அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


விளக்கு அணைந்து விட்டது!

போளூர் சுப்பிரமணியம் மறைவு
வாழ்க்கை, வரலாறாகிவிட்டது!

தம்பி,

விளக்கு அணைந்துவிட்டது; இருள் கப்பிக் கொண்டது; எண்ணெயும் திரியும் இருக்க இருக்க, ஏதோ ஓர் கரம்பட்டு விளக்கு, கீழே விழுந்து நொறுங்கியதால், ஒளி மாய்ந்துவிட்டது, இருள் சூழ்ந்து கொண்டது, இதயத்தில் வேதனை மூண்டு விட்டது. எனவே, ஏதேதோ கூறிட எண்ணிக் கொண்டிருந்த நான், என் கண்ணீரைத் துடைத்துக் கொள்ளும் காரியத்தில் இருக்கிறேன். ஆம்! இருக்கிறேன்; என் இதயத்தில் நல்லதோர் இடம் பெற்று, முப்பது ஆண்டுகளாக எனக்குற்ற நண்பராக இருந்து வந்த போளூர் சுப்பிரமணியத்தின் உடலுக்குத் தீ மூட்டப்பட்ட கொடுமைமிகு நிலையை கண்டதனால், மனம் புண்பட்ட நிலையில், வேதனை கொப்பளித்திடும் நிலையில், அதிர்ச்சி நீங்கவில்லை - இலேசானதல்ல அந்த அதிர்ச்சி.

முன்னால் என்னிடம் மகிழ்ச்சி குழையக் குழையப் பேசிக் கொண்டிருந்தவர், மறுநாள் மருத்துவமனையில் இரத்தம் சொட்டச் சொட்ட, உயிரொளி மெள்ள மெள்ள அணைந்து கொண்டுள்ள நிலையில் கிடத்தப்பட்டிருக்கிறார், காண்கிறேன், வேதனை தாக்குகிறது, விழி இருளுகிறது, உடல் பதறுகிறது. உள்ளம் கூறுகிறது, "நம்பிக்கை இல்லை! நண்பன் பிழைப்பான் என்ற நம்பிக்கை இல்லை!' என்பதாக. ஓடோடிச் சென்று தலைமை மருத்துவரைக் கேட்கிறேன் - நிலைமை எப்படி? என்று. ஏதோ நான் கேட்டால் அவர் என் நண்பனைப் பிழைத்து எழுந்திருக்கச் செய்துவிடுவார் என்ற விதமானதோர் பித்தம் முற்றிய எண்ணம்.

மோசமான நிலை! ஏதும் கூறுவதற்கு இல்லை. மண்டையில் பலமான அடி, மூளையில் சிதறல் ஏற்பட்டிருக்கும் - என்றெல்லாம் விளக்குகிறார்; விளக்கு நொறுங்கிவிட்டது என்ற செய்தி சில மணி நேரத்திற்கெல்லாம் என் செவியில் நுழைந்தது, நெஞ்சைத் தாக்கிற்று. நிலைகுலைந்து போனேன், நினைப்புகள் சிதறின, பறந்தன.

போளூர் சுப்பிரமணியத்தை நான் எப்போதும் பெயரிட்டு அழைத்ததில்லை; எப்போதும் போளூர்! போளூர்! என்றேதான் அழைப்பேன். போளூரின் வாய் பேசுமுன்பு கண்கள் பேசும்! கனிவு வழியும்! சிரிப்பு பொங்கி வழியும்!

கட்டுடல்! கருத்த மேனி! கருப்பிலே எத்தனை கவர்ச்சி காண முடியுமோ அத்தனை கவர்ச்சி! கண்களிலே ஓர் ஒளி! இதழில் ஓர் மலர்ச்சி! இதயம், போளூருக்கு உடலில் எங்கோ உட்புறத்தில் அல்ல அவருடைய கண்களிலேயே தெரிந்தபடி இருந்திடும். அந்தப் போளூர் மோட்டார் விபத்திலே சிக்கி, மாய்ந்து போனார், மறைந்து போனார், என் மனத்திலே நெருப்பை அள்ளிக் கொட்டிவிட்டு, நான் எப்படித் துடிக்கிறேன் என்பதனைக் காண வேண்டியே காலம் இந்தக் கொடுமையைச் செய்ததோ என்று எண்ண வேண்டியிருக்கிறது. எண்ணெய் தீர்ந்து போய் விளக்கு அணையவில்லை! திரி தீர்ந்து போய் விளக்கு அணையவில்லை, விபத்தினால் அணைந்தது அந்த ஒளி - முப்பதாண்டுகளுக்கு மேலாக நான் கண்டு கண்டு களிப்படைந்து வந்த இன்ப ஒளி. பெரு நெருப்பிட்டுக் கொளுத்திக் கருக்கி நீறாக்கிவிட்டனர் அந்த ஒளியினை. என்ன கொடுமை!

என்ன கொடுமை! என் நிலையே போளூராரை அறிந்துள்ள கழகத் தோழர்கள் அனைவரின் நிலையும்.

தோழர்தம் நிலையே இதுவென்றால், அவரது துணைவியார், குழந்தைகள் என்ன வேதனையில் துடித்திடுவர் - எவர் அவர்க்கு ஆறுதல் அளித்திட முடியும்; என்ன எண்ணி ஆறுதலைப் பெற்றிட முடியும்?

பொல்லாத நோயொன்று பற்றிக் கொண்டு, பொன்னுடலை உருக்கி உருக்கி மாய்த்திட, இருமி ஈளை கட்டி இழுப்புடன் போராடி, இன்றோ நாளையோ, பகலோ இரவோ, உயிர் பிரியும் வேளை எப்போதோ என்று பலரும் பேசிக் கொள்ளும் நிலையிலா நேரிட்டது இந்த மறைவு? நண்பர்களிடம் அளவளாவி விட்டு நண்பகல் சென்னை விட்டுக் கிளம்பியவர் ஒரு மணி நேரத்திலே, உயிர் வேதனை அடைந்திடும் விபத்திலே சிக்கி, இரவு உயிரற்றுப் போனார் என்பதன்றோ நிலை. எவர்தான் தாங்கிக் கொள்ள முடியும்! இயற்கை! என் செய்வது! என்று கூறிடும் துணிவு எவருக்குத்தான் எழ முடியும்? கண்டவர் கல்லாயினர் - கல் மனத்தினரும் கசிந்துருகினர் - என் கலக்கம் குறைந்திடாதோ என்றதோர் நிலை - எனவேதான் தம்பி! கருத்தளிக்கும் காரியத்தில் ஈடுபட இயலவில்லை.

போளூராரின் இனிய இயல்புகள், அவர் இயக்கத்தில் ஆற்றிய அருந்தொண்டுகள், நெஞ்சை அள்ளும் நிகழ்ச்சிகள், அவருடைய நகைச்சுவைப் பேச்சினால் நாடு கண்ட அறிவுக் கதிரொளி என்பவைகளைப் பற்றிக் கூட எடுத்துக் கூற இயலவில்லை - முதலில் வேதனை தீர வேண்டும்; அதன் கூராவது ஓரளவு மழுங்க வேண்டும்; பிறகுதான் அவரைப் பற்றியவைகளைக் கூட நினைவிற்குக் கொண்டு வந்து ஒழுங்கு படுத்திக் கூற முடியும்; இப்போது உள்ள நிலை, எங்கள் இருவருக்கும் இருந்துவந்த முப்பதாண்டுத் தோழமைத் தொடர்பிலே நான் கண்டவைகள் வேக வேகமாகக் கிளம்பிக் கிளம்பி என் மனத்திலே ஓர் கொந்தளிப்பைத்தான் ஏற்படுத்து கின்றன. பெருமழை கண்ட புள்ளினம் சிறகுகளை விரித்திடவும் இயலாமல், ஏதேனும் பதுங்குமிடம் சென்று உடல் நடுங்கிக் கிடத்தல் போலுள்ளது, என் உள்ளம். விளக்கு அணைந்து விட்டது, கீழே வீழ்ந்து நொறுங்கி விட்டது; ஒரு வாழ்க்கை, வரலாறு ஆகிவிட்டது; என் வாழ்வில் ஓர் பெரிய வேதனை தாக்கி விட்டது; இந்நிலையில் நான் எதை எழுத, எதைக் கூற...

அண்ணன்,

29-8-65