அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


வினோபாவைக் கண்டேன்
2

விளம்பரம் பெறக் காங்கிரஸ்காரர்கள், வினோபாவின் ஒளியைப் பயன்படுத்திக்கொள்வதுகூட ஒருபுறம் இருக்கட்டும் - அதிலே அவர்கள் வெற்றி பெறப்போவதுமில்லை - வினோபா அதனை அனுமதிக்கவும் போவதில்லை என்பது எனக்குப் புரியத்தான் செய்கிறது - வேறோர் வேடிக்கையைப் பார், தம்பி, வந்துள்ள பெரியவரிடம் உபதேசம் கேட்போம், உயர்நெறி அறிவோம், உள்ளத்துக்குச் சாந்தி தேடிக்கொள்வோம், ஏறிவிட்ட கறைகளைப் போக்கிக்கொள்வோம் என்று துளியும் அக்கறை காட்டாமல், காங்கிரஸ்காரர்கள், வினோபாவைத் தூண்டிவிட்டு, நம்மைத் தாக்கச் சொல்கிறார்கள்.

இந்த அரும்பணியைத் திறம்படச் செய்ய முயன்றி ருக்கிறார், ஆச்சாரியார்!

"ஆச்சார்ய வினோபா அவர்களே! இங்கு, தமிழ்நாட்டிலே, நாஸ்தீகம் தலைவிரித்தாடுகிறது. அரக்கர் கூட்டம் பெருத்து விட்டது! அதிலும் காஞ்சிபுரத்தில் அது அதிகம். தாங்கள் இதனை ஒழிக்க வேண்டும்'' - என்று, ஆச்சாரியார் பேசியிருக்கிறார். தம்பி! எனக்குக் கோபம் வரவில்லை - சிரிப்புத்தான் வருகிறது!

ஆச்சாரியார், பாபம், மாமேதை என்று கொண்டாடப் படுகிறார்.

ஓயாமல் பேசுகிறார், ஒய்யாரமாக எழுதுகிறார்.

இராமனை அழைக்கிறார் அரிபரந்தாமனை பஜிக்கிறார்.

ஆரிய குலத்தவரே! அஞ்சற்க! அயர்ந்துபோய் இருந்து விடாதீர்! விழித்தெழுக! வீழ்த்துக விரோதிகளை! - என்கிறார்.

இவ்வளவும், பயன்படவில்லை - என் பாணங்களை ஏவி ஏவிப் பார்க்கிறேன், அரக்கர் தொலையவில்லை. வினோபா அவர்களே! தாங்கள் தமது சக்தியால், இந்த அரக்கர்களைச் சம்ஹரிக்க வேண்டும் - என்று கேட்கும் போக்கு, சிரிப்பாகத் தான் இருக்கிறது. எனக்கு மட்டுமா, தம்பி வினோபாகூடத்தான் உள்ளூரச் சிரித்திருக்கிறார்!

"மெத்த அலுத்து வந்திருக்கிறாள் அத்தை!

குத்திப் புடைக்கச் சொல்லு நெல்லை'' - என்று குக்கிராமத்துப் பழமொழி கூறுவார்கள்.

வினோபா, தமிழகத்தில் பூதானத்தை வெற்றிபெறச் செய்வதற்காக, பல்லாயிரக்கணக்கிலே "பாத யாத்திரை' செய்துகொண்டு வருகிறார், எவரெவர் எவ்வெவ்வகையான உதவி தருகிறீர்கள், என் பணி, உமது பணியாகும், உத்தமப் பணியாகும் என்று கூறி வருகிறார். வந்துள்ள அந்தப் பெரியவருக்கு, அன்புரையும் ஆதரவும் தந்து, இன்னின்ன வகையிலே, தாங்கள் மேற்கொண்டுள்ள மகத்தான தொண்டுக்கு நான் பேருதவிபுரிவேன் என்று கூறிடாமல், வந்ததே வந்தீர், தங்கள் வல்லமையைக்கொண்டு, இந்த அரக்கர் கூட்டத்தைத் தொலைத்துக் கட்டும்' என்றா பேசுவது! எவ்வளவு இரக்கமற்ற மனம்! இலஜ்ஜை கெட்டதனம்! நப்பாசை!

வினோபா, இதனை மிக நன்றாகப் புரிந்துகொண்டு, சுடச் சுடக் கொடுக்கிறார் - சரி, வந்த வேளை சரியில்லைபோலும் என்று நொந்துகொண்டு செல்கிறார் ஆச்சாரியார்.

சம்மேளனம் கூட்டப்பட்டதற்கும், "சம்ஹாரமூர்த்தி' யாகும்படி வினோபாவுக்கு ஆச்சாரியார் தூபமிடுவதற்கும் என்ன சம்பந்தம்? அதே சம்மேளனத்தில் வேறு யாரேனும், சம்பந்தப்படாத பொருள்பற்றிப் பேசினால் எத்தனை சலசலப்பு ஏற்படும். அத்தகைய சூழ்நிலை காணப்பட்ட சம்மேளனக் கூடத்திலே நான் வினோபாவைச் சந்திக்காதது, நல்லதுதான் என்பதை நண்பர் ஜகன்னாதன்கூட இப்போது ஒப்புக்கொள்வார் என்று எண்ணுகிறேன். நான் வினோபாவைச் சந்தித்த இடமும் - இவ்விதமான தூபதீப நைவேத்தியங்களற்ற, தூண்டிவிடும் தூயவர்களோ கிண்டிவிடும் கனவான்களோ இல்லாத சிற்றூர்.

தம்மனூர் எனும் இச்சிற்றூர், எங்கள் காஞ்சிபுரத்திலிருந்து பத்து கல் தொலைவில் உள்ளது - பல காலமாகத் தண்ணீரற்றுப் போயுள்ள பாலாறு கடந்து இங்கு செல்ல வேண்டும் - ஆறு பர்லாங்குக்குமேல் ஆறு. சாதாரண மோட்டார் செல்லாது - ஜீப் மோட்டாரின் துணைகொண்டுதான் ஆற்றினைக் கடக்கமுடியும். முன்னாள் பகலே இந்தச் சங்கடத்தை அறிந்த நண்பர் ஜகன்னாதன், பூமிதானக் கமிட்டியாருடைய ஜீப்பை அனுப்பிவைப்பதாகக் கூறினார்; அதன்படியே ஜீப் வந்தது; உடன்வந்த பூதான இயக்கத் தொண்டர்கள், "பாபா'வின் கருத்துக்களை, குறிப்பாக ஆஸ்திக நாஸ்திகம்பற்றி அவர் வெளியிடும் கருத்துக்களை எனக்கு எடுத்துரைத்தனர்.

நான் தம்மனூர் சென்ற வினோபாவைக் கண்டபோது, உண்மையிலேயே, உருக்கமானதோர் காட்சியாகவே தென்பட்டது.

அந்தத் தொகுதியின் உறுப்பினர்கூட அந்தச் சிற்றூருக்குச் செல்வதிலே சிரமம் கொள்ளக்கூடும் - எங்கோ நெடுந் தொலைவில் இருப்பவர் - இந்தக் குக்கிராமத்தில் வந்து தங்கி, மக்களைக் கண்டு பேசி, மகத்தான பணிபுரிகிறாரல்லவா, தூய்மையான தொண்டு என்றால் இஃதன்றோ என்று எண்ணா மலிருக்க முடியுமா! அதிலும், வினோபாவை நான் கண்டபோது இருந்த சூழ்நிலை எனக்குப் பெரிதும் விசாரமே தந்தது.

மொகலாய சாம்ராஜ்யாதிபதிகள் கட்டிய செங்கோட்டை யிலே கொடி பறக்கிறது.

வெள்ளை ஏகாதிபத்தியவாதிகள் கட்டிய மாளிகையில் வீற்றிருந்து அரசோச்சுகிறார்கள், வினோபாவின் உழைப்பினைப் பெற்று உயர்வு அடைந்த காங்கிரஸ்காரர்கள்.

மாலை தவறாமல், தோட்டக் கச்சேரிகளும், நடன விழாக்களும் நடக்கின்றன - டில்லியிலும், மாகாணத் தலைநகர்களிலும்!

விருந்தும் வைபவமும் தெவிட்டும் அளவுக்கு நடைபெற்ற வண்ணமிருக்கிறது தர்பார் நடாத்துவோருக்கு.

இங்கு, தம்மனூரில், ஒரு சிறு பஜனைக் கோவிலில், ஓலைப்படுதா முகப்பில் அமைக்கப்பட்ட நிலையில், முழங்காலுக்கு மேல் வேட்டி கட்டிக்கொண்ட முதியவர், உட்கார்ந்துகொண்டிருக்கிறார்! அவர் காலடியில் ஏறக்குறைய ஐம்பது இலட்சம் ஏக்கர் தான நிலம் கிடக்கிறது! ஒரு துளி "தர்பார் மினுக்கு' இல்லை. எளிமை இனிமை தருகிறது, தூய்மை பளிச்சிடுகிறது. இம்மட்டோ, தனிமையும் தெரியத்தான் செய்கிறது!

நான் சில விநாடி ஏதும் பேசாமல், வினோபாவைப் பார்த்தபடி எதிரே அமர்ந்திருந்தேன் - என்னை அறிமுகப் படுத்திய ஜகன்னாதன், அருகே அமர்ந்தார் - பத்து இருபது பேர்கள், உரையாடல் நடைபெறும் என்றறிந்து உடன் அமர்ந்தனர்.

களைப்பா? சலிப்பா? மனதிலே ஆழ்ந்ததோர் விவாதமா? அல்லது ஆழப்பதிந்துவிட்ட தன்னடக்கமா? காரணம் என்ன இவர் முகத்திலே, கவலைக் கோடுகள் தெரிந்திட!- என்று நான் எண்ணிக்கொண்டேன். ஐம்பது இலட்சம் ஏக்கர் நிலத்தை - அவற்றிலே பயன்படாதவை இருக்கத்தான் செய்கின்றன - ஒருவர் - சர்க்காரின் துணையின்றி, சாந்தம், சீலம் எனும் அருங்குணத்தின் துணைகொண்டு மட்டுமே, தானமாகப் பெற்றார் என்றால், அது சாமான்யமான விஷயமல்ல!! மகத்தான வெற்றி!

குமாரிகளும் கோகிலங்களும் ஆடிப்பாட, கோலோச்சும் கவர்னர் தலைமை தாங்க, திக்கெட்டும் சென்ற கலெக்டர்கள் திரட்ட, பணம் ஏதேனும் ஓர் நிதிக்கு, மொத்தமாக ஒரு பத்தாயிரம் கிடைத்துவிட்டால், "ராஜ நடை' போட்டுக் கொண்டு சிம்மம்போல் கர்ஜிக்கும், மந்திரிகளைப் பார்க்கிறோம் - இதோ ஓர் முதியவர் - வரப்புச் சண்டைக்குத் தலையைச் சீவிக் கொள்ளும் அளவுக்கு உடைமை உணர்ச்சி உள்ள நாட்டிலே, காலத்திலே - 50 இலட்சம் ஏக்கர் நிலத்தைத் தானமாகப் பெற்று, இத்துணை தன்னடக்கத்துடன் அமர்ந்திருக்கிறாரே என்று ஆச்சரியப்பட்டேன்!

முனிபுங்கவர் - மகரிஷி - என்றெல்லாம், அவரைப் புகழ்வதாக எண்ணிக்கொண்டு அவரிடம் உறவுகொண்டாடி, ஊராளும் வாய்ப்பினை மீண்டும் பெறத் துடிப்போர் கூறுகின்றனர். முனிவர்களும், மகரிஷிகளும், உடைமை உணர்ச்சி கொண்டோரிடம் "தானம்' பெற்றிருக்கிறார்கள்- கோதானம் - பூதானம் - சொர்ணதானம் - பலப்பல! கன்னியாதானம் கூடத்தான்!! ஆனால் யாருக்காக? ஏழை எளியோருக்காகவா!! இல்லை வாமன அவதாரமேகூட, மாவலியிடம் பூதானம் பெற்றது, ஏழை எளியோருக்குப் பங்கிட்டுத்தர அல்லவே! வினோபா, மகரிஷி அல்ல - முனிபுங்கவர் அல்ல! எனவேதான் காட்டிலே சென்று ஊசி முனைமீது நின்று தவம் செய்து கொண்டில்லை. கால் கடுக்கக் கடுக்க, காடுமலை வனம் வனாந்திரங்களைக் கடந்து, ஏழைக்கு இதம் தேடுவேன், இயலாதாருக்கு உதவி பெறுவேன், இரும்பு இதயத்தையும் இளகச் செய்வேன் என்று கூறிக் கொண்டு தொண்டாற்றுகிறார்.

கூப்பிட்ட குரலுக்கு பகவான் ஓடோடி வருவார் என்ற "அற்புதம்' நடத்திக் காட்டிவிட்டு, "தானம்' கேட்கும் மகரிஷி அல்ல வினோபா. ஏழையின் கண்ணீரைக் காண்கிறார், அதனைத் துடைத்திடக் காந்தியார் சமைத்தளித்த காங்கிரஸ் அந்தக் காரியத்தைச் செய்யாமல், பதவிப் பன்னீரில் குளித்துக் களித்திடக் காண்கிறார்; பதறிப்போய், அந்தக் கூடாரத்தில் தங்காமல், கோல்கொண்டோர் செய்திட மறந்த காரியத்தை குணத்தால் சாதிக்க முயல்கிறார்.

குடி அரசுத் தலைவரிலிருந்து குட்டி மந்திரிகள் வரையிலே, அவருக்கு நன்றாகத் தெரியும்.

அவர்களெல்லாம், என்னென்ன செய்ய வேண்டும் என்று எடுத்துக் கூறிட அவருக்கு உரிமையும் இருக்கிறது.

எனினும், அவர்கள் எந்த நிலைமைக்குச் சென்றுவிட்டனர் என்பதை நன்கு அறிந்ததாலும், அவர்களைத் திருத்துவதோ தன் வழிக்குக் கொண்டு வருவதோ இயலாத காரியம் என்று உணருவதாலும், "சர்வோதயம்' எனும் தனி இயக்கம் கண்டு பணியாற்றுகிறார்.

காங்கிரஸ், இனி மக்களுக்குப் பயன்படாது என்பதைத் திட்டவட்டமாக விளக்க ஏதேனும் ஓர் எடுத்துக்காட்டு தேவை என்றால், நாம், தம்பி, வினோபாவின் தொண்டினைக் காட்டலாம்.

மகன், தாசில் வேலை பார்க்கிறான் - தகப்பனார் வாழைத் தோட்டத்திலோ வயலிலோ வாட்டத்துடன் வேலை செய்கிறார் என்றால் பொருள் என்ன புரியவில்லையா! வினோபாவிடம் நான் கண்ட விசாரத்துக்குக் காரணம் இதுதானோ - நானறியேன்.

நண்பர் ஜகன்னாதன், என்னை அறிமுகப்படுத்தியானதும், பேசினோம்; நினைவிலே உள்ளபடி கீழே குறித்திருக்கிறேன்.

உரையாடலின் போது, வினோபா தமிழ் பேசுவார் என்று நான் பெரிதும் எண்ணினேன் - அவர் இந்தியில் பேசினார் - மொழிபெயர்ப்பாளர் துணையில்தான், உரையாடல் நடைபெற்றது.

வினோபா : உங்கள் கழகத்தின் நோக்கம்...?

நான் : நாங்கள், திராவிட நாடு கேட்கிறோம் - அறிவீர்களே.

வினோபா:- உங்கள் கழகத்தில் யார் வேண்டுமானாலும் சேரலாமல்லவா... உதாரணமாக நான் சேர விரும்பினால்...?

நான் :- நாங்கள், திராவிட நாடு சம்பந்தமாகத்தான் கழகம் அமைத்திருக்கிறோம்; அகில இந்தியக் கட்சி அல்லவே. எனவே இயல்பாகவே. திராவிட நாட்டிலுள்ளோர்தான் உறுப்பினராகச் சேர விரும்புவர்.

வினோபா:- திராவிட நாடு என்றால், தனி நாடாகவே வா...?

நான்:- ஆமாம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிவழி அரசுகள் அமைத்து, பிறகு, அவைகளின் கூட்டாட்சியாகத் திராவிட நாடு ஏற்படுத்துவது...

வினோபா:- மத்திய சர்க்காருக்கு என்ன அதிகாரம்?

நான்:- மத்திய சர்க்காரின் கீழ் இருக்கும் நிலைமையே எழாது. தேவைப்படும்போது வெளிநாட்டு விவகாரம் குறித்து, கலந்துபேசலாம்; கூடிப் பணியாற்றலாம்...

வினோபா : - அப்படி என்றால், தனி நாடு... அதாவது தனி அரசு... சிலோன்போல....

நான்- ஆமாம்...

வினோபா : - பாகிஸ்தான் போல் ஆகிவிடும்...

நான் :- நியாயமான கோரிக்கை மறுக்கப்பட்டால், பாகிஸ்தான் போல்தான் ஆகிவிடும்....

வினோபா :- தனி நாடு என்றால் தனிப் பட்டாளம்கூட இருக்கும்....

நான் :- ஆமாம், தனிப்படை இருக்கும்...

வினோபா :- தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எல்லாம் ஒன்றாக இருக்குமா...?

நான் :- எங்களுக்கு நம்பிக்கை உண்டு - ஏனெனில் நாலு மொழிகளும் ஒரே மூலம் கொண்டவை.

வினோபா :- நான் நாலு மாதம் ஆந்திரத்தில் சுற்றுப் பயணம் செய்திருக்கிறேன். ஆந்திரர்கள் தமிழர்களுடன் ஒன்று கூடி அரசு அமைக்க விரும்பும் எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை.

நான் :- இப்போதைக்கு அவ்விதமான எண்ணம் அங்கு இருக்கலாம். தாங்கள் ஆந்திரம் சென்ற சமயம் ஆந்திரர்கள் தமிழர்களுடன் ஒரே அரசில் இருந்ததால், தங்கள் வளர்ச்சி தடைப்பட்டது என்று எண்ணி கசப்பு அடைந்திருக்கும் நேரமாக இருந்தது. தனியாகிவிட்டார்கள். இப்போது அவர்களுக்கும் மத்திய சர்க்காருக்கும்தான் தொடர்பு. இப்போதும் தங்களுக்கு வளர்ச்சி இல்லை என்றால், அதற்குக் காரணம் தமிழரல்ல, மத்திய சர்க்கார்தான் என்று அறிந்துகொள்வார்கள். இப்போதே மைசூர், ஆந்திரம், கேரளம் ஆகிய பகுதிகளில் ஐந்தாண்டுத் திட்டங்களில் சரியான முறையில் தமக்குக் கிடைக்கவேண்டியது கிடைக்கவில்லை என்று எண்ணுகிறார்கள்.

வினோபா :- மத்திய சர்க்கார் அநீதியாக நடப்பதால்தானே பிரிந்துபோக விரும்புகிறீர்கள்? நீதியாக நடந்து கொண்டால்?

நான்:- அப்படிப் பார்ப்பதைவிட இதுபோல் எண்ணக் கேட்டுக்கொள்கிறேன். மத்திய சர்க்கார் அநீதியாக நடப்பதால் கசப்படைகிறோம் என்று கூறுவதைவிட, மத்திய சர்க்கார் என்று ஒன்று இருந்தால், அநீதிதான் நடக்கும் என்று கொள்ள வேண்டுகிறேன்... மேலும் நீதியாக நடக்கக்கூடிய கடைசித் தலைமுறையே இப்போது வடநாட்டில் உள்ளது என்று நினைக்கிறோம். இனி வரக்கூடிய தலைமுறையில், அதிகமான அநீதிதான் இருக்கும்.

வினோபா:- நீங்கள் நாலு மொழிப் பிரதேசத்தையும் கூட்டாட்சியாக்கியான பிறகு உங்கள் ஆட்சியிலே அதிருப்தி யாருக்கேனும் எந்தப் பகுதிக்கேனும் ஏற்பட்டால், என்ன செய்வீர்கள்?

நான் :- பிரிந்துபோக உரிமை தருகிறோம்.

வினோபா :- தனி நாடு ஆகும்.

நான்: ஆகலாம்.

வினோபா :- அதாவது, அன்புடன் ஒன்றாக இருக்கலாம், இல்லையானால், பிரிந்து போகவேண்டியது.... அதுதானே.

நான்:- ஆமய்யா! ஒன்று சேர்ந்து இருப்பது என்பது ஒரு விஷயம் - அந்தப் பெயர் கூறிக்கொண்டு ஒன்றின்கீழ் ஒன்று என்ற நிலைமை ஏற்படுவது பேறோர் விஷயமல்லவா.

வினோபா :- இதனை நான் புரிந்து கொண்டேன். இது அஹிம்சா முறையில்தானே நடைபெற வேண்டும். பலாத்காரம் கூடாதல்லவா?

நான் :- பலாத்காரம் கூடாது. பலாத்காரமென்றால், ஆயுத பலாத்கார மட்டுமல்ல, தத்துவ மூலம் பலாத்காரம் புகுத்துவதும் கூடாது.

வினோபா : அப்படியென்றால்...?

நான் :- தேச ஒற்றுமை, தேசியம் என்ற ஏதேனும் தத்துவங்களையே கருவியாக்கிப் பலாத்காரப்படுத்துவது கூடாது.

வினோபா :- அஹிம்சைதானே முறை.

நான் :- ஆமாம்.

வினோபா :- அப்படியானால், தனி நாடு, அதிலே தனியாகப் படையும் இருக்கும் என்றீர்? ஏன், படை?

நான் :- மற்றவர்களிடம் படை இருப்பதால், ஏற்படும் ஆசைதான் அதற்குக் காரணம். தாங்கள் இப்போது, மகா நாட்டிலே இந்திய சர்க்காருக்குக் கூடக் கூறியிருக்கிறீர், படை குறைக்க. பாபு ராஜேந்திரபிரசாத் கூடக் கேட்டுக் கொண்டி ருந்தார். பார்ப்போம், அவர்கள் படை குறைவதை.

வேறொருவர் :- பாபு ராஜேந்திரபிரசாத் அவ்விதம் கூற வில்லையே.

வினோபா :- இல்லை - நான் கூறியபோது பாபு ராஜேந்திர பிரசாத் இருந்தாரல்லவா... சரி... இதே போல, வங்காளம், மராட்டியம் இவைகளெல்லாம் பிரிந்து போக விரும்பினால்....

நான் :- பிரியலாம். ஆனால் அது அந்த இடத்து மக்களின் உணர்ச்சியைப் பொறுத்து இருக்கிறது.

வினோபா : இப்படி சிறுசிறு நாடுகளாகிவிட்டால், சிறிய நாடுகளைப் பெரிய நாடுகள் பிடித்து அழிக்குமல்லவா...

நான் : அப்படிக் கூறிவிடுவதற்கில்லை. சிறிய நாடுகளைப் பெரிய நாடுகள் தாக்காதபடி தங்களைப் போன்றவர்கள் உபதேசிக்கும் அஹிம்ஸை ஆத்ம சக்தி இவைகள் பயன்படு மல்லவா?

வினோபா :- அரசியல் விஷயத்தில் உங்கள் எண்ணம் அறிந்து கொண்டேன். சமுதாய சம்பந்தமாக உங்கள் கட்சிக் கொள்கை என்ன?

நான்:- தங்களுக்குத் திருமூலர் தெரியுமென்று எண்ணுகிறேன். ஒன்றே குலம் ஒருவனே தேவன் - என்பதைத் தான் நாங்கள் கொள்கையாக்கிக் கொள்கிறோம்.

வினோபா :- பொருளாதாரத் திட்டம் என்ன?

நான் :- மனிதனுடைய அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, குடியிருக்கும் இடம் ஆகியவை சர்க்காரால் அனைவருக்கும் உறுதி அளிக்கப்பட வேண்டும்.

வினோபா:- அதாவது சுரண்டல் கூடாது?

நான் :- அப்படிச் சொல்வதைவிட, நான் வேறுவிதமாகக் கூற விரும்புகிறேன். இந்த மூன்று அடிப்படைத் தேவைகளைப் பொறுத்த தொழில்கள் இலாப நோக்கத்துக்காக நடத்தப்படக் கூடாது.

வினோபா:- அப்படியானால், அந்தந்த கிராமத்து நிலம், கிராமச் சொத்தாக இருக்க வேண்டும்.

நான் :- ஆமாம் - அதிலே உழைத்துப் பெறக்கூடியது, அந்தக் கிராம மக்களுக்குப் போதுமானதாக இல்லாவிட்டால் சர்க்கார், தேவைப்படும் அளவு தர வேண்டும்.

வினோபா : அதிகமாக இருந்தால் சர்க்கார் எடுத்துக் கொள்ளலாம்.

நான் :- ஆமாம்.

வினோபா:- (அரியநாயகம் என்பவரைப் பார்த்து) பார்த்தாயா! நான் சொன்னேனே! நம் கொள்கையேதான். (என்னைப் பார்த்து) கட்சி முறையில், பூமிதான இயக்கத்துக்கு என்ன செய்கிறீர்கள்?

நான் :- கட்சி அடிப்படையில் நாங்கள் ஈடுபடுவதற்கு இல்லை. சங்கடம் உண்டு எங்கள் கட்சி இதில் ஈடுபட்டால். அதனாலேயே வேறு சில கட்சிகளுடைய பகை, தங்கள் இயக்கத்துக்கு ஏற்பட்டு விடக்கூடும்.

ஜகன்னாதன் : தனிப்பட்ட முறையில் கழகத் தோழர்கள் பல இடங்களில் நமக்குத் துணை இருக்கிறார்கள்.

வினோபா :- நீங்கள் தனிப்பட்ட முறையில் என்ன செய்கிறீர்கள்?

நான்:- தங்கள் நல்ல நோக்கத்தை மக்களுக்குக் கூறுகிறேன். நல்லவர், அவரை ஏமாற்றி விடாதீர்கள் என்று கூடச் சொல்லி வருகிறேன்.

வினோபா :- தனிப்பட்ட முறையில் ஏதேனும் உதவி செய்கிறீரா?

நான்:- என்னாலான உதவிகளை மக்களுக்குச் செய்து கொண்டிருக்கிறேன்.

வினோபா :- என்னோடு பாத யாத்திரை வாருங்களேன், ஒரு தடவை. பழக்கம் உண்டா?

நான் :- பழக்கமில்லாமலென்ன, வருகிறேன்.

ஜெக :- மறுபடியும் வாருங்கள் பார்க்க.

நான் :- அதற்கென்ன. இன்னும் ஒரு மாதம் கழித்து மறுபடி வந்து பார்க்கிறேன்.

பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வினோபா புறப்பட்டார். நான் அவரிடம் விடை பெற்றுக் கொண்டு, சில நிமிஷ நேரம், மற்ற நண்பர்களிடம் அளவளாவிவிட்டு, ஜீப்பின் துணையால் ஆற்றைக் கடந்து ஊர் வந்து சேர்ந்தேன். உள்ளமோ வினோபாவின் முயற்சிபற்றியும், அதற்குத் துணை நிற்பதாகக் கூறிடும் துதி பாடகர்களாலேயே, எந்தெந்த வகையில் குலைக்கப் பட்டு வருகிறது என்பது பற்றியும் எண்ணிற்று, அது பற்றிப் பிறகு.

அன்பன்,

17-6-1956