அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


தம்பி, தயார்! தயார்!
2

இதற்கிடையில், பெரியார், இந்தப் பிரச்சினை சம்பந்தமாகத் திருச்சியில் பேசியதாகப் பத்திரிகைச் செய்தி கண்டேன் - கண்களை அகலத் திறந்து பார்த்தேன் - ஆச்சரியத்தால் மூர்ச்சையாகி விடக்கூடிய நிலைமை - அவர் நம்மையும் அழைத்து ஒரு பொதுத் திட்டம் தீட்டப் போவதாகப் பேசினார் என்று பத்திரிகையில் இருந்தது. பாழும் மனம் கேட்கிறதா! எவ்வளவு பட்டாலும், இந்த ஒரு விஷயத்தில் மட்டும் எனக்குச் சபலம் இருப்பதுதான் உனக்குத் தெரியுமே. எனவே அப்படியோர் அருஞ்செயலைச் செய்வதற்கு மட்டும் முன் வந்து, நம்மைப் பற்றிக் கொண்டுள்ள வெறுப்பையும், அதன் பயனாகவே அவராகவே வளர்த்துக் கொண்ட வேதனையையும், பொது வாழ்க்கைத் துறையிலே, ஓட்டை ஒடிசல்கள், ஓடுகாலர்கள், கூடுவிட்டுப் கூடுபாய்வோர் ஆகியவர்களைக்கூடச் சகித்துக் கொள்ளுவேன், ‘இதுகளை’ மட்டும் நடமாடவிட மாட்டேன் என்று பேசும் போக்கையும் மாற்றிக் கொண்டால், ஆஹா! இங்கு எத்தகைய இன்பச்சூழ்நிலை, இன எழுச்சி, விடுதலைக் கிளர்ச்சி காணக் கிடைக்கும் என்றெல்லாம் எண்ணினேன். நாளை எதிர்பார்த்துக் கிடந்தேன் - நானாக அவரை நாடுவது என்றாலோ, ‘வழி மறித்தான்களும், இடம் அடைத்தான்’ களும் புடைசூழ அல்லவா அவர் நிற்கிறார்?

இந்நிலையில், அஞ்சற்க, அனைவரும் ஒன்று கூடுவோம், என்று கூறுவதுபோல, நண்பர் ம.பொ.சி.யின் தந்தி எனக்குக் கிடைத்தது - கலந்து பேசலாம் என்பதாக.

சென்னையில் அவர் என்னிடம் சுவையான தகவல்களைக் கூறினார் - எனக்குத் தெம்பும் நம்பிக்கையும் ஏற்படும் விதமான தகவல்கள்.

‘‘பெரியாரும் நானும் கலந்து பேசினோம்'' என்றார் ம.பொ.சி.

‘‘பரவாயில்லையே, இப்போது நாம் ம.பொ.சி. யைப் பார்ப்பது, பாபமல்ல; இதற்கு எந்தப் பழியும் பிறவாதல்லவா - முதலில் பெரியாரும் ம. பொ. சி. யுமல்லவா சந்தித்தனர் - பிறகு தானே நாம், பரவாயில்லை - என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டு அந்த மகத்தான சந்திப்பின் போது பேசப்பட்டவைகள் பற்றி அவர் கூறக் கேட்டு இன்புற்றேன்.

தமிழகத்துக்கு உரிமையான பகுதிகளை மீட்பதற்கான கிளர்ச்சி அவசியம் நடத்தப்பட வேண்டும் என்ற கொள்கைக்குப் பெரியார் ஒப்புதலளித்துப் பேசினார் என்று கூறினார் - களிப்புற்றேன் - அந்தக் களிப்புப் பன்மடங்கு வளரும் வகையில், இந்தச் சந்திப்புக்குப் பிறகு, பெரியார் பல இடங்களில் பேசினார்.

எனினும், 27-ந் தேதி நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில், பெரியார் கலந்து கொள்ளவில்லை; காரணம் முன்னாளே காட்டினார்.

அவர் காட்டிய காரணங்களின் தன்மை பற்றியோ உண்மை குறித்தோ ஆராய்ச்சி நடத்துவது, தேவையுமல்ல, என் வழக்கமுமல்ல - ஆனால் ஒன்றுமட்டும் கூறுவேன், அவர் காட்டிய காரணங்கள் அன்றைய கூட்டத்துக்கு அவர் வராததற்குப் போதுமானவையாகாது.

மேலெழுந்தவாரியாக நான் கேள்விப்பட்டதும், ‘தினத் தந்தி’ ஆசிரியர் ஆதித்தன் என்னிடம் நேரில் சொன்னதும் என்னைத் தூக்கிவாரிப் போட்டது - நீ வருவதால்தான் பெரியார் வரவில்லை என்றார் - தம்மிடமே சொன்னதாகச் சொன்னார் - ஆனால் சொன்னவர் தினத் தந்தி!

நான் அவரிடம் சொன்னேன், ‘‘நான் இங்கு வருவதுதான் பெரியார் இங்கு வராததற்குக் காரணம் என்று எப்படிக் கூற முடியும்? நாளைக்கு 28-ல், வேறோர் இடத்தில் மற்றோர் பொதுப் பிரச்சினை குறித்து நடைபெற இருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் நான் கலந்து கொள்கிறேன் - பெரியாரும் பெருந்தன்மையுடன் அங்கு வரச் சம்மதம் தந்திருக்கிறாரே, அது மட்டும் எப்படிச் சாத்தியமாகிறது?” என்று கேட்டேன்.

காரணம் அதுமட்டுமல்ல, தேவிகுளம் பீர்மேடு பிரச்சினை பற்றி மட்டுமே ம. பொ. சி. யின் கூட்டத்தில் கவனித்துக் கிளர்ச்சிக்கு வகை காண முன் வருகிறார்கள். பெரியாரோ, தம்முடைய ஒத்துழைப்பும் துணையும் தரப்பட வேண்டுமானால், வேறு சில பிரச்சினைகளையும் போராட்டத்துக்கானதாக உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கருதுகிறார் - அதன்படி இங்கே காரியம் நடைபெறாது என்று எண்ணியே வரவில்லை என்று, என்னையும் பெரியாரையும் ஒரு சேரத் தோழமை கொள்ளும் நண்பர் கூறினார்.

இதுவும் பொருத்தமாகப்படவில்லையே! நாளைய தினம் நடைபெற இருக்கும் கூட்டத்திலும், ஒரே ஒரு பிரச்சினை மட்டும் தான் கவனிக்கப்பட இருக்கிறது; அங்குப் பெரியார், தம்முடைய மற்றப் பிரச்சினைகளை வலியுறுத்துவதாகக் காணோமே என்றேன். எனக்கென்ன தெரியும் என்றார் நண்பர்; எனக்குப் புரிந்தது - புன்னகையும் பிறந்தது.

தம்பி! 27-ந் தேதி கூட்டத்தில் கலந்து கொண்ட மாபாவிகளிலே பலர், 28-ந் தேதி கூட்டத்தில் கலந்து கொண்டனர்; அங்குப் பெரியார், தட்டாமல் தயங்காமல் வந்திருந்து தமது சீரிய யோசனையை வழங்கினார்.

ம. பொ. சி. யும், பொதுச் செயலாளர் நெடுஞ்செழியனும், இரத்தினம் M.L.A.யும், பி. டி. இராஜனும், சுயம்பிரகாசமும் 27-லும் 28-லும் கலந்து கொண்டனர்; நானும், இரண்டு கூட்டங்களிலும் கலந்து கொண்டேன்.

பெரியார் 27-ல் வரவில்லை 28-ந் தேதிய கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.

27-ந் தேதிய கூட்டம் தேவிகுளம் பீர்மேடு சம்பந்தமாக.

28-ந் தேதிய கூட்டம் ஆங்கிலமே இந்திய யூனியனின் அதிகாரபூர்வமான மொழியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக.

இந்த ஒரு பிரச்சினைக்காக ‘இதுக’ளோடு, நான் கலந்து பேசுவதா என்று கேட்ட பெரியார், மொழிப் பிரச்சினை மட்டுந்தான் என்று 28-ந் தேதிய கூட்டம் நடத்தப்பட்ட போதிலும், அதிலே ‘இதுகள்’ இருந்த போதிலும் வந்தார்!

நான் திகைத்துப் போனேன் - உன் நிலை எப்படியோ?

ஒன்று மறந்தேனே கூற, 28-ந் தேதிய கூட்டத்தில் இராஜகோபால ஆச்சாரியாரும், திருப்புகழ்மணி கிருஷ்ண சாமி ஐயரும், K.S.ராமசாமி சாஸ்திரிகளும், வெங்கட்ராம அய்யரும் வந்திருந்தனர். 27-ல் இந்த ‘ஜமா’ இல்லை!

எப்படியோ ஒன்று தம்பி! இரண்டு கூட்டங்களிலும், நல்ல பலன் விளைந்திருக்கிறது; இதிலே, நமது மூலாதாரக் கொள்கைக்குக் கேடோ, நமது கழகத்தின் கண்ணியத்துக்கு மாசோ ஏற்படக்கூடியது எதுவும் ஏற்படாதது மட்டுமல்ல, நாட்டை எதிர்நோக்கி நிற்கும் பலமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பொது முயற்சிகள் ஏற்பட்டால், நாம், தடைக்கல்லாக இருக்க மாட்டோம். என்பதை எடுத்துக் காட்டும் நல்வாய்ப்பும் கிடைத்தது!

27-ல், தேவிகுளம் பீர்மேடு பிரச்சினை என்ற பெயரில், தமிழரின் உரிமைப் பிரச்சினை, மொழிவழி அரசுப் பிரச்சினை, அதை வெட்டி வீழ்த்தக் கிளம்பும் தட்சிணப் பிரதேச யோசனையை வீழ்த்தும் பிரச்சினை, சென்னைக்குத் தமிழ்நாடு என்று உரிய பெயர் பெறும் பிரச்சினை இவைகளுக்கெல்லாம்,

தி. மு. க.
தமிழரசுக் கழகம்
கம்யூனிஸ்டு கட்சி
ன்சர்μய-ஸ்டு கட்சி
பிரஜா ன்சர்ஷியலிஸ்டு கட்சி
திராவிட பார்லிமெண்டரி கட்சி
ஷெட்யூல் காஸ்ட் பெடரேஷன்
வடக்கெல்லைப் பாதுகாப்புக் கமிட்டி
திரு. கொச்சி இணைப்புக் கமிட்டி
எழுத்தாளர் சங்கம்
நடிகர் சங்கம்
புதுவை முன்னணி
ஐஸ்டிஸ் கட்சி

ஆகிய இத்தனை அமைப்புகளின் தலைவர்கள் ஒப்பமளித்தனர்; உடனிருந்து பணியாற்ற ஒருமனப்பட்டனர். செயலாற்றக் குழு அமைக்கப்பட்டது. பி. டி. இராஜன் அவர்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; ம. பொ. சி. அமைப்புச் செயலாள ராகவும், நமது என்.வி. நடராசன், ப. ஜீவானந்தம், அந்தோணிப் பிள்ளை, சுப்பிரமணியம் ஆகியோர் செயலாளர்களாகவும் உள்ளனர்.

இந்தச் செயற்குழுவில் நமது பொதுச் செயலாளர் இருந்து பணியாற்ற இசைவு தந்தார்.

இது போன்றதோர் "கூட்டணி' இதற்குமுன் எப்போதும் ஏற்பட்டதில்லை. தாயக மீட்புக்கு, அவரவர் தத்தமது கடமையைச் செய்ய, காணிக்கை தர தயாராகிவிட்டனர்.

இதிலே இடம் பெற்றுள்ள எந்தக் கட்சியின் உருவமோ முறையோ, வேலைத் திட்டமோ கொள்கைகளோ, இந்தக் கூட்டினால், குலையும் நிலையில் ஏதும் இல்லை.

தேவிகுளம் பீர்மேடு என்ற குறிச் சொல்லால் இன்று உணர்த்தப்பட்டு வரும் மொழிவழி அரசுத் திட்ட வெற்றிக்கான வரையில் கூடிப் பணியாற்றுவது என்பதே நோக்கம்.

இல்லையேல், பி. டி. இராஜன் தலைவர், ம. பொ. சி. யும் ஜீவானந்தமும் செயலாளர்கள் என்று ஓர் அமைப்பு ஏற்பட்டிருக்க முடியுமா?

தம்பி! அன்று நான் அனைவரிடத்திலும் கண்ட உள்ளத் தூய்மை என்னை உவகைக் கடலில் ஆழ்த்திற்று! ஒருவரை ஒருவர் பகைத்துக் கொண்டிருந்தவர்கள் எவ்வளவோ ஏசினோம், ஏசப்பட்டிருக்கிறோம் - எனினும், அன்று நாட்டுக்கு வந்துற்ற பெருங் கேட்டினை நீக்கிட - நாமனைவரும், ஓர் அணியில் நின்றாக வேண்டும் என்று ஒவ்வொருவரும் பேசியது கேட்டு உளம் பூரித்தேன்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - உள்ளத்தில் எப்போதும் இருந்து வருபவர் - நீண்ட நாட்களாகக் காணாதிருந்தேன் - அவருக்குக்கூட அல்லவா என்னிடம் கோபம், கசப்பு - அவர் அன்று அங்கு அமர்ந்து, அரசோச்சும் மன்னருக்குப் பழந் தமிழ்ப் புலவர்கள் பேராண்மையுடன் அறிவுறுத்தியபான்மை போல், அவையினருக்கு, ‘செயல்! செயல்! உடனடியாகச் செயல்! உரிமை காத்திடும் செயல்’ என்று பேசியதை நான் என்றும் மறந்திட முடியாது.

இந்தக் கூட்டு முயற்சியைக் குறைகூறிப் பேசுவோரும் எழக் கூடும் - நாட்டிலே எதற்குத்தான் வாய்ப்பு ஏற்படவில்லை? எனினும், ஒன்று நாடு அறியும், பெரியதோர் பிரச்சினை நம்மை நோக்கி நிற்கும் போது, ஒதுங்கி நின்றோம், ஒற்றுமைக்கு இணங்க மறுத்தோம் என்ற குற்றச்சாட்டு, நம் கழகத்தின் மீது ஏற்படாத வகையில் நமது பொதுச் செயலாளர் நடந்து கொண்டார்.

இந்தக் கூட்டணி அமைந்ததால், தத்தமது கட்சி கலைக்கப் பட்டு, கொடி அகற்றப்பட்டுக் கொள்கை தகர்க்கப்பட்டுப் போகும் என்பதல்ல. ஏமாளியும் அங்ஙனம் எண்ணத் துணிய மாட்டான். ஒவ்வோர் கட்சியும் இந்தப் பொதுப் பிரச்சினையைப் பொறுத்தமட்டில், தத்தமது சக்திக்கேற்ற வகையிலும் அளவிலும் பணியாற்றி, அந்தக் கூட்டுச் சக்தியின் பலனாக, நாட்டுக்கு வந்துற்ற கேட்டினை நீக்குவர் என்பதுதான் பொருள்.

தம்பி, ஏற்பட்டுள்ள உறவு, முன்னாளில் இருந்து வந்த கசப்புகளையும் மறந்திடச் செய்யும் வகையில் அமைந்திருக்கிறது.

அப்படிச் செய்தவர்! இப்படிப் பேசியவர்! - என்று இரு தரப்பிலும் பேசிடுவது, அவரவர்க்கு தத்தமது அமைப்பினிடம் உள்ள பாசத்தை முன்னிட்டுத்தானே! இனிக் கூட்டு முயற்சி மூலம், பல்வேறு அமைப்புகளும், பகையின்றிப் பூசலற்று, ஏசலை விடுத்துக் கூடுமானபோதெல்லாம் ஒன்றுபட்டுச் செயலாற்றவும், கருத்து வேறுபாடு எழும் பிரச்சினைகளில், தனித்து நின்று, ஆனால் ஒரு அமைப்பை மற்றோர் அமைப்புத் தாழ்த்திக் கொள்ளாமலும், அவரவர் துறை நின்று பணியாற்றுதலே பண்புடைமை, அறிவுடைமை என்பது பற்றி, நானும் நண்பர் ம. பொ. சி. யும் பேசியபோது, ஏன் அத்தகைய அன்புச் சூழ்நிலையை அமைத்தல் கூடாது? நீண்டகாலப் பகையும் ஒன்றை ஒன்று அழித்திடத்தக்க முறையும் கொண்ட திராவிடர் கழகமும் கம்யூனிஸ்டும், கடந்த பொதுத் தேர்தலிலே, காங்கிரசை முறியடிக்க ஒன்றுபட்டுப் பாடுபடவில்லையா? இன்று காமராஜர் நமது இனப் பாதுகாவலர் என்ற காரணம் காட்டிப் பெரியார் அவருக்குப் பெருந் துணைவராக இல்லையா? அதேபோல, மற்றவர்கள் பண்பறிந்து நடந்து கொள்ளவா முடியாது - நிச்சயம் முடியும் என்றே எனக்கும் தோன்றிற்று. ம. பொ. சியும் அதனையே உற்சாகத்தோடும் உள்ளன்போடும் கூறினார். கொஞ்ச நஞ்சம் அதிலே பயமோ சந்தேகமோ இருந்தாலும், 27-ந் தேதி ஆச்சாரியாரும் பெரியாரும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்ட ‘அன்பினை’ப் பார்த்தபோது, இஃதன்றோ, தமிழகம் காண வேண்டிய காட்சி என்று தோன்றிற்று.

பார்ப்பனர்களைப் பூண்டோடு ஒழிக்க வேண்டும். பார்ப் பனீயத்தை ஒழிக்கிறேன் என்று இதுகள் பேசும்! அது தப்பு, தப்பு, சுத்தத் தப்பு.

அக்கிரகாரம் கொளுத்தப்பட வேண்டும். இப்போது செய்து விடாதீர்கள் - நாள் தருகிறேன் - என்று பெரியார் பேசுவது, ஆச்சாரியாருக்கோ, இராமசாமி சாஸ்திரியாருக்கோ, கிருஷ்ணசாமி ஐயருக்கோ தெரியாதா? தெரியும்.

இவர்கள் பார்ப்பனர்கள் - பார்ப்பனத் தலைவர்கள் என்பது பெரியாருக்குத் தெரியாதா? பேதையும் அங்ஙனம் கூறான். அன்று ஆச்சாரியார் சொன்னார் :

‘‘உலகத்திலே உள்ள அவ்வளவு பேதங்களும் எங்கள் இருவருக்கிடையில் உண்டு; மறைத்துப் பயனில்லை; என்றாலும் இந்த ஒரு விஷயத்தில் நானும் அவரும் ஒத்துப்போகிறோம்; ஒரே அபிப்பிராயம்தான்” என்று பேசினார்.

பார்ப்பனச் சூழ்ச்சி என்று கூறிவிடலாம், அவர் மட்டுமே இப்படிப் பேசி இருந்தால். பெரியார் பேசியது என்ன தெரியுமா, தம்பி!

என் அன்புக்குரிய ஆச்சாரியார்,
நண்பர்,
தலைவரென்றே சொல்லலாம்”

என்று துவங்கி,

‘‘இந்த ஒரு விஷயத்தில் நானும் அவர் கருத்தைப் பூரணமாக ஆதரிக்கிறேன்” என்றார்.

தம்பி! இது 28! 27-ல் நாமும், ம.பொ.சி. யும் ஜீவாவும் அந்தோணிப் பிள்ளையும், பாரதிதாசன் அமரும் அவையில் பி.டி. இராஜன் நடத்திச் செல்லும் குழுவில் இருக்கச் சம்மதித்தது, 28-க்கு முன்னறிவிப்பு போல் இருக்கிறதல்லவா? ஆமாம், இனிக்கவும் செய்கிறது.

28-ல் ஏற்பட்ட கூட்டு, ஆங்கிலமே பொதுமொழியாக இருத்தல் வேண்டும் என்று மத்திய சர்க்காருக்குப் பல கட்சியினர் கூறிக் கூறி, அதைப் பெறுவதற்கு வழிகாண ஏற்பட்டது.

27-ல் ஏற்பட்ட கூட்டு, நாம் பெற வேண்டிய எல்லைகளைப் பெறவும், சென்னைக்கு உரிய தமிழ்நாடு என்ற பெயர் கிடைக்கவும், தட்சிணப் பிரதேசம் என்ற பேய்த் திட்டத்தை ஒழித்துக் கட்டவும் ஏற்பட்டது.

28-ன் உடனடி விளைவு, ஆங்கிலமே பொதுமொழியாதல் வேண்டும் என்று மத்திய சர்க்காருக்குத் தெரிவிப்பது. அதில் நாங்கள் அனைவரும் இசைவு தந்திருக்கிறோம்.

27-ந் தேதி செய்த முடிவு, தேவிகுளம் பீர்மேடு பிரச்சினை சம்பந்தமாக மத்திய சர்க்கார் மேற்கொண்ட போக்கினைக் கண்டிக்கும் வகையில் பிப்ரவரி 20-ல் நாடெங்கும் பொது வேலை நிறுத்தம் செய்வது என்பதாகும்.

தம்பி! சர்க்கார் எத்தகைய கடுமையான முறைகொண்டும் நம்மை ஒடுக்கத் தயாராக இருக்கிறது. இப்போதே அறிவகத்தைச் சுற்றிப் போலீஸ் வட்டமிட்ட வண்ணம் இருக்கிறது.

அந்தத் ‘தட்டும் குவளையும்’ துடியாய்த் துடிக்கின்றனவோ என்னவோ யார் கண்டார்கள் - சிறையில் !

எது எப்படி நேரிடினும் பிப்ரவரி 20, வெற்றிகரமாக, அமைதியாக, பலாத்காரமற்ற வகையில் நடைபெற்றாக வேண்டும்.

தம்பி! தயார்! தயார்!!

அன்புள்ள,

29-1-1956