அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


வேலை அதிகம். . . நாட்கள் குறைவு.

தமிழக வீரவரலாறு -
தி. மு. க.வும், தேர்தலும்

தம்பி!

சென்றகிழமை உன்னுடன் அளவளாவும் வாய்ப்புப் பெற்றிடஇயலவில்லை; இங்கிருந்து பசியால் விரட்டப்பட்டு, மராட்டிய மண்டலம் சென்று, ஆலைகளிலும் அங்காடிகளிலும் அலுவலகங்களிலும் வேலைசெய்து வாழ்நாட்களை ஓட்டிக் கொண்டுவரும், நம் உடன்பிறந்தார்களைக் காணச் சென்றிருந் தேன். அங்கு நான் கண்ட காட்சிகளையும், ஏற்பட்ட எண்ணங் களையும் எடுத்தெழுத ஏடு போதாது என்பது மட்டுமல்ல, எழுதத் தொடங்கினால் ஏற்படக்கூடிய எண்ணக் குமுறல்கள் உள்ளனவே, அவை என்னையும் வாட்டி வதைக்கும். படித்திட நேரிடும்போது உன் மனதையும் நோகச் செய்திடும், தமிழகத்தின் தாழ்நிலையை உலகுக்கு எடுத்துக்காட்ட, தொழில் வளமற்ற நிலையைப் பாருக்குக் காட்ட, பிழைப்புத் தேடி அலைபவர்கள், பிடி ஆட்களாகின்றவர்கள், பிறந்த நாட்டைத் துறந்தவர்கள் என்ற நிலைக்குத் தமிழ்ப்பெருங்குடி மக்கள் ஆக்கப்பட்டுப் போயுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டப் பல்லாயிரக்கணக் கான பாட்டாளிக் குடும்பங்கள், பாதை ஓரங்களிலே குடில்கள் அமைத்துக்கொண்டு, குப்பைக்கு நடுவே, குளிரால் கொட்டப் பட்டுக் கோலம் மாறி, திசை தவறிய மரக்கலம்போல், சிறகொடிந்த பறவைகள்போல், புழுதிபடிந்த சித்திரம்போல், நரம்பறுந்த யாழ்போல் உள்ளனர். இதைக் காணத்தானா நான்! இந்நிலையில் நம்மவர்கள் இருப்பதைக் காணவா, இப்பாழும் கண்கள்! என்று எண்ணி நெஞ்சு நெக்குருகிற்று. என் செய்வது! தங்கம் விளையும் நாட்டுக்குச் சொந்தக்காரர்கள் - பரணி பாடிய பரம்பரையினர் - தரணி மெச்ச வாழ்ந்தவர்கள் - இன்று ஒரு கவளம் சோற்றுக்கு வழிகாண, காடு மலை, வனம் வனாந்திரம் கடந்து, வடபுலம் சென்று, வாழ்க்கைப் பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆறு அடுக்கு, எட்டு அடுக்கு மாடி களுக்குப் பக்கத்தில், ஓலைக்கொத்துக் குடிசைகள் - தகரத்தா லான கூரைகள் - அட்டையால் அமைக்கப்பட்ட இருப்பிடங்கள் - அங்கு, சேர சோழ பாண்டிய பரம்பரையினர்!! படைபல நடாத்தி வெற்றிபல பெற்று, வாகைசூடி வாழ்ந்தவர்களின் வழிவழி வந்தவர்கள், இன்று, செல்வம் கொழித்திடும் வடவரின் சீமையிலே, கைகட்டி வாய்பொத்திக் கடினமான வேலைகள் செய்து உழன்று கிடக்கிறார்கள். உடலின் மினுமினுப்பையும் உறுப்புகளின் கவர்ச்சியினையும் எடுத்துக் காட்டிடும், வண்ண ஆடைகளை உடுத்திக்கொண்டு, களிநடமிடும் கண்ணினராய், புன்னகை சிந்திடும் இதழினராய், பொன்னவிர் மேனியர் அங்கு பொலிவுடன் உலா வருகின்றனர் - தலைவிரி கோலமாய் கிடக்கும் நம் தமிழரை, அருவருப்புடன் பார்த்த வண்ணம்.

ஒரு நாடு தாழ்ந்துகிடக்கிறது, ஒரு அரசு நிலைகுலைந்து இருக்கிறது என்பதற்கு, அந்நாட்டவர் வேற்றிடம் சென்று விம்மிக்கிடக்கும் வேதனைதரும் நிலைபோதும், சான்றளிக்க. வடநாடு வாழ்கிறது, தென்னாடு தேய்கிறது என்று கூறும்போது மூக்குச் சிவந்து விடுகிறது இங்குள்ள அரசியல் தரகர்களுக்கு. பம்பாய், ஆமதாபாத் போன்ற இடங்களில் அமைந்துள்ள வடவரின் வணிகக் கோட்டங்களையும், தொழிலகங்களையும், ஆங்கு கூலிகளாய்க் கிடக்கும் தென்னாட்டவர்களையும், ஒருசேரக் கண்டுவிட்டால்போதும், மறுப்புரைப்போரின் மனமே கூட அனலிடை மெழுகாகும்.

ஆனால் தம்பி! அல்லற்பட்டுக்கொண்டிருக்கும் அவர் களின் அன்புணர்ச்சியை என்னென்பேன்! கண்டதும் அவர்கள் கசிந்துருகி நிற்கிறார்கள் - கட்டித் தழுவியபடி, தழதழத்த குரலிலே, அண்ணா! என்று அவர்கள் என்னை அழைத்தபோது, கண்ணீரை என்னால் அடக்கிக்கொள்ள முடியவே இல்லை!! அந்த ஒரு சொல் உள்ளத்திலிருந்து பீறிட்டுக்கொண்டு கிளம்பிய அந்தச் சொல் - அழைப்பா? திகைப்பா? அலறலா? அழுகையா? அகமகிழ்ச்சியா? என்று என்னால் திட்டவட்டமாகக் கூறமுடியவில்லை.

அண்ணா! அருந்தமிழ் நாட்டின் வீர வரலாற்றினை அடுக்கடுக்காகக் கூறுவாயே! காவிரி, தென்பெண்ணை என்றெல்லாம் கனிவுடன் பேசுவாயே! கோட்டை கட்டியோர், கொத்தளம் அமைத்தோர் என்று வீர உரையாற்றுவாயே! போரிலே புலிநிகர் மாந்தர் என்று புகழுரை பொழிவாயே! பிற பிற இடங்களிலே, மக்கள் ஆட்சிமுறை வகுக்காமுன்பே குடிக் கோனாட்சி முறையினைத் திறம்பட நடத்தி, மக்களை வாழ வைத்த இடம், திருஇடம் என்று தித்திப்புப் பேச்சுப் பேசுவாயே! செய்தொழில் பலப்பல! செல்வம் குறைவின்று! என்று சிறப்பினைச் செப்புவாயே!! கார் உலாவும்! சீர் உலாவும்! எங்கும் பசுமை! எங்கணும் செல்வம்! பழமுதிர் சோலைகள்! என்றெல்லாம் நாட்டு நிலையைப் படம்பிடித்துக் காட்டுவாயே! மணிமாடங்களில், கூடங்களில் ஆடல்பாடல் மிகுந்திருக்கும்! வயலோரத்திலே அமைந்த சிற்றூர்களிலே, சின்ன இடை துவள அன்னநடை நடக்கும் செல்வியர் இருப்பர்! செங்கரும்பு செழித்திருக்கும்! வாளை துள்ளும்! மலர் மணம் பரப்பும்! - என்று மகிழ்ச்சி பொங்கிடக் கூறுவாயே!! முத்தமிழின் மாண்பினையும், மூதறிஞர் திறத்தினையும், இலக்கியச் செறிவினையும், புலவர் பெருமக்கள் புவியாளும் மன்னருக்கு அறநெறிகூறி நல்வழிப் படுத்திய மாண்பினையும் எடுத்துரைப்பாயே! அதே நாட்டு மக்கள்தான், நாங்களும்!! ஆனால், எப்படி இருக்கிறோம் பார்த்தனையா? உழைத்து உருக்குலைந்து கிடக்கிறோம். என்னென்ன வேலைகளிலே ஈடுபட்டுக் கிடக்கிறோம். கண்டனையா? கடினமான வேலைகள்! கேவலம் என்று மற்றவர் கருதிடும் வேலைகள்! இவைகளிலே ஈடுபட்டிருக்கிறோம்!! இதைச் காண்கின்றனையே, உன் மனமென்ன கல்லா? இரும்பா? உடன்பிறந்தான் என்கிறாயே, உள்ளம் உருகாமலா இருக்கிறது? எமது நிலையைப் பார்த்தனையே, துக்கம் உன் நெஞ்சைத் துளைத்திடவில்லையா? என்ன சொல்கிறாய்? என்ன எண்ணுகிறாய்? எமது கதி இதுபோலாகக் காரணம் என்ன? இங்குள்ள வடவரும் சிலர் திருவிடம் வந்து தங்கியுள்ளனர்; ஆனால், எதற்கு? எம்மைப்போல் கல் உடைக்கவா? கட்டை வெட்டவா? குப்பை கூட்டவா? கொத்தடிமை வேலை செய்யவா? இல்லையே! "முதலாளி' வேலை பார்க்க அல்லவா வடவர், திருவிடம் வந்துள்ளனர்!! ஆனால், நாங்கள்? பார்க்கிறீர்களே கண்ணால்! விளக்கவாவேண்டும்? இந்த வேதனை தீர வழியே இல்லையா? எமது நிலையை மாற்றி அமைக்க மனமே இல்லையா? இழிநிலையிலிருந்து விடுபடப் போவதேயில்லையா?- என்றெல்லாம், அந்த ஒரு சொல் - அண்ணா! என்ற அந்தக் கனிவு நிரம்பிய மொழி, என்னைக் கேட்டுக்கேட்டு வாட்டி வதைத்தது, தம்பி! வாட்டி வதைத்தது.

என்னை நானே நொந்துகொண்டேன். ஏதும் செய்ய இயலா நிலையில் இருக்கிறோமே - எதையும் உணர, உருக, உரைத்திட முடிகிறது - ஆனால், மாற்றி அமைத்திட , திருத்தம் கண்டிட முடியவில்லையே! பிடி வேறோர் சார்பினரிடமல்லவா சிக்கிக்கொண்டிருக்கிறது, நாமோ, அறிந்ததை உரைத்திட மட்டுமன்றோ வாய்ப்புப்பெற்ற நிலையிலே உள்ளோம்? - என்றெண்ணி மெத்தவும் வாடினேன். காய்ந்த பயிரையுங் காரற்ற வானத்தையும், நீரற்ற வாவியையும் காணும் உழவன் மனம் என்ன பாடுபடும்? என் மனம், அந்நிலை!!

என் மன நிலையை உணர்ந்துகொண்ட அந்த மாண்பு மிக்கவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா, தம்பி! என் வாட்டத்தைப் போக்க, அன்பினை வாரி வாரி வழங்கினர். வறுமை நிலைமை! ஆனால், அகமும் முகமும் மலர்ந்த நிலையில் என்னிடம் அளவளாவினர்! அவர்கள் காட்டிய பேரார்வம் என்னை வெட்கமடையச் செய்தது.

பட்ட துயரம் போதும், பண்பாடிட வாரீர்!

பட்டொளி வீசிப் பறக்கிறது தாயின் மணிக்கொடி, பாடுபடுவோரே, கவலை விடுமின்!

காடுமேடு சுற்றியது போதும், தாயகம் அழைக்கிறது வாரீர்!

பிழைக்க நெடுந்தூரம் வந்தவர்களே! இனி வாழவழி அமைந்துவிட்டது, வாட்டம் துடைத்திடத் தாயகம் அழைக் கிறது வாரீர்!

கடும் வெயில்! கடுமைமிகு குளிர்! - என்றுள்ள இப்புரத்து வாழ்க்கைபோதும், தென்றல் விளையாடும் நாடு, திருவிட நாடு! அதில், திரும்பிப் பார்க்கும் இடந்தோறும் மணம் அளித்திடும் தேன் கூடு! புள்ளி மயில் நடமாடிப் பூவையரிடம் பாடம் கேட்டிடும் காட்சியுடன், புள்ளினம் இசை எழுப்பிப் பூங்காவில் வட்டமிடும் காட்சியுண்டு! கண்டால் கவி பிறக்கும், காவியம் உருவெடுக்கும்! காண வாரீர் தாயகம், கட்டுண்ட நிலை இல்லை! தன்மானம் தழைத்திடவே, தன்னாட்சி செழித்திடவே, தாயகம் தளைகளற்றுத் தகத்தகாயம் காட்டுகின்றது! காண வந்திடுவீர், கஷ்டம் இனி இல்லை, இல்லை!! - என்று எழுச்சிப் பண்பாடி, உடன் பிறந்தார்களைத் தாயகம் அழைத்திடச் சென்றிருந் தால். . . . .! எண்ணும்போதே தலை சுற்றுகிறது! நெஞ்சு விம்முகிறது!

ஆனால், நான் சென்றது அந்நிலையிலா? ஆளவந்தார் களாகி விட்டவர்கள், தாயகத்தைத் தேம்ப வைத்துள்ள நிலையினையல்லவா எடுத்துரைக்கச் சென்றிருந்தேன். நோய் தீர்க்கும் மருத்துவனாகவா சென்றேன்? இல்லையே! இல்லையே? நோயால் பீடிக்கப்பட்டுள்ள மக்களிடம் சென்று, இங்கு உள்ள நோயினைப்பற்றி அல்லவா பேசிவிட்டு வந்தேன்!

மாதுங்கா, தாராவி, டோம்வில்லை, தாணா, செமூர், மான்காடு எனும் பலப்பல பகுதிகளும், குஜராத் மாநிலத்தி லுள்ள ஆமதாபாத்திலும், சென்றிருந்தபோது, திருவிடத்தின் நிலையால் நிலைகுலைந்து, வாழ்வு அழிக்கப்பட்டு, வறுமையால் கொட்டப்பட்டுத் தீப்பிடித்த இடத்திலிருந்து, கருகிய நிலையில், வேறிடம் பறந்துசெல்லும் பறவைகள்போல, வடபுலம் வந்து கூடியுள்ள மக்களைக் கண்டேன் - துக்கமும் வெட்கமும் என்னைப் பிய்த்துத் தின்றது. எந்த வடபுலத்திலிருந்து, பாங்கர் களும், மண்டிக்கடை நடாத்துவோரும், பவுன் வெள்ளி அங்காடி வைத்திருப்போரும், பல பொருள்களை விற்று இலாபம் ஈட்டும் பெரும் பெரும் வணிகர்களும், திருவிடம் வந்து கொலு வீற்றிருக் கின்றனரோ, அங்கு அல்லவா, ஆண்ட பரம்பரையினர், அடிமை களாக, அலுப்பினைக் கவனியாமல் உழைப்போராக, ஆயிர மாயிரம் சென்றுள்ளனர். அந்தேரி பகுதியில், நம்மவர்கள் இருந்திடும் நிலை கண்டோர், திராவிட நாடு திராவிடருக்கு என்பதை வெறும் அரசியல் இலட்சியமாக அல்ல, வாழ்வின் திறவுகோலாகவே மதிப்பர், போற்றுவர்.

தம்பி! இங்கு, ஒரு அரசியல் கட்சி, ஏதோ ஓர் ஆகாத திட்டத்தை கட்டிப் பிடித்துக்கொண்டு அழுகிறது என்று, தம்மை மாமேதைகள் என்றெண்ணி மனப்பால் குடிக்கும் சில மமதையாளர் எண்ணிக்கொண்டுள்ளனர். வடபுலம் சென்று, இரக்கம் நிரம்பிய மனதினராய், தமிழர் அங்கு இருக்கும் நிலையினை அறிந்தால், திராவிடநாடு திராவிடர்க்கு எனும் இலட்சியம் வெற்றிபெற, தி. மு. கழகம் விரைவிலே வலிவு பெற்றாகவேண்டும் என்ற பேருண்மையை, சோரம்போய் விட்டவர்களும் பேரம்பேசி அரசியல் நடத்துவோரும் தவிர மற்றவர் அனைவரும் உணர்வர்; ஒப்புக்கொள்வர்; எங்கெங்கும் எடுத்துரைப்பர்.

ஆமாம், தம்பி! பல்லைக் கடித்துக்கொண்டு, எல்லா இன்னல்களையும் பொறுத்துக்கொண்டிருக்கிறோம். ஒரே ஒரு நம்பிக்கையுடன் - எம்மை எதையும் தாங்கிக்கொள்ளச் செய்வது அந்த நம்பிக்கைதான்! துர்நாற்றமடிக்கும் இடத்தில், நடை பாதையில், மூட்டை சுமப்போராய், வண்டி இழுப்போராய், நரம்பு முறிய எலும்பு நொருங்க, இரத்தம் சுண்ட, உடல் தேயப் பாடுபடும்போது, எனக்கு உயிரூட்டம் தரும்விதமாக உள்ளது அந்த நம்பிக்கைதான். அந்த நம்பிக்கை என்ன? எப்படியும் தாயகம் தலைநிமிர்ந்து நிற்கும்! எப்படியும் தாயகம் தழைக்கும்! எப்படியும் கழகம் அந்தச் செயலில் வெற்றிபெறும்!

கவனிப்பாரற்றுக் கிடந்த நிலை போயேவிட்டது; கழகம் என்ற சொல் கேட்டவுடன் ஆதிக்கக்காரர் முகம் கடுகடுப்பா கிறது. கழகம், ஒரு பெரிய கேள்விக்குறியாகிவிட்டது! அதன் பேருருவம் காணாதார் இல்லை; அதன் முழக்கம் கேட்டிடாதார் எவரும் இல்லை; அதன் வளர்ச்சியைத் தடுக்க முயன்று தோற்றோரின் தொகையே அதிகம்; அந்தத்தொகை வளர்ந்து கொண்டும் வருகிறது. வெற்றி உறுதியாக! வெற்றி நமக்காக! வெற்றி, வேதனை போக்க! வெற்றி புதுவாழ்வு காண!! - என்றெல்லாம், தம்பி! அங்கு உள்ளவர்கள் எண்ணிக் கொண்டுள்ளனர்.

அந்த நம்பிக்கையின் நடமாடும் பிரதிநிதி நான் என்பதால் தான், அவர்கள் என்னைக் கண்டவுடன், கனிவுடன் "அண்ணா' என்றழைத்தனர்; கரங்களை எடுத்துத் தம் கண்களில் ஒத்திக் கொண்டனர்; தம்பி என்னென்பேன், அந்தக் கண்களில் முத்து முத்தாகக் கண்ணீர்!!

தேர்தலுக்கு எம்மாலான நிதி தருவோம், பெற்றிடுக என்றனர்.

தேர்தலை, தம்பி! அவர்கள் ஒரு கட்சிக் காரியமாக, நிச்சயமாக எண்ணி, நிதி திரட்டவில்லை.

ஒரு கட்சி, பதவி பிடித்திட, தேர்தலிலே ஈடுபடுகிறது என்ற, அந்த முறையிலே அவர்கள் எண்ணவில்லை.

நாம் கூடச் சில நேரங்களில், கட்சிக் கண்ணோட்டத்துடன், இந்தத் தேர்தலைக் கவனிக்கிறோம் - வடபுலம் சென்று வாடிக் கிடக்கும் இலட்சக்கணக்கான நம்மவர்களுக்கு, இந்தத் தேர்தல், அரசியல் காரியமாகப் படவில்லை; தமக்கு வாழ்வளிக்க இங்கு எடுத்துக்கொள்ளப்படும் முயற்சியிலே, மிக முக்கியமான கட்டம் என்றுதான் எண்ணுகிறார்கள்.

அந்த முயற்சியின் வெற்றியிலேதான், தமது எதிர்கால நல்வாழ்வே பிணைக்கப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் உணருகிறார்கள்.

அந்த உணர்ச்சி காரணமாகத்தான், என்னைக் கண்டதும், களிப்பால் மட்டுமல்ல, உள்ளுணர்ச்சியால் அவர்கள் கண்ணீர் வடித்தனர்.

தேர்தலிலே, அண்ணா! எப்படியும், தி. மு. கழகம் மகத்தான வெற்றி பெற்றாகவேண்டும் என்று அவர்கள் கூறியது, தம்பி! "எப்பாடுபட்டாகிலும், எம்மைக் காத்திட வழி தேடுங்கள்! இன்னும் அதிக நாட்கள் நாங்கள் நலிந்து கிடக்க முடியாது! நட்டாற்றில் விட்டுவிடப்பட்டவர்கள் போலாகிவிட்டோம். நாதியற்றவர்கள் - நாடற்றவர்கள் - என்று எம்மைக் கேசெய்யும் குரல் எமது செவி வழி நுழைந்து நெஞ்சினைத் துளைக்கிறது. சொந்த நாடு சென்றிடவேண்டும்; சோற்றுக்கு வழியற்று இங்கு வந்து தஞ்சம் புகுந்தவர்கள் என்ற இழிமொழி எம்மைச் செந்தேளாய்க் கொட்டுகிறது. விரைவிலே எமக்கு வாழ்வு அளித்தாகவேண்டும்!!' - என்று அவர்கள் கேட்கிறார்கள். கண்ணீரால் நனைக்கப்பட்ட பணத்தை என் கரம் தந்து அவர்கள் இதைக் கூறினர், தம்பி! நானும் உன் உழைப்பின் மேன்மையிலே, உணர்ச்சியின் மாண்பிலே, அறிவாற்றலிலே நம்பிக்கை வைத்து, நிச்சயமாக இந்தத் தேர்தலில், தி. மு. க. மகத்தான வெற்றி பெறும் என்று வாக்களித்துவிட்டு வந்திருக்கிறேன். வருகிற வழி நெடுக, மனதிலே திகிலும் ஐயப்பாடும் குடைந்தது! உண்மையை மறைப்பானேன், கோவை சிறப்பு மாநாட்டிலே நான் கண்ட கோலாகலக் காட்சியும், கேட்ட வீரமிக்க உரைகளும், கரை புரண்டோடிய உணர்ச்சிப் பெருக்கமும்தான், என் திகிலையும் ஐயப்பாட்டினையும் அகற்றி, வடபுலம் வாடிக்கிடக்கும் நம் உடன் பிறந்தார்களிடம் நான் அளித்துவிட்டு வந்துள்ள வாக்குறுதி - தேர்தலில் தி. மு. க. மகத்தான வெற்றிபெறும் - என்ற வாக்குறுதி, நிச்சயம் நிறைவேறும் என்ற உறுதி ஏற்பட்டது.

அந்த உறுதியுடன் தம்பி! இதோ, தஞ்சை கிளம்புகிறேன் - மணி 5 - மாலை அல்ல, விடியற்காலை!

வேலைகள் செம்மையாக நடந்தபடி இருக்கின்றனவா தம்பி! வெறும் தேர்தல் அல்ல, பதவிபிடி சண்டை - அல்ல - வாழ்ந்த இனம் வீழ்ந்து கிடக்கிறது. அதனை மீண்டும் எழச் செய்யும் முயற்சி!! வாளும் வேலும்கொண்டு நடாத்தப்படும் விடுதலைப்போரினை, இந்த ஜனநாயக நாட்களில், அறிவு, தெளிவு, உறுதி, உழைப்பு எனும் கருவிகள்கொண்டு, நாம் நடத்திக்கொண்டிருக்கிறோம் என்பதை மறவாதே!

ஆதிக்கத்தின்மீது பாயும் கண்கள்!
இரக்கம் துளியும் எழாத மனம்!
இரத்தக்கரை படிந்த கரம்!
இல்லாதவனை எட்டி உதைக்கும் கால்!
காங்கிரஸ் கட்சி இது!!
காப்பாற்றுமோ ஏழை எளியோரை!!

ஆதிக்கத்தின்மீது பாயும் கண்கள்! இரக்கம் துளியும் எழாத மனம்! இரத்தக்கரை படிந்த கரம்! இல்லாதவனை எட்டி உதைக்கும் கால்! காங்கிரஸ் கட்சி இது!! காப்பாற்றுமோ ஏழை எளியோரை!! தம்பி! இதனை நீ அறிந்திருக்கிறாய்; மற்றவர்களும் இதனை உன்னைப்போல உணர்ந்துவிடுவார்களானால், தேர்தலிலே வெற்றி நிச்சயம் என்பதை விளக்கிடவாவேண்டும். மற்றவர்கள் இதனை அறிந்திடச் செய்திட, விரைந்து பணியாற்று. விறுவிறுப் புடன் பணியாற்று; வெற்றி நமதே! அஞ்சற்க!!

மூன்று பெரிய
ஆபத்து

முன்கூட்டியே சொல்லிவிட்டோம்
ஆண்டொன்றுக்கு
ஏழை தலையில் விழப்போகுது
1. ஏழுகோடி ரூபாய் புது வரிகள்.
2. அரிசிச் சாதம் கூடாதென்று
அதிகாரத்தின் துணைகொண்டு
கோதுமை திணிக்கப் போகிறார்கள்.
3. தமிழை அழிக்க இந்தி
தமிழ் எழுத்தை அழிக்க தேவநாகரி
புகுத்திப் பாழ்செய்யத் துடிக்கிறார்கள்.
மூன்று பெரிய ஆபத்து
முன்கூட்டியே சொல்-விட்டோம்
ஆபத்துகளைத் தடுத்திட
ஆற்றலுள்ளது
தி. மு. க.
ஓட்டுகள்
உதய சூரியனுக்கே!
என
நாட்டினர் அறிவித்துவிட்டால்
ஆபத்து இல்லை நாட்டுக்கும்!
அறிவீர்! அறிவீர்! தோழர்களே!!

வீடுதோறும், இதனை எடுத்து விளக்கிடவேண்டும். வருவது தெரியாமலுள்ளோர் பலர் உளர்; நாம் அறிந்திருப்பதை அவர்களுக்கு எடுத்துக் கூறுவது அரசியல் கடமை; மக்களாட்சியில் ஒவ்வொருவரும் செய்து தீரவேண்டிய பொறுப்பு மிகு பணியாகும்.

எத்தனை பெரிய ஆபத்துகள், மக்களைத் தாக்க இருக்கின்றன என்பதை நாம் மட்டும் அறிந்தால் போதாது - நாடு அறியவேண்டும் - அதற்கு, உன் நல்லறிவுப் பிரசாரம் நாளும் தேவை.

வேலை அதிகம், தம்பி! நாட்கள் மிகமிகக் குறைவு!! ஆகவே, வண்டுபோல் சுற்றிடவேண்டும்; நானோ, என் உடல் வலிவுக்கு ஏற்ற அளவினைவிட, மிக அதிகமாகப் பணியாற்றி வருகிறேன் என்பதை, நன்கு அறிந்துதான் இருக்கிறாய்.

இரவு 11 மணி வரையில் கூட்டம் - பிறகு திருக்கோவிலூர், வாணியம்பாடி, திருவண்ணாமலை, செங்கற்பட்டு, மதுராந்தகம் ஆகிய தொகுதிகளின் நிலைமைகள் குறித்து உரையாடல் - மூன்று மணிக்குத்தான் எழுத வாய்ப்பு - இதோ அ. க. தங்கவேலர் அனுப்பிய மோடார் அழைக்கிறது, தஞ்சைக்குச் செல்கிறேன்.

எல்லா ஊர்களுக்கும், ஒவ்வொரு இல்லத்துக்கும், நானே சென்று எல்லாவற்றையும் கூறிட இயலாதே - விருப்பம் உண்டு - நேரம் இல்லை! மேலும் நீயிருக்கப் பயம் ஏன்? என்ற துணிவும் உண்டு. எனவே, தம்பி!

மூன்று பக்கம் கடல் இங்கே!
கப்பற்படை தலைமை வடக்கே!
நியாயமா?
நியாயம் அல்ல என்கிறது
தி. மு. க.
நாட்டினரே
நல்ல தீர்ப்பு
அளியுங்கள்!
உதயசூரியன்
வெற்றி பெற்றால்
புதியவாழ்வு பெற்றிடலாம்
புதுப்புதுத் தொழிலும் கண்டிடலாம்!
கப்பற்படையின் இருப்பிடமாய்
காட்சி தரும் இத்திருவிடமும்!
உலகம் மெச்ச
நாம் வாழ
உதய சூரியன்
ஆதரிப்பீர்,

என்பதனை நாடெங்கும் எடுத்துக்கூறி, நாம், வாழ வழி அமைப்போம், நாடு செழித்திட நல்லாட்சி காண்போம் என்று நம்பிக்கொண்டு, நம்மைக்கண்டதும் நெஞ்சு நெக்குருக நிற்கும், வடபுலம் சென்று வாடிக்கிடக்கும் நம்மவர்கள் மனம் மகிழத் தக்கவிதத்தில், எமது இனம் வீழ்ந்துபட்டுப் போய்விடவில்லை, மரபு அழிந்துவிடவில்லை. மாண்பு கெட்டுவிடவில்லை. இதோ வெற்றி! இதோ திருவிடம்! இதோ நல்லாட்சி! என்று அவர்கள் களிப்புடன் முழக்கமிடத்தக்க வெற்றிகளை, தேர்தல் களத்திலே பெற்றளிக்க, உன் முழு ஆற்றலைத் தந்தாகவேண்டும்.

வேலை அதிகம்! நாட்கள் குறைவு! மறவாதே!!

அண்ணன்,

24-12-1961