காங்கிரஸ் ஆட்சியில் வரிச்சுமை -
தி.மு.க. வுக்கு ஓட்டு
தம்பி!
தங்கம் விளையும் நம்நாட்டினிலே
தரித்திரம் இருப்பதும் எதனாலே...?
தட்டிக் கேட்டிடுந் தமிழ்வீரர்
சட்ட சபைக்குள் இல்லாமையால்!
தட்டிக் கேட்டிடுந் தமிழ்வீரர்
சட்ட சபைக்குச் செல்லாததேன்...?
வெட்டிப் பேச்சு வீணர்கள்தம்
வெறும்பேச்சு வெற்றிபெற்றதனால்!
இரும்பு கிடைக்கும் நாடிதனில்
இல்லாமை வாட்டுவதும் எதனாலே...?
தூங்கும் இரும்பை எழுப்பிவிடத்
துரைத்தனம் நமக்கென்று இல்லாததால்...
துரைத்தனம் நமதாக இல்லாததேன்...?
வடநாட்டுக் கடிமை ஆனதாலே...!
வடநாடு வாழ்வதும் எதனாலே...?
தென்னாட்டைச் சுரண்டும் வலியாலே...!
சுரண்டும் வல்லமை எதனாலே...?
சர்க்கார் டில்லியில் இருப்பதாலே!
டில்லியில் சர்க்கார் அமைவானேன்?
தேசியம் பேசியோர் ஏய்த்ததனால்!
தமிழர் உண்மையை அறியாததேன்?
தினசரி ஏடுகளின் புரட்டாலே...!
புரட்டொழியும் காலம் வாராததேன்...?
அறிவுத்தெளிவைப் பாமரர் அடையாததால்...!
இதையெல்லாம் இன்று கூறுவதேன்...?
இனியேனும் ஏமாற்றம் தெளிவதற்கே!
ஏமாற்றுக் காரரிடம் சிக்குவதேன்...?
சுண்ணாம்பை வெண்ணெய் என்பதாலே
தெளிவினைப் பெறுவது எப்போது?
தேர்தல் பொறுப்பறியும் போது...
பொறுப்பினை உணர்ந்தோர் செயல் யாது?
புது ஆட்சி அமைத்திட வழிகாணல்.
ஆட்சியில் புதுமை கேட்போர் யார்?
அருந்தொண் டாற்றிடும் தி. மு. க.
காங்கிரஸ் ஆட்சி வேண்டாமோ?
காட்டுத் தீயை வேண்டுவையோ...?
வீட்டு விளக்குத் தி. மு. க.
நாட்டுத் தொண்டன் அதுவேயாம்!
வீட்டு விளக்கை ஏற்றிடுவீர்!
நாட்டு நலனைப் பெற்றிடுவீர்!
எனக்கு மட்டும், நடிப்பிசைப்
புலவர் கே. ஆர். இராமசாமி யின் குரல் இனிமை இருந்தால்,
வீடெல்லாம் கேட்கும்படி நாடெங்கும் சென்று இதுபோலப் பாடிக்
காட்டுவேன்! பாடல் ஏதேனும் சுவைபடப் பாடிட வேண்டும் என்பதாலே
அல்ல; நாடு கேட்டிட வேண்டிய "செய்திகள்' இதுபோல, எங்கும்
பரப்பப்பட வேண்டும் என்ற ஆர்வத்தினாலே.
பேச்சாலும், பாட்டாலும்,
கூத்ததனாலும், ஓவியங்களின் துணைகொண்டும், தம்பி! நாம்
நாட்டுமக்களுக்கு, நல்ல முறையிலே அரசியல் சூழ்நிலைகளை
எடுத்து விளக்கி, அனைவரும் உண்மையை உணர்ந்திடச் செய்தால்
மட்டுமே, நாம் எடுத்துக் கொண்டுள்ள காரியத்திலே வெற்றி
கிட்டும்; அந்த வெற்றியைப் பொறுத்தே இருக்கிறது மக்களாட்சியிலே
மாண்பு வளருவது! நோக்கம் தூய்மையானது என்பதனாலேதான்,
பணபலமற்ற நாம் இந்தக் கடுமையான "பலப் பரீட்சை'க்கு நம்மை
நாமே உட்படுத்திக்கொண்டோம். நானோர் கூட்டத்திலே கூறினேன்,
"தம்பி, பணம் இருக்கிறது ஏராளமாக, காங்கிரசாரிடம்; ஆனால்
அந்தப் பணத்துக்குப் பலம் இல்லை'' என்று. சொல்லழகு கருதிக்
கூறினதல்ல, உள்ளத்திலே உண்மையாகப்பட்டது; சொன்னேன். நான்
அங்ஙனம் பேசிக்கொண்டிருந்தது, சேறும் சகதியும் நிரம்பியதோர்
திடல்! மழை வேறு பெய்துகொண்டிருக்கிறது! எனினும், ஆடவர்
அனைவரும், பெருமழை பற்றிப் பொருட்படுத்தாமல், நாங்கள்
இருக்கிறோம் காண்பாய், என்று பெருமிதத்துடன் என்னை நோக்கி
விழி மூலம் மொழிந்திட விழைந்தனர்; ஆனால் அவர்தம் எண்ணம்
ஈடேற வழி இல்லை! ஏனென்று கேட்கிறாயோ!! மழை பெய்வது பற்றித்
துளியும் கவலையற்றுத் தாய்மார்கள் பலர் அந்தத் திடலில்
நின்று கொண்டிருந்தனர்! அவர்களின் ஆர்வத்தைக் கண்ட பிறகு,
ஆடவர் காட்டிய ஆர்வத்துக்குத் தனிச் சிறப்பு எங்ஙனம் இருந்திட
முடியும்!
திடலில் நான் பேசிக்கொண்டிருக்கிறேன்
- எதிர்ப்புறத்தே, பெரியதோர் மாளிகை! உட்புறத்தின் உன்னதம்
எப்படி இருக்குமென்பதை வெளிப்புறத்தின் கெம்பீரத்தைக்
கொண்டுதான், நீயும் நானும் யூகித்துக்கொள்ள வேண்டும்.
அந்த மாளிகை, முதலமைச்சரும், துணை அமைச்சர்களும் துணிந்து
கொள்கையைத் துறந்ததால் அமைச்சர்களானோரும், வீற்றிருந்திடும்
நிலைபெற்றது!
டில்லி, நிதி அமைச்சர்
டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரின் மாளிகை தம்பி! உனக்கும்
எனக்கும், ஏழை எளியவர்களுக்கும், உடலிலே அழுக்கு இருந்திடலாகாதே
என்ற அக்கறையால் உந்தப்பட்டு, வெள்ளைக்கார நாட்டுச் சோப்புக்
கட்டிகளை வண்டி வண்டியாகத் தருவித்து விற்று, "தேச சேவை'
செய்து வந்த சீமானுடைய சிங்கார மாளிகை!
மகாத்மா கோலைக் கையில்
பிடித்தபடி தண்டிக்கு "யாத்திரை' சென்றாரே, அப்போதும்
சரி, சபர்மதி ஆஸ்ரமம் அமைத்து சத்தியாக்கிரகத் தத்துவத்தை
நாட்டுக்கு அளித்தாரே, அப்போதும் சரி, எர்வாடா சிறையிலே
அடைக்கப்பட் டிருந்தாரே அப்போதும் சரி, இந்த மாளிகை வாசி,
வெள்ளையன் நடத்திடும் கொடுமையைக் கண்டு வெதும்பின தில்லை
காந்தியார் ஏற்றுக்கொண்ட கஷ்ட நஷ்டம் கண்டு இந்த கனவான்
கலங்கினதில்லை! இந்தச் "சேதி'களையெல்லாம் படித்திடவாவது
அவருக்கு நேரம் இருந்ததா என்பதுகூட ஐயப்பாடுதான். டன்
ஒன்றுக்கு இலாபம் நானூற்று நாற்பத்தைந்து வீதம் ஆறாயிரத்துப்
பதினாலு டன் சோப் விற்றதிலே, "இலாபம், வரவு... என்ற "கணக்கு'
பார்த்திடவே கருத்தைச் செலவிட முடிந்தது; அவர் இப்போது,
நிதி அமைச்சர், காங்கிரசாட்சியில்! மகாத்மாவின் மாண்பு
பற்றி, அவரை அழைத்துப் பேசச் சொன்னால், அற்புதமாகப் பேசுவார்!
அவருடைய அணிமாடத்துக்கு எதிர்ப்புறத்தில், ஆளை அழுத்திவிடும்
சேறும், காலைக் குத்திவிடும் கள்ளியும் முள்ளும் நிரம்பியதோர்
திடலில், நான் பேசுகிறேன்! எத்தனைத் தள்ளு எண்ணற்ற மக்கள்,
தி. மு. கழகத்துக்கு ஆதரவு அளித்திட ஆர்வத்துடன் வந்துகூடி
வாக்களிக்கின்றனர்.
இந்தத் திடலுக்கு நான்
சென்று கொண்டிருந்தபோது, தம்பி, வெகு அருகாமையில், புயலையும்
எதிர்த்து நிற்கக்கூடிய தன்மையில் அமைந்திருந்த பெரியதோர்
அலங்காரக் கொட்டகையைக் கண்டேன்! ஜெகஜ்ஜோதியாக இருக்கிறது
என்பார்களே, அப்படி மின்சார விளக்குகள்! நூறு மோட்டார்
களுக்குக் குறைவிராது! உள்ளே "ஆலாபனை'!! தம்பி! சங்கீத
வித்வத் சபையின் விழாக் கொட்டகை அது. அதையும் பார்த்துவிட்டு,
திடலில் சென்று நமது கூட்டத்தையும் பார்த்தேன்! எதிரேயோ,
சோப்புச் சீமானுடைய மாளிகை!! என்னென்ன தோன்றியிருக்கும்?
எண்ணிப்பார், தம்பி எண்ணிப்பார்! உனக்கும்தான் என்னென்ன
தோன்றுகிறது. கூறேன்!!
"காம்போதியடி, காவேரி!
அவர் பாடிக் கேட்கவேண்டும் இவருக்கு எப்போது "வராளி'தான்''
"அதென்னடி அம்சா! அப்படிச்
சொல்லிவிட்டாய். போன மாதம் இவர், ரசிக ரஞ்சனி சபாவில்,
தோடி பாடினார், என்ன பிரம்மானந்தமாயிருந்தது தெரியுமோ...''
"உன்னைப்போலத்தான் ஊர்மிளா
சொல்கிறாள்...''
"அது கிடக்குது. ஏண்டி ஊர்மிளா
ஆத்திலே ஒரு உம்மணாமூஞ்சி வந்திருக்கே, யார் அது?''
"நேக்கு என்னடி தெரியும்.
ஒவ்வொரு புதுமுகம் வருகிற போதும், அவ, ஒவ்வொரு புது
உறவாச் சொல்றா. யார் கண்டா?''
"போடி! போக்கிரி! நோக்கு
எப்பவும் சந்தேகம் தான்.''
"தப்படி அம்மா, தப்பு! சாட்சாத்
ஜானகி அவள், போதுமோ... சரி, சளசளன்னு நாம பேசிண்டிருந்தா,
சபாக்காரா கோபிப்பா... இதோ "ஜாவளி' ஆரம்பிச்சுட்டார்
கேட்போம்.''
தம்பி, ஒவ்வொரு உருவமும்
ஒரு இலட்சத்தைச் சுமந்து கொண்டு, இதுபோல உல்லாசமாக உரையாடிக்
கொண்டிருக்கும் இடம், அந்தக் கொட்டகை.
திடலிலே கூடிய நமது மக்களோ
தோடிக்கும் காம்போதிக்கும், காதுகொடுக்க நேரம் படைத்தவர்களா!
"ஏன் இன்னும், மார்வாடி
பாக்கியைக் கட்டணும் என்கிற பயம் வரலியா?''
"பணம் வந்தாத்தானே!''
"போன இடத்திலே...''
"போய் வா என்கிறான்...''
"உடனே நீ வந்துவிட்டாயா?
ஆமா இப்படி இருந்தா எப்படி ஆகும்! அவன் ஈவு இரக்கம் இல்லாதவனாச்சே!
உள்ளே புகுந்து, சாமான்களைக்கூடத் தூக்குவானே...''
"தூக்குவாண்டி, தூக்குவான்!
இந்த துரைசாமி பிணமானா தூக்குவான்! இப்ப. உள்ளே நுழைந்தா,
என்ன நடக்கும் தெரியுமேல்லோ, எலும்புக்கு ஒரு அடியா எண்ணி
அடிப்பேன்...''
"போதுமே, உன்னோட வீராவேசம்.
பட்ட கடனைக் கட்ட வக்கு இல்லாவிட்டாலும், "பட்டாசு' வெடிக்கிற
மாதிரிப் பேசறதிலே குறைச்சல் இல்லே...''
தம்பி! நமது ஏழைக் குடும்பங்களிலே
இதுபோன்ற ஆலாபனங்களும், அதற்கேற்ற தாளவரிசைகளும்தானே
காண்போம்!
அந்த அலங்காரக் கொட்டகை,
எதிரே இருக்கும் சீமானின் மாளிகை, இவற்றைக் கண்டதாலே,
எனக்கு இவ்விதமெல்லாம் எண்ணம் பிறந்ததே தவிர, ஆர்வம் பொங்கிடும்
நிலையில் பல்லாயிரவர் அங்கு திடலில் மழையையும் பொருட்படுத்தாமல்
நின்று கொண்டிருந்ததைக் கண்டபோது, ஏக்கம் பறந்த இடம்
தெரியவில்லை; அதுமட்டுமல்ல, என் உள்ளம் சொல்லிற்று, "இதோ
நீ காணுகின்றாயே, உழைத்து அலுத்த மக்கள்! ஊர்வாழ உழைப்பவர்கள்!
ஏழை எளியவர்கள்!! நாளைக்கு என்ன என்று இன்று கூறிட முடியாத
நிலையினர்! நாலு நாட்கள் படுக்கையில் படுத்தால், குடும்பம்
என்ன செய்யும் என்ற கவலைப்பட வேண்டியவர்கள்! இந்த ஏழை
எளியவர்கள் ஒன்றுபட்டு நின்றிடும்போதெல்லாம் மாட மாளிகையும்
கூட கோபுரமும் சரிந்ததாகத்தானே வரலாறு சாற்றுகிறது! ஏதேதோ
படித்தேன் என்று பேசுவாயே, பேதையே! இந்த மக்கள் சேற்றிலும்
சகதியிலும் இருந்தால் என்ன! சீமான்கள் மாளிகைகளிலே இருந்திட்டால்
என்ன! கவலை குடைவானேன், கற்றதை மறந்திட்டாலொழிய! அவர்கள்
சிலர்; நாம் மிகப் பலர் என்று ஷெல்லி கூறினானே, கவிதையைப்
படித்துப் படித்துச் சுவைத்திருக்கிறாயே! இப்போது ஏன்
கவலை! நிமிர்ந்து நில்! நாட்டுக்குடையவர் எதிரே இருக்கிறார்கள்
அஞ்சாமல் பேசு! ஊராள்வோர் யார் என்பதைத் தீர்மானிக்கும்
தகுதியும் உரிமையும் படைத்தோர் உன் எதிரிலே, எனவே ஏக்கமற்று,
கூறவேண்டியதை எடுத்துக் கூறு என்று கட்டளையிட்டது; பேசினேன்.
இதை உன்னிடம் இப்போது நான்
சொல்வதற்குக் காரணம், தம்பி, தேர்தல் நெருங்க நெருங்க,
காங்கிரஸ் கட்சியின் பணம், பல உருவங்களிலே நாட்டில் ஏராளமாக
நடமாடும் கவலை! குறையட்டும், மருட்சி ஏற்படட்டும் என்பதற்காகக்
கூறுவர். இந்தத் தொகுதியில் உள்ளவர் புத்தம்புது நோட்டுகளாக
எழுபத்து ஐயாயிரம் அடுக்கி வைத்து விட்டாராம்; அந்தத்
தொகுதியிலே, கிராமத்துக்கு நாலாயிரம் வீதம் பணம் ஒதுக்கி
விட்டாராம்; என்றெல்லாம் பேசுவர்; அந்தச் சமயத்திலெல்லாம்,
தம்பி, நீ நண்பர்கட்குச் சொல்லு, காங்கிரசிடம் பணம் இருக்கிறது,
ஆனால் அந்தப் பணத்துக்குப் பலம் இல்லை என்று எடுத்துக்
கூறு. நாட்டிலே உள்ள நல்லவர்களைக் கேட்டுப்பார். உங்கள்
கட்சி எந்தக் கட்சி என்று எடுத்துக் கூறச் சொல்லு.
எந்தக் கட்சி உங்கள் சொந்த
கட்சி
இராமநாதபுரம் ராஜா
செட்டிநாட்டு ராஜா
குட்டிக் குபேரர்கள்
ஆலை முதலாளிகள்
ஆகியோர் கொட்டமடிப்பது
காங்கிரஸ் கட்சி.
பாடுபட்டுப் பிழைப்போரே!
உழைத்து உருக்குலைந்தோரே!
உங்கள் கட்சியாகக் காங்கிரஸ் இருக்க முடியுமா?
என்று கேட்டுப்பார்! பதில்
அளிக்கத் தயங்குவர், தம்பி, உடனே மீண்டும் அவர்களை நோக்கிக்கேள்,
புள்ளிமான் குட்டிக்கு
புலியா பால் கொடுக்கும்?
என்று!
ஏழை எளியவர்கள், நடுத்தரக்
குடும்பத்தார், பணம் காங்கிரஸ் கட்சியிடம் இருப்பது கண்டு
அஞ்சத்தான் செய்வர். ஆனால் அந்த அச்சத்துக்கு இடமளித்தால்,
உள்ள கஷ்டம் ஓராயிரமாகி, வாழ்வில் மேலும் வேதனை படர்ந்திடும்
என்பதை எடுத்துக் கூறுவதோடு,
பாடம் புகட்டுவீர்!
வரிச்சுமை ஏறிக்கொண்டேதான்
இருக்க வேண்டுமா?
விலைவாசியும் ஏறிக்கொண்டேதான்
இருக்குமா?
வாழ்விலே விசாரம் இருந்துகொண்டுதான்
வரவேண்டுமா?
பரிகாரம் தேடவேண்டாமா?
ஆளும் கட்சிக்கு உங்கள்
அல்லல் தெரியவேண்டாமா?
உங்கள் மனக்குறை தெரிந்தால்தானே,
ஆளும் கட்சி குறைபாடுகளைப் போக்கும்?
மீண்டும் உங்கள் ஓட்டுகளைக்
காங்கிரசுக்கு அளித்தால் குறைபாடு நீடிக்கும்; கசப்பு
வளரும்.
இந்த முறை பாடம் கற்பித்துப்
பாருங்கள்!
தட்டிக் கேட்டிட,
சர்வாதிகாரம் சாய்ந்திட,
தி.மு.க. அபேட்சகர்களுக்கு
ஓட்டு அளியுங்கள்.
புது வாழ்வுக்கு வழி காணுங்கள்!
என்ற நல்லுரையை அளித்திடு,
இல்லமெல்லாம் நல்லோர் உள்ளமெல்லாம், உண்மை சென்று தங்கிடும்
வகையிலே எடுத்துக் கூறிடு. பிறகு பார், வெற்றி நம்மைத்
தேடி வருகிறதா, இல்லையா, என்று.
பணம் இருக்கிறது காங்கிரசாரிடம்,
ஆனால் அதற்குப் பலம் இல்லை என்று நான் கூறுவதற்குக் காரணம்,
தம்பி! நாட்டு மக்களே சிறிதளவு சிந்தித்தாலே தெரிந்து
கொள்வார்கள். அந்தப் பணம், ஏழை எளியவர்களைப் பார்த்து
நொந்த வாழ்விலே சிக்கிக் கிடக்கும் நடுத்தரக் குடும்பத்தினரைப்
பார்த்து, என்ன பேசுகிறது என்கிறாய்! "உன் கஷ்டமெல்லாம்
தீர்ந்து போகும்! காருள்ளளவும், கடல் நீர் உள்ளளவும்,
உன்னைக் கலி தீண்டாது. உன் மாடுகளை, மக்கள் சுற்றம் எல்லாமே
இன்பம் பெறும்!'' என்றா பேசும். ஒருபோதும் இல்லை. "பாடுபடுபவனே!
என்னைக் காட்டி உன்னை ஏய்க்கிறானே எத்தன்! ஏமாளியாகலாமா?
நான் எத்தனை நாள் உன்னோடு இருக்கப் போகிறேன்! ஒரு நொடியில்
உருண்டோடிப் போவேன். உன் வேதனை அத்தனையும் நான் தீர்க்கவா
போகிறேன்? உன் எதிர்காலத்தை, உன் குடும்ப நலனை, உன் நாட்டின்
தன்மானத்தை, அத்தனையையும் இழந்து விடுகிறாய், இளித்துப்
பேசிடும் இந்தப் பேர்வழி என்னை உன்னிடம் தந்ததால்! என்னைக்
கண்டு மயங்கி விட்டால், பிறகு உன் உரிமையை இழக்க நேரிடும்,
ஊராள வருவோர் உன்னையே உதாசீனப் படுத்துவார்கள். உன்னைப்
பெயரிட்டும் அழைக்க மாட்டார்கள், நீ பெற்ற தொகையைக் குறிப்பிட்டு
அழைப்பார்கள், யார் வருவது ஆறணாவா? ஓஹோ எட்டணா வருகிறதா?
வாங்கய்யா ஒரு ரூபா! வாங்க வாங்க பச்சை நோட்டு! - என்று
பரிகாசம் பேசுவார்கள். ஊர் வாழத் திட்டமிடக் கூடாதா என்று
அவர்களைப் பிறகு நீ உரிமையோடு கேட்டிட முடியாது. போதுமய்யா,
போதும், என்ன செய்யவேண்டும், எப்படிச் செய்யவேண்டும்
என்பது எமக்குத் தெரியும் - "ஓட்டுப் போட்டதாலேயே ஏதும்
பேசிவிடலாம் என்று எண்ணிக் கொள்ளாதே, எல்லாம் எட்டெட்டணா
கொடுத்துத்தான் ஓட்டுப் பெற்றோம், என்று அலட்சியமாகத்தான்
பேசுவர். எனவே, வேண்டாமய்யா இந்த அற்ப ஆசை - என்னைத் திருப்பி
அவன் முகத்திலே வீசி எறிந்துவிடு! வெட்கமும் வேதனையும்
ஏற்படுத்திக் கொள்ளாதே'' என்றல்லவா அந்தப் பணம் பேசும்.
ஆகையினாலேதான் தம்பி, காங்கிரசிடம் பணம் இருக்கிறது, ஆனால்
பலம் இல்லை என்று கூறுகிறேன். சரிதானே நான் சொல்வது?
உழைப்பாளர்களுக்கு மட்டும்,
அவர்கள் எப்படியெப்படி வஞ்சிக்கப்பட்டுவிட்டிருக்கிறார்கள்
என்பது நல்ல முறையிலே அறிவிக்கப்பட்டால், தம்பி, அவர்கள்,
காங்கிரசார் ஓட்டுகளைப் பறிப்பதற்காகக் காசு வீசும்போது,
காரித் துப்புவார்களேயன்றி, ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
"ஆஹா! அழகு! அழகு! அற்புதம்!
அற்புதம்!'' என்று - சொன்னது புலி.
"புலியாரே! புலியாரே! எதன்
அழகு பற்றிப் பேசுகிறீர்?'' என்று கேட்டது ஓநாய்.
"ஓநாயாரே! மானின் உடலிலே
உள்ள புள்ளியின் அழகைத்தான் சொல்கிறேன்'' என்று புலி
சொல்லிற்று!
"புலியாரே! நான் கூடப் பார்க்க
வேண்டுமே, எங்கே அந்தப் புள்ளிமான்?'' என்று கேட்டது ஓநாய்.
"என் வயிற்றிலே!'' என்று
கூறிக்கொண்டே, ஏப்பம் விட்டது புலி!
இது காட்டில் நாட்டில்
"ஏழையின் உழைப்பு எவ்வளவு
அருமை தெரியுமா?' என்று பூரித்துப் போகிறான் முதலாளி.
"அப்படியா? எங்கே அவனைக்
காட்டும் பார்க்கலாம்,' என்று கேட்கிறது சர்க்கார் - சில
வேளைகளில்.
"முடியாதே! அவன் என் வயிற்றுக்குள்ளே
அல்லவா இருக்கிறான்! விழுங்கிவிட்டேனே' என்று கூறிவிட்டு,
ஏப்பம் விடுகிறான் முதலாளி.
"அப்படியா! அதிர்ஷ்டக்காரனய்யா
நீ' என்று கூறுகிறது, சர்க்கார்.
இந்த ஆட்சிமுறை நீடிக்கவே
காங்கிரஸ் ஓட்டுக் கேட்கிறது.
இந்தச் சூட்சமம் தெரிவிக்கப்பட்டு,
மக்கள் விழிப்புணர்ச்சி பெற்றுவிட்டால், காங்கிரசினிடம்
குவிந்துள்ள பணத்துக்குப் பலம் எப்படிக் கிடைக்கும்? எண்ணிப்
பார்!
திராவிட நாடு
ஓட்டுகளைத் தட்டிப் பறிப்பதற்கு
காங்கிரசில் குடி புகுந்துள்ள சீமான்கள், பணத்தைக் கொட்டித்
தருகிறார்கள், "ஈட்டி எட்டின மட்டும் பாயும், பணம் பாதாளம்
வரை பாயுமே'' என்று இறுமாப்புடன் பேசுகிறார்கள்; ஆனால்,
தம்பி, இத்தகையவர்கள் ஆட்சியில் அமர்வதால் என்ன நேரிடும்
என்பதை நாட்டு மக்கள் எண்ணிப் பார்க்காமலா இருப்பார்கள்?
ஒன்றுக்குப் பத்தாக, இதே
மக்களிடமிருந்து வரி போட்டு வாங்குவர். வாணிபத்தில் ஈடுபட்டு
இலாபம் குவிப்பர். இலட்சம் செலவிட்டால், கோடி குவித்துக்
கொள்வர்.
கெண்டையை வீசுகிறார்கள்!
எதற்கு? வரால் பிடிக்க!
ஓட்டுக்குப் பணம் வீசுகிறார்கள்!
எந்த நோக்கத்துடன்? ஆட்சியில் செல்வாக்குப் பெற்று, ஒன்றுக்குப்
பத்தாக, அதே ஏழையைக் கசக்கிப் பிழிந்து, சுவைக்கலாம்,
கொழுக்கலாம் என்ற நோக்கத்துடன்.
இப்போதே, ஆட்சியில் அமர்ந்திருப்பவர்,
போடும் திட்டம்பற்றி எடுத்துக்கூறு.
* * *
நகைகள்
ஜாக்கிரதை
வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி
நகை செய்தீர்கள்
தாய்மார்களே!
சர்க்காருக்குத் தங்கம் வேண்டுமாம்
டாட்டா
பிர்லா
டால்மியா
ராஜா சர். அழகப்பா
போன்றோரிடம் கேட்கவில்லை.
தாய்மார்களே!
உங்கள் நகைகளைக் கேட்கிறார்.
காங்கிரஸ்
நிதி அமைச்சர்!
கூசாமல் பேசாமல் இருந்தால்
கேட்கிறார்! சட்டம் வரலாம்!
பொதுத் தேர்தலில்
காங்கிரசுக்கு
ஓட்டு அளித்தால்
உங்கள் நகைகளைப் பறிக்கும் திட்டத்துக்கு நீங்களே சம்மதமளித்ததாகப்
பொருள்!
தாய்மார்கள் எமக்கே ஓட்டு
அளித்தனர். எனவே, அவர்களின் நகைகளைப் பறிக்க, எமக்கு உரிமை
உண்டு' என்று காங்கிரஸ் கட்சி வாதாடும்!
மாட்டுப் பெட்டிக்கு
ஓட்டளிக்காதீர்
பூட்டியுள்ள நகைகளைப்
பறிகொடுக்காதீர்!
தி. மு. கழக அபேட்சகர்களுக்கு
ஓட்டு அளியுங்கள்.
பூட்டியுள்ள பொன்னாபரணத்தைப்
பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
இதை எடுத்துக்காட்டு நாட்டு
மக்களிடம் - ஓட்டளியுங் கள் பணம் தருகிறோம் என்று பேசும்
காங்கிரஸ் கனவான்களை, கண்ணாலே காண்பதே தமக்குக் கேடளிக்கும்
என்று மக்கள் உணருவார்கள்.
இந்த நம்பிக்கை எனக்கு இருப்பதனால்தான்,
நான், சக்தி நிரம்பிய திடலில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது,
சங்கீத விழாவிலே கூடி இருந்த சுகவாசிகளும், மாளிகையிலே
கூடியிருந்த சீமான்களும் என் மனக்கண்முன் தெரிந்தபோதிலும்,
கலங்காமலிருந்தேன். மக்களின் கண்களிலே வீசிய நம்பிக்கை
ஒளி, உண்மையிலேயே, சீமான் விரலிலே மின்னிடும் வைரத்தின்
ஒளியைவிட, உயர்தரமானதல்லவா! ஏழையின் இதயத்திலிருந்து கிளம்பி
அவன் கண்களிலே கூத்தாடும் ஒளிக்கு உள்ள பொலிவும், வலிவும்
வேறு எங்கு காணமுடியும் - நாம் பெற்றெடுத்த மதலையின் புன்னகையிலும்,
நமக்கு அந்தச் செல்வத்தை அளித்த சேல்விழியாளின் கண்வீச்சிலுமன்றி!
எனவே தம்பி, நம்பிக்கையுடன்
பணியாற்று; நாடு நமது பக்கம் என்பதை அறிந்து பணியாற்று!
வெற்றிக்கு வழிகாட்டு.
அண்ணன்,

6-1-'57