ஈஜிப்ட் நாட்டுப்
போர்க்கருவி விற்பனை முறையில் ஏமாற்றுதல் -
இந்திய அரசின் தொழில்துறை ஊழல் -
கணக்காய்வாளர் காட்டும் பல அரசு ஊழல்கள்.
தம்பி!
ஒரு "போர்க்களம்' காணலாம்,
புறப்படு.
காணமட்டுமா! என்ன அண்ணா!
இது! என்னை என்ன கட்கம்
ஏந்தத் தெரியாதவன், கடும் போருக்கு ஏற்றவனல்ல என்றா எண்ணிக்கொண்டாய்?
மாற்றான் முன் மண்டியிடும் பரம்பரையினனா? மறத்தமிழனன்றோ!
என்றெல்லாம் கேட்டுவிடாதே, நான் உன்னை, முடிந்துபோன போர்
பற்றிய "செய்தி'யைக் கேட்கச் சொல்கிறேன் - நீ "போர்
முரசு' கேட்கிறது எண்றெண்ணி ஆர்த்தெழுந்துவிடாதே.
ஒரு களம் - இருதரப்புப்
படைகள், எதிர் எதிர்!
"துப்பாக்கிகள் தயாரா?
தோட்டாக்களைப் பொருத்தி விட்டீர்களா? "குதிரை'யைச் சரிபார்த்துக்
கொண்டாகி விட்டதா? சரி! ஏறு! முன்னேறு! ஏறு, முன்னேறு!
தாக்கு! உம், தாமதம் ஏன்? தாக்கு!! சுடு! வேகமாக!''
படைத் தலைவன் இதுபோலக்
"கட்டளை' பிறப்பித்து பிட்டான். படைகள், பாய்ந்தன எதிரியை
நோக்கி. வேட்டுகள் கிளம்பின! துப்பாக்கிகள், பீரங்கிகள்
முழக்கமிட்டன!
எதிரிப்படை வரிசையிலிருந்து,
ஏளனச் சிரிப்பொலி கிளம்பிற்று!
வேட்டுகள் கிளம்புகின்றன!
தோட்டாக்கள் பறக்கின்றன! துப்பாக்கிகள் முழக்கமிடுகின்றன!
படை பாய்ந்து முன்னேறு கிறது! எதிரிப் படையோ, "கெக்கலி'
செய்கிறது, கைகொட்டிச் சிரிக்கிறது!! ஏன் தெரியுமா, தம்பி!
துப்பாக்கி சுடுகிறது, ஆனால் ஆளைச் சாகடிக்க மறுக்கிறது!
வேட்டுகள் கிளம்பிவேகமாகப் பாய்கின்றன, ஆனால் யாரையும்
பிணமாக்க மறுக்கின்றன. அழிவுக் கருவிகள், "அஹிம்சா' விரதம்பூண்டுவிட்டன!
வாண வேடிக்கை போன்ற சத்தம் கேட்கிறதே தவிர, ஆளைக் கொல்லும்
"சக்தி' இல்லை, தோட்டாக்களுக்கு! துப்பாக்கிகள், பார்வை
அளவில் நேர்த்தியாகவே உள்ளன! ஆனால் அவைகளை நம்பிக் களத்திலே
கடும்போரில் ஈடுபடச் சென்ற படை வீரர்களை, காட்டிக் கொடுத்துவிட்டன!
வெடிக்கின்றன, ஆட்களைச் சாகடிக்க மறுக்கின்றன!
தோட்டா இல்லாத துப்பாக்கி
என்று கேலி மொழி பேசுவர்! தோட்டாவும் துப்பாக்கியும்,
பலாத்காரச் செயலிலே ஈடுபட மறுத்திடும் நிலைக்கு' என்ன
கூறுவது?
கண்டனர் எதிரிகள் - "வெத்து
வேட்டுகளை'த் தாக்கினர் கொன்று குவித்தனர்!
வீரம் இருக்கிறது நிரம்ப,
ஆனால், "வஞ்சகம்' அந்த வீரர்களை, இந்தக் கதிக்கு ஆளாக்கிற்று.
நம்மை நாசமாக்கும் எதிரி,
இங்கே இல்லை, களத்தில் இல்லை, அவன் நம் நாட்டிலே இருக்கிறான்.
அரண்மனையில் அழகிகளின் ஆலிங்கனத்தில் சுகமனுபவித்துக்
கொண்டி ருக்கிறான். நம்மைக் களம் சென்று கடும் போரிடும்படி
கட்டளை யிட்ட காவலன், கட்டழகிகளைத் தொட்டிழுத்து - முத்தமிட்டு
மகிழ்கிறான் - தொலையட்டும் - இதழ்கொத்தி இன்புறுகிறான்
ஒழியட்டும் - கொய்யாக் கனிகளின் கோலாகலத்திலே தன்னை
மறந்து கிடக்கிறான் - கிடக்கட்டும் காமாந்தகாரன் - ஆனால்
நம்மிடம் அவன் தந்தனுப்பிய போர்க்கருவிகள் இப்படியா இருப்பது!
ஆளைச் சாகடிக்க முடியாத ஆயுதமா! வெடிச்சத்தம் கிளம்புகிறது
எதிரியைச்சாகடிக்கும்சக்தி காணோமே! வெத்து வேட்டுகளைக்
கொடுத்தா, வெஞ்சமருக்கு நம்மை அனுப்புவது? மாற்றானிடம்
காட்டிக் கொடுத்தானே, மன்னவன் என்ற பட்டம் பெற்றுக் கிடக்கும்
அந்த மாபாவி! என்று கொதித்துக் கூவினர். களத்தில் பிணமலை!
இரத்தமும் கண்ணீரும் பீறிட்டெழுந்த நிலை. வஞ்சகத்தால்
வீழ்ந்தோம் எதிரியிடம் ஒரு எத்தனால் காட்டிக் கொடுக்கப்பட்டுவிட்டோம்.
சித்திரவதைச் சாவடிக்கு நம்மைத் துரத்திவிட்டு சிற்றிடையாளுடன்
சித்திர மண்டபத்தில் காதல் சிந்துபாடிக் கொண்டிருக்கிறான்,
மாமிசமலை.
தாயகமே! உன் பொருட்டு எதையும்
இழக்கத் தயங்கோம். இன்னுயிர் தரத் தயார். ஆனால் எமது
உயிர் பிரியுமுன், தாய் நாடே! உன்னை இழிவு படுத்தக் கிளம்பும்
எதிரியின், உயிரைக் குடித்திட வேண்டாமா; போரிட்டு மடியத்தயார்,
அன்னையே! போரிட்டு மடியச் சித்தமாக இருக்கிறோம், ஆனால்,
இதோ பாரும், எமக்குத் தரப்பட்டுள்ள போர்க்கருவிகளை!
வெத்து வேட்டுகளை! எதிரியிடம் எங்களைக் காட்டிக் கொடுக்கும்
கருவிகளை!
வீரம் இருக்கிறது, பிறந்த
நாட்டைக் காப்பாற்ற! ஆனால் ஒரு வேந்தன் இருக்கிறானே, எங்களை
எதிரியிடம் காட்டிக் கொடுக்க. படைக்கலத்தைப் பார் தாயே!
பார், பஞ்சை நாடு, பராரி நாடு, போர்க்கருவிபெற வழியில்லை
என்றுகூறட்டும். கரங்களே துப்பாக்கிலிபாய்ந்து சென்று,
மாண்டவர் போக, மீதமுள்ளோர் எதிரி மீது பாய்ந்து, குரல்
வளையை நெரித்தே கொன்று போடுகிறோம். ஆனால், அரசன் செய்ததென்ன,
அருமையான படைக்கலங்கள் என்று கூறி, இந்த "ஓட்டை ஒடிசல்களை',
"வெத்து வேட்டுகளை'க் கொடுத்து, களம் அனுப்பினானே!
தாயகமே! நீயே கூறு, யார்
நம் எதிரி? எதிரே? இருந்து போரிடும் படையா, எழில் அரண்மனையில்
இருந்துகொண்டு, எம்மைக் காட்டிக் கொடுக்கிறானே அந்த
வேந்தனா? யார், ஒழிக்கப்படவேண்டும்? போரிடும் படையா?
முதுகிலே கட்டாரி கொண்டு குத்துவது போன்ற துரோகமிழைத்த
அந்தத் தூர்த்தனா? இறந்து படுகிறோம், தாயே! இறந்து படுகிறோம்.
எதிரியால் கொல்லப்பட்டவர்களாகவல்ல, எம்மை ஆள்வதற் கென்று
ஏற்பட்ட எத்தனால் இந்தக்கதிக்கு ஆளானோம்.
தம்பி! நாடகமேடையானால்,
இவ்விதமெல்லாம், "வீரர்கள்' பேசமுடியும் - கொட்டகை அதிரும்,
பணம் குவியும். இது களம்! ஓட்டை ஒடிசல், வெத்து வேட்டுகள்,
தொட்டு இழுத்ததும் துண்டாகிப்போகும் கருவிகள் - இப்படிப்பட்ட
படைக் கலங்களைக் கொடுத்து, எதிர்த்து வந்த படையுடன் போர்
நடாத்தும்படி ஈஜிப்ட் படை அனுப்பப்பட்டது! சித்திரவதைக்கு
ஆளாயிற்று! தோல்வி கண்டனர், துயரம் துளைத்தது, வெட்கம்
வேலாகக் குத்திற்று!
படைக்குத்தேவையான "கருவிகளை'ச்
சேகரித்தளிக்கும் பொறுப்பு மன்னனுடைய உரிமைகளில் ஒன்று!
மன்னனோ, அவனுடைய "கோப்பை தூக்கிகள்'' "குறிப்பறிந்து
கோல மயிலினைக்கொண்டு வருவோர்'' ஆகியோரிடம் "ஆயுதம்
வாங்கித் தரும்' பணியினை ஒப்படைத்திட, அவர்கள், கொள்ளை
அடித்திடும் குணத்தினராதலால், வெத்து வேட்டு'களையும் "ஓட்டை
ஒடிசல்களையும்' கொண்டு வந்து குவித்து, கொற்ற வனிடம்
கோடிப் பொன் பெற்றுப் போயினர்! மதியற்ற மன்னன், மக்களின்
வரிப்பணத்தால் திரண்ட நிதியைப் பாழாக்கியதுடன், நாட்டின்
கண்மணிகளைக் களத்திலே கண்டதுண்டமாகும்படிச் செய்தான் -
நாட்டுக்கும் இழி நிலை பிறந்தது!
இத்தாலி நாட்டில், அரசு
இழந்து, அரசும் ஈடாகாது என்று கூறத்தக்க எழில் படைத்த
காதற் கிழத்தி நாரிமனையும் பிரிந்து, அரண்மனையின் அலங்கோல
வாழ்வின் விளைவாகக் கிடைத்த தொங்கு சதை உடனிருந்து குலுங்க,
கண்டோர் உதடசைத்துக் கேலி செய்யப் பரூக் உலவிக் கொண்டிருக்கிறான்.
பழுதுபட்ட படைக் கலங்களை, விற்ற அந்த "பரம தயாளர்' எங்கே
இருக்கிறார்கள், தெரியுமா?
பாதகம் விளைவித்த பரூக்,
பட்டமிழந்தான் - காதகர்கள் கெட்டொழிந்தனர் - "ஓட்டை ஒடிசலை'
விற்ற அந்தப் படுபாதகர்கள், என்ன ஆயினர்?
கோடிக்கணக்கான பொருள்
நஷ்டம் மட்டுமல்ல, ஆயிரக் கணக்கான அரும் உயிர்களைக் குடித்த,
அந்தக் கொடியவர்கள், கண்டு பிடிக்கப்பட்டு, நானிலம் காரி
உமிழத்தக்க நிலை பெற்றனரா? எங்கே உளர் அந்த எத்தகர்கள்?
என்ன கதிக்குத் துரத்தப்பட்டனர்? கண்டித்தால் மட்டும்
போதாதே அந்தக் கயவர்களை, கடுமையாகத் தண்டிக்கவும் வேண்டுமே!
பழுதுபட்ட படைக்கலனை விற்பனை செய்த பாதகர் யார்? எங்கு
உளர்? என்று கேட்டுப்பார், தம்பி! காங்கிரஸ் நண்பர்களை!
கோபம் பிறக்கும்!
அனியாயமாக ஆயிரமாயிரம் உயிரைப்
பலிவாங்கிய அந்தப் பாதகர்கள், இப்போது! "பாரத நாட்டிலே'
இருக்கிறார்கள், தம்பி!
"கைதிகளாகவா?'' என்று கேட்கிறாய்
உன் நெஞ்சில் நேர்மை அவ்வளவு சுரக்கிறது! நேரு மகான்,
அவர்களைக் கைதிகளாக' அல்ல, "ஆசிரியர்களாக' இங்கு அமர்த்தி
வைத்திருக்கிறார்! அக்ரமம், அனியாயம் அடுக்காது - என்றெல்லாம்!
என்னைப் பார்த்து முழக்கமிட்டு என்ன பலன், தம்பி; இந்திய
சர்க்காரின் ஆதரவில் அரவணைப் பில், அந்த "ஆயுத கர்த்தாக்கள்'
இப்போது இருக்கிறார்கள்.
ஈஜிப்ட் நாட்டுக்கு, "பழுதுபட்ட'
போர்க்கருவிகளை விற்பனை செய்த மகானுபாவர்கள், சுவிட்சர்லாந்து
நாட்டுக் கம்பெனியார்.
"பாரத நாட்டு'க்கு, படைக்
கருவிகள் தயாரிக்கும் தொழிலகம், சர்க்காரால் அமைக்கப்பட்டு,
இதுவரை எராளமான பொருளை விழுங்கி இருக்கிறது.
இந்தத் தொழிலகத்தில் நிர்வாகத்தைக்
கவனித்துக் கொள்ளவும், ஆயுத உற்பத்திக்கான "அருங் கலை'யைக்
கற்றுத் தரவும், பெரும் ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு அமர்ந்
திருப்பவர்கள், இந்த சுவிட்சர்லாந்து கம்பெனியைச் சேர்ந்தவர்கள்.
எந்தக் கம்பெனி, கொள்ளை
அடிக்கும் போக்கில், ஈஜிப்ட்டுக்கு பழுதுபட்ட பேர்க்கருவிகளை
விற்பனை செய்து, அந்த நாட்டுக்குத் துரோகம் விளைவித்ததோ,
அதே கம்பெனியினர்தான், இங்கு ஆயுதத் தொழிற்சாலைக்கு ஆசிரியர்கள்.
வழுக்கி விழுந்தவள், "பத்தினிகள்,
பள்ளிக்கு'த் தலைமை ஆசிரியை.
எவ்வளவு பொறுப்பற்ற போக்கு!
எத்துணை அலட்சிய சுபாவம்!
அக்ரமம் செய்த அந்தக் கம்பெனியாரிடம்,
ஆயுதம் தயாரிக்கும் தொழில் அமைக்கும் பொறுப்பு ஒப்படைத்தனர்
- ஆண்டுகள் உருண்டோடின - இலட்ச இலட்சமாகப் பணம் கரைந்தது
- ஆயுதம் உருவாகச் செய்தனரோ? இல்லை ஆயுதம் செய்வதற்கான
தொழில் நுட்பத்தை, இங்குள்ளவர்களுக்குக் கற்றுத் தந்தனரோ?
அதுவும் இல்லை. என்ன செய்கிறார்கள்? ஊதியம் பெறுகிறார்கள்!
உண்டு கொழுக்கிறார்கள்; நேரு சர்க்காருடைய ஏமாளித்தனத்தை
எண்ணி எண்ணிக் கேசெய்து கொண்டிருப்பார்கள். வேறென்ன செய்வர்?
நாம் யார், நமது நடவடிக்கை
எத்தகையது என்பதைத் தெரிந்தும், நம்மை அழைத்து வந்தார்களே,
இவ்வளவு "இளித்தவாயர்' இருக்கும்போது, நமக்கென்ன குறை
என்று எண்ணிக் கொள்வர்.
இந்தத் தொழில் அமைப்பு
பெருமளவுக்கு நஷ்டம் கொடுத்து விட்டது.
எதிர்பார்த்த தரத்திலோ,
அளவிலோ, கருவிகள் உற்பத்தி செய்யப்படவில்லை. தொழில்
நுட்பத்தை, இங்குள்ளவர்களுக்குப் போதிக்க, சுவிட்சர்லாந்து
நிபுணர்களால் முடியவில்லை.
டில்லி பார்லிமெண்டில் அமைச்சர்,
வெட்கமின்றி, ஒப்புக் கொள்கிறார்; ஒப்புக்கொண்டு, கூறுகிறார்;
இது சகஜம், போகப் போக எல்லாம் சரியாகிவிடும். நஷ்டம்,
கஷ்டம். இவைகளைப் பார்த்தால் ஆகுமா? இவைகளைத் தாங்கிக்கொள்ளத்தான்
வேண்டும்.
தம்பி, தாங்கிக்கொள்ளத்தான்
வேண்டுமாம்.
கோடி கோடியாகப் பணத்தைக்
கொட்டினாலும், இந்த இயந்திரத் தொழில் அமைப்பு சரிப்பட்டு
வராது என்று ஸ்காயிப் எனும் பிரிட்டிஷ் நிபுணர் கூறிவிட்டார்.
இந்த பிரிட்டிஷ் நிபுணரை வரவழைத்து, இந்தத் தொழில் அமைப்புகளைப்
பரிசீலனை செய்து கருத்துரை அளிக்கும்படி கேட்டுக் கொண்டது,
நேரு சர்க்காரேதான்.
தாங்கிக் கொள்வதாமே தம்பி!
எவ்வளவு தாங்கிக் கொள்வது! எத்தனை ஊழல்களை, எத்துணை பொருள்
நஷ்டத்தை, எத்தகைய நாற்றங்களை!
தம்பி, செப்டம்பர் 18-இல்
புதுடில்லியிலிருந்து, பொதுக் கணக்கு கமிட்டி எடுத்துக்
காட்டுவதை, சுதேசமித்திரன் வெளியிடுகிறது - படித்துப்
பார்.
"அபிவிருத்தி திட்டங்களுக்குப்
பணத்தைச் செல வழிக்கும் விஷயத்தில் சர்க்கார் மிகுந்த
பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டுமென்று பொதுக் கணக்குக்
கமிட்டி தனது யாதாஸ்தில் குறிப்பிட்டிருக்கிறது. பார்லிமெண்டு
அனுமதிக்கும் பணத்துக்கு மேல் ஒரு அணாகூட அதிகமாகச் செலவழிக்கக்
கூடாதென மந்திரி சபைகளுக்கு மேற்படி கமிட்டி அறிவுறுத்தியிருக்கிறது.
பாகிஸ்தான் கொடுக்க வேண்டிய
கடன் சம்பந்தமாக இந்திய சர்க்கார் அந்த நாட்டுடன் உடனே
ஒரு ஒப்பந்தத்துக்கு வரவேண்டுமெனக்கமிட்டி தெரிவித்திருக்கிறது
(பாகிஸ்தான் இந்தியாவுக்கு 300-கோடி ரூபாய் கொடுக்க
வேண்டும்.)
வருமான வரி விஷயமாக சர்க்கார்
காட்டியுள்ள சலுகையையும் கமிட்டி கண்டித்திருக்கிறது.
அமுக்கி வைக்கப் பட்ட பணம் சம்பந்தமாக சரியான வருமானவரி
விதிக்கப்பட வில்லையென்றும், விதிக்கப்பட்ட வரியால் கிடைத்த
பணம், கிடைக்க வேண்டிய பணத்தில் 15-சதவிகிதமே யென்றும்
கமிட்டி அபிப்பிராயம் சொல்லியிருக்கிறது.
பிரிட்டிஷ் கம்பெனி விஷயத்தில்
சர்க்கார் கையாண்ட கொள்கையும் கண்டிக்கப்பட்டிருக்கிறது.
முன்னாலே தயார் செய்த பகுதிகளைக் கொண்டு வீடு சிருஷ்டிக்கும்
முறையைக் கையாளும் மேற்படி கம்பெனி கட்டிய வீடுகள் சாதாரண
முறையில் கட்டப்படும் வீடுகளைவிட அதிக விலையாகி யிருப்பதைப்
பற்றிக் கமிட்டி குறிப்பிட்டிருக்கிறது.
தேசத்துக்கு புட்டிப்பால்
வாங்கி அதனால் சர்க்காருக்கு ஒரு லட்ச ரூபாய் நஷ்டமேற்பட்டிருக்கிறது.
புட்டிப்பால் வாங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கையெடுக்க
வேண்டுமென கமிட்டி கூறியிருக்கிறது.
வெளிநாடுகளில் இந்தியத்
தூதராலயங்களில் இருக்கும் இந்திய அதிகாரிகள், பொய் சர்டிபிகேட்
காட்டி அலவன்ஸ் வாங்குவதையும் கமிட்டி தீவிரமாகக் கண்டித்திருக்கிறது.
2 பவுன் முதல் வைத்து ஆரம்பித்த
ஒரு உதவாக்கரை கம்பெனியோடு சர்க்கார் உடன்படிக்கை செய்து
கொண்டு 17000 பவுன்களை அளித்திருக்கிறார்களென்றும், அதுவும்
அந்தக் கம்பெனிக்கு டைரக்டரான ஒருவர் கையெழுத்தின் மேல்
பணம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், பணம் வாங்கின தேதியில்தான்
அவர் டைரக்டராயிருப்பதாகவும், இப்படிப் பணம் கொடுத்திருப்பது
கண்டிக்கத்தக்க தென்றும் கமிட்டி கூறுகிறது.
கொள்ளை போகிறது பணம் இவ்வண்ணம்;
கோட்டை மீதேறிப் பேச வருகிறார் கோமான்.
நாற்றமடிக்கிறது ஊழல்,
நாட்டிலே பவனி வருகிறார் நேரு பண்டிதர்.
1-9-55-ல், கணக்கு ஆய்வாளர்கள்,
ரயில்வேதானியக் கடையில் நிர்வாக ஊழலின் விளைவாக ஆறு கோடி
ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதை எடுத்துக் காட்டினர் - நேரு என்ன
செய்தார்? சோவியத் நாட்டிலே தான்கண்ட சோபிதத்தை எடுத்துரைத்தார்
- வாயைப் பிளந்துகொண்டு மக்கள் கேட்டுக் கொண்டிருந்தனர்
- ஊழல் நிர்வாகத்தின் பொறுப்பாளர்கள், கண்ணைச் சிமிட்டிக்கொண்டு,
புன்னகை செய்தனர்.
தானியம் வாங்கிய விலை 11
கோடி விற்பனையானது 5 கோடி ரூபாய்க்கு; ஆறு கோடி நஷ்டம்.
ஆறு கோடி நஷ்டமா, அனியாயம்,
அனியாயம் என்று பேச்சு எழுந்ததும், பண்டிதர், பாரெல்லாம்
பஞ்ச சீலம் எனும் கொள்கையை வரவேற்பதுபற்றிப் பேசலானார்.
4000 ரூபாய் பெறுமானமுள்ள
ஓட்டை விமானத்தை மெருகு கொடுத்து 1,60,000 ரூபாய்க்கு
விற்பனை செய்ததுடன், பழுது பார்த்த செலவு, டைரக்டர் ஊதியம்
என்று பல புள்ளிகள் கொடுத்து பெரும் தொகையைப் பெற்றுக்
கொண்டது, விமானக் கம்பெனி, சர்க்கார் விமானத் தொழிலை
தேசியமயமாக்கியபோது.
தம்பி, பெரிய விஷயங்களிலேதான்
"கோட்டை' விடுகிறார்கள் என்று எண்ணிக் கொள்ளாதே - மிக
மிகச் சாமான்யர்கள்கூட ஏமாறாத விஷயத்திலெல்லாம், "சர்வதேசப்
புகழ் பெற்ற நேரு சர்க்கார்' எளிதாக ஏமாறுகிறது.
குடி இருந்து கொண்டு வாடகை
தராமலிருப்பது அக்ரமம்; வாடகை வசூலிக்காமலிருப்பது ஏமாளித்தனம்!
அல்லவா?
நேரு சர்க்கார், குடி இல்லாமலே
வாடகை செலுத்துகிறது!
இதைத் கண்டிக்க எனக்கு வார்த்தை
தெரியவில்லை - காங்கிரஸ் நண்பர்களையே கேட்டுத் தெரிந்துகொள்!
4,60,000 ரூபாய் வாடகை செலுத்தியிருக்கிறது
சர்க்காருடைய தபால் தந்தி இலாகா - கல்கத்தாவில் இரண்டு
கட்டிடங்களுக்கு.
1948-லிருந்து 1952 வரையில்
வாடகை தந்திருக்கிறார்கள் - ஒரு நாள் கூட அதிலே வாழவில்லை!
தபால் தந்தி இலாகா அலுவலத்துக்காகத்தான்
"பிரம்மாண்ட'மான இரண்டு கட்டிடங்களை வாடகைக்கு எடுத்தனர்;
ஏற்கனவே உள்ள அலுவலகக் கட்டிடம் கலனாகி விட்டதால், புதுப்பித்துக்
கட்டத் திட்டமிட்டனர். புதிய கட்டிடம் எழும் வரையில் வாடகைக்
கட்டிடம் தேவை என்று எண்ணி, பெரிய மாளிகைகள் இரண்டை வாடகைக்கு
எடுத்து, ஒழுங்காக, வாடகைப்பணம் செலுத்தி வந்தனர்; அவ்விதம்
செலுத்திய வாடகைப் பணம்தான் நாலு இலட்சத்து அறுபதினாயிரம்.
ஆனால் திட்டமிட்டபடி, பழைய கட்டிடத்தை இடிக்கவு மில்லை.
வாடகைப் பணத்தை மட்டும் கட்டிக் கொண்டுவரத் தவறவில்லை!
ஏறக்குறைய ஐந்து இலட்ச ரூபாய் வாடகை செலுத்தியான பிறகு,
கணக்கு ஆய்வாளர் பார்த்து, வீணாக ஏனய்யா வாடகை தருகிறீர்கள்
என்று கேட்ட பிறகுதான், இந்திய சர்க்காருக்கு, காலியாக
இருக்கும் கட்டிடத்துக்கு வாடகை செலுத்தி வந்த ஏமாளித்தனம்
தெரிந்தது தெரிந்து? ஐந்து இலட்சம் கரைந்தது.
இவ்விதம் பாழான பணம், கோணலாகிப்
போன திட்டம், நாற்றமடிக்கும், ஊழல், வளர்ந்தபடி இருக்கக்
காண்கிறோம். வெட்கமின்றி அமைச்சர் சொல்கிறார் "தாங்கிக்கொள்ள
வேண்டும்' என்று.
ஊழல்கள் பெருகிய வண்ணமுள்ள
பண்டிதரின் உலாவோ, நடந்தபடி இருக்கிறது!!
அன்புள்ள,

2-10-1955