அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


விந்தை மாந்தர்கள்

பக்தவத்சலனார் சுளையை விட்டுத் தோலைச் சுவைப்பவர்
காத்திருப்போம்; காலம் தெளிவளிக்கும்

தம்பி!

ஊருக்குப் பெரியவர், அவரைக் காணும்போது வெறுங் கையுடன் போகக்கூடாது என்று எண்ணி, எலுமிச்சம் பழம் கொடுத்து வணக்கம் கூறுகிறாய் என்று வைத்துக்கொள் - என்ன செய்வார் அந்தப் பெரியவர் என்று எதிர்பார்க்கிறாய்? பதில் வணக்கம் கூறிவிட்டு, எதற்கப்பா இவ்வளவு மரியாதை, நீ என்ன எனக்குப் பழக்கமில்லாதவனா, நம்ம வீட்டுப்பிள்ளை போன்றவன் நீ - என்று பேசுவார் என்றுதானே! யாருமே அப்படித்தான் எதிர்பார்ப்பார்கள். ஆனால். . .!

***

சிரித்துச் சிரித்துப் பேசிடும் இயல்பு! எவரிடமும் விளையாடி மகிழும் சிறுவன்! அவனிடம் அன்பு காட்டி, உன்னால் இயன்றது ஒரு வாழைப்பழம், கொடுக்கிறாய், என்ன செய்வான் என்று எண்ணுகிறாய்? சிறுவன் துள்ளிக் குதிப்பான்! எங்க மாமா! தங்க மாமா! எனக்கு வாழைப்பழம் கொண்டுவந்து கொடுத்தது! என்று மகிழ்ச்சியுடன் கூறியபடி தன் தாயிடம் பழத்தைக் காட்டி, பிறகு அதைத் தின்பான் என்று. ஆனால். . .!

***

நீ மட்டும் சாக்கடை நாற்றத்தைப் போக்கிவிட்டு, இந்த இடத்தைப் பூக்கடையாக்கிக் காட்டு, நான் உனக்கு அடிமை யாகிவிடுகிறேன் என்று ஒருவரிடம் கூறுகிறாய் என்று வைத்துக் கொள். அவர் என்ன செய்ய வேண்டும்? முடிந்தால் நீ சொன்னதைச் செய்து காட்டிவிட்டுப் பிறகு உன்னிடம் வரவேண்டும். பார்! நீ சொன்னபடி செய்துவிட்டேன், இப்போது என்ன சொல்கிறாய் என்று கேட்க வேண்டும். ஆனால். . .!

**

ஊமைப் பெண்ணைப் பேசவைத்துவிடு. ஒன்பதே நாளில் நான் அவளைத் தேசிகர் மெச்சிடும் பாடகியாக்கிக் காட்டுகிறேன் என்று ஒருவரிடம் சொன்னால், அவர் என்ன பொருள் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பாய்? ஊமைப் பெண்ணைப் பேசவைக்க நம்மாலே முடியவா போகிறது; எதற்காக நாம் ஒரு வம்பான பந்தயத்திலே போய் மாட்டிக்கொள்வது என்று எண்ணி வாய் மூடிக்கொள்வார் என்றுதானே! ஆனால். . .!

***

கொடுத்த கடனை மட்டும் கோபாலன் திருப்பிக் கொடுத்து விடட்டும், பார்! நான் என் ஒரு பக்கத்து மீசையை எடுத்து விடுகிறேன்!! - என்று ஒருவரிடம் "சவால்' பேசுகிறாய் என்று வைத்துக்கொள் - அவர் என்ன செய்ய வேண்டும்? கோபாலனை நச்சரித்தாகிலும் பணத்தைப் பெற்றுக்கொண்டு, பிறகு வந்து பார்த்து, "கடனைத் திரும்பப் பெறவே முடியாது என்று சொன்னாயே! இதோ பார்!'' என்று பணத்தைக் காட்டிவிட்டு, என்ன ஆவது உன்னுடைய "சவால்' என்று கேட்க வேண்டும். ஆனால். . .! ★ குத்துச்சண்டைக் குமரப்பனைக் குப்புற வீழ்த்திக்காட்டு, உனக்கு எட்டுப் பவுனில் தங்கத்தோடா செய்து போடுகிறேன் என்று கூறினால், அந்த நண்பன் என்ன செய்ய வேண்டும்? குமரப்பனிடம் பேரம் பேசிக் கொண்டாகிலும் அவனை வீழ்த்துவதுபோல பாவனையாகவாகிலும் செய்து காட்டிவிட்டு, எங்கே எட்டுப் பவுனில் தோடா என்று கேட்க வேண்டும். ஆனால். . .!

ஆனால், முதலமைச்சர் பக்தவத்சலனார் இருக்கிறாரே, அவர் நீ எதிர்பார்க்கிறபடி நடந்துகொள்ளமாட்டார் போலிருக்கிறது.

எலுமிச்சம் பழத்தை மரியாதைக்காக நீ கொடுத்ததும் அந்தப் பெரியவர், உருட்டு விழி காட்டி மிரட்டும் குரல் எழுப்பி, "ஏடா! என்னைக் கேலியா செய்கிறாய்! என்ன துணிவு உனக்கு, எனக்கு எலுமிச்சம் பழம்தர! என்ன உன் நினைப்பு! யார் என்று என்னை எண்ணிவிட்டாய்! எனக்குத் தலை கிறுகிறுப்பு, பித்தம், பைத்தியம் என்று காட்டத்தானே, எலுமிச்சம் பழம் கொடுக்கிறாய்? இதைத் தலையில் தேய்த்துக்கொண்டு நீராடினால் பித்தம் குறையும், புத்தி தடுமாற்றம் போய்விடும் என்று குத்திக் காட்டும் செயலல்லவா இது. எலுமிச்சம் பழம் எனக்கு! ஏடா பயலே! என்ன திமிர் உனக்கு!!'' - என்று பேசினால் என்ன நிலை ஆவாய்? திணறிப் போவாய்! முதலமைச்சர் பக்தவத்சலம் தமது போக்காலும் பேச்சாலும் நம்மைத் திணற அடிக்கிறார் என்று தோன்றுகிறது. மரியாதைக்குத் தந்த எலுமிச்சம் பழத்தை, கேலிக்குத் தந்தது என்று தப்பர்த்தம் செய்துசொண்டு "தகதக' வென்று ஆடிடும் பெரியவர்போல, நான் சொல்வதைத் தப்பர்த்தம் செய்துகொண்டு, பதை பதைக்கிறார், படபடக்கிறார், பலப் பல பேசுகிறார்.

சிறுவனிடம் பழம் கொடுத்ததும், இது என்ன சிறு மலையா, பூவனா, நேந்திரமா என்று கேட்டால், பரவாயில்லையே சிறுவன் கெட்டிக்காரன் என்று எண்ணிக்கொள்வாய். அந்தச் சிறுவனோ, பழத்தை ஆவலுடன் வாங்கி உரித்து, சுளையை ஜன்னல் வழியாக வீசி எறிந்துவட்டு, தோலைத் தூக்கிக்கொண்டு ஓடோடிச் சென்று "அம்மா! அம்மா! பார்! பார்! மாமா கொடுத்தது, பாரம்மா!'' என்று கூவுகிறான். வாழைப்பழத்தில் சுளை சுவைத்திட, தோல் மாட்டுத் தொழுவத்துக்கு என்ற விவரமும் புரியவில்லை சிறுவனுக்கு. சிறுவனுக்கேகூட இது புரியவில்லை என்றால், நமக்கு என்னவோபோல இருக்கும். சுளை முக்கியமா தோல் முக்கியமா என்பதுகூடத் தெரியாதா; வயது எட்டு இருக்கும்போலிருக்கிறதே என்று எண்ணிக்கொள்வோம்; ஏக்கம் கொள்வோம்.

பெரியவர்கள், பெரிய இடத்தில் உள்ளவர்கள் எத்தனை பெரிய செயலையும் எளிதாகச் செய்திடும் வாய்ப்புப் பெற்றவர்கள், சுளையை எறிந்துவிட்டு, தோலைத் தூக்கி வைத்துக்கொண்டு விளையாடினால் நான் என்ன சொல்ல முடியும்! பரிதாபப்படலாம்!!

முதலமைச்சர் பக்தவத்சலனார் சுளையை விட்டுவிட்டுத் தோலை ஆவலுடன் எடுத்துக்கொள்ளும் விவரமறியாத விளையாட்டுப் பிள்ளையல்ல; வயதில் பெரியவர்; சொல் அதன் பொருள், பொருள் அதன் பொருத்தம், இடம் காலம் என்ற இவைகளை அறிந்திடும் பக்குவம் பெற்றவர்; என்றாலும், என் பேச்சிலே அவருக்குத் தோல்தான் பிடிக்கிறது. சுளையைச் சுவைத்திட மனம் இல்லை என்றால் நான் என்ன செய்யலாம்! இவ்வளவு பெரியவரும் இப்படித்தானா என்று எண்ணி ஏங்க வேண்டும்! வேறென்ன செய்ய முடியும்! அவருடைய இயல்பையா மாற்ற முடியும்? நானா? ஏ! அப்பா! நம்மாலே முடிகிற காரியமா! நாடே முயன்று பார்த்து, முடியவில்லையே என்று முணுமுணுக்கிறதே! நான் எம்மாத்திரம்!!

சாக்கடையை அகற்றிவிட்டு அந்த இடத்தைப் பூக்கடை யாக்கிக் காட்டு, நான் உனக்கு அடிமையாகிறேன் என்று சொன்ன சொல்லைக் கேட்டு, சாக்கடையைச் சுத்தப்படுத்த முனையாமல், தெருத் தெருவாகச் சுற்றி, தெரியுமா! தெரியுமா! எனக்கு அவன் அடிமையாகிவிட ஒத்துக்கொண்டான்! என்று அந்த ஆசாமி பேசினால், ஊர் என்ன சொல்லும்? நேற்றுவரை நன்றாகத்தானே இருந்தான்; இன்று என்ன ஏதோ பேசுகிறானே என்று கூறும்.

ஆனால், நாடாளும் நல்ல நிலையில் உள்ள முதலமைச்சர் பக்தவத்சலம், சாக்கடையைப் போக்கிப் பூக்கடை வைத்திடு என்ற நிபந்தனையைக் கூறாமல், அடிமையாகிவிடுவதாகச் சொன்னான் என்ற அபத்தத்தைச் சுமந்து திரிவதுபோல, என் பேச்சிலே இணைந்துள்ள நிபந்தனைகளைக் கூறாமல், என் சவாலின் இறுதிப் பகுதியை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு பேசுகிறார். நான் என்ன சொல்லி அவருக்கு விஷயத்தை விளங்க வைப்பேன்! அறியாதவர்களுக்குச் சொல்லலாம்; அறிந்துகொள்ள மறுப்பவர்களுக்கு எப்படிச் சொல்வது! எதைச் சொல்வது! இப்படித்தானா இவர் என்று எண்ணிக்கொண்டு வேறு பயனுள்ள காரியத்தைக் கவனிக்கச் செல்லவேண்டியதுதான்! ஓணானின் முதுகுக் கூனை நிமிர்த்திட மருத்துவமனையா அமைக்க முடியும்!!

இதோ தண்டபாணி தேசிகர்! இவர் மெச்சிடும் விதமான பாடகியாக்கிடுவதாகச் சொன்னாயே! எங்கே அந்தப் பெண்! பாடச் சொல்லு!! - என்று கேட்டுக்கொண்டு, ஊமைப் பெண்ணை நீ பேச வைத்தால், நான் பாட வைக்கிறேன் என்று சொன்னதில் முதல் நிபந்தனையை நிறைவேற்றாமல், இறுதி நிபந்தனையைத் தூக்கிக் காட்டினால், என்ன பொருள்! ஊமைப் பெண் பேசட்டும், பேசச் செய் - பிறகு பாடுவாள் - பாட வைக்கிறேன் என்றுதானே பதில் தரவேண்டும். அவ்விதமான பதிலை நான் தரவேண்டிய நிலைமையை உண்டாக்குகிறார், என் பேச்சிலே உள்ள இணைப்பைக் கழற்றி விட்டுக் கையில் கிடைத்ததை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு பேசும் "கனம்' பக்தவத்சலம் அவர்கள்!

ஒருவருக்கொருவர் நடத்திக்கொள்ளும் வாக்குவாதத்தில், முழுவதையும் - தொடர்பாக உள்ளது அவ்வளவையும் எடுத்துப் பார்த்து, பொருளும் பொருத்தமும் காணவேண்டுமேயன்றி, ஒரு துண்டு மட்டும் தூக்கி வைத்துக்கொண்டு இதற்கென்ன பொருள் என்றா கேட்பது?

இராமன் சீதையைக் கரம் பற்றினான்.
அனுமாரின் வா-ல் தீ பற்றிக்கொண்டது.
தசரதன் கீழே வீழ்ந்து மடிந்தான்.
மான் மாயமாக மறைந்தது.
சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தனர்.
ஆ! பிராணநாதா! என்று சீதாதேவி அலறினாள்.
சேடிகள் சிரித்து மகிழ்ந்தனர்.
வில்லை எடுத்தான்; விரிந்தது; ஒடிந்தது.

இவை எல்லாம் உள்ளன இராமாயணத்தில்; ஆனால், ஒவ்வொன்று ஒவ்வோரிடத்தில், ஒவ்வொன்றுக்கு ஒவ்வொரு பொருத்தம், இணைப்பு; இவ்விதமாக உள்ள எண்ணற்ற நிகழ்ச்சிகள் பொருத்தமுடன் இணைக்கப்பட்டுள்ள மொத்த வடிவத்தைக் கொண்டுதான் இராமாயணத்தின் பொருளைத் தெரிந்துகொள்ளலாமேயன்றி, இராமாயணத்தில் வெவ்வேறு இடத்தில் உள்ளவைகளில் சிற்சில துண்டுகளைக் கல்லி எடுத்து வைத்துக்கொண்டு, "பார்த்தனையா இராமாயணம்' என்றா பேசுவார்கள்? அதுபோல இந்தப் பெரியவர் என் பேச்சிலே தொடர்புதனை இவராக அறுத்துவிட்டு, துண்டு துணுக்குகளைத் தூக்கி வைத்துக்கொண்டு, இதுதான் அண்ணாதுரை சொன்னது! இதுதான் அவருடைய கருத்து! என்றா பேசுவது? இவ்வளவு பெரிய இடத்தில் இருந்துகொண்டா! வெட்கமாக இருக்கிறது நம்மவர் இப்படிப் பேசுகிறாரே என்று இவருக்கு மெத்த வேண்டியவர்களே என்னிடம் கூறும்போது.

என்னைக் கண்டிக்க, கேலி பேச, அவருக்கு உரிமையும் இருக்கிறது; வசதி நிரம்ப, வாய்ப்பும் அதிகம். நிலையை எடுத்துக் கொண்டாலும், அவர் எதுவும் பேசலாம். ஆனால், அதற்காக இவ்வளவு வழுக்கிவிடுவதா! இந்தி ஆட்சிமொழி இல்லை என்று சர்க்கார் அறிவித்துவிட்டு, அது இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்ற திட்டமும் கூறாமல், அதனைக் கட்டாயம் படித்தாக வேண்டும் என்றும் சட்டம் போடாமல், இந்தி பரப்புவதற்காகச் சர்க்கார் பணமும் செலவழிக்காமல் இருந்தால் இந்தி பரவிட உமது உதவி கிடைக்குமா என்ற கருத்துப்பட - லால்பகதூர் அல்ல - நந்தா அல்ல - பாராளுமன்றத்தில் அல்ல - பத்திரிகை நிருபர் ஒருவர் - நிருபர்கள் மாநாட்டில் கேட்டிருக்கிறார். அவருடைய கேள்வி, சவால் விடுகிற முறையில் இருந்தது. நானே பதில் கூறும்போது, நான் அந்தச் சவாலை ஏற்றுக்கொள்கிறேன் என்ற முன்னுரையுடன் பேசி இருக்கிறேன் - இதனை நான் விளக்குவதற்கு முன்பே "இந்து' பத்திரிகை விளக்கமாக்கி இருக்கிறது - இவ்வளவுக்கும் பிறகு முதலமைச்சர் என்மீது தமது கேலிப் பேச்சை வீசுவது முறை அல்ல! அதனால் எனக்கு எந்த இழுக்கும் வந்துவிடாது. இவரைப்பற்றி, பலர் பலவிதமாகப் பேசிக்கொள்வார்கள்; பேசிக்கொள்கிறார்கள்.

யாராவது ஒருவர் என்னிடம் வந்து, "அண்ணாதுரை! வா! வா! இந்தி பரப்பிட வா!' என்று அழைத்தால் என்ன சொல்வேன் என்று எதிர்பார்க்கிறார் முதலமைச்சர், "இதோ வந்துவிட்டேன்' என்று, வந்து கேட்பவர் விவரம் புரியாதவராக இருந்தால், விளக்கம் கொடுத்து அனுப்புவேன்; விஷமத்தனமாகக் கேட்பவராக இருப்பின், "மதியிலி! என்னைப்போய் அழைக்கிறாயே இந்தியைப் பரப்ப உதவும்படி! நான் சொன்னது என்ன? அதைச் செய்து முடித்தாயா? ஓடு! சாஸ்திரியிடம்! இந்தி இந்தியாவின் ஆட்சிமொழி அல்ல என்ற உத்திரவு போடச் சொல்லு, ஒரு கோடிக்கு மேல் இந்திக்காகச் செலவிடப் பணம் ஒதுக்கியிருக்கிறார்களே, அந்தப் பணத்தை வேறு ஏதாவது உருப்படியான காரியத்துக்குச் செலவிடச் சொல்லு. அதை எல்லாம் செய்துவிட்டல்லவா என்னிடம் வரவேண்டும். அதைச் செய்ய வக்கு வல்லமை இல்லாமல் என்னிடம் வந்து பேசுகிறாயே! போ! போ!'' என்று கூறுவேன்.

ஆனால், முதலமைச்சர் தவறாகப் புரிந்துகொண்டு பேசும்போது குடிமகன் இத்தனை கண்டிப்பாகப் பேச முடியுமா! அதனால்தான் என் மனக்கண்முன், எலுமிச்சம் பழம் கண்டு எரிச்சல் கொண்ட பெரிய மனிதர், சுளையைக் கீழே போட்டு விட்டுத் தோலைத் தூக்கிவைத்துக்கொண்டு ஆடிடும் சிறுவன், ஊமைப் பெண்ணைப் பேச வைக்க ஒத்துக்கொண்டு அதைச் செய்து முடிக்காமல், இந்தப் பெண்ணைப் பாடச் செய் என்று கேட்ட அப்பாவி ஆகியோர் தெரிந்தனர்.

நானாகவா இட்டுக்கட்டிச் சொல்கிறேன், பத்திரிகையில் வந்ததைச் சொல்கிறேன் என்று வாதாடிக் காட்ட நினைப்பார்கள்.

பத்திரிகை நிருபர்கள் மாநாட்டிலே கூறப்படுபவைகளை இன்னின்ன விதமாக நீங்கள் சொன்னீர்கள். இன்ன விதமாக நாங்கள் வெளியிடுவதாக இருக்கிறோம். நீங்கள் இப்படித்தானே சொன்னீர்கள் என்று நம்மிடம் காட்டி, ஒப்பம் பெற்றுக் கொண்டு, இதழ்களில் வெளியிடும் வழக்கம் இல்லை, குறித்துக் கொண்டு போகிறார்கள். வெளியிடுகிறார்கள்; வெளியிடுவதற்கு மறுப்பு நாம் அளித்தால்கூட பல வேளைகளிலே மறுப்பை வெளியிடுவதுமில்லை; வெளியிடும்போதுகூட, பளிச்சிட்டுக் காட்டுவதில்லை. இது இன்று உள்ள முறை.

இந்த நிலையில், எனக்கு அல்ல, முதலமைச்சர் போன்ற பெரிய நிலையினருக்கே, அவர்கள் எதிர்பார்க்காத முறையில் செய்திகள் வெளியிடப்பட்டுவிடுவதுண்டு.

மாணவர்களுக்குக் கழகத் தலைவர்கள் புகாரி ஓட்டலில் பிரியாணி வாங்கிக் கொடுத்து மயக்கிவிட்டார்கள் என்று முதலமைச்சர் சொன்னதாகப் பத்திரிகைகளிலே வெளிவந்தது; படித்தோம், பதறினோம்.

முதலமைச்சர் இதற்கு ஒரு மறுப்பும் வெளியிடவில்லை, பல நாட்கள் உருண்டோடியும்!

தொலைபேசி மூலம் தெரிவித்திருந்தால்கூடப் பத்திரிகைகள் மறுப்பை வெளியிட்டிருக்கும். செய்தாரில்லை. செய்ய வேண்டும் என்று தோன்றவுமில்லை.

ஒரு திங்கள் அளவு சென்ற பிறகு, நான் அப்படிச் சொல்லவே இல்லை; பத்திரிகையில் வந்தது வெறும் புரளி என்று முதலமைச்சர் கூறினார். அதனைப் பத்திரிகைகள் வெளியிட்டன; வேறென்ன செய்ய முடியும்?

ஒரு திங்கள் அளவு வாய் மூடிக்கொண்டிருந்துவிட்டு இப்போது "என் வாயில் பிரியாணி என்ற வார்த்தையே வராது' என்று முதலமைச்சர் சொல்கிறார், என்ன செய்தோம்? சரி! ஒரு விளக்கம், மறுப்பு, சமாதானம் - என்ற முறையில் அதனைக் கருதிக்கொண்டோம். "இல்லை! இல்லை! பிரியாணி என்று சொன்னார், இன்னின்ன பத்திரிகைகளைப் பார்த்தால் புரியும்' என்று கூக்குரல் எழுப்பினார்களா! இல்லையே!! பெரியவர் கூறிவிட்டார், சரி என்று இருந்துவிட்டோம்.

இவர் போன்றார் பத்திரிகைகளில் வெளியிடப்படுவதை இல்லை என்று மறுக்கலாம், புது விளக்கம் தரலாம், பத்திரிகையில் ஆயிரத்தெட்டு வரும், நானா பொறுப்பு என்று தர்பார் பேசலாம். நாடு தாங்கிக்கொள்ள வேண்டும். ஆனால் நான் பேசியிருப்பதற்கு - இன்ன பொருள் - இதற்குத் தப்பான பொருள் கொள்ளாதீர்கள் பொருத்தமற்று; தொடர்பற்றுப் பேசாதீர்கள் என்று நான் விளக்கம் அளித்தால், அதனைக் கவனிக்கக்கூட மாட்டார்களாம் இவர்கள்! ஏன்? இவர்கள் பெரிய இடம், நான் சாதாரணம்! நியாயம் பொது! நேர்மை எத்தனை உயரம் சென்றாலும் இருக்க வேண்டும். இருக்கிறதா என்பதற்கு எனக்கல்ல, அவரவர்கள் தமது நெஞ்சுக்குப் பதில் கூறிக்கொள்ள வேண்டும்.

மாணவர்களைச் சந்திக்க முதலமைச்சர் மறுக்கிறார் என்று இதழ்கள் வெளியிட்டன. இவர் அதனை அப்போது மறுக்கவு மில்லை. இப்போது, நான் அவ்விதம் சொல்லவில்லையே என்றார், நாடு கேட்டுக்கொண்டது. அன்று வெளிவந்த இதழ்களைத் தூக்கிக்கொண்டு போய் இவர் எதிரில் போட்டு, "இதற்கென்ன சொல்கிறீர்? இதற்கு என்ன பொருள்?' என்றா கேட்பது?

நான் அப்படிக்கூட அல்ல. என் பேச்சின் மொத்தத்தை, ஏன் அதுபோல் பேசினேன் என்பதற்கான காரணத்தை, என் நோக்கத்தைப் புரிந்துகொண்டு பேசுங்கள் என்று சொல்கிறேன்; அந்த அளவு கண்ணியம்கூடவா காட்டக்கூடாது?

ராஜ்யசபைப் பேச்சு, பத்திரிகை நிருபர்களிடம் பேசியது என்ற இரண்டையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக்கொண்டு, குழம்பிப்போய், குழப்பமாக இருக்கிறதே என்று பேசுகிறார் முதலமைச்சர். அவராகக் குழப்பத்தைத் தேடிக்கொண்டால் யார் என்ன செய்ய முடியும்? காலம் தெளிவளிக்கட்டும் என்று காத்திருக்க வேண்டியதுதான்.

இதுபற்றி நான் எண்ணிக்கொண்டிருந்தபோதுதான் என் மனக்கண்முன் விந்தை மாந்தர்கள் தெரிந்தனர், உனக்கும் தெரிவித்தேன்.

அண்ணன்

11-4-1965