புயலின் கொடுமை -
மக்கள் துன்பம் -
கழகப் பணி.
தம்பி,
எந்தப் பிரச்சினையும், நினைவிற்கு
வரவில்லை; நெஞ்சமெலாம் துக்கம் துளைத்தெடுக்கிறது - திகைப்பு
தாக்குகிறது - வேதனைப்படு! வேதனைப்படு! வெற்றி ஒளியின்
கீறல்களைக் காண்கிறேன்! உள்ளத்தில் உறுதிகொண்டோரின்
அணிவகுப்பு காண்கிறேன்! விடிவெள்ளி காண்கிறேன்! என்றெல்லாம்
எக்களித்துக் கிடக்கும் ஏமாளியே! வேதனைப்படு! வேதனைப்படு!
ஒன்றா இரண்டா உனக்கு வந்துறும் துயரங்கள்! எதை எதைத் தாங்க
வேண்டும் என்பதறியாமல் ஏதோதோ பேசிக் கிடக்கிறாயே! பித்து
மனம் கொண்டோனே! இதோ பார் என் கண்ணெதிரே, வெறிநடமிடும்
அழிவினை! என்று கொக்கரிக்கிறது நிலைமை. கண்களைத் திறந்து
கிடப்பினும், மூடிக் கிடப்பினும், பேசாது கிடப்பினும்,
ஏதேனும் பேசிக் கொண்டிருப்பினும், தனிமையிலமர்ந்து தாங்கிக்கொள்ள
முயற்சித்தாலும், துக்கத்தைப் பகிர்ந்துகொள்ளப் பிறருடன்
பேச்சில் ஈடுபட்டாலும், பெற்றோரின் பேரன்பு, துணைவியின்
கொஞ்சுமொழி, குழந்தைகளின் மழலை, இசை, இன்ப நினைவுகள்,
எதைத் துணைக்கு அழைத்தாலும், எல்லாம் தோற்றோடுகின்றன,
துக்கம் எல்லாவற்றையும் துரத்தி அடிக்கிறது - இமை திறந்திருப்பினும்
மூடிக் கிடப்பினும், எதிரே தெரிவதெல்லாம் பேய் மழை, சூறைக்
காற்று, கடற்கொந்தளிப்பு, பிணக்குவியல், அழிவு, அழிவு!
எதையும் தாங்கும் இதயம்
வேண்டும் - தம்பி! ஆயிரம் முறை கூறுவேனல்லவா இதனை! தாங்கிக்கொள்ள
பழகிக்கொண்டுகூட இருக்கிறேன் - எனக்கென்று வரும் ஆபத்து,
துக்கம், இழிமொழி இன்னல், பழி இவைகளை. ஆனால், இது தம்பி!
என்னால் மட்டுமல்ல, எவராலும் தாங்கிக்கொள்ள முடியாத பேரிடி!
நூற்றுக்கணக்கான கிராமங்களே காணோமே! நகரங்கள் பலவும்
களத்தில் படுகாயமுற்றுக் கிடக்கும் வீரர்போல! ஆயிரம்
பேர் கொல்லப்பட்டுப் போயினராம்! ஐயகோ! எப்படி இதைத்
தாங்கிக் கொள்ள இயலும்? எதை எண்ணி இதயத்துக்குச் சாந்தி
தேடிக் கொள்ள முடியும்? யாரை நோவது? யாரைச் சுட்டிக்காட்டிச்
சாடுவது? தாமரை பூத்த தடாகமான தஞ்சையில், வெள்ளத்தில்
அழுகிய பிணங்களடா தம்பி! பிணங்கள்! பேசிவிட்டுப் படுத்திருப்பான்,
கொஞ்சிக் குலாவிவிட்டுப் படுத்தாள் பாவை, மார்புடன் அணைத்துக்
கொண்டாள் மதலையை வெண்ணெய் காய்ச்சின நெய் கலந்த சோறு
காணாவிடினும் அன்னையின் அன்பு கலந்த உணவினை உண்டு உறங்கினர்
சிறார் - அவர்களைச் சூழ, அவர்தம் உழைப்பினைப் பெற்று,
செந்நெற் பயிர் ஆடிக் கிடக்கிறது, ‘இளநீர்’ சுவையுடையதாக
இருக்கலாம், தென்னையே! நீயோ அதனைச் சுலபத்தில் மக்களுக்குத்
தர மனமின்றி உயரத்தில் வைத்துக் கொண்டு கிடக்கிறாய்,
நான் அவ்விதமல்ல, என் உள்ளம் இளகியது. இதோ பார், கனிகளைப்பெற
வருபவருக்குக் கஷ்டம் அதிகம் தரக்கூடாது என்று எந்த அளவில்
நிற்கிறேன்! - என்று கதலி தென்னைக்குக் கூறுகிறதோ என்று
எண்ணத்தக்க நிலையில்! நாளைக் காலையில் இதைச் செய்ய வேண்டும்,
இவ்விதம் செய்ய வேண்டும் என்று - பேசிவிட்டுப் படுத்தனர்,
உழைத்திடும் அந்த உத்தமர்கள். அந்தோ! அந்தோ! அவர்கள்
காலையில் கண்டது கதிரவனை அல்ல - அவர்களைக் காலைவரையில்கூட
விட்டு வைக்கவில்லை சாவு, பற்றி இழுத்துக்கொண்டு சென்று
சின்னா பின்னமாக்கிவிட்டது. கடலிலே கொந்தளிப்பு! பேய்க்
காற்று வீசுகிறது, பெருமரங்கள் சாய்கின்றன வேரறுந்து;
தோப்புகள் சிதறுகின்றன! - பெருமழை பெய்கிறது - இருள்
கப்பிக் கொள்கிறது - வயலெல்லாம் ஏரிகளாகி, ஏரிகளெல்லாம்
கடலாகி, வாய்க்கால்களெல்லாம் ஆறுகளாகி, ஆறுகளெல்லாம் அழிவு
தருவனவாகி, எங்கும் வெள்ளக் காடாகிறது! துக்கம் கலையுமுன்
பேரிடி மனதைப் பிளக்கிறது - உயிர் காத்துக்கொள்ள முயற்சிக்கு
முன்பு உருத்தெரியாதபடி வெள்ளம் மக்களைக் கொள்ளை கொள்கிறது.
தம்பி! நாசம் விளைவித்துள்ள அளவுமட்டுமல்ல, அதன் வேகம்
திடுக்கிட வைப்பதாக இருக்கிறது. எனவேதான், இத்தனை அளவு
உயிரிழப்புகள் - பொருட்சேதம் - அழிவு.
கடல்நீர் ஊருக்குள் படை
எடுத்தால், கதிகலங்கிப் போகாமல் என்ன செய்ய இயலும் -
எட்டடி பத்தடி உயரத்துக்கு எழும்பி, பேரிரைச்சலுடன் அலைகள்
ஊருக்குள்ளே படை எடுக்கும்போது, பீதி போதும் கோழைகளுக்கு,
நமது உடன் பிறந்தோர் வீரமாகப் போரிட்டுப் பார்த்திருக்கிறார்கள்
- ஒன்றைச் சமாளிப்பதற்குள் மற்றொன்று - என் செய்வர் -
கடல் அலைக்குத் தப்பிட, ஒதுக்கிடம் தேடிச் செல்லலாமென்றாலோ,
பாதைகள் அழிந்து பட்டுப் போய் எங்கும் வெள்ளம், பெரு
மழை தாக்கியவண்ணமிருக்கிறது, பேய்க் காற்று வீசியபடி!
இந்த நிலையில் வீசி எறியப்பட்டவர்கள், மூழ்கி மூச்சுத்
திணறிப் போனவர்கள், மோதி நசுக்குண்டவர்கள். அம்மவோ!
எண்ணும்போதே, செவிகளில் பேய்க் காற்றின் கூச்சலையும்
மீறிக்கொண்டு கிளம்பும், கதறல் கேட்கிறது அந்தோ! என்ன
எண்ணினரோ, எதை எதை எண்ணிக் கொண்டனரோ, விபரீதம் விளைவித்த
அந்த விநாடியின் போது குழந்தைகள், மந்தி கரம்பட்ட மலராகிவிட்டன!
சிறுமதி படைத்தோரிடம் சிக்கிய செல்வம்போல, தமிழகத்தின்
உண்மைச் செல்வங்களாம் நம் சிறார்கள், சின்னாபின்னமாகிவிட்டனர்.
பெரியவர்களோ! பேய்க் காற்றினால் முறிந்து போயினர். தஞ்சையும்
இராமநாதபுரமும், இந்த அழிவுக்கு இலக்காகி, நொந்து கிடக்கின்றன.
நமது நெஞ்சம் வெடித்திடும் நிலையில் இருக்கிறது. இதை எங்ஙனம்
தாங்கிக் கொள்ள முடியும்?
எரிமலை! நெருப்புக் குழம்பினைக்
கக்கும்-பொறி நூறு மைல்களுக்கு அப்பாலும் தெறிக்கும்
- தீயிலே நகரங்கள் கருகும், சூழ இருந்த சுந்திரபுரிகள்
யாவும் சுடுகாடுகளாகும்! - என்று இன்னுமோர் திங்களுக்குப்
பிறகு, எவரேனும், வெசுவியஸ் எரிமலை குறித்தோ, ஜப்பான்
நிலை பற்றியோ கூறினால்-ஆமாம்! அந்த அழிவு பயங்கரமானதுதான்
அத்தகைய ஆபத்திலே சிக்கிக் கொள்வதென்றால் கொடுமைதான்
என்று கூறிட முடியும் - மக்கள் சமுதாயம் இதுபோன்ற அழிவுகளை
ஓரோர் சமயம் சமாளித்துத்தான் தீரவேண்டி இருக்கிறது, என்ன
செய்வது; கடற் கொந்தளிப்புக்கும், கடும்புயலுக்கும்,
நில நடுக்கத்துக்கும், எரிமலைக்கும், ஆபத்து கக்கிடும்
எண்ணற்ற பல நிலைமை களுக்கும் இடையிலேயேதான் மனித சமுதாயம்
நிற்க வேண்டி இருக்கிறது என்று பேசிடக்கூட இயலும். ஆனால்
இன்று? மனம் வேலை செய்ய மறுக்கிறது! ஏடுகள் பலவற்றிலே
நாடுகள்சிலவற்றிலே நேரிட்ட அழிவுகள் பற்றிப் படித்த நினைவுகூட
நசித்துப் போகிறது - நெஞ்சம் வேதனை ஒன்றைத் தவிர வேறெதனையும்
ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
மூன்றாண்டுகளுக்கு முன்னர்
வீசியது புயலல்ல - சிறிதளவு வேகமாக வீசிய தென்றல் என்று
கூறத் தோன்றுகிறது இது போது நேரிட்டிருக்கும் ‘அவதி’யைக்
காணும்போது. தென்னையும் வாழையும் அழிந்தது அதிகம் அப்போது
- உயிர்ச்சேதம் அதிகமல்ல; இப்போது உயிர்ச்சேதம், கேட்போர்
உள்ளத்தை உடைத்திடும் அளவில் கிராமம் கிராமமாக அழிந்து
கிடக்கின்றன. பிணமலை! கால்நடைகள் அழுகிக்கிடக்கின்றன.
புதைக்கு முன்பு, இன்னின்னார் என்று அடையாளம் கண்டறியக்
கூட முடியாத நிலையில், உடலங்களழுகி விட்டனவாம். காலமெல்லாம்
உழைத்து உழைத்து, ஊரை வாழ வைத்து வந்த உத்தமர்களே, மிக
அதிகமான அளவில் நாசத்துக்குப் பலியாகி இருக்கிறார்கள்,
அவர்கள் தானே, பாபம், கடலோரத்தில் குடில்கள் அமைத்துக்கொண்டு
வதிகிறார்கள். செல்வம் படைத்தோர், கடலிடம், உள்ளத்துக்கு
உற்சாக மூட்டும் காற்றினையும் முத்துக்களையும் மட்டும்
பெற்றுக் கொண்டு பாதுகாப்பு அரண் அமைத்துக் கொண்டு வாழ
முடிகிறது - இந்த ஏழைகள் கடலிடமிருந்து பெறுவது அலைகளைத்
தானே! இப்போது, அவதியே அலை அலையாக "வந்துள்ளது. கடல்,
சாவினையே அலையாக்கி அவர்மீது ஏவி இருக்கிறது. காற்று சிறிதளவு
பலமாக வீசினாலே போதும், குடில்கள் கூளமாகிவிடும்! மழையின்
அளவு சிறிது அதிகமானாலே போதும், குடில்கள் மிதந்துகிடக்கும்
நிலை ஏற்பட்டுவிடும் இப்போது, நாட்டு வளத்தை அழித்திடவே
கடற்படையும் காற்றுப் படையும் மழைப் படையும் தாக்கினவே,
என் செய்வர், எளியோர் - பிணமாயினர் - அழுகிக் கிடக்கின்றன
உடலங்கள். சேரிகள் - பரதவர் குடில்கள் - பாட்டாளிகளின்
குடிசைகள் - உழவர் உழன்று கிடக்கும் குச்சுகள் - இவை யாவும்
நாசமாகிவிட்டன - அந்த உத்தமர்களிலே நூற்றுக்கணக்கானவர்கள்
மாண்டு போயினர் - மீதமிருப்போருக்கு வீடில்லை, வயலில்லை,
உயிர் இருக்கிறது. உள்ளத்தில் திகைப்பின்றி வேறெதுவுமில்லை
- ஆனால் தம்பி! நமது முதலமைச்சர், காமராஜர், அவர்கள் மத்தியில்
இருக்கிறார்! பொறுப்புணர்ந்த ஆட்சி முதல்வர், இருக்க
வேண்டிய இடம்! ஆம்! அங்கு பெரிய அதிகாரிகள் புடைசூழ இருக்கிறார்!
பெருநாசத்துக்கு ஆளான மக்களின் கண்ணீரைத் துடைத்திடும்
காரியத்தில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் என்பதை எண்ணும்
போது, கொந்தளித்தெழுந்த கொடுங் கடலே! குடும்பங்களை
அழித்த பேய்க் காற்றே! மக்களை அழிவிலே மூழ்கடித்த பெரு
மழையே! அழிவினை, இரக்கமின்றி எம்மீது ஏவினீர் - கர்வம்
கொள்ளற்க - பிணமலை கண்டு பெரு வெற்றி கொண்டு விட்டோம்
என்றெண்ணிப் பேயுள்ளம் கொள்ளற்க - அழிவு ஏவினீர் - இதோ
எமக்கு ஆறுதல் அளிக்க, எமது முதலமைச்சர் வந்துள்ளார்!
எமது கண்ணீரைக் காணுகிறார், தமது கண்ணீரைச் சிந்துகிறார்,
அழிவு சூழ் இடங்களில் ஆறுதலை அள்ளித் தருகிறார்! கோட்டையில்
அமர்ந்து கொண்டு, ‘உத்தரவுகள்’ போடும் முதலமைச்சர் அல்ல
இவர்! ஆண்டவன் கோபத்தாலே நேரிட்ட சோதனை என்று பேசிடும்
பூஜாரி அல்ல! நமது ஆட்சியின் போது இந்த அழிவு வந்துற்றதே
என்று உளம் பதைத்து, பறந்து வந்தார் எமக்கு வாழ்வளிக்க
என்று மக்கள் எண்ணி வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள்;
தம்பி! சொல்லத்தானே வேண்டும். முதலமைச்சர் காமராஜரின்
பொறுப்புணர்ச்சி கண்டு நாம் பெருமைப்படுகிறோம். அளவு
குறைவு - முறை குறையுடையது என்று நிபுணர்கள் பேசக்கூடும்,
நாலாறு மாதங்களுக்குப் பிறகு. ஆனால் முதலமைச்சரின் இதயம்
தூய்மையானது, ஏழை எளியோர்பால் அவர் இது சமயம் காட்டிய
அக்கறை தூய்மையானது என்பதை, எவரும், எந்நாளும் மறந்திடமாட்டார்கள்
- இயலாது.
வளம் கொஞ்சும் தஞ்சை, வாளை
துள்ளும் வாவிகளும், கெண்டை புரளும் ஆறுகளும், கமலம் முகம்
காட்டும் கழனிகளும், என்றெல்லாம் நாவலரும் பாவலரும் பன்னெடுங்
காலமாகவே பாட்டு மொழியால் பாராட்டியுள்ளனர். அங்கு இப்போது
பிணமலை.
பேயா மழை பேயுது, பெரிய
வெள்ளம் வருகுது! ஆனால் எல்லாம் வேற்றுச் சீமைகளில்; எங்கள்
தரணிக்கும் மழைக்கும் நீண்ட காலமாகவே பகை நெளிகிறது என்று
அவலச் சுவைப்படக் கூறுவர், இராமநாதபுரம் மாவட்டம் குறித்து.
அங்கு இப்போது, வெள்ளக்காடு! காமராஜர் காண்கிறார், கண்ணீர்
உதித்திடாமலிருக்க முடியுமா? உபநிஷதம் படித்து உள்ளத்தைப்
பாறையாக்கிக் கொண்டவர்கள் தவிர, மற்ற எவரும் மனம் உருகிடத்தான்
செய்வர் - நிலைமை கண்டு.
நமது அண்ணன் தம்பிகளின்
குடும்பங்கள் ஆலாய்ப் பறக்கின்றன - அழுகுரல்! பிணங்களைத்
தேடித் தேடி எடுக்கிறார்களாம்! உருவமே தெரியாதபடி அழுகிப்
போய்விட்டனவாம்! தினசரி வரும் செய்திகளைக் கேட்கத் திகைக்கிறோம்.
தாயை இழந்த தனயர்கள், பிள்ளைகளைப் பறி கொடுத்த பெற்றோர்,
ஜோடி ஜோடியாகப் பலர், தூங்கியோர் தூங்கிய நிலையில்,
ஒதுங்கி ஒண்டினோர் கூண்டோடு, குழந்தைகள், வாலிபர்கள்,
வயோதிகர்கள் - இவ்விதம் நூறு நூறாகச் செத்துக் கிடக்கிறார்களாம்,
தென்னஞ் சோலைக் குள்ளும், இடிந்து விழுந்த வீடுகளுக்கடியிலும்,
செய்திகளை அறிய, அறியத் திகைக்கிறோம். செய்வதென்ன வென்றறியாது
விழிக்கிறோம் - தென்னகம் இதுவரை இப்படியொரு கோரத்தைச்
சந்தித்ததில்லை. கடல் நீர், ஊருக்குள்ளே! பச்சை பசேலெனக்
காட்சி தரும் நன்செய் எல்லாம் வெள்ளக்காடு! வள்ளல் தருக்களாம்
தென்னந்தோப்பைக் கொண்டு வயிறு கழுவும் பட்டுக் கோட்டை
முத்துப்பேட்டைவாசிகள் பரிதவிக்கிறார்கள்! உப்பளம் வேதாரண்யம்
- ஒரு செய்தியையும் அங்கிருந்து தெளிவாகப் பெற முடியாத
நிலை. மதுரை, திருச்சி, இராமநாதபுரம் - ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும்,
நெஞ்சு வெடிக்கத்தக்க நிகழ்ச்சிகளைப் போய் பார்த்த மதுரை
மாவட்டச் செயலாளர், முத்துவும், திருச்சி மாவட்டச் செயலாளர்
தர்மலிங்கமும் எழுதுகிறார்கள். இளங்கோ தஞ்சை மாவட்டச்
செயலாளர், என்ன நிலையிலிருக்கிறார் என்றறியத் தபால் போக்குவரத்தே
இல்லை. மூன்றாண்டுகளுக்கு முன்பு இயற்கையின் நாச நர்த்தனத்துக்கு
ஆளாகி அவதிப்பட்டனர் - மக்கள். அதே மக்களுக்கு அதை விடப்
பெரிய பேரிடி! கட்டுமரம் கட்டிச் சென்று கடலை அளந்து,
மீன் பிடிக்கும் தொழிலாளர்கள் எத்தனை பேர் எங்கே போனார்கள்
என்றும் திகைப்பாயிருக் கிறதாம்! அவர்தம் கலங்கள் உடைந்து,
ஊருக்குள் வந்து கிடக்கும் படங்களைப் பார்க்கும்போது,
வயிறு எரிகிறது! வளைந்து கிடக்கும் மின்சாரக் கம்பங்கள்
- தூள் தூளாகிப் போன நெல் ஆலைகள் - பள்ளிக்கூடங்கள் -
ஏழை ஆதிதிராவிடச் சேரிகள் - ஐயோ, நாசம்! நாசம்! படுநாசம்!
துயர் துடைக்க ஓடிய முதலமைச்சரையும்,
அதிகாரி களையும், பொதுமக்கள் தொண்டர்களையும் பாராட்டுகிறோம்,
தத்தமது கடமையைச் சரியான சமயத்தில், தவறாமல் செய்தார்களே
எனும் மகிழ்ச்சியால். இந்த உதவிகளும் இல்லாது போனால்,
என்னாகியிருப்பரோ நம்மவர்கள் என்றெண்ணும் போது, பெருமூச்சு
விடுகிறோம். அந்தக் கோரத்தை எண்ணவே முடியவில்லை.
ஏற்பட்டிருக்கிற நாசம்
சாதாரணமானதல்ல - எங்கோ ஓரிடத்தில் தோழர் காமராஜரைக்
கேட்டதற்கு, “இறந்து போனவர்களைப் பற்றி, எதுவும் செய்ய
முடியாது சர்க்காரால். உயிரோடிருப்பவர்களுக்கு என்னென்ன
செய்ய வேண்டுமோ அத்தனையையும் செய்து தரும்” என்று சொன்னாராம்.
உண்மைதான்! இயற்கையின் பல்லுக்கு இரையான நமது மக்களின்
வாழ்வை, இனி எப்படிப் பெற முடியும் எம்மால்? அவர்களுக்காக,
வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, அவதியுறுவோரின்
அச்சத்தையும் துக்கத்தையும் ஆற்ற நம்மாலான முயற்சிகளை
எடுக்க வேண்டும்! ஏற்பட்டிருக்கிற நஷ்டத்தை எண்ணிடிலோ,
உதவி, பெயரளவில் இருந்தால் போதாது - ஒருவர் இருவர் வழங்கிவிட்டாலும்
போதாது - சர்க்கார் பெருத்த அளவில், பல கோடி ரூபாய்களை,
ஒதுக்க நேரும் என்றே கருதுகிறோம். இடிந்து போன கட்டிடங்கள்,
அதோ நிற்கின்றன. அதற்கருகில், அழுதவாறு கிடக்கிறார்கள்,
வீட்டின் சொந்தக்காரர்கள். விவசாயி, அழுகிறார் - இடுப்பொடியப்
பாடு பட்டேன் - கதிர் முளைத்த காலையில், என் கழனி வெள்ளக்
காடாகிவிட்டதே ஐயா, எப்படி காலந்தள்ளப் போகிறேன் - ‘கிஸ்தி’
எப்படிக் கட்டப்போகிறேன் என்று - தென்னஞ் சோலையையும்,
வாழைத் தோட்டங்களையும் நம்பி வாழ்ந்தோர் அதோ மடமடவெனச்
சாய்ந்துவிட்டதே எமது வாழ்க்கை. ஐயகோ என்று நிற்கிறார்கள்.
இவர்களனை வருக்கும் உதவியளிப்பது என்றால், சாதாரணமான காரியமல்ல.
பல குடும்பங்களிலே புதிதாக விளக்கு ஏற்றி வைக்க வேண்டிய
பொறுப்பு அரசுக்கு ஏற்பட்டுவிட்டது அவ்வளவு பெரிய நாசம்.
மூன்றாண்டுகளுக்கு முன்பு
ஏற்பட்ட அவதி கண்டு உளம் பதைத்த நாம், நமக்கு நாட்டிலே
உள்ள வாய்ப்புக்கு ஏற்ற முறையில் ஓரளவு பணியாற்றி ஏறத்தாழ
முப்பதாயிரம் திரட்டி ஏழை எளியவர்களுக்கு ஆடைகள் வாங்கி,
சர்க்கார் மூலமாகவே அனுப்பி வைத்தோம். இதுபோது, அவதியுறும்
மக்களுக்கு வாழ்வளித்திடவும், அழிவு தந்த புண்களை ஆற்றிடவும்,
விபத்தால் ஏற்பட்டுள்ள வடுக்களைப் போக்கிடவும், பலமும்
மக்கள்பால் பரிவும்கொண்ட சர்க்காரன்றி வேறு, எந்த தனிப்
பட்ட அமைப்பினாலும் இயலாது என்று திகைக்க வேண்டி இருக்கிறது.
கலத்தைச் சுக்கு நூறாக்கத்தக்க சூறையும் சுழலும் வீசும்
போது, கலத்தைக் காத்திடக் கட்டுமரம் ஏறிச்சென்று என்
செய்வது? பெருந் தீ பற்றிக் கொண்ட நிலையில் பிடிமண் தூவியா
அணைத்திட முடியும்? நிச்சயமாகப் பல கோடி ரூபாய்களைச்
செலவிட்டாக வேண்டும் - உடனடி உதவி அளிக்கும் திட்டங்கள்அளிப்போரின்
உள்ளங்களுக்கு மகிழ்வளிக்கும். அவதிக் காளானோருக்கு வாழ்வளிக்கவோ,
நீண்ட கால திட்டங்கள் தேவை. பணம் சர்க்காரின் பெட்டியிலிருந்து
செலவிட வேண்டும் என்று கூறிவிட்டு பொறுப்பைத் தட்டிக்
கழித்துவிடப் பேசுவதல்ல இது - சர்க்காருக்கு நாட்டில்
உள்ள எல்லாப் பெட்டிகளும் சொந்தம் - முறைப்படியும் உறவுகொண்டும்,
அவைதமைத் திறந்து, பணத்தை அள்ளி எடுத்துச் சர்க்கார் செலவிட
முன் வரவேண்டும்.
“அடே! அடே! என்ன அக்ரமம்
செய்கிறாய்?” என்றான் குறும்பன், நண்பன் திடுக்கிட்டுப்
போனான், காரணம் அவன் ஒரு அக்ரமமும் செய்யவில்லை. அங்கமெலாம்
தொழு நோயால் தாக்குண்டு கிடந்த ஒரு பிணியாளனுக்கு ஒரு
அணா கொடுத்தான் - அதை அக்ரமம் என்று கண்டித்த குறும்பன்,
அரை மணி நேரத்துக்கு முன்புதான் தன் குழந்தைக்கு ஒரு ஆடும்
குதிரைப் பொம்மை வாங்க, ஐந்து ரூபாய் பெற்றான் - நன்கொடையாக.
“அக்ரமம் என்ன செய்தேன்....”
என்று திகைத்துக் கேட்டான் நண்பன். குறும்பன் ‘‘அக்ரமமல்லவா
இது? அக்ரமம் மட்டுமல்ல, ஆண்டவனுக்கு விரோதமான காரியமுமாகும்.
குஷ்டரோகிக்குப் பணம் தந்தாயே, தரலாமா? இந்தப் பாவி பூர்வஜென்மத்திலே
செய்த கொடுவினைக்காகத்தானே, பகவான் இவனுக்கு இக்கொடு
நோயை ஏவித் தண்டிக்கிறார். நீ இவனுக்குப் பணம் அளித்து,
அவன் படும் கஷ்டத்தைக் குறைத்திடுவது, ஆண்டவனுக்கு எதிராகச்
செய்யும் காரியமாகாதா! தர்மப் பிரபு என்று பெயர் எடுக்க
வேண்டும் என்ற சூதான எண்ணம் உனக்கு!” என்று குறும்பன்
குத்தினான். நண்பன், பதிலேதும் பேசவில்லை - சிரித்தான்
- இத்தகைய சிறுமதியாளனையும் நண்பனாகக் கொள்ள நேரிடுகிறதே
என்று.
இக் கதை போல, வெள்ள நிவாரணம்,
புயல் நிவாரணம் என்ற சாக்கு கூறிக்கொண்டு அரசியல் கட்சிகள்
வெளிச்சம் போடும் - அது கூடாது - ஆமாம்! கூடவே கூடாது
- என்று கூவிடும் குறுகிய மதிபடைத்தோர்கூட இருக்கிறார்கள்.
எது இல்லை நாட்டில்! மலர்த் தோட்டத்திலேயே ஒரு முலையில்
மலம் இருக்கிறதல்லவா! பழத் தோட்டத்திலே ஒரு பொந்தில்
பாம்பு இருக்கிறதல்லவா! அது போல தன்னாலும் முடிவதில்லை,
பிறர் செய்தாலும் பார்த்துச் சகித்துக்கொள்ள மனம் இடம்
தருவதில்லை. ‘‘இவ்வளவும் மலமாகத்தானே போகிறது” என்று
விருந்து சாப்பிடுவோரிடம் கேட்டானாம், விரட்டி அடிக்கப்
பட்டவன்; அதுபோல் இது ஒரு ரகம் - கிடக்கட்டும். இத்தகைய
மந்தமதிக்காரர்களின் மண்டையிலடிப்பது போலப் பெரியார்
புயல் நிவாரணத்துக்கு ஓராயிரம் ரூபாய் நன்கொடை அளித்திருக்கிறார்.
கெடுமதி எனும் புழு நெளியும் உள்ளத் தினருக்கு தக்கதோர்
புத்திமதி புகட்டிடவே பெரியார் இந்த அன்புக் காணிக்கை
தந்தார் என்பது மட்டுமல்ல, வந்துற்ற அவதி எவ்வளவு பயங்கரமானது
என்பதை அனைவரும் அறியச் செய்ய வேண்டும் என்ற பெரு நோக்கும்
இதற்குக் காரணம் என்று கூற வேண்டும். தம்பி! நமது கழகத்தின்
சார்பில் ஓராயிரம் தரப்பட்டிருப்பது பற்றிப் பத்திரிகைகளில்
பார்த்திருப்பாய். சென்னையில் நமது பொதுச்செயலாளருடன்
நானும், அறிவகத்தின் தொடர்பினை அடிக்கடி கொள்ளும் கழகத்
தோழர்கள் சிலரும் பேசினோம் - அவர் பட்டுக்கோட்டை தெரியுமல்லவா
- கண் கலங்கிய நிலையில் இருந்தார். கடலில் கடுகு, இந்த
ஆயிரம். செய்யவேண்டியது இனி தொடர்ந்து; இது உதவி செய்யும்
சீலர்களுடன் நாமும் சேருகிறோம் என்பதை எடுத்துக் காட்டும்
சிறு அறிகுறி.
தம்பி! முன்பு நாம் நாடகமாடியும்
நல்லோரிடமும் கரம் நீட்டியும் நிதி திரட்டினோம் - அப்போது
இக்காரியத்தில் ஈடுபட மற்றவர்கள் துடித்தெழுந்து கிளம்பாததால்,
இம்முறை நாட்டிலுள்ள நல்லோர் எல்லோருமே, நான், நீ என்று
போட்டியிட்டுக் கொண்டு உதவி திரட்டிட முனைந்திடுகிறார்கள்
- மகிழ்கிறேன் - மகிழ்வாய். நாம் அந்த முயற்சியில் நமது
பங்கினைச் செலுத்த உடனே முற்பட வேண்டும்.
காங்கிரஸ்காரர்கள், கம்யூனிஸ்டுகள்,
கழகத்தார்கள், என்று ‘அளவு கோல்’ போட்டு அளக்க வேண்டிய
விஷயமல்ல இது! வீடு தீப்பற்றிக்கொண்டு எரியும்போது பேரம்
பேசுபவன் வீணன். எனவே, துயர் துடைக்கும் எந்த முயற்சியில்
யார் நம்முடைய ஒத்துழைப்பைக் கேட்டாலும் தரத் தயாராயிருக்கிறோம்
- நம்மாலான உதவிகளைச் செய்யவும் சித்தமாயிருக்கிறோம்.
ஏனெனில், நிகழ்ந்திருக்கிற நாசம் சாதாரணமானதல்ல, அவதிப்படும்
மக்கள் தொகையும் கொஞ்ச நஞ்சமல்ல. எனவே, அதன் துயர்களையும்
பொறுப்பில், அரசுக்கு வேண்டிய உதவி ஒத்தாசைகளை யாவரும்
செய்ய வேண்டும்.
அதே சமயத்தில் அரசினரும்,
பணத்தைப் பணம் என்று பார்க்காமல் இயற்கையின் கோரத்தாண்டவத்துக்குப்
பலியானோர் அனைவரின் வாழ்க்கையிலும் விளக்கேற்றி வைக்கும்
பெருமுயற்சியிலீடுபட வேண்டும். ஆபத்துக்கு ஆளாகி அல்லற்படுபவர்கள்,
நமது உடன் பிறந்தோர்கள், இதில் கட்சி பேதம் கலக்கக் காரணமில்லை
- கருணையுள்ளம் கொண்ட அனைவரும் ஈடுபட்டு, வழியும் கண்ணீரைத்
துடைக்க முயல வேண்டும் - அதுதான், திண்டாடும் நமது சகோதரர்களுக்கு
நாம் காட்டக்கூடிய அன்பும் - அனுதாபமும்.
கூட கோபுரங்கள்
மாட மாளிகைகள்
வணிகக் கோட்டங்கள்
சினிமாக் கொட்டகைகள்
நடுத்தர மக்கள் இல்லங்கள்
அலுவலகங்கள்
இங்கெல்லாம், ‘ஒரு நாளைய
வருமானம் இந்த நிவாரணத்துக்கு என்று ஒதுக்கி, திரட்டி,
சர்க்காரிடம் தரும் முயற்சியில் ஆட்சியாளர்களாகியுள்ள
கட்சியினரே! பல்வேறு கட்சித் தோழர்களே! பணிபுரிய வாரீர்
என்று அழைக்கிறோம்.
அமைச்சர்களே! எல்லா இடங்களிலும்
என்று இல்லா விடினும், சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகர்களில்
வீதிகளிலே செல்லுங்கள்! மக்கள் வேண்டிய மட்டும் பணமும்
பண்டமும் அளிப்பர். கடை வீதிகளிலே வாருங்கள்! ஆடைகளைக்
குவிப்போம், அமைச்சர்கள் மட்டுமல்ல, அருளாளர் ஆதீனகர்த்தர்கள்,
எவரும் இப்பணிக்கு முன் வருதல் வேண்டும் - அனைவரும் மனிதரன்றோ!
கலை உலகத் தோழர்களே! உமது
பணி, இச்சமயம் மிக்க பலனளிக்கும். நிதி திரட்டவும், ஆடைகள்
பெறவும், அங்காடிகளிலும் பெருஞ்சாலைகளிலும் அணிவகுத்துச்
செல்லுங்கள். பெருநோக்கும் கருணை வழியும் உள்ளமும் கொண்டவர்கள்
கலை உலகில் ஏராளமாக உள்ளனர்; எனவே, அவர் தம் முயற்சிக்குப்
பலன் நிச்சயம் கிடைக்கும்.
அனைவரும் பணியாற்றித் தீரவேண்டிய
கட்டம்.
இன்றே துவக்குக! என்று வேண்டுகிறோம்.
தி.மு.க. தோழர்களிடமிருந்து எத்தகைய ஒத்துழைப்பு கேட்பினும்,
கிடைக்கும் என்று உறுதியளிக்கிறோம்.
தேம்பித் திகைத்துக் கிடக்கும்
தோழர்களே! உடன் பிறந்தோரே! இதோ உதவி, இதோ, இதோ என்று
கூறிப் புறப்படுக; பணிபுரிக.
ஆமாம், அண்ணா! எல்லாம் சரி,
டில்லி என்ன செய்கிறது, என்று கேட்கிறாய், தெரிகிறது,
தம்பி! அதுபற்றி இப்போது எண்ணிக்கிடப்பது வேண்டாம். ஏதேனும்
செய்யும். இப்போது என் கண்ணுக்கு டில்லி தெரியவில்லை
- வெள்ளம், பிணமலை தெரிகிறது - நீயும் நானும் இருக்கிறோம்.
நம்மாலானதைச் செய்வோம், உடனே புறப்படு! ஒரு பிடி அரிசி
தாயே! ஒரு பிடி அரிசி, என்று கேள். கேள், கொடுக்கப்படும்.
ஆடை கேள், அளிப்பர் - பழைய ஆடையேனும். கோபுர வாயில்களிலேயும்
கேட்டுப் பெறலாம். நீ வேண்டாம் தம்பி, குன்றக்குடியாரின்
குறுநகையில் பெருமதி கண்டோரெல்லாம். உடனே, தோழர்களுடன்
கலந்துபேசி - அமைப்பு ஏற்படுத்து - அன்பு உள்ளம் கொண்டோர்களிடம்
சென்று முறையிடு - பலன் நிச்சயம் கிடைக்கும் - பாதிப்
பிணமாகக் கிடக்கும் பரிதாபத்துக் குரியவர்களைக் காப்பாற்றிடும்
தூய பணியில் பங்குபெற எவரும் முன் வருவர் - எவரும். நான்
என்ன செய்ய வேண்டும் என்பதையும் எனக்குக் கூறு. நாம் என்ன
செய்ய வேண்டும் என்பதைப் பொதுச் செயலாளருக்குக் கூறு.
முறைகூட அல்ல தம்பி, இப்போது முக்கியம், உடனடியாகப் பணியாற்றித்
தீர வேண்டியதுதான் முக்கியமானது, உன்னால் முடியும்.
அன்புள்ள,

11-12-1955