அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


தங்கத் திரை
2

நேபாள மன்னர் வந்தார், பிரியமாகத் தலைவர்கள் வரவேற்றனர், கவர்ச்சி மிக்க காட்சியைக் காண்போம், பொழுது போக்குக்காக என்ற அளவில் மக்கள் கூடினர்.

இதோ இப்போது சவுதி அரேபிய மன்னர் வந்திருக்கிறார் - உலகில் மிகப் பெரிய பணக்காரரில் அவர் ஒருவராம் - எனவே அவரைப் பயம் கலந்த பாசத்துடன் வரவேற்று, மகிழ்ச்சியூட்டிட ஆட்சியாளர்கள் பெருமுயற்சி எடுத்துக் கொண்டனர்.

புல்கானின் குருஷேவ் வரவேற்பின் போதோ மக்கள் இதயத்தி-ருந்து அன்பு பொழிந்தது, வழிந்தது; காரணம், இவர்கள், ஆற்றலால் தியாகத்தால் நாட்டின் அடிமைத் தளைகளை உடைத்தவர்கள் என்று மட்டுமல்ல, உலகினுக்கே புதுமையாகவும் புதிராகவும் பூத்திட்ட ஓர் புது ஆட்சி முறையை மக்களுக்கு ஒரு புதுவாழ்வு முறையை அமைத்திட, உலகக் கொடுங்கோலர்களை எதிர்த்து வீரமாகப் போரிட்டு வெற்றி பெற்ற பரம்பரையில் இன்றைய வாரிசுகள்.

எனவே இலட்சக்கணக்கிலே மக்கள் ஆர்வத்துடன் திரண்டனர்.

ஏழை என்றும் அடிமை என்றும் மனிதன் இடர்ப்படவும் இழிநிலை அடையவும் தேவை இல்லை. அது நீக்க முடியாத விதி என்று வெட்டிப்பேச்சுப் பேசி வீண்பொழுது ஓட்ட வேண்டியதில்லை, ஏழையை வாழவைக்க முடியும், இல்லாமையைப் போக்க முடியும், சீமான்களின் சீற்றத்தையும் மதத் தலைவர்களின் சித்தாந்தத்தையும் எதிர்த்து நிற்கும் அறிவாற்றல் மட்டும் கொண்டு, கஷ்ட நஷ்டம் ஏற்கும் திறம் பெற்றுவிட்டால், புதியதோர் உலகு செய்வோம்’ என்ற கவிதாவாக்கை, நடைமுறைத் திட்டமாக்கிக் காட்ட முடியும் என்பதைச் சோர்விலா உழைப்பிற்குப் பிறகு சொல்லொணாத கஷ்டநஷ்டங்களை ஏற்றுக்கொண்டு வெற்றிபெற்று உலகினுக்குப் புதுப்பாடம் தந்தவர்கள் வருகிறார்கள்; நமக்காக ஓர் நல்லரசு முறை அமைத்திடும் வழிகாட்டியவர்கள் வருகிறார்கள்; மாளிகைகளிலேதான் மேதைகள் தோன்ற முடியும் கொலுமண்டபங்களில் இருந்துதான் வீரர் கிளம்பமுடியும், ஏழை உழைத்திடுவான், ஆனால் உயர்ந்த திட்டம் தீட்டிடும் வகையறியான், பாடுபடுவான, ஆனால் எம்முறையில் பாடுபட்டால் பலன் மிகுதியும் காண முடியும் என்ற பக்குவம் அறியான், கூர்வாள் போன்றான், திறம்பட உபயோகிக்கும் ஆற்றலை ஆண்டவன் சீமான்களிடம் மட்டுமே ஒப்படைத்து அருளினார், எனவே அந்தச் சீமான்கள் காட்டும் வழி நடந்தால்தான்ஏழையின் உழைப்புக்கே உயிரூட்டம் ஏற்படும். பெரும் போரிலே மாள ஏழையால் முடியும், ஆனால் பேரரசைக் கட்டியாள அவன் தகுதி பெற்றிடவில்லை, தயாபரன் அந்தத் தகுதியைத் தன்வந்தர்களுக்குத்தான் தந்திருக்கிறார் என்று ஜெபமாலையினர், தூபநீபநைவேத்தியத்தின் துணைகொண்டு உபதேசம் செய்தனரே, அது புரட்டரின் பொய்யுரை என்பதைப் புவியறியச் செய்த புரட்சி வீரர்கள் வருகிறார்கள் - அவர்கள் ஆட்சி நடத்தும் நாட்டினிலே, வளமுள்ள வயல் இருக்கிறது. இங்கு போல - ஆனால், அவை மக்களின் உடைமை - தொழிற் சாலைகள் உள்ளன - அவை தம்மை உடைமையாகக் கொண்ட டாட்டாக்கள் இல்லை - உல்லாசக் கூடங்களிலே மானோ! மயிலோ! அன்னமோ! அழகு நிலவோ! என்று வியக்கத்தக்க விதத்தில் அணங்குகள் உளர். ஆனால், அவர்களின் சீமான்களின் சிற்றின்பக் கருவிகளாக இல்லை, நாட்டுக்கலைக் கருவூலக் காவலர்களாக உள்ளனர் - மக்களின் நன்மதிப்பைப் பெற்று வாழ்கின்றனர் - என்ற உண்மையை அறியும்போது, இங்கு மட்டு மல்ல எந்த நாட்டிலும் உள்ள மக்களின் மனதிலே ஆர்வம் அன்பாகப் பொங்கி வழியத்தான் செய்யும். “அதைத்தான், சென்னையும் கோவையும், பம்பாயும் "டில்லியும்' கல்கத்தாவும் போட்டியிட்டுக்கொண்டு காட்டின. பொற்காலம் பிறந்தது, பொல்லாங்கு மடிந்தது, புரட்டர் ஒழிந்தனர், புல்லர்கள் சாய்ந்தனர்; மக்களுக்கே உடைமை, மக்களுக்கே அரசு என்ற புதுத் திட்டத்தை நிலைநாட்டினர் இஃதோர் வானவில், காற்றினிலே மிதந்து வரும் கீதம், சின்னாட்களிலே மறையும், மடியும் - நாட்டு வளம் குன்றும், ஆட்சி ஆட்டம் கொடுக்கும், வாணிபம் நலியும், தொழில் துவளும், கல்வி கெடும், கலை மடியும், செய்வதெது வெனத் தெரியாது, புயலில் சிக்கிய சிறார் போல்வார் தலைவர்கள் என்று கூறினர், சென்றது இனி மீளாது என்பதை ஏற்க மறுத்திடும் உள்ளம் படைத்த உலுத்தர்கள். முப்பதாண்டுகளுக்கு மேல் உருண்டோடி விட்டன - முதலாளித்துவ நாடுகள் என்னென்ன வளம் காட்ட முடியும் என்று கூறினவோ, அவை யாவும், மும்மடங்கு பெருகிய நிலையில் பொதுவுடைமை நாடு காட்டுகிறது. களிப்பும், கலையும், தொழிலும் தோழமையும் கைகோர்த்துக் கொண்டு நடமிடுகின்றன. வீரமா? உலகு வியக்கத் தக்க அளவில், தியாக உள்ளமா? கேட்போர் எழுச்சி பெறத்தக்க வகையில்! இந்த நிலை வந்தது, வாரீர்! காணீர்! கேளீர்! - என்ற நம்பிக்கையும் உற்சாகமும் கலந்த குரலில், புல்கானினாலும் குருஷேவாலும் மக்களிடம் பேச முடிகிறது.

இரும்புத் திரையிட்டுள்ளனர் என்று பிறநாட்டார், குறிப்பாக வல்லரசுகள் பேசிய காலையில், கொல்லன் உலைக் கூடத்து வெப்பம் போல, ரஷியாவின் புதுமுறை உருவாகிக் கொண்டிருந்தது என்று கூறலாம். இன்று வடிவெடுத்த வாளைக் காண வாரீர், என்று புல்கானின் அழைக்கிறார் - வந்திடின் காண இன்னின்ன காட்சிகள் உள்ளன என்று குருஷேவ் பட்டியல் தருகிறார். எவரும் வரலாம். எம்மை மதிப்போரும் வரலாம், எமது முறையினைக் குறித்து மட்டமான கருத்துக் கொண்டோரும் வரலாம் என்று அழைக்கிறார்கள் ரஷியத் தலைவர்கள்.

நமது நாட்டு விவசாய மந்திரி பக்தவத்சலத்தைக்கூட அழைத்தார்களாம்.

பிறநாடுகளிலிருந்து இதுவரை வந்திருந்த தலைவர்கள் யாருக்கும் தரப்படாத வகையில் மக்கள், இவர்கட்கு வரவேற்பு அளித்தனர் என்பது மட்டுமல்ல, பிற எந்தத் தலைவரும் மக்களிடம் காட்டாத வகையில் அன்பையும் அக்கறையையும் இவர்கள் காட்டினர்.

இன்னிசை கேட்டு இன்புறுதல்
நாட்டியம் கண்டு மகிழ்தல்
குல்லாயணிந்து குதூகலப்படுவது
குங்குமப்பொட்டு வைத்துக்கொண்டு கும்பிடுவது
இளநீர் பருகுவது
நமஸ்தே கூறுவது!

இவைகளெல்லாம், பொதுவான முறைகள் - இங்கு வரவேற்கப்படும் யாருக்கும் ஏற்பாடாகும் உபசார முறையாகும்.

ஆனால் மக்களின் முகத்திலே ஓர் மலர்ச்சி, திரு விழாக்கோலாம், தோழமை உணர்ச்சி - இவைகளை யார் தீட்ட முடியும், ஊட்ட முடியும்!

அது போன்றே, மக்களின் சார்பிலேயே எந்தக் காட்சியானாலும், சம்பவமானாலும், பொருளானாலும், பேச்சானாலும், ரஷியத் தலைவர்கள் கண்டனர், பேசினர், இங்கு வந்தது மக்களைக் காணவும் மக்களிடம் பழகவும் மக்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசவும், அறியவும் - என்ற நோக்குடனேயே அந்தத் தலைவர்களின் போக்கு இருந்து வந்தது. குதுப்மினாரையும், தாஜ்மஹாலையும், ஜூம்மா மசூதியையும் அமெரிக்க நாட்டுத் தலைவர்களோ பிரிட்டிஷ் பிரபுக்களோ கண்டால், உடனே எத்தனை கோடி பவுன்கள் செலவாகியிருக்கும் - இவ்வளவு செலவிடத் தக்க நிலையில் பொன் பூத்திடும் பூமியாக இருக்கிறது இந்நாடு..... இது நம் ஆதிக்கத்துக்கு உட்பட்டால்..... என்று ஆசை ஊறும் நெஞ்சுடன் நிற்பர்!

பேசும் போதோ, இந்தியாவின் பண்டைப் பெருமையை, கலைத் திறனை, அழகினை நுகரும் அருந்திறனைப் பாராட்டுவர்.

புல்கானின், குருஷேவ் கண்டனர் - அழகொளியுடன் விளங்கிடும் அந்த அற்புதமான கட்டிடங்களைக் கண்டதும், அவர்கள் மனக்கண் முன்பு என்ன காட்சிகள் தெரிந்தன? இவைகளைக் கட்டுவதற்காக எத்தனை எத்தனை ஏழைகள் அடிமைகள், வேலை வாங்கப்பட்டிருக்க வேண்டும், மக்களின் பொருள் மன்னனிடம் எவ்வளவு மிகுதியாகக் குவிந்திருந்தால் இத்தகைய மணி மாடங்களும் கூடங்களும் கட்டித் தமது கீர்த்தியை நிலைநாட்டிட வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் - என்ற எண்ணங்களைக் கிளரத்தக்க காட்சிகளே தோன்றின.

பாரிஸ் பட்டினத்துக்காரனின் மனக்கண்ணில் இந்தக் காட்சியா தெரிந்திருக்கும்? ஆஹா! இவ்வளவு ‘ரசிகத் தன்மை’ கொண்ட பாதுஷாவின் அந்தப்புரத்தில் எத்தனை எத்தனை துடியிடை, காமக் களியாட்டத்தில் ஈடுபட்டுத் துவண்டதோ, சிரிப்பையும் சிருங்கார ரசத்தையும் சிந்திய சிட்டுகள் எத்தனையோ! சேல் விழியாள் பாதம் வருடிய பாதுஷாவின் கரம் செம்பஞ்சுக் குழம்பினைப் பூசியதால் பெருமைப்பட்டதோ அல்லது ஆலம் ஏற்ற விழிச்சியரின் அதரம் கொண்டிருந்த சிவப்பினை அவர்தம் கண்கள் கொண்டிட, அஃதறிந்து ஆவன செய்ததால், பிறகு அப்பப்பா! இனி ஆகாது! இது அடுக்காது! என்று எப்படி எப்படி அவள் கொஞ்சு மொழியில் கெஞ்சினளோ, என்னென்ன பானங்களோ, எவ்விதமான பளிங்குக் கிண்ணங்களோ...... எப்படி எப்படி இன்பம் கண்டனரோ....... என்று இவ்வகையில் எண்ணம் நெளியத்தக்க வகையான காட்சிகள்தான் தெரிந்திருக்கும்.

ரஷியத் தலைவர்களின் கண்களுக்கோ உழைத்து அலுத்த மக்கள், உப்பரிகையில் உலவிக்கொண்டு உத்தரவுப் பிறப்பித்த பாதுஷாக்கள் - இந்தக் காட்சிதான் தெரிந்தது.

குருஷேவ்! இதனைக் கூறியும் விட்டார்!

வல்லரசுகளை நடத்திக்கொண்டு, வஞ்சகத்தைப் புன்னகையாலும் பூச்சாலும் மறைத்திடுவோருக்கு இது பண்பு குறைந்த பேச்சாகத் தென்படும்.

குருஷேவ், மக்களின் சார்பில்தான் பேச வேண்டும், அது மாளிகையின் இலக்கணமல்ல எனினும் பரவாயில்லை! - என்று துணிந்து கூறினர்.

பெரம்பூரில் கட்டப்பட்டுள்ள தொழிற்சாலையில், குருஷேவ், மக்களின் தலைவன், எதைக் கண்டறிய வேண்டும், கண்டறிந்ததை எங்ஙனம் கூறிடல் வேண்டும், என்பதை விளக்கிய முறையில் பேசிய பான்மை ஆச்சர்யகரமானது.

உமது முயற்சி பாராட்டத் தக்கது என்று கூறுவதற்கு அனுமதியளிக்கும்படி தங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். தாங்கள் மனமுவந்து சம்மதம் அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் நான் கூற விரும்புகிறேன் - என்று இவ்வண்ணம் சொல்லரண் கட்டி கருத்தை மறைத்திடும் போக்கிலேதான் பிறநாட்டுத் தலைவர்கள் பேசுவர், பூசுவர்! குருஷேவ் அவ்விதமல்ல; “எம் பொருட்டு இந்தத் தொழிற்சாலையை அமைத்திருப்பதாகக் கூறுகிறார்கள் - குருஷேவ் அவர்களே! தயவு செய்து அதனைப் பார்வையிட்டு, அதிலே குற்றம் குறையிருப்பின் எடுத்துக் கூறுக!' என்று மக்கள் கேட்டுக் கொண்டு, அனுப்பி வைத்திருப்பது போலவே, குருஷேவ், பெரம்பூர் தொழிற் சாலையைப் பார்த்துவிட்டு, சிறிதளவு கோபமாகவே,

செச்சே! ஏன் இப்படி கட்டிட வேலைக்கு எஃகு உபயோகித்தீர்கள் -

இது வீண் நஷ்டம்! பாழ்படுத்திவிட்டீர்கள்.

இங்கு உபயோகித்திருக்கும் எஃகிலே முக்கால் வாசியை மிச்சப்படுத்தியிருக்கலாம்.

சிமிட்டியில் கட்டியிருக்கலாம்.

எஃகு பாழாக்கப் பட்டுவிட்டது.

என்று கண்டித்து விட்டார். தொழிற்சாலை அதிகாரிகள் சமாதானம் கூற, சமர்த்துடன் முயற்சித்தனர். குருஷேவ் சம்மட்டியடி கொடுப்பது போல,

என்மீது கோபித்துக் கொள்ள வேண்டாம்.
உங்கள் நன்மைக்காகத்தான் சொல்கிறேன்.
இதுபோல, எந் நாட்டிலேயும் சொல்லுகிறேன்.
எமது நாட்டில் இவ்விதம் எஃகு பாழாக்கப்படுவதில்லை.
வந்து பாருங்கள், எமது நாட்டினை என்று கூறினார்.
எவ்வளவு பிரமாண்டமான கட்டிடம்!
எத்துணை உற்சாகத்துடன் வேலை நடக்கிறது.

எல்லாம் என் ஆட்சியில், என் திட்டப்படி - என்ற முறையில் தான் நேரு பண்டிதரே பெரம்பூர் தொழிற்சாலையைப் பார்த்தார், பூரித்துப் போனார், பாராட்டுரை வழங்கினார்; இங்கு எஃகு இவ்வளவு பாழாக்கப்படுகிறது என்பதை அவர் கண்டறியவு மில்லை, அவருடைய கருத்து அவ்வழி செல்லவுமில்லை.

நேரு பண்டிதரும், பிறநாடுகளிலே காணப்படுகிற பெருந் தலைவர்கள் போலவே, நாட்டிலே அணை வேண்டும், தேக்கம் வேண்டும், தொழிற்சாலைகள் வேண்டும் என்பது பற்றியும், தம்மாட்சியிலே இத்தகைய “வெற்றிகள்” உருவெடுக்க வேண்டும் என்பது குறித்துந்தான் எண்ணுகிறாரே தவிர, இவைகள் மக்கள் சார்பிலே நடத்தப்படுகின்றனவா, மக்களின் பொருள் பாழாக்கப் படாமல் இருக்கிறதா, என்பது பற்றிய அக்கறையைச் செலுத்தக் காணோம். அவருக்கு மலைகள் எல்லாம் மலர்த் தோட்டங்களாக வேண்டும் எனற ஆசை இருக்கிறதே தவிர, மந்திகள் அங்கு நுழைந்து பாழாக்கா வண்ணம் அரண் அமைக்க வேண்டுமே என்பது பற்றிய, எண்ணம் எழுவதில்லை.

“என் திறமையை மா மன்னா! கூறிடப் பெருமைப் படுகிறேன். கேட்டிடின் தாங்களே பூரிப்படைவீர்கள்'' என்றான் மல்லன்.

மாமன்னன், “கூறு, கேட்டிடுவோம், வீரச் செயல் யாது செய்தனை?” என்றான்

“ஒரே அறை - கன்னத்தில், காவலா, ஒரே ஒரு அறைதான், அதுவும் இலேசாகத்தான் - பற்கள் முப்பத்திரண்டும் பொல பொலவெனக் கீழே உதிர்ந்தன” என்றான் மல்லன்.

“பளா! பளா! ஒரே அறையில் 32 பற்களும் உதிர்ந்தனவா? அருமை! அருமை! அமைச்சரே! மல்லன் செய்ததைக் கேட்டீரோ? தங்கத் தோடா, முத்து மாலை பரிசு அளித்தோம்” என்றான் மாமன்னன்.

அமைச்சர் குறுக்கிட்டு. “அரசர்க்கரசே! மல்லன் திறம் கண்டு மகிழ்வது சரியே; பரிசுக்குரியவன் எனத் தாங்கள் உரைத்ததும் மன்னர்க்கழகுதான்; ஆனால், ஒரே அறையினால் எல்லாப் பற்களையும் இழந்தவன் யார் தெரியுமா?” என்று கேட்டான்.

மாமன்னன், “ஆமாம், ஆமாம், அதை மறந்தேன். யார் அவன்?” என்றான்

மல்லன் திகைத்தான்.

அமைச்சன் கூறினான். “மன்னவா! மல்லன், தன்மதிமிக்க மகனுடைய பற்களைத்தான் அங்ஙனம் உதிரச்செய்தான். அவன் குற்றம் ஏதும் செய்யாதவன். குடித்துப் புரளும் தந்தையைக் கண்டித்தான் - கோபத்தால் மல்லன் இக்கொடுஞ் செயல் புரிந்தான். இதற்கோ பரிசு” என்று கேட்டான். மன்னன் வெட்கித் தலைகுனிந்து, மல்லனைத் தண்டித்தான்.

கதைதான்! ஆனால் கடைசியில் தண்டனை கிடைக்கிறது, தகாத செயல் புரிந்துவிட்டு அதனைத் தம் தீரத்துக்குச் சான்று என்று பேசிய மல்லனுக்கும். . . . பாரதத்தின் முடிசூடா மன்னனோ ஜீப் ஊழல், உரபேர ஊழல், மாளிகை வாங்குவதில் ஊழல் என்று அடுக்கு அடுக்காக, தன் ஆட்சியிலே ஊழல்கள் நடந்து கொண்டிருப்பது பற்றி அக்கறையே காட்டாமல், ஒரே அறையில் 32 பற்களும் வீழ்ந்ததா! என்று வியந்திடும் நிலையில் இருக்கும் போது, பெரம்பூரில் எஃகு பாழாக்கப்படுவது பற்றியா அக்கறை காட்டுவார்! குருஷேவ் வந்து அல்லவா இதைக் கூறிக் கண்டிக்க வேண்டியிருக்கிறது.

மக்களை ஆள்வது என்பதற்கும் மக்களாட்சி நடத்துவது என்பதற்கும், உள்ள வித்தியாசம் நன்கு தெரியத்தானே செய்கிறது.

நேருவுக்கும் குருஷேவுக்குமே, மனப்போக்கிலும் கண்ணோட்டத்திலும் இந்த வகையான மாறுபாடு இருக்கிறது என்றால், தங்கத் திரைக்குப் பின்னாலே வீற்றிருக்கும் அமெரிக்கத் தலைவர்களுக்கும் குருஷேவுக்கும் மனப்போக்கிலே உள்ள வித்தியாசம், சாமானியமானதாகவா இருக்கும்!

“என்னவென்றே எனக்குப் புரியவில்லையே! இந்த ஜனங்கள் ஏன் இப்படி இந்த ரஷியத் தலைவர்களை வரவேற்கிறார்கள். என்ன தந்தார்கள் இந்த ரஷியத் தலைவர்கள்? என்ன தரமுடியும்? ஒரு இரும்புத் தொழிற்சாலை அமைத்துத் தர இசைந் திருக்கிறார்களா? அதற்கும் இந்தியா 47 கோடி ரூபாய்தரவேண்டுமாம்; அமெரிக்கா இதுவரை இந்தியாவுக்குக் கொடுத்துள்ள தொகையின் அளவையும் செய்திருக்கும் உதவியின் வகையையும் ஒப்பிடும்போது, ரஷியர்கள் கொடுத்தது சுண்டைக்காய் அளவுதானே இருக்கிறது! இருந்தும், இவ்வளவு அமோகமாக வரவேற்கிறார்களே! காரணம் தெரியவில்லையே!”

ஸெஸ்டர் பியர்சன் என்ற கனடா நாட்டு மந்திரி இந்தக் கருத்துப்பட, நியுயார்க் நகரில், இந்தத் திங்கள் 28-ந் தேதி பேசினார்.

காரணம் தெரியவில்லையாம் - எப்படித் தெரியும்? தங்கத் திரை கண்ணை மறைக்கிறது.

தங்கத் திரை கண்ணைப் பறிக்கும்வகையில் அமைந்திருக்கிறது, அமெரிக்காவும் அதன் ஆதீனத்திலே சிக்கிக் கொண்டுள்ள நாடுகளும், அந்தத் திரையின் தகத்தகாயத்தைக் கண்டு சொக்கிக் கிடக்கின்றன.

பியர்சன், இந்தப் பொன்னொளி கண்டு மயங்காமல் சோவியத் தலைவர்களிடம் ஏன் சொக்கிப் போகிறார்கள் இந்த மக்கள் என்று கேட்கிறார்.

இரும்புப் பெட்டியைத் திறந்து காட்டுகிறது அமெரிக்கா! இதயத்தை திறந்து காட்டுகின்றனர் ரஷ்யத் தலைவர்கள்!!

காரணம் கேட்கிறாரே, பியர்சன், காரணம் இதுதான். ஆனால் இதை அவர் போன்றார் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் - ஏனெனில் அவர்கள் இன்னமும் இரும்புப் பெட்டியிடம் அச்சத்தால் ஆசை கொள்பவர்களாக உள்ளனர்; அது மட்டுமா, நேரு பண்டிதரும் இரும்புப் பெட்டிக்காரரின் தோழமையை இழக்க விரும்பாத ஆட்சி முறை நடத்துபவர்தானே என்ற எண்ணம் வேறு, பியர்சன் போன்றாரின் உள்ளத்தைக் குடைகிறது.

இரும்புப் பெட்டிக்கும் இதயத்துக்கும் உள்ள வேறுபாடும் முரண்பாடும் கூறிட ஆசை எழுகிறது, ஆனால் தம்பி! அடிகள் கோபிக்கிறார், இடம் இல்லை என்று எனவே அடுத்த வாரம் பார்ப்போம்.

அன்புள்ள,

4-12-1955