அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


வாழு! வாழவிடு! (1)

அவளும், அவனும் -
கருத்துக்கதை இந்திய ஒற்றுமை -
சர். சி.பி.யின் கருத்து.

தம்பி!

உருக்கமான கதையொன்று, நெடுநாட்களுக்கு முன்பு படித்தது நினைவிற்கு வருகிறது. உனக்கும் அதைக் கூற வேண்டும்போலத் தோன்றுகிறது. கூறுகிறேன்.

சாலைகளும் சோலைகளும் கண்டு சொக்கிட, அவர் களுக்கு நேரம் இல்லை; சாலைகளும் சோலைகளும் அங்கு இல்லவும் இல்லை; ஏனெனில் அவை சிறிது சிறிதாக அழிக்கப் பட்டுப் போய் விட்டன!

சோலைகள் இருந்தால், புள்ளினம் நிரம்பி இருக்கும்; புதுப் புதுப் பண் அமைப்போருக்குப் பாடம் தருவதுபோன்ற முறையில், இசை எழுப்பும்; அவர்கள் கேட்டு இன்புற்றிருக் கலாம்! அவர்கள் என்பது கூடத் தவறு - அவள் கேட்டு இன்புற்றிருப்பாள் - அவனுக்குத்தான் அவள் பேச்சே இசையாயிற்றே! புள்ளினம் இல்லை, இசையும் இல்லை! இருந்திருப்பினும், அவர்கள் அதனைக் கேட்டு மகிழ்ந்திட நேரமும் இல்லை! அவர்கள், உருளைகளின் ஒலி, உருண்டோடும் வண்டிகளின் இரைச்சல், இடித்தல் வடித்தல், அறுத்தல் எரித்தல் போன்றவைகள் எழுப்பிடும் பேரிரைச்சல், இவைகளுக் கிடையிலே உழன்று கிடந்தனர்! இசை கேட்டு இன்புற நேரமும் இல்லை! கிடைத்திடின், இசையை நுகரும் இயல்பேகூடப் பழுது படாமல் இருந்திருக்குமோ என்னவோ, கூறுவதற்கில்லை. அவர்கள் உழைப்பாளிகள் - உனக்கு நான், எனக்கு நீ, - என்று பாடி ஆடிடும், நிலையினர் அல்ல!

அந்தக் கண்களிலே நான் கண்ட ஒளி! என்று கூறிக்கூறி மகிழ்ந்து கிடக்க அவனுக்கு நேரம் இல்லை; ஒளி இருந்த கண்கள் - உண்மை - ஆனால், அது முன்பு! இப்போது ஓரோர் சமயம் ஒளிச் சிதறல் தெரிகிறது, மறுகணம் மறைகிறது! அவள் அவனுக்காக வேலை செய்கிறாள் - அவன் அவளுக்காக உழைக்கிறான்! அவனும் அவளும் உழைத்துப் பிழைக்கும் எளிய குடும்பத்தினர்.

கவிதைகளைப் படித்திட வாய்ப்புப் பெற்றிருந்த நண்பர்கள், அவனிடம், மேலே உலவிடும் மேகத்தை, மங்கையரின் கூந்தலுக்கு ஒப்பிட்டுக் காட்டியிருப்பதை எடுத்துக் கூறியிருப்பர் - அவன் இதழில் ஒரு புன்னகை தவழும் - மறுகணம் மறையும்! தன் துணைவியின் குழலழகை எண்ணி மகிழ்வான்! எனினும், வேலை இருக்கிறதே - என் செய்வான்?

அந்தக் கூந்தலின் சுருளழகும், மினுமினுப்பும், அதனைக் கோதிடும்போது, கரத்தின் வழி நுழைந்து நேரே இதயம் சென்று இன்பமூட்டிடும் களிப்பும், அவன் நினைவிற்கு வருகிறது. ஆனால், அதேபோது செய்துமுடிக்கவேண்டிய வேலையின் அளவும் தெரிகிறது! மகிழ்ச்சியை, ஒரு பெருமூச்சால் விரட்டி விடுகிறான் - பிறகு? வேலை! வேலை!!

கூந்தலுக்கு இயற்கையாக அமையாத அழகினைக் கூட்டிட மினுக்குத் தைலம் தேடுகிறார்கள், வண்ணக் கலவை நாடுகிறார்கள், வைரம் இழைத்த அணி பணியினை, கோதி முடித்த கூந்தலில் செருகிக் கொள்கிறார்கள் - உள்ளவர்கள்!

அவள், வியர்வை பொழியும் நெற்றியிலே, வந்து வந்து விழுந்திடும் கூந்தற் சுருளை, கரத்தால் மேலுக்குத் தள்ளித் தள்ளி விடுகிறாள்! கூந்தலோ, எப்போது பார்த்தாலும் ஏதேதோ வேலை செய்தபடி இருக்கிறாயே, என்னையும்தான் கொஞ்சம் பாரேன்! என்று கெஞ்சுகிறது!! அவளுக்கு அதற்கெல்லாம் நேரம் இல்லை! பட்டுக்கயிறு கொண்டாகிலும், கட்டி முடித்துக் கொள்ளலாம்! ஆனால், அதற்குப் பணம் வேண்டுமே? உழைப்பில் கிடைப்பது, உணவுக்கும் உடைக்கும் விடுதிக்கும் மட்டும் கட்டிவந்தாலே போதாதா, கூந்தலுக்கு அழகுதேடச் செலவிடக் கூடவா காணும்!

அவன், அந்தக் கூந்தலில் செருகிக் கொள்ள ஒரு அழகான அணி வேண்டும், என்று உணர்ந்தான், தன் கரம் கொண்டா எப்போதும் நெற்றியிலே வந்து விழும் கூந்தற்சுருளைத் தள்ளித் தள்ளி விட்டுக் கொண்டிருக்க முடியும்! கரத்துக்கு வேறு கடினமான வேலைகள் நிரம்ப உள்ளனவே!

எனவே, எப்படியாகிலும் கூந்தலில் அணிந்து கொள்வதற் கான அணி வாங்கியாக வேண்டும்! அவளிடம் கூடக் கூறக் கூடாது - வாங்கும் வரையில்! பிறகு? என்னென்னவோ விதமான கற்பனைகள், பாவம் அவனுக்கு! உழைப்பாளிதான், என்றாலும் நினைவு குழம்பிப் போகும் நிலை பெற்ற வயோதிகன் அல்லவே! கட்டிளம் காளை!!

அந்த நினைவு பிறந்ததும், அவனுடைய உழைக்கும் திறனே கூடத் தன்னாலே வளரலாயிற்று. வேலை செய்யுமிடம், விரைந்து செல்கிறான், கைக்கடிகாரம், நேரமாகிவிட்டது என்பதை எடுத்துக்காட்டியதால்!

அவள், அவனைக் காண்கிறாள் - அவன் புன்னகைக்குக் காரணம் கேட்காமல்! எப்படிக் கேட்பாள்! அவள், சிந்திய புன்னகைக்குக் காரணம், கூறினாளா? அவன் அவளுடைய கூந்தலுக்கு, வாங்கிச் சூட்டிடப் போகும் அழகிய ஆபரணத்தை எண்ணி மகிழ்ந்தான்! அவளோ, அவன் கரத்தில் கட்டப் பட்டிருந்த கடிகாரத்தின், தோல்பட்டைக்குப் பதிலாகப் பளபளப்பான முலாம் பூசப்பட்ட செயற்கை வெள்ளியாலான, பட்டையைக் (கற்பனைக் கண்களால்) கண்டு, புன்னகை புரிந்தாள்.

உழைப்பால் மெருகேறியிருந்த கரங்கள் - பளபளப்பான செயற்கை வெள்ளிப்பட்டையுடன் கடிகாரம் இருந்தால், அழகாகத்தான் இருக்கும் - அந்தப் பட்டை, கடையிலே கண்ணாடிப் பேழையிலே இருக்கும்போது உள்ளதைக் காட்டிலும், அழகு அதிகமாக விளங்கிடும். கடையிலே அதைக் காணும்போதெல்லாம், அவள் இதையே எண்ணுவாள். எப்படியும் அதை வாங்கிவிடவேண்டும் - அவருக்குத் தரவேண்டும் - தாமே அவர் கரத்தில் அதனைக் கட்டிவிட வேண்டும் என்று எண்ணிக் கொள்வாள். அவனுக்கும் அதுபோலவே நினைப்பு - எப்படியாகிலும், கூந்தலில் செருகிக் கொள்ள அழகான அணி வாங்கிவிடவேண்டும் என்று.

அவளுக்குத் தன் கூந்தலிற் செருகிக் கொள்ள ஒரு அழகான அணி இல்லையே என்று நினைப்பு எழவில்லை.

அவனுக்குத் தன் கைக்கடியாரத்துக்குத் தோலாலான பட்டையைவிட, பளபளப்பான செயற்கை வெள்ளிப்பட்டை இருந்தால் அழகாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றவில்லை.

அவன், அவள் கூந்தலழகையே எண்ணிக் கிடந்தான்.

அவள், அவன் கரத்திலே பளபளப்பான பட்டை இருக்க வேண்டும் என்பது பற்றியே எண்ணிக் கொண்டு இருந்தாள்.

அவளுக்காக அவன்! அவனுக்காக அவள்!

இவர்களின் தூய காதலைக் கண்டு, காதகர்களிடம், கஞ்சத்தனம் படைத்தோரிடம் குவிந்துகிடந்த பணம், உருண்டோடி வந்து, உறவாடி உரையாடிடவா, முடியும்? அதுதான், சிக்கிக் கொண்டு விட்டோம், இனி நம்மை ஏவி என்னென்ன சீரழிவுகளைச் செய்கிறார்களோ, என்றெண்ணி வாயடைத்துக் கிடக்கிறதே!!

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள் அல்லவா! தூய காதலால் கட்டுண்டு கிடந்தவர்களுக்கும் வழி கிடைத்தது.

"கண்ணாளா! கண்ணை மூடிக் கொண்டு, தங்கள் கரத்தை இப்படி என் முன் நீட்டுங்கள்!'' எந்று கொஞ்சுமொழி பேசினாள் கோதை, ஓர் நாள்.

இதென்ன பந்தாடும் சிறுமிபோலப் பேசுகிறாளே என்றெண்ணினான் வியப்புடன். அவளோ, செல்லக் கோபம் காட்டி, சேல்விழியால் களிப்பூட்டித், தேனை மொழியாக்கித் தருகிறாள்.

என்ன? என்ன? ஏன்? என்றெல்லாம் கேட்கிறான் - அவள் நினைவிலே தன்னை இழைத்துவிட்ட காதலன்.

சொல்கிறபடி கேட்க வேண்டும்! உம் - என்று மிரட்டுகிறாள் - கரத்தைப் பற்றி இழுக்கிறாள்.

"கண்ணே! அப்படியே திருப்பு முகத்தை!'' என்று அவன் கட்டளையிடுகிறான்.

"ஏன்?'' என்று அவள் கேட்கிறாள், தழதழத்த குரலில்.

"உன் அழகான கூந்தலிலே இடம் பெற்று புது அழகு பெறத் துடிக்கும் இந்தக் "கொண்டைச் செருகு' உன்னைக் கெஞ்சுகிறது, பாரேன்!'' என்று கூறிக், கடையிலே வாங்கி வந்த அழகுமிகு அணியினைக் காட்டுகிறான்.

அவள், அதைப் பார்க்கிறாள்! வியப்புடன் பார்க்கிறாள்!! அகலக் கண்களைத் திறந்தபடி பார்க்கிறாள்!!

வெற்றிவீரன், பரிசாகப் பெற்ற வீரக்கழலை, காதலியிடம் காட்டும்போது, எத்துணை மகிழ்ச்சியும் பெருமிதமும் அவன் விழியில் இருந்திடும்! அவன், அந்த அணியை அவள் காணும்படி, ஏந்தியபடி நிற்கிறான், வெற்றி வீரன் போல்!!

"எனக்கா! அன்பே! நீங்கள் வாங்கிவந்தீர்களா! தங்களுக்குத் தான் என்மீது எத்துணை அன்பு! கண்ணாளா! இத்தனை கனிவு கொண்டுள்ள, தங்களை என் மணாளராகக்கொண்டுள்ள நானே பாக்கியசாலி! புதிதாகக் கட்டிமுடித்த மாளிகையிலே ஓர் புறம் வெட்டப்பட்டிருக்கும் பளிங்குக் குளத்திலே, பட்டு மெத்தைகள் போடப்பட்டுள்ள உல்லாச ஓடம் ஒயிலாக ஆடிநிற்பதைக் கணவன் காட்டிடும்போது, அந்தக் காரிகைக்கு ஏற்பட முடியாத களிப்பு, என் அரசே! எனக்கு இப்போது ஏற்படுகிறது. என்னைப் பற்றிய எண்ணம், உமக்கு எத்துணை இருந்தால், என் கூந்தலுக்கு இந்தச் "செருகு' இல்லை என்பதை அறிந்து, பெற்றுத் தந்திருப்பீர்!! அதைத் தரும் கரங்களைக் கண்களிலே ஒத்திக் கொண்டு, காலமெல்லாம் இருந்திடலாம்போல் தோன்றுகிறது! - என்றெல்லாம், நாடகமேடையானால்! பேசிடலாம் - இது வீடு - அவள் பேசவா முடியும் - பேசவா செய்தாள்! அவள் கண்கள், இதுபோல மட்டுமல்ல, காதற் காவியமே தீட்டிக் காட்டிற்று.

திரும்பு! நானே என் கரத்தால் கொண்டைச் செருகினை உன் கூந்தலில் சூட்டி மகிழ வேண்டும் - என்கிறான், அவன்.

புன்னகை பூத்திடும் நிலையிலே நிற்கிறாள் பூவை - அவன் எதிரில்! அவன் முகவாய்க்கட்டையைத் தடவியபடி!!

அவன், அவளைத் திருப்பி நிற்கச் செய்யும் எண்ணத்துடன், தொட்டு இழுக்கிறான்! துடியிடை, சிலையாகி நிற்கிறாள்!! வேண்டாம்! வேண்டாம்! என்று குறிகாட்டி நிற்கிறாள்.

இதற்கு வெட்கமா! இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகுமா! நாம், தனியாக இருக்கும்போதுகூடவா!! - என்றெல்லாம் கேட்கத் தோன்றுகிறது, அவனுக்கு - ஆனால், செயலல்லவா முக்கியம் பேச்சைவிட - எனவே அவன், அவளுடைய தோளைப் பிடித்து இழுத்தபடி திருப்ப முயற்சிக்கிறான். அவள், கண்கள் துளிர்க்கின்றன! உற்றுப் பார்க்கிறான்! கண்ணீர்த் துளிகள், வெளிப்பட்டுக் கன்னத்தில் வீழ்கின்றன!

"அன்பே, என்ன இது?'' என்று கேட்கிறான் - அவள் அவன் மார்மீது சாய்கிறாள். அணைத்தபடி, கண்ணீரைத் துடைக் கிறான். தலையில் முக்காடிட்டதுபோலக் கட்டப்பட்டிருந்த துண்டு நழுவி விடுகிறது; கூந்தல் புரளவில்லை - கத்தரித்து விடப்பட்டுக், கழுத்தளவோடு நிற்கிறது!!

கூந்தலில் செருகிக்கொள்ள, அணிகொண்டு வந்தான் - சுருண்டு அடர்ந்து புரண்டு கிடக்கும் கூந்தல் இல்லை!!

எப்படி இருக்கும்? அதைத்தான், விலைக்கு வாங்கிய கடைக்காரன் தொட்டுப் பார்த்து "பட்டு' என்கிறான் - அளவு எடுத்துப் பார்த்து அற்புதம் என்கிறான் - கொடுத்த பணத்தைக் கணக்கெடுத்து, கிடைக்கப்போகும் பணத்துடன் ஒப்பிட்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறானே!

ஏழையிடம் இருந்தது இந்த அழகு!

இந்த "அழகு' தேடி அலைகிறார்கள், பணம் படைத்த பெருமாட்டிகள்.

மருத்துவர்கள் கொடுத்தவை அனைத்தும் பயனளிக்க வில்லை. செம்பட்டை போகவில்லை!! இதோ கற்றைக்குழல்! ஆனால் அது, ஒரு ஏழையிடமல்லவா இருந்துவந்தது - மினுக்குப் பெறாமல்!!

வாடைக் காற்றிலே முன்பு ஆடி இருக்கும் - இனி மாளிகையிலே கிடைக்கும் பூங்காற்று அல்லவோ, இதற்கு!

காதற்கணவனுக்குக் கைக்கடியாரத்துக்கான செயற்கை வெள்ளிப்பட்டை வாங்க, காரிகைக்குப் பணம் வேண்டும்! ஒவ்வொரு நாளும் கண்ணாடிப் பேழைக்குள் இருந்து கொண்டு, அந்தப் "பட்டை' "உன் கணவனுக்காகவே காத்துக் கொண்டி ருக்கிறேன், இன்னும் எத்தனை நாட்களுக்கு இங்கு இருக்க முடியும்? உள்ளவன் எவனாவது வாங்கிக் கொண்டு போய் விட்டால்!! பிறகு, உனக்குப் பெருத்த ஏமாற்றம் ஏற்படும்! உடனே வாங்கிக் கொண்டு, போ!!' - என்று பேசிற்று, பணம் இல்லை! என்ன செய்வது? பார்த்துப் பார்த்துப் பெருமூச்செறிந்தபடி இருந்தாள்.

கூந்தல் தயாரித்து விற்பனை செய்யும் கடைக்காரன் உற்றுப் பார்த்தபடி இருந்தான், ஒவ்வொரு நாளும் - அவளை அல்ல - கூந்தலை!!

அலைந்து திரியும் இவளிடம் இவ்வளவு அழகான கூந்தல் - இதுபோல வேண்டுமென்று அங்காடி அங்காடியாக அலைந்து திரிகிறார்கள், சீமாட்டிகள்! - இந்தப் பெண்ணின் கூந்தல் கிடைத்தால். . .!! - என்று நினைத்தது நடந்தது. கூந்தலை வெட்டி எடுத்துக் கொண்டு கொடுப்பதைக் கொடு என்றாள். அவன், பக்குவமாகப் பேசினான் - கூந்தல் போய்விடுகிறதே என்று கவலைப்படாதே - வாலிபப் பருவம் உனக்கு - கரு கருவென விரைவிலே கூந்தல் மீண்டும் வளர்ந்துவிடும் - வளரா விட்டால் கூட என்ன - கவனிக்காமல் இருந்தால், கூந்தலில், சிக்கு ஏற்படும், சுண்டு சொறி கிளம்பும் - என்றான்!

வெட்டி எடுக்கப்பட்ட கூந்தலைக் கண்டதும், அவளுக்கு ஒரு கணம் வருத்தமாகத்தான் இருந்தது. நமது கூந்தலா இத்தனை நீளமாக, இவ்வளவு அடர்த்தியாக, கவர்ச்சியாக இருந்தது!! - என்று எண்ணினாள். மறுகணமோ, அதை எடுத்துக் கொடுத்து விடுவதால், கிடைக்கும் பணத்தைக் கொண்டு வாங்கப் போகும் பொருளை எண்ணிக் கொண்டாள், முகம் புதுமலராயிற்று!

அந்தப் "பட்டை' அவளிடம் இருந்தது - அவன் கட்டித் தழுவியபடி, "செருகு' சூட நினைத்துப் பார்க்கும்போது, கூந்தல் வெட்டி எடுக்கப்பட்டுப் போய்விட்ட அலங்கோலத்தைக் கண்டு கண்ணீர் உகுக்கும்போது!

சூட்டி மகிழ நினைத்தார் - அவருடைய மகிழ்ச்சியைப் பாழாக்கிவிட்டேனே - என்றுதான், அவள் கவலைப்பட்டாள்.

அவருக்கு அந்த மகிழ்ச்சி கிடைக்கவில்லை - நான் அவர் கரத்தில், பளபளப்பான செயற்கை வெள்ளிப் பட்டையை மாட்டி மகிழ்ச்சி பெற, அவர் மகிழ்ச்சியை இழக்கிறார் - என்று எண்ணினாள், நெஞ்சு நெகிழ்ந்தது.

"கண்ணாளா! நெடு நாட்களாக, இதை வாங்கித் தங்கள் கடிகாரத்துடன் இணைத்துக், கரத்தில் அணிவித்துப் பார்த்து மகிழ ஆவல் - அதை நிறைவேற்றிக் கொள்ளவே, கூந்தலை இழந்தேன்! கோபம் கொள்ளாதீர்! கூந்தல் மீண்டும் வளர்ந்து விடும் - இன்று கொண்டுவந்ததைப் பிறகோர் நாள் என் கூந்தலிலே செருகி மகிழலாம்! இப்போது இன்பமே! கரத்தை நீட்டுங்கள்!'' - என்று கூறியபடி நின்றாள். அவன் ஏதும் பேசவில்லை, கரத்தை நீட்டினான். கடிகாரம் இல்லை!!

அவளுடைய கண்கள் கேள்விக் குறியாயின!

அவனுடைய அணைப்புப் பதிலளித்தது!

அந்தக் கடிகாரம் தான் இது, - என்று கொண்டைச் செருகைக் காட்டினான்!

செருகு இருந்தது, கொண்டை இல்லை!

கடிகாரப்பட்டை இருந்தது, கடிகாரம் இல்லை!!

அவர்கள் இருவரிடமும் காதல் ததும்பி இருந்தது - கண்ணீராக வழிந்தது!

***

அண்ணா! கதை சுவைதான் - காதல் மாண்பினை விளக்கிடத்தான் செய்கிறது. எனினும், இந்தக் கதை யாது கருத்துடன் கூறிடுகிறாய். வெறும் கதை பேசும் பழக்கம் நமக்குள்ளே கிடையாதே! - என்றுதானே தம்பி! கேட்கிறாய். காரணம் இருக்கிறது!

***

இந்திய ஒற்றுமை - பாரதப் பண்பாடு - ஏக இந்தியா - எனும் எழிலோவியம் காண வேண்டும் என்று நேரு பண்டிதர், துடியாய்த் துடிக்கிறார் - அதனை அவர் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம், சொல்லியும் வருகிறார். கனிவாகப் பேசுகிறார் சில வேளை, கடுங்கோபம் காட்டுகிறார் மற்ற வேளைகளில். விளக்கம் தருகிறார் சில சமயங்களில், இது உணரப்பட வேண்டியது, உண்மை என்று உபதேசமளிக்கிறார், மற்ற வேளை களில். "ஏக இந்தியா' என்பது பற்றிப் பேசிப் பேசி, அவரே, அதிலே "இலயித்து' விட்டாரோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது, அவருடைய போக்கைக் கவனிக்கும்போது.

"ஏக இந்தியா' என்பது இன்றுள்ள அரசியல் அங்காடியிலே மதிப்புள்ள பொருள் - எனவே அதைக் கொள்வோம், என்ற போக்கினர் உளர் - அவர்களின் உரையைக் குறித்து, நாம் கவலைப்படத் தேவையில்லை, காற்றடிக்கும் பக்கம் திரும்புவர்.

பண்டிதர் போல, நெகிழ்ச்சியுடன், "ஏக இந்தியா' என்ற தத்துவம்பற்றிப் பேசுபவர், போக்குதான், அனுதாபத்துடன் கவனிக்கத்தக்கது.

"ஆமாம், அதனால் என்ன? எல்லாம் ஒண்ணுதான், இதை எவன் மறுக்க முடியும்? எது எங்கே கட்டினா என்ன? இவனுங்க யாரு இதைக் கிளப்பிவிட!'' - என்று இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசிடும், காமராஜர்களின், போக்குப் பற்றி கவலைப்பட வேண்டியதே இல்லை! ஓட்டுப்பெட்டியிலே ஓட்டை விழுகிற வரையிலே இப்படிப்பட்டவர்கள் இதுபோலத்தான் ஒய்யாரப் பேச்சுப் பேசிக்கொண்டு காலத்தை ஓட்டிக்கொண்டிருப்பார்கள்.

தம்பி! நான் கவனிப்பது, உள்ளபடி, நெகிழ்ச்சியுடன், நம்பிக்கையுடன், "ஏக இந்தியா' என்ற கொள்கையை அணைத்துக் கொண்டிருக்கும் சுயநலமற்ற, பதவிப்பற்று அற்ற, சிலருடைய போக்குப்பற்றித்தான்.

இந்தத் திங்கள், டில்லியில், "பாரதம்' பற்றிப் பண்டித நேரு பேசுகிறார், பாசம் நிரம்பிய பேச்சு என்று கூறலாம். துக்கம் தோய்ந்த குரலிற் பேசினார் என்று கூடக் குறிப்பிடலாம். தென்னாட்டுக்காரர்கள் நடாத்தும் கல்விக்கூட விழாவிலே பேசும்போது, "இந்தியா ஒன்று' என்ற உணர்வு இருக்க வேண்டும், மொழி, மாநிலம் என்பவை காரணமாகப் பேத உணர்ச்சி, பிளவு மனப்பான்மை கூடாது - அது கொடும் தீது - என்றெல்லாம் பேசி இருக்கிறார்.

அதற்குச் சின்னாட்களுக்கு முன்பு, பம்பாயில், "மேதைகள்' சிலர் கூடி, இந்தியாவின் ஒற்றுமை குறித்துப் பேசி இருக்கிறார்கள். - சர். சி. பி. இராமஸ்வாமி ஐயர், ஆச்சாரிய கிருபாளினி, முன்ஷி ஆகியோர்.

இவர்களின் பேச்சிலே, வாதங்கள், விளக்கங்கள், மறுப்புக்கு மறுப்புகள் போன்ற இலட்சணங்கள் நிரம்ப உள்ளன - மன நெகிழ்ச்சி - பண்டிதரிடம் உள்ளது போன்றது - இருப்பதாக எனக்குப் படவில்லை.

சர். சி.பி. இராமஸ்வாமி ஐயர் விஷயத்தையே, தம்பி! கவனித்தால், அவர், இந்திய ஒற்றுமை குறித்து மட்டுந்தான், திறம்படப் பேசக் கூடியவர் என்று சொல்வதற்கில்லை - எதிர் தரப்பிலே இருக்க நேரிட்டாலும், இதே திறமையுடன், இந்தியா ஒன்றாக இருப்பது நல்லதுமல்ல, நடைபெறுவதும் சாத்திய மில்லை என்று மன்றத்தினர் பாராட்டத்தக்க விதத்திலே பேசக் கூடியவர் என்பது விளக்கமாகும்.

சர்.சி.பி. முன்பு திருவிதாங்கூர் சமஸ்தான திவானாக இருந்தார். அப்போது, அவருடைய ஆழ்ந்த கருத்துக்களை வெளிப்படுத்தத்தக்க, அகன்ற கண்களின் ஒளி, அரண்மனைக்கே ஓர் புதுமெருகு கொடுத்தது என்று பேசினர்! மக்களின் எதிர்ப்புச் சக்தியை "பத்மநாப தாசரின்' சார்பிலே நின்று, அடக்கிய ஆற்றல் மிக்கவர், சர்.சி.பி.

அப்போது வெள்ளையர் ஆதிக்கப் படலம் முடிவுற்று, அவர்கள் இங்கு உள்ளவர்களை ஆட்கொண்ட படலம் ஆரம்ப மாயிற்று - வைதீக பாஷையிலே கூறுவதானால், தம்பி! சுதந்தி ரோதயம், ஏற்பட்டது!

திவான் சர். சி. பி. என்ன செய்தார்?

பாரதம் ஒரே தேசம் - பிரிக்க முடியாதது - பிரிக்கக் கூடாது - என்று, இன்று பேசுகிறார். உம்! ஆற்றலுடன்!! ஆற்றலுக்கு என்ன பஞ்சமா!!

அன்று, அதே ஆற்றலுடன், சர்.சி.பி. சொன்னது யாது?

திருவிதாங்கூர் தனி அரசு! அதை ஏக இந்தியாவில் பிணைத்து விடுவதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் - என்று முழக்கமிட்டார்.

தம்பி! வெறும் பேச்சோடு இல்லை!! பாகிஸ்தானோடு திருவிதாங்கூர் தனியாக ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளும் - பண்டமாற்று முறை ஏற்பாடாகும் - இந்தியாவிலிருந்து அரிசி வராவிட்டால் கவலை இல்லை - பாகிஸ்தானம் அரிசி தரும் - என்று கூறினார் - ஏற்பாடுகளைக்கூடத் துரிதமாக்கினார்.

நாடு துண்டாடப்படுவது கூடாது என்று இன்று பேசுபவர் அன்று, திருவிதாங்கூர், தனி அரசு நடத்த முடியும் என்று பேசினார்.

எனவேதான், தம்பி! அவர் போன்றாரின் பேச்சை, மேதை களின் பொழுதுபோக்கு என்ற அளவிலேதான் கவனிக்க வேண்டும் - அது ஒரு பிரச்சினை அல்ல, என்று நான் கருதுகிறேன்.

பண்டிதரின் போக்கை அவ்விதம் என்று தள்ளிவிடுவதற்கில்லை.

கதையிலே வருகிற காதலர்போல், அவருடைய நெஞ்சு நெகிழ்ந்துவிடுகிறது.

எதை இழந்தேனும் பாரத ஒற்றுமையைப் பெற்றாக வேண்டும் - எத்தகைய கஷ்ட நஷ்டம் ஏற்படினும், ஏக இந்தியா எனும் ஏற்பாடு, பழுதின்றிப், பங்கமின்றி இருந்துவரவேண்டும் என்று, பண்டிதர் கூறுகிறார்.

அதற்காக, எதையும் இழக்கத் துணிகிறார் என்பது மட்டுமல்ல, எதனையும் அழித்தொழிக்கவும் தயாராகிறார்.

"வங்கமே! சிங்கமெனச் சீறாதே! பாரத ஒற்றுமைக்காக, எதையும் இழந்திடச் சம்மதிக்க வேண்டும். பெருபாரியானாலும் சரி, வங்கமொழிச் சிறப்பானாலும் சரி, கவலைப்படக் கூடாது.''

"பாஞ்சாலமே! வீரக் கோட்டமே! உனக்குக் கூறுகிறேன், உன் தன்மானம் பறிக்கப்படுகிறது என்றாலும், பாரத ஒற்றுமைக்காக, அதனையும் இழந்திடச் சம்மதிக்க வேண்டும். முழக்கம் எழுப்பாதே! முணுமுணுத்தால்கூட, அன்னை பாரத தேவி அழுதுவிடுவாள்! அவள் வாழ, நீ வதைபடுவதானாலும், நஷ்டம் இல்லை! வீரப் புதல்வர்கள் வெஞ்சிறையில் உழல்கிறார்களே, என்பதை எண்ணிடும்போது வேதனையாகத் தான் இருக்கும். ஆனால் அந்த வேதனையைத் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் - பாரதமாதாவுக்காக.''

"இரத்தக் காடாகிறதே பாஞ்சாலம், என்கிறாய். பாஞ்சாலத்து வீரர்கள் சுட்டுக்கொல்லப் படுகிறார்கள். குருதி கொட்டுகிறார்களே! இரத்தக் காடாகிறதே, பாஞ்சாலம்!'' என்கிறாய், "வீரக் கோட்டத்துத் தீரர்காள்! அந்த இரத்தம் வீண் போகவில்லை. பாரதமாதா குளித்திடும் பன்னீராக மாறுகிறது, பாஞ்சால மக்கள் கொட்டும் இரத்தம்'' என்று கவிதை பாடுகிறார்.

"செச்சேச்சே! என்ன சிறுமைக் குணம் இது. அந்த அணை எங்கே, இந்தத் தொழிற்சாலை யாருக்கு? எமக்கு என்ன பங்கு? இங்கு எவருக்கு உரிமை? என்றெல்லாம், பேசிப் பேசி, மாநிலம் மாநிலம் என்று கூச்சலிட்டுக் கிடக்கிறீர்களே, சரியா? முறையா? பாரதம் ஒரு நாடு - ஒரே நாடு - உங்கள் நாடு - நம் நாடு - இதிலே எது எங்கே இருந்தால் என்ன?'' என்று சீற்றத்துடனே பேசுகிறார், தெற்குச் சீமையினர், உரிமை, பங்கு, உறவு முறை இவைபற்றிப் பேசும்போதெல்லாம்.

அவருடைய மனம், "பாரத தேசம்' ஒரே நாடு ஒரே அரசு என்ற தத்துவத்தில் இலயித்துவிட்டிருப்பதால், உண்மை நிலைமைகளை அவர் காண மறுக்கிறார் - எவரேனும் சுட்டிக் காட்டினாலோ, சீறுகிறார்.

எனக்குத் தம்பி! அவருடைய போக்குப் பற்றி நினைக்கும் போது, கதையிலே காண்கிறோமே, கடிகாரப் பட்டைக்காக கூந்தலை விற்ற காரிகை, கூந்தல் செருகுக்காகக் கடிகாரத்தை விற்ற கணவன், இவர்கள் நினைவுதான் வந்தது - உள்ளபடி.

"பாரதம்' காண்பதற்காக, வங்கத்தை வதைத்து, பாஞ்சாலத்தை படுகளமாக்கி, திராவிடத்தைத் தேயவைத்து, இவர், "ஏக இந்தியா' எனும் அணியினைப் பெற்றாலும், செருகு உண்டு, கூந்தல் இல்லை! கைப்பட்டை உண்டு கடிகாரம் இல்லை! என்பது போன்ற நிலையைத்தான் உண்டாக்கிவிடும், என்ற அச்சம் எழுகிறது.

"திராவிடம்' என்ற எழுச்சியும் உணர்ச்சியும் வெட்டி எறியப்பட்டு, பாரதம் என்ற உணர்ச்சியும் கிடைக்காமல், ஓர் "சூன்ய' நிலைமை ஏற்படுமோ என்றுகூட அஞ்சுகிறேன்.

அண்ணன்,

23-12-1960