அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


வானுலக வீதியிலே. . .

மக்களிடம் ஒரு மனமாற்றம்!
அறிவுப் பிரச்சாரம் தேவை!
இரண்டும் கெட்டான்கள் எள்ளி நகையாடப்படுவர்!
பழங்கதைகள் குழந்தைப் பிதற்றல்கள்!

தம்பி,

அன்று இரவு, இன்று எப்படியும் விடியற்காலை எழுந்தி ருந்து "வால் நட்சத்திரத்தை'ப் பார்த்தாக வேண்டும் என்ற எண்ணத்தை அணைத்தபடியேதான் படுக்கச் சென்றேன்; மணி நாலு என்று கருதுகிறேன், எழுந்திருந்து பார்த்தேன்; என்னைப் போலவே வேறு பலரும் வால் நட்சத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கக் கண்டேன், பெரிதும் வியப்புற்றேன்; வால் நட்சத்திரத்தைக் கண்டு அல்ல; அதனைப் பார்த்த மக்கள், பதறாமல் பயம் கொள்ளாமல், கைபிசைந்து கொள்ளாமல், கண்களில் மிரட்சியின்றி வால் நட்சத்திரத்தைப் பார்த்துவிட்டு, பிறகு அவரவர்கள் தத்தமது அலுவலைக் கவனிக்கச் சென்றது கண்டு!

ஐயோ! வால் நட்சத்திரம்! என்ன நேரிடப் போகிறதோ! யாருக்கு என்ன பேராபத்தோ!! - என்றெல்லாம் அலறவில்லை! ஆச்சரியமாக இருந்தது, மக்களிடம் நான் கண்ட அந்த மன மாறுதல். நான் இதைக் கூறுவது கேட்க தம்பி! உனக்கு வியப்பாக இருக்கிறது. வால் நட்சத்திரத்தைக் கண்டு மக்கள் பதறாதது பற்றி அண்ணன் ஆச்சரியப்படுகிறானே, பதறுவதற்கு இதிலே என்ன இருக்கிறது; விண்வெளியின் விந்தைகளிலே ஒன்று இது; இது குறித்து மக்கள் ஏன் பீதிகொள்ளப் போகிறார்கள் என்று கேட்டுத் துடிப்பாய். நான் பார்த்த மக்களை, நீ பார்க்கவில்லையே தம்பி! முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, வால் நட்சத்திரம் முளைக்கப் போகிறதாம் என்ற பேச்சு எழும்பியதும் பீதி கொண்டவர்கள், பதறியவர்கள் பலப்பலர்; நான் பார்த்திருக்கிறேன். அதனால் தான் இன்று சமூகத்திலே பூத்திருக்கும் மாறுதலைக் கண்டு நான் வியப்படைகிறேன்.

வால் நட்சத்திரம்!

பல நாட்களாக வால் நட்சத்திரம் முளைத்து, மக்கள் கண்டு வருகின்றனர். பலர் பார்த்தனர்; பலர் பார்க்கவில்லை. பார்த்தவர் களும் சரி, பார்த்தவர் கூறக்கேட்டவர்களும் சரி, அதிகமான அளவு பரபரப்பு அடையவும் இல்லை. பயப்பட்டு விடவுமில்லை.

"வால் நட்சத்திரம் தெரிகிறதாமே! நீ பார்த்தாயா?'' - என்று ஒருவருக்கொருவர் சர்வ சாதாரணமாகப் பேசிக் கொள்வதுடன் இருந்தார்களே தவிர, "ஐயோ வால் நட்சத்திரமாமே' என்று கிலி கொண்டு கூவவில்லை.

வால் நட்சத்திரம் முளைத்துவிட்டது! மகாஜனங்களே! பக்த சிகாமணிகளே! உலகுக்குப் பெரிய கேடு நேரிட இருக்கிறது. ஆகவே, ஆண்டவனின் கிருபா கடாட்சம் கிடைக்க வேண்டுமென்று உடனே அபிஷேகம் செய் யுங்கள்! ஆராதனை செய்யுங்கள்! தானம் கொடுங்கள்!!

- என்று குருமார்கள் கூறக்கூட இல்லை. மாறாக, கொடைக் கானல் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அறிக்கை வெளிவருகிறது, வால் நட்சத்திரம் இன்ன திக்கு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது; அதைக் கவனித்து வருகிறோம், படம் எடுத்திருக்கிறோம் என்று!

படம் எடுத்திருக்கிறார்கள், வால் நட்சத்திரத்தை! நம் நாட்டில்!!

எவ்வளவு திடுக்கிடக் கூடிய மாறுதல்!

சூரிய, சந்திர நட்சத்திராதிகளைப் பற்றி இங்கு இருந்து வரும் கதைகள், கற்பனைகள் யாவும் கவைக்கு உதவாதன என்பது நடைமுறை உண்மையாகிவிட்டது - அந்தக் கதைகளுடன் சம்பந்தப்படுத்தப்பட்ட சடங்குகள் சத்தற்றவை என்பது உணரப்பட்டு, ஊராள்வோரால் நிர்வகிக்கப்படும் கொடைக் கானல் ஆராய்ச்சி நிலையத்தார் வால் நட்சத்திரத்தைப் படம் எடுத்திருக்கிறார்கள்!

விண்ணையும், மண்ணையும், காற்றையும் கடலையும், நீரையும் நெருப்பையும் தேவர்களாக்கி - ஒவ்வொரு தேவர் க்கும் தேவியர்க்கும் திருவிளையாடற் காதைகள் கற்பனை செய்து, கவிதைகளாக்கி, ஞானக்கண்ணினரும், இனிமை பண்ணினரும் தர, அவைகளையே அழிக்க முடியாத உண்மைகள்! மாற்ற முடியாத தீர்ப்புகள்!! - என்று நம்பிக் கொண்டிருக்கும் மக்களுக்கு, வால் நட்சத்திரத்தைப் படம் கூடப் பிடித்திருக்கிறார்கள் என்பது எப்படிப்பட்ட மகத்தான செய்தி!

வால் நட்சத்திரத்தைப் படம் பிடிக்க முடியும் என்று ஒரு இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சொன்னால் நம்புவதற்கு இந்த நாட்டில் ஆள் கிடையாது. வால் இல்லாத நட்சத்திரங் களைக் கூட ஆராய முடியும் என்று கூறினால், கேட்பவன் கேலி பேசுகிறாயா? என்று கேட்டிருப்பான்! முப்பது ஆண்டுகளுக்கு முன்பு!!

நமது பாட்டனார் காலத்திலே, இன்றைய அடிப்படை உண்மையை நம்ப, ஆள்கிடையாது - பூமி சூரியனைச் சுற்றுகிறது என்று சொன்னால், பாட்டனார் பல்லிழந்த வாயைத் திறந்து, பயலே! என்னிடமா விளையாடுகிறாய்? என்றுதான் கேட்டிருப்பார்!

அப்படிப்பட்ட நாட்டில், ஒரு தலைமுறையில் மற்ற நாடுகளிலே பத்துத் தலைமுறைகளேனும் பாடுபட்டுக் கண்டுபிடித்த உண்மைகள், சர்வ சாதாரணமானவைகளாக ஆகிவிட்டன!

நமது தலைமுறை அந்த விஷயத்திலே மிகமிக வாய்ப்புப் பெற்றது என்று கூறலாம்!

நமது பாட்டனாருக்கு, "சூரியன் சுற்றுவது'' தான் உண்மை! நமது தகப்பனாருக்குச் சுற்றுவது சூரியனா, பூமியா என்ற சந்தேகம்! நமக்கு, சூரியன் சுற்றுவதாகக் கூறும் அறிவுச் சூன்யர்களும் இருக்கிறார்களே என்ற கேலி! நமது மகனோ, அவன் மகனோ சந்திரமண்டலம் போய் வரும் நிலை பெறக் கூடும்!! மாறுதல், அவ்வளவு மகத்தான வேகத்திலும் முறையிலும் ஏற்பட்ட வண்ணமிருக்கிறது.

வால் நட்சத்திரம் முளைக்கிறது என்று கேள்விப்பட்ட வுடனே, இங்கு மட்டுமல்ல, உலகில் எல்லா நாடுகளிலுமே கிலி பிடித்தாட்டிய காலம் இருந்தது - எப்போதோ ஒரு நாள் அல்ல - 1910லில் கூட வால் நட்சத்திரத்தைக் கண்டு ஐரோப்பிய நாடுகளிலேயே, அடக்க முடியாத அச்சம்! இன்று, எப்படியோ அந்த அச்சம் அடங்கி விட்டது.

வால் நட்சத்திரத்தின் அமைப்பு, இயல்பு அது மேற்கொண் டுள்ள பயணம், செல்லும் பாதை ஆகிய இவ்வளவும் ஞானக் கண்ணினர் அல்ல, விஞ்ஞானக் கண்ணினர் கண்டு பிடித்தது.

இப்போதும் இங்கே வால் நட்சத்திரத்தின் போக்கை, நமக்குக் கூறினவர் சங்கராச்சாரியாருமல்ல, தம்பிரானுமல்ல; அவர்களின் திருப்பாதந் தாங்கிகளுமல்ல; ஆராய்ச்சியாளர்கள்! வால் நட்சத்திரத்தைப் படம் பிடித்துக் காட்டினவரும், விபூதி மகாத்மியத்தாலோ, துளசி மகிமையாலோ, அம்பிகை உபவாசத்தாலோ, அனுமத் பிரபாவத்தாலோ அல்ல, நமது மார்க்கத்தவரல்லாத, நமது நாட்டவருமல்லாத விஞ்ஞானிகள், கருத்துத் தெளிவாலும், ஆராய்ச்சித் திறத்தாலும் அமைந்துள்ள கருவியின் துணை கொண்டு, கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சியாளர் படம் பிடித்தனர்.

படம் பிடித்து விட்டார்களோ, படம்! என்ன பலனாம்? என்று கேட்கத் தோன்றும் பஜனைப் பிரமுகர்களுக்கு!

பயத்தைப் போக்க - அது பற்றிக் கட்டி விடப்பட்ட கட்டுக் கதைகளைப் போக்க - அதன் மூலம் அறிவு வளர்ச்சிக்கு வழி செய்ய உதவுகிறது இந்த ஆராய்ச்சி!

வைகுந்த, கைலாயப் படப்பிடிப்பாளர்களுக்கு, வால் நட்சத்திரப் படப்பிடிப்பாளர்கள் பற்றிக் கேள்விப்படும்போது கோபமாகத்தான் இருக்கும்! ஏனெனில்,

விஞ்ஞானக் கண்ணினரின் ஆக்கம் வளர வளர, ஞானக் கண்ணால் எதை எதையோ கண்டதாகக் கதைபேசிக் காலந் தள்ளும் கபந்தங்களுக்குப் பிழைப்புக் கெட்டுவிடும்!

சந்திரனைப் படம் பிடிக்கிறார்கள்; சூரியனில் உள்ள புள்ளிகளைப் படம் பிடிக்கிறார்கள்; மழையை வரவழைக் கிறார்கள் என்றெல்லாம் கேள்விப்படக் கேள்விப்பட, எவ்வளவு காட்டானாக இருந்தாலும், அறிவிலே சிறு சிறு அளவு சுறுசுறுப்பு ஏற்படாமலா போகும்?

ஒரு புறத்திலே பூமாதேவி பற்றியும், வான வீதியிலே நாரதர் பாடிக் கொண்டு போவது பற்றியும், சந்திரனைப் பாம்பு விழுங்குவது பற்றியும், இந்திரன் ஆயிரம் கண் பெற்றது பற்றியும்; சித்திரகுப்தன் கணக்கு எழுதியபடி இருப்பது பற்றியும், சக்தியும் சிவனும் நடனம் ஆடுவது பற்றியும், இன்னும் இது போன்ற கற்பனைகளை, ஏடுகள் மூலம், பாட்டுகள் மூலம், கூத்துகள் மூலம், குருக்களின் கூச்சலின் மூலம், பாமர மக்கள் பெற்றுக் கொண்டே உள்ளனர், - நம்பும்படி நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

அதேபோது, வேறோர் புறத்தில் சந்திர மண்டல ஆராய்ச்சி, சூரியபுள்ளி பற்றிய விளக்கம், வால் நட்சத்திரப் படப் பிடிப்பு, வானிலை பற்றிய வேறு பல ஆராய்ச்சிகள் ஆகியவற்றையும் செய்தவண்ணம் உள்ளனர்.

இந்த இரு சக்திகளுக்கும் இடையே, பாமர மக்களைத் தள்ளிப் படாதபாடு படுத்தி வைக்கிற நிலையின்றி விஞ்ஞான உண்மைகளைக் கிராமவாசியும் உணரும் அளவுக்கு அறிவுப் பிரச்சாரம் நடைபெற்றால் மிக மிக விரைவில் மக்களின் மனம் வளமாகும்.

புதுமையைப் போரிட்டுத் தடுக்க, விஞ்ஞானத்தை வேண்டாமென்று விரட்டவும் துணிவு இல்லை; விஞ்ஞானத் தால் பொய்யாக்கப்படும் பழமையை விட்டுவிடவும் துணிவு இல்லை, திறந்த வாயினராகின்றனர், விஞ்ஞானத்தின் விசேஷத் தைக் காணும்போது! ஆச்சரியத்தால் நீண்ட வாயினராகின்றனர், பழைமையைப் பற்றிப் பேசும்போது! மாதவியையும், கண்ணகியையும் ஒரு மனையில் வைத்துப் பரிபாலிக்கும் புதிய கோவலன்களாக இருப்பதிலே இவர்களுக்குப் பெருமகிழ்ச்சி!

புலி மீதேறி எலி வேட்டைக்கப் போவதுபோல, விமானம் ஏறிக் கொண்டு, விட்டல பஜனைக்குப் போகும் விசித்திர வான்கள் போல, இவர்கள் கொடைக்கானலில் உள்ள ஆராய்ச்சி யாளர்களையும் கேட்கிறார்கள், வால் நட்சத்திரம் பற்றிய தகவல்களைச் சேகரித்து அனுப்பு என்று; அதேபோது வரலெட்சுமி விரத மகிமை பற்றி வானொலி மூலமும் பேசுவர்.

சிலருக்கு உண்மையிலேயே சந்தேகம் - திகைப்பு - குழப்பம். "விஞ்ஞானி சொல்வதும் சரியாகத்தானிருக்கிறது; நமது பூர்வீக ஞானத்தையோ அடியோடு விட்டு விடவும் பயமாக இருக்கிறது'' என்ற குழப்பம் குடைகிறது - குடையும்போது, சுயநலம் குறுக்கிடுகிறது. அதன் வயப்பட்டதும், "நமக்கென்ன, இரு சாராருக்கும் நல்ல பிள்ளையாகி விடுவோம் - பகை எங்கிருந்தும் கிளம்ப வேண்டாம் - விஞ்ஞானி தருகிற டெலஸ்கோப்பையும் வாங்கிக் கொள்வோம்! சனாதனி தருகிற துளசி மாலையையும் போட்டுக் கொள்வோம்'' - என்று எண்ணுகிறார்கள்.

நாளாவட்டத்தில் இரு சாராரும் இவரைச் சந்தேகிக்கத் தொடங்குவர் என்பதையோ, இருசாராரும் இவருடைய இதய சுத்தியிலே நம்பிக்கை வைக்க மாட்டார்கள் என்பதையோ, இந்த இரண்டுங்கெட்டான் பிழைப்பு கடைசியில் இரு சாராராலும் எள்ளி நகையாடப்படும் என்பதையோ, இந்த "மேதை'கள் எண்ணிப் பார்ப்பதில்லை! "அறிவுத் தாக்குதல்' பலமாக நடந்தான பிறகே, இந்த அளவுக்காவது இவர்கள் இடம் கொடுத்தனர்.

ஒரு காலம் இருந்தது, பிடிவாதமாகப் பொய்யை உண்மை எனக் கொண்டு, மெய் உரைக்கத் துணிந்தவர்களைக் கொடுமைப் படுத்திய காலம்,

இயற்கையின் கோலங்களிலே, அடிக்கடியும் நிரந்தர மாகவும் உள்ளவற்றைப் பற்றிப் பல கதைகள் கட்டி வைத்தனர். வால் நட்சத்திரங்கள் அடிக்கடி தோன்றுவனவல்ல - ஆகவேதான், புராணக் கதைகள் இல்லை; வால் நட்சத்திரம், பார்வதியின் ஜடை முடியிலே உள்ள ஒரு பட்டுத் துண்டு, அல்லது பரமசிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து புறப்பட்டு அடங்கும் ஒலி அம்பு என்று ஏதும் கதை கட்டவில்லை!

வால் நட்சத்திரங்களைக் கண்டு கிலி கொண்டு மக்கள் அல்லோலப்பட்டிருக்கின்றனர் முன்னாளில்!

1832-ம் ஆண்டு, தோன்றிய வால் நட்சத்திரத்தால், பூமியே அழிந்துபடும் என்று பயந்து வீடு வாசல், உடைமை களை விற்று விட்டுப் பலர், மாதா கோவில்களிலே போய்த் தங்கிவிட்டனர் - இறக்கும்போது இறைவன் சந்நிதியிலே போய் இறப்போம் - என்று!

வால் நட்சத்திரம் வந்தது! மறைந்தது!! உலகம் அழியவில்லை! உடனே மாதா, கோவில் இவைகளின் மீதல்ல - குறைந்த விலைக்கு விற்றுவிட்ட மனை, மாடு, மணி, இவைகள் மீது சிந்தனை சென்று, சோகித்தனராம்! ஐரோப்பாவில்!!

வால் நட்சத்திரம் முளைக்கிறது என்றால், வந்தது விபத்து என்று முடிவு செய்வர், முன்னாளில்.

மாதா கோவில்களில் மணி ஓசை கிளம்பும்! ஜெப மாலைகளுக்கு அதிகமான கிராக்கி ஏற்படும்! தான தருமம் செய்வாராம்! பாவத்தை மன்னிக்கும்படி குருமார்களிடம் கெஞ்சுவார்களாம்!! ஆலயமணி அடித்தவண்ணமிருந்தால், வால் நட்சத்திரம் கேடு ஏதும் செய்யாமல் போய்விடும் என்று நம்பி பூஜையை இடைவிடாது செய்வாராம்!

மிகப் பழங் காலந்தொட்டு, வால் நட்சத்திரம் உலக மக்களை இவ்வளவு மிரட்டி இருக்கிறது. எனினும் விஞ்ஞானம், அஞ்சாது படையெடுத்து, இந்தப் "பயமூட்டி'யைப் படம் எடுத்துத் தந்துவிட்டது.

ஞானக் கண்ணினர் கூறினர், "அதோ பார்! வால் நட்சத்திரம்! ஆண்டவனின் சீற்றம்! அழிவு வருகிறது என்பதைக் காட்டும் அறிகுறி'' என்று. விஞ்ஞானக் கண்ணினர் கூறுகின்றனர், "வால் நட்சத்திரம், கிரஹங்களைப் போலவே, சூரியனைச் சுற்றி வருகின்றது. நீண்ட கோழிமுட்டை வடிவில், அது செல்லும் பாதை, அமைந்திருக்கிறது, அஞ்சாதே! வால் நட்சத்திரங்கள் ஒன்று, இரண்டல்ல; ஓராயிரம், ஈராயிரமல்ல! சூரிய மண்டலத் திலே இலட்சத்துக்கும் மேற்பட்ட வால் நட்சத்திரங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் வெவ்வேறு பாதைகளில் சுற்றி வருகின்றன ஒரு முறை பயணம் செய்து திரும்ப, ஒவ்வொரு வால் நட்சத்திரத்துக்கும், வெவ்வேறு கால அளவு பிடிக்கும். சில வால் நட்சத்திரங்கள், மூன்றரை வருடத்தில் சூரியனைச் சுற்றி வரும்; சில வால் நட்சத்திரங்கள் 10 லட்சம் ஆண்டுக்காலம் பிடிக்கும் சுற்றிவிட்டு வர!'' என்று.

இந்த முடிவுகளுக்கு ஆதாரங்களை, ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எப்படி படிப்படியாகச் சென்று இந்த உண்மைகளைக் கண்டறிய முடிந்தது என்பதையும் விளக்கியுள்ளனர்.

முதலிலே, யாருக்குமே புரியத்தான் இல்லை, வால் நட்சத்திரம் எங்கிருந்து கிளம்புகிறது? எங்கே போகிறது? எப்படி மறைகிறது? அதன் இயல்பு என்ன? என்பதெல்லாம்!

வால் நட்சத்திரங்கள் சீன ராஜ்யம், ஜெருசலம் சாம்ராஜ்யம், கிரேக்க ரோம் சாம்ராஜ்யங்கள் ஆகியவை ஜொ-ப்புடன் இருந்த நாட்களிலேயும் தோன்றின. ஆராய்ச்சி யாளர்கள் கி.மு, 48லில், கி.பி. 69லில், கி.பி. 79லில், கி.பி. 451லில், கி.பி 455லில், கி.பி. 1000லில் கி.பி. 1076லில், கி.பி. 1456லில், கி.பி. 1832லில், கி.பி. 1910லில் என்று இப்படிப் பல தடவைகள் தோன்றிய வால் நட்சத்திரங்களைப் பற்றிய ஆராய்ச்சிகளை அறிவு மன்றத்துக்கு அளித்திருக்கிறார்கள்.

இவை தோன்றிய ஒவ்வொரு சமயத்திலும், ஏதேனும் ஒருவகை அழிவு நேர்ந்திருக்கிறது உலகில். ஒரே பேரரசனின் மரணம், பெருவெள்ளம், பெருநெருப்பு, படையெடுப்பு, சாம்ராஜ்யச் சிதைவு என்பன போன்ற ஏதேனும் ஒன்று நடைபெற்றுள்ளன - வால் நட்சத்திரத்தைப் பற்றி மட்டுமல்ல, பொதுவாகவே வானநிலை பற்றிய ஆராய்ச்சியே உருவடையா திருந்த காரணத்தால், இந்தச் சம்பவங்களுக்கும், வால் நட்சத்திரம் தோன்றியதற்கும் தொடர்பு வைத்து, இதனால்தான் அது என்று மக்கள் நம்பினர்.

உலகிலே, மக்கள் மனத்தை உலுக்கக் கூடிய எவ்வளவோ விபத்துக்கள் ஏற்பட்டபோதெல்லாம் வால் நட்சத்திரம் வந்ததில்லை. விஞ்ஞானி பிறகு கூறினான்; "வால் நட்சத்திரத் திற்கும் விபத்துக்கும் சம்பந்தமில்லை; அஞ்சாதே!'' - என்று.

வால் நட்சத்திரத்தை, பூமியிலிருந்து புறப்படும் புகையென்று அரிஸ்டாடில் கூறினார். அவர் அறிஞர்தான்; ஆயினம், அவரே அதுபோலக் கூறிவிட்டாரே! சும்மா இருந்து விட்டனரா?

இல்லை; அவர் அறிந்தது அவ்வளவுதான் - நாம் ஆராய்வோம் என்று எண்ணினர். ரோம் நாட்டு அறிஞர் செனகா, ஒரு படி முன்னேறினார். "முன்கூட்டியே சொல்ல முடியும், வால் நட்சத்திரம் எப்போது வருமென்பதை'' என்று சொன்னார்.

விஞ்ஞான முறையிலே, வால் நட்சத்திரத்தைப் பற்றி ஆராய்ந்தவர் ஹா- என்பவர். அவர், 1682லில் தோன்றிய வால் நட்சத்திரம் சூரியனைச் சுற்றிவிட்டு 76 ஆண்டுகள் கழித்து, மீண்டும் தோன்றும் என்று கூறினார். அதன்படியே 1759லில் வால் நட்சத்திரம் வந்தது!

ஹாலி, 1682லில் தோன்றிய வால் நட்சத்திரம், இவ்வண்ணம் இயல்பு கொண்டது; அது 1759லில் மீண்டும் தோன்றும்; கவனித்துப் பாருங்கள் - என்று கூறினார்.

யாரும் நம்பவில்லை, அவரும் இறந்துவிட்டார். அனால் அவர் சொன்னபடி 1759லில் வால் நட்சத்திரம் தோன்றிற்று. மக்கள் அவர் அறிவை வியந்தனர் - விஞ்ஞானத்தைப் போற்றினர். அந்த வால் நட்சத்திரத்துக்கு ஹாலி வால் நட்சத்திரம் என்று பெயரிட்டனர்.

பிறகு வால் நட்சத்திரத்தைப் பற்றிய விவரமான ஆராய்ச்சிகள் தொடர்ந்து வெளிவரலாயின.

ஹா- வால் நட்சத்திரம், 1682லில் ஒருமுறை தோன்றி, 76 ஆண்டுகள் பயணம் செய்து சூரியனைச் சுற்றிவிட்டு 1759லில் அது மீண்டும் வந்தது மட்டுமல்ல; அது மறுமடியும் மறுபடியும் அந்தக் குறிப்பிட்ட கால அளவில் வருவதையும் ஆராய்ச்சி யாளர்கள் கண்டறிந்தனர்.

1910லில் ஹா- வால் நட்சத்திரம் வந்தது - மீண்டும் 1986லில் ஹா- வால் நட்சத்திரம் வரும் என்று குறித்து வைத்திருக்கிறார்கள்.

வால் நட்சத்திரம், விஞ்ஞானக் கண்களுக்கு மிக வசீகரமான தோற்றத்துடன் காட்சி அளிக்கிறது. பலவித வர்ணங்கள் உள்ளனவாம்! கண் கூசும் ஒளியாம்! இருண்ட வெளியிலிருந்து கிளம்பிச் சூரியனைச் சுற்றிக் கொண்டு செல்கிறதாம்!

வால் நட்சத்திரத்தின் தலைப் பகுதி 30,000-லிருந்து 1,50,000 மைல் வரை இருக்குமாம்! வால் சிலவற்றுக்கு 10 கோடி மைல் நீளமாம்! சிலவற்றுக்கு 20 கோடி மைல் நீளமாம்.

சூரியனிலிருந்து பலப்பல கோடி மைல்களுக்கு அப்பால் சென்று, வால் நட்சத்திரம் திரும்புகிறது.

1811லில் தோன்றிய வால் நட்சத்திரம், சூரியனிலிருந்து 1000 கோடி மைல் தூரம் சென்று திரும்ப மீண்டும் 3000 ஆண்டுகள் பிடிக்குமாம்! இது தன் பயணத்தை முடிக்க!! மறுபயணத்தைத் துவக்க, அதாவது இந்த வால் நட்சத்திரம் மீண்டும் 4811லில் தோன்றும்.

காற்றைவிட மிக இலேசான பொருள் வால் நட்சத்திரம்.

இவ்வளவு விஞ்ஞான உண்மைகளுக்கும் ஆதாரங்கள் உள்ளன.

படமும் எடுத்து வைக்கப்பட்டிருக்கிறது.

சீனப்புராணிகர்கள், வால் நட்சத்திரங்களை மேலுலக அரசியல் தூதுவர்களாகக் கருதினர். பூலோகம் போலவே வானலோகம், பல நாடுகள் கொண்டதாக இருப்பதாகவும் பூலோக நாடு ஒவ்வொன்றுக்கும் வானலோகத்தில் ஒரு பிரதிநிதி இருப்பதாகவும் பூலோக நாட்டின் கதியை அங்கே நிர்ணயிப்பதாகவும் அவர்கள் கற்பனை செய்து கொண்டனர்.

வான மண்டலத்திலே கிரகங்கள் ராஜாக்கள்! நட்சத்திரங்கள் மந்திரிகள்! வால் நட்சத்திரங்கள்தான் அரசியல் தூதுவர்கள்!! கற்பனைக் கதைகளின் மீதுதான் கடவுள் கொள்கை கட்டப்பட வேண்டும் என்ற எண்ணமே, இன்று, அறிவுலகில் எள்ளி நகையாடப்படும் அளவுக்கு மக்கள் உள்ளம் பண்பட்டிருக்கிறது. விசித்திரமான உருவங்கள், விதவிதமான செயல்கள் இருந்தாக வேண்டும் தெய்வத்துக்கு என்ற எண்ணம் முறியடிக்கப்பட்டு விட்டது. பழைய கற்பனைக் கதைகளை மனித சமுதாயத்தின் குழந்தைப் பருவப் பிதற்றல்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

வானத்திலே உலவும் மேகங்கள், மின்னும் நட்சத்திரங்கள், ஒளியை அள்ளித் தரும் நிலவு போன்றவைகள், குழந்தையின் உள்ளத்திலே எத்தனையோ விதவிதமான எண்ணங்களை எழுப்புகின்றன மழலை மொழியிலே ஏதேதோ கூறுகிறது. மனித சமுதாயத்தின் குழந்தைப் பருவத்திலே, இதே நிலைதான்!

மழலை கேட்டு இன்புறும் தாய் குழந்தை வாலிபனான பிறகும், சந்தமாமாவைப் பிடித்துத் தா!! என்று கேட்டால், மகிழ முடியுமா? மருள்வாள் தாய்; மகனுக்கு ஏதோ மனமருள் என்று! அதுபோலத்தான் மனித சமுதாயம், முறுக்கேறிய வா-பப் பருவம் பெற்றிருக்கும் இந்நாளிலே, குழந்தைப் பருவத்துக் கதைகளை, கற்பனைகளைக் கூறிக் கொண்டும், நம்பிக் கொண்டும், அந்த நம்பிக்கையையே அடிப்படையாகக்கொண்டு வாழ்க்கையை அமைத்துக் கொண்டும், அப்படிப்பட்ட வாழ்க்கைதான் ஆஸ்திகம் என்று பேசிக்கொண்டும், அதனைச் சந்தேகிப்பது பாபம் என்று மிரட்டிக் கொண்டும் இருந்தால், மகிழ்ச்சியா பிறக்கும், மதியுள்ளவர்களுக்கு!

அண்ணன்,

5-12-65