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டாலும், மக்களுக்குப் பயந்து, எதிர்க்கட்சிகளுக்குப் பயந்து, நீதி நியாயத்துக்குப் பயந்து நடந்துகொள்ளவேண்டி இருக்கிறது. இங்கோ, சொக்கப்பனிடம் பட்ட கடனைத் தீர்க்க சொக்கப்பனிடமே மேலும் கடன் வாங்கி, வாங்கிய கடனை வகையான முறையில் செலவிட்டு வருவாயைப் பெருக்கிக் கொள்ளாமல் நடந்துகொள்ளும் ஒரு அரசு அட்டகாசம் செய்கிறது; அதனை நீக்கிட, மாற்றி அமைக்க, மக்கள் துணிந்து எழ இயலவில்லை.

கொடுப்பவர் கிடைக்கும்போது கடன் வாங்குவது எளிதான காரியம், அதிலே பெருமை இல்லை; புதிய சுமை ஏறுகிறது என்றுதான் பொருள்.

கொடுத்த கடனைத் திருப்பிச் செலுத்திவிட முடியும்; ஏனென்றால், அந்தத் தொகையைக் கொண்டு அமைக்கப் பட்டுள்ள தொழிலில், ஆதாயம் எதிர்பார்த்த அளவு கிடைத்து வருகிறது, ஆகவே, கவலை வேண்டாம் என்று கூறிடும் அரசுதான், மக்களின் நன்மதிப்பைப் பெறக்கூடிய அரசு.

இன்று வரையில், இந்தியப் பேரரசு, பெரும் பெரும் தொகையினைக் கொட்டிக் கட்டி நடத்தி வரும் தொழில் அமைப்புகள் ஆதாயம் தந்துவருகின்றனவா என்ற சாதாரணக் கேள்விக்கு, நேர்மையுடனும் நேரிடையாகவும் பதில் கூறட்டுமே பார்க்கலாம், அரசாளும் பெரிய தலைவர்கள்!

கடன் வாங்காமல் இருக்க முடியுமா என்று கேட்பதும், அமெரிக்காவே ஒரு காலத்தில் கடன் வாங்கி இருக்கிறது தெரியுமா? ரμயர்ன்வ கடன் வாங்கி இருக்கிறது தெரியுமா! என்று கேட்பதும், புதிதாகத் தொழில் துவக்கிட, கடன் வாங்கித்தானே ஆகவேண்டும்? என்று கேட்பதும் எனக்குத் தெரியும்.

அரைத்த மாவையே அரைத்துக் காட்டாமல் நேர்மை யாகவும் நேரிடையாகவும் அந்தப் பெரிய தலைவர்களைப் பதில் கூறச்சொல்லிக் கேட்டுப் பார், தம்பி! வாங்கிய கடனைக் கொண்டு பேரரசு துவக்கி நடத்திவரும் தொழில் அமைப்புகளிலே, ஆதாயம் கிடைக்கிறதா? இல்லை என்றால், ஏன்? ஆதாயம் கிடைக்காத போது, கடனைத் திருப்பிக்கட்ட வழி ஏற்படுமா? கடனைக்கூடத் திருப்பிக் கட்டுவதற்கான வருவாயைப் பெறமுடியாத நிலையில் தொழில்களை நடத்தி வருவது, திறமைக் குறைவைத்தானே காட்டுகிறது?

இந்தத் திறமைக் குறைவு உள்ள ஒரு ஆட்சியை நடத்தி வரும் கட்சியை மக்கள் எதற்காக மறுபடியும் மறுபடியும் ஆதரிக்க வேண்டும்? இந்தத் திறமைக் குறைவு நெளியும் நிலையில் உள்ள கட்சி, நாட்டிலே வேறு எந்தக் கட்சிக்கும் நாடாளும் தகுதியும் திறமையும் கிடையாது என்று பேசுவது முறையாகுமா?

தம்பி, இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில்தான் கிடைக்கிறது காமராஜர்களிடமிருந்து: எதிர்க்கட்சிக்காரன் பேச்சைக் கேட்காதே!! - இதுதான் பதில் பேச்சு!

சர்க்காரே நியமித்துள்ள தணிக்கைக் குழு சர்க்கார் துறையிலே உள்ள தொழில் அமைப்புகளிலே காணக் கிடக்கும், ஊழல் ஊதாரித்தனம், மந்தம், முறைகேடு, நஷ்டம் ஆகியவை பற்றிப் புட்டுப் புட்டுக் காட்டுகிறது.

எடுத்துக் காட்டுக்காக ஒரு கணக்கு:

இந்தியப் பேரரசு 870 கோடி ரூபாய்களை மூலதனமாகப் போட்டு அமைத்து நடத்திவரும் தொழில் அமைப்புகளின் மூலம் கிடைத்துள்ள வருவாய், சர்க்கார் கணக்கின்படி 3 கோடியே 22 இலட்ச ரூபாய்.

போட்டப்பட்டுள்ள மூலதனத்துக்கு வட்டி மட்டும் எவ்வளவு தெரியுமா தம்பி! 24 கோடி ரூபாய்!

இந்த 3 கோடியே 22 இலட்ச ரூபாய் இலாபம் என்பது வட்டி கொடுத்தான பிறகு அல்ல! இந்த3 கோடியே 22 இலட்ச ரூபாய் இலாபமும் எப்படிக் கிடைத்தது? தொழிற்சாலையிலே பொருளை உற்பத்தி செய்ததன் மூலம் கிடைத்தது அல்ல. பண்டங்களை வாங்கி விற்றதிலே கிடைத்த இலாபம்!

இதைக் கண்டு பொறுப்புள்ள கட்சி வெட்கப்பட்டிருக்க வேண்டும்; பொறுப்புள்ள மக்கள் இந்த நிலைமைக்குக் காரணமாக உள்ள கட்சியை வீழ்த்தியிருக்க வேண்டும்.

பொதுப் பணத்தையும், கடனாகப் பெற்ற பணத்தையும் - ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை, வகையற்ற விதமாகச் செலவிட்டு, ஆதாயம் தராதவிதமாகத் தொழில் அமைப்புகள் நடத்தி, மக்களுக்கு - எதிர்காலச் சந்ததிக்கும் சேர்த்து - துரோகம் செய்திடும் ஒரு கட்சியை வேறு எந்த நாட்டிலும், தாங்கிக் கொள்ள மாட்டார்கள். இங்கு அந்தக் கட்சியை விட்டால் வேறு வக்கு வழி இல்லை என்று கூறிடத்தக்க அளவுக்கு நிலைமை மோசமாகி வருகிறது.

அத்தகைய மோசமான நிலைமையை மாற்றி, காரிருளைக் கலைத்திடும் அறிவு ஒளியைத் தந்திடும் எழு ஞாயிறாகத் திகழ்கிறது நமது கழகம்.

ஆபத்து நிரம்பிய ஒரு எதிர்காலத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் அரசினர், சொக்கப்பனிடம் பட்ட கடனைத் தீர்க்கச் சொக்கப்பனிடமே கடன் வாங்கும் போக்கிலே நடந்துகொள்கிறீர்களே, இது முறையா சரியா என்று கேட்கும் போது, கடனைத் திருப்பிக் கட்டக்கூடிய வருவாய் பெருகி வருகிறது என்ற கணக்குக் காட்டாமல், வேறு ஏதேதோ தேவையற்ற பிரச்சினைகளைப் பேசி வருகின்றனர்.

தம்பி! யாரோ சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது காமராஜருக்கு; நீங்கள் அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராகி விட்டிருக்கிறீர்கள். ஆகவே, இனிச் சற்று அதிகமாக, வெளி நாட்டுப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுங்கள் என்று. இம்முறை நடத்தினாரே - என்ன பயணம்? - மின்னல் வேகச் சூறாவளிப் பயணம்!! அதிலே வெளிநாட்டுப் பிரச்சினை பற்றியும் பேசியிருக்கிறார்.

மின்னல், நிரந்தர ஒளியைத் தருவதில்லை; சூறாவளி நல்லதைக் கொடுப்பதில்லை; இதை உணர்ந்துதானோ என்னவோ சில இதழ்கள், காமராஜரின் சுற்றுப் பயணத்தை, மின்னல் வேகச்சூறாவளிப் பயணம் என்று எழுதியிருக்கின்றன. அந்தப் பயணத்தின்போதுதான் காமராஜர், ரμயர்மடன் சேருவதா அமெரிக்காவுடன் சேருவதா என்று பிரச்சினையைப்பற்றிக்கூடப் பேசியிருக்கிறார்.

மற்ற யாருக்கு எந்தவிதமான கருத்து இருந்து வந்த போதிலும், தம்பி! நமது கழகம், ரμயர்மடன் சேர வேண்டாம், அமெரிக்காவுடன் கூட்டுச் சேர வேண்டும் என்று எப்போதும் வலியுறுத்தியது இல்லை; இனியும் சொல்வதாக இல்லை.

கழகம் கூறுவதெல்லாம், எந்த இடத்திலிருந்து பெறுகிற கடனாக இருந்தாலும் - கடன் கடன்தான் என்பதும், அந்தக் கடனை, வருவாய் தரத்தக்க விதமாகச் செலவிட்டுத் தொழில் அமைப்புகளைக் காண வேண்டும் என்பதும்,

இதிலே இன்றுவரை, இந்தியப் பேரரசு, வருந்தத்தக்க கண்டிக்கத்தக்க தோல்விகளைத்தான் பெற்றளித்து இருக்கிறது என்பதும், இதன் காரணமாக இந்தத் தலைமுறை மட்டுமல்லாமல், வருகின்ற தலைமுறைக்கும், பெருஞ்சுமை ஏறிவிட்டிருக்கிறது என்பதும்,

இத்தனை கேட்டினுக்கும் காரணமாக உள்ள காங்கிரஸ் கட்சியிடம் மீண்டும் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஒப்புவிப்பது தவறு என்பதும் ஆகிய இவைகளே.

அமெரிக்கா, நமக்குச் சரியானபடி மதிப்பளித்துப் பரிவு காட்டி, நியாயம் காட்டி நடந்துகொள்ளவில்லை; ரμயர் அவ்விதம் இல்லை; நமக்காகப் பரிந்துபேசி வருகிறது. ஆகவேதான் லால்பகதூர் ரμயர் போகிறார் என்கிறார் காமராஜர்.

இவ்விதம் லால்பகதூர் பேசமாட்டார்.

இனி என்றென்றும் லால்பகதூர், அமெரிக்கா போகவே கூடாது என்று முடிவு எடுத்துவிடவில்லை.

இனி என்றென்றும் எந்தவிதமான உதவியும் அமெரிக்கா விடமிருந்து நமக்குத் தேவையே இல்லை என்று லால்பகதூர் அறிவித்துவிடவில்லை.

வெட்கப்படாமல் உண்மையை ஒப்புக்கொள்வதானால், லால்பகதூர் அமெரிக்கா போகாமல் ரμயர் சென்றதற்குக்காரணம், இப்போது இங்கே வரவேண்டாம் என்று அமெரிக்கத் தலைவர் ஜான்சன் சொன்னதுதான்.

காமராஜரின் "கண்டுபிடிப்பு' வேறு!!

அவருடைய அந்தப் பேச்சு ஆங்கில ஏடுகளில் எடுப்பான முறையிலே வெளியிடப்பட்டாலேபோதும், அவருக்கும் சங்கடம் ஏற்படும், இந்தியப் பேரரசுக்கும் சங்கடம் விளையக்கூடும்.

நல்ல வேளையாக இங்கே பேசினார், தமிழில்! இப்படியா பேசினீர்கள் என்று யாரேனும், டில்லி வட்டாரத்திலே கேட்டால், உடனே, நான் பேசியது அவ்விதம் அல்ல பத்திரிகைக்காரர்கள் திருத்திப் போட்டுவிட்டார்கள் என்று கூறிடத் தெரியும் காமராஜருக்கு. முன்பு ஒரே அடியாக அடித்தாரல்லவா, இந்தியிலே அறிக்கை வந்தால், கிழித்துப்போடுவோம் என்று. நான் சொல்லவே இல்லை என்று, வடக்கே உள்ளவர்கள் கேட்ட போது! அதுபோல!!

இப்போது உள்ள பிரச்சினை, இந்தியா ரμயர்விடம் நேசமாக இருப்பதா, அமெரிக்காவுடன் நட்பாக இருப்பதா என்பது அல்ல.

அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜான்சன், இப்போது இங்கே வரவேண்டாம் என்று கூறியது பொறுத்துக்கொள்ளக் கூடியதுமல்ல, மறந்துவிடத்தக்கதுமல்ல; அந்தப் பேச்சு ஜான்சனுடைய தரத்தையே வெகுவாகக் குறைத்துவிட்டிருக்கிறது என்பதையும் நான் மறுப்பவனல்ல.

ஆனால் தம்பி! காமராஜர் பேசியதில் இருந்து, இனி அமெரிக்காவின் உதவி கேட்டிட, இந்தியப் பேரரசு விரும்பாது என்று மட்டும் யாரும் எண்ணிக்கொள்ள வேண்டாம், அவருக்கேகூட அந்த எண்ணம் ஏற்பட்டுவிடக்கூடாது. சூறாவளிப் பயணத்தின் காரணமாக, அவர் நிலைமையை மறந்துவிட்டுப் பேசியிருக்கிறார்.

அவர் அத்தனை வீராவேசமாக இங்கே பேசிக் கொண்டிருந்த நாளில், அமெரிக்காவில், உதவி கேட்டுக் கொண்டு, உருக்கமாக ஒரு மேத்தா பேசிக்கொண்டிருந்தார். ஆமாம், தம்பி! அசோக் மேத்தா, இந்தியாவுக்கு உதவி, தாராளமாகவும் ஏராளமாகவும் செய்யும்படி ரμயர்வில் பேசிக் கொண்டிருக்கும் அதே நாட்களில், இந்தியாவுக்கு அதிக அளவில் உதவி செய்யும்படி, மற்றொரு மேத்தா, - ஜி. எல் மேத்தா - அமெரிக்காவில் பேசிக்கொண்டிருந்தார்.

மே திங்கள் 11, 12 நாளிதழ்களைப் பார்த்தால், இரு வேறு நாடுகளில் இரு வேறு மேத்தாக்கள் இந்தியாவுக்கு உதவி அளிக்கும்படி உருக்கத்துடன் வேண்டிக்கொண்ட செய்திகளைக் காணலாம்.

அதே இதழ்களில் மின்னல் வேகச் சூறாவளியார், அமெரிக்காவைத் தூக்கி ஆறு காத தூரம் வீசிப்போட்டுவிட்டு, சோவியத் ரஷியாவுடன் சரசமாடிடும் விந்தைப் பேச்சுப் பேசியதையும் காணலாம்.

இவைகளுக்குள் உள்ள முரண்பாடுகளை இங்கு உள்ள மக்கள் அவ்வளவாகக் கவனிக்கமாட்டார்கள்; அவர்களில் மிகப் பலர் இன்னமும் அண்டத்தை ஆதிசேஷன் தாங்குகிறார் என்பதையும், அரிபரந்தாமன் திருப்பாற்கடலில் ஆலிலைமீது பள்ளிகொண்டிருக்கிறார் என்பதையும் "இருந்தாலும் இருக்கும்' என்று ஏற்றுக்கொண்டுள்ளவர்கள்!

ஆனால், விவரம் தெரிந்தவர்கள், விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.

நான், தம்பி! அந்த முரண்பாடுபற்றிக்கூட இப்போது குறிப்பிடவில்லை; நான் கேட்பதெல்லாம் கடன் சுமை ஏறிக் கொண்டே வருகிறதே. கடனைத் திருப்பிக் கொடுத்திடத்தக்க முறையில், வருவாய் தரும் தொழில் அமைப்பு ஏற்படவில்லையே, இதற்கு இன்று அரசாளும் காங்கிரசார் என்ன சமாதானம் கூறுகிறார்கள் என்பதுதான்.

தம்பி! சர்க்காரிடம் பெற்ற கடன் மட்டுமல்ல; ஏராளமான வெளிநாட்டு முதலாளிகள், குறிப்பாக அமெரிக்க முதலாளிகள், முதல் போட்டு இங்கே தொழில் நடத்தி, இலாபத்தைக் கோடிக் கணக்கில் தத்தமது நாடுகளுக்குக் கொண்டுசெல்கிறார்கள். இங்குள்ள "முதலாளிகளுடன்' கூட்டுச்சேர்ந்து தொழில் நடத்துகிறார்கள்; இலாபம் குவித்தபடி இருக்கிறார்கள்.

இவை யாவும் எதிர்காலத்தில், இந்த நாட்டின் பொருளாதார யந்திரத்தின் சூத்திரதாரிகளாக வெளி நாட்டார்களே ஆகிவிட்டுள்ளனர் என்ற பேராபத்தை மூட்டி விடலாம்.

இப்போதே, சுயராஜ்யத்துக்கு முன்பு இருந்ததைவிட, மிக அதிகமான அளவு, பிரிட்டிஷ் அமெரிக்க முதலாளிமார்களின் ஆதிக்கம் இங்கு வளர்ந்துவிட்டிருக்கிறது. இதனைக் காங்கிரஸ் தலைவர்கள் மறுத்திட முடியாது.

கடனும் நிரம்ப வாங்கி இருக்கிறார்கள்; பெரிய பெரிய தொழில்களிலும் வெளிநாட்டாரின் பிடி அதிகமாகி வந்திருக்கிறது, இந்தியப் பேரரசு துவக்கி நடத்தி வரும் தொழில்களில், மகிழத்தக்க வருவாய் கிடைக்கவில்லை; ஊழல் ஊதாரித்தனம் காரணமாகப் பல அமைப்புகளிலே நட்டம் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.

இவை பெருமை தரத்தக்கவைகளா?

பாருங்கள் எமது ஆட்சித் திறமையை என்று கூறி, காங்கிரஸ் தலைவர்கள் மார்தட்டிக்கொள்ளத் தக்கவையா?

இவற்றைச் செய்திடும் ஒரு கட்சி, மக்களின் ஆதரவைப் பெறுவதற்கேற்ற தகுதியைக் கொண்டதுதானா? இந்தக் கேள்விகள் இன்று பெரும்பாலான மக்களின் மனத்தைக் குடையாமலிருக்கலாம்; ஆனால், மக்கள் இவை பற்றி என்றைக்குமேவா சிந்திக்கமாட்டார்கள்?

தம்பி! மக்களை இந்த விஷயங்களைப் பற்றிச் சிந்திக்கச் செய்யவேண்டிய பொறுப்பைத்தான் கழகம் மேற்கொண் டிருக்கிறது; அதனைத் தக்க முறையில் நடத்திக்கொண்டும் வருகிறது.

எனவேதான் காமராஜர், மாதத்தில் இருபது நாட்கள் நான் தமிழ் நாட்டிலே சுற்றுப் பயணம் செய்யப்போகிறேன் என்று அறிவிக்கிறார்.

இதைவிடப் பெருமை தரத்தக்க "சான்று' வேறு தேவையில்லை, நமது கழகத்துக்கு.

நாக நாட்டுப் பிரச்சினை, பாஞ்சாலச் சிக்கல், மத்தியப் பிரதேசத்து மாச்சரியம், உத்திரப்பிரதேசத்து உபத்திரவம், ஒரிசா ஊழல், மைசூர் மனத்தாங்கல், பாகிஸ்தான் பகை, சீனாவின் தாக்குதல் எனும் இன்னோரன்ன எல்லாப் பிரச்சினைகளுக்கும் பத்தே நாள்; நமது கழகம் ஏற்படுத்தி வைத்துள்ள எழுச்சியை, மக்களின் விழிப்புணர்ச்சியை அழித்திடும் முயற்சிக்கு இருபது நாள்!

அவ்வளவு வேலை இருப்பதாக உணருகிறாரே காமராஜர், ஒப்புக்கொள்கிறாரே மறைமுகமாக, அது போதும், நமக்கு நமது பணியின் தரத்திலும் அளவிலும் பெருமை இருக்கிறது, பலன் இருக்கிறது என்பதை உணர்த்த.

அகில இந்தியாவுக்கும் சேர்த்து அவர் தலைவர்!! ஆமாம், தம்பி! ஆனால் அவர், மாதத்தில் இருபது நாள் இங்கு இருந்தாக வேண்டும் என்று நிலைமை!!

தருமபுரியில் வெற்றி பெற்றதனால், வேறு சில தலைவர்கள், கழகம் செல்வாக்கு இழந்துவிட்டது, காங்கிரசுக்குச் செல்வாக்கு அதிகமாகிவிட்டது என்று தப்புக் கணக்குப் போடுகிறார்கள்; காமராஜருக்குத் தெரிகிறது, தருமபுரி வெற்றியைக் கொண்டு கணக்குப் போட்டு ஏமாறக்கூடாது என்று; ஆகவேதான், மாதத்தில் இருபது நாள் இங்கு!!

மாதத்தில் இருபது நாள் காமராஜர், மின்னல் வேகச் சூறாவளிச் சுற்றுப் பயணம் நடத்தி, மக்களிடம் கழகம் ஏற்படுத்தி வைத்துள்ள எழுச்சியை மாய்த்திடும் முயற்சியில் ஈடுபடவேண்டி ஏற்பட்டுவிட்டிருக்கிறது. இது என்னைப் பொறுத்தவரையில், தம்பி! ஒரு இனிப்பளிக்கும் நிகழ்ச்சியாகவே தோன்றுகிறது.

காமராஜருக்கு நிரம்ப வேலை தர, கழகம் களிப்புடன் காத்துக்கொண்டிருக்கிறது.

ஆனால் ஒன்று. கழகம் எழுப்பிடும் பிரச்சினைகளை நேர்மையாகவும் நேரிடையாகவும் சந்தித்து, தக்க விளக்கம் தரவேண்டும் காமராஜர். சுற்றி வளைத்துப் பேசுவது, சூடம் கொளுத்திப் பூஜை செய்வோர்களின் புன்னகையைப் பெற்றிடப் போதும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுவது, எடுபிடிகளின் எக்காளத்துக்குப் போதும்! அவனே! இவனே! என்று பேசுவது, பண்பு நிரம்பப் பெறவேண்டும் என்பதைமட்டுமே விளக்கிக் காட்டிடும். மக்களின் மனத்திலே ஏற்பட்டுள்ள அச்சம், ஐயப்பாடு, அருவருப்பு, அலுப்பு இவைகளைப் போக்க நேர்மை வேண்டும், நேரிடையான பதில் வேண்டும், திட்டவட்டமான விளக்கம் வேண்டும்.

இதனைக் கருத்திலேகொண்டு, காமராஜர், இருபது நாட்கள் அல்ல, இருபது நிமிடம் பேசினாலும், விவரமறிந்தோர் பாராட்டுவர். குயில் நாளெல்லாம் பாடித்தானா பாராட்டுப் பெறுகிறது; இல்லையல்லவா!!

மக்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள், ஏன் எங்கள் இன்னல் போகவில்லை,

எங்கள் இன்னலைப் போக்கத் தீட்டிய திட்டங்கள் ஏன் எங்களை வாழவைக்கவில்லை,

எங்களை வாழவைக்க என்று சொல்லிப் போட்ட திட்டத்தின் பலன் எப்படிச் சீமான்களிடம் சிக்கிக்கொண்டது,

அப்படிச் சீமான்களிடம் அந்தப் பலன் சிக்கிக்கொண்டதை ஏன் நீங்கள் தடுக்கவில்லை,

தடுக்காதது மட்டுமல்ல அவர்களுடன் கூடிக் குலாவிக் குழலூதி வருகிறீர்களே, அது ஏன்?

அது மட்டுமல்லாமல், அந்த அக்கிரமக்காரர்களிடமிருந்து, கட்சிக்காகக் கோடி கோடியாகப் பறித்துக்கொள்கிறீர்களே, அது முறையா?

அப்படிப் பறித்துக்கொண்டு பிழைத்து வரும் நீங்கள், சோஷியலிசம் பேசுகிறீர்களே, அது உண்மையாக இருக்க முடியுமா?

ஊர்க்குடி கெடுப்பவனை உறவினனாக்கிக்கொண்டு ஊர் வாழ வகுக்கப்பட்ட சோஷியலிசத்தை நடத்திக் காட்ட முடியுமா? இவை போன்றவைகளை.

அவனுக்கு என்ன தெரியும்! இவனுக்கு என்ன முடியும்! எல்லாம் எனக்குத் தெரியும்! எதுவும் என்னால்தான் முடியும்!! - என்ற இந்த முறையில், இருபது நாட்களா, முப்பது நாட்கள் பேசினாலும், மக்களிடம் நன்மதிப்பும் பெறமுடியாது, கட்சியின் எதிர்காலத்தையும் செம்மைப்படுத்திக்கொள்ள முடியாது.

இப்போது நடைபெற்று முடிந்த சூறாவளிபோலத்தான் மேலும் பல சூறாவளிகள் நடக்கும். அதுதான் மாதத்தில் இருபது நாட்களுக்கு என்றால், மேளதாளம், தீவட்டி மத்தாப்பு, கோச்சு மோட்டார், பூக்கடை பழக்கடை, மூங்கில் துணிமணி, ஒபெருக்கி அச்சகம் இவைகளுக்கு வருவாயும், பல செல்வவான் களுக்குச் செலவும், மக்களுக்கு நேரக்கேடும் ஏற்பட முடியுமே தவிர, வேறு உருப்படியான பலன் ஏற்படாது.

காமராஜர், தாராளமாக அதைச் செய்து பார்க்கட்டும்.

மாதத்தில் இருபது நாட்கள் நான் தமிழ் நாட்டில் இருக்கப் போகிறேன் என்று அவர் சொல்லும்போதே, இந்தியப் பேரரசின் தலைவர்களின் நினைவு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதுதான் இயற்கையிலேயே செல்லும். ஏனெனில், எத்தனை கசப்பானதாக இருப்பினும், உண்மையை அவர்களும் ஒப்புக் கொண்டாக வேண்டுமே; தமிழகத்தில் பல எதிர்க்கட்சிகள்இருந்தாலும், திராவிட முன்னேற்றக் கழகம்தான் முன்னணியில் நிற்கிறது என்ற உண்மையை. ஆக, காமராஜர் மாதத்தில் இருபது நாள் சூறாவளிச் சுற்றுப்பயணம் செய்கிறார் என்றால், என்ன பொருள்கொள்ள முடியும்? திராவிட முன்னேற்றக் கழகத்தின் வலிவு அந்த அளவு இருக்கிறது என்பதைத்தானே!

இங்கே மந்திரிகள் இருக்கிறார்கள்; தலைவர்கள் நிரம்ப! புதிதுபுதிதாக!! பேச்சாளர்கள் புதுப்புது பூச்சுகளுடன்!! - இவ்வளவு இருந்தும், "பெரிய மேளம்' வந்தாக வேண்டும் என்ற நிலைமை! அதுவும் ஒருவேளை இரண்டு வேளைக்கு அல்ல! ஒரு நாள் இரண்டு நாளைக்கு அல்ல; மாதத்தில் இருபது நாட்களுக்கு!! அவ்வளவு வேலை இருக்கிறது. இங்குள்ள காங்கிரஸ் மந்திரிகளும் தலைவர்களும், பேசுகிறார்கள், நித்த நித்தம் காரசாரமாக!! ஆனால், காமராஜருக்குத் திருப்தி ஏற்படவில்லை. மக்களை வசப்படுத்த இவர்களால் முடியவில்லை என்று எண்ணுகிறார், மறைமுகமாக அதை எடுத்தும் காட்டுகிறார். காட்டிவிட்டுக் கூறுகிறார், நான் வருகிறேன், நானே வருகிறேன், மாதத்தில் இருபது நாள் வருகிறேன் என்று.

மாதத்தில் இருபது நாள், காங்கிரஸ் கூட்டம் நடக்கும் என்று அல்ல,

மந்திரிகளும் காங்கிரஸ் பேச்சாளர்களும் கூட்டம் நடத்துவார்கள் என்று அல்ல,

நான் வருகிறேன்!
நானே வருகிறேன்!

என்பதாகப் பேசுகிறார்.

பெரிய டாக்டரே வரப்போகிறார், இங்கேயே தங்கி இருந்து வைத்தியம் செய்யப்போகிறார் என்பது, நோயாளியின் நிலைமை அத்தனை மோசமாகிவிட்டிருக்கிறது என்பதற்குத்தானே அடையாளம்?

அதுபோலத்தான், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைமை, "பெரிய டாக்டர்' வந்து தீரவேண்டிய விதமாக ஆகி விட்டிருக்கிறது.

இருபது நாட்கள் அல்ல, மாதம் முழுவதும் இங்கேயே இருந்து, பேசி வந்தாலும், ஆட்சிமுறை இன்றுள்ளது போல, மக்களை வாழவைக்காததாக, ஊழல் ஊதாரித்தனம் நெளிவதாக, முதலாளிகளைக் கொழுக்கவைப்பதாக, கடன் பளுவைஅதிகப்படுத்துவதாக, சொக்கப்பனிடம் பட்ட கடனைத் தீர்க்கச் சொக்கப்பனிடமே கடன் வாங்கும் முறையினதாக இருந்து வரும் வரையில்.

ஊர்குடி கெடுப்பவர்களும், முதலாளிகளும், கள்ள மார்க்கட்காரரும் கொள்ளை இலாபம் அடிப்பவனும், கொள்கை அறியாதவனும் பிடி ஆட்களும், பேரம் பேசிகளும் சோரம் போனவர்களும், காங்கிரஸ் கட்சியின் நடு நாயகங்களாக இருந்து வரும் வரையில், மாதத்தில் இருபது நாளென்ன, முப்பது நாளும் இங்கே முகாமடித்தாலும், பலன் என்ன கிடைத்துவிடும்! பச்சை வண்ணம் பூசி, கழுகைக் கிளியாக்கிவிட முடியுமா, பளிங்குப் பாத்திரத்தில் ஊற்றித் தருவதால் காடி பாலாகிவிடுமா?

ஒரு பலன், உருப்படியான பலன், காமராஜர் அறிவித்துள்ள திட்டத்தின்படி கிடைப்பது, கழகத்தின் வளர்ச்சியின் அளவு இந்தியப் பேரரசுக்குப் புரிகிறதே அதுதான். அந்த மகிழ்ச்சி எனக்கு!!

அரசியல் நிலைமைகளை, ஆட்சியாளர்களால் ஏற்படும் கேடுபாடுகளை மக்களிடம் எடுத்துக் கூறிவருவது மகத்தான ஜனநாயகக் கடமை. அந்தக் கடமையைச் செய்து வருகிறது கழகம்; அதனை எதிர்த்து இருபது நாள் சுற்றுப்பயணம் மட்டும் செய்து பலன் காண எண்ணுவதைவிட, ஆட்சி முறையைத் திருத்தி வழி என்ன என்று யோசிக்க ஒரு நாள், காங்கிரஸ் கட்சிமீது மக்கள் வெறுப்புக்கொள்ளத்தக்க நிலைமையை உண்டாக்கி வைப்பவர்கள் இருக்கிறார்களே, அவர்கள் காங்கிரசின் செல்வாக்கைப் பயன்படுத்தித் தமது சுயநலனைப் பெருக்கிக்கொள்கிறார்களே, அதனை ஒழிப்பது எப்படி என்பதற்கு ஒரு நாள், உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளின் கொட்டம் வளர்ந்து வருகிறதே அதனை அடக்கிட ஒடுக்கிட வழி என்ன என்பதுபற்றி யோசிக்க ஒரு நாள், சொக்கப்பனிடம் பட்ட கடனைத் தீர்க்கச் சொக்கப்பனிடமே மீண்டும் கடன் வாங்கும் போக்கிலே அரசு நடந்துகொள்கிறதே, அதனைத் திருத்துவது எப்படி என்பதுபற்றி யோசிக்க ஒரு நாள் என்ற முறையில், மிச்சமிருக்கும் பத்து நாட்களையாவது காமராஜர் பயன்படுத்தினால், நல்லது. நான் சொல்லியா அவர் கேட்பார்! ஏ! அப்பா! அவர் எவ்வளவு பெரிய உயரத்தில் இருக்கிறார்!! என் பேச்சு காதில் விழுமா!

நான் சொல்வது அவருடைய காதிலே வீழ்ந்தாலும் விழாவிட்டாலும், தம்பி! உன் செவிவழி நுழைந்து நெஞ்சிலேநிறைந்திருந்தால், அது போதும் எனக்கு. அதனால்தான் உன்னிடம் சொக்கப்பனிடம் பட்ட கடனைத் தீர்க்கச் சொக்கப்பனிடமே மறுபடி கடன் வாங்கும் போக்கிலே காங்கிரஸ் அரசு நடந்துகொண்டு வருவது பற்றிச் சொன்னேன். பட்டம், பதவி, பர்மிட்டு, லைசென்சு இவைகளுக்காக ஏங்கிக் கிடப்பவர்கள், பதவிப் பல்லக்கினைச் சுமந்து திரிந்தால் பாகும் பருப்பும் சுவைக்கக் கிடைக்கும் என்று நினைத்துக் காத்துக் கிடப்பவர்கள், ஐயோ! நம்மால் ஆகுமா? என்று அஞ்சிக் கிடப்பவர்கள், விளைந்த காட்டுக் குருவிகள், ஒளிவீழ்ந்து மாய்ந்திடும் விட்டில்பூச்சிகள் போன்றாரை விட்டுவிட்டு உழைத்துப் பிழைப்பவர்கள், ஊருக்கு உழைப்பவர்கள், உண்மையை உணரத் துடிப்பவர்கள், நீதிக்காகப் பரிந்து பேசுபவர்கள், நெருப்பாற்றைக் கடந்திடும் அஞ்சா நெஞ்சு கொண்டவர்கள் ஆகியோரிடம் இவைகளைக் கூறிடு. பெரிய பெரிய சர்வாதிகாரங்களைக்கூட, இத்தகையவர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட அணிவகுப்புகள் வீழ்த்தின என்று படித்திருப்பதால், தம்பி! எனக்கு ஒரு நம்பிக்கை; அந்த நம்பிக்கையுடன் இவைபற்றிக் கூறினேன், வேறு எவரிடம் கூறுவேன்?

அண்ணன்,

23-5-1965