அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


தம்பி உடையான்!
1

பச்சைப் பாம்பு பார்க்கப் பசுமை! பாய்ந்து விட்டால்...?
நம்மவர் ஆட்சி நமக்காகவா? இல்லை! இல்லை!
ஏழை மேலும் ஏழையாகிறான் காங்கிரஸ் கட்சியில்!
காமராஜர் காட்டும் ஜனநாயக சோஷியலிசம்!

தம்பி!

உறுமும் புலி, சீறிடும் நாகம், துரத்திடும் ஓநாய், இவைகளை எதிர்த்திட வேண்டும் என்ற உணர்வு பெறுவது கடினமல்ல. இவைகளால் ஆபத்து ஏற்படும் என்பது எளிதாகப் புரியக்கூடியது.

கொத்த வரும் வல்லூறு, வட்டமிடுவது கண்டதும் மாடப்புறா தப்பித்துக்கொள்ளத் துடியாய்த் துடிக்கிறது. ஆனால், வலையை வீசிவிட்டு வரகரசி தெளித்துவைத்துப் பிடித்திட முனைபவனைக் கண்டால் அப்படியா அஞ்சிப் பறந்தோடுகிறது? இல்லையல்லவா?

சீறிடும் பாம்பு கண்டால் ஓடோடித் தப்பித்துக் கொள்ளவோ, தடிகொண்டு அடித்துப் போடவோ முனைகின்றனர். ஆனால், பச்சைப் பாம்பு இருக்கிறதே, அது சீறுவது இல்லை; கண்ணுக்குப் பயங்கரமாகத் தெரிவதுமில்லை; பச்சைக் கொடியுடன் பின்னிக் கிடந்திடும்போது, பாம்பு என்று கண்டறியக்கூட இயலுவதில்லை; ஆகவே, அச்சம் எழாது; ஆபத்து இருக்கிறது என்பதனை அறிந்திட இயலாது. என்னஅழகான கொடி! கவர்ச்சி மிக்க பச்சை நிறம்! - என்று ரசித்துக் கொண்டிருக்கத் தோன்றுமேயன்றி, அச்ச உணர்ச்சி எழாது. அந்த நிலையில், அருகே நெருங்குவான்! பச்சைப் பாம்பு கொத்திவிடும்! அப்போதுதான் அலறித் துடித்திடுவான், ஐயோ! பச்சைக்கொடி என்று எண்ணிக் கொண்டிருந்தேன் பச்சைப் பாம்பல்லவா கொத்திவிட்டது!! - என்று கதறுவான் அல்லவா?

அதுபோலவே தம்பி! கண்டதும் கடுங்கோபம் கக்கி, பற்களை நறநறவென்று கடித்து, காட்டுக் கூச்சலிட்டு, கழுத்தினில் அடித்திடும் கயவனும் உண்டு, கனிவு காட்டி, புன்னகை உதிர்த்து, அருகே அழைத்து, உணவளித்து, அதிலே நஞ்சிட்டு உயிர் பறிப்பானும் உண்டு.

முன்னவனைக் கண்டதும் தன்னாலேயே ஒரு எச்சரிக்கை உணர்வு வந்திடும்; மற்றவனைக் கண்டாலோ ஒரு மயக்கம் மேலிடும்.

கிணற்றினில் இறங்கவேண்டிய நிலை ஏற்படும்போது, காலைப் பதமாக ஊன்றிக் கொண்டு, வழுக்கி விழுந்து விடாமல் மிக எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளத் தோன்றும். பச்சைப்பட்டு விரித்தது போன்ற தோற்றமுள்ள பாதையிலே நடந்திடும்போது, ஒரு அலட்சியப் போக்கு தன்னாலே வந்து சேர்ந்திடும்.

படுகுழி வெட்டி, அதனைப் பசுந்தழை கொண்டு மூடி வைத்திருந்திடின் - அந்தப் பாதையில் - வீழ்ந்து வேதனை அடைந்த பிறகே படுகுழி என்பது புரியும்.

கரத்தினில் அரிவாள் தூக்கிக்கொண்டு ஒருவன் எதிரே வரக்கண்டால், எச்சரிக்கையாக இருந்திடத் தோன்றும்! அறுத்தெடுத்த கதிருடன் வந்திடின்? அருகே அவன் வந்திடும் போதுகூடப் புன்னகை செய்திடத் தோன்றும் இயல்பு.

வெள்ளையர்கள் இந்த நாட்டைச் சுரண்டுவதனைக் கண்டதும், எல்லா மக்களுக்கும் ஒரு எரிச்சலுணர்ச்சி, எதிர்ப்புணர்ச்சி தானாக வந்தது.

அவன் நடை உடை பாவனையும், அவன் அனுபவித்து வந்த மந்தகாச வாழ்வும், அவன் பேச்சிலே நெளிந்த ஆணவமும், எளிதாகப் புரிந்தது; இவன் நமக்கு எதிரி என்ற உணர்வு பீரிட்டுக் கிளம்பிற்று.

உறுமும் புலியை, சீறும் நாகத்தைக் கண்டதும், ஆபத்து! ஆபத்து! என்று உணர்வு பிறந்திடுவது போல, எல்லா வகை யாலும் நம்மிலிருந்து வேறுபட்டுக் காணப்பட்டவனும், எல்லாத் துறைகளிலும் நம்மீது ஆதிக்கம் செலுத்துபவனுமாக இருந்துவந்த வெள்ளையரிடம் எதிர்ப்புணர்ச்சி இயல்பாகவே ஏற்பட்டுவிட முடிந்தது.

அன்னியன் - என்ற நிலையே, அகற்றப்பட வேண்டியவன் என்ற உணர்வை ஊட்டிற்று. பாம்பு என்று கண்டவுடன், அடித்துப் போட்டிட வேண்டும் அல்லது அதனிடமிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உண்டாவது போல. ஆனால், பச்சைப் பாம்பு, பசுமைமிக்க செடி கொடியுடன் ஒட்டிக் கொண்டிருந்திடின்?

வெள்ளையராட்சியும் அதனால் விளைந்த வேதனையும் சீறிடும் நாகம் அல்லது பாய்ந்திடும் புலிபோல் இருந்தது; நம்மவர்களே நம்மை ஆளும் நிலையில், அவர்கள் மூட்டிவிடும் வேதனை, பச்சைப் பாம்பு போலக் கொடியுடன் கொடியாக சுற்றிக் கொண்டிருப்பதால், எளிதிலே விளங்குவதில்லை; அது தீண்டும் வரையில்! தீண்டிய பிறகும் அதனை எளிதாகக் கண்டறிய முடிவதில்லை. கொடிக்கும் பச்சைப் பாம்புக்கும் தோற்றத்தில் உடனடியாகக் கண்டுபிடித்திடத்தக்க மாற்றம் இராததால். எனவேதான், சுயராஜ்யத்தின் பேரால் வேதனைகள் மூட்டப்படும்போது, எளிதாக உணர்ந்து தீவிரமாக எதிர்த்து, துரிதமாக அதனை ஒழித்திட முடிவதில்லை.

ஆனால், நம்மவர்கள் என்பதாலேயே அவர் கரம்பட்ட நஞ்சு உயிர் குடித்திடாமலிருக்குமா? அன்பனே! வருத்தப்படாதே! நெருப்பிலே தூக்கிப் போட இருக்கிறேனே என்று எண்ணி வேதனைப்படாதே! இது சாதாரண நெருப்பு அல்ல! கள்ளியும் சுள்ளியும் போட்டு மூட்டப்பட்ட நெருப்பல்ல. அசல் சந்தனக்கட்டை!! நெருப்புத்தான்! ஆனால் அருமையான நறுமணம்! கவனித்தனையா! பைத்தியக்காரா! நெருப்பிலே தள்ளுகிறார்களே என்று எண்ணியா வேதனைப்படுவது! சந்தன மணம்! இந்த விதமான நெருப்பூரில் நம்மை அனுப்புகிறார்களே என்று மகிழ்ந்திட வேண்டாமா!! - என்று அக்ரமம் பேசினால், ஆமய்யா! ஆம்! நறுமணம்! என்று கூறிவிட்டு, ஓ! என் சோதரரே! காணீர் என்னை! சந்தனக் கட்டைகளை அடுக்கித் தீயிட்டு, அதிலே என்னை இருந்திடச் செய்துள்ளனர்!! என்றா மற்றவரிடம் கூவிக் கூறிடுவர். பித்தரும் கூறார்.

ஆனால் நம்மவர்களே ஆட்சி நடத்தும்போது, நமக்குக் கேடு பயக்கத் தக்கனவற்றினைச் செய்திடுவது கண்டு, நாம் சீறிப் பேசினால், ஆளவந்தார்கள் என்ன செப்புகின்றனர்?

நானா உன்னைக் கெடுத்திடுவேன்!
என்னையா நீ எதிர்ப்பது?
உனக்கு எது நல்லது என்பது எனக்கா தெரியாது!

என்று பேசுகின்றனர், குரலிலே கடுமை கலவாமல், விழியிலே கனிவு கூட்டி! மயங்கிடத் தோன்றும். மயங்குகின்றனர் பலர். பச்சைப் பாம்பு கொடியுடன் பிணைந்து கொண்டிருப்பதனை அறிய முடிவதில்லையல்லவா, அதுபோல அவர் பேசும் மொழியிலே உள்ள பாகு, நஞ்சு கலந்தது என்பதனை உணர்ந்திட முடிவதில்லை.

ஆகவேதான், வெள்ளையர்மீது பாய்ந்திட முடிந்தது போல கேடு செய்யும் நம்மவரின் போக்கின்மீது பாய்ந்திட முடியவில்லை பலருக்கு.

பச்சைப் பாம்பு பார்வையில் எளிதிலே படாது. நம்மவர் ஆட்சியின் கேடுகள் பலருடைய பார்வையிலே படுவதில்லை.

கேளேன் ஆளவந்தார் பேசுவதை! ஏழையே! உன்னை வாழவைக்கவே நான் அரும்பாடு படுகிறேன்! உன் தலையிலே எண்ணெய் இல்லை! என் கண்களிலே பார், கசிகிறது உருக்கம்; வேதனை!! உன்னை வாழ வைத்திடத்தான் திட்டங்கள்!!

பலருக்கு மனமயக்கம் ஏற்பட்டு விடுவது கண்டு வியப்படைய என்ன இருக்கிறது?

ஆனால் அந்த மயக்கத்தைத் தம்பி! நாம் பெரும் அளவுக்குப் போக்கிவிட்டிருக்கிறோம். ஆளவந்தாருக்கு நம்மீது ஆத்திரம் அதிக அளவில் இருப்பது அதனால்தான்.

நம்மவர்கள் - ஆகவே நல்லவர்கள்! என்ற ஒரு மயக்கத்தை ஊட்டிவைத்திருந்தோம், பாவிப் பயல்கள், நம்ம வீட்டு நெருப்பு என்றால் சுடாதா அப்பா! என்றும், நம்ம கொல்லையில் உள்ள கிணறு என்றால், இடறி விழுந்தால் உயிர் போகாமலா இருந்திடும்! என்றெல்லாம் கேட்டுக்கேட்டு, மயக்கத்தைத் தெளிய வைத்துவிட்டனரே என்று எண்ணுகிறபோதே அவர்களுக்குக் கோபம் "குபுகுபு'வெனக் கிளம்பத்தானே செய்யும். அதைத்தான் காண்கின்றோம்.

நம்மவர்கள்! - கவர்ச்சிகரமான சொல், தம்பி! சுவை மிக்கதுகூட! ஆனால் "நம்மவர்கள்' என்று உறவு கொண்டாடு வோர் ஒருவரை ஒருவர் வீழ்த்தவல்ல பகைவர்களாக இருந்திடின்!

இன்று இந்தச் சுவையூட்டும் மயக்க மொழியை ஆளவந்தார் பயன்படுத்தும்போது,

கழனியில் காயும் வெயிலில் உழைக்கின்றானே கந்தன் அவனுக்காகவா? அல்லது காட்டூர், மோட்டூர், மீட்டூர் என்று பலப்பல பண்ணைகளை அமைத்துக் கொண்டு பல கந்தன்களை மாடாக உழைக்கச் செய்து, மந்தகாச வாழ்வு நடத்துகிறானே பவுனப்பன் எனும் சீமான் அவனுக்காகவா?

யாருக்காக இந்த அரசு? அது விளக்கமானால்தான், இந்த "நம்மவர்' என்பதிலே நல்ல பொருள் கிடைக்கிறதா அல்லது தீயது உள்ளடங்கிக் கிடக்கிறதா என்பது புரியும்.

அதனைத்தான் நாம் புரியவைத்துக் கொண்டிருக்கிறோம்.

இனியுமா இதிலே உங்களுக்குச் சந்தேகம்? இந்த அரசு ஏழைகளுக்காகத்தான்; இல்லாமையை ஒழித்திடத்தான் என்று பேசுகின்றனர் பெரிய தலைவர்கள்; பெரிய இடத்தைப் பிடித்துக்கொண்டவர்கள்.

ஏழை முன்னேறிவிட்டான், அவன் வாழ்விலே "வசந்தம்' வீசுகிறது! - என்று கூறினர் துவக்கத்தில் துணிந்து.

ஏழை அரிஜனங்களுடைய வீடுகளிலே இப்போதுதான் வெள்ளிப் பாத்திரங்கள் பளபளவென்று தெரிகின்றன என்றே கூறிப் பூரிப்புக் காட்டினார் ஒரு அமைச்சர்.

வேலை வாய்ப்பு அதிகமாகிவிட்டிருக்கிறது, கூலி உயர்வு கிடைத்திருக்கிறது, வாழ்க்கை வசதி செய்து தரப்பட்டிருக்கிறது, எல்லாம் எமது ஆட்சியின் திறமை காரணமாக என்று கூறிக் களிப்பூட்டினர் சில காலம்.

புதிது புதிதாக எழுந்த தொழிற் கூடங்களைக் காட்டினர்: பாரீர் புதுக்கோலம்! அறிவீர் நாடு செழித்திருப்பதை!! - என்று பண் பாடினர்.

அதனால் ஏற்பட்ட மயக்கம் சிறிது காலம் கலையவில்லை; கப்பிக்கொண்டிருந்தது.

எட்டடுக்கு மாடிகளும், எழில்மிகு தோற்றமுள்ள மோட்டார்களும், புத்தம் புதுப் பொலிவும் கண்டனர் ஏழைகள்; நாடு முன்னேறி இருக்கிறது "நம்மவர்' ஆட்சியில் என்ற பாட்டும் கேட்டனர். கேட்டுவிட்டு? கூரைபிய்ந்து போன குடிசைக்குச் சென்றனர்! குமுறிடும் மனைவியைக் கண்டனர்! தேய்ந்து போகும் குழந்தைகள் கூவிடக் கேட்டனர்; வறுமை எப்போதும் போல அங்கு ஆட்சி செய்திடக் கண்டனர், கலங்கினர்.

கூலி உயர்ந்துதான் இருந்தது. ஆனால், விலைகளோ அதனைவிட அதிக அளவிலும் வேகத்திலும் உயர்ந்து போயிருக்கக் கண்டனர்; வாழ்க்கைச் செலவு சுமையாகித் தம்மை அழுத்துவதைக் கண்டனர்.

புதிய புதிய யந்திரங்கள் அமைத்தனர்; கண்டனர்; வெள்ளையர்போலாகிவிட்ட நமது முதலாளிமார்களையும் கண்டனர்; "நம்மவர்' என்ற உணர்ச்சிகூட எழுந்தது. ஆனால், நமது நிலை என்பது பற்றிய எண்ணம் எழுந்ததும் பந்தபாச உணர்ச்சி மெள்ள மெள்ள உலர்ந்திடலாயிற்று.

புதிய ஆட்சி! புதிய நிலைமை! புதிய பொலிவு! புதிய வலிவு! பொன்னொளி! பூங்காற்று! மெல்லிசை! மினுக்கு! - எல்லாம் கண்டனர்; அவை யாவும் ஒரு சிலருக்கே, தமக்கு அல்ல என்பதனையும் உணர்ந்தனர்: உணர்ந்ததும், இந்த ஆட்சி நமக்காகவா என்ற ஐயப்பாடு தலைதூக்கிற்று; இல்லை இல்லை என்று உள்ளம் முணுமுணுத்தது, ஒலி வலுத்தது, உண்மை உரத்த குரலில் கூறிற்று, இந்த அரசு உனக்காக அல்ல என்று.

நாடு முன்னேற்றமடையத் தீட்டப்படும் திட்டங்கள் வெற்றி அடைய வேண்டுமானால், வயலில் வேலை செய்யும் உழவனும், தொழிற்சாலையில் வேலை செய்யும் பாட்டாளியும் இந்தத் திட்டம் எனக்காக, என்னை வாழவைக்க என்ற உணர்வுபெற்று உள்ளன்புடன் உழைத்திட வேண்டும் என்று தொழில் அமைச்சராக இருந்தபோது சஞ்சீவய்யா பேசினார். அந்த உணர்வு வரவில்லை. காரணம், உழைக்கிறான், உற்பத்தி பெருகுகிறது, இலாபம் குவிகிறது, முதலாளிமார்கள் கொட்டமடிக்கிறார்கள், இவனோ எப்போதும்போல - இல்லை - இல்லை - முன்பு இருந்ததைவிட மோசமான நிலையில் நலிந்திடுகிறான். இந்த அரசு எனக்காக அல்ல.... என்னைக் கசக்கிப் பிழிந்து இலாபம் பெற்றிடும் முதலாளிகளுக்காக என்று கூறிடலானான்: ஒரு கசப்புணர்ச்சி அவன் உள்ளத்தைக் கப்பிக்கொண்டது; எத்தனை தித்திப்புத் தடவியபோதிலும் அந்தக் கசப்புணர்ச்சி போக மறுக்கிறது.

இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவு விலைகள் ஏறியிருப்பதால், கூலி உயர்ந்தும் தன் வாழ்க்கையில் குளிர்ச்சி ஏற்படவில்லை என்பதறிந்து இதற்குத்தானா இந்த அரசு! அது நமக்காக அமைந்த அரசா? என்று கேட்கலானான். துப்பாக்கிதான் பதில் அளித்தது!

வெள்ளையராட்சிக் காலத்திலே இல்லாத துணிவு முதலாளி களுக்கு ஏற்பட்டது! ஏனெனில், தொழிலாளி தன் நிலையை உயர்த்திக்கொள்வதற்காக எந்தக் கிளர்ச்சி நடத்திட முயன்றாலும், ஆயுதம் தாங்கிய போலீஸ் படை முதலாளிகளின் ஆதிக்கத்தைக் காத்திட, தொழிலாளியின் கிளர்ச்சியை முறித்திட முனைந்தது.

இந்த அரசு நமக்காக அமைந்தது அல்ல; இது முதலாளிகளுக்காக அமைந்த அரசு என்ற உண்மையை, தொழிலாளியின் உடலிலிருந்து ஒழுகிய இரத்தமும், கண்களிலிருந்து வடிந்த கண்ணீரும் உணர்த்தின.

காங்கிரசாட்சியில் பணக்காரன் மேலும் பணக்காரனாகிறான்; ஏழை மேலும் ஏழையாகிறான் என்ற கருத்து பரவலாயிற்று. ஆட்சிப் பொறுப்பில் இருந்தோர், முதலில் இதனைப் பலமாக மறுத்தனர்; கடுமையாகக் கண்டித்தனர் இத்தகைய கசப்புணர்ச்சியை மூட்டிவிடுபவர்களை.