அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


தண்டோரா சர்க்கார் - 2
2

ஏன், இந்த ஜனநாயக முறை இருக்க, சர்வ கட்சிக் கூட்டணி "அர்த்தால்' திட்டமிட்டது? கூட்டம் போடலாம், தீர்மானம் நிறைவேற்றலாம், அவைகளை அனுப்பி வைக்கலாம் என்றல்லவா "திணமணி' கூறுகிறது. இவைகளைச் செய்யாமல் வேலைக்குச் செல்லாதீர், கடைகளைத் திறவாதீர் என்று ஏன் சர்வ கட்சிக் கூட்டணி கூறிற்று?

ஜனநாயக முறைகளில் நாட்டமற்றதாலல்ல; திறனற்று மல்ல; அந்த முறைகள் யாவும் செய்து பார்த்தாகிவிட்டது. யாவும் செவிடன் காதில் ஊதிய சங்காகி விட்டது! ஆமாம், தம்பி! ஒரு பிரபல தமிழ் இதழாசிரியரின் "வாக்கை' எடுத்துக் கையாண்டிருக்கிறேன். அவர்தான், தமிழ் மக்கள் தங்கள் நியாயமான கோரிக்கைகளைப் பல வழிகளிலும் எடுத்துக்கூறினர், மத்திய சர்க்காரிடம்; எனினும் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகி விட்டது என்றார்.

"ராஜ்ய சீரமைப்புக் கமிஷன் சிபாரிசுகள் மீது இந்திய சர்க்கார் அறிவித்துள்ள முடிவுகள், தமிழர் சம்பந்தப்பட்ட வரை, அநீதியாகவே இருக்கின்றன. அடுத்தாற்போல் உள்ள ராஜ்யங்களில் தமிழர் பெரும்பாலோராயுள்ள பகுதிகள் (பீர் மேடு, தேவிகுளம் உட்பட) சென்னை ராஜ்யத்தில் சேரவேண்டும் என்ற நியாயமான கோரிக்கையைத் தமிழகம் ஒரு குரலில் கேட்டது. இதை இந்திய சர்க்கார் அடியோடு நிராகரித்து விட்டனர். எல்லாக் கட்சிகளும் இதை வற்புறுத்தின. அரசியலுக்குப் புறம்பாகவுள்ள பல ஸ்தாபனங்களும் ஒருமித்து இதைக் கேட்டன. சட்ட சபையின் இரு மன்றங்களும் இதை மிகப் பெரிய மெஜாரிட்டியுடன் கோரின. அநேகமாக எல்லா நகர சபைகளும் ஜில்லா போர்டுகளும் இந்தக் கோரிக்கையை ஆதரித்துத் தீர்மானங்களை நிறைவேற்றின. மேலும் ராஜ்ய சர்க்காரும் போதிய புள்ளி விவரங்களுடனும், ஆதாரங் களுடனும், நிதானம் தவறாமல், இந்தக் கோரிக்கைக்கு இணங்கு மாறு இந்திய சர்க்காரைக் கேட்டனர். இராஜ்ய மந்திரிகளும் பல்வேறு ஸ்தாபனத்தினரும் டில்லி சென்று பன் முறை நியாயம் வழங்குமாறு வேண்டினர். இம்மாதிரி தமிழகம் ஒருமித்துக் கேட்டும் பயனில்லை.

"எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகிவிட்டது.''

தமிழர், ஜனநாயக முறைகளைக் கையாண்டது வீணாகிப் போனது, இவ்விதம் விளக்கப்படுகிறது. இந்த "விவேகி' யார் என்கிறீர்களா? அர்த்தால் எதற்கு? கூட்டம் போடலாமே, தீர்மானம் நிறைவேற்றலாமே, ஜனநாயக முறை எவ்வளவோ இருக்கிறதே, அவைகளை விட்டுவிட்டு, அர்த்தால் ஏன் ஏற்பாடு செய்கிறார்கள் என்று நமக்கெல்லாம், நாட்டுக்கெல்லாம் "புத்தி' கூறினாரே, அதே "விவேகி' தான், இப்படியும் எழுதினார். இதைக் கூறினவரும் "தினமணி' ஆசிரியர்தான்!

ஜனநாயக முறைகளைத் தமிழர்கள் கையாண்டனர்; கூட்டம் போட்டனர்; தீர்மானம் நிறைவேற்றினர்; மேலிடம் அனுப்பி வைத்தனர்.

தமிழரின் ஆட்சியாளர்களாக அமர்ந்துள்ள காங்கிரஸ் கட்சியும், இதே ஜனநாயக முறைகளைச் செய்தது.

கக்கனே, எடுத்தார் பேனாவை, எழுதினார் காகிதத்தில், விடுத்தார் அறிக்கை, விடமாட்டோம் தேவிகுளம் பீர்மேடை என்று. "மணி மகுடம் தரித்துக் கொண்டுள்ள ஏழைகளின் பாதுகாவலர்' இருக்கிறாரே காமராஜர் (விடுதலை தரும் விருது) அவரும் நாட்டுக்கு வாக்களித்தார், நானிருக்கிறேன் - கவனித்துக் கொள்கிறேன் என்று. இந்த ஜனநாயக முறை யாவும் செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று! பிறகே, கூட்டணி அர்த்தால் நடத்தத் திட்டமிட்டது!

தமிழரின் முகத்தில் பொதுவாகவும், காங்கிரசார் முகத்தில் குறிப்பாகவும், காமராஜர் முகத்தில் சிறப்பாகவும், டில்லி கரிபூசிய "கண்ணறாவிக் காட்சியைக் கண்ட பிறகுதான் கூட்டணி டில்லியின் போக்கையும் நோக்கையும் மாற்றக் கூடிய வேறு முறை தேடலாயிற்று; காந்தியார் அருளிய அறிவுரை நினைவிற்கு வந்தது. எனவே "அர்த்தால்' நடத்தத் தீர்மானித்தது.

செவிடன் காதிலே மேலும் சங்கு ஊதுங்கள் என்கிறது "திணமணி'. மக்கள், மதிநுட்பமுள்ளவர்கள்; அவர்கள் ஆசிரியர்களாக இல்லாதிருக்கலாம், அங்காடியிலோ, வேறு ஏதேனும் அலுவலிலோ ஈடுபட்டிருக்கக்கூடும், எனினும் அவர்களுக்குப் புரட்டு எது, புல்லர் யார், என்பனவற்றைக் கண்டறியும் திறன் இருக்கிறது; சிற்சில சமயங்களிலே இத்திறன் பழுதுபட்டுவிடுகிறது. எனினும் அடியோடு பட்டுப் போய்விட வில்லை. இந்த உண்மையை உணராமல், எதைக் கூறினாலும் நம்பிவிடும் ஏமாளிகள் இந்த மக்கள் என்று எண்ணிக்கொண்டு, இறுமாந்த நிலையில் இருப்பதால்தான் ஜனவரி 18-ல் தமிழரின் ஜனநாயக முயற்சியாவும் செவிடன் காதுக்குச் சங்கு போலாகி விட்டது என்று இடித்துரைத்தோமே, அதற்கான காரணமும் விளக்கிக் காட்டினோமே, அதைப் படித்த அதே மக்களிடம், பிப்ரவரியில் அர்த்தால் கூடாது, ஜனநாயக முறைகள் உள்ளன என்று கூறுகிறோமே என்ன எண்ணிக் கொள்ளுவார்கள் மக்கள், வேளைக்கொரு பேச்சா? நாளைக்கு ஒரு நோக்கமா? என்று கேபேச மாட்டார்களா? நமது அறிவுடைமை பற்றியே கூடச் சந்தேகிக்கமாட்டார்களா? என்பதுபற்றி எல்லாம் துளியும் எண்ணிப் பார்க்காமலேயே, "தினமணி' எழுதிற்று - எனவே, என்ன மதிப்பு தரவேண்டுமோ அதைத் தந்தார்கள் மக்கள்- பொட்டலத்துக்கு, ஏற்ற காகிதமாகக் கொண்டனர்; தமது போக்குக்கு வழிகாட்டும் ஆசானாகத் "தினமணி'யைக் கொள்ளவில்லை. எனவேதான், அர்த்தாலை மக்கள், வெற்றிகரமாக்கினர். தம்பி, நம்மிடம் வெறுப்புணர்ச்சி கொண்ட பெரியவர்கள், நடமாடும் நாசம் - வலைவீசும் வன்கணாளர் - வயிற்றுப் பிழைப்புக்காகவே பொதுவாழ்வில் இருப்போர் - வஞ்சகர் - சூதகர்கள் என்றெல்லாம் நம்மைப் பற்றி எண்ணிக் கொண்டும் கூறிக் கொண்டும் வருபவர்கள், நாம் ஈடுபட்ட காரணத்தாலேயே சர்வகட்சிக் கூட்டணியை அலட்சியப் படுத்தவும், எதிர்த்துப் பேசவும் முற்பட்டனர். காங்கிரஸ் ஏடுகளெல்லாம்கூட, ஒரே அடியாக உண்மையை எப்படி மறைப்பது என்று திகைத்தது கண்டு, இது என்ன கஷ்டம்? என்னைப் பாருங்கள், முழுப் பூசணியைச் சோற்றில் மறைக்கிறேன் என்று கூறுவது போல, அர்த்தால் வெற்றிபற்றி இருட்டடிப்புச் செய்து காட்டவும் முன் வந்ததுடன் இப்போது, அர்த்தாலைக் காலித்தனம் என்றும், போலித்தனம் என்றும் தேர்தல் சூது என்றும், தெளிவிலாதாரை ஏய்த்து விட்டனர் என்றும் ஏதேதோ பேசுகின்றனர். இதுவரை தமிழகம் கண்டிராத அளவு வெற்றிகரமான அர்த்தால் நடை பெற்றது - கண்டோர் வியந்தனர் - பிறர் பற்றி என்ன, தம்பி! நான் கண்ட காட்சி என்னைத் திடுக்கிட வைத்தது.

20-ந் தேதி பகல் பதினொரு மணி இருக்கும் - நான் வெளியே எந்த அளவுக்கு வெற்றியோ என்ற கவலையுடன், மூலையில் முடங்கிக் கிடந்தேன் - நண்பர் W.K. தேவராசனார் மோட்டார் கிடங்கில்! தமிழரசுக் கழகக் கொடியும், தி. மு. க. கொடியும் கட்டப்பட்டிருந்த ஒரு மோட்டர் வான் வந்து நின்றது - பழந்தமிழ்ப் போர் வீரர் போன்ற உடலும் பரிவும் பண்பும் ததும்பும் உள்ளமும் படைத்த என் நண்பர் உமாபதி - தமிழரசுக் கழகம் - அண்ணா! என்று கூறிக்கொண்டே கீழே இறங்கினார். அவர் முகத்திலே வெற்றிக்களை கண்டேன் - எளிதில் களிப்புப் பெறாத இயல்பினரல்லவா நமது பொதுச் செயலாளர், அவரும வெற்றி! வெற்றி! என்று கூறியபடி உடன் வந்தார் - எதிர்பார்த்ததைவிட அதிகம், ஆமாம், பரிபூரணக் கடை அடைப்பு என்றார் ம. பொ. சி. வந்து பாருங்களேன் அந்தக் காட்சியைத் தான் என்றழைத்தார் தோழர் விநாயகம்; அண்ணாவுக்கு எப்போதும் இப்படித்தான் குழப்பம், சந்தேகம் என்று கேலி பேசினார், நடராசன்.

கடைகளெல்லாம் . . . . ?
எல்லாக் கடைகளும்
மவுண்ட் ரோடு?
ஒரு கடை கிடையாது!
சைனா பஜார்?
சம்பூரண வெற்றி!
மூர் மார்க்கெட்?
திறக்கவே இல்லை!
திருவல்-க்கேணி?
நிசப்தம்!
மயிலாப்பூர்?
ஒரு கடை இல்லை!
தியாகராயநகர்?
வந்து பாருங்கள், வெற்றியை!
கலகம்? குழப்பம்?

எல்லாம் காமராஜர் மனதோடு சரி! ஊரில் எங்கும் உணர்ச்சி மயம்! உற்சாக மயம்!

ஆலைகளில் நிலைமை?

அந்தோணிப் பிள்ளையின் அபாரமான சாதனையை வந்து பாரப்பா, ஆச்சரியப்படுவாய்!

தீப்பெட்டித் தொழிற்சாலை?

மூடிக் கிடக்கிறது! கல்லூரிகள்?

திறந்துள்ளன - மாணவர் அணிவகுப்பு நெடுஞ் சாலைகளில். .

கொத்தவால் சாவடி?

கீரை விற்கும் கிழவிகூட அங்கு இல்லை!

அப்படியானால் . . . .?

அப்படியாவது இப்படியாவது நம்மால் இவ்வளவு சாதிக்க முடியும் என்று நேற்று யாராவது கூறியிருந்தாலும் நம்ப மாட்டோம். இப்போது பார்த்தாலல்லவா, தமிழ் மக்களின் பேரார்வம் விளக்கமாகத் தெரிகிறது. காட்சியைக் காண்போம், பட்டபாடு வீண்போகவில்லை. ஆட்சியாளர் மிரட்டலுக்கு நாடு செவிசாய்க்கவில்லை. முழு வெற்றி! மகத்தான வெற்றி!!

தம்பி! பல ஆண்டுகளாகப் பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள நான், "புளகாங்கிதம்' கொள்ளத்தக்க பல சம்பவங்களைக் கண்டிருக்கிறேன். ஆனால், அன்று நான் நண்பர்களுடன், சென்னையின் பல பகுதிகளிலும் சுற்றிப் பார்க்கும்போது, என்னவென்று சொல்வேன், என் மனம் களிநடமாடிற்று; பாதை ஓரத்தில் ஆங்காங்கு நின்றுகொண்டு, அமைதியைக் காத்து நின்ற வீர இளைஞர்கள், வெற்றிப் புன்னகையுடன் இருந்த காட்சியைக் கண்டேன். கண்களில் நீர் துளிர்த்தது!! இதோ தமிழகம்! தன்மானத்தை இழக்கத் துளியும் சம்மதியோம், உரிமைக்கான போரிடத் தயங்கோம்! என்று உலகுக்கு அறிவிக்கும் தமிழகம்! மூடிக்கிடக்கும் கடைகள், வெறிச்சென்று கிடக்கும் அங்காடிச் சாலைகள், பள்ளிகளில் ஆசிரியர்கள், வெளியில் மாணவர்கள், சர்க்கார் நடத்தும் மோட்டார் பஸ்கள், ஆள்தேடும் காட்சி, மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்து செல்லும் காட்சி, ஆலைகளில் ஆள் இல்லை, அரவம் இல்லை, எங்கும் வெற்றி, எவர் முகமும் வடிவழகுடன் அர்த்தால் கூடாது என்று முன்பு ஆர்ப்பரித்தோர் கூட, ஊருடன் ஒத்துப் போயினர், தம்பி! அப்படிப்பட்ட மகத்தான வெற்றியை நான் கண்டதில்லை!!

எவ்வளவு ஏளனங்களைத் தாங்கிக் கொண்டோம் - எத்துணை இடர்ப்பாடுகள் - என்னென்ன வகையான பழிச்சொற்கள்! மக்களைத் திரட்டி, மகத்தான சக்தியாகிடும் "மாமந்திரம்' தெரிந்த பெரியார், நமக்கு ஆதரவாக இல்லை, ஏதோ நடக்கட்டும், எப்படியோ தொலையட்டும் என்றும் இருந்துவிட வில்லை. ஏதாவதொரு காரணத்துக்காகக் காமராஜர் கூடச் சும்மா விட்டுவிடுவார் போலிருக்கிறது, இவரோ விடமாட்டே னென்கிறார், வெளுத்து வாங்குகிறார், பத்திரிகையிலும் மேடையிலும், "இது கடைந்தெடுத்த காலித்தனம்; கண்ணீர்த் துளிகளின் கயவாளித்தனம்; அர்த்தால் தேவையில்லை'' என்றெல்லாம். அவருடைய எதிர்ப்பு ஒரு புறம் - அவருடைய ஊசிகளும் முட்களும் மற்றோர்புறம் - காமராஜர் சர்க்காரின் தண்டோரா! - காங்கிரஸ் கமிட்டிகளின் மறுப்பு வெளியீடுகள் - ஒன்றா, இரண்டா, எதிர்ப்புகள், இவ்வளவுக்குமிடையில் நேற்று வரை முரண்பட்டுக் கிடந்தவர்கள் அமைத்துள்ள சர்வ கட்சிக் கூட்டணியிலே, குழப்பமும் பிளவும் ஏற்படுத்தும் முயற்சிகள் வேறு.

"ஹலோ! "ஹலோ!. . . . ''

"யாரு நீங்களா?''

"ஆமாம், நான்தான். . . . வணக்கம், வணக்கம். . . . ஆமாம், இரண்டு நாளாகச் சென்னையில்தான். . . . ''

"சரி, என்னய்யா நடுராத்திரியில். . . . . ''

"நடு நிசிதான், ஆனால் என்ன செய்வது. . . . எப்படியாவது இந்த அர்த்தாலை. . . . ''

"நிறுத்துவதா? என்னய்யா இது வேடிக்கை பேசுகிறீர்?''

"அவர் ரொம்பச் சங்கடப்படுகிறார்.''

"அவருக்கு என்ன சங்கடம் இதிலே. அர்த்தால் ஏற்பாடு செய்கிற எங்களுக்கல்லவா சங்கடம், சஞ்சலம் எல்லாம்.''

"என்னிடம் நம்பிக்கை வைக்கக் கூடாதா? நான் எல்லா வற்றையும் கவனித்துக்கொள்ள மாட்டேனா? என்றெல்லாம் ரொம்பச் சொல்கிறார். தங்களிடம் நேரிலேயே பேச வேண்டுமாம். . . ''

"என்னிடம் பேச என்ன இருக்கிறது. இது கூட்டணித் திட்டமய்யா - ஒருவர் தீர்மானிக்கும் விஷயமல்ல.''

டெலிபோனில் விவரம் பேச முடியவில்லை. நீங்கள் உடனே புறப்பட்டுச் சென்னை வந்தால் நல்லது, ரொம்பவும் விரும்புகிறார்.''

"வருவதற்கு இயலாதே! 19-ந் தேதி காலைதான் சென்னை வருகிறேன்''

"ஐயோ! 19-ந் தேதி வந்து என்ன செய்வது? உடனே பிளேனில் புறப்பட்டுவரச் சொல்கிறார்.''

"முடியாத காரியம். மேலும் நான் வந்து செய்வதற்கு ஒன்றும் இல்லை. ஏதாவது பேச வேண்டுமானால், அண்ணாதுரையிடம் பேசுங்கள்.'' "அந்த ஆள் இணங்கிவர மாட்டானே. . . . ''

"நான் மட்டும் என்னவாம் ! என்னய்யா இது ! அர்த்தால் நிச்சயம் நடைபெறும். அது அமைதியுடன் நடத்தப்பட நான் சர்க்காருடன் ஒத்துழைக்கத்தான் விரும்புவேன். அதுவே தவிர, அர்த்தாலைக் கைவிட முடியாது. அது தெளிவாகி விடுவது நல்லது. . . .''

சென்னைக்கும் மதுரைக்கும் நடுநிசியில் இப்படி "டெலிபோன்'' - கோவைக்கும் "சேதி' - தூத்துக்குடிக்குத் "தூது'' - எங்கெங்கு சமரசவாதிகள் - சந்தர்ப்பவாதிகள் - கிடைப்பார்களோ அங்கெல்லாம், தூது பேசுவதும், பேரம் பேசுவதும் மும்முரமாக நடைபெறுகிறது. நீ தம்பி, இவை பற்றி ஏதுமறியாமல், "அர்த்தால்' வெற்றிகரமாக நடைபெறுவதற்கான காரியத்தில் ஆர்வத்துடன் ஈடுபட்ட வண்ணமிருக்கிறாய். நாங்கள் இங்கே, சதிச் சுழலில் சிக்கி, இந்த முயற்சிக்கு நூறாகி விடுகிறதோ, யார், எத்தகைய பிளவு உண்டாக்கும் பேதத்தைத் தூவுகின்றார்களோ என்று பயந்தபடி இருந்து வந்தோம்.

"சர்வ கட்சிக் கூட்டணி என்ற பெயரால், பிப். 20-இல் நடைபெற இருக்கும் காலித்தனத்தைக் கண்டித்துப் பெரியார் பேசப் போகிறார் - அனைவரும் - வருக!'' - என்று சிதம்பரம் தெருக்களில் 9-ந் தேதி பகலில், பட்டப் படிப்பில் ஈடுபட்டிருக்கும் வாலிபரொருவர் ஒலிபரப்புகிறார்! எங்கெங்கு, வாய்ப்புக்கிடைக்கிறதோ அங்கெல்லாம், காமராஜர் கேள்விப் பட்டதும், முதுகில் தட்டிக்கொடுத்து, "சபாஷ்' கூறிப் பாராட்டத் தக்க வகையில், பெரிய இடத்தவர்கள் சீரிய காரியத்தில் ஈடுபட்டனர். பாவம் சிரமத்துக்கு ஏற்ற பலன் கிட்டவில்லை; நாடு, அர்த்தாலை வெற்றிகரமாக நடத்திக் காட்டியாயிற்று.

கடை அடைப்புக்கூட ஓரளவுக்கு நடைபெற்றுவிடும்; ஆனால், இவர்களால் அர்த்தால் நிகழ்ச்சியில் அசம்பாவிதம் நேரிடாதபடி, கலாம் விளையாதபடி தடுத்திட எங்ஙனம் முடியும், வீறுகொண்டெழும் மக்களிடையே திடீரென்று கோபப் புயல் கிளம்பிவிட்டால், விபரீதம் நேரிட்டு விடுமே, எதிர்ப் பட்டோரைத் தாக்குவது, எந்த நாசம் பற்றியும் கவலை கொள்ளாத போக்கு, சாவு பற்றிய பயமற்ற துணிவு, இவை கிளம்பி விடுமே, இவை எல்லாவற்றையும்விட வீடு வேகிற போது கிடைத்தவரையில் பறிப்போம் என்று காலிகள் கிளம்பி விடக்கூடுமே, அவர்களை எல்லாம் எப்படித் தடுக்க முடியும்? இவர்களுக்கு ஏது அந்த ஆற்றல், இவர்கள் என்ன போர் பல கண்டவர்களா? இவர்கள் கெஞ்சிக் கூத்தாடினாலும், தொண்டை உலர உலரக் கூவினாலும், மக்களைக் கட்டுப்படுத்த முடியுமா? அர்த்தால் என்றால் சாமான்யமா, என்னென்ன நடைபெறப் போகிறதோ யார் கண்டார்கள்? பம்பாயில் பார்த்தோமல்லவா, கொலையும் கொள்ளையும், கற்பழித்தலும், கத்திக்குத்தும்! பயங்கரமான பலாத்காரமல்லவா தலை விரித்தாடிற்று, இங்கும் அதுதான். பிறகுதான் தெரியப் போகிறது இந்தப் "பச்சுக்கானா'க்களையும் கத்துக்குட்டிகளையும் நம்பினால் என்னென்ன நாசம் விளையும் என்ற பேருண்மை - இப்போது, என்னவோ, இதுகள் தூண்டிவிடுவது கேட்டு ஆட்டம் போடுகிறார்கள், பிப். 20-இல் பல இடங்களில் பிணக்காடு பார்க்கப் போகிறார்கள், கொலையும், கொள்ளையும் கோர தாண்டவமாடப் போகின்றன, பெண்டுபிள்ளைகள் குய்யோ முறையோ என்று கதறிப் பதறி ஓடப் போகிறார்கள் - அப்போதல்லவா "இதுகள்' முகத்திலே காரித் துப்பப் போகிறார்கள் நாட்டு மக்கள் - என்று நம்முடன் சேர மறுத்து, அதனாலேயே தமக்குத்தாமே வேதனையை வருவித்துக் கொண்ட பெரியவர்கள் பீதி மூட்டினர்.

எனக்கும் தம்பி, பயம்தான். திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் ஈடுபடும் கிளர்ச்சியானால், கட்டு மீறி யாரும் காரியமாற்ற மாட்டார்கள்; எவரேனும் அது போலானால், அவர்களிடம் மன்றாடும் உரிமை எனக்கு உண்டு, ஒத்துழைக்கும் பண்பு நமது கழகத் தோழர்களிடம் நிரம்ப உண்டு என்பது அறிவேன் -எனவே கலாம் எழாதபடி தடுத்திட முடியும் என்று மார்தட்டிக் கூறுவேன்.

அதுபோன்றே, இப்பக்கம் செல்க! அப்பக்கம் செல்லற்க! என்று கூறிடவும், கட்டுக்குக் கொண்டு வரவும் முடியும் நண்பர் ம. பொ. சி. யால், தமிழரசுக் கழகம் மட்டும் கிளர்ச்சி நடத்துவதாக இருந்தால்.

அது போன்றே ஒவ்வொரு கட்சிக்கும்.

ஆனால், இதுவோ சர்வகட்சிக் கூட்டணி! பல்வேறு அணி வகுப்புகள்! ஒவ்வோர் அணிவகுப்புக்கும் பழக்கமாகியுள்ள முறைகள் உண்டு! எப்படி, இந்தக் கூட்டணியைக் கட்டுப் படுத்துவது? யாருடைய சொல்லுக்கு எந்த அளவு மதிப்புக் கிடைக்குமோ? யாரால் கலாம் விளைந்தது என்பதைச் சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாதே! இந்நிலையில் கூட்டணிக் கிளர்ச்சி, மூட்டிவிடுபவர்களின் சாகசத்துக்கு இரையாகி, கட்டுக்கு மீறிச் சென்று விட்டால், என்ன செய்வது? சென்னை சென்னைதான், பம்பாயல்ல என்று மார் தட்டித் தட்டிப் பேசி விட்டோமே, அந்த நற்பெயர் கெடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டுமே, எப்படி? எப்படி? என்று எண்ணி எண்ணி நான் பெருங்குழப்பமுற்றுக் கிடந்தேன். தம்பி! ஒரு தூய கொள்கைக்காக மக்கள் சக்தி திரண்டெழுந்தால் அந்தக் கொள்கைக்காகப் பாடுபடும் யாருடைய சொல்லுக்கும் கட்டுப்படுவர் - பெருந் தலைவர்களுக்கு மட்டுமே கட்டுப்படுவோம், இவர்கள் சொல்வதென்ன, நாங்கள் கேட்பதென்ன என்று இருந்துவிட மாட்டோம், எமக்கு இலட்சியம் முக்கியமே தவிர, தலைவரின் தோற்றம்கூட அல்ல என்று கூறுவது போல மக்கள் நடந்து கொண்டனர். எப்போதும் நான் இதனை உணர்ந்து உவகை கொள்வேன்.

பிப். 20, இலட்சம் மக்கள் திரண்டெழுந்து நடத்திய மகத்தான ஊர்வலம், எனக்கு மக்களிடம் ஏற்கெனவே உள்ள நம்பிக்கையை மேலும் அதிகமாக்கிற்று. ஆனால் ஒன்று, தம்பி, நான் "குட்டை'யனல்லவா? அது பற்றி எனக்கு இதற்குமுன் எப்போதும் வருத்தம் இருந்ததில்லை. பிப். 20-இல், அடடா! இப்படிக் "குள்ளமாக' இருக்கிறோமே, "உயரமாக' இல்லாமற் போய் விட்டோமே, என்று நான் உள்ளபடியே வருத்தப் பட்டேன். ஏன் என்கிறாயா? கொஞ்சம் ஆவலை அடக்கிக் கொள்ள, தம்பி! அடிகள், இடம் இல்லை என்கிறார், அடுத்த கிழமை கூறுகிறேன்.

அன்புள்ள,

4-3-1956