அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


வெள்ளை மாளிகையில் - 3

நீக்ரோ என்றால் என்ன பொருள் ?
மாணவர்கள் சமூகத்தின் ஈட்டி முனைகள் !
வீழ்ந்தவர்கள் வீழ்ந்தவர்களல்லர் !
விடுதலை, - இன்றேல் வீரமரணம் !
"டர்னரைட்' இயக்கம்
அபாண்டப் பழி !

தம்பி,

அடிமை வேலைக்காகவே ஆண்டவனால் படைப்பிக் கப்பட்ட இனம் நீக்ரோக்கள் என்று நிறவெறியர்கள் எண்ணிக் கொண்டனர் என்ற போதிலும், உழைத்து உழைத்து அவர்கள் எல்லாத் துறைகளிலும் வெள்ளையருடன் சரிசமமாக நிற்க முடியும் என்பதை மெய்ப்பித்துக் கொண்டு வந்தனர்.

"மகனே! நீ ஒரு நீக்ரோ! பொருள் என்ன தெரியுமா? ஒவ்வொரு கட்டத்திலும் உனக்குத் திறமை இருக்கிறது என்பதை நிரூபித்துக் காட்டியபடி இருக்க வேண்டும். வெள்ளை இனத்தவருக்கு அந்த நிபந்தனை இல்லை! அவர்கள் தகுதியுடன் பிறந்திடும் இனத்தவர்! நாம் தகுதியைப் பெற வேண்டும், உழைப்பால், திறமையால், கல்வியால்''

ஒரு நீக்ரோ தன் மகனுக்கு இதுபோல அறிவுரை கூறினார் என்று ஒரு ஏடு தெரிவிக்கிறது. அந்த நிலையில் இருந்து வந்த இனத்திலே பிறந்த டக்ளஸ் டில்மன், எந்த அமெரிக்கனும் மதிக்கத்தக்க பதவியைப் பெற்றான் என்றால், அவனுடைய மகன் மட்டற்ற மகிழ்ச்சி அடையத்தானே செய்வான்.

ஜூலியன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான் - நீக்ரோக்களுக்காக மட்டும் என்று அமைந்த கல்லூரியில்!

டில்மன், கீர்த்திமிக்க வழக்கறிஞர், செல்வாக்கு பெற்ற செனட்டர், செனட் சபைக்கே தலைவர், என்றாலும் நீக்ரோவாயிற்றே! ஆகவே டில்மனுடைய மகன் நீக்ரோக்களுக் காக அமைந்திருந்த கல்லூரியில்தான் இடம்பெற முடிந்தது.

ஜூலியன்! ஜூலியன் நமது இனத்துக்கே பெருமை! காலமெல்லாம் நமது இனத்தின் மீது சுமத்தப்பட்டு வந்த இழிவும் பழியும் ஒரே நொடியில் துடைக்கப்பட்டு விட்டது!

நமது இனத்தின் தன்மானம் தரணியோரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது! இனி எந்த வெள்ளைப் பயலாவது, கருப்பர் தாழ்ந்த இனம், மிருக இனம் என்று வாய்திறந்து கூறத்துணிவானா!

ஜூலியன்! உன்னோடு சேர்ந்து கல்லூரியில் ஒன்றாகப் படிக்கும் வாய்ப்புப் பெற்ற நாங்கள் பெரும்பேறு பெற்றவர்கள்! ஜூலியன்! அப்பா நமது இனத்தின் விடுதலைக்காக முழுமூச்சுடன் பாடுபடுவார் அல்லவா!

ஜூலியன்! நமது இனத்தவரை இன்னமும் இழிவாக நடத்தும் போக்கைக் கண்டவராயிற்றே உன் அப்பா! அவருடைய இரத்தம் கொதிக்குமல்லவா அதை நினைக்கும்போது.

ஒரே வரி! அவருடைய பேனாவிலிருந்து! நமது இனம், சபிக்கப்பட்ட இனம் அல்ல, ஆளும் இனம்! என்று புது நியதி பிறந்து விடாதா!

பட்ட கஷ்டத்தையெல்லாம் மறந்தே விடுவர் நமது இனமக்கள் நாம் பரவாயில்லை; அடிமை வாணிபம் ஆபிரகாம் லிங்கனால் அகற்றப்பட்ட பிறகு பிறந்த தலைமுறை. முன்பு? காட்டு மிருகங்களை வேட்டை யாடுவது போல அல்லவா நமது இனத்தவரை நடத்தி வந்தனர் இந்தக் கொடியவர்கள். சவுக்காலடிப்பது, சதை பிய்ந்துபோகும் வரையில்! குற்றுயிராக வெட்டவெளியில் போட்டு வைப்பது, மரத்திலே தொங்கவிடுவது சாகடித்து, கேட்கும்போதே, நெஞ்சம் வெடித்திடும்! எத்தனை எத்தனைக் கொடுமை களைத் தாங்கிக் கொண்டனர் நமது இனத்தவர்!

இன்று எல்லாவற்றுக்கும் ஈடு செய்வது போல, செய்த கொடுமைகளுக்கெல்லாம் பரிகாரம் தேடுவது போல மன்னிப்புக் கேட்டுக் கொள்வதுபோல, உன் அப்பாவின் காலடியில், குடியரசுத் தலைவர் பதவியைக் காணிக்கையாக வைத்திருக்கிறார்கள்!

வரலாற்றில் இடம் பெறுபவரின் மகன் நீ, ஜூலியன்! உன்னுடைய நண்பர்கள் என்பதைவிட எங்களுக்கு வேறு என்ன சிறப்பு வேண்டும்?

காரிருள் விலகிவிட்டது! கதிரவன் உதித்துவிட்டான்!!

உணர்ச்சி கொந்தளிக்கும் பருவத்தினரல்லவா கல்லூரி மாணவர்கள்? வரலாற்று நிகழ்ச்சிகளையும், மக்கள் மனதிலே தோன்றிய எழுச்சிகளையும், உரிமைப்போர் நிகழ்ச்சிகளையும், விடுதலை வீரர்களின் கதைகளையும், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற இலட்சியங்களின் வரலாறுகளையும் படித்துப் படித்து, ஆர்வம் ததும்பும் உள்ளத்தினரல்லவா? ஆகவே, தம்பி! ஒரு நீக்ரோ இனவெறி பிடித்தலையும் அமெரிக்காவில், குடியரசுத் தலைவரான சேதி கேட்டதும், துள்ளிக் குதித்துத்தான் இருப்பர்! ஜூலியனிடம் மகிழ்ச்சியுடன் எழுச்சியுடன் ஏதேதோ பேசித்தான் இருப்பர், நண்பர்களின் பேச்சு தேனாக இனித்திருக்கும் அந்த மாணவனுக்கு, அந்த மகிழ்ச்சிப் பெருக்குடன்தான் ஜூலியன் தன் தந்தையிடம் பேசினான் தொலைபேசி மூலம்.

என் தந்தை வெள்ளை மாளிகையில் !

என் தந்தை அமெரிக்கக் குடியரசுத் தலைவர் !

இந்த எண்ணம், அந்த இளைஞன் உள்ளத்தில், ஓராயிரம் நம்பிக்கைகளை ஏற்படுத்தித்தானே இருக்கும் ?

நீக்ரோக்களில், கூலிகளாக, வேலைக்காரர்களாக, பாட்டாளிகளாக, அலுவலகங்களிலே பணியாற்றுபவர்களாக இருந்தவர்களால், படிப்படியாக முன்னேறினால் போதும், மனித உரிமைகளை மெள்ள மெள்ளப் பெற்றால் போதும் என்ற விதமாக மட்டுமே நினைத்திட முடிந்தது. மாணவர்கள் மனதில், இந்தப் போக்கா இடம் பெற்றிருக்கும்! மாணவர்கள் ஒரு சமூகத்தின் ஈட்டிமுனைகள்! எழுச்சிப் பிழம்புகள்! நம்மாலே ஆகுமா என்ற இழுப்புப் பேச்சும், என்ன செய்வது என்ற ஏக்கப் பேச்சும், உள்ளத்திலே இருந்திட மறுத்திடும் பருவம்! எந்த இன்னலை ஏற்றுக் கொண்டாகிலும் இழிவுகளைத் துடைத்தாக வேண்டும் என்ற உறுதி குடிகொண்ட உள்ளம் அவர்களுக்கு. ஆகவே கல்லூரிகள், விடுதலைக்கு இளைஞர்களைத் தயாரிக்கும் பாசறைகளாகத்தானே இருக்க முடியும்! எத்தனையோ கொடுங்கோலர்கள் வீழ்த்தப்பட்ட வரலாறுகளைப் படித்தது வீண் போகுமா! எத்தனையோ வல்லமையுடன் அமைக்கப்பட்ட பேரரசுகள், மக்களில் ஒரு பிரிவினரைத் தாழ்வாகவும் மிருகத்தனமாகவும் நடத்திய காரணத்தால், சமூகத்தில் வெடிப்புகள் தோன்றி, புரட்சிகள் புயலெனக் கிளம்பி, அதன் வேகத்தாலே அழிக்கப்பட்டுப் போயின என்ற வரலாற்று உண்மைகள் இதயத்தில் பதிந்துள்ளனவே; அத்தகையவர்கள் அடிமைத்தளைகள் தன்னாலே விலகிடா, உடைத்தெறியப் பட வேண்டும் என்ற உண்மையினைப் பெறாமலா இருந்திருப்பர்.

பெரியவர்கள், பொறாமை என்றும் பொறுப்புணர்ச்சி என்றும், சட்டம் என்றும் ஒழுங்கு என்றும் மெள்ள மெள்ள என்றும் படிப்படியாக என்றும் பேசுவது கேட்டுக் கேட்டுக் காது புளித்துப் போய்விட்டது. விடுதலைக்கான முயற்சியில், விளைவு பற்றிக் கவலைப்படாமல், ஆபத்து குறித்துப் பொருட் படுத்தாமல், உடனடியாக ஈடுபட்டாக வேண்டும்! நீண்ட நெடுங்காலமாகப் பொறுத்தாகிவிட்டது! இனியும் பொறுத்துக் கொள்வது முடியாது, கூடாது! மனிதத் தன்மை மாய்க்கப் படுகிறது! உரிமைகள் உண்டு என்ற உணர்ச்சியே நசுக்கப்பட்டு வருகிறது. எனவே, இப்போதே வீறிட்டுக் கிளம்ப வேண்டும், விடுதலைப்போர் தொடங்க வேண்டும். பலாத்காரமான முறையானாலும் சரி, புரட்சியே நடத்தித் தீர வேண்டும் என்றாலும் சரி, அச்சம் கொண்டிடலாகாது! அடிமையாக அஞ்சி அஞ்சி அடிபணிந்துக் கிடப்பதைக் காட்டிலும் விடுதலைக்காகப் போராடி குண்டடிபட்டு, மார்பிலிருந்து குபுகுபுவெனப் பீறிட்டுக் கொண்டு வரும் இரத்தத்தைப் பார்த்தபடி களத்தில் வீழ்ந்துபடுவதே, வீரம்! - என்ற விதமான எண்ணம் அமெரிக்க நீக்ரோக்களில் இளமைத் துடிப்பு உள்ளவர்களிடம் தோன்றிவிட்டது என்பதை எடுத்துக் காட்டுவதுபோல, பல புரட்சிகரமான நடவடிக்கைகள் அமெரிக்காவில் அவ்வப்போது நடைபெற்று வந்தன.

அவைகளை அமெரிக்க வெள்ளை அரசு அழித்துவிட்டன என்றாலும், ஒவ்வொரு நடவடிக்கையும் நீக்ரோக்களை இன்னமும் தாழ்வாக நடத்திக் கொடுமைப்படுத்திக் கொண்டு வருவது நடைபெறக் கூடியதல்ல என்ற எச்சரிக்கையாகவே அமைந்தது.

தம்பி! நான் முன்பு குறிப்பிட்டிருந்தேனே "டிரம்' என்ற கதை, அது கொடுமைக்கு இரையான நீக்ரோ பற்றியது. ஆனால் வெள்ளை நிற வெறியரை எதிர்த்து நின்று, கொல்லப்பட்ட நீக்ரோக்களின் வீரக்காதைகள் நிரம்ப உள்ளன. அந்த வீரக் காவியங்கள் அனைத்திலும், இறுதியில், புரட்சி மூட்டிய நீக்ரோ சுட்டுப் பொசுக்கப்பட்டானென்றோ, வெட்டி வீழ்த்தப்பட்டா னென்றோதான் இருக்கும். விடுதலை பெற்றார்கள் என்ற முடிவு இருப்பதில்லை! ஆனால் உயிர் அல்ல முக்கியம், உரிமையே உயிரினும் மேலானது என்ற தத்துவத்தை அவர்கள் ஒவ்வொரு வரும் தமது இரத்தத்தால் எழுதிவிட்டுப் போயிருக்கிறார்கள்.

கொடுமைகள் குவிக்கப்படும்போது, அதனால், தத்தளிப்பவர்களிடமிருந்து கிளம்பும் சோகம், பெரும் புயலை எழுப்பிவிடும் என்பதனைக் கொடுமைப்படுத்துவோர் உணருவதில்லை. வீழ்த்திவிட்டோம், வீழ்ந்து விட்டது! என்று எண்ணிக்கொண்டு விடுகின்றார்கள்! ஆனால் வீழ்த்தப் படுபவர்கள், எண்ணற்றவர்களை எழுப்பிவிட்டுத்தான் போகிறார்கள்! தனி மனிதர்களாக இருப்பவர்கள், தமது உயிரைத் தியாகம் செய்வதன் மூலம் ஒரு அணிவகுப்பைப் பெற்றளித்து விடுகிறார்கள். இன்னமுமா இறுமாப்பு! இன்னமுமா எதிர்ப்பு! இவ்வளவு பேர் தூக்கிலே தொங்கிய பிறகுமா, புரட்சி செய்யும் நினைப்பு! என்று வியப்புடன் கேட்பர், கொடுங்கோலர்; ஆனால் கொடுமையை எதிர்த்துச் சிந்தப்படும் ஒவ்வொரு துளி இரத்தமும் கொடுமையை எதிர்த்திடும் உறுதியை ஓராயிரம் புதியவர்களுக்கு ஊட்டி விடுகிறது.

ஒட்டி உலர்ந்துபோன உருவம்! உழைத்திட இலாயக் கில்லை என்று எஜமானனால் எக்கேடோ கெட்டுப்போ என்று ஓட்டிவிடப்பட்டு விட்டவன் அவன், தன் போன்ற ஓர் அடிமையிடமிருந்து ஒரு குவளை சாராயம் பெற்றுக் கொண்டு போகிறான்! குதிரைகளுக்குத் தரும் மட்டரகமான சாராயத்தை, வெள்ளை முதலாளி பார்த்து விடுகிறான். கருப்பு அடிமை பதுங்குகிறான். பளார்பளார்! என்று சவுக்கடி விழுகிறது!துடிக்கிறான்! தடுமாறிக் கீழே விழுகிறான்! சவுக்கடி ஒயவில்லை! சவுக்காலடிப்பவன், குதிரை மீது! சவுக்கடிபடுபவன், தரையில்!!

பார்க்கிறார்கள் பலர்; பதறுகிறார்கள், ஆனால் வாய் திறந்து ஒரு வார்த்தை, ஐயோ! பாவம்! விட்டுவிடுங்கள்! என்று கூறவில்லை ஏன்? அடிப்பவன் எஜமானன்! வெள்ளை இனம்! துடிப்பவன், அடிமை; நீக்ரோ! பார்ப்பவர்களும் அடிமைகள்; நூக்ரோக்கள், ஐயோ! பாவம்! என்று சொன்னாலோ, போதும் நிறுத்துங்கள் என்று கூறினாலோ, அதே சவுக்கடி விழும் இவர்களுக்கு; இன்னும் வேகமாக. அடி தாளமாட்டாமல் ஓடினாலோ, வேட்டை நாய்களை அவிழ்த்துவிடுவார் எஜமானர்!! எனவே அவர்கள் பார்க்கிறார்கள், தங்கள் இனத்தவன் ஒருவன் தள்ளாடும் வயதினன், சவுக்கடி படுவதை! எஜமானன் அடிப்பதுடன் விடவில்லை குப்புறக் கீழே விழுந்தவன் மீது குதிரையை ஏற்றுகிறான்! குற்றுயிராகிறான் அடிமை! கோபம் தீருகிறது எஜமானனுக்கு, மாளிகை செல்கிறான்! இரண்டு நாட்களில் அந்தக் கருப்பு அடிமை இறந்து போகிறான் மற்ற அடிமைகள் அவனை அடக்கம் செய்கிறார்கள். பிரார்த்தனை செய்யப்படுகிறது!! சட்டம்? அடிமையை என்ன செய்யவும் உரிமை பெற்றவன் எஜமானன்! பயல் செத்துவிட்டான்!! என்று கூறுகிறது, அந்த அடிமை செய்த பல குற்றங்களிலே, சவுக்கடியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் செத்ததும் ஒன்று என்பதுபோல! இதைக் கண்ட ஒரு கட்டுடல் கொண்ட நீக்ரோ இளைஞன், ஆயிரம் நீக்கேராக்களை இரகசியமாகத் திரட்டிக் கொண்டு, அந்த ஊரையே அழித்து, வெள்ளையர்களைக் கொன்று குவித்து, விடுதலை பெறத் திட்டமிடுகிறான். இந்தப் புரட்சி 1800-ம் ஆண்டு, அமெரிக்காவில் நடைபெற்றதை, "கருப்பு இடி' என்ற ஏடு எடுத்துக் காட்டுகிறது.

ஆயுதம் இல்லை, புரட்சி நடத்திட! பயிற்சி கிடையாது, போர்முறையில்! அடக்கிடப் பலமான பட்டாளம் வெள்ளை அரசிடம் இருப்பதும் தெரியும். பிடிபட்டு விட்டால் தீர்த்துக் கட்டிவிடுவார்கள் என்பதும் புரிகிறது. ஆனாலும் எத்தனைக் காலத்திற்குத்தான் பொறுத்துக் கொண்டிருப்பது! கண் எதிரே சவுக்காலடித்துச் சித்திரவதை செய்கிறான் பார்த்துக் கொண்டு தானே இருக்க முடிகிறது! செத்தானே அந்தக் கிழவன், புரட்சியா செய்தான்? இல்லையே! அடங்கி ஒடுங்கிக் கிடந்தான் ! சவுக்கடி விழ விழத் துடித்தான்; எதிர்த்தானா? இல்லையே? ஏன் என்று கேட்டானா இல்லையே! வாய் திறக்கவே இல்லை! கண்ணீர் வடித்தான்! முடிவு? புதைத்துவிட்டார்கள்! புரட்சி செய்து பிடிபட்டால் சாக வேண்டும்! சரி! புரட்சி செய்யாதிருந்தால் மட்டும் வாழ்கிறோமா! இது ஒரு வாழ்வா! எந்த நேரத்திலும் சவுக்கடி விழலாம். எந்தச் சமயத்திலும் குதிரையை விட்டு மிதிப்பார்கள். குற்றுயிராக்குவார்கள். பிறகு கர்த்தரிடம் சேர்ப்பிப்பார்கள்!! ஜெபம் நடத்துவார்கள்! இது ஒரு வாழ்வா! இதைவிட எதிர்ப்போம், வெற்றி பெற்றால் விடுதலை! இல்லையானால் வீரமரணம்!

இவ்விதம் கூறுகிறான் "கருப்பு இடி' என்ற காவியத் தலைவன் கேப்ரியல்; சரி என்று இசைகின்றனர். ஆயிரம் அடிமைகள். ஊரை வளைத்துப் பிடித்துக்கொள்ள திட்டம் வகுக்கிறான். திட்டம் வெற்றி பெறவில்லை. பெருமழை, அவன் திட்டத்தை நாசமாக்கி விடுகிறது. பிடிபடுகின்றனர் பலர். கேபிரியலும் வேறு சில சில தளபதிகளும் தப்பி ஓடுகின்றனர், காட்டுப்புறம் படை வருகிறது! வெள்ளையரின் இதழ்கள் "கருப்பு அபாயம்' பற்றிப் பொறி பறக்க எழுதுகின்றன. கேபிரியல் பிடிபடுகிறான். பிடிபடுகிறான் என்றுகூடச் சொல்வதற்கில்லை! தானே தன்னை ஒப்படைக்கிறான்! சரண் அடையவில்லை. அந்தச் சம்பவமும் கேபிரிய-ன் வீரத்தை விளக்குவதாகவே அமைகிறது. கேபிரியல் தப்பிச் செல்வதற்காக ஒரு படகு தயாராகிறது. ஆனால் கடைசி நேரத்தில், அவனுக்குத் துணை செய்ய முன் வந்தவன் பிடிபடுகிறான். போலீஸ் அவனை வளைத்துப் பிடித்துக் கொண்டு எங்கே கேபிரியல்? என்று கேட்கிறார்கள்; அவன் தனக்கு ஏதும் தெரியாது என்று மறுக்கிறான்; கொடுமைப் படுத்துகிறார்கள் போலீஸ் படையினர்; தனக்காகத் தன் நண்பன் இம்சைக்கு ஆளாவது கண்டு தாங்காத கேபிரியல், போலீசிடம் நிற்கிறான், "இதோ நான்தான் கேபிரியல் விடுங்கள் அவனை ! என்னைக் கைது செய்து கொள்ளுங்கள்'' என்று கூறுகிறான்.

தம்பி! "கருப்பு இடி' என்ற அந்த நூ-லே கூறப்பட்டிருப்பது அவ்வளவும் கற்பனை அல்ல, வரலாற்று நிகழ்ச்சி. வடிவம், கதையாக்கப்பட்டிருக்கிறது; அதற்கேற்ற சம்பவக் கோவைகள்; உரையாடல்கள் தரப்பட்டுள்ளன; ஆனால் ஒரு நீக்ரோ புரட்சி ஏற்பட்டதும், கேபிரியல் போன்ற நீக்ரோ தலைவர்கள் பிடிபட்டுக் கொல்லப்பட்டதும் உண்மைச் சம்பவங்கள்.

கடைசிக் கட்டம் உண்மையிலேயே கல் மனதையும் கரைத்து விடும்.

கேபிரியல் தூக்கிலே தொங்குகிறான். கலங்காமல் தாள் பணிய மறுத்து,

அந்தப் புரட்சியில் அவனுடன் துணிந்து ஈடுபட்டு ஆபத்துக்களைச் துச்சமென்று கருதிப் பணியாற்றிய அவனுடைய காதலி - நீக்ரோ பெண்மணி - வெள்ளை வெறியரிடம் சிக்கி அடிமையாக விற்கப்படுகிறாள்.

இதைக் காணுகிறான், கதையின் துவக்கத்தில் சவுக்கடி கொடுக்கப்பட்டு ஒரு நீக்ரோ இறந்தானே, அதைப் பார்த்த, மற்றோர் நீக்ரோ!

அந்த நீக்ரோவும் கேபிரியலின் புரட்சியிலே ஈடுபட்டவன் தான்; இடையிலே அச்சம் அவனைப் பிடித்தாட்டிற்று; அவன்தான் புரட்சித் தலைவர்களைக் காட்டிக் கொடுத்து விட்டான்.

"கருப்பு இடி'யில் கூறப்பட்டுள்ளது போன்ற புரட்சிகள் பலப்பல அவ்வப்போது வெடித்துக் கிளம்பியபடி இருந்தன.

தம்பி! இதுபற்றி இங்குக் குறிப்பிடுவதற்குக் காரணம் நீக்ரோக்கள் தங்கள் விடுதலைக்காக நடத்திடும் கிளர்ச்சியை அமெரிக்க வெள்ளை அரசு ஒழித்துக் கட்டுவதற்குக் கையாண்ட ஒரு முறை, அந்தக் கிளர்ச்சியை, "அன்னியர்கள்' அமெரிக்காவுக்கு எதிராகத் தூண்டிவிட்டிருக்கிறார்கள் என்ற பழி சுமத்தி, அமெரிக்க மக்களின் ஆத்திர உணர்ச்சியைத் தட்டி, எழுப்புவது என்பதைக் குறிப்பிடத்தான்.

இந்தி மொழி ஆதீக்கம் தங்கள் எதிர்காலத்தை நாசமாக்கும் என்று உணர்ந்து கொதித்து எழுந்த மாணவர்களை, நாம் தூண்டி விட்டு கலாம் விளைவித் தோம் என்று முதலமைச்சர் பக்தவத்சலம் கூறினாரல்லவா! இதே முறையைக் கையாண்டனர்; முன்பு; அமெரிக்காவில்.

"கருப்பு இடி' என்ற நூலிலே, புரட்சித் தலைவன் கேபிரியல் தான் தான் புரட்சி நடத்தியவன் என்று சொன்ன பிறகும் விசாரணை நடத்திய நீதிபதிகள் விட வில்லை.

உனக்கு எப்படி இவ்வளவு திட்டமிடத் தெரிந்தது! நீயோ அடிமை! உனக்கு எங்கிருந்து இத்தனைத் துணிவு பிறந்தது. உண்மையைச் சொல். புரட்சியைத் தூண்டிவிட்டவர் யார்? சொல்லிவிடு! உன்மீது குற்றம் இல்லை. நீ பாவம், யாரோ ஆட்டுவித்தபடி ஆடிவிட்டாய். சூத்ரதாரிகளைக் கூறிவிடு. தப்பித்துக் கொள்ளலாம்.

என்றெல்லாம் கேட்கிறார்கள்.

ஒருவரும் தூண்டிவிடவுமில்லை, துணைக்கு வரவுமில்லை; திட்டமிடவுமில்லை. நானேதான் திட்ட மிட்டேன். அன்று மட்டும் பெருமழை வாராதிருந் திருப்பின் என் திட்டம் வெற்றியும் பெற்றிருக்கும்,

என்று கேபிரியல் சொல்லுகிறான், நம்பிக்கை ஏற்பட வில்லை! நீதிபதிகளுக்கு; ஏனென்றால் (1800) அன்றைக்கு அமெரிக்காவில் கிளர்ச்சிகளை, புரட்சிகளை மூட்டி விடுபவர்கள் பிரன்ச்சுக்காரர்கள் என்ற எண்ணம் பலமாக இருந்து வந்தது, பிரன்ச்சுப் புரட்சியின்போது மலர்ந்த கருத்துக்கள் சமத்துவம் என்பது! நீக்ரோக்கள் சமத்துவம் அல்லவா கேட்கிறார்கள்! அவர்களுக்கு எப்படித் தெரியும் சமத்துவம் என்பது; பிரன்ச்சு நாட்டு புரட்சிக்காரர்கள் தூண்டிவிட்டதால் தெரிந்தது! ஆகவே நீக்ரோ கேபிரியல் நடத்திய புரட்சி பிரன்ச்சுக்காரர் மூட்டிவிட்டது! இது அமெரிக்கா நிறவெறியர் வாதம்

காக்கை கருப்பு நிறம்
கந்தசாமி நிறம் கருப்பு,
ஆகவே
கந்தசாமி காக்கை !

இப்படி ஒரு வாதம் ! அந்த நாள் அமெரிக்காவில்தானே என்று கேட்கின்றாயா தம்பி. ஏன், இந்த நாள் பக்தவத்சலனார் வேறுவிதமாக வாதம் செய்கிறார்.

இந்தி ஒழிக என்கிறது தி. மு. க.
மாணவர்கள் இந்தி ஒழிக என்கிறார்கள்
ஆகவே
மாணவர்கள், தி. மு. க.

இப்படித்தானே வாதாடுகிறார்! ஆகவே பக்தவத்சலனாரின் வாதம் புதிது அல்ல! நெடுங்காலமாக இருந்து வருகிற வாதம்!

ஆதிக்கம் அழிந்துபடுமோ என்ற அச்சம் பீடிக்கும் நிலையிலுள்ளவர்கள் வழக்கமாகக் கூறிடும் வாதம்! தூக்குக் கயிற்றைக் கழுத்திலே மாட்டுவதற்கு ஒரு விநாடிக்கு முன்புகூடக் கேட்கிறார்கள் கேபிரியலை, "ஏதாவது சொல்லிக் கொள்ள விரும்புகிறாயா?' என்று,

"நானே, ஏதும் இல்லை. கயிறு பேசும்!' என்கிறான் கேபிரியல்!

டக்ளஸ் டில்மன் குடியரசுத் தலைவரான நாட்களில் நீக்ரோக்களுக்குச் சமத்துவம் கிடைத்திடச் செய்வதற்குப் புரட்சியே சரியான வழி என்ற கருத்துடன் "டர்னரைட்' என்ற ஒரு இயக்கம் இருந்து வருகிறது.

இந்த இயக்கம், கம்யூனிஸ்டுகளால் நடத்தப்பட்டு வருகிறது; அமெரிக்காவை அழிக்கவே, நீக்ரோக்களின் விடுதலை என்று பெயர் கூறிக்கொண்டு இந்த பயங்கர இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது என்று அமெரிக்க அரசு கூறிவந்தது. ஒரு நீக்ரோவே குடியரசுத் தலைவர் ஆகிவிட்டதால், இந்த பயங்கர இயக்கம் மேலும் துணிவு பெற்று ஆட்டம் ஆடுமோ என்ற அச்சம் கொண்ட வெள்ளைநிற ஆதிக்கக்காரர்கள் இந்த பயங்கர இயக்கம் கம்யூனிஸ்டுகளின் கைப்பாவை, ஆகவே அதனைத் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

டர்னரைட் இயக்கம் கம்யூனிஸ்டு இயக்கம் அல்ல; நிறவெறியை நிலைநாட்ட விரும்பும் வெள்ளையர் சுமத்தும் பழி அது; ஆகவே டில்மன் அந்த இயக்கத்துக்குத் தடை ஏதும் போடக் கூடாது என்று நீக்ரோ மக்கள் வலியுறுத்துகிறார்கள்.

டல்மன் யார் பக்கம் சேருவார்? தன் இன மக்கள் பக்கமா? வெள்ளையர் பக்கமா? என்ற கேள்வி எழும் போது டில்மன் உறுதியாகத் தெரிவிக்கிறார். அந்த இயக்கம் உண்மையிலேயே பயங்கர நடவடிக்கையில் ஈடுபடுகிறது, கம்யூனிஸ்டுகளால் நடத்தப்படுகிறது என்று மெய்ப்பிக்கப் பட்டாலொழிய அதனைத் தடை செய்யப் போவதில்லை; நமது சட்டம் இடந் தராது. நான் அந்த இயக்கம், கருப்பருக்காகவா, வெள்ளை யருக்காகவா என்று பார்க்கப் போவதில்லை; அது அமெரிக் காவின் நன்மைக்கா, அமெரிக்காவைக் கெடுக்கவா, எதற்குப் பயன் படுகிறது என்பது பற்றித்தான் பார்க்கப் போகிறேன் என்று கூறுகிறார். அவரைச் சூழ இருந்த வெள்ளைப் பேரதிகாரிகளுக்கு அடக்கமுடியாத கோபம். ஒரு நீக்ரோவைக் கொண்டு நீக்ரோ விடுதலை இயக்கத்தைத் தடை செய்துவிடலாம். அதற்கு டில்மன் குடியரசுத் தலைவராகி இருப்பது பொன்னான சந்தர்ப்பம் என்று அந்த ராஜ தந்திரிகள் கருதித் திட்டமிட்டனர். டில்மன் ராஜதந்திரம் படிக்கவில்லை; ஆனால் இதயம் இருந்தது. அதிலே நீதிக்கும் நேர்மைக்கும் இடம் இருந்தது. பொறுப்புணர்ச்சி போதுமான அளவு இருந்தது. எந்தச் செயலும் அமெரிக்க நாட்டுக்கென அமைந்துள்ள சட்ட திட்டத்திற்கு உட்பட்டதாக, அதன் ஒழுங்கைக் குலைத்திடாததாக இருக்கும் படித்தான் அமையவேண்டும், மேலும் விருப்பு வெறுப்புகளுக்கு இடமளிக்கக்கூடாது என்று உறுதி கொண்டிருந்தார்.

மகன் ஜூலியின் வந்து பார்த்து மகிழ்ச்சி பொங்கப் பொங்கப் பேசும்போதுகூட, டில்மன் இந்த நோக்கத்தை உறுதியாகத் தெரிவிக்கத் தவறவில்லை.

அற்புதம் நடந்துவிட்டது, அப்பா! அற்புதம்! வெள்ளை மாளிகையில் தாங்கள் வீற்றிருக்கும் வாய்ப்புக் கிடைத்ததை நாங்கள் ஒரு அற்புதம் என்றே கருதுகிறோம். அப்பா! நமது இனத்தவரும், அவர்களுக்காகப் பணியாற்ற ஏற்பட்ட அமைப்புகளும் ஒரு நூற்றாண்டுக் காலத்தில் சாதிக்க முடியாததை, தாங்கள் ஒரு நொடியில் சாதிக்கும் வாய்ப்பு அப்பா! இது! நமது இனத்தவர் எவ்வளவோ பேர் மடிந்தனர், உரிமை கேட்டு; அல்லற்பட்டனர்; அவதிப் பட்டனர். இப்போது வெள்ளையர்களுக்கு ஆணை பிறப்பிக்க முடியும் தாங்கள். . .

ஆர்வமும் நம்பிக்கையும், கொந்தளிக்கும் விதமான ஜூலியன் பேச்சு, தன் தகப்பனார் பதவிக்கு வந்திருப்பது நீக்ரோ இனத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள பழியினை ஒரே வரியால் துடைத்திடத் தான் என்ற நம்பிக்கை. டில்மன் அமைதியாகத்தான் பேசுகிறார்.

நான் யாரையும் எதையும் செய்யச் சொல்லி வற்புறுத்து வதாக இல்லை. நான் அமெரிக்கக் குடியரசுத் தலைவன், நீக்ரோ மக்களின் குடியரசுத் தலைவன் அல்ல!

தம்பி! டில்மன்தான் அவ்விதம் சொன்னாரே தவிர, அவர் அந்த உயர் பதவி வகிப்பது கண்டு சகித்திட முடியாத நிறவெறியர்கள், டில்மன் கருப்பரின் தலைவர், அமெரிக்கக் குடியரசுத் தலைவர் அல்ல, அதற்கு ஏற்ற தகுதியும் திறமையும் இல்லை; ஒழுக்கம் இல்லை; உயர் பண்பு இல்லை; கேட்பதற்கே கூசும் பல குறைபாடு கொண்டவர் குடியன், கூத்திக்கள்ளன்! - என்றெல்லாம் பழி சுமத்தினர்; வெட்டவெளியில் மட்டுமல்ல, அரச அவையிலேயே கண்டனத் தீர்மானம் கொண்டு வந்தனர்!

அதிலே அவர்கள் குறிப்பிட்ட பல குற்றச்சாட்டுகளிலே முக்கியமானவை இரண்டு; ஒன்று கம்யூனிஸ்டுகளால் தூண்டி விடப்பட்ட டர்னரைட் என்ற பயங்கர இயக்கத்தில், டில்மனுடைய மகன் ஜூலியன் ஒரு உறுப்பினன் என்பது; மற்றொன்று உயர் நிலையிலுள்ள ஒரு மாதை டில்மன் கற்பழிக்க முயன்றார் என்பது.

திடுக்கிடத் தக்க குற்றச்சாட்டுகள் அல்லவா? எப்படி இந்தத் தாக்குதலைத் தாங்கிக்கொள்ள முடியும்? தாங்கிக் கொண்டார்! எப்படி இந்தக் குற்றச்சாட்டுகளை உருவாக்கினார்கள் என்பதையும் டில்மன் எப்படி உறுதியுடன் அவைகளைத் தாங்கிக் கொண்டார் என்பதையும் அடுத்த கிழமை விளக்குகிறேன்.

அண்ணன்,

20-2-66