அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


தண்டோரா சர்க்கார் - 3
2

"சந்தடி சாக்கில் சில பொடியன்கள் ஸ்மால்காஸ் கோர்ட் பகுதியில் கற்களை வீசினர்.'

பொடியன்கள் - காலிகள் அல்ல! தெரிகிறதா தம்பி, தேசியம்!!

நடைபெற்றது என்ன தெரியுமோ? எல்லாக் கதவுகளையும் மூடிக் கொண்டு, ஹைகோர்ட் வேலையைக் கவனிக்கலாயிற்று, கோவா அர்த்தால் கூட்டத்தினர் விடவில்லை, கோஷமிட்டுக் கொண்டு சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விசாரணை நடந்து கொண்டிருக்கும் கோர்ட்டுகளுக்குள் புகுந்தனர்.

உடனே, துப்பாக்கி முழங்கிற்றா? இல்லை! உடனே ரிஜிஸ் டிரார், பிரதம நீதிபதியைக் கலந்து கொண்டு, கோர்ட்டுகள் மூடப்படும் என்று அறிவித்தார்!

இரண்டு கவுண்டர்களையும், மேஜை நாற்காலிகளையும், ஜெனரல் போஸ்டாபீசில், ஒரு கூட்டம் நுழைந்து உடைத்தது.

அரை குறையாகத் திறந்து வைத்திருப்பவை போலத் தோன்றிய கடைகள், ஸ்தாபனங்கள் முன்னிலையில் ஆர்ப் பாட்டக்காரர்கள், கோஷமிட்டனர்; மூடச் செய்தனர்.

தம்பி! "தினமணி'யிலிருந்து திரட்டித் தந்திருக்கிறேன், சேதிகளை. தொழிலாளர்களுக்கும், தேவிகுளம் கிளர்ச்சிக்கும் என்ன சம்பந்தம்? தொழிலாளர்களே! அரசியல் கட்சிகளின் வலையில் விழாதீர் - என்று மாய்மாலம் பேசினார்களல்லவா, தம்பி! கோவா அர்த்தாலுக்கு, "தினமணி', திருப்தியுடன் எழுதுகிறது,

"ராஜ்ய சர்க்காரின் தொழிற்சாலைகள்
கார்ப்பரேஷன் ஓர்க்ஷாப்
பெரம்பூர் ரயில்வே ஓர்க்ஷாப்
பி. சி. மில்
சால்ட் - கோட்டர்ஸ் கூட்ஸ்ஷெட்

இவை யாவும் மூடிக் கிடந்தன என்று.

இவை மட்டுமா, கப்பல்களில் சாமான்கள் ஏற்றுமதி இறக்குமதி இல்லை - ஏனென்றால், அந்தத் தொழிலாளர்களும் அர்த்தாலில் சேர்ந்து கொண்டனர் என்று செப்புகிறது "தினமணி'

மாணவர்களை விட்டு விடுங்களய்யா! அவர்களை, இத்தகைய அர்த்தால் கிளர்ச்சிகளிலே ஈடுபடச் செய்யாதீர்கள் என்று மகானுபாவர்கள் கூறினர் - கல்வித் துறைத் தலைவராகி, தமிழரின் கலி தீர்த்தவர் இருக்கிறாரே, சுந்தரவடிவேலர் (குத்தூசியாரின் சகலை), அவர் பலமான தாக்கீது பிறப்பித்தார் - பள்ளிகள் அடைபட்டுக் கிடக்கக்கூடாது என்று கோவாவின் போது.

பச்சையப்பன்
லயோலா
சட்டக் கல்லூரி
வைத்தியக் கல்லூரி
கிண்டி கல்லூரி
தாம்பரம் கல்லூரி

எல்லாம் மூடிக் கிடந்தன. மாணவர்கள், அர்த்தால் ஊர்வலம் நடத்தினர் என்று தேசீயம் பேசுகிறது, "தினமணி'.

அர்த்தாலால் கஷ்டம் ஏற்படவில்லையா என்றால், நிரம்ப என்பதும், "தினமணி' மூலமே தெரிகிறது. ஆனால் அதனை அந்த ஏடு, கூறும் "தினுசு' இருக்கிறதே, வேடிக்கை அதுதான்.

திடீல்னு தொடவே, நான் தடாலுன்னு கீழே விழுந்து விட்டேனுங்க, ஜாடை மாடையா முன்கூட்டியே சொல்லி யிருந்தா நான் கொஞ்சம் சிங்காரிச்சுக்கிட்டு வந்திருக்க மாட்டேனா - என்று கேட்கும் "இரவு ராணிகள்' பற்றிக் கதை கதையாகப் படிக்கிறோம் அல்லவா! அதெல்லாம் எந்த மூலைக்கு! இதோ பார், தம்பி "தினமணி' யின் எழுத்தை.

"ஒரு நாள் இடைவெளி கொடுத்து, முன்னறி விப்புடன் திட்டமிட்டு நடத்தியிருந்தால், யாரும் கஷ்டப்படாமல் அர்த்தால் நடந்திருக்கும் என்பது பொதுஜன அபிப்பிராயம்.''

நாம் நடத்திய அர்த்தாலோ, பல நாள் திட்டமிட்டு, பலாத்காரம் எந்தெந்தச் சந்துகளின் வழியாக வந்துவிடக் கூடுமோ அவைகளை எல்லாம் அடைத்துவிட்டு, பொது மக்களுக்குக் கூடுமானவரையில், சங்கடம் ஏற்படாதிருப் பதற்காகப் பல "விதிவிலக்குகள்' அளித்து, காரியம் பெரிதே தவிர வீராப்புப் பெரிதல்ல என்ற நோக்கத்துடன் நடத்தப்பட்டது.

தேவிகுளம் பீர்மேடு பிரச்சினையை, தமிழர் - மலையாளி மாச்சரியமாக்க நாம் விடவில்லை! நாம், பாராட்டிப் புகழ வேண்டிய வகையில் மக்கள் நடந்து கொண்டனர்.

இத்தனைக்கும், மலையாளிகளைத் துரத்துங்கள்! மலையாளிகள் ஆதிக்கம் ஒழிக! மலையாளிகளின் ஆதிக்கம் தெரிய வேண்டுமானால், ஆபீசுகளைப் பார்; ஓட்டல்களைப் பார், ரயில் வண்டிகளைப் பார்! - என்றெல்லாம், "விடுதலை' மும்முரமாக முரசறைந்து வந்தது. அர்த்தாலைக் காரணமாக்கிக் கொண்டு, யாராவது இரண்டொரு எரிச்சல் பேர்வழிகள் இந்தச் செயலில் ஈடுபட்டு விடுவார்களோ என்று நான் அஞ்சியதுண்டு.

தமிழ்நாடு முழுவதும் வெற்றியுடன் நடைபெற்ற இந்த அர்த்தாலில், ஒரு இடத்திலாவது தமிழர்-மலையாளி மோதுதல் ஏற்படவில்லை என்பது, கூட்டணி பொறுப்புள்ள கண்ணியவான்கள் கொண்டது என்பதற்கு மறுக்கொணாச் சான்றாகும்.

மிகப் பெரும்பாலோர், பிரச்சினையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கூட்டணியின் முயற்சியில் காணக்கிடக்கும் தூய்மையை அறிந்தும், கூட்டணியில் இடம் பெற்றவர்களிடம் நம்பிக்கை வைத்தும், இந்த "அர்த்தாலை'த் தங்கள் காரியமாகக் கொண்டனர். அதனாலேயே, இவ்வளவு எளியவர்களால் இத்துணை சிறப்பான வெற்றி பெற முடிந்தது.

போகட்டும், வெற்றிகரமாக அர்த்தால் நடைபெற்றான பிறகாவது, போக்கை மாற்றிக் கொண்டனரா என்றால், இல்லை. தம்பி, அந்த அளவுக்குக் கூடக் கண்ணியம் அரும்பிடக் காணோம். மாறாக, அறிக்கையும் தலையங்கமும், முழக்கமும் முணுமுணுப்பும் மீண்டும், நையாண்டி செய்யும் போக்கிலேயே உள்ளன.

"என்ன மகா அர்த்தால்! மோட்டாரெல்லாம் ஓடிற்று - ரயிலெல்லாம் ஓடிற்று-ஆபீசெல்லாம் வேலை செய்தது'' என்று ஏளனம் செய்தனர்.

இவர்கள் ஏதோ திங்களுக்கொருதரம் அர்த்தால், திட்டம் வைத்துக்கொண்டிருப்பதுபோலவும், அப்போதெல்லாம், காக்கை குருவியிலிருந்து கனவேக ஆகாய விமானம் வரையில் வானத்தில் பறந்திடாது, நத்தை நண்டிலிருந்து மோட்டார் ரயில் வரையில் நகராது, நடவாது, சத்திரம் சாவடியிலிருந்து சர்க்கார் பணிமனை வரையில் திறவாது, அலுவலாற்றாது மூடிக்கிடப்பது போலவும், நம்மால் இந்த அளவுக்கு வெற்றி காண முடியாததால், நாம் வெட்கித் தலை குனிய வேண்டும் போலவும் பேசுகின்றனர்.

நாம் நடத்திக் காட்டிப் பெற்றதைவிட மகத்தான வெற்றியைப் பெறக் கூடியவர்கள் முன்வருவார்களானால், நாம் குறுக்கே நிற்கப் போவதுமில்லை, குறை கூறித் திரியப் போவதுமில்லை, அனுமதி அளித்தால் அவர்தம் கொடி ஏந்திகளாகக் கூடப் பணியாற்றுகிறோம்! ஆனால், சற்றே அவர்கள் தங்கள் குறிப்பேட்டினைக் காட்டச் சொல்லு தம்பி!

அர்த்தாலை வெற்றிகரமாக, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் நடத்திக் காட்டவேண்டுமானால், நம்மைக் குறை கூறுவோரில் பலர் முன்வரக் கூடுமே தவிர, சர்க்காரின் தண்டோராவும், சந்தர்ப்பவாதிகளின் எதிர்ப்பும், முதலாளிக்குக் கையாட்களாக உள்ள தொழிலாளர் தலைவர்களின் தெகிடுதத்தமும், மூக்குவரை நம்மீது கோபம் கொண்டோரின் குத்தலும் ஏற்பட்டும், சமாளித்து நாம் பிப். 20 - இல் வெற்றி கண்டது போல, நடத்திக் காட்டச் சொல்லு பார்ப்போம்!

நேராப் பார்க்கிறா, ஜோரா இல்லை! என்னைப் போல மாறு கண்ணு உண்டாடி, மங்கத்தாயி ! - என்று கிராமத்திலே பாடுவார்கள், அது போல், இயலாதவர்கள், தமது இயலாமையை மறைத்துக் கொள்ள ஏதேதோ பேசுகிறார்கள், வேறென்ன!

"அர்த்தால் வெற்றியாம்! என்ன வெற்றி! கடைகளை மூடி விட்டார்கள்! ஆனால் ஏன் மூடினார்கள்? இவர்களுடைய வேண்டுகோள் கேட்டா? அதுதான் இல்லை! காலிகளுக்குப் பயந்து கடைகளை மூடினார்கள்!'' என்று ஒத்த கருத்தினர் ஒரே குரலில் பேசுகின்றனர்! எவ்வளவு நேர்த்தியான வாதம்!

காலிகளுக்குப் பயந்து கடை மூடினார்களாம்! ஏனய்யா பிப். 20-இல் மட்டும், காலிகளுக்குப் பயந்தனர்? 19, 21, ஏன் அந்தப் பயம் இல்லை? என்று கேட்டுப் பார், தம்பி. கொழுக்கட்டை இல்லாமலே, வாய் மூடிக்கிடக்கும்.

காலிகளுக்குப் பயந்து கடை மூடினார்கள் என்ற வாதம் ஏதோ நமக்கு இழிவளிப்பது என்று எண்ணிக் கொண்டு பேசுகிறார்களே தவிர, அலசிப் பார்த்தால் அது, ஆட்சியாளர்களுக்கே பெருத்த அவமானம் அளிப்பதாகும் என்பதை அறியலாம்.

காமராஜர் ஆட்சி எப்படி இருக்கிறது?

காலிகள் நிறைய இருக்கிறார்கள் - கடைக்காரர்கள் எல்லோரும் கண்டு அஞ்சத்தக்க அளவுக்கு இருக்கிறார்கள்!

இவ்வளவு பலம் பொருந்திய நிலையில் காலிகள் இருப்பானேன்? கையாலாகவில்லை, அவர்களை அடக்க, ஒடுக்க ஒழித்துக்கட்ட!

ஒரு ஆட்சியின் திறமைக்கு இதுவா நற்சான்று?

காலாகாலத்தில், தக்க முறையில் அடக்கினால், காலிகள், ஏன் ஆட்சியாளர்கள் குறிப்பிடத்தக்க அளவிலும், கடைக்காரர் அஞ்சத்தக்க தொகையிலும் இருக்கப் போகிறார்கள்? ஏன், காலிகள் அடக்கப்படவில்லை? முயற்சிக்கவில்லையா? முடிய வில்லையா? இரண்டில் எதுவாக இருப்பினும் வெட்கித் தலை குனிய வேண்டியவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளவர்களன்றோ!

காலிகளுக்கு அஞ்சாதீர்! கலவரத்துக்குப் பயப்பட வேண்டாம்!, போலீஸ் பாதுகாப்புத் தருகிறோம்! என்று "தண்டோரா' போட்டீரே, அப்படியிருந்தும், கடைக்காரர்களுக்கு அச்சம் இருப்பானேன்? கவசத் தொப்பியைக் காட்டினீர்கள், விரைந்து செல்லும் சைக்கிள் போலீசை அனுப்பினீர்கள், கடுகிச் செல்லும் போலீஸ் வான்களை முடுக்கினீர்கள், தடியும் துப்பாக்கியும் ஏந்தினர், சந்து பொந்துகளிலும் நின்றனர், நெடுஞ்சாலைகளில் சென்றனர். எல்லாம் காட்டினீர்களே, ஏன் கடைக்காரர்களுக்குத் தைரியம் பிறக்கவில்லை?

உங்களிடம் நம்பிக்கை இல்லை! அப்படித்தானா, ஐயா, ஆட்சியாளர்களே! உங்களால் காலிகளை அடக்க முடியாது, கலவரத்தைச் சமாளிக்க முடியாது, உங்கள் போலீஸ் பாதுகாப்புப் பயனில்லை - என்று கடைக்காரர்கள் எண்ணுகிறார்கள். ஏனய்யா, "மணிமகுடதாரி' என்று "விடுதலை'யிடம் பட்டப் பெயர் பெற்றுள்ளவரை முதல்வராகக் கொண்டுள்ள ஆட்சியாளர்களே! அப்படித்தானா? உங்களிடம் நம்பிக்கை இல்லையா, கடைக்காரர்களுக்கு?

காலிகளை அடக்கக்கூடத் திறனற்றவர்கள் என்று கடைக்காரர் உங்களைப் பற்றித் தீர்ப்பளித்து விட்டார்கள் என்றல்லவா ஏற்படுகிறது உங்கள் வாதத்தை அலசினால்! வெட்க மில்லையா உங்களுக்கு? காலிகளைக்கூட அடக்க முடியாத உங்களுக்கு ஏனய்யா, ஆட்சியும் அந்தஸ்தும்? போலீஸ் இருக்கிறது தொகை தொகையாக! காலிகளைக் கண்டு, கடைக்காரர் அஞ்சினராம்! சொத்தையானது மட்டுமல்ல, தமக்குத்தாமே இழிவு தேடிக் கொள்ளும் வாதமல்லவா இது. சாமர்த்தியமாகப் பேசுவதாக எண்ணிக் கொண்டு, இப்படியா சத்தற்ற பேச்சுப் பேசுவது! .

இங்கே உள்ளவர்கள் இந்த வாதத்தைக் கேட்டு என்ன எண்ணுவார்கள் என்பது கூடக் கிடக்கட்டும், வெளிநாட்டில் உள்ள ஆட்சியாளர்கள், இந்த விசித்திர வாதத்தைக் காண நேரிட்டால் என்னென்ன பேசுவர், எண்ணும் போதே வெட்கம் வேலாகிக் குத்துமே!

சென்னையில் காமராஜர் என்றோர் "கனவான்' முதல் மந்திரியாகக் கொலுவீற்றிருக்கிறாராம். மகா சாமர்த்தியசாலி யாம்! எதிர்ப்பே எழாமல் தடுத்துக் கொள்வதில் சூரராம்! எவரையும் கண்டு அஞ்சாது போரிடும் பெரியாரையே சொக்க வைத்து விட்டவராம்! அப்படிப்பட்டவர் ஆட்சியிலே, காலிகள் ஏராளமாகி விட்டனராம், கடைக்காரர்கள் அஞ்சினராம்; பயம் வேண்டாம், போலீஸ் பாதுகாப்பு இருக்கிறது என்று காமராஜர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாராம்! கடைக்காரர்களுக்கு நம்பிக்கையோ, தைரியமோ வரவேயில்லையாம். அதனால்தான், அர்த்தாலின் போது கடை அடைத்துவிட்டனராம் - என்று பேசிடும் போது, காங்கிரஸ் நண்பர்களே! கைகொட்டி மட்டுமா, அவர்கள் சிரிப்பார்கள், செச்சே! எனக்கே எண்ணும்போது வெட்கமும் வேதனையுமாக இருக்கிறது!!

கடை அடைத்ததற்குக் காரணம், இவர்களை மதித்து அல்ல, இவர்கள் எடுத்துக் காட்டிய பிரிச்சினையை மதித்துக் கடை மூடினர் என்று வாதாடினால், அதிலே தரக் குறைவோ, ரசக்குறைவோ ஏற்படாது. நாங்கள் "சின்ன மனிதர்கள்' என்று எள்ளி நகையாடித் திருப்தி கொள்ளலாம் - கவலையில்லை. பிரச்சினையின் கண்ணியம் கடைக்காரர் மனதைக் கவர்ந்தது என்று சொல்லலாமே.

எங்களையும், நாங்கள் எடுத்துக் காட்டிய பிரச்சினையையும் சின்னதாக்கிக் காட்ட வேண்டும் என்ற சிறுமதியால், எப்படிப் பேசினால் எப்படி எப்படிப் பொருள் கொள்வர் என்பது பற்றியும் எண்ணாமல், சொத்தை வாதத்தில் இறங்கி, காலிகளுக்கல்லவா, போலீசைவிட, அதை ஆளும் ஆட்சியாளர் களைவிட மேலான இடம் கொடுத்து விட்டீர்கள்! சரியா? ஆட்சியாளர்களுக்கே அல்லவா இது அவமானம்.

கடைகளை மூடியதற்குக் காரணம், காலிகள் பற்றிய பயம் என்று வாதாடிவிட்டு, அடுத்த விநாடியே, கலவரம் அன்று ஏற்படாததற்குக் காரணம், கூட்டணித் தலைவர்களின் கட்டுப்பாடு முறை அல்ல, எமது போலீசின் திறமைதான் அதற்குக் காரணம் என்று பேசுகிறார்கள். பொருந்துகிறதா, பொருளிக்கிறதா?

அர்த்தாலன்று கலகம் எழாதபடி பாதுகாப்பளித்திடும் திறமை படைத்தது உமது போலீஸ் என்றால், காலிகளையும் அடக்கி, கடைக்காரரின் அச்சத்தையும் துடைத்து, கடைகளைத் திறக்கச் செய்து அர்த்தாலை முறித்திருக்கலாமே. ஏன் செய்யவில்லை? ஏன்? ஏன்?

தண்டோரா போட்டும், "கபர்தார்' கொடுத்தும், கவசம் மாட்டியும், கைத்துப்பாக்கி கொடுத்தும், கடைக்காரர்களின் அச்சத்தைப் போக்க முடியாத ஒரு சர்க்கார் இருக்கிறது. அதனை, அதுவே கூறிக்கொள்ளவும் செய்கிறது.

இது சிறப்புக்குச் சான்று என்று ஆட்சியாளர்களும் அவர்தம் ஆதரவாளரும் எண்ணிக் கொண்டால், நமக்கென்ன நட்டம்? போகட்டும்.

அர்த்தாலால் கண்டது என்ன? என்று, கை நிறையத் தண்ணீரை வாரி இறைத்தானதும் காயும் கனியும் பறித்தெடுத்திடக் கூடை தேடிடும் குணாளர்கள் குத்தல் பேச்சுப் பேசுகிறார்கள்.

கோவா அர்த்தால் நடந்த மறுநாள் போர்ச்சுகீசியன் போய் விட்டானா என்று நாம் கேட்டோமில்லை. ஏனெனில், அற்பத்தனமும் அரசியலும் ஒன்று கலந்தால், அசிங்கமும் அயோக்கியத்தனமும்தான் நாட்டில் தலைவிரித்தாடும்.

அர்த்தாலில் ஈடுபட்ட எவரும், அர்த்தால் வெற்றி பெற்றான உடனே, தேவிகுளம் கிடைத்துவிடும் என்று எண்ணிடும் ஏமாளிகளல்ல; அவ்விதம் எண்ணிட இது ஏமாளிகள் நாடல்ல; அறிவு செறிந்த நாடு.

அர்த்தால் மூலம், தமிழரின் விழிப்புணர்ச்சி, எழுச்சித் திறன், நெருக்கடியான நேரத்தில் ஒன்றுபடும் உளப்பண்பு, கட்டுப்பாட்டுணர்ச்சி, பொறுப்புணர்ச்சி இவை, விளக்கமாகி விட்டன. மதிப்பான பலன்கள்; மாண்புள்ள விளைவுகள்.

இதுவரை எவருமே சொல்லாதது, யாரையும் திடுக்கிட வைப்பது, பெரியார் துவக்கும் கொடி எரிப்புப் போர் - என்றனர்.

நாடு, அலறித் துடித்தது - நண்பர்கள் நல்லுரை கூறித்தோற்றனர் - திராவிடர் கழகத்தின் கடமை உணர்ச்சியினர் கொடி தயாரித்தனர், "விடுதலை' பட்டியல் வெளியிட்டது. பெரியார் சுழல் வேகச் சுற்றுப் பயணம் செய்தார் - நாளை என்ன நேரிடுமோ - என்று மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டு நின்ற நிலை அனைவருக்கும் - ஆயினுமென்ன? ராஜ தந்திர நிபுணர் ரணகளச் சூரர் காமராஜர் ஒரு சிறு அறிக்கை வெளியிட்டார் - பெரியார் தணிந்தார், துணிந்தோர் பணிந்தனர், கொடி எப்போதும் போலப் பறந்தது, கோட்டை மாளிகையிலே, குறு நகையுடன் கொலுவீற்றிருந்தார் காமராஜர்.

"என்ன ஆயிற்று கொடி எரிப்பு?''

"நின்று விட்டது!'' "அப்படியா? எப்படி?''

"நான் அறிக்கை வெளியிட்டேன். . . . பெரியார் கொடி எரிப்பை நிறுத்திவிட்டார். . . . ''

"அச்சா! பஹுத் அச்சா!''

நேரு பெருமகனாருக்கும் காமராஜருக்கும் இதுபோல் உரையாடல்!

அதே முறையில், கூட்டணி திடுக்கிடத்தக்க, திட்டமல்ல, சாத்தியமான ஒரு திட்டம் தீட்டிற்று. நாட்கள் பல சென்றன; நாடு ஆதரிக்கத் தொடங்கிற்று; காமராஜர் கடைசி நாளன்று, ஒரு அறிக்கை விட்டார், திட்டம் கைவிடப்பட்டது

இப்படி ஒரு "சரித்திரம்' தேடினார் காமராஜர்.

கிடைக்கவில்லை, தம்பி கிடைக்கவில்லை. ஒன்றுக்கு இரண்டாக அறிக்கை வெளியிட்டார்! ஓடோடி வேலை செய்தனர், திட்டத்தை நிறுத்த, கூட்டணியை உடைக்க, ஒட்டை ஒடிசலை உண்டாக்க முடியவில்லை.

காமராஜரின் ராஜ தந்திரம், எல்லோரையும் பலிபீடத்துக்கு அழைத்துச் செல்லாது என்பது விளக்கமாகிவிட்டது. மகத்தான வெற்றி என்பேன் இதனை; ஏனெனில், காரணம் எதுவாகவேனும் இருக்கட்டும், அரசியலில், சபலத்துக்கு இடமளித்து விட்டு, குறிக்கோள் நிறைவேற ஒரு தனி கட்சி வைத்துக் கொண்டிருப்பது, இயலாத காரியம், அரசியல் அறவுமாகாது.

காமராஜர்மீது பகை கக்கவே, இந்த முயற்சி என்று சிலர் காதல் பேசுகின்றனர். காதல் கடிமணமாக மாறுவதை நான் வரவேற்கிறேன். அது வெறும் "கண்ணடி, கைப்பிடி, கடிதவீச்சு, அவசர அணைப்பு'' என்ற முறையில் இருப்பதில், சுவை இருக்கலாம், பயன் இல்லை. காமராஜர், தமிழரின் நலனைக் காப்பாற்றக் கூடியவர், அவர் ஆட்சியில் ஏழை எளியவர் காப்பாற்றப்படுவர்; எவர் உரிமையும் பறிபோகாது; இனமும் தன்மானமும் தழைத்திடும் என்பதிலே உள்ளம் நிறைந்த நம்பிக்கை ஏற்பட்டால், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, அவருடைய கரத்தையும் வலுவடையச் செய்யலாம், நம் கருத்தையும் புகுத்தி வெற்றி காணலாம் என்று கருதிக் கூடிக்கொள்பவர்களை நான் பின்பற்ற முடியாது என்றாலும், அவர்களின் நேர்மைக்கும் நெஞ்சு உரத்துக்கும் மரியாதை காட்டத் தயங்கமாட்டேன்.

எனக்கென்று ஒரு கட்சியும் கொடியும் உண்டு, வேண்டும்.

அதற்கான கொள்கையும் திட்டமும் உண்டு, வேண்டும்.

காங்கிரஸ் கட்சி, இந்த என் கொள்கை, குறிக்கோள், திட்டம், கட்சி ஆகியவற்றுக்கு விரோதி, துரோகி.

ஆகவே நான் காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதில்லை, முடியாது.

ஆனாலும் நான் காமராஜரை ஆதரிப்பேன்; அவர் முதல் மந்திரியாக இருக்க வேண்டும் என்று பாடுபடுவேன்; காங்கிரஸ் மேஜாரிடியாக வந்தால்தான் அவர் முதல் மந்திரியாக முடியும், ஆகவே காங்கிரஸ்காரர் தேர்தலில் ஜெயிக்க முழு மூச்சாகப் பாடுபடுவேன், காங்கிரசை எதிர்த்து, அதன் மூலமாகக் காமராஜருக்குச் சங்கடம் விளைவிக்கத் துணிபவர்களைக் கண்ட துண்டமாக்குவேன், இதனாலே, நான் காங்கிரசில் சேர்ந்துவிட்டேன் என்று எண்ணாதீர்கள், எனக்கென்று ஒரு தனிக் கட்சி உண்டு, கொடி உண்டு, கொள்கை உண்டு, காங்கிரஸ் என் விரோதிதான், நாட்டுக்குத் துரோகிதான்!! - என்று வாதாடும் போதுதான், தம்பி! எனக்கு மயக்கம் வருகிறது.

இத்தனைக்கும் காமராஜரைப் பெரியார் படம் பிடித்துக் காட்டியிருப்பதைப் பார்க்கும் போது, காமராஜர் ஏதோ "தூய்மையான ஒரு தேவன்' என்று எனக்குத் தோன்றவில்லை.

ஆச்சாரியாரையும் காமராஜரையும் ஒப்பிட்டுப் பெரியாரின் "விடுதலை'யில் எழுதப்பட்டிருக்கிறது;

"இருவரில் கழகத்தை ஒழிப்பதில், கழகக் கொள்கைகளை எதிர்ப்பதில், பார்ப்பனீயத்தை வளர்ப்பதில், வடநாட்டானுக்குக் கங்காணி வேலை செய்வதில், நேருவுக்கு வெண்சாமரம் வீசுவதில், ஒருவருக்கு ஒருவர் இளைத்தவரல்ல!!''

தம்பி! படப்பிடிப்பு பார்த்தனையா! திராவிடர் கழகத் தோழர்களிடம் காட்டிவிடாதே, அவர்களின் கண்கள் கொப்பளிக்கும்.

கழகத்தை ஒழிப்பவர்
கழகக் கொள்கைகளை எதிர்ப்பவர்
பார்ப்பனீயத்தை வளர்ப்பவர்
வடநாட்டானுக்குக் கங்காணி
நேருவுக்கு வெண்சாமரம் வீசுபவர்!

இது, காமராஜர், பெரியார் படப்பிடிப்பின்படி.

காமராஜர் எதிர்க்கப்பட்டால், என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாது என்று பெரியார் கூறுவானேன்?

சுந்தரவடிவேலு
ராஜரத்தின முதலியார்
அப்பாத்துரைப் பிள்ளை

என்று ஏதோ ஒரு பட்டியலைக் காட்டிவிடுவதால்,

பார்ப்பனீய வளர்ப்பு
கங்காணி வேலை
வெண்சாமரம் வீசுவது
கழகத்தை ஒழிப்பது

ஆகியவை யாவும் இனிப் "பஞ்சாமிருதம்' ஆகிவிடுமா!

கோழைகள்! துரோகிகள்!! - என்றெல்லாம் வெளுத்து வாங்குகிறார், காமராஜர் கூட்டணியை.

மலை குலைந்தாலும் மனம் குலையாத மன்னன் - இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றதே, துளியாவது "சட்டை' செய்தாரா-என்று காமராஜர் பற்றிப் புகழ் பாடினோர், இப்போது கண்களை அகலத் திறந்தபடி, என்ன இவர் இவ்வளவு கிலிகொண்டு குளறுகிறாரே! - என்று கேட்பர், அப்படி, ஆர்ப்பரித்திருக்கிறார் காமராஜர் - கல்லூரிக் கூட்டமொன்றில்.

என்னைப் பொறுத்தமட்டிலே, தம்பி! எனக்கு இந்தக் காமராஜர்தான் புரிகிறது!! ஏனெனில், இதுதான் உண்மைக் காமராஜர், நாம் சந்தித்தாக வேண்டிய காமராஜர்.

மெத்தச் சிரமப்பட்டு அவர், தம்முடைய இயல்பை மறைத்து வைத்திருந்தார் - மயங்கிக் கிடந்தனர் நமது தோழர்களிலேயே சிலர்! இப்போது உண்மைக் காமராஜர், லயோலா கல்லூரி உறுமல் மூலம் தெரிகிறார்; நம்மவர், நல்லவர் என்று சொந்தம் கொண்டாடும் தோழர்களின் மயக்கம் தெளிய இது உதவும் - இன்னும் இரண்டோர் "கர்ஜனைகள்' தேவை- அவசரமாகத் தேவை!

தேனி நடத்துவதும், தெருச் சண்டையும், சிண்டுமுடிந்து விடுவதும், சீட்டு எழுதி அனுப்புவதும், கட்டை விரலை வெட்டுவேன், நாக்கை அறுத்துவிடுவேன் என்றெல்லாம் கண்டபடி பேசுவதும், முறைகளாகக் கொண்டு தலைவரானவர், எவ்வளவு நாட்களுக்கு நாசுக்குப் பூச்சும் நளினமான பேச்சும் கொண்டு மறைந்து வாழ முடியும்? உண்மைக் காமராஜர் லயோலா கல்லூரியில் தெரிகிறார்.

கோழைகள் - என்று நம்மை ஏசிவிடுவதாலேயே, இவர் வீராதி வீரர் என்று ஆகிவிடாது - மெத்தக் கோபம் வந்து விட்டது என்பதைத்தான் காட்டிக்கொண்டிருக்கிறார். அந்தப் பேச்சின் மூலம் இருக்காதா, தம்பி! அறிக்கை விட்டுக் கிளர்ச்சிகளை நிறுத்திவிடும் அலாவுதீன் என்றல்லவா இவருக்கு வடக்கே கீர்த்தி இருந்து வந்தது. அது போய்விட்டதல்லவா, அதனால் பாபம், அவருக்கு எரிச்சல், குடைச்சல்; அந்தக் குடைச்சலால் குளறுகிறார். அர்த்தால், இம்முறையில், உண்மைக் காமராஜர் வெளியே தெரியச் செய்தது குறித்து, நான் மகிழ்கிறேன். ஏனெனில், சீறும் சிறுத்தைகளைவிட நயவஞ்சக நரிகள்தான், அரசியலுக்குப் பேராபத்து.

தம்பி! நாம் சில கொள்கைகளைக் கொண்டவர்கள் - எனவே கோணல் வழி போகக்கூடாதவர்கள் என்ற உணர்வு நமக்கு உயிரூட்டம் அளிக்கிறது.

அந்த உயிரூட்டம்தான் சர்வ கட்சிக் கூட்டணியில் சேர்ந்து நாம் நமது "பங்கினைச் செலுத்துவதற்கான திறத்தை நமக்கு அளித்தது.

இதிலே கிடைத்த வெற்றிக்காகக் குருதி கொட்டிய தோழர்களின் "நாமத்தை'ப் பூஜிக்கிறேன்.

அவர்கட்கு என் வணக்கத்தைக் கூறிக்கொள்கிறேன்.

கஷ்டநஷ்டமேற்ற நண்பர்கட்கு, என் மரியாதை கலந்த வணக்கம் செலுத்துகிறேன்.

கண்ணியத்தை நாம் கடைப்பிடிக்கவும், காரியமாற்றும் திறனைப் பெறவும் நமக்குப் பேருதவி அளித்த கூட்டணித் தோழர்களுக்கெல்லாம் நன்றி கூறிக் கொள்கிறேன்.

அரியதோர் வெற்றி கிடைத்திருக்கிறது. இது நமது ஆற்றல் வளரவும், ஆர்வம் பொங்கவும் மட்டுமல்ல, தம்பி! அடக்க உணர்ச்சியை நாம் பெறவும், அறநெறியில் அசையாத நம்பிக்கை கொள்ளவும் உதவுமாக.

வாழ்க கூட்டணி! வளர்க வெற்றி!

அன்புள்ள

11-3-1956