பெரியார் -
மாநில மாநாட்டில் தேர்தல் முடிவு.
தம்பி,
நான் உண்மையைப் போல் கர்ணகடூரமாய்
இருப்பேன்.
நீதியைப்போல் நெறி பிறழாதிருப்பேன்.
ஒப்புக்கு நடிக்கமாட்டேன்,
உண்மையாகவே உழைப்பேன்.
இரண்டுபடப் பேசேன், சாக்குப்
போக்குக் கூறேன்.
அதனால் நான் கூறுவதற்கு
யாரும் செவி சாய்க்காமலிருக்க முடியாது!
ஏ! அப்பா! எவ்வளவு ஆணவம்
ஒலிக்கிறது - இவர் பேசுவாராம், கேட்டே திருவேமாமே! எத்துணை
அகம்பாவம்!
செவிக்கு இனிமைகூட இருக்காதாம்
- எனினும், இவர் பேசுவதை ஒருவரும் தள்ளிவிட முடியாதாமே!
அதென்ன "மாய சக்தி' யோ!
பேசட்டும், பேசட்டும், நா
உலரும் வரையில் பேசிக் கொண்டே இருக்கட்டும் - நாம் இவர்
பேசுவதை எப்படியும் கேட்டே தீருவோம் என்று நம்பிக்கொண்டு,
நப்பாசை கொண்டு பேசிப் பேசிப் பிறகு கேட்பாரில்லை, மதிப்பார்
இல்லை என்பதை உணர்ந்து, வெட்கித் தலை குனியட்டும்; வேதனைப்
படட்டும். இவர் பேசுவாராமே! கேட்டே தீருவாராமே! பார்ப்போம்
பார்ப்போம்.
குழலாயினும், யாழாயினும்,
காதலைக் குழைத்தளிக்கும் கீதமேயாயினும், விருப்பமில்லை
என்றால் கேளாமல், பலர் தம் அலுவலைக் கவனித்துக்கொண்டு
போய்விடக் காண்கிறோம்.
வேலை மிகுதியிருந்தாலோ,
வேதனை ததும்பிடும் நிலையிலிருந்தாலோ, வித்தகர் பேசுவதைக்கூட
வேம்பென ஒதுக்கிடக் காண்கிறோம் - இகத்திலே இன்பமும் பரத்தில்
பேரின்பமும் பெற்றிடும் மாமந்திரமோ இவர் எடுத்துரைக்கப்
போவது! எப்படியும் செவியில் வீழ்ந்து தீருமாமே! ஆளைப்பார்
ஆளை! கர்த்தர் அனுப்பிய தூதுவரோ, நாம் கவனியாம லிருந்தாலும்,
தானாக உள்ளத்தை ஈர்த்திட!
கர்ணகடூரமாகவே பேசுவாராம்
- காது கொடுத்தே தீருவோமாம்!!
தம்பி! நான் பேசுவேன், நீங்கள்
கேட்டே தீருவீர்கள் என்று கூறிய ஒரு பெரியவர் பற்றி, பேதைகளல்ல
- மேதைகளென்ற புகழணி கொண்டோர்கூட இவ்விதம்தான் ஏளனம்
பேசினர். எனினும் இறுதியில், அவர்களல்ல, உள்ள உறுதியைத்
தம் உரை மூலம் காட்டிய வில்லியம் லாயிட் காரிசன் எனும்
உரிமைப் போரார்வம் கொண்ட பெரியவர்தான் வென்றார்! அமெரிக்கா
அவர் பேச்சைக் கேட்டது - எழுத்தைப் படித்தது - எண்ணத்தை
ஏற்றுக்கொண்டது - சட்டமே இயற்றிற்று அவர் கோரிக்கையை
நிறைவேற்ற!
இத்தனைக்கும் அவர் பிறப்பு
- இறப்பு என்பதிலே தொக்கி நிற்கும் மர்மத்தை விளக்கிடும்
தத்துவம் பேசவில்லை.
மரணத்துக்குப் பின் ஜீவன்
உண்டா! இங்கு மரித்தவன் பிறகு எங்கேனும் செல்கிறானா? அங்ஙனமாயின்,
எங்ஙனம்? வடிவம் உண்டா? தனியானதோர் வாழ்வு உண்டா? என்ற
கேள்விகளைக் கிளப்பி விடைகளை அளித்திடும் "வித்தை'யைச்
செய்து காட்டினவரல்ல, அருளாளரல்ல!! மனித உரிமை மதிக்கப்பட
வேண்டும், மிதிக்கப்படக் கூடாது என்ற ஆர்வம் கொந்தளிக்கும்
உள்ளம் படைத்த ஒரு சாமான்யர்! அமெரிக்காவில் தலைவிரித்தாடிய
"அடிமை வாணிபத்தை' - அடிமை முறையைக் கண்டித்தவர் - மக்களிடம்
பேசினார், செவியில் விழவில்லை - இதழ்களில் எழுதினார்,
எவர் கண்களிலும் படவில்லை! முச்சந்திகளில் நின்றுகொண்டு
சத்தற்ற விஷயம் பற்றிச் சுவை சொட்டச் சொட்டப் பேசி இரசித்திடும்
வம்பளப்போர் கூட, இவன் யாரடா வரட்டுக் கூச்சலிட்டுக்
கொண்டு வாட்டி வதைக்கிறான்! - என்றுதான் எள்ளி நகையாடினர்.
மேதைகள் இலக்கியச் செறிவு
குறித்தும், இலக்கணம் அளிக்கும் வடிவழகு பற்றியும் பேசினர்
- எழுதினர் - வாதங்கள் புரிந்தனர்!
கடைக்கண்ணின் பொலிவுக்கும்
கட்கத்தின் வலிவுக்கும் தம் எழுத்துத் திறமையைக் காணிக்கையாக்கி,
படிப்போரின் இதயங்களைத் தடவி மகிழ்ந்தனர் கதாசிரியர்கள்.
வணிகர்கள் கடலிடை உள்ளதையும்,
காட்டிடை காணப்படுவதையும், மலைபடு பொருளையும், மக்கள்
தம் உழைப்பால் உருவம் பெறுவதையும், நானிலமெங்கும் கொண்டும்
கொடுத்தும், இலாபம் திரட்டி மகிழ்ந்தனர்.
ஆட்சியாளர்களோ, சட்டம்
சரியாமலும், சமூகத்தின் அமைப்பு மாறாமலும் இருந்திடத்
தம் ஆற்றலைப் பயன்படுத்தினர்.
ஒருவரேனும், மிருகமாக்கப்பட்ட
மனிதனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை, ஏனென்றும் கேட்கவில்லை!
பட்டியில் மாடென அடைத்து
வைத்தனர்.
பன்றிகளுக்குப் போடும்
தீனியை அவனுக்கு வீசினர்.
அவனை அடிமை கொண்டவன், ஆயாசப்படுகிறான்,
அவன் துள்ளித் துடித்துக் கீழே துவண்டு விழவில்லையே, சவுக்கடி
கொடுத்தும் என்று.
தாயை மகனிடமிருந்து, மனைவியைக்
கணவனிடமிருந்து, குழந்தையைத் தாயின் அணைப்பிலிருந்து பிரித்து
விற்கிறான் "எஜமானன்' - ஒருவரும், "ஐயோ பாவம்!'' என்று
கூறவில்லை!
பாதிரிகளே இது பாபம் என்று
கூறவில்லை!
ஞாயிற்றுக்கிழமை ஆலயம்
வரவில்லை - பாபம்!
பாதிரியாருக்குக்
காணிக்கை தரவில்லை - பாபம்!
ஆலயமணி வாங்க "தர்மம்' தரவில்லை - பாபம்!
இப்படிப்பட்ட "பாபம்' பற்றித்தான்
- உள்ளம் உருகும் வண்ணம் பேசி வந்தனர் - பாதிரிமார்!
இந்தச் சாமான்யன்தான் கேட்டான்,
"மனிதனை மிருக மாக்குகிறீர்களே! மாபாவிகளே! மாதாகோயில்
சென்று மண்டியிடுகிறீர்களே! கர்த்தரிடம் கருணையை எதிர்பார்க்கிறீர்களே!
அக்ரமமல்லவா!! அநியாயமல்லவா!' என்றெல்லாம் பேசினான்; அலட்சியப்படுத்தினர்.
அப்போது தான் காரிசன் கூறினான், நான் உண்மையைப் பேசுகிறேன்
- எனவே என் பேச்சு உங்கள் செவியில் விழுந்தே தீரும் என்று!
ஆணவம் பிடித்தவன் என்று இடித்துரைத்தனர் முதலில் - பிறகோ
காரிசன் சொன்னபடிதான் நடந்தது - அவன் பேச்சு, அனைவர்
செவியிலும் விழுந்தது - வெற்றியும் கிடைத்தது.
தம்பி! அமெரிக்காவுக்கு
உன்னை அழைத்துச் சென்று இதனைக் காட்டுவதற்குக் காரணம்
- நெடுந் தொலைவிலே உள்ள காட்சியாகையால் கவர்ச்சி தெரியும்
என்பதற்காகத்தான்!
எத்துணை நம்பிக்கையுடன்
பணியாற்றி, வெற்றி பெற்றான்! இஃதன்றோ, அறிவாற்றல்! -
என்று பாராட்டுவர், எவரும்! ஆனால் தம்பி, இதோ இங்கு,
நாம் பேசினோம் - கேட்க மறுத்தனர் - ஏசி ஒழித்திட முனைந்தனர்
- ஏளனம் பேசினர் - எரிச்சல் மூட்டினர் - எனினும், நாம்
கூறினோம் - நாங்கள் பேசுகிறோம் - அது உங்கள் செவியில்
விழுந்தே தீரும் - ஏனெனில் நாங்கள் உள்ளொன்றும் உதட்டிலொன்றும்
கொண்டு பேசவில்லை - எமது "மேதை'யை விளம்பரப்படுத்திக்
கொள்ளப் பேசுகின்றோமில்லை - உண்மையை உரைக்கிறோம், எனவே,
அதனை நீவிர் நீண்ட காலம் அலட்சியப்படுத்திவிட முடியாது
- எமது பேச்சு உமது செவியில் விழுந்தே தீரும் என்றோம்.
சூளுரைத்தோம் - வெற்றியும்
பெற்றோம்.
இதுபோது நமது சொல் புகாத
செவியில்லை - நமது பேச்சு பற்றிச் சிந்திக்காத மனம் இல்லை
- நம்மைப் பற்றிய பேச்சு எழாத பட்டியில்லை - நமது வளர்ச்சி
குறித்துக் கணித்திடாத கட்சி இல்லை!! மாநில மாநாடு, இதனை
நமக்கு மிக நன்றாக எடுத்துக் காட்டிற்று.
உள்ளத்தில் உறுதி கொண்டால்,
வாக்கினிலே வலிவும் பொலிவும் ஏற்பட்டே தீரும் - என்பதனை
எடுத்துக்காட்டும் விதமாக, மாநில மாநாட்டிலே பல்வேறு பிரச்சினைகளைப்
பற்றி நமது தோழர்கள் பேசினர் அல்லவா! அது கேட்டு மகிழாதார்
யார்? மாநில மாநாட்டுக்கு வந்திருந்த மாற்றுக் கட்சிக்காரர்
கூட, மகிழ்ந்தனர் - அது வெளியே தெரிந்து விடக்கூடாதே என்பதற்காக,
வெகுபாடுபட்டனர். அனைவருக்கும் ஆனந்தம். ஆனால் நான் அடைந்த
மகிழ்ச்சி இருக்கிறதே, தம்பி, அது அலாதியானது. நீ அறிவாய்,
இந்த நாடும் அறியும். நான் பதினைந்து ஆண்டு காலத்துக்கு
மேலாக, பெரியாரிடம் பணி யாற்றியவன் என்பதை அப்போதெல்லாம்,
அவர் கூறுவார் - யார் இருக்கிறார்கள், யோக்யதையுடன்?
எவரை நம்பி எந்தக் காரியத்தை ஒப்படைப்பேன்? எவன் என் மனம்
திருப்தி அடையும்படி நடந்துகொள்கிறான் - என்றெல்லாம்
கேட்பதற்கு மெத்த வருத்தமாக இருக்கும் - சில விநாடிகளுக்குப்
பிறகு, வெட்கமாக இருக்கும் - நாட்கள் செல்லச் செல்ல வேதனையே
கொடுக்கும். இவ்வளவு கஷ்டப்படுகிறார் - நாள் தவறாமல்
பயணம் - நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதுகிறார் - ஓய்வின்றி
உழைக்கிறார் - இருந்தும், ஒருவர் கூட "யோக்யதை'யைப் பெறவில்லையே
- பரிதாபம் - உழைப் பெல்லாம் வீணாகிப் போகிறதே என்று
வேதனையாக இருக்கும். பிறகு என்னைப் பற்றிய எண்ணம் பிறக்கும்
- சே! நமக்கு அந்தப் பரிபக்குவம் ஏற்படவே இல்லையே என்று
வெட்கம் பிறக்கும்.
அப்படிப்பட்ட "நிலை' பெரியாருக்கு!
இப்போதும் அதிலே மாறுதல் ஏதும் ஏற்பட்டு விடவில்லை என்பது
ஒரே வழி அவர் அறிக்கைகள் அறிவிக்கின்றன.
நான், மாநில மாநாட்டிலே
"கர்வம்' கூட அடைந்தேன்! எத்தனை எத்தனை ஆற்றலுள்ள இளவல்கள்,
பொறுப்பறிந்த பெரியவர்கள், அஞ்சா நெஞ்சு படைத்த வீரர்கள்!
ஆறேழு ஆண்டுகளிலே அமைந்துவிட்ட அணிவகுப்பு!
மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும்
- அமைக்கவேண்டிய கொட்டகையின் அளவு குறிப்பதிலும், கொட்டகைக்கு
ஏற்ற கழிகள் பொறுக்குவதிலும், கழிகளுக்கேற்ற குழிகள்
பறிப்பதிலும் அதற்கான உழைப்பை உற்சாகத்துடன் தந்திடும்
தோழர்களின் உள்ளன்பைக் காண்பதிலுமல்லவா ஈடுபட்டிருந்தேன்
- நாவலரும் நடராசனும் பிரதிநிதிகள் கூட்டம் நடத்துவதிலும்
தீர்மானங்கள் குறித்து ஆய்வுரை நடத்துவதிலும் ஈடுபட்டிருந்த
நேரத்தில்.
எனக்கு, எந்தக் காரியம்
குந்தகப்பட்டு விடுமோ - அது எப்படிக் குலைந்து விடுமோ
- நமது கண் பார்வை விழாததாலோ, கை படாததாலோ எந்தச் செயல்
செம்மையற்றதாகிவிடுமோ என்ற கவலையே எழவில்லை - எல்லாவற்றினையும்
பொறுப்புடன் கவனித்துக்கொள்ள, நிரம்பத் திறன் படைத்தவர்கள்
நமது கழகத்திலே இருக்கிறார்கள் - என்ற நம்பிக்கை காரணமாக
நமது மாநில மாநாட்டிலேயே,
தம்பி, பொதுத் தேர்த-ல் நமது கழகம் ஈடுபடவேண்டுமா, வேண்டாமா
என்பதல்லவா மிக முக்கியமான பிரச்சினை - கேட்டுப் பார்,
தம்பி, அது குறித்தேனும் நான், நமது கழகத்தின் காவலர்களிடம்
கலந்து பேசினேனா - ஜாடை காட்டினேனா? என்று இல்லை. அவ்வளவு
நம்பிக்கை எனக்கு, ஓட்டுச் சீட்டுகளைப் போடுவதற்கான முறை
என்ன என்பது குறித்து அவ்வளவு அலட்சியம் என்பதல்ல - நமது
நாவலரும் பிறரும் யோசித்துக் கொண்டிருந்திருப்பார்கள்
என்று நான் எண்ணுகிறேன். - நான், ராபியும் தர்முவும்,
பராங்குசமும் வாணனும், பூஞ்சோலையும் மற்ற நண்பர் களுடனும்
கூடிக்கொண்டு, உன் கண்ணுக்கு விருந்தாகவும் கருத்துக்கு
உவகையாகவும் அமைந்திருந்த சிங்கங்களைக் கவனித்துக் கொண்டிருந்தபோது!
மணமகன் எழுந்திருந்து மண
அறைக்கு வருவதற்கு முன்பே, துயிலெழுந்து மேளக்காரர் எங்கே?
பந்தல்காரரைக் கூப்பிடு - சமையற்காரர் எங்கே? பூமாலைக்காரர்
எங்கே பார்? என்று கேட்டு, சருகான உடல் இருப்பினும், சிட்டு
எனச் சுற்றி வந்து வேலை பார்த்து, அதனாலேயே பெருமகிழ்ச்சிக்
கொள்கிறாரே வயோதிகர் - மணமகனைவிட அதிகமான அளவு அலாதியான
மகிழ்ச்சி பெறுகிறாரே - அது போல் எனக்கு, இந்த மாநில
மாநாட்டிலே மகிழ்ச்சி! என் மகன் திருமணம் இரண்டோர் ஆண்டுகளுக்குப்
பிறகு நடத்த வேண்டும் - இதேவிதமான களிப்பு அப்போது நான்
பெறுவேன்.
என்னால் பெற முடிந்த இந்தக்
களிப்பினை - நான் உடனிருந்து பணியாற்றும் நண்பர்களிடம்
நம்பிக்கை கொள்வதால் அவர்தம் திறமைகளுக்குத் தக்க வாய்ப்புகளை
அவர்களுக்கு அளித்திடும் பொறுப்பினை நிறைவேற்றியதால்
நான் பெற்றிடும் இந்தப் பேரானந்தத்தை - பெரியார் பெற மறுத்து
விட்டாரே - என்னே இதன் காரணம் என்று எண்ணத் தோன்றுகிறது.
இன்று நமது கழகத்தில் இருந்தவர்களிலே
மிகப் பெரும் பாலானவர்கள், நான் முன்னமோர் சமயம் உரிமையுடனும்
உவகை பொங்கவும் கூறியபடி, மீரான் சாயபு தெருவில் வளர்ந்தவர்களே!
அவர்களிடமெல்லாம் இன்று காணப்பட்டு, கழகத்தின் மூலம் நாட்டுக்குப்
பயன்பட்டு எனக்குக் கழிபேரு வகையூட்டும் இந்த ஆற்றல் -
முன்பு இல்லையோ அடியோடு எனின், எவரும் அங்ஙனம் கூற இயலாது.
எல்லா ஆற்றலும் இருந்தது. ஆனால், யாவும், குடத்திலிட்ட
விளக்காய் இருந்தது. இன்று மூன்று இலட்சம் மக்கள் கூடுகிறார்கள்
- மூதறிஞர்கள் கேட்டுப் பாராட்டத்தக்க பேச்சும், வீரர்கள்
கண்டு உறவு கொண்டாடத்தக்க செயலும் விளங்குகிறது - திருச்சியில்
இந்த ஆற்றல் படையினர் நடாத்திய மாநாடு, தமிழகமே போற்றத்தக்க
திருவிழாவாயிற்று!
தம்பி! இவ்வளவுக்குப் பிறகு
- நாம் என்ன ஆனோம் என்கிறாய்?
வீழ்ச்சியுறும் தமிழகத்தில்
எழுச்சி கண்டோம்!
விசை ஒடிந்த தேகத்தில் வன்மை
கொண்டோம்!
தாழ்ச்சியுறும் நிலை ஒழிப்போம்
- தாசராகோம் - தன்னரசு காண்பதற்கே தகுதி பெற்றோம்.
இவ்விதமெல்லாம் இசை கிளம்பும்
உன் உள்ளத்தில் - செல்வா பாடிக் கேட்டால் செந்தேனாக இனிக்கும்
- கஸ்தூரி பாடினால் இசை மணக்கும் என்றெல்லாம் கூறுவாய்.
ஆனால், மாநில மாநாட்டுக்குப்
பிறகு நாம் என்ன ஆனோம் என்று நமது பணியினைப் பிணியென்றெண்ணி
விலக்கிவிட்ட நண்பர் கூறுகிறார், அறிவாயா!
நாடே வியந்தது! நல்லோர்
கொண்டாடினர்! நான்கு
நாட்கள் கருத்துச் சுவை பெற்றோம்! தித்திக்கும் பேச்சுமட்டுமல்ல,
திட்டவட்டமான தீர்மானங்கள் நிறைவேற்றினோம்! திருப்புமுனை!
- என்றெல்லாம் நீ பூரிக்கிறாய். ஆனால், மாநில மாநாடு என்ன
செய்திருக்கிறது என்பதை எடுத்தியம்பியுள்ளார் ஒரு ஆராய்ச்சியாளர்
- கேள்! பதறமாட்டாய் என்பதை நான் அறிவேன் தம்பி, ஏனெனில்
இதுபோன்ற பல கேட்டுக் கேட்டுப் பழகிப்போயுள்ள நிலை அல்லவா
உனக்கும், எனக்கும்.
அந்த நண்பர் கூறுகிறார்,
மாநில மாநாட்டுக்குப் பிறகு, நாம் செத்து விட்டோம் என்று.
தம்பி! சிரிக்காதே! சிரமப்பட்டு
சிந்தனையைச் செலவிட்டு அவருக்கு இயல்பாக உள்ள நல்ல இதயத்தில்
வேண்டுமளவு நஞ்சு கலந்து கொண்டு கூறுகிறார், செத்துவிட்டார்கள்
என்று!
அடே அப்பா! பய, என்னென்ன
விதமா ஆடுவான், பாடுவான் - எதைக் குறித்தும் கவலை கொள்வதில்லை
- இனி முடியுமா அப்படி ஆடியோட, திமிர் ஒழிந்து போச்சு,
இனி ஆசாமி, பெட்டிப் பாம்பாகிவிடவேண்டியதுதான். ஆட்டம்
பாட்டம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் ஒழிந்தே போகும்!
இனித்தானே தெரியும் அவனுக்கு! மாட்டிக் கொண்டு திண்டாடப்
போகிறான்!-
இவ்விதம் முதியவர்கள்,
கடுகடுத்த முகத்துடன் அல்ல, சிரிப்புப் பொங்கி வழியும்
நிலையில் சொல்லுவார்கள், யாராவது ஒரு வாலிபனைக் குறித்து.
என்ன இது, இந்தக் கிழவர் இப்படி எல்லாம் அந்த வாலிபனைத்
தாக்கிப் பேசுகிறாரே, என்றுகூட எண்ணிடத் தோன்றும்.
தாத்தா! ஏன் இப்படி எல்லாம்
சொல்கிறீர்கள் என்று கேட்டால், முதியவர் நமது முதுகில்
தட்டியபடி சொல்வார், தெரியாதா, விஷயம், நம்ம ஆடியபாதத்துக்குக்
கலியாணம் ஆகிவிட்டது! கால்கட்டுப் போட்டாச்சி! இனி ஆட்டம்
பாட்டம், அலட்சியம் எல்லாம் அடங்கித்தானே போகும்!- என்று
கூறுவார்.
நாம் செத்துவிட்டோம் என்று
கூறினவர் நோக்கம் என்ன என்பது கிடக்கட்டும் - அவருடைய
உள்ளம் நற்பண்புகளுக்கு உறைவிடம் என்பதைப் பழகி அறிந்து
மகிழ்ந்தவன் நான் - இப்போது அரசியல் "ரசாயனம்' என்ன மாறுதல்
விளைவித்து விட்டதோ அறியேன் - என் நினைவில் அந்தப் பழைய
பண்பாளர் மட்டுமே இருக்கிறார் - இன்று அவர் எந்த நோக்கத்தோடு,
நாம் செத்துவிட்டோம் என்று கூறினார் என்பது கிடக்கட்டும்
- அவருடைய பேச்சை, திருமணமான ஆடியபாதத்தை முதியவர் மகிழ்ச்சி
பொங்கும் நிலையில் அவருக்கே உரித்தான "பாஷை'யில் பாராட்டினாரே,
அதற்கொப்பானதாகவே நான் கொள்கிறேன்.
17-18-19-20-இன்ப நாட்கள்
என்கிறாய் நீ? ஆமாம் என்கிறது நாடு! உண்மை என்கிறேன் நான்!
மாநில மாநாடு - மணம் நிறைந்த பூந்தோட்டம் - இல்லை, இல்லை,
கனிகுலுங்கும் சோலை - அல்ல அப்பா, அது காவியப் பூங்கா
- என்றெல்லாம் பாராட்டிடும் பல்லாயிரவரைக் காண்கிறேன்.
பெற்ற முத்தத்தை எண்ணி எண்ணிச் சுவை பெறும் காதலன் பெறும்
இன்பம் எத்தன்மையது என்பது கூடப் புரிகிறது.
பழமுதிர் சோலை அல்ல -
இது பாசறை - என்கின்றனர் பல்லாயிரவர்! அதற்கென்ன ஐயம்
- என்கிறேன் நான். இப்படி நாமெல்லாம், மாநில மாநாடு, மலர்ச்சோலை,
பழச்சோலை, பாசறை, பல்கலைக்கழகம் என்றெல்லாம் பாராட்டிக்
கொண்டிருக்கிறோம் - மாநில மாநாடு மரணப் படுக்கை என்பதை
அவர் கண்டறிந்து, இந்தப் பேருண்மையை உலகு இழந்துவிடக்
கூடாதே என்ற ஆவலால் தாக்குண்டு, கூறியே விட்டார், மாநில
மாநாடு முடிந்தது - இவர்களும் மடிந்தனர் - என்று.
இவர், இருபதாம் தேதியுடன்
நாம் இறந்துபட்டோம் என்று கூறிவிட்டார்.
வேறோர் தெளிவாளர், ஆட்சியாளர்,
காமராஜர் கூறுகிறார், இல்லை, இல்லை, இவர்களுக்கு மரணம்
இனித்தான் வரப்போகிறது - விரைவில் - என்று கூறுகிறார்.
முன்னவர், "டாக்டர்' பின்னவர்
ஆரூடக்காரர்!
முன்னவர், ஜில்லிட்டுப்போய்
விட்டது - நாடி பேச வில்லை - செத்தார்கள் என்று கூறிவிட்டார்.
பின்னவரோ ஜாதகத்தைப் புரட்டிப்
பார்த்தோ, குருவி கூறுவது கேட்டோ, செப்புகிறார், இவர்கள்
துள்ளுகிறார்கள் விரைவில் மடியப் போகிறார்கள் என்று.
ஐயா டாக்டரே! அருமை அமைச்சரே!
நாங்கள் செத்துப் போகவுமில்லை, சாகப்போவதுமில்லை என்று
நாம் கூறவா வேண்டும்!
அவர்கள்தான், பாபம், மாநில
மாநாட்டுச் செய்திகள் கேட்டு, சித்தம் குழம்பி, ஏதேதோ
சத்தமிடுகிறார்கள் என்றால், மகத்தான வெற்றிபெற்று, அந்த
விருந்தின் சுவையைக் கண்டு மகிழ்ந்த நிலையில் இருக்கும்
நாமுமா அவர்கள் போல் அர்த்தமற்றதைப் பேசிக் கொண்டிருப்பது!
வேண்டாத காரியம்! வேறு வேலை நிரம்ப இருக்கிறது!
ஆனால், அவ்விருவரும் ஏன்
கூறுகின்றனர் இதுபோல்!
நாம் தேர்தலில் ஈடுபடுவது
என்று தீர்மானித்திருக்கிறோ மல்லவா - அதனால்.
அந்தத் தீர்மானமே நமது கழகத்தைச்
சாகடித்துவிட்டது என்கிறார் ஒருவர்.
அந்தத் தீர்மானத்தின்படி
நாம் தேர்தலுக்கு நின்றால், அதிலே நாம் ஒழிந்து போய்விடுவோம்,
கழகம் மடிந்து போகும் என்கிறார் மற்றோர் மதிவாணர்.
எத்தனை முறை "சாபம்' கொடுத்துவிட்டோம்
- எவ்வளவு ஆரூடம் கணித்துக் கணித்து ஏமாந்துபோனோம்-
இனியும் நமக்கேன் இந்த "ஆகாவழி' என்று அவர்கள் எண்ணவில்லையே
என்றுதான் எனக்குப் பரிதாபமாக இருக்கிறது
கழகம் காண்பதே முடியாத காரியம்.
கழகம் கருகியே போகும் - விரைவில்
கழகம் உடைந்துபோகும் - உட்பகையால்.
கழகம் செத்துப்போகும் - செயலற்றதால்.
கழகம் மாண்டொழியும் - எங்கள் போர் வெற்றிச் சேதி கேட்டு.
கழகம் கரைகிறது துரோகி
தொலைந்துபோவான்.
விதவிதமாகக் கூறினர், வேளைக்
கொன்று கூறினர்; நமது கழகமோ தூற்றலையும் தொல்லையையும்
தாங்கித் தாங்கி, உரம் பெற்று விட்டது.
இப்போது அவர்களுக்கு ஒரு
ஆசை-தேர்தல் நமது கழகத்தைச் சாகடித்துவிடும் என்று.
டாக்டர்-ஜோதிடர்-இருவருக்குமே,
இப்போதே கூறுகிறேன் - தேர்தல் நமது கழகத்தின் உயிரைக்
குடித்திடும் என்று மனப்பால் குடிக்காதீர் - ஏமாற்றம்
அடைவீர்.
தேர்தல் - அதன் இலட்சணம்,
அதிலே ஈடுபடுவதற்கான முறைகள் - இவைகளை ஆய்ந்து பாராமல்,
மக்கள் தீர்ப்பளித்திடவில்லை.
தேர்தல் - நமது கழகத்துக்குப்
புதியதோர் பொறுப்பு - தவிர்க்க முடியாத கடமை.
திராவிட முன்னேற்றக் கழகம்,
அந்தப் பொறுப்பினை ஏற்றிடும் பக்குவத்தை மட்டுமல்ல, அதன்
விளைவுகளுக்கேற்றபடி நிலைமைகளை உருவாக்கிக்கொண்டிடும்
திறன் பெற்றிருக்கிறது. அதனை அறியும் வாய்ப்பினை, டாக்டருக்கும்
ஜோதிடருக்கும் அளிக்கிறோம் - பிறகேனும்...!
ஓஹோ! ஒரு பெருந்தவறு செய்துவிட்டேன்.
அவர்கள், உண்மையை உணர்ந்த பிறகு போக்கை மாற்றிக்கொள்வார்கள்
என்று சொல்ல வாயெடுத்தேன் - அது பெருந்தவறு என்பதை உணர்ந்தேன்.
அவர்கள் உண்மையை உணராததால்
இதுபோலெல்லாம் பேசுவதல்லவே. அவர்களுக்கு உண்மை மிக நன்றாகத்
தெரியும். ஆனால், அவர்களை நம்பி உள்ளவர்களுக்கு, ஒரு விதமான
உற்சாகமூட்ட வேண்டுமே-போனது போக மிச்சம் இருப்பதையாவது
காப்பாற்றிக்கொள்ள வேண்டுமே, அதற்காகத்தான் இவ்வாறெல்லாம்
பேசுகிறார்கள். வேறென்ன!
"ஸ்டாலின்கிராட் நகரினைத்
தாக்கிப் பிடித்திட, இருபது டிவிஷன் விமானங்களை உடனே அனுப்ப
உத்தரவு பிறப்பிக்க வேண்டும்'' என்று கோயபில்ஸ் கேட்டானாம்,
ஹிட்லரிடம்.
கடுங்கோபம் கொண்ட ஹிட்லர்,
"என்ன இது? ஸ்டாலின் கிராட் பிடிபட்டதாகி விட்டது என்று
சென்ற வாரம் நாம் வெற்றி விழாகொண்டாடவில்லையா?' என்று
கேட்டானாம். "ஆமாம்! அது பிரச்சாரத்துக்காக!'' என்று கோயபில்ஸ்
கூறி விட்டுச் சிரித்தானாம்.
நமது மாநில மாநாடு, தமிழகத்தின்
சமீபகால அரசியல் வரலாற்றிலேயே காணக் கிடைக்காததோர் வெற்றி
என்பதைக் கண்டும், கேட்டும், உணர்ந்தும், சொச்சம் இருப்போர்
சோகமடைந்து, செயலற்றுப் போய்விடக்கூடாதல்லவா, அதற்காகத்தான்,
"அது என்ன மகாநாடா? தூ! தூ! மரணப்படுக்கை அல்லவா!'' -
என்று பேசுவது,
நிலைமை எனக்குப் புரிகிறது
- நகைப்பினை அடக்கிக் கொள்வது, சற்றுச் சிரமமாகத்தான்
இருக்கிறது.
கேவலம் மலம்! அவ்வளவும்
மலம்! என்றானாம் வெகுண்டெழுந்தான் பிள்ளை, என்ன? என்ன'
- என்று ஏக்கத்துடன் கேட்டான் வேகாப்பண்ட நாதன். அந்த
வெற்றிப் பாதையான் விருந்துண்டான் என்றுதானே ஏக்கமாக இருக்கிறாய்?
என்று கேட்டான் வெகுண்டெழுந்தான் பிள்ளை. "ஆமாம்?'' என்று
ஆயாசத்துடன் கூறினான் வேகாப்பண்ட நாதன். "பைத்யக்காரா!
வெற்றிப் பாதையான் பால் பேணியும் பாதாம் அல்வாவும், மல்கோவாவும்,
மாதுளையும் சாப்பிட்டானே அதைத்தானே பிரமாதமான விருந்து
என்கிறாய்'' என்று கேட்டான் வெகுண்டெழுந்தான் பிள்ளை.
அது மட்டுமல்லவே,
அவல் பாயாசமாம், அவியலாம், பன்னீர் ஜிலேபியாம், வெண் பொங்கலாம்,
சித்ரான்னமாம், சீரகச்சம்பா சாதமாம்'' என்று ஏக்கம் பிடித்தவன்
கூறினானாம். "நிறுத்தடா, நிறுத்து; இதைத்தான் பிரமாதமான
விருந்து என்கிறாயா? அவ்வளவும் கேவலம் மலம் ஆகப்போவதுதானே!
விட்டுத் தள்ளு!'' என்றானாம், வெகுண்டெழுந்தான் பிள்ளை.
கதை, தம்பி! கதை! இவர்கள்
போக்கு எனக்கு அளிக்கும் கதை.
தம்பி! வெகுண்டெழுந்தான்
பிள்ளையின் "பிரசாரம்' நடைபெறட்டும், கவலையில்லை; நாம்
மேற்கொண்டுள்ள பயணத்தில், புதியதோர் கட்டம் பிறந்திருக்கிறது
- அதை எண்ணி மகிழ்வோம்; அதற்கான தகுதியைப் பெறப் பாடுபடுவோம்,
அந்த வேலையில் ஈடுபட வேண்டும். அதற்கு உன் அறிவாற்றலைப்
பயன்படுத்து. மாநில மாநாடு தந்துள்ள ஆர்வம், அந்த அறிவாற்றலை
வளமுள்ளதாக்கும் - வெற்றிக்கு வழிகோலும். உனக்கென்ன சொல்லித்
தரவா வேண்டும்! வெட்டி வா என்றால் கட்டி வரும் தம்பி அல்லவா!
அன்பன்,

3-6-1956