அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


சூடும் சுவையும் (5)

உரிமை உணர்வு
அமைச்சரின் ஏக இந்தியா வாதம்
தி. மு. க. ஆதரவாளர்கள்

தம்பி!

எல்லோரும் ஓர் இனம்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
கூடிவாழ்ந்தால் கோடி இன்பம்
வேற்றுமையில் ஒற்றுமை
பாரத சமுதாயம்
இமயம் முதல் குமரி வரை

சுவைமிக்க சொற்றொடர்கள் இவை என்பதனைப் பலரும் கூறக் கேட்டிருக்கிறோம். கேட்கும்போதே தித்திப்புக் காண்பர், நினைக்கும்போதே சொக்கிப்போவர் என்ற நம்பிக்கையுடனேயே இந்தச் சொற்றொடர்களைக் கூறுகின்றனர். நான் இவைகளைச் சொற்றொடர்கள் என்று கூறுகிறேன் - இவைகளைப் பேசுவோர் அவ்விதம் கூறுவதைக்கூட கண்டிப்பார்கள் "ஏ! அறிவிலி! இவை சொற்றொடர்களா? வெறும் பதங்களின், கூட்டா? எழுத்து களின் கோர்வையா? கேவலம் ஓசையா? அல்ல! அல்ல! இவை இலட்சியங்கள்! மறுக்கொணாத உண்மைகள்! மாண்பளிக்கும்தத்துவங்கள்! வாழ வைக்கும் வழிவகை! கருத்துக் கருவூலம்! இழக்கொணாத செல்வம்! ஏற்புடைய கொள்கை!! நாட்டுப் பற்றுமிக்கோர் அளித்துள்ள பேரொளி! வெறும் வார்த்தைகள் அல்ல'' என்று கோபம் கொந்தளிக்கும் நிலையில் செப்புகின்றனர் - அறைகின்றனர்! நம்பிக்கை, எழுச்சி, ஆர்வம் ஆகியவைமட்டும் அல்ல, அது மறுக்கப்பட்டுவிட்டால் என்னென்ன கேடுகள், ஆபத்துக்கள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் அவர்களை அவ்விதம் பேசச் செய்கிறது. மலடி வயிற்று மகன்போலே, ஒரு புதையல் எடுத்த தனம்போலவே, அவர்கள் "ஏக இந்தியா' "பாரத சமுதாயம்' எனும் எண்ணத்தைக் கருதுகிறார்கள். எனவே தான், அந்த எண்ணம்பற்றித் தயக்கம்காட்டினால், ஐயப்பாடு கூறினால், மறுப்பு உரைத்தால் அவர்களுக்கு அடக்கமுடியாத ஆத்திரம் பிறக்கிறது; ஆர்ப்பரிப்புத் தன்னாலே கிளம்பிவிடுகிறது. மேலும், இந்த எண்ணம் ஏற்பாடு ஆகவிடமாட்டேன், ஏனெனில் அது எம்மைப் பொறுத்தவரையில் "ஆகாவழி' என்று துணிந்து கூறித் தொடர்ந்து வலியுறுத்தி, பேராதரவு திரட்டி, பெருங் கிளர்ச்சி நடாத்தி, ஜனாப் ஜின்னா முன்பு வெற்றிபெற்று "பாகிஸ்தான்' அமைத்துக்கொண்டார் அல்லவா? அந்த நினைவுவேறு வருகிறது. உடனே உள்ளம் உலைக்கூடமாகிறது, கனல் கக்குகிறார்கள்.

சுவைமிக்க எண்ணத்தையும், அதன்படி அமையும் ஏற்பாட்டினையும் மேற்கொண்டு, அனைவரும் மகிழ்ந்திடச் செய்து பாராட்டுதலைப் பெறுவதை விட்டுவிட்டுச், சுடுசொற் களால் அந்தச் சுவைமிகு இலட்சியத்தை மறுத்துப் பேசி, மற்றவர்களின் கோபத்தைக் கிளறி, பகையை எழுப்பிவிடுவது எற்றுக்கு? நாமும் நாலுபேருடன் சேர்ந்து, ஏகஇந்தியா, இமய முதல் குமரிவரை, பாரத சமுதாயம் என்று கூறிவிடலாமே, எதற்காக வீணாக விரோதச் சூழ்நிலையை உருவாக்குவது என்றுதான், எவருக்கும் முதலில் தோன்றும். இங்குமட்டும் அல்ல, எங்கும். இப்போதுமட்டுமல்ல, எப்போதும். ஏனெனில், சுவைக்க கருத்துகளிலே நாட்ட செல்வதும், சிக்கலற்ற நிலையை விரும்புவதும், உள்ளத்தைக்கொண்டு திருப்தி அடைவதும், கஷ்ட நஷ்டத்தை ஏற்றுக்கொள்ளத் துணிவற்றவர்கள் அனைவருக்கும் உள்ள இயல்பு.

வாயிற் போட்டதும், கரும்புத்துண்டு கற்கண்டு ஆகிவிடக் கூடாதா, மென்று, குதப்பிச் சாறு எடுக்கவேண்டி இருக்கிறதே எத்துணை சிரமமான வேலை என்று எண்ணுபவர்கள், இந்த வகையினர்.

பருத்தியாகக் காய்ப்பதற்குப் பதிலாகத் துணியாகவே கரத்துக்கு எட்டும் தூரத்தில் காய்த்திறுக்கக் கூடாதா, என்று நினைப்பவர்கள் இவ்வகையினர்.

ஆனார், எந்த விலையுயர்ந்த பொருளும் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடுவதில்லை - வெட்டி எடுத்தாக வேண்டும் தங்கத்தை - மூழ்கி எடுத்தாகவேண்டும் முத்துக் குவியலை - அரைத்து எடுத்தாகவேண்டும், நறுமணமிக்க சந்தனத்தை - உழுது, விதைத்து, நீர்பாய்ச்சிக் களை எடுத்து, அறுத்து எடுத்தாகவேண்டும் செந்நெல்லை.

உரிய, உயர்ந்த, பயன்மிகு கருத்துகளைப்பெறுவது, இவை களைவிடக் கடினமான செயல்.

உரிமை உணர்ச்சிபெறுவதும், உரிமைக்காகக் கிளர்ச்சி நடாத்துவதும், வெற்றிபெறுவதும், மிகக் கடினமான வேலை. பலருக்கு அதனால்தான், அப்படிப்பட்ட வேலைகளில் ஈடுபட மனமும் துணிவும் வருவதில்லை; எனவே அவர்கள் உள்ளதைக் கொண்டு திருப்தி அடைய முயலுகிறார்கள். கைக்கு எட்டும் ஏதேனும் ஓர் சுவைமிகு கருத்தினை மேற்கொண்டு விடுகின்றனர். சுவைமிகு கருத்தெனக்கொண்டது பிறிதோர் நாள் கசப் பளிப்பினும், பயன் தருவதாக இல்லாது காணப்படினும், வேறோர் கருத்தைத் தேடிப்பெறுவதைக் காட்டிலும், உள்ளது உவர்ப்பு எனினும், அதுவும் ஓர் சுவையே என்று கருதிக் கொள்ளத் தலைப்படுகின்றனர். இம்முறையிலேதான் இன்று பலரும், ஏக இந்தியா, பாரத சமுதாயம், இமயமுதல் குமரிவரை என்பவைகளைப் பற்றிக்கொண்டு இருக்கிறார்களேயன்றி, முழு திருப்தியுடன் அல்ல, மனதார நம்பியும் அல்ல.

இது போதும்.
இதுதான் உள்ளது.
இதைவிட வேறு ஏது?
வேறு தேடிட முடியுமா?
இதைவிடப் பயனுடையது பெறுவது கடினம்.
கடினமாகப் பாடுபட முடியுமா?
முடிந்திடினும் வெற்றி கிட்டும் என்பது என்ன உறுதி?

எனும் இவ்விதமான உரையாடல் நிரம்ப; ஏக இந்தியா எனும் ஏற்பாட்டினை ஏற்றுக்கொண்டுள்ளவர்களிடையே, நடைபெற்ற வண்ணம் இருக்கிறது.

பூரிப்புடன், பெருமிதத்துடன், நம்பிக்கையுடன், இந்த இலட்சியத்தை அவர்கள் மேற்கொண்டில்லை.

என்ன செய்யலாம், இவ்வளவுதான்! - என்ற மனக்குறையுடன்தான் உள்ளனர்.

பொருளற்று, முழுச் சுவையற்று, தக்க பயனற்று உளதே "ஏக இந்தியா' எனும் ஏற்பாடு என்று ஓரோர் வேளை தோன்றிடும் போதும், விளக்கில்லாவிடத்து விண்மீன் ஒளியின் துணை கொண்டு நடத்தல் போலவும், குளிர் நீக்கப் போர்வை யில்லாத போது கையதுகொண்டு மெய்யது போர்த்துக் கொள்ளல் போலவும், சுவையும் பயனும் மிக்கதான வேறோர் ஏற்பாட் டினைத் தேடிப்பெறும் துணிவு இல்லாதபோது, உள்ளது போதும் என்று திருப்தியை வரவழைத்துக் கொள்கின்றனர். மன வறட்சி வெளியே தெரிந்துவிடுமோ என்ற வெட்க உணர்ச்சியால் அலைக்கழிக்கப்பட்ட நிலையில், சுவையிருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு விடுகின்றனர். இல்லையெனில், தம்பி! அடிக்கடி "ஏக இந்தியாவில்.' எனக்கா உனக்கா? என்னுடையது உன்னுடையது? என் இயல்பு தெரியுமா, உன் வரலாறு தெரியாதா? என்னை வாடவிட்டு உனக்கு வாழ்வா, நீ வாழ நான் வதைபடுவதா? என் மக்களுக்கு வேலையில்லை உனக்கு இங்கு விருந்தா? - என்பனபோன்ற பேச்சுக்களும், கோபதாபங்களும், கொந்தளிப்புகளும், கிளர்ச்சிகளும், வெடித்துக்கொண்டு கிளம்புமா? எண்ணிப் பார்க்கச் சொல்லு, ஏகஇந்தியா பேசுவோர்களை. நான் இதனைக் கேட்டேன், தில்லியில் பேசும் வாய்ப்புக் கிட்டியபோது,

பம்பாய் எனக்கு என்று மராட்டியர் கிளர்ச்சி நடாத்தியபோது, ஏக இந்தியா எனும் இலட்சியத்தை அந்த அளவிலே மராட்டியர் மறுத்திடவில்லையா?

குஜராத் மாநில அமைப்புக்காக குஜராத்தியர் குமுறி எழுந்தனரே, அந்த அளவிலே அவர்கள் ஏகஇந்தியா எனும் ஏற்பாட்டை எதிர்த்தனர் என்று பொருளல்லவா?

இவ்விதம் நான் கேட்டது. கொதிப்பை உண்டாக்கியதை நான் உணருகிறேன். ஆனால் கேட்போர் மனம் குளிரப்பேச, கதாகாலட்சேபம் நடத்தவேண்டுமே. அதற்கா நான்?

கூடி வாழ்வோம் என்று சொன்னாலே, வடக்கே உள்ளவர் களின் மனம் எவ்வளவு குளிருகிறது என்பதையும் நான் பார்த்தேன். என் பேச்சிலே ஒரு கட்டத்தின்போது.

உங்கள் அனைவருடனும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று விரும்பத் தோன்றுகிறது.

என்று நான் குறிப்பிட்டேன் - கேட்டுக்கொண்டிருந்தவர்களின் முகம் மலர்ந்தது, ஆர்வம் காட்டினர். ஆனால் நான் கூறிய அடுத்த கருத்து அவர்களின் களிப்பினைக் கருக்கிவிட்டது.

விருப்பம் என்பது ஒன்று; இருக்கும் உண்மை நிலைமையோ முற்றிலும் வேறானது.

என்று நான் கூறினதும், செச்சே இவன் பாரதம் பேசவில்லை, திராவிடம் கேட்கிறான் என்று அவர்களுக்குப் புரிந்தது, களிப்பு உவர்த்தது.

தம்பி! நாம் திராவிடம் கேட்கிறோம், பாரதம் எனும் ஏற்பாடு, சுவையும் பயனும் தாராது என்று நம்பிக்கையுடன். நமது எண்ணங்களைத் தாராளமாக வெளியிடுகிறோம். நமது எண்ணம் ஈடேற நம்மால் இயன்ற அளவு முயற்சிகள் செய்கிறோம். எனவே நமது நெஞ்சிலே பாரம் இல்லை. குமுறலை வெளியே தெரியவிடாதபடி அடக்கி வைத்துக்கொண்டு இருக்கும் தொல்லை நமக்கு இல்லை. ஆனால் எண்ணற்றவர்கள், குமுறலை வெளியே கொட்டிக்காட்ட முடியாதநிலையில், மனதிலேயே அடக்கி வைத்துக்கொண்டு, மெத்த வேதனைப் படுகிறார்கள். அவ்விதமான நிலையினர், வடக்கே நிரம்ப இருக்கிறார்கள் - வடக்கு வாழ்கிறது. தெற்குத் தேய்கிறது என்பது அவர்களுக்குப் புரிகிறது, ஆனால் வெளியே சொல்ல முடியுமா?

வேலைப்பளு தாங்கமுடியவில்லை.

என்று மேலதிகாரி நண்பரிடம் கூறும்போது, மாடுபோல் உழைக்கும் "குமாஸ்தாவுக்கு' பொய்! பொய்! பச்சைப் பொய்! பதினொரு மணிக்கு வந்தார், படம் நிரம்பிய பத்திரிகை படித்தார், சாய்வு நாற்காலியில் படுத்தார், நாலுமணிக்கு எழுந்து, காப்பி! காப்பி! என்று கூச்சலிட்டார்!! இதுதான் அவருடைய வேலைப்பளு என்று கூறமுடிகிறதா? அதுதான் உண்மை! ஆனால் கூறமுடிகிறதா? பொய் பேசுபவரோ, மேலதிகாரி! உண்மையை உரைத்திட முடியாமல் திணறுபவனோ பாடுபடும் சிப்பந்தி!!

அதுபோல, வடநாட்டிலே பிழைக்கச் சென்றுள்ள ஏராள மானவர்கள், தாம் உணர்ந்ததை உரைத்திட முடியாமல் குமுறுகின்றனர். உண்மையைக் கூறினால் பிழைப்பிலே மண்விழுமே என்ற அச்சம். அவர்களென்ன, தம்பி! டி. டி. கிருஷ்ணமாச்சாரிகளா, பதவி தேடிவரும் என்று பிகுவுடன் இருந்திட!! இங்கே வாழ, தக்க வழியின்றி அங்கு சென்று வதைபட்டுக் கொண்டிருப்பவர்கள். அத்தகைய மனப்போக்கினர், வடக்கே எல்லாத்துறைகளிலும் உள்ளனர்; பட்டாளம் முதற்கொண்டு பாரம் தூக்கிப் பிழைக்கும் துறைவரையில், அவர்களுக்கு ஏகஇந்தியா என்பது சுமந்து தீரவேண்டிய ஒரு ஏற்பாடாகத்தான் இருக்கிறதே தவிர, சுவையும் பயனும் ஒரு பொருளுள்ள, ஏற்புடைய திட்டமாகத் தோன்றவில்லை.

இந்த மனப்போக்கைப் புரிந்துகொள்ள ஒரு நிகழ்ச்சி எனக்கு வாய்ப்பளித்தது.

தில்லியிலே, பல்வேறு துறைகளிலே பணியாற்றிடும் தமிழர்கள் ஓர் அமைப்பு ஏற்படுத்திச் செம்மையாக நடத்திக் கொண்டு வருகின்றனர், தமிழ்ச்சங்கம் என்ற பெயரில். அங்கு ஒருமாலை எங்களை அழைத்திருந்தனர் - பாராட்ட. வழக்கமான நிகழ்ச்சியாம்.

நான் மண்டபத்தில் நுழைந்தபோது, ஆரவாரத்துடன் வரவேற்றனர். ஏற்கனவே பலர் மேடைமீது அமர்ந்திருந்தனர். நான் சென்று உட்கார்ந்ததும், இரயில்வேத் துறையில் அமைச்சராக உள்ள சேலம் இராமசாமி அவர்கள் என்னைப் பார்த்து,

பாரப்பா! நீ வந்தபோதுதான் இவ்வளவு கரகோஷம் நாங்கள் வந்தபோதெல்லாம் இல்லை. உனக்குத்தான்

என்று கூறினார். உபசாரமொழி கூறியவருக்கு நன்றி கூறினேன். ஆனால் அவரோ என்னிடம் சொன்னதோடு விடவில்லை. அவர் பேசும்போது இதனைக் குறிப்பிட்டுப் பேசினார் - சற்றுச் சாமார்த்தியமாக!

"நாங்களெல்லாம் வந்தபோது, கைதட்டி வரவேற்க வில்லை. ஆனால் அண்ணாதுரை வந்தபோது மட்டும் ஏகப்பட்ட கைதட்டலோடு வரவேற்றீர்கள்'' என்று கூறினார்.

அதைக்கேட்டு மறுபடியும் மண்டபத்தி லிருந்தோர் கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர். எனக்குச் சிறிதளவு சங்கடமாகத் தென்பட்டது. இதுபற்றி அமைச்சர் குறிப் பிடாமலே பேசியிருக்கலாமே என்று எண்ணிக்கொண்டேன். அவருடைய பேச்சின் துவக்கம், அவர் மிகப் பக்குவமாகப் பேசப் போகிறார் என்றே என்னை எண்ணிக்கொள்ள வைத்தது, ஏனெனில், சிறிதளவு கெம்பீரமாக அமைச்சர் இராமசாமி,

இங்கு அரசியல் பேசத் தேவையில்லை என்று தெரிவித் தார். ஆகவே, அவர் அரசியல் பற்றிப் பேசமாட்டார் என்று கருதிக்கொண்டிருந்தேன். என்னைப்பற்றி அவர் பேசவே எனக்கு ஐயம் எழுந்தது. அமைச்சர் அந்த அளவோடு நிறுத்திக்கொள்ள வில்லை. தில்லித் தமிழ்ச்சங்கத்தார் என்னை ஆர்வத்தோடு வரவேற்றார்கள் என்பதை, மகிழ்ச்சிதர, அல்லது உபசாரத்துக்காக அவர் கூறவில்லை என்பதை எடுத்துக்காட்டினார்; சாமர்த்திய மாக அதனை "பிரசார'த்துக்குத் திருப்பிக்கொண்டார்.

யாருக்கும் இல்லாமல் அண்ணாதுரைக்கு மட்டும் இவ்வளவு கைதட்டி வரவேற்புக் கொடுத்தீர்களே, ஏன் தெரியுமா? காரணம் இருக்கிறது. இப்படி வரவேற்புக் கொடுத்து அண்ணா! வாருங்கள்! எங்களை எல்லாம் பாருங்கள்! இந்தியாவைப் பிரிக்காதீர்கள்! எல்லோரும் ஒன்றாக வாழலாம். பிரிவினை வேண்டாம்! என்று அவருக்கு நீங்கள் இந்த வரவேற்பின் மூலம் தெரிவிக்கிறீர்கள்.

அமைச்சர் இவ்விதம் பேசக்கேட்டு நான் சற்று வியப்படைந்தேன். பரவாயில்லையே, நம்மைப் பாராட்டுவதுபோல ஆரம்பித்து, நமது கொள்கையைத் தாக்க, இந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்திக் கொள்கிறாரே, கெட்டிக்காரர்தான் என்று எண்ணிக் கொண்டேன்.

தம்பி! நாடு பிரிவினைகூடாது, இந்தியா ஒன்றாக இருக்க வேண்டும், அதற்காகவே வரவேற்றார்கள் என்று சாமர்த்தியமாக அமைச்சர் பேசிய உடன், அங்கு கூடியிருந்தோர், ஏகஇந்தியா வேண்டும், பிரிவினைகூடாது என்ற கருத்துடையவர்களாக இருப்பின், எத்துணை எழுச்சியுடன் கைதட்டி ஆரவாரம் செய்து, அமைச்சரின் கருத்தினை ஆதரித்திருக்கவேண்டும். அதனை எதிர்ப்பார்த்துத்தானே அமைச்சர் அவ்விதம் பேசினார். அங்கு கூடியுள்ளவர்கள் ஏகஇந்தியா வேண்டும் என்பதிலே திட நம்பிக்கையும் பிரிவினை விஷயத்திலே வெறுப்பும் கொண்ட வர்கள் என்பதை, அவர்களின் ஆரவாரத்தின் மூலம் நான் தெரிந்துகொண்டு, வெட்கப்பட்டு, செச்சே! பிரிவினைக்கு இவ்வளவு எதிர்ப்பு இருக்கும்போது நாம் ஏன் அதனைக் கூற வேண்டும் என்று உணர்ந்து வெட்கப்பட்டுத் திருந்திவிட வேண்டும், அல்லது குழம்பிப்போகவேண்டும் என்றுதானே அமைச்சர் எதிர்பார்த்து, அவ்விதம் பேசினார். ஆனால் நடந்தது என்ன தெரியுமோ, தம்பி! நானே திடுக்கிட்டுப் போனேன்.

ஏகஇந்தியா எனும் கருத்துக்கு ஆதரவு திரட்ட அமைச்சர் அவ்விதம் பேசியதும், ஒருவர் கைதட்டவேண்டுமே! அதுதான் இல்லை! குண்டூசி கீழே விழுந்தால்கூட சத்தம் கேட்கும் - அவ்வளவு அமைதி. அவ்வளவு "ஆதரவு' அமைச்சரின் பேச்சுக்கு. ஒரு அமைச்சர் சிரமப்பட்டுச் சாமர்த்தியமாகப் பேசி என்னை மடக்க எடுத்துக்கொண்ட முயற்சிக்காக, ஒரு நாலு பேராவது கைதட்டக்கூடாதா என்று எண்ணி நானே பரிதாபப்பட்டேன் என்றால், அமைச்சரின் போக்கு எப்படி இருந்திருக்கும் என்பதைத் தம்பி! எண்ணிப் பார்த்துக்கொள்ளேன்.

தம்பி! அமைச்சர் நையாண்டி பேசி, பிரிவினையைத் தாக்கியதை நாங்கள் ஒப்பவில்லை, விரும்பவில்லை, என்பதை அந்த அமைதி மிக விளக்கமாக எடுத்துக்காட்டிற்று. அதுவும் போதாது என்று கருதியோ என்னவோ, இரண்டொருவர் அரசியல் கூடாது! என்று உரத்த குரலில் கூறினர்.

துவக்கத்திலே அமைச்சர் சொன்னாரல்லவா அரசியல் பேசக்கூடாது என்று; அந்த உபதேசத்தை மக்கள் உபதேசி யாருக்கே உபதேசித்தனர். மேற்கொண்டு அமைச்சர், ஏகஇந்தியா பற்றியோ பிரிவினைபற்றியோ பேசவில்லை, அரசியலே பேசவில்லை, அதிகம் பேசவில்லை, இரண்டொரு விநாடிகளிலே அவர் பேச்சும் முற்றுப்பெற்றது.

இந்த நிகழ்ச்சி, வடக்கே உள்ள நமது மக்கள் ஏகஇந்தியா எனும் ஏற்பாட்டிலே சொக்கிப்போய்விடவில்லை, பிரிவினையை வெறுத்திடவில்லை என்பதை விளக்கமாக்கிற்று. ஆனால் அவர்கள் ஈடுபட்டிருக்கும் அலுவல், அவர்களை உள்ளத்தைத் திறந்து பேசவைக்கவில்லை.

ஒரு சிறிய நிகழ்ச்சியை வைத்துக்கொண்டு உன் அண்ணன் ஏதேதோ வலியப் பொருள் வரவழைத்துக் காட்டுகிறான் என்று கூறுவார்கள், நமது வழிக்கு வர மறுக்கும் நண்பர்கள். இது போதாது, வெளிப்படையாக, விளக்கமாக, வடக்கு - தெற்கு பற்றி உங்களைப்போலக் கண்டித்தும் குமுறியும் பேசுகிறார்களா, இங்கிருந்து வடக்கே போய் வாழ்கின்றவர்கள் என்றுகூடக் கேட்பார்கள். தம்பி! பேசுகிறார்கள் என்று நான் சொன்னால், ஆதாரம் என்ன? சான்று உண்டா? என்று குடைவார்கள். இருக்கிறது, தம்பி! பேச்சுக்கூட அல்ல, எழுத்தே இருக்கிறது, வடக்கே சென்று தங்கியுள்ள நம்மவர்களின் எண்ணத்தை எடுத்துக்காட்டும் விதமாக. இதோ, அது.

அன்புள்ள அக்கா, வணக்கம் பல. முன்பின் அறியாத நான் தங்களுக்குக் கடிதம் எழுத முற்பட்டதற்கு, சமீபத்தில் கல்கத்தாவிலிருந்து வெளிவரும் 'The Statesman' தினத்தாளில், திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றிய அபத்தமான குற்றச்சாட்டே காரணமாகும்.

வடநாட்டில் வாழும் எங்களுக்கு வடவரது தொல்லைகள் பரிபூரணமாகத் தெரியும். தென்னாட்டில் வாழும் தமிழர்களுக்கு வடவர் தமிழர்மீது செலுத்தும் ஆதிக்கம் புரிய நியாயமில்லை.

என் வாழ்நாட்களில் பெரும் பகுதி வடநாட்டில்தான் கழித்திருக்கிறேன். கல்யாணமாகாது தந்தையுடன் இருந்த நாட்களில் டில்லி, கராச்சி, பம்பாய், நாகபுரி ஆகிய நகரங்களில் இருந்திருக்கிறேன். . . . .

இப்போதும் நான் மணமாகிய ஒன்பது ஆண்டுகளையும் வடக்கேயே கழித்து இருக்கிறேன். ஜரியா, கல்கத்தா, ராஞ்சி, தற்போது இருக்கும் ஜாகராகண்டு எல்லாம் வடநாடுதானே! சுதந்திர இந்தியாவில் நாங்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது. என் கணவரும் ஒரு பெரிய பதவி வகிக்கும் ஆபிசர்தான்.

சர்க்கார் துறையிலும் இவர் வேலையில் இருந்தார். இப்போது தனியார் துறையில் இருக்கிறார். சர்க்கார் துறையில் தமிழர்கள் வடவரால் எவ்வளவு இழிவாக நடத்தப்படுகின்றனர் என்பதைச் சொல்லாமல் இருப்பதே மேல். தனியார் துறையில் அவ்வளவு துன்பங்கள் இல்லை. என்றாலும், சக ஊழியர்களான வடவர்கள் சமயம் வாய்த்த போதெல்லாம் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தத் தவறுவதில்லை. . . . . .

தென்னாட்டில் எப்படியோ தெரியாது, வடநாட்டில் வாழும் தமிழர்கள் வெளியில் பகிரங்கமாகக் கூறாவிட்டாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தை முழுமனதோடு ஆதரிக் கிறார்கள்; முன்னேற்றக் கழகம் 50 ஸ்தானங்களைப் பற்றியது முக்கியமாக எங்களுக்குச் சொல்லமுடியாத மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. வயிற்றுப் பிழைப்புக்காகத்தான் தமிழர்கள் இன்று வடக்கில் வாழ்கிறார்களேயன்றி, வடவர்மேல் உள்ள மோகத்தால் அல்ல அக்கா! குழந்தைகளுக்கு நாங்கள் இந்தி கற்பிப்பதற்குக் காரணம் அந்த மொழியின்மீதுள்ள மோகத்தால் அல்ல; வேறு வழியில்லாததனால்தான்.

***

தம்பி! வடக்கே இருக்கும் தமிழ்ப் பெண்மணி, இராணிக்கு அனுப்பியிருந்த கடிதத்திலே, சில பகுதிகள் மேலே வெளியிடப் பட்டவை. நன்றாகப் படித்தவர், அவரசப்பட்டு முடிவு எடுக்கும் இயல்பு இருக்கக் காரணமில்லை. . . பார்க்கிறாயல்லவா, மனக் குமுறல் இருக்கும் விதத்தை. இப்படி, எண்ணி எண்ணிக் குமுறிக் கிடப்பவர்கள் நிரம்ப அங்கு. கழகத்துக்கும் அவர்களுக்கும் ஒரு தொடர்பு இல்லை - கருத்து அந்த அளவு பரவிப் பதிந்து விட்டிருக்கிறது. கல்கத்தா ஆங்கில இதழில், கழகத்தைக் கண்டித்து எழுதப்பட்டது கண்டு மனம் குமுறி, இப்பெண்மணி உடனே, சுடச்சுட நான் ஒரு மறுப்புரை அந்த இதழுக்கு எழுதி அனுப்பவேண்டும் என்பதற்காக, இராணிக்குக் கடிதம் அனுப்பி னார்கள் என்றால், எவ்வளவு அக்கறையும் ஆதரவும் காட்டி யிருக்கிறார்கள் கழகத்திடம் என்பது புரிகிறதல்லவா? நான் தில்புற ப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இக்கடிதம் கிடைத்தது. தில்லியில் ஏற்பட்டுப்போன அலுவல் காரணமாக நான் கல்கத்தா இதழுக்கு மறுப்பு எழுத முடியவில்லை. ஆனால், பார் தம்பி! கடமை உணர்ச்சியை; நான் எழுதத் தவறிவிட்டேன், ஆனால் ஒரு வாரத்துக்குப் பிறகு பார்க்கிறேன், அந்தப் பெண்மணியே, மறுப்பு எழுதி, ஆங்கில இதழிலே வெளிவந்தது. ஒருபுறம் எனக்கு வெட்கம், மற்றோர் புறம் மெத்த மகிழ்ச்சி, நெடுந்தொலைவிலே இருப்பினும் கொள்கைக்காக வாதாடும் அக்கறை இருப்பது கண்டு மகிழ்ச்சியுற்றேன்.

தம்பி! ஏக இந்தியா என்பது போலி, பொருளற்றது, சுவையற்றது, பயனும் இல்லை என்ற உணர்ச்சி உள்ளவர்கள் ஏராளம்; ஆனால் அதனை வெளியே எடுத்துக் கூறும் நிலை, எல்லோருக்கும் இல்லையே!! எத்தனையோவிதமான நிலைமைக் கோளாறுகள் - நெருக்கடிகள் - இடப்பாடுகள்.

திராவிடம் தனித்தன்மை வாய்ந்தது, தனி அரசு நடாத்த முடியும் நடாத்தவேண்டும் என்ற எண்ணம்கொண்டவர்கள், திராவிட முன்னேற்றக் கழத்திற்குள்ளே மட்டும்தான் இருக் கிறார்கள் என்று எண்ணிக்கொள்கிறார்கள், காங்கிரசார். மிகப் பெரிய தவறு.

அவ்விதமான நம்பிக்கையும் விருப்பமும் கொண்டவர்கள் தி. மு. கழகத்துக்கு வெளியேயும் இருக்கிறார்கள் - பலப்பலர். இந்த உண்மை, தி. மு. கழகத்துக்குப் புதிய உற்சாகத்தையும் வலிவையும் தந்துவருகிறது.

அண்ணன்,

24-6-1962