அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


உன்னைத்தான் நம்பியிருக்கிறேன்!
2

சோஷியலிசத்திலே நம்பிக்கையில்லாத மந்திரிகளை, மந்திரிசபையிலிருந்து வெளியே துரத்தியாக வேண்டும்.

என்று தம்பி! நான் சொன்னால் காங்கிரசின் மாபெருந் தலைவர் மட்டுமல்ல, கையேந்திகள்கூடக் கடுங்கோபம் கக்கிட முனைவது காணலாம்! எமது மந்திரிகளுக்கா சோஷியலிசம் புரியவில்லை! அவர்களுக்கா சோஷியலிசத்தில் நம்பிக்கை இல்லை! அப்படிப் பேசிடு வோன் நாவினைத் துண்டித்துக் காக்கை கழுகுக்கு விருந்திடுவேன்! இன்றே! இப்போதே! இதோ! என்று ஆவேசமாடிடுவர்.

ஆனால், நான் அல்ல, இதனைக்கூற முன்வந்தது.

பாராளுமன்றத்தில் ஒரு காங்கிரஸ் உறுப்பினர் பேசியதை நான் எடுத்துக் காட்டுகிறேன். அமைச்சர் கொலு வீற்றிருந்த அவையில், வெளிநாட்டு இதழ்களின் நிருபர்கள் குறிப்பெடுக்கும் அந்த அவையில், ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார்களோ என்பது பற்றித் துளியும் அஞ்சாமல், மார்ச்சு 12-ந் தேதி டி.சி. சர்மா எனும் காங்கிரஸ் உறப்பினர், இது போலப் பேசினார்.

ஐயன்மீர்! நீங்கள் சோஷியலிசம் பேசுகிறீர்களே தவிர, அதன் பொருளை உணரவில்லையே!

ஏடுகளிலும் பல நாடுகளிலும் அறிவாளர்கள் சோஷியலிசத்திற்குத் தந்துள்ள பொருளுக்கும் உமது வியாக்யானத்திற்கும் துளியும் பொருந்தவில்லையே!

சோஷியலிசத்தின் பொருளைப் புரிந்துகொண்டா பேசுகிறீர்கள்?

என்று நாம் மிகப் பணிவுடன் பேசிடுவது கேட்டாலே, காங்கிரஸ் தலைவர்கள் பெருத்த குரலெடுத்து ஏசுகிறார்கள், ஆத்திரத்தைக் கொட்டுகிறார்கள். பாராளுமன்றத்திலேயே பலமான சவுக்கடி கொடுக்கிறார், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்; துடைத்துக் கொண்டு விடுகிறார்களே! மற்றவர்களைக் கேட்கிறார்கள், மானம் இல்லையா! - என்று!!

சோஷியலிசம் வெற்றி பெற வேண்டுமென்றால், முதலில் உழுபவனுக்கே நிலம் என்ற கொள்கை நடைமுறையாக்கப்படல் வேண்டும் என்று வலியுறுத்தியபோது நெடுங்காலம் அதனை எதிர்த்துக் கேலி பேசிக்கொண்டிருந்தவர்தான் இந்தக் காமராஜர். அவருடைய பொன்மொழி ஊரறியுமே, தம்பி! உனக்குக் கவனமில்லையா!

உழுபவனுக்கு நிலமா !
ஏறுபவனுக்கு இரயிலா !
இருப்பவனுக்கு வீடா !

என்று வக்கணை பேசிக்கொண்டிருந்தார்.

ஆனால் நாட்டு மக்கள் வெகுவேகமாக சோஷியலிசத்தின் பக்கம் சென்று கொண்டிருக்கிறார்கள் என்று கண்டு கொண்டதும், "சோஷியலிசமா! நாங்களே அதனைத் தருகிறோம்!!' என்று பேசத் தொடங்கினர்.

சோப்பு வேண்டுமா சீப்பு வேண்டுமா, ஆடும் பொம்மை வேண்டுமா அலங்காரச்சட்டை வேண்டுமா என்று தன்னிடம் உள்ள சரக்குகளை விற்றிடச்சந்தைக் கடைக்காரன் நச்சரித்தான். தொல்லை தாளமாட்டாமல் ஒருவன், எனக்கு ஒரு சாமானும் வேண்டாம் : தொல்லை செய்யாதே; போ! போ! மேலும் தொல்லை கொடுத்தால், போலீஸ்காரரைத் கூப்பிட்டு உன்னை ஒப்படைத்து விடுவேன் என்றானாம்.

தந்திரக்கார வியாபாரி பயந்து விடவுமில்லை, சலித்து விடவுமில்லை.

ஒரு ஊதுகுழலை எடுத்துக்காட்டி, இதோ ஊது குழல்! போலீஸ்காரரைக் கூப்பிட உதவும் - எட்டணாதான் விலை! வாங்கிக் கொள்ளுங்கள் என்றானாம்.

தம்பி! காங்கிரஸ் கட்சியை நடத்திச் செல்பவர்கள் அது போன்ற தந்திரத்தை மேற்கொள்பவர்கள்! அதனால்தான், தங்களிடம் கைவசம் இருக்கும் சரக்கு விலைபோகவில்லை என்று தெரிந்ததும், மக்களுக்கு சோஷியலிசத்திலே விருப்பம் ஏற்பட்டு விட்டது தெரிந்ததும்.

இதோ சோஷியலிசம் என்று கூவுகிறார்கள்.

ஆனால், "லேபிள்' தான் சோஷியலிசம் - சரக்கு அல்ல!

சரக்கு எப்படிப்பட்டது என்பதற்கு ஒரு எடுத்துக் காட்டினை மட்டும் தருகிறேன், தம்பி! ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் பார்த்தால் போதுமல்லவா?

நில உச்சவரம்பு சட்டம், புரட்சித் திட்டம், புதுமைத் திட்டம், சமதர்மத் திட்டம் என்றெல்லாம் விளம்பரம் செய்துகொண்டு வந்தார்கள்.

நாம் அந்தச் சட்டத்திலே இவர்கள் வேண்டுமென்றே ஏற்படுத்தி வைத்திருந்த ஓட்டைகளைக் காட்டி, சட்டம் சரியாக இல்லை என்று கூறியபோதுகூட, உரத்த குரலெடுத்து மறுத்தார்கள், நிலப்பிரபுத்துவமுறை ஒழிந்துவிடும், ஏழைகளுக்கு ஏற்றம் கிடைக்கும், உழுபவனுக்கு நிலம் கிடைக்கும் என்று.

காங்கிரஸ் கட்சியிலே இடம் பிடித்துக்கொண்டு விட்ட நிலப்பிரபுக்கள், குறும்புப் புன்னகை உதிர்த்தனர். சட்டம் நிறை வேற்றப்பட்டது. உழுபவன் எந்த அளவு பலன் பெற்றிருக்கிறான், அந்தச் சட்டத்தின் துணைகொண்டு. ஊரறியுமே! சட்டம் நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டு ஆண்டு பல ஆகிவிட்டன. ஆயினும், உழுபவனுக்கு, இந்தச் சட்டத்தின் மூலம் எந்த அளவு நிலம் கிடைத்திருக்கிறது. நேர்மையிலே நாட்டம் கொண்டுள்ள எவரேனும் நடைமுறையிலே இந்தச் சட்டம் எப்படி வடிவமெடுத்திருக்கிறது என்பதைக் கண்டு வெட்கமும் வேதனையும் அடையாமலிருக்க முடியுமா! டி.டி. கிருஷ்ணமாச்சாரி யாரே கூறினாரே, நில உச்சவரம்புச் சட்டம் போட்டோம்; ஆனால், பெரிய நிலப் பிரபுக்கள் எங்களை ஏய்த்துவிட்டார்கள் என்று.

சட்டம் ஏட்டளவுதான் இருக்கிறது, நாட்டிலே அது நிறைவேற்றப்பட்டதாகத் தெரியவில்லை என்று இவர்களே வரவழைத்த அமெரிக்க ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டினரே!

சோஷியலிசத்திலே உண்மையான நம்பிக்கையும் அதனைச் செயல்படுத்தவேண்டும் என்பதிலே தீவிரமும் உள்ளவர்களானால் என்ன செய்திருக்க வேண்டும்? ஓட்டைகளை அடைத்திருக்க வேண்டுமல்லவா? செய்தனரா?

பெயரளவுக்கு நில உச்சவரம்பு சட்டத்தை நிறைவேற்றி வைத்தனரே தவிர, அதனால் உருப்படியான பலன் கிடைத்திருக் கிறதா? கிடைக்கவில்லை என்பதற்குத் தம்பி! அமைச்சர்களின் பேச்சே சான்றளிக்கிறதே!

உச்சவரம்பு சட்டத்தைச் செயல்படுத்தி, நிலப் பிரபுக்களிட மிருந்து நிலத்தை எந்த அளவு பெற்றீர்கள், உழுபவனுக்குத் தந்திட என்ற தகவல் தரும்படி கேட்டதற்கு அமைச்சர் அளித்திருக்கிற விவரத்தைப் படித்திருப்பாயே, தம்பி! மலையைக் கெல்லி எலியைப் பிடித்த கதை போலில்லையா!

உண்மையான நேர்மையான சோஷியலிசத் திட்டம் இப்படியா இருக்கும்?

ஊரை வளையக்கட்டித் தமதாக்கிக் கொண்டுள்ள நிலப்பிரபுக் களிடம் சிக்கிக் கொண்டுள்ள நிலத்திலே உச்சவரம்பு சட்டத்தின் மூலம் இலட்சக்கணக்கான ஏக்கர் நிலம் கிடைத்திடும்; அவ்வளவையும் உழுபவனுக்குப் பகிர்ந்தளிக்க முடியும்; அவன் உள்ளம் களிநடமிடும்; கதிர் குலுங்கும், செந்நெல் குன்றெனக் குவியும் உணவுப் பஞ்சமே ஒழிந்து போகும்; வெளிநாடுகளுக் கெல்லாம் உணவுப் பொருளை ஏற்றுமதி செய்திடலாம் என்றெல்லாம் எழுச்சிமிக்க குரலில் பேசினார்களே, நிலைமை என்ன இப்போது என்பதுபற்றி வாய் திறக்கிறார்களா! கவனித்துப் பாரேன், தம்பி!

உச்சவரம்புச் சட்டத்தின் மூலம், எவ்வளவு நிலம் பெறப் பட்டது என்பதுபற்றி அமைச்சர் தந்த விவரத்தைப் பார்த்து விட்டு, இந்த ஆட்சியினர் உண்மையான சோஷியலிஸ்டுகளா என்பதுபற்றிய தீர்ப்பு அளிக்கும்படி மக்களைக் கேட்டுக் கொண்டால் என்னவிதமான தீர்ப்புக் கிடைக்கும்?


உச்சவரம்புச் சட்டத்தின்படி கிடைத்துள்ள நில அளவு

மாவட்டம்
நஞ்சை-ஏக்கர்
புஞ்சை-ஏக்கர்
செங்கற்பட்டு
87.89
269.89
வடாற்காடு
146.43
198..96
தென்னாற்காடு
337.63
348.63
தஞ்சாவூர்
711.95
68.69
திருச்சி
184.65
283.88
சேலம்
12.28
217.90
தர்மபுரி
73.03
344.72
மதுரை
59.23
1135.330
கோவை
4.47
334.88
இராமநாதபுரம்
91.93
30.92
நெல்லை
18.29
484.38

தம்பி! அமைச்சர் இராமய்யா அறிவித்துள்ள மகத்தான சாதனை இது! மொத்தத்தில் இதுவரை பெறப்பட்டுள்ள நிலத்தின் அளவு 5445 ஏக்கர்! புதுமைத் திட்டம்! புரட்சித் திட்டம்! இதுவாம்!! சொல்லிக் கொள்கிறார்கள் வெட்கமின்றி! மார்தட்டிக் கொள்கிறார்கள், சோஷியலிசத்தை நடத்துவதாக!! இதை நாடு நம்பவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

ஆட்சி பீடத்திலே இருப்போர்முன்

கைகட்டி நிற்க
பராக்குக் கூற
பல்லாண்டு பாட
பல்லிளித்துக் கிடக்க
பாதம் தாங்கிட
தலையாட்டிட
பண்டம் மாற்றிட
பேரம் பேசிட

பலர் முன்வருவர்! இது உலக அதிசயங்களிலே ஒன்று அல்ல! திருவிழாக் கூட்டத்திலே, சிறார்கள் கண்களை அகலத் திறந்துகொண்டு வேடிக்கை பார்த்திடவில்லையா, பொம்மைக் கடையை, அதுபோல! ஆட்சியாளர்களின் அங்காடியிலே அடுக்கிக் காட்டப்படும் பொம்மைகள் பளபளப்பானவை, பகட்டானவை! ஒவ்வொன்றுக்கு ஒவ்வொரு விலை.

காட்டிக் கொடுத்தால் இந்தப் பொம்மை.
அடுத்துக்கொடுத்தால் அந்தப் பொம்மை.
பிளவு மூட்டினால் இந்தப் பொம்மை!

என்று ஒவ்வொரு பொம்மைக்கும் "விலை' குறிக்கப்பட்டிருக்கிறது.

இந்த "வியாபாரம்' இன்று நேற்றல்ல, மனித மனத்திலே ஆசையும் சூழ்ச்சித் திறனும் முளைத்த நாள் தொட்டு இருந்து வருகிறது.

இத்தகையோர் தம்மைச் சுற்றி நின்று சூடம் கொளுத்தி, வந்தனை வழிபாடு செய்வதுகண்டு, நாடே நமது பக்கம்! என்று எண்ணிக்கொள்வதும் இயல்வு. ஆனால் நாடு, இத்தகையவர் களைத் தாங்கிக் கொண்டிருக்கிறதே தவிர, நாட்டின் குடிமக்கள், நாணயமான குடிமக்கள் நப்பாசைக்கு ஆளாகாத குடிமக்கள், கோடி கோடியாக உள்ளனர். அவர்கள்மீது நம்பிக்கை வைத்துத் தான் தம்பி! நாம் பணியாற்றி வருகிறோம். அவர்களின் கண்ணீரைத் துடைத்திட! அவர்கள் புன்னகை பூத்திட! புதுவாழ்வு பெற்றிட.

போலி சோஷியலிசம் பேசிடும் காங்கிரஸ் அந்த மக்களை வாட்டி எடுக்கிறது என்பதனை எடுத்துக்காட்ட அதிகம் கூறத் தேவையில்லை.

காங்கிரசாரும் மறுக்க முடியாத ஒரு புள்ளி விவரம் தருகிறேன். தம்பி! இது, நாலாவது ஐந்தாண்டுத் திட்ட விளக்கத்துக்காக காங்கிரஸ் சர்க்கார் வெளியிட்டுள்ள புள்ளி விவரம். நாட்டு மக்களை இந்த ஆட்சி எந்த இலட்சணத்தில் வைத்திருக்கிறது என்பதைக் காட்டிடுவது.

இன்று

430 இலட்சம் மக்கள் - நாள் ஒன்றுக்கு 30-பைசாவும்
430 இலட்சம் மக்கள் - 42 பைசாவும்
460 இலட்சம் மக்கள் - 51 பைசாவும்
430 இலட்சம் மக்கள் - 59 பைசாவும்

வருவாயாகப் பெறுகிறார்கள்!

எப்படி இருக்கும் இந்த எளியோரின் வேதனை என்பதனை விளக்கிடவா வேண்டும்!!

இந்த வேதனை நிலையை மூட்டிக்கொண்டு வருபவர்கள், சோஷியலிசம் வேறு பேசுவது, துகிலுரிந்த துச்சாதனன், துரௌபதிக்கு விலையுயர்ந்த பட்டாடை வாங்கித் தரப்போகிறேன் என்று கூறுவதற்கு ஒப்பானது அல்லவா?

ஏழைகளை வேதனையில் ஆழ்த்திவிட்டு, ஏழ்மை இந்த அளவு படருவதற்குக் காரணமாக உள்ள முதலாளித்தனத்துக்குத் துணை இருந்துகொண்டே, காங்கிரசாட்சி சோஷியலிசம் பேசுகிறது. நியாயமா?

இல்லை! இல்லை! இல்லை! என்ற முழக்கம் எங்கும் கேட்கிறது.

அந்த முழக்கம் மூட்டிவிடும் கலக்கம் காமராஜரைத் துரத்துகிறது, கிராமம் கிராமமாக! - மாலையிலே பொது மக்களை மயக்க - காலையிலே ஊழியர்களை உற்சாகப்படுத்த - இடையிலே வலைவீச - முதலாளிமார்களை உலுக்கிப் பணம் திரட்ட!!

அவருடைய பரபரப்புமிக்க நடவடிக்கையும், கொதிப்பு மிக்க பேச்சும், தம்பி! காங்கிரசாட்சிக்கு எதிராகத் திரண்டு எழுந்துள்ள எதிர்ப்பினை நன்கு எடுத்துக் காட்டுகிறது.

இதனை உணர்ந்திடின் தம்பி! நமக்கெல்லாம் புதிய உற்சாகமும், உறுதியும், பிறந்திடத்தானே செய்யும்.

அந்த வேகத்துடன் நமது தோழர்கள் தீவிரமாகப் பணியாற்றுகிறார்கள்.

தம்பி! ஒவ்வொரு நாளும் உன்னை நீயே கேட்டுக் கொள்ள வேண்டும். இன்று நாம் செய்தது என்ன? எந்த வகையில் கழகப் பணியாற்றினோம்? என்பதனை, ஏன் என்கிறோயோ தம்பி! காங்கிரஸ் எதேச்சாதிகாரத்தை வீழ்த்தும் புனிதப் பணிக்கு நான், உன்னைத்தான் நம்பிக் கொண்டிருக்கிறேன்.

உருட்டி மிரட்டிப் பேசிடுபவனல்ல நான் - நான் உன்னோடு இருப்பவன் - உயர ஏறிவிட்டவன் அல்ல.

என்னைத் தேடி இலட்சாதிபதிகள் வரமாட்டார்கள் - நான் உனக்காகப் பணியாற்றுபவன் என்பது அவர்களுக்குத் தெரியும்!

நமது மாளிகைக்கு விருந்துண்ண வருக! என்று என்னை எவரும் வேண்டிக் கேட்டுக்கொள்ள மாட்டார்கள். நான் பர்மிட் லைசென்சு கொடுப்பவனல்ல!

ஊர்க்கோடியிலே மணிக் கணக்கிலே காத்திருந்து எனக்கு மாலை அணிவிக்கச் சீமான்கள் நின்றுகொண்டிருக்க மாட்டார்கள்; நான் பதவியைத் தந்திட வல்லவன் அல்ல.

நான் இன்னின்னது பேசினேன் - இத்தனை முறை கை தட்டினார்கள் - இத்தனை மாலைகள் போட்டார்கள் - என்று இதழ்கள் வெளியிடாது - நான் அவர்கள் போற்றிப் புகழ்ந்திடும் இடத்திலே இல்லை.

நான், அவனுக்கு என்ன தெரியும், இவனுக்கு என்ன தெரியும், எவனுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்றெல்லாம் பேசிட முடியாது - என் இயல்வு இடந்தராது - அப்படிப் பேசினாலும் தாங்கிக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில், நான் தர்பாரில் இடம் பெற்றவன் அல்ல.

கூப்பிடு அவரை! கொண்டு வா இவரை! என்று நான் கட்டளை பிறப்பிக்க முடியாது - ஏனெனில், எவரும் மதித்தே ஆகவேண்டும் என்ற பகட்டான பதவிப் பீடத்திலே நான் இல்லை.

நான் இவைகள் கிடைக்கவில்லையே என்று ஏக்கப்படவு மில்லை; கிடைக்கும் என்று எதிர்பார்க்கவுமில்லை.

நான் எதிர்ப்பார்ப்பது ஒன்றுதான், உன் இதயத்தில் இடம்.

எனக்குக் கிடைத்திருப்பதும் ஒன்றுதான், உன் இதயத்தில் எனக்கோர் இடம்.

நான் விளக்கிக் காட்ட முடியும் - செய்கிறேன். வேண்டுகோள் விடமுடியும் - செய்கிறேன்.

உன் ஆதரவை, உழைப்பைக் கேட்க முடியும் - கேட்கிறேன்.

என்னால் முடிந்ததை நான் செய்கிறேன்; உன்னால் முடியக்கூடிய தனைத்தையும் தம்பி! நீ செய்திட வேண்டும்.

செய்திடின் தம்பி! மாலை போடவரும் கனவான், மாளிகையில் விருந்து வைக்கும் சீமான், கூப்பிட்ட குரலுக்கு ஒடிவரும் பூமான் ஆகியோரின் துணையில்லையே என்று எவரேனும் என்னிடம் கூறிடினும், எனக்கு ஏன் அந்தப் போலிச் சரக்கு, அதோ என் உடன் பிறந்தார்களின் உறுதியைப் பார்! உள்ளன்பைப் பார்! உற்சாகத்தைப் பார்! எந்த இன்னலையும் ஏற்றுக்கொள்ளும் துணையைப் பார்! தனக்கென எதனையும் தேடிடாத தூய்மையைப் பார்! அந்த உத்தமன் அளித்திடும் உழைப்பைப் பார்! அந்தச் சக்தியின் மீது பகட்டு உலகினர் திரட்டித் தரும் படைக்கலன் பாய்ந்திடின், படைக்கலன் நொறுங்கும் - அறிவேன் நான் - என்று கூறிடுவேன் - எழுச்சியுடன் - நம்பிக்கையுடன்.

உன்னைத்தான் நம்பியிருக்கிறேன், தம்பி உன்னைத்தான்.

அண்ணன்,

15-5-66