அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


வெள்ளை மாளிகையில் - (4)

"வழக்கு' என்னும் ஒரு நாடகம்
ஒதுக்கிடம், குப்பைமேடு !
கருப்பு முஸ்லிம் இயக்கம்
ஒரு நீக்ரோவின் உள்ளக் கிடக்கை
"வெள்ளை மாளிகை' - என்னும் பெயர்

தம்பி,

உலகிலேயே கடைந்தெடுத்த பொய்யர்கள் இந்த வெள்ளையர்கள் என்று குற்றம் சாட்டுகிறேன்.

உலகிலேயே இவர்களை மிஞ்சிடும் குடிகாரர்கள் இல்லை என்று குற்றம் சாட்டுகிறேன்!

மிக மோசமான சூதாடிகள் இந்த வெள்ளையர் என்று குற்றம் சாட்டுகிறேன்.

கொடிய கொலைகாரர்கள் இந்த வெள்ளையர்கள்! சாந்தியை - சமாதானத்தைக் குலைத்தவர்கள் இந்த வெள்ளையர்.

காமவெறி பிடித்தலையும் கயவர்கள், இந்த வெள்ளையர்!

மோசடிகள் பல செய்திட்ட பேர்வழிகள் இந்த வெள்ளையர்!

ஆகவே நீதிமன்றத்தினரே! இந்த வெள்ளையர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கக் கேட்டுக் கொள்கிறேன்.

"வெள்ளையர்கள் குற்றவாளிகளே! தூக்கு தண்டனை விதிக்கிறேன் இவர்களுக்கு''

என்ன அண்ணா! டக்ளஸ் டில்மன் மீது தொடுக்கப்பட்ட கண்டன வழக்கு பற்றிய விவரம் தருவதாகக் கூறி விட்டு, இது ஏதோ புதிதாக, அதிர்ச்சி தரத்தக்கதாக ஒரு வழக்கு பற்றி குறிப்பிடுகிறாயே என்றுதானே தம்பி! வியப்படைகிறாய். விளக்கம் தருகிறேன்.

வெள்ளையர் குற்றம் பல புரிந்தவர்கள்; "பஞ்சமா பாதகம்' புரிந்தவர்கள் என்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது; வெள்ளையர் பஞ்சமா பாதகம் செய்தவர்களே என்பது மெய்ப்பிக்கப்படுகிறது; நீதிமன்றத் தலைவர், வெள்ளையருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கிறார் நாடகத்தில்!

அமெரிக்காவில், "வழக்கு' என்றோர் நாடகம்; வெள்ளை யரின் கொடுமைகளைக் கண்டிக்கும் நோக்கத்துடன், நியூயார்க் நகரிலேயேகூட இந்த நாடகம், ஒரு முறை அல்ல; இருமுறை நடத்தப்பட்டதாம்.

நாடகம் தீட்டி நடித்துக் காட்டும் பொறுப்பை மேற் கொண்டவர்கள், நீக்ரோக்களின் விடுதலை இயக்கத்தின் பல வடிவங்களில் ஒன்று என்று கூறத்தக்க "கருப்பு முஸ்லீம்' எனும் அமைப்பினர். அந்த அமைப்பினர், நீக்ரோக்கள் தங்கள் உரிமைகளுக்காக வெள்ளையரிடம் கெஞ்சிக் கூத்தாடிக் கிடக்கத் தேவையில்லை; அது கேவலம்; தமக்குள் ஒரு எழுச்சியுடன் கூடிய ஒற்றுமையை ஏற்படுத்திக்கொண்டு, "கருப்பு இனத்தவர்! ஆம்! கருப்பு! அதனால் என்ன? கேவலம் என்ன அதிலே! என்று அடித்துப் பேச வேண்டும், நிமிர்ந்து நிற்க வேண்டும்; கிருத்துவ மார்க்கத்தை விட்டுவிட வேண்டும்; முஸ்லீம்களாகி விட வேண்டும்; தனி உரிமை, தனிநாடு, தனி அரசு கேட்டுப் பெற வேண்டும் என்ற புரட்சியை நடாத்திக் காட்டிடும் இயக்கம்.

அந்த இயக்கம், மேற்கொண்டுள்ள பிரசார முறையிலே ஒன்று நாடகம்; அந்த நாடகங்களிலே ஒன்றுதான் நான் மேலே குறிப்பிட்ட "வழக்கு'.

டக்ளஸ் டில்மன் மீது பொச்சரிப்பு காரணமாக வெள்ளை அதிகாரிகள் வழக்குத் தொடுத்தது பற்றிக் குறிப்பிட்டபோது, கருப்பு இனத்தவர், மக்கள் மன்றத்திலே வெள்ளையர் மீது தொடுத்துள்ள "வழக்கு' பற்றி நாடகம் நடத்தப்படுவது நினைவிற்கு வந்தது.

"நான் இல்லை அங்கே! இருந்திருந்தால்!'' என்று கூறுவார் நமது முதலமைச்சர் பக்தவத்சலனார்.

வெள்ளையர் - கருப்பர் மோதுதல். அதன் காரணமாக இரத்தக் களறி சதா நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடு அமெரிக்கா! இருந்தும் அங்கே வெள்ளையனைத் தூக்குத் தண்டனை பெறச் செய்கிறார்கள், நாடகத்தில். இங்கு மிகச் சாதாரணமான, துளியும் பலாத்கார வாடை அற்ற, பிரச்சார நாடகமாடினாலும் என்ன நடக்கிறது! "உதயசூரியன்' என்ற நாடகத்தில் தம்பி கருணாநிதி எந்த விதமான "பலாத்கார' ப் பிரச்சாரத்தையும் சேர்க்கவில்லை! ஆனால் "உதயசூரியன்' என்று பெயர்! பக்தவத்சலனாரின் அரசாங்கம், ஆடாதே! என்று உத்திரவிட்டது; "உதயசூரியன்' நாடகம் நின்றுவிட்டது.

அமெரிக்காவில், வெள்ளையர் பஞ்சமாபாதகம் செய்ததாகவும், உலகமன்றத்தின் முன்பு அவர்கள் இழுத்து வந்து நிறுத்தி வைக்கப்படுவதாகவும், வழக்கு நடைபெறுவதாகவும், தூக்குத் தண்டனை தரப்படுவதாகவும், கருப்பருக்கான ஒரு அமைப்பு, "நாடகமாட' இடம் கிடைத்திருக்கிறது; நியூயார்க் நகரில்; போன நூற்றாண்டிலா? இல்லை! தம்பி! இப்போது, சில ஆண்டுகளுக்கு முன்பு!

ஆனால், ஒருபுறம் இந்த அளவு "உரிமை' உணர்ச்சி மதிக்கப் பட்டு வருகிறதென்றாலும், மற்றோர் புறத்தில் நீக்ரோக்களை ஒதுக்கி வைத்து, கேவலப்படுத்தும் கொடுமையும் நெளிந்து கொண்டிருக்கிறது. அந்தச் சூழ்நிலை கப்பிக் கொண்டிருக்கும். அந்தச் சூழ்நிலை கப்பிக் கொண்டிருக்கும் இடத்திலல்லவா, டக்ளஸ் டில்மன் குடியரசுத் தலைவரானார்? அவர்மீது நிறவெறியர் பாய்ந்திடாதிருப்பார்களா! அதன் விளைவுதான் டில்மன் மீது தொடுக்கப்பட்ட கண்டன வழக்கு.

குடியரசுத் தலைவர் பதவிக்குத் தகுதியானவர் அல்ல.

குடிகாரர்! கூத்திக்கள்ளன் !

மனப்பிராந்தி நோயால் தாக்கப்பட்டவன் !

வெள்ளைப் பெண்மணியைக் கற்பழிக்க முயற்சித்த காதகன்.

இவ்விதமான "குற்றச்சாட்டுகள்!' ஆதாரங்கள்! சாட்சிகள்! வாதங்கள்! இதழ்களிலே கண்டனக் கணைகள்! இவ்வளவும், நிறம் கருப்பு என்பதால்,

டில்மன் நாணயமானவர் என்பதிலே இதற்கு முன்பு எவருக்கும் எவ்வளவு சந்தேகமும் எழுந்ததில்லை,

டில்மன் நீக்ரோக்களின் விடுதலைக்காகப் பொறி பறக்கப் பேசிடும் போக்கினரும் அல்ல; புரட்சி இயக்கத் தொடர்பும் கொண்டவர் அல்ல; பொறுத்துக் கொள்ளும் பயிற்சி பெற்றவர்; பொறுப்பினை நன்கு உணர்ந்தவர்.

நீக்ரோக்களிலே, சிறிதளவு செல்வம் செல்வாக்கு கிடைத்து விட்டால், வெளிச்சம் போட்டுக்கொண்டு திரிபவர்கள் சிலர் இருந்தனர்; இவர் அவ்விதமான போக்கினரும் அல்ல.

தம்பி! நிறம் கருப்பு என்றால் என்ன என்று நாம் இங்கு எளிதாகப் பேசிவிடலாம்; கருப்பில் அழகியடி! என்று சிந்து பாடிடலாம்; ஆனால் அமெரிக்காவிலே உள்ளவர்களுக்குத் தான் தெரியும் "கருப்பு' என்னென்ன கொடுமைகளை, இழிவுகளைத் தாங்கிக் கொள்ள செய்கிறது என்கிற விவரம்.

அமெரிக்க நீக்ரோக்கள் எல்லோருமே கருப்பு நிறம் அல்ல! அவர்களிலே பலர், மாநிறம், வெள்ளை நிறம் கூட, ஆனால், இனம் நீக்ரோ, நீக்ரோ இரத்தம் கலந்திருக்கிறது என்று தெரிந்தால் போதும், அமெரிக்க சமூகத்திலே இடம் கிடையாது! ஒதுக்கிடம்! ஓரம்! குப்பைமேடு!!

இந்தக் கொடுமையிலிருந்து தப்பித்துக்கொள்ள எண்ணுவர் சிறிது வெள்ளை நிறமாகப் பிறந்துவிடும் நீக்ரோக்கள். "யாருக்கும் தெரியாமல், பிறந்த இடத்தை விட்டு நெடுந்தொலைவு சென்று, வெள்ளையருடன் வெள்ளையராக வசித்துவர விரும்புவராம். அவ்வளவு துடிப்பு, பாவம் அவர்களுக்கு. கர்த்தர்! தமது கருணையால் நம்மை கருப்பு நிறத்துடன் படைப்பிக்கவில்லை; நமது நிறமோ வெள்ளை! நாம் வெள்ளையர் வாழும் பகுதியில் சென்று இருந்து விடலாம்; யாவரும் கண்டுபிடிக்கமாட்டார்கள்; கருப்பு நிறத்தவர்மீது வீசப்படும் இழிவிலிருந்து, கொடுமை யிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைப்பார்களாம்.

அவ்விதமான எண்ணம் கொண்டு, ஒருவருக்கும் தெரிவிக்காமல், பல ஆண்டுகளுக்கு முன்பே, வீட்டை விட்டு ஓடிவிட்டாள், டில்மன் பெற்றெடுத்த பெண்!

எங்கே இருக்கிறாள், எப்படி இருக்கிறாள் என்பதே தெரியாது; தொடர்பு அடியோடு அற்றுப்போய்விட்டது. ஆனால், எங்கோ வெள்ளையருடன் வெள்ளை மாதாக இருந்து கொண்டிருக்கிறாள்.

அந்தத் துக்கம் டில்மன் மனதைப் பிய்த்துக் கொண்டிருக் கிறது; அதையும் பொறுத்துக் கொள்கிறார்.

மனைவி, காலமாகி விட்டாள்; மகளோ தலைமறைவு; மகனோ கல்லூரியில் உலவுகிறான், அப்பா ஒரு நொடியில் நீக்ரோக்களின் இழிவுகளைத் துடைத்துவிடுவார் என்ற நம்பிக்கையுடன்; சூழ இருக்கும் வெள்ளை அதிகாரிகளோ, "தலையாட்டிக் கொண்டிருப்பதானால் தர்பாரில் இடம்! தன்னிச்சையாக நடந்துகொள்ள முனைந்தால் தூக்கி எறியப்படுவாய்!'' என்று எச்சரிக்கிறார்கள்; பார்வையால், விஷமத்தனம் கலந்த புன்னகையால்.

இவ்வளவும் புரிகிறது; ஆனால் எதையும் வெளியே வெளிப் படையாகப் பேசுவதற்கும் இல்லை.

சிக்கலான பிரச்சினைகள், அய்யப்பாடுகள், மனக் குழப்பங்கள், மனக் குமுறல்கள் ஏற்படும்போது, எது முறை? எதனை எவ்விதம் செய்திடலாம்? என்பது பற்றிக் கலந்து பேசிடவும், தக்க கருத்து பெற்றிடவும், தன்னலமற்று, அறிவுத் தெளிவுடன் யோசனை கூறிடத்தக்கவர்களைப் பெற்றிடவும், முடியாது போய்விடும்போது, பொறுப்புக்களை மேற்கொண்டு விட்டுள்ளவர்களின் தவிப்பும் தத்தளிப்பும் எவ்விதம் இருக்கும் என்பதனை விளக்கிட முடியாது. அத்தகைய அல்லலால் தாக்குண்டவர்கள் பற்றி எழுதப்பட்டுள்ள ஏடுகளிலிருந்து அது பற்றித் தெரிந்துகொள்ளலாம்; ஓரளவு; முழு அளவு அல்ல.

தெளிவும் துணிவும் பொறுப்பும் பொறுமையும் மிகுதியாக இருக்கவேண்டும்.

தன் சொந்தக் கருத்தைத் திணிக்க வேண்டும் என்ற நினைப்பு எழலாகாது.

பிரச்சினையை எந்தவிதமான விருப்பு வெறுப்பு களுடனும் பிணைத்து விடலாகாது.

தவறான கருத்தைத் தந்திரமாகப் புகுத்தும் முயற்சியை மேற்கொள்ளக் கூடாது.

என் யோசனைதான்! என் திட்டம்தான்! என்ற எக்களிப்பைக் கொட்டிக் காட்டக் கூடாது.

கேட்பவர், கருத்தற்றவர்; அறிவுப் பஞ்சத்தால் நம்மை வந்து நாடுகிறார் என்ற தப்புக் கணக்குப் போடக்கூடாது. பிரச்சினையை அணுகும்போது, தனது நிலையை அளவுகோலாக்கிக் கொள்ளாமல், பொறுப்பினை மேற் கொண்டுள்ளவரின் நிலையினை அளவுகோலாகக் கொள்ள வேண்டும்.

கேட்பவர் மனம் மகிழவேண்டும் என்பதற்காகத் தித்திப்பு கூட்டக்கூடாது;
பிரச்சினையை விட்டு விடட்டும் என்பதற்காகக் கசப்பினையும் கலக்கக் கூடாது.

இவ்வளவு இலக்கணமும் பொருந்தியுள்ளவர்கள், கிடைத்தால் மட்டுமே, பொறுப்பினை மேற்கொள்பவளர்கள், மனதிலே எழும் அய்யப்பாடுகளை நீக்கிக் கொள்ள, சிக்கல்களைப் போக்கிக் கொள்ள, வழி காண்பர். டில்மன், மனதிலே என்னென்ன அய்யப்பாடுகள் எழுந்திருக்கக் கூடும் என்பது பற்றி ஒரு பட்டியல் தயாரித்துப் பார்த்தால், தம்பி! தலை சுற்றும்; அவ்வளவு இருக்கத்தான் செய்யும். யாரிடம் கலந்து பேசுவார்? அவர் நிறமோ கருப்பு! இருக்கும் இடமோ வெள்ளை மாளிகை!! சூழ உள்ளவர்களோ வெள்ளை ஆதிக்கப் பாதுகாவலர்! மக்களோ இரு பிரிவு; நிறத்தால், இனத்தால்; ஒன்றை ஒன்று பகைத்துக் கொண்டு. இவர் மனதிலே எழும் அய்யப்பாட்டிலே முக்கியமானதோ, நிறம் பற்றிய நினைப்பு அற்று, நீதியாக நேர்மையாக, அரசியல் சட்ட திட்டம் ஒழுங்கு முறை கெடாத வகையில் ஆட்சியை எப்படி நடத்திச் செல்ல முடியும் என்பது பற்றி. இதற்கு யாரிடம் யோசனை கேட்பார்! நீக்ரோ தலைவர்களிடம் கேட்க முனைந்தாலே புருவத்தை நெறிப்பர், பகை கக்குவர்; இனம் இனத்தோடு என்று பழி சுமத்துவர் வெள்ளையர்.

அவர்கள் எதையோ கூறிக்கொள்ளட்டும் என்று எண்ணி நீக்ரோ தலைவர்களுடன் கலந்து பேசினால், அவர்கள் எந்த விதமான யோசனை கூறுவார்கள்? பெரும்பாலான நீக்ரோ தலைவர்கள்; "படமுடியாதினித் துயரம்! பட்டதெல்லாம் போதும்' என்ற மனப்போக்கினராகி விட்டனர், வெள்ளையரின் நிறவெறி அவர்களின் உள்ளத்தில் வெந்தழலை மூட்டிவிட்டது. அவர்கள் நிதானமாக நடந்துகொள்ளச் சொல்லவே மாட்டார்கள்!!

வெள்ளை இனத்தவரிடம் கலந்து பேசினால்? நீக்ரோ மக்களின் "சாபம்' தன்னாலே வந்துசேரும். வெள்ளையரின் எடுபிடி என்பார்கள்! இனத்தைக் காட்டிக் கொடுக்கும் கயவன் என்பார்கள்! கூசாமல் பழி சுமத்துவார்கள்.

இரு நிறத்தினரையும் கேட்காமல், இருந்திடின்? இதயம் சுக்கு நூறாகிறது, சிக்கல் நிறைந்த பிரச்சினைகளால்.

தம்பி "கை கூப்பியும் கண்ணீர் பொழிந்தும் கர்த்தரின் அருளைப் பெறப் பாசுரம் பாடியும், அடிமை நான் ஐயனே! கருணை காட்டுவீர்! அறியாமைப் பிடியில் உள்ளேன், தெரியாமல் பிழை செய்தேன், பொறுத்தருளுவீர்! நான் உமது அடிமை, உமது உடமை!'' என்று கெஞ்சிடும் நிலையில் நீக்ரோக்கள் இல்லை. ரொட்டித் துண்டுகளை வீசினால் விழுந்தடித்துக் கொண்டு ஓடி பொறுக்கி எடுத்துக்கொள்ளும் இழிநிலையை விரும்பிடும் போக்கில் இல்லை. அவர்களின் கண்கள் பொழிய வேண்டிய அளவு கண்ணீரைப் பொழிந்துவிட்டன; வறண்டு விட்டன ; இப்போது அங்கிருந்து கிளம்புவது நீர் அல்ல; நெருப்பு; கோபப் பொறிகள்! கொடுமைகளைத் தாங்கித் தாங்கி அவர்களின் உள்ளம் எரிமலையாகி விட்டது! அவர்கள் இச்சகம் பேசவோ, பச்சைச் சிரிப்பு சிரித்துக் காட்டி "பணம்' கேட்கவோ தயாரில் இல்லை. அவர்களை நிமிர்ந்து நிற்கச் செய்து விட்டனர், பலப்பல தலைவர்கள்; பல்வேறு வகையான தலைவர்கள், தொடர்ந்து எழுச்சியும் விழிப்புணர்ச்சியும், புரட்சிப் போக்கும் ஊட்டப்பட்டு வரப்பட்டதால், அவர்களை அடக்கி வைப்பதும் முடியாததாகி விட்டது, "ஆராரோ'' பாடி தூங்கவைக்கவும் முடியாததாகி விட்டது; பகட்டு, போலி, பளபளப்பு, பசை இவைகளைக் காட்டி மயங்க வைக்கவும் முடியாததாகி விட்டது, அவர்கள் உரிமையைக் கேட்கின்றனர்; உரத்த குரலில்; நிமிர்ந்து நின்று; நீதியின் பேரால் மட்டுமல்ல, எங்களாலும் எல்லாம் முடியும் என்ற வலிவு காட்டி.

இந்த நிலையினை மிக வேகமானதாக்கிடுவதிலே முனைந்து வேலை செய்த அமைப்புக்களிலே ஒன்றுதான் தம்பி! நான் முதலிலே குறிப்பிட்டுக் காட்டினேனே, கருப்பு முஸ்லீம் என்ற இயக்கம்,

சட்டம், ஒழுங்கு, நீதி, நேர்மை, உலகம் போக்கு, உயர் தத்துவங்கள் ஆகியவைகளை விளக்கிக் காட்டியவர்களின் குரலைக்கேட்டு, மதிப்பளிக்காத நிறவெறியர்கள் எ-ஜா முகமது என்பவர் துவக்கி நடத்தி வந்த கருப்பு முஸ்-ம் இயக்கத்தவரின் இடியோசை கேட்டு மிரண்டிடலாயினர். டக்ளஸ் டில்மன் காலத்திலே அல்ல தம்பி டக்ளஸ் கதை; நான் குறிப்பிடும் கருப்பு முஸ்லீம் நடைமுறை நிகழ்ச்சி.

"கருப்பு முஸ்லீம்' இயக்கம் வெள்ளை நிறவெறியர் மனதிலே பீதியை மூட்டியதுபோலவே நீக்ரோக்கள் மனதிலே என்றும் இல்லாத ஒரு துணிவை ஊட்டிவிட்டது. எ-ஜா முகமது துவக்கிய இயக்கம், எண்ணற்ற, நீக்ரோக்களை, வெள்ளையரின் ஆதிக்கத்தை எதிர்த்து நிற்கும் வீரம் பெறச் செய்தது; அவர்கள் ஒரு தனி வாழ்க்கை முறையே அமைத்துக் கொள்ளலாயினர். தனிப் பள்ளிக்கூடங்கள்; அங்காடிகள், தொழி-டங்கள்; பணிமனைகள்! ஓட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம் இந்த வெள்ளையருடன்! என்று துணிந்து கூறினர். புதியதோர் தன்னம்பிக்கையும் பெற்றனர்.

கிருத்துவ மார்க்கம் இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கத் தவறி விட்டது. அமெரிக்க சர்க்கார் தவறிவிட்டது. எனவே, அந்த மார்க்கமும் உமக்கு வேண்டாம். அந்த அரசிடம் பிடிப்பும் வேண்டாம். நீதி வேண்டும்; விடுதலை வேண்டும் சமத்துவம் வேண்டும்! இவற்றை ஒருவரும் தரமாட்டார்கள். நாமாகத்தான் பெற்றுக் கொள்ள வேண்டும். எப்படி? நாம் தனி! தனி இனம்! எனவே தனி அரசு வேண்டும்! தனி நாடு வேண்டும் என்று கூறிவிடவேண்டும். வெள்ளையருடன் ஒரே அரசில் வாழ்வது ஓநாய்களுக்கு மத்தியில் ஆடுகள் இருப்பதைப் போன்றதே! நாம் யார்க்கும் குடியல்லோம்!

எலிஜாவின் இந்தப் பேச்சு, தத்துவமாகிவிட்டது; இயக்கம் மார்க்கமாகிவிட்டது. நீக்ரோக்களுக்கு என்றுமில்லாத அளவு "தெம்பு' பிறந்துவிட்டது. முஸ்லீம் மார்க்கத்தினை மேற்கொண்டு விட்டதாக இலட்சக் கணக்கானவர்கள் அறிவித்து விட்டனர்.

தம்பி! இதழ்களில் பார்த்திருப்பாய். சென்ற திங்கள் உலகப் புகழ் பெற்றிடும் வெற்றி ஈட்டினான் க்ளே என்ற நீக்ரோ குத்துச் சண்டை மாவீரன்! அவன், தன்னை "முஸ்லீம்' என்றுதான் அறிவித்திருக்கிறான்.

ஏன் கருப்பாகப் பிறந்தோம் என்று ஏங்கிக் கிடந்தவர்கள் எழுந்து நின்று, ஆமாம்! கருப்பு! அதனால் என்ன? கருப்பு, சிறப்பு! என்று முழக்கம் எழுப்புகிறார்கள் எலிஜா துவக்கிய இயக்கம் காரணமாக.

இப்படி! இப்படி! எல்லோரும் வாருங்கள்! வெள்ளை நிறத்தார்களைப் பற்றிப் பேசப் போகிறேன்.

பேசு! பேசு சகோதரா! பேசு! ஒன்று கேட்கிறேன், சொல்லுங்கள் பார்ப்போம். நல்லது செய்த ஒரு வெள்ளையனைப் பார்த்த துண்டா, நீங்கள்?

இல்லை! இல்லை!

போகட்டும், உங்கள் பேரில் பூட்டப்பட்டுள்ள பொருளாதாரத் தளைகள் பற்றித் தெரியுமா, உங்களுக்கு, சொல்லுகிறேன். காலையிலே எழுந்திருக்கிறீர்கள், படுக்கையை விட்டு; எ-களும் கரப்பான் பூச்சிகளும் ஓடுகின்றன உங்கள் படுக்கையிலிருந்து. நான் சொல்வது சரிதானே?

உண்மைதான்! உண்மைதான்!

ஓடிப்போய் உங்கள் குழந்தையைப் பார்க்கிறீர்கள்; குழந்தையின் காதுகளை எ-கடித்துத் தின்று விட்டதா என்று பார்ப்பதற்காக! உண்மை தானே! சரிதானே நான் சொல்லுவது?

உண்மை! உண்மை!

கூரையிலிருந்து சுண்ணாம்பு அடை மேலே விழுகிறது. ஓட்டைச் சட்டியிலே தண்ணீர்! அதைக் கொண்டு முகத்தைக் கழுவிக் கொள்கிறீர்கள். அப்படித்தானே?

ஆமாம் ஐயா! ஆமாம்! அப்படித்தான்.

தூக்கத்தைக் கழுவி விட்டுவிட்டு, கந்தல் ஆடையை உடுத்திக் கொள்ளுகிறீர்கள்; கடனுக்கு வாங்கியது; கடனைக் கட்டி தீர்க்கவில்லை இன்னும்; உண்மைதானே?

ஆமாம்! சொல்லு ஐயா! சொல்லு! கொல்ல வேண்டும் வெள்ளையர்களை.

பிறகு, அதற்குப் பிறகு, செல்லுகிறீர்கள். . . . வெள்ளை எஜமானனிடம் வேலை செய்ய. . . . அயிசன்பர்க்! அவன் வெயர் என்று வைத்துக் கொள்ளுங்கள்; வெள்ளை எஜமானன்.

ஆமாம்! வெள்ளை எஜமானனிடம் வேலை செய்கிறோம்.

எட்டு மணி நேரம் வேலை! வாரம் ஐந்து நாள்! மொத்தம் 44 டாலர் கூலி பெறுகிறீர்கள்.

ஆமாம் ! 44 டாலர் !

வியர்வை சிந்தச் சிந்த நீங்கள் உழைத்து இந்த 44 டாலர் சம்பாதிக்கிறீர்களே இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறானே அயிசன் பர்க், அவன் 440 டாலர் சம்பாதிக்கிறான், நான் சொல்வது சரியா? தவறா?

முழுக்க முழுக்கச் சரி! உண்மை! அப்படிச் சொல்லு, அதை எல்லாம் சொல்லு.

கவலைப்படாதே சகோதரா! கவலைப்படாதே! அப்பட்டமான உண்மையைத்தான் சொல்வேன். எல்லோருக்கும் விளங்கும்படி, உள்ளதை உள்ளபடி சொல்லுவேன். நாளெல்லாம் உழைக்கிறீர்கள். பிறகு இங்கே வருகிறீர்கள் - வந்து துணி வாங்குகிறீர்கள்; யாரிடம்? கோசன் பர்க்கிடம்!

ஆமாம்!

அயிசன்பர்க்கிடம் வேலை செய்து வாங்கிய கூலியிலே ஒரு பகுதியைத் துணிக்காக கோசன் பர்க்கிடம் கொடுக்கிறீர்கள். பிறகு? நகை நட்டு வாங்குகிறீர்கள், கோல்ட் பர்கிடம்!

ஆமாம் . . . அப்படித்தான் . . .

வீட்டு வாடகை கட்டுகிறீர்கள். . . பைன்பர்க்கிடம் ஆமாம் ஐயா! ஆமாம்!

கடன் வாங்குகிறீர்கள். கம்பெனியிடம்! கம்பெனி நடத்துவது யார்? வீன் பர்க்!

அப்படிச் சொல்லு! அதைச் சொல்லு!

ஆனால்; உங்களுக்கு எது தெரியவில்லை என்றால், நான் சொல்லிக்கொண்டு வந்தேனே அயிசன்பர்க், கோசன்பர்க், பைன்பர்க், கோல்ட்பர்க், வீன்பர்க் இவர்கள் எல்லாம் அண்ணன் தம்பிகள்! ஒரே இனம்!! உழைக்கிறீர்கள்; கிடைப்பதை இந்தக் கும்பல் பறித்துக் கொள்கிறது. இதுதான், நான் சொன்ன பொருளாதாரத் தளைகள், புரிகிறதா!!

ஒரே சிரிப்பொலி! ஆரவாரம்!

தம்பி! நீக்ரோக்கள் குடி இருக்கும் பகுதி ஒன்று? நியூயார்க் நகரில்; ஹார்லாம் எனும் பெயர், அந்த குப்பை மேட்டுக்கு; அங்கு தெருக் கோடியில் அடிக்கடி நடைபெறும் கூட்டம் பற்றியது நான் குறிப்பிட்டுக் காட்டியது. லோமாக்ஸ் என்பவர், கருப்பு முஸ்லீம்கள் பற்றிய விவரம் அளித்து எழுதியுள்ள ஏட்டில், இந்த நிகழ்ச்சி படமாக்கப்பட்டிருக்கிறது.

இந்த விதமான பிரசாரம் நீக்ரோ மக்களிடம் என்ன விதமான மனப்பான்மையைக் கிள்ளிவிட்டிருக்கும்! அந்த மனநிலையில் உள்ள நீக்ரோக்களை, ஒரு நீக்ரோ குடியரசுத் தலைவரான பிறகும் அடக்கி வைத்திட முடியுமா! அத்தனைக் கொடிய இனத் துரோகம் செய்திட யாருக்காகிலும் துணிவு பிறந்திடுமா!

ஆனால் வற்புறுத்துகிறார்கள் டில்மனை டர்னரைட் இயக்கத்தைத் தடை செய்யும் சட்டம் பிறப்பிக்கும்படி.

இந்த டர்னரைட் இயக்கந்தான், தங்களுக்காக உண்மை யாகப் பாடுபட்டு வருகிறது; அதன்மீது வேண்டுமென்றே வெள்ளையர்கள் பழி சுமத்தி ஒழித்துக்கட்டப் பார்க்கிறார்கள் என்று நீக்ரோக்கள் எண்ணிக் கொண்டுள்ளனர்.

ஆனால் டில்மனைச் சூழ உள்ள வெள்ளைப் பேரதிகாரிகளோ, டர்னரைட் இயக்கம் கம்யூனிஸ்டு இயக்கம், பலாத்கார இயக்கம் என்று வாதாடுகிறார்கள். ஒரு நீக்ரோ குடியரசுத் தலைவராகி விட்டதால் அந்த இயக்கம் தலை துள்ளி ஆடுகிறது. ஒரு நீக்ரோ, நீக்ரோ இயக்கத்திற்குத் தடை விதிக்க மாட்டார் என்ற தவறான நம்பிக்கையால்; ஆகவே தாங்கள், தங்கள் நிறத்தை மறந்து, அமெரிக்க நாட்டுக் குடியரசுத் தலைவர் என்பதை நினைவிலே கொண்டு, அமெரிக்காவில் பயங் கரத்தையும் பலாத்காரத்தையும் மூட்டிவிட்டுப் பாழ்படுத்தும் டர்னரைட் இயக்கத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.

நீக்ரோ தலைவர்களோ டர்னரைட் இயக்கத்தைத் தடை செய்தால், இனத்துரோகி என்ற இழிவை ஏற்றுக்கொள்ள வேண்டி வரும் என்று எச்சரிக்கிறார்கள். டில்மன் மிரட்டல் எச்சரிக்கை இவைகளைப் பொருட்படுத்தவில்லை. எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும், தீர யோசித்து நியாயமானதுதான், அரசியல் சட்ட திட்டத்துக்கும் ஒழுங்குக்கும் ஏற்றதுதான் என்று தெளிவாக மெய்ப்பிக்கப்பட்டால்தான் தடைவிதிக்க முடியும் என்ற கருத்துடன் இருந்தார்.

பலாத்கார இயக்கம் என்பதற்கும்

கம்யூனிஸ்டு தொடர்பு உள்ள இயக்கம் என்பதற்கும் ஆதாரம் வேண்டும்! பிறகுதான் தடைவிதிக்க முடியும் என்று அறிவிக்கிறார்; ஆத்திரம் பீறிட்டுக்கொண்டு வருகிறது வெள்ளைப் பேரதிகாரிகளுக்கு.

நமது யோசனையை மீறுகிறான் !

நம்மை மதிக்க மறுக்கிறான் !

கருப்பருக்காகப் பரிவு காட்டுகிறான் !

உண்மையிலேயே ஆட்சி செய்ய நினைக்கிறான் !

வெள்ளை மாளிகையில் இருக்கிறோம் என்று இறுமாப்புக் கொள்கிறான்.

மாளிகையின் பெயர் வெள்ளை மாளிகை ! இவன் நிறம் கருப்பு !

அதையே மறந்து விட்டான். இவ்விதம் வெள்ளைப் பேரதிகாரிகள் எண்ணி இருந்திருப்பர், எரிச்சலாகத்தான் இருந்திருக்கும்.

நீக்ரோக்களின் உரிமைக் கிளர்ச்சியை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெற்றிகரமாக நடத்திச் சென்ற நீக்ரோ தலைவர் மார்ட்டின் லூதர் கிங் என்பார், ஒரு முறை, அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்து மறைந்த மாவீரன், அவனிபுகழ் கென்னடியிடம் தொலைபேசி மூலம் கேட்டாராம், "குடியரசுத் தலைவர் அவர்களே! நிறபேதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலே அக்கறை காட்டும் தாங்கள் வீற்றிருக்கும் மாளிகையின் பெயரே வெள்ளை மாளிகை என்று இருக்கிறதே! பொருத்தமாக இல்லையே'' என்று; கென்னடி, "அது நெடுநாட்களாக இருந்து வரும் பெயர்; வேறு பொருள் கொள்ளத் தேவையில்லை'' என்று பதிலளித்தாராம்.

ஆனால் நிறவெறியர்கள், அவ்விதம் கருதுவதில்லை. வெள்ளை மாளிகை! என்ற பெயர் பொருத்தம் பார்த்து, பொருள் அறிந்து வைக்கப்பட்டதாகவே கருதுகின்றனர், அதற்கேற்ற படியே நடந்து கொள்கின்றனர்.

அந்த இயல்பினர், டில்மன் தன்னிச்சையாக நடக்கத் தலைப்படுவது அறிந்து, இனியும் விட்டுவைக்கக்கூடாது; தீர்த்துக் கட்டிவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்தனர். அவர்களின் முடிவைத் துரிதப்படுத்துவது போல மற்றோர் சம்பவம் நடைபெற்றது. "டர்னரைட் இயக்கம்' பற்றிய தகவல்களை விசாரித்தறிந்து "அறிக்கை' அளிக்கும்படி ஒருவரை, டில்மன் நியமித்தார்.

நாங்கள் சொல்லுகிறோம்; எங்கள் வார்த்தையை நம்பாமல் விசாரணைக் கமிட்டி நியமிக்கிறாரா! அவ்வளவுக்கு வளர்ந்துவிட்டாரா! என்று கோபம் கொப்பளித்தது வெள்ளைப் பேரதிகாரிகளுக்கு.

"டர்னரைட் இயக்கம்' பற்றிய விசாரணை நடத்தும்படி நியமிக்கப்பட்டவர் யார் என்பது தெரிந்தும், அந்தப் பேரதிகாரிகளின் ஆத்திரம் மேலும் சீறிக்கொண்டு எழுந்தது ஏன்? என்று கேட்கிறாய் தம்பி! கொஞ்சம் பொறுத்துக் கொள்ளேன் அடுத்த கிழமைவரையில்!

அண்ணன்,

27-2-66