அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


வெள்ளை மாளிகையில் - (8)
சதிக்குள் சதி ! (2)

ஆபிரகாம் லிங்கன் - கென்னடி போல....
ஆத்திரத்திலே அறிவை இழந்து....
உல்லாசியின் சதி வலை
வீரன் விழித்துக் கொண்டான்
கருப்பைக் காத்தது "வெள்ளை'....
உலகம் காடாகிப் போய்விடவில்லை !

தம்பி,

அடக்கப்பட முடியாத ஆத்திரம், அதிலும் நீதியற்ற காரணத்துக்காக மூட்டிக் கொள்ளப்பட்டுவிடும் ஆத்திரம், வெறியாகிவிடுகிறது; அந்த வெறியிலே சிக்கிக்கொள்பவர்கள் எந்தக் கொடுமை செய்திடவும், இழிசெயல் புரிந்திடவும் கூசுவ தில்லை. வெறிகளில் மிக மோசமானது, தன் இனம், தன் மதம் உலகிலேயே உயர்வானது, தூய்மையானது என்ற அழுத்தமான நம்பிக்கையின் காரணமாக விளைந்திடும் வெறி - தன் இனத் தூய்மை காப்பாற்றப்பட்டாக வேண்டும் என்பதற்காக அந்தத் தூய்மையைக் கெடுக்க முனைபவர்களை அல்லது அந்தத் தூய்மையை ஒப்புக்கொள்ள மறுப்பவர்களைத் தீர்த்துக் கட்டிவிடவும் துணிந்துவிடச் செய்கிறது.

அப்படிப்பட்ட கொலைபாதகத்துக்குப் பலியான வர்களே, அமெரிக்கக் குடியரசுத் தலைவர்களான ஆபிரகாம்லின்கனும், கென்னடியுமாவர்.

இங்கேயும் உலக உத்தமர் என்று கொண்டாடப்பட்ட காந்தியாரின் உயிரைக் குடித்ததும் ஒருவிதமான வெறி உணர்ச்சியேயாகும்.

எதிர்பாராத வகையில் குடியரசுத் தலைவராகிவிட்ட டக்ளஸ் டில்மனையும் கொன்று போட வெள்ளை வெறியர் திட்டமிட்டதிலே வியப்பேதும் இல்லை. ஆனால் டில்மன் தப்பித்துக் கொள்கிறார். அவரைக் கொலை செய்துவிடத் தீட்டப்பட்ட சதி தோற்றுவிட்டதாலேதான், அவர் மீது கொடுமையான பழிசுமத்தி வழக்குத் தொடுத்தனர்.

கொலை செய்து போடுவதைக் காட்டிலும் மோச மான செயல் ஒருவருடைய பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தி, இழிவான பழிசுமத்திக் கேவலப்படுத்தி விடுவது.

டக்ளஸ் டில்மனை, வெள்ளை மாளிகைத் தோட்டத்திலேயே அவர் உலவும்போதே மறைந்திருந்து தாக்கித் தீர்த்துக்கட்டி விடுவது என்று தீர்மானித்த சதிகாரர்கள், அதற்கேற்ற சூழ்நிலையை உருவாக்கிட முனைந்தனர்.

குடியரசுத் தலைவருக்குத் தக்க பாதுகாப்பளிக்க,
திறமைமிக்க காவலர் பலர் அமர்த்தப்பட்டிருந்தனர். அவர்களில் மிகுந்த கடமை உணர்ச்சியும், துணிவும் கொண்ட வெள்ளை இனத்தவன் ஒருவன் இருந்தான். அவன் மனதிலேயும் ஒரு குமுறல் மூண்டு கிடந்தது; இனவெறி காரணமாக அல்ல; தனக்கு உரிய இடம், மே-டம் தரப்படாமல், அந்த மே-டம் ஒரு நீக்ரோவுக்குத் தரப்பட்டுவிட்டது என்பதாலே மூண்டிட்ட குமுறல். ஆனால் அவனைக் கைக்குள் போட்டுக்கொண்டு காரியத்தை முடித்திட சதிகாரர்கள் முனையவில்லை. ஒருவேளை மனதிலே குமுறல் இருப்பினும், இத்தகைய இழிசெயலுக்கு அவன் உடந்தையாகிட மாட்டான் என்று எண்ணிடத்தக்க விதமாக அவன் போக்கு இருந்திருக்கும்போல இருக்கிறது. சதிச் செயலுக்கு அவன் உடந்தையாக இருக்க மாட்டான் என்பதை மட்டுமல்ல; அவன் டில்மனைக் காத்து நிற்கிற வரையில் தமது கொலைபாதகத் திட்டம் நிறைவேறாது என்ற எண்ணமும் தோன்றிவிட்டது சதிகாரர்களுக்கு. ஆகவே அவனை முதலில் மடக்கத் தீர்மானித்தனர். அதற்கு ஒருமை விழியாள் கிடைத்தாள்!

அவள் அழகி; கருநிறக் கவர்ச்சியும் இளமை மெருகும், இனிய இயல்பும் கொண்டவள் : நீக்ரோ.

நிறவெறி தலைவிரித்தாடிடும் நிலையிலும் இனத்தூய்மை காப்பாற்றப்படுவதற்காக எத்தகைய கொடுமையையும் இழிசெயலையும் செய்திடத் துணிவுகொண்ட நிலையிலும், காமம் - அல்லது காதல் எனும் உணர்ச்சி, இன பேதம், நிறபேதம் என்பவைகளைக் கடந்த ஒரு கவர்ச்சியாக அல்லவா இருக்கிறது! அந்தக் கவர்ச்சியையே, விழிப்புடன் இருந்து வந்த அந்த வெள்ளைக் காவலாளியை வீழ்த்தப் பயன்படுத்தினர். இது ஒரு "ஏற்பாடு' என்பதனை அவன் உணரவில்லை; மைவிழியாள் உள்ளபடி தன்னிடம் மயங்கிவிட்டாள் என்று எண்ணிக் கொண்டான்; அவன் அவளிடம் மயங்கி விட்டதன் விளைவு அந்த எண்ணம்.

ஒரு சிற்றுண்டி விடுதியில் ஏற்பட்ட சந்திப்பு, புன்னகை யாகி, பொருளற்ற பேச்சாகி, பொழுது போக்காகி, பிறகு ஆசைதான் ஆனால் அச்சமாக இருக்கிறதே என்ற சாகசப் பேச்சாகி, பிறகு இதுவரையில் நான் என்னை எவரிடமும் ஒப்படைத்ததில்லை, உம்மிடமோ என்னை முழுவதும் ஒப்படைத்து விடத் துணிந்துவிட்டேன் என்ற காதற்பேச்சாகி, கடைசியில் தனி அறைக்கே கொண்டு சென்று விட்டது.

அன்றைய தினமும் அவன் குடியரசுத் தலைவரின் அருகிருந்து காவல் செய்யவேண்டிய முறை இருந்தது. ஆனால் இந்த விருந்து முடிந்ததும் வேலையைக் கவனிக்கலாம் என்று இருந்துவிட்டான். தன்னைக் கடமையைச் செய்யவிடாமல் தடுத்திடவே இந்தக் கள்ளி அமர்த்தப்பட்டிருக்கிறாள் என்பதை அவன் உணரவில்லை. கள்ளி என்றா எண்ணிக்கொண்டான், கற்கண்டு, பாகு, தேன் என்று அல்லவா எண்ணிக் கொண்டான். ஆடவன்! இளைஞன்! மயக்கம்! தன்னையும் அறியாமல் ஒரு பயங்கர சதியிலே பங்கெடுத்துக்கொள்கிறோம் என்ற எண்ணமே எழவில்லை, அவன்தான் பாவம் அவளுடைய விழியின் ஒளியையும் அது விடுத்திடும் அழைப்பையும் கண்டு மெய்ம்மறந் திருக்கிறானே, மதுவும்கூட அருந்திவிட்டான்! நிலைமையை மேலுமா விளக்கவேண்டும்.

இசைத்தட்டு ஒலி எழுப்புகிறது; அவள் இதழ் அழைக்கிறது; அவன் தன்னை மறந்திருந்தான்.

நீக்ரோ இனத்தவள் தன் இனத்தானைக் கொன்று போடச் செய்யப்படும் சதியிலே எப்படி ஈடுபட முடிந்தது என்று வியப்பு ஏற்படும். தம்பி! வெறுப்பும் ஆத்திரமும், தெளிவான அறிவின் மீது கட்டப்படுவதில்லையல்லவா! டக்ளஸ் டில்மன்மீது வெள்ளையரில் வெறியருக்கு, நிற பேதம் காரணமாகப் பகை கிளம்பியது போலவே, நீக்ரோ இனத்தவருக்கு, டில்மன் தன் இனத்தை மறந்தவன், கை விட்டு விட்டவன், காட்டிக் கொடுப்பவன் என்ற ஒரு தவறான எண்ணம் காரணமாக வெறுப்பும் ஆத்திரமும் கொந்தளித்துக் கொண்டிருந்தது. வெள்ளை மாளிகையில் கொலு விருக்கிறான், இவன் இனப்பற்று உள்ளவனானால், ஒரே வரியில், நமது இனத்தின் இழிவைத் துடைத்திட முடியாதா - செய்தானா?

குடியரசுத் தலைவர் பதவியைக் காப்பாற்றிக் கொண்டால் போதும், இனம் எக்கேடு கெட்டால் என்ன என்று எண்ணி விட்டான்; சுயநலக்காரன்.

இனத்துக்காகப் பரிந்து பேசினால், வெள்ளைப் பேரதி காரிகள் தன்னைக் கவிழ்த்து விடுவார்களோ என்ற பயம்! கோழை!

இவன்தான் இப்படி என்றால் நமது இன விடுதலைக்காகப் பாடுபட்டுக் கொண்டு வந்ததே ஒரு இயக்கம், அதனையாவது விட்டு வைத்தானா? தடைச் சட்டம் போட்டு விட்டான்! இனத்தைக் காட்டிக் கொடுத்து விட்டான்.

அது மட்டுமா! வெள்ளையர்களே ஏதோ பச்சாதாபப் பட்டுக்கொண்டு, நீக்ரோ மக்களுடைய வறுமையைப் போக்க பெரிய தொகையைச் செலவிட ஒரு சட்டம் கொண்டுவந்தார்கள்; இந்த இனத்துரோகி அந்தச் சட்டத்தையுமல்லவா, தூக்கி எறிந்து விட்டான்! இவனுக்கு வெள்ளை மாளிகையில் வாசம்! இவன் இனம் நாம்! நமக்குச் சாக்கடை ஓரம்! இவனை நாம் நமது இனத்தின் ரட்சகன் என்று கூறிக் கொண்டாடினோம் புத்தி கெட்டு! இவன் நமது இனத்தின் இழுக்கு அவ்வளவும் ஒன்று திரண்டு வந்துள்ள உருவம்! நீக்ரோ இனத்தை நாசமாக்க வந்துள்ள கேடு! தம்பி, இந்த விதமான எண்ணம், நீக்ரோக்களில் மிகப் பலருக்கு. அவர்களின் தயாரிப்பு இந்தக் கவர்ச்சிமிக்க ஒரு நிறக்காரிகை!

கட்டிலின்மீது சாய்ந்து கிடக்கிறாள்; காமவெறியால் அவன் ஆட்டிவைக்கப்படுகிறான்; மிருக உணர்ச்சியை மது கிளறி விடுகிறது. காரியம் கச்சிதமாக முடிவடைகிறது என்ற களிப்புடன் அவள் பேசுகிறாள்:

நான் உன்னிடம் மயங்கியதுபோல, இதற்கு முன் வேறு எவரிடமும் மனதைப் பறிகொடுத்ததில்லை. எத்தனையோ பேர் முயற்சித்தனர். எட்டிநில்! கிட்டே வராதே! என்றேன். ஆனால் உன்னிடம்! எல்லோரையும் போலவா நீ? நீ தனி!

அதென்ன! நான், மற்றவர்களைக் காட்டிலும் எதிலே சிறந்தவன்!

எப்படிச் சிறந்தவன்! தம்பி! உணர்ச்சி தோன்றிய நாள் தொட்டு, நடை பெற்றுக் கொண்டு வரும் "உரையாடல்' தான்! காதலில் கட்டுண்ட நேரத்தில், பெருமூச்சும் பூங்காற்றாகத் தோன்றும்; பொருளற்ற பேச்சிலே ஒரு தனிச் சுவை தெரியும்; உள்ளம் நெகிழ்ந்திடும் நிலை அல்லவா! அதிலும் ஒரு பெண் "சல்லாபம்' செய்வது என்று தீர்மானித்துவிட்டால், மயங்காத ஆடவன் ஏது!!

சல்லாபப் பேச்சோடு பேச்சாக அவள்,

"எனக்கு ஒன்று பிடிக்கவில்லை, உன்னுடைய தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற வேலையிலா இருக்கிறாய்... போயும் போயும் காவல் வேலை! அதிலும் யாருக்கு....

அமெரிக்கக் குடியரசுத் தலைவருக்கு!! அது என்ன சாமான்யமா....

தலைவர்! குடியரசுத் தலைவர்! யார்... கருநிறத் தான்தானே...

உன் இனம்! உன் இனத்தவர் வெள்ளை மாளிகை யிலே கொலுவிருப்பது உனக்குப் பெருமை அல்லவா....

என் இனம்! இன உணர்ச்சி அற்ற மனிதனை என் இனம் என்று எண்ணிப் பெருமைகொள்ள நான் என்ன முட்டாளா! எப்படியோ அங்கே இடம் கிடைத்து விட்டது! அனுபவிக்கிறான்! அவ்வளவுதானே....

வியப்பாக இருக்கிறதே உன் பேச்சு.,. வெறுப்பாகப் பேசுகிறாயே.... மகிழ்ச்சியால் துள்ளுவாய் என்றல்லவா எண்ணினேன்....

மகிழ்ச்சியா? எதற்காக! என் இனத்தின் உரிமைக் காகப் போராடி வந்த இயக்கத்தை ஒழித்துக் கட்டினானே அதற்காகவா.... என் இனம் வறுமையிலிருந்து விடுபட, பெரிய தொகை தரச் சட்டம் கொண்டு வந்ததை வேண்டா மென்று கூறினானே, அதற்காகவா....

இவ்விதமாகப் பேச்சு தொடர்ந்திடவே, விருந்து பெற வேண்டிய நேரத்தில் வீணான விவாதம் நடைபெறுகிறதே, காலம் வீணாகிறதே என்ற கவலை பிறக்கிறது அவனுக்கு. துடியிடை! சுவைதரும் இதழ்! இனக்கவர்ச்சிமிகு ஈடில்லா இன்பம்! இவைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான் அவன்! அவளோ கட்டிலறையில், அரசியல் பேசுகிறாள்! அதிலும் வெறுப்பைக் கொட்டிக் காட்டும் பேச்சு! இடத்திற்கோ, நேரத்திற்கோ, நிலைமைக்கோ துளியும் பொருத்தமற்ற பேச்சு. அவளிடம் அவன் எதிர் பார்த்தது, கண்ணாளா! என்ற கொஞ்சுமொழி; அவளோ வெள்ளை மாளிகையில் உள்ள "கருப்பன்' எங்கள் இனத்துரோகி என்று பேசுகிறாள். திடுக்கிட்டுப் போனான். அதிலும், குடியரசுத் தலைவரின் அருகே இருந்து வந்ததால் அவன் அறிந்திருந்த உண்மை நிலைமைக்கும், அவள் டில்மனைக் குறித்துப் போட்டிருந்த மதிப்பீட்டுக்கும் பொருந்தவே இல்லை.

ஒரு உண்மை கூறுகிறேன், உல்லாசி! அதை மட்டும் கேட்டிடு; மேற்கொண்டு அரசியல் பேச்சே வேண்டாம்; ஆடிப்பாடி மகிழ்ந்திட வேண்டிய நேரம் இது; அரசியல் பேச அல்ல! நான் அறிந்துள்ள உண்மையைக் கூறுகிறேன், கேள். டில்மன் நீ நினைப்பது போலக் கெட்டவன் அல்ல. வெள்ளை மாளிகையிலே வாழ்வதிலே சுகம்கண்டு அதிலே மூழ்கிக் கிடந்திடவில்லை. இனத்தைக் காட்டிக் கொடுத்திடும் கயவன் அல்ல, டில்மன். தன் இனத்திற்கு ஏதும் செய்திட முடியாத இக்கட்டான நிலைமையில் சிக்கித் தத்தளிக்கிறான்...

என்ன சொல்லுகிறாய்...? டில்மன, வெள்ளை மாளிகை வாழ்விலே இன்பம் கண்டு அதிலே மூழ்கி, தன் இனத்தையும் மறந்து கிடந்திடும் போக்கிலே இல்லை என்றா சொல்லுகிறாய்....

சொல்லப்போனால், வெளியே இருப்பவர்கள்தான் டில்மன் சொகுசான வாழ்க்கை வாழ்வதாக எண்ணிக் கொள்வார்கள்... உண்மை என்ன தெரியுமா.... யாரை நம்புவது என்றுகூடத் தெரிந்துகொள்ள முடியாத நிலையில், டில்மன் தவிப்பதை நான் கண்கூடாகப் பார்க்கிறேன். டில்மன் நிலைமையைப் பார்க்கும்போது எனக்கு "ஐயோ பாவம்' என்றுதான் தோன்றுகிறது. சுற்றிலும் சூழ்ச்சிக்காரர்கள் எப்படி, எப்போது கவிழ்த்துவிடுவது என்று திட்டம் தீட்டியபடி உள்ள சதிகாரர்கள். தாங்கள் ஆட்டி வைக்கிறபடி அவன் ஆடவேண்டும், இல்லையென்றால் அவனைப் பதவியி லிருந்து விரட்டிட வேண்டும் என்று எண்ணும் சூழ்ச்சிக் காரர்களுக்கு மத்தியிலே கிடந்து திகைக்கிறான்.....

உண்மையாகவா... டில்மன், வெள்ளையரின் விளையாட்டுப் பொம்மையாக இல்லையா?

யார் சொன்னது அப்படி?... டில்மன் வெள்ளையர் கருப்பர் என்ற நிறத்தை அடிப்படையாக்கிக் கொண்டு கடமையைச் செய்யவில்லை. நாணயமானவனாக நாலுநாள் பதவியில் இருந்தாலும் போதும் என்று எண்ணுகின்றவன். தன்னை வெள்ளையர் இழிவாக நடத்த விரும்புவதையும் உணருகிறான்; கருப்பர் தன்னிடம் வெறுப்புக் கொண்டிருப்பதையும் உணருகிறான். ஆனால் தன் மனச்சாட்சியின்படி நடக்க முனைகிறான்; குடியரசுத் தலைவருக்கு உள்ள கடமையைச் செம்மையாகச் செய்திட விரும்புகிறான். மகிழ்ச்சி இல்லை! நட்புக் காட்டுவோர் இல்லை!! பரிதாபமான நிலைமை! இதுதான் உண்மை. சரி.... சரி.... மேலும் நமக்கு எதற்கு அரசியல் .... வா! வடிவழகி! வாரி அணைத்திட நான் துடித்திடும் வேளையில், நீ மேலும் அரசியல் பேசி ஆயாசத்தை மூட்டிவிடாதே; வா!

அவள் வரவில்லை! துடிதுடித்து எழுந்திருக்கிறான். சற்றே தொலைவில் நிற்கிறாள், பாசப்பார்வை காணோம்! பாகுமொழி இல்லை! மையலூட்டும் நிலை இல்லை! கண்களிலே கொப்ப ளித்துக் கொண்டு வருகிறது கண்ணீர்.

பெருந்தவறு! பெரிய அக்கிரமம் செய்யத் துணிந்தேனே! நானோர் பேதை! கலகக்காரர் பேச்சை நம்பினேன்; நாசவேலைக்கு உடந்தையானேன்.... உண்மை புரிகிறது. டில்மன்.... பாவம்..... இந்நேரம் என்ன நேரிட்டிருக்குமோ.... மனம் பதறுகிறதே... என் இனத்தவரின் சிலர், டில்மன் இனத்துரோகி, ஒழித்துக் கட்ட வேண்டும் என்று கூறினர்; இணங்கினேன். இங்கு உன்னை மயக்கத்தில் கட்டிப் போட்டு வைக்கச் சம்மதித்தேன். என் சல்லாபத்தில் உன்னைச் சிக்கவைக்கச் சொன்னார்கள். அந்த நேரமாகப் பார்த்து டில்மனை அவர்கள்.... தீர்த்துக்கட்ட... ஐயோ! என்ன ஆகி இருக்குமோ இந்நேரம்....

கட்டழகியிடம் கொண்ட மையல், சல்லாப உணர்ச்சி, வா-பத் துடிப்பு எல்லாம் இருக்குமிடம் தெரியாமல் பறந்தது; அவன் நிலைமையை உணர்ந்து கொண்டான். துடித்தெழுந்தான்; ""அடிப்பாவி! சாகசக்காரி! சதிகாரி விபசாரி!'' என்று ஏசினான், உடைகளைச் சரிப்படுத்திக் கொண்டான்; அவளைக் கொன்றுவிடத் துடித்தான். குடியரசுத் தலைவரின் நிலைமை எப்படியோ என்ற எண்ணம் அவனைச் செயலிலே துரத்திற்று. ஓடினான்! ஓடினான்! காப்பாற்ற வேண்டும்; கடமையைச் செய்தாக வேண்டும்! பரிதாபத்துக்குரிய டில்மன் பாதகர்களின் குண்டுக்கு விழாதபடி தடுத்தாக வேண்டும் என்று உறுதிகொண்டு, வெள்ளை மாளிகையை நோக்கி அம்பெனப் பாய்ந்தான்.

அவள் சொன்னபடியே சரிகாரர்களால் ஏற்பாடு செய்யப்பட்டபடி, தோட்ட வேலைக்காரனாக வந்திருந்த ஒருவன் - ஒரு நீக்ரோ-டில்மன் மீது குறி பார்த்துத் துப்பாக்கியால் சுடுகின்ற நேரம், கடைசி வினாடி, வெள்ளை இனத்தவனாகப் பிறந்தும் நிறவெறியற்று, நீதியில் பற்று வைத்துப் பணியாற்றிட உறுதி கொண்ட காவலாளி, டில்மன் மீது பாயக் கிளம்பிய குண்டினைத் தானே ஏற்றுக் கொண்டு டக்லஸ் டில்மன் உயிரைக் காப்பாற்றினான். அவன் மடியவில்லை., படுகாயமுற்றான்.

தம்பி! எத்தகைய வெறி உணர்ச்சி ஊட்டப்பட்டிருந்தாலும், நீதியிலும் நேர்மையிலும் நம்பிக்கை கொள்பவர்கள், வெறி உணர்ச்சியை உதறித் தள்ளிவிட முடியும்; மனிதனாக முடியும் என்பதை மெய்ப்பிக்கும் மன நெகிழ்ச்சி தரத்தக்க சம்பவமல்லவா இது!

உடல் வனப்பைக் காட்டி, வலை வீசி காமவெறி ஊட்டி வாழ்க்கை நடத்திடும் ஒரு பெண்ணே அல்லவா, உண்மை புரிந்ததும் உள்ளம் சுட்டதும், திருந்துகிறாள், ஒரு நொடியில்!

வாலிப முடுக்கு காரணமாகவும், இன்பம் பெறும் துடிப்பு காரணமாகவும், தன்னை மறந்து கிடந்திடும் நிலை பெற்ற போதிலும், தன்னையும் அறியாமல் ஒரு அக்கிரமத் திட்டத்திற்குத் தான் உடந்தை ஆக்கப்படுவதை உணர்ந்ததும் அந்த மனிதன், ஓடோடிச் சென்றானல்லவா, உல்லாசியை உதறித் தள்ளிவிட்டு, தன் உயிரை இழந்தாகிலும், தன்னை நம்பியுள்ள நாட்டுத் தலைவன் உயிரைக் காத்திட! இன வெறி எல்லோரிடமும் இடம் பெற முடியாது. மனித உள்ளம், எல்லாவிதமான வெறியையும் மாய்த்துக் கொண்டு எழ முடியும் என்பதனை எடுத்துக் காட்டும் சம்பவமல்லவா இது? மனிதத் தன்மையை மாய்த்திட, மிருக உணர்ச்சியைக் கிளறிவிட எத்தனை கேடான சூழ்ச்சிகள் மூட்டப்பட்டு விடினும், எல்லோருமே பலியாகிவிடுவதில்லை; ஒரு சிலர் ஒப்பற்ற தனித் தன்மை காட்டி, தாங்கள் மனிதர்கள் என்பதை மெய்ப்பித்துக் கொண்டு வருவதனால்தான், உலகு காடாகிப் போகாமல் இருந்து வருகிறது.

தன்னைக் கவிழ்த்திடச் சதிசெய்யும் வெள்ளையர்களும், தன்னிடம் வெறுப்பைக் கக்கிடும் நிலையில் தன் இனத்தவரும் இருக்கக்கண்டு இதயம் நொந்துகிடந்த டில்மனுக்கு, ஒரு சாதாரணக் காவற்காரன் காட்டிய இந்தத் தியாக உணர்ச்சி, நீதியில் பற்று, நேர்மையில் உறுதி, எவ்வளவு நெஞ்ச நெகிழ்ச்சி உண்டாக்கி இருந்திருக்கும்!

வெள்ளையர் - கருப்பர் என்ற இருபிரிவாக மட்மல்ல மக்கள் இருப்பது; மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து டில்மன், புதிய உறுதி பெற்றிருக்க வேண்டும்.

அந்தப் புதிய உறுதியுடனேயே. டக்ளஸ் டில்மன் தன் மீது தொடுக்கப்பட்ட வழக்கைச் சந்தித்தான்; துளியும் கலக்கமின்றி; விளைவு பற்றிய கவலையற்று, கடமையைச் செய்கிறோம் என்ற மனத்திருப்தியுடன்.

அண்ணன்,

3-4-66