அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


தடைக்கற்கள் படிக்கட்டுகளாகும்

பலன் எதிர்பாராது கடமை ஆற்றுக; களிப்பு உண்டு!
கழக வரலாறு பற்றிய விளக்கம் கழகம் கலகலத்துவிடும்; பெரியார் கணிப்பு!
பயத்தை வெல்லாதவன் வாழ்க்கையைக் கல்லாதவன்!
வாழ்க்கைக் கப்பலுக்கு உணர்ச்சியே காற்று; பகுத்தறிவே மாலுமி!
பிரிவினைத் தடைச்சட்டத் தடைக்கல் நமது பயணத்துக்கு ஒரு படிக்கல்!

தம்பி,

பிரஞ்சுப் புரட்சி பற்றி அருமையானதோர் ஏடு எழுதிய கார்லைல் என்பார், எண்ணிப் பார்த்திட இனிப்பளிப்பதுடன் எழுச்சி தருவதும், செயலாற்றிடத் தூண்டுவதுமான ஓர் கருத்தினைக் கூறியிருக்கிறார்:

"வலிவற்றவர்களின் பாதையில் தடையாக நின்ற கருங்கற் பாறை, வலிவு மிக்கோனின் பாதையில் படிக்கட்டாக அமைகிறது''

தடைப்பட்டுவிட்டதே! முட்டுக்கட்டை போட்டு விட்டார்களே! என்றெல்லாம் சிற்சில வேளைகளில், கடமை உணர்ச்சியால் உந்தப்பட்டுப் பயணத்தினை மேற்கொள்பவர்கள் கூட, எண்ணி ஏங்குவது உண்டு. கலக்கமுற்று, கடமையை நிறைவேற்றிட இயலாது என்றெண்ணித் தமது பயணத்தை நிறுத்திக் கொள்வதும் உண்டு. பாதை எங்கும், இருபுறமும் நிழல் தரு தருக்களும், கனியுதிர் மரங்களும், ஆங்காங்குச் சிற்றாறும் இருந்திடும் என்றெண்ணிப் பயணத்தைத் துவக்கிவிட்டு, இடையே இன்னல் மிகுந்திருக்கக் கண்டு கலங்கித் தவித்து கைபிசைந்து கொள்வாரும், கண் கசச்சிக் கொள்வாரும் உண்டு.

எத்தனையோ பயணங்கள் இதுபோலப் பாதியளவோடு நிறுத்தப்பட்டுப் போயுள்ளன. எத்தனையோ பேர், பயணத்தில் தொடர்ந்து ஈடுபட முடியாது என்று கூறிவிட்டு, ஒதுங்கிக் கொண்டதுண்டு.

தாங்க முடியாத தொல்லை, நீக்க முடியாத தடை என்று காரணம் காட்டுவர்; காரணம் பொய்யல்ல. எனினும், தொல்லை தாங்க முடியாதது என்றும், தடை நீக்க முடியாதது என்றும் எண்ணிக் கொண்டதற்குக் காரணம், வலிவு போதுமான அளவு இல்லை என்பதுதான் - உள்ளத்தில் வலிவு.

எப்படியும் பயணத்தில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற ஆர்வம், உறுதி, உள்ளத்துக்கு நிச்சயமாக வலிவளிக்கும்; ஆனால், அதைவிட அழுத்தமான வலிவு அளிப்பது, நாம் நமது கடமையைச் செய்கிறோம் என்ற உணர்வு பலன் கிடைத்தாக வேண்டும். அதுவும் விரைவில் என்ற "பதைப்பு' மிகுந்திடுமானால் பயணத்திலே ஒவ்வொரு அங்குலமும் ஒரு மைல்போலத் தோன்றும், ஒவ்வொரு விநாடியும் ஒரு நாள் பொழுது போன்றிருக்கும். கடமையாற்றுகிறோம், உள்ளம் உரைத்தபடி நடக்கின்றோம் என்ற உணர்வு இருப்பின், இன்னலைப் பொருட்படுத்தக் கூடாது என்ற மனத்திட்பத்தை மட்டுமல்ல, பலன் பற்றிய கணக்குப் பார்க்கும் அரிப்பையே போக்கிவிடும்; பயணம் செய்வது நம் கடமை என்ற உணர்வு புதியதோர் வலிவினை, மன நிறைவினைத் தந்திடும்.

வளர்த்திடும் மகவுகள் யாவுமே பெற்றவளுக்குப் பரிவு காட்டி, பெருமை தேடித்தந்து விடுவதில்லை. எனினும், தாய் உள்ளம் தனக்குக் கிடைக்கப் போவது என்ன என்ற கணக்குப் பார்த்து அல்ல, பெற்ற மகவினைப் பாலூட்டிச் சீராட்டி வளர்த்திடல் தன் கடமை என்ற உணர்வுடனேயே பாசம் காட்டுகிறாள் - அந்தக் கடமையைச் செய்வதிலே களிப்படைகிறாள்.

பிறகோர் நாள் மகவு வளர்ந்து, தன் வாழ்க்கைக்கான வசதிகளைத் தேடித் தந்திடப் போகிறான் என்ற எண்ணத்துடனா தாய் தன் குழந்தையைக் கொஞ்சி மகிழ்கிறாள்? என் மகன் என்னை மாளிகையிலே கொலுவிருக்கச் செய்யப் போகிறான், மாநிதியை என் காலடியில் கொண்டு வந்து கொட்டப் போகிறான் என்றெல்லாம் கூடத் தாய் பேசுவாள் - ஆனால், அது கொஞ்சும் முறையிலே ஒரு வகை; போடும் ஒரு கணக்கு அல்ல.

பலன் கருதாது பாசம் காரணமாக, எப்படி ஒரு தாய் தன் மகவிடம் பரிவுகாட்டி மகிழ்கின்றாளோ, அது போன்றே, கொண்ட கொள்கை, வகுத்துக் கொண்ட பாதை, மேற்கொண்ட பயணம் ஆகியவற்றின் மூலம் என்ன பலன் கிடைத்திடும் என்ற கணக்குப் பார்க்காமல், கடமையைச் செய்வதிலே ஓர் களிப்பு இருக்கிறது என்ற உணர்வுடன் பணிபுரிபவர்கள் வலிவு மிக்கவர் களாகின்றனர்.

அத்தகையவர்களுக்குத்தான் கார்லைல் குறிப்பிட்ட படி, தடைக்கற்கள், படிக்கட்டுகளாகின்றன.

ஏன் இந்தப் பயணத்தை மேற்கொண்டோம், பயன் என்ன காணப்போகிறோம் இந்தப் பயணத்தினால் என்ற எண்ணம் மே-ட்டவர்கள், வெகுவிரைவிலே, பலன் கிடைக்கக் காணோமே என்ற சலிப்பு அடைந்து வலிவிழந்து போகின்றனர், உற்சாகம் அழிவதால், உறுதி தளருவதால்! உற்சாகமும் உறுதியும் கடமையாற்றுகிறோம் என்ற உணர்விலிருந்து மட்டுமே பெறக்கூடியவை. அந்த உணர்வு கொண்டவர்கள் கருங்கற் பாறைகளைத் தடைக்கற்கள் என்றெண்ணிக் கலக்கமடைந்திட மாட்டார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தம்பி! நாம் துவக்கிய போது, என்ன பலன் கிடைக்கும், வளர்ச்சி எவ்விதம் இருக்கும் என்று கணக்குப் போட்டுக் கொண்டு காரியமாற்றக் கிளம்பவில்லை திராவிடர் கழகத்தில் இருந்துகொண்டு. பொதுத் தொண்டாற்ற முடியாது என்ற நிலை பிறந்தபோது, எப்படியும் பொதுத் தொண்டாற்ற வேண்டும், அதற்கு ஒரு கருவி வேண்டும் என்ற உணர்வு மட்டுமே இருந்தது; கடமையைச் செய்தாக வேண்டும் என்ற உணர்வு. இந்த உணர்வு காரணமாகவே, நாம் பலன் என்ன கிடைக்கும், எப்போது கிடைத்திடும் என்ற கணக்குப் போட்டுக் கொண்டு துவக்கினோமில்லை. கடமையாற்றுகிறோம் என்ற உணர்வு மேலோங்கி இருந்ததாலே, நமது பாதையிலே காணப்பட்ட கருங்கற் பாறைகள் தடைக் கற்களாகிவிடவில்லை, படிக்கட்டுகளாகிவிட்டன.

தம்பி! துவக்க நாள் முதல் நம்முடன் இருந்து பணியாற்றி வந்திடுவோரின் தொகையே மிகுதி, புதிய தோழர்கள் அதிக அளவில் கிடைத்துள்ளனர் என்ற போதிலும். ஆகவே, என்னென்ன இன்னல்களைச் சந்தித்தோம், எவ்விதமான ஆபத்துக்களைக் கடந்திருக்கிறோம் என்பதெல்லாம் நன்றாக நினைவிலிருக்கும் - இருக்கிறது.

கழகம் சந்தித்த ஒவ்வொரு இன்னலும், பயணத்தை மேற்கொண்டு நடத்திட முடியாது - கூடாது - என்ற அச்ச உணர்வையும் ஐயப்பாட்டையும் எவருக்கும் ஏற்படுத்திவிடக் கூடியவை; எனினும், கடமையைச் செய்கிறோம் என்ற உணர்வினால் நாம் உந்தப்பட்டதனால் கணக்குப் பார்க்க வில்லை, கலக்கம் கொள்ளவில்லை; தடைக்கற்கள் படிக்கட்டுகளாயின.

மாற்றார்கள் நம்மை மாய்த்திட மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கையும், நமக்கு ஏதேனும் ஓர் விதத்தில் பயன்படத் தக்கதாகி, நமது வளர்ச்சிக்கு மெத்தவும் துணை நின்றது. என்ன கிடைத்திடும் என்று நாம் கணக்குப் போட்டுக் கொண்டு, மிக்க ஆவலுடன் அது கிடைத்ததா கிடைத்ததா என்று பார்த்தபடி இருந்ததில்லை என்பது மட்டுமல்ல, நம்மைப் பற்றி மாற்றார்கள், ஆத்திரம் காரணமாகத் தவறான கணக்குப் போட்டதாலே, அது பொய்த்துப் போய்விட்டது.

கடமையாற்று கிறோம், தூய தொண்டாற்றுகிறோம் என்ற உணர்வு மட்டும் நமக்கு அந்த அளவு இல்லாதிருந்திருக்கு மானால், இந்த அளவு வளர்ச்சியினைப் பெற்றிருந்திருக்க முடியாது, இவ்வளவு இன்னல்களையும் தாங்கிக் கொண்டிருந்திருக்க முடியாது.

என்னை எதிர்த்தவன் எவன் உருப்பட்டிருக்கிறான்?

என்னை எதிர்த்த எவனை நான் விட்டு வைத்திருக்கிறேன்?

பேசும் குரலில் ஒலியும், நிற்கும் காலிலே வலிவும் இருக்கிற வரையில், என்னை எதிர்ப்பவன் என்னிடமிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது!

என்பதாக, பெரியார் கோகலே மண்டபக் கூட்டத்தில் சொன்னார் - சான்றுகளையும் தந்தார். கலக்கமடையும் இயல்பினராக நாம் இருந்திருப்பின், அந்த மிரட்ட-லேயே மாய்ந்துவிட்டிருப்போம். பெரியாருடன் இருந்து வந்தபோது என்னென்ன கொள்கைகளுக்காகப் பாடுபட்டுக் கொண்டிருந் தோமோ, அதே பணியினை, புதிய அமைப்பின் மூலம் செய்து கொண்டிருக்க வேண்டும். அதுவே நமது கடமை என்று கருதினோம்; பெரியாரை எதிர்ப்பது நமது கடமைகளிலே ஒன்று என்று கொள்ளவில்லை.

துடிப்புள்ள இளைஞர்கள், மெத்த மனக்கொதிப் படைந்து பெரியாரைவிட்டு விலகுகிறார்கள், இவர்கள் தமது ஆத்திரம் தீரப் பெரியாரைத் தாக்கிப் பேசுவார்கள்; செவிகளுக்குச் செந்தேன் கிடைக்கப் போகிறது; பெரியாரும் இவர்களைப் பிய்த்துத் தள்ளப் போகிறார்; காணக் காட்சியாக இருக்கப் போகிறது.

என்று அரசியல் வட்டாரம் எண்ணிக் கொண்டது; எதிர் பார்த்தது.

சட்டசபைகளுக்குச் செல்லலாமா, கூடாதா என்ற பிரச்சினையிலே ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாகக் காங்கிரசிலே ஒரு சுயராஜ்யக் கட்சி தோன்றியபோது கூட அத்தனை பெரிய தலைவர்களால் எரிச்சலையும் எதிர்ப்புணர்ச்சி யையும் அடக்கிக் கொள்ள முடியாமற் போய்விட்டது; மேடைகளிலே பல சமயம் தரக்குறைவான பேச்சுகள் மொழியப்பட்டன

நாமோ இளைஞர்கள், மனம் நொந்து வெளியேறுபவர்கள்.

எனினும், வந்த இடம் பற்றி ஒரு வார்த்தை, கேவலமாகப் பேசினோமில்லை; நம்மைக் கேவலப்படுத்த பெரியார் பயன்படுத்தாத வார்த்தைகள் இல்லை; இதனாலே நாம் எந்த விதத்திலும் பாதிக்கப்பட்டுப் போய்விடவில்லை.

பொறுத்துக் கொள்ளும் இயல்பு, நாம் மேற் கொள்ளும் கடமையிலே நமக்கு இருக்கும் அழுத்தமான பற்றின் விளைவு; கோழைத்தனத்தின் மறுபதிப்பு அல்ல.

நமக்கென்று ஒரு கடமை இருக்கிறது என்ற மெய்யுணர்வு நமக்கு இருந்ததனால், நமது நோக்கத்திலே நமக்குத் தெளிவும் நம்பிக்கையும் இருந்ததனால், நாம் எவருடைய தூற்றலையும் பொருட்படுத்தவில்லை; அதனை அதிகமாகக் கவனிக்க நமக்கு நேரமும் இல்லை. முன்கூட்டிப்பலன் என்ன, எப்படி இருக்கும் என்று கணக்குப் போட்டுக் கொண்டு காரியத்தில் ஈடுபட்டோ மில்லை; இப்போது கணக்குப் பார்க்கும்போது, களிப்புத் தரத்தக்க அளவினதாகவும், வகையினதாகவும், "பலன்' இருக்கிறது.

கார்லைல் சொன்னதுபோல், தடைக்கற்கள் படிக்கட்டுகளாகி உள்ளன.

கழகத்தின் வரலாறு பற்றி என்னிடம் விவரம் விளக்கம் கேட்க வரும் சில நேர்மையாளர்கள் இது குறித்து உள்ளபடி வியப்படைகின்றனர். எப்படி முடிந்தது, கொதிப்படையாம லிருந்திட என்று கேட்கின்றனர். நான் நன்றாக அறிவேன், அந்த நாட்களிலே நமது தோழர்களிலே மிகப் பலர் கொதிப்பை அடக்கிக் கொள்ள முடியாமல், தத்தளித்ததனை.

பெரியாரும், நமது இறுதி இன்று, அல்லது நாளை அல்லது மறுநாள் என்று ஆரூடம் கணித்தபடி இருந்தார்; அவருடன் இருந்துகொண்டு இந்தத் தூய காரியத்திலே தமது தனித்திறமையைக் காட்டி வந்தவர்கள், முடிவுக்கு ஆரம்பம்! அழிவுக்கு அச்சாரம்! என்று முழக்கமிட்டபடி இருந்தனர். எங்கோ ஓர் கிளைக்கழகத்தில், செயலாளர் பதவிக்காக இருவர் மோதுவர், ஒருவர் விலகுவார்; விலகுபவரின் நீண்ட அறிக்கையை இதழ்கள் மிகுந்த நம்பிக்கையுடன் வெளியிடும்; அந்த அறிக்கையிலே ஏன் விலக நேரிட்டது என்ற காரணம் இருக்காது, உடனே என் மீதுதான் பாய்ச்சல்! அவனுக்கு என்ன தெரியும்? யார் இவன். இவன் ஒரு தலைவனா! என்று கடாவுதல்கள். தம்பி! நமது கழகத்தவர்களிலே சிலர் மிரட்சியேகூட அடையத்தக்க விதமான அறிக்கைகள் அடிக்கடி கிளம்பும். பேராபத்து வருகிறது, பிளவு வாய் திறந்து கொண்டிருக்கிறது, இந்த முறை தப்பித்துக் கொள்ள முடியாது, காஞ்சிபுரத்தானைக் காலை வாரிவிடப் போகிறார்கள் என்பதான தலைப்புகள், எத்தனை எக்களிப்புடன் அவைகளை எழுதியிருப்பார்கள், பாவம் அவர்களின் ஆசை நிறைவேறாமல் போய்விட்டது எனக்கு ஒருவிதத்தில் வருத்தம்கூட! ஒன்பது மாதங்களுக்குப் பிறகு பெரிய மருத்துவர் பார்த்துவிட்டு, இது சூதகக் கட்டி என்று சொன்னால், கருவுற்றிருப்பதாக அதுவரை எண்ணிக் கொண்டிருந்த தாய் எவ்வளவு கவலைப்படுவார்கள்? அதுபோல அவர்கள், பாவம், மெத்தவும் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தார்கள். தம்பிகளிலே எத்தனை பேருக்கு நினைவிலிருக்கிறதோ எனக்குத் தெரியவில்லை. ஆத்திர மேலீட்டால் பெரியார் ஒரு முறை எழுதினார். இந்தக் கண்ணீர்த் துளிகள் என்ன கதியாகப் போகிறார்கள் பாருங்கள்! சீந்துவாரற்றுப் போவது மட்டுமல்ல! மக்கள் இவர்களைக் கல்லால் அடித்து விரட்டப் போகிறார்கள்; காணத்தான் போகிறீர்கள்! - என்று.

அவ்வளவு கோபம் அவருக்கு என்பது மட்டுமல்ல, அவ்வளவு நம்பிக்கை அவருக்கு. நாம் அழிந்துபடுவோம் என்பதில். கூடிவாழமாட்டோம் என்று மிகப் பலமாக நம்பிக் கொண்டிருந்தார். பலப் பரீட்சைகள் நடக்கும், உத்திகள் பிரியும், உட்குழப்பம் ஏற்படும் என்றெல்லாம் எதிர்பார்த்தார். இந்த நிலைமை ஏற்படுமானால், கழகம் அதனைத் தாங்கிக்கொள்ள முடியாது, தகர்ந்து போகும் என்பது அவருடைய எண்ணம். தம்பி! கழகம் அவர் எதிர்பார்த்தது போலக் கலகலத்துப் போய்விட்டிருந்தால் என்ன நேரிட்டிருக்கும்? நமக்குத் தனித் தனியே நட்டம் ஏதும் இருந்திருக்காது; அவரவர்கள் தத்தமது விருப்புக்கு ஏற்ப ஏதேனும் ஓர் துறையில் சென்றுவிட்டிருப்பர். ஆனால், நாட்டுக்கு ஒரு பொதுநட்டம்; ஒரு கட்டுக்கோப்பான ஜனநாயக அணிவகுப்பு அமைந்திருக்காது.

தம்பி! சிலர் ஒவ்வோர் நாளும் ஒவ்வோர் விதமான பீதி தந்திடும் செய்திகளைக் கொண்டு வந்தபடி இருப்பார்கள்; கழகத்தை அந்த ஊரிலே கலைத்துவிடப் போகிறார்களாம், இந்த ஊரிலே கழகக் கூட்டம் நடத்தச் சென்றால், உயிரோடு திரும்பிவர முடியாதாம் என்றெல்லாம்.

எமர்சன் என்னம் பேரறிவாளர் சொல்லியிருக்கிறார், நாளுக்கொரு பயத்தை வெல்லாதவன், வாழ்க்கையின் முதல் பாடத்தையே கல்லாதவன் என்று.

அந்தப் பாடத்தை நாம் செவ்வனே கற்றுத் தெளிவு பெறவோ என்னவோ ஒவ்வொரு நாளும் ஒருவகையான பயம் கிளப்பப்படும்.

இவை பற்றி ஏன் சிறிது விரிவாக எழுதுகிறேன் என்றால், தம்பி! அத்தனை விதமான தூற்றல்களைத் தாங்கிக்கொண்டு, அவைகளைப் பொருட்படுத்தாமல், கடமையாற்றிக் கொண்டுவந்த நமக்கு இப்போது காங்கிரசின் தலைவர்கள் தூற்றித் திரிவது கேட்கும்போது, சீற்றம் அல்ல, சிரிப்புத்தான் வர வேண்டும்.

கழகம் என்ற கருநாகத்தின் விஷப்பற்களைக் கழற்றிவிட்டு, அதை விளையாட விட்டு வேடிக்கை காட்டுகிறாராம், ராஜகோபாலாச்சாரியார்!

யாருடைய பொன்மொழி என்கிறாயா, தம்பி! முதியவர் முதலமைச்சர் இருக்கிறாரே, பக்தவத்சலனார் அவருடைய "வைரமொழி' - பொன்மொழியாக மட்டுமா அத்தனை பெரியவருடைய பேச்சை மதிப்பிடுவது! வைர மொழி, கோபம் வரலாமா! கூடாது! ஏன்? கோபம் வந்தால் என்ன சொல்லத் தோன்றும், பக்குவமற்றவர்களுக்கு?

ராஜகோபாலாச்சாரியாரல்ல. அவருடைய பாட்டன் முப்பாட்டன் வந்தால்கூட எம்மை ஒன்றும் செய்ய முடியாது என்பார்கள் அல்லவா!

அந்தப் பேச்சு நம்மிடமிருந்து வரவேண்டும் என்று எதிர் பார்க்கிறார்; அனுபவமிக்கவரல்லவா!! உடனே அதனைத் தூக்கிக் கொண்டு போவார், அவரிடம் காட்ட!!

அப்பேர்ப்பட்ட ராஜாஜியையே இதுகள் இவ்வளவு கேவலமாகப் பேசுகின்றனவே

என்று புதிய பல்லவி தொடங்குவார்; அவரிடம் உள்ளபடி மதிப்பு வைத்து அல்ல; உடனே நம்மிலே சற்றுத் துடிப்புள்ளவர்கள் ஏதேனும் பேசுவார்கள், அதைத் தூக்கிக் கொண்டு போய்க் காட்டலாம் என்ற நப்பாசையால்!

எனக்குப் பெரியதோர் மகிழ்ச்சி, நமது தோழர்கள் பெரும்பாலும் இத்தகைய பேச்சுக்களை, சிண்டு முடிந்து விடும் பேச்சுகளைப் பொருட்படுத்துவதில்லை, பதிலளிப்பதில்லை. இந்த இயல்பு முழுமை பெற வேண்டும் என்பது என் விருப்பம்; வேண்டுகோள்.

எவர் எதனைக் கூறிடினும், ஏன் அவ்விதம் கூறுகிறார்; எந்த நோக்கத்துடன் என்பதனைப் பகுத்தறிவு கொண்டு பார்த்திடுவோமானால், பத்திலே ஒன்பது பேச்சு, பொருட்படுத்தத் தேவையற்றன என்பது புலப்பட்டுவிடும்; எரிச்சல் எழாது; புன்னகை மலரும்.

நான் தம்பி! இந்தப் பயிற்சியை, மிக மிகத் தேவையானது என்று கருதுகிறேன்.

பகுத்தறியும்போது, உணர்ச்சிக்கு முதலிடம் இருக்காது; உணர்ச்சிக்கு மட்டுமே முதலிடம் கொடுத்து விடுபவர்கள் பெரும்பாலும், பகுத்தறியும் திறனை முழுவதுமாகப் பெற மாட்டார்கள். உணர்ச்சி ஒருவிதமான கொந்தளிப்பு - பகுத்தறிவு என்பது, கொதிப்பதைக் கிளறிக் கிளறிப் பார்த்து, உள்ள பொருள் என்ன, என்ன நிலையில் அஃது உளது என்பதனைக் கண்டறிவது.

உணர்ச்சியே வாழ்க்கைக் கப்பலை உந்தித் தள்ளும் காற்று என்றால், பகுத்தறிவுதான் அதை ஓட்டும் மாலுமி. காற்று இன்றேல் கப்பல் நகராது; மாலுமி இன்றேல் முழுகிவிடும்!

பிரஞ்சுப் பேரறிவாளர் கூறியது தம்பி! உணர்ச்சிப் பிழம்புகளாகித்தான் பிரான்சிலே பயங்கரமிக்க புரட்சி நடத்தினர்; வெறும் உணர்ச்சி மட்டுமே கொந்தளித்துக் கொண்டிருந்ததால், பிரான்சு நாடு படாத பாடுபட நேரிட்டது. அதனை நன்கு உணர்ந்ததாலேயே பிரஞ்சுக்காரர், உணர்ச்சி யால் மட்டும் உந்தப்பட்டுவிடும் நிலை கூடாது என்று கூறினார்.

தம்பி, நாம் உணர்ச்சிக்கு மட்டுமே ஆட்பட்டு விடுவோம்! பிரச்சினைகளையும் நிலைமைகளையும் பகுத்தறியும் பக்குவம் நம்மிடம் இருக்காது என்ற தவறான கணக்கினைத்தான் மாற்றார் போட்டனர். உணர்ச்சிக்கு மட்டுமே இடமளித்து, பொறி பறக்கப் பேசியும் எழுதியும் வந்தவர்கள் இருந்தனர். இப்போது சென்ற இடம் அவர்களுக்குப் பக்குவத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று எண்ணுகிறேன். இங்கு இருந்த போதே கூடக் கொதித்தபடி இருப்பது கூடாது, கொதித்து அடங்கி, பக்குவம் பெற்றிட வேண்டும் என்று நான் கூறிவந்ததுண்டு, நான் கூறுவதைக் கேட்டுக் கொள்ளலாம் என்ற மரியாதை உணர்ச்சி அவர்களிடம் இருந்த வரையில்; பிறகு? தேவையற்ற இடத்திலே தெளிவைப் புகுத்த முடியுமா, தம்பி ஒதுங்கிக் கொண்டேன்.

உணர்ச்சியால் மட்டும் உந்தப்பட்டு, பேசுவதும் எழுதுவதுமாக இருந்தவர்கள், அன்று என்னென்ன சொன்னார்கள், எவ்வளவு விரைவிலே அவற்றினை மறந்தார்கள், இன்று அதே வேகத்துடன் நம்மை ஏதேது பேசுகிறார்கள் என்பது பற்றித் தம்பி நான் எண்ணிப் பார்த்திடும்போது எத்தனை விந்தையாக இருக்கிறது, மனம், இயல், போக்கு, என்பதனை அறிந்துகொள்கிறேன்; அவ்விதமான இயல்பு என்னைப் பற்றிக் கொள்ளாதிருக்கத்தக்க பாதுகாப்பு முறைகளைத் தேடிக் கொள்கிறேன்.

உணர்ச்சியால் உந்தப்படுவதற்கும் அழுத்தமான நம்பிக்கையுடன் இருப்பதற்கும் உள்ள மாறுபாடு, குறை குடத்திற்கும், நிறை குடத்திற்கும் உள்ள வித்தியாசம் போன்றதேயாகும்.

அனுபவம் பெறப்பெற, ஒருவிதமான அமைதி பிறந்திடும், அந்த அமைதி செயலாற்றாத இயல்பாக மாறிவிடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். கதிர் முற்றா முன்னம் கழனியிலே "தெம்மாங்கு' பாடுவதுபோன்ற ஒலி கேட்கிறது; கதிர் முற்ற முற்ற, சாய்ந்துவிடுகிறது! பயன் மிகுதியும் மாந்தர்க்குக் கிடைக்கிறது.

பொதுத் தேர்தல் நெருங்கிட நெருங்கிட, தம்பி! நமது உணர்ச்சிகளை மட்டும் தட்டி எழுப்பிடும் நிகழ்ச்சிகளும், உள்ளத்தில் கொதிப்பை மூட்டிவிடும் பேச்சுக்களும், மிகுதியாகிவிடும். அதுபோது நாம் நமது கழகம் வளர இதுவரையில் மேற்கொண்ட போக்கினையும், பெற்றுள்ள மாண்பினையும் மறவாது, தக்கபாடம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

வெறும் உணர்ச்சிக்கு மட்டுமே நாம் ஆட்பட்டவர்கள், எனவே அதனைத் தட்டிவிட்டு நம்மைத் தகர்த்து விடலாம் என்ற நினைப்புடன்தான், தம்பி! நாட்டுப்பிரிவினை கேட்பது கூடாது; கேட்போர் தேர்தலில் ஈடுபட முடியாது என்றதோர் சட்டம் இயற்றினர். சட்டம் வந்ததும், உணர்ச்சி வயப்பட்டுக் கொதிப்பார்கள், சட்டத்தை மீறுவார்கள், தேர்தலிலே ஈடுபடும் வழி இழந்து போவார்கள், நாம் எதிர்ப்பாரற்றுத் தேர்தல் களம் புகுந்து, வெற்றியைத் தட்டிக் கொண்டு போய் விடலாம் என்று ஒரு கணக்குப் போட்டனர்; அதுவும் பொய்த்துப் போய்விடவே, அவர்கள் இப்போது மேலும் அதிகமான ஆத்திரம் கொண்டு அரற்றுகின்றனர். தம்பி! உணர்ச்சியால் மட்டுமே நாம் உந்தப்பட்டவர்களாக இருந்திருப்பின் இந்நேரம் நமது கழக அமைப்பு கலகலத்துப் போய்விட்டிருக்கும்; இப்போது பயணம் வருகிறாரே, நாளைக்கு ஒரு ஊர், வேளைக்கு ஒரு கூட்டம் என்பதாகப் "பெரியவர்', அதுகூடத் தேவைப்பட்டிருக்காது. ஆனால், நாம், உணர்ச்சியால் மட்டுமல்ல, பகுத்தறிவினாலும் நமது பணியினைச் செம்மைப்படுத்திக் கொள்பவர்கள். ஆகவே தான், ஏன் இப்படி ஒரு சட்டம் கொண்டு வந்தார்கள் என்பது பற்றி யோசித்துப் பார்த்தோம்.

தேர்தலில் நாம் ஈடுபடுவதை எப்படியாவது தடுத்திட வேண்டும் என்பதே இவரின் நோக்கம்.

என்பது புரிந்தது; புரிந்திடவே நாமும் நமது சட்ட திட்டத்தை மாற்றிக் கொண்டு, நாட்டுப் பிரிவினை மூலம் எதெதனைப் பெற முடியுமோ அவைகளைப் பெறத்தக்க விதமாக, இந்திய அமைப்பில் இருந்துகொண்டே பெறத்தக்க வழி காண்போம் என்று கூறினோம்; தேர்தல் களத்திலே நிற்கிறோம். இதுவே இவர்களின் இதயத்துக்கு வேலாகிவிட்டது. பாவிப்பயல்கள், படபடத்து, துடிதுடித்து, சட்டத்தை மீறுவோம் என்பார்கள், ஒரே அடியாக ஒழித்துக்கட்டி, "மங்களம்' பாடிவிடலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தோம், பயல்கள் தந்திரமாகத் தப்பித்துக் கொண்டார்களே என்பதிலே அவர்களுக்கு எரிச்சல்.

ஆனால், தம்பி! தந்திரம் செய்தவர்கள் நாமல்ல! அவர்கள் நம்மை ஒழிக்க மிகக் கீழ்த்தரமான தந்திர முறையை மேற்கொண்டனர்; நம்மை ஏமாளிகள் என்று எண்ணிக் கொண்டு. ஒரு கதை உண்டு தம்பி! ஒருவன் ஏமாளி - மற்றவன் எத்தன்! எத்தன் ஏமாளியிடம் கேட்டானாம், நான் கண்ணை மூடிக் கொண்டு செய்கிற காரியத்தை, உன்னால் கண்ணை திறந்து கொண்டு செய்ய முடியுமா என்று ஏமாளிக்குக் கோபம்! அவ்வளவு கேவலமான எண்ணமா என்னைப் பற்றி; இவன் கண்ணை மூடிக் கொண்டு செய்வானாம், அதனை நான் கண்ணைத் திறந்து கொண்டு செய்ய முடியாதாம்! பார்ப்போம்! இவன் கர்வத்தைத் தொலைத்துவிடுவோம் என்று எண்ணிக் கொண்டான்; "ரோஷ' உணர்ச்சி பொங்கிற்று, "முடியும்'' என்றான்; அவன் "முடியவே முடியாது'' என்றான்; இவன், "நிச்சயமாக முடியும்! பந்தயம் வைத்துக் கொள்!'' என்றான். அவன் ஒப்புக் கொண்டான்; பந்தயம் ஐம்பது ரூபாய் என்பது ஏற்பாடு. எத்தனுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி, ஏமாளி தன் வலையில் வீழ்ந்துவிட்டான் என்று.

இதோ பார் என்று கூறி ஒரு பிடி மண் எடுத்து கண்களை இறுக மூடிக் கொண்டு, மண்ணைக் கொட்டிக் கொண்டான், மூடப்பட்டிருந்த கண்களின் மீது! ஒரு விநாடிக்குப் பிறகு மண்ணைத் தட்டி விட்டுவிட்டு, நான் கண்ணை மூடிக் கொண்டு செய்த காரியத்தை நீ கண்ணைத் திறந்து கொண்டு செய் பார்க்கலாம் என்றான், முடியுமா! கண்ணல்லவா பாழாகிவிடும் ஐம்பது ரூபாயை ஓசைப்படாமல் கொடுத்துவிட்டு வாய் மூடிக் கொண்டு சென்றான் ஏமாளி! எத்தன் கை கொட்டிச் சிரித்தான்.

தம்பி! நம்மை அப்படிப்பட்ட ஏமாளி என்று எண்ணிக் கொண்டனர், அவர்கள். நாம் ஏமாற மறுத்தோம்.

உணர்ச்சியால் மட்டும் உந்தப்படும் நிலையினராக நாம் இருந்திருப்பின், கதையில் வந்திடும் ஏமாளி நிலை பெற்றிருப்போம். நாம் பகுத்தறிவையும் துணையாகக் கொண்டிருப்பதால், அவர்களின் சூழ்ச்சியினை முறியடித்துக் காட்டினோம்.

மாற்றலாமா! மாற்றலாமா! என்று கேட்டு மாரடித்துக் கொள்கிறார்கள் இன்று.

மாற்றக் கூடியதை மாற்றும் துணிச்சலையும் மாற்ற முடியாததைச் சகித்துக் கொள்ளும் பொறுமையையும் மாற்ற முடியாதது எது, மாற்றக் கூடியது எது என்ற வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளும் அறிவையும், இறைவனே! எனக்கு அருள்வாயாக!

என்றோர் சான்றோர் மொழி உண்டு. அதன்படி நடந்து இன்று, காங்கிரஸ் எதேச்சாதிகாரத்தை எதிர்த்து நிற்கும் ஆற்றலுள்ள அமைப்பாக விளங்குகிறோம்.

தம்பி! துவக்கத்தில் குறிப்பிட்டேனே, கார்லைல் கூறிய கருத்துரை - அதன்படி பிரிவினைத் தடைச் சட்டம் என்பதனைப் பெரிய தடைக்கல்லாகக் கருதிக் கொண்டுதான் காங்கிரஸ் அரசு, நமது பாதையிலே உருட்டி விட்டது; நாமோ அதனைப் படிக்கற்களில் ஒன்றாக்கிக் கொண்டு விட்டோம்; பயணம் தொடருகிறது. துவக்க நாட்களில் இருந்து வந்த பக்குவம், பயிற்சி காரணமாக மேலும் பதமாகி இருக்கும் வேளை இது. அந்தப் பக்குவம் நமக்கு எப்படி ஏற்பட்டது என்பதனை நினைவுப்படுத்திக் கொள்வது நல்லது என்பதனாலேயே, அது குறித்த கருத்துக்களைச் சிறிதளவு விளக்கமாக எடுத்துரைத்தேன்.

அண்ணன்,

15-8-65