அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


விழாவும் விளக்கமும்
2

உள்ளே செல்பவர்கள் 15 பேர்! ஆளும் கட்சியிலோ, பத்து மடங்கு!! நமக்குத் துணையாக, உள்ளத் தூய்மையும் கடமை உணர்ச்சியும்! நமக்கு விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் தர, நம்மை நாசம் செய்வதாக எண்ணிக்கொள்வோர் தரும் தூற்றல், துளைத்தல், குத்தல், இன்ன பிற!!

இதை எண்ணினேன் - ஆமாம், நம்மை உள்ளே அனுப்பி விட்டு, கழகத் தோழர்கள், இனி நாம் செய்யவேண்டியது ஏதுமில்லை என்று எண்ணிக்கொண்டால், நிலைமை என்ன ஆகும் என்ற எண்ணம் பிறந்தது - ஒரு விநாடி திகிலேகூட ஏற்பட்டது; அன்று அங்கு, என் எண்ணத்தைக் கூறினேனே கூட்டத்தில், அதைத் தம்பி! இப்போதும், நினைவிற்குக் கொண்டுவருகிறேன்.

"நீங்கள் எங்களை உள்ளே அனுப்பிவிட்டு, வெளியிலே கழகத்தை நல்லமுறையிலே வளர்க்காவிட்டால், நடுக்காட்டில் கையிலே நல்ல ஒரு தங்கநகையைக் கொடுத்து, ஒரு இளம் பெண்ணைக் காட்டுக்குள்ளே துரத்திவிட்டுவிட்டால் அது எவ்வளவு கொடுமையான காரியமோ, அப்படிப்பட்ட காரியமாக முடியும், எங்களை உள்ளே அனுப்பிவிட்டு வெளியிலே நீங்கள் பணியாற்றாமலிருந்தால். தங்க நகை கையிலே, தையல் நடந்து செல்லுகின்றாள் தன்னந்தனியாக - எதிர்ப்பட்டோர் நகையையும் பறித்துக்கொள்ளக் கூடும் - நகை போனாலும் பரவாயில்லை - செல்லுகின்றவள் தையல், ஆகையினால்தான் நாங்கள் அங்கே வேறு காரியம் ஆற்றமுடியாமல் போய்விட்டாலும் பரவாயில்லை, நாங்கள் சீர்குலைக்கப்படாமல் இருக்க வேண்டுமானால், வெளியிலே இருக்கும் நீங்கள் உண்மையிலே கழகத்தை வலிவோடு காப்பாற்ற வேண்டும்.

நான் தையலை உதாரணம் சொல்லி, அரசியலை நினைவூட்டியதற்குக் காரணம், அரசியலில் அப்படிச் சீர்குலைக்கப்பட்டவர்கள் பலர். இராமசாமி (படையாச்சி) தலைசிறந்த உதாரணம், மாணிக்கவேலர் மற்றோர் உதாரணம் - எத்தனையோ பேர் வீராவேசத்தோடு உள்ளே போனார்கள் - வெளியிலே அவர்களைத் தட்டிக்கேட்க ஆளில்லை - ஆகவே நகையைக் கையிலே வைத்திருந்த தையல், காட்டிலே சிக்கி, நகையையும் இழந்து அவளும் என்ன ஆனாளோ என்று ஊரார் எல்லாம் பேசுகின்ற விதத்தில், மாணிக்கவேலரும் இராமசாமிப் படையாச்சியும் சீர்குலைக்கப்பட்டார்கள். அப்படிப்பட்ட அரசியல் சீர்குலைவு எங்களில் யாருக்கும் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், நீங்கள் வெளியிலே இருக்கிற கோட்டையைத் திறம்படக் கட்டிக் காப்பாற்றவேண்டும். அங்கிருந்து நீங்கள் கொடுக்கின்ற குரல், நாங்கள் கொஞ்சம் ஓய்வாக இருந்தால், எங்கள் காதிலே நுழைந்து நெஞ்சத்தைத் தட்ட வேண்டும், அங்கிருந்து நீங்கள் பிறப்பிக்கின்ற கட்டளை எங்களைச் சட்டசபையிலே பணியாற்றுகின்ற அளவுக்கு உற்சாகத்தைத் தரவேண்டும், அதேபோல் எங்களை உள்ளே இருப்பவர்கள் அலட்சியப்படுத்தினால், 15 - பேர்தானே நீங்கள் நாங்கள் 150 - பேர் என்று அவர்கள் சொன்னால், அங்கே நாங்கள் அதிகம் பேசமாட்டோம். ஒரு சமயம் நான் இல்லாவிட்டால் கூட, நம்முடைய தம்பிமார்கள் அதிகம் பேசுவார்கள். நான் இருக்கின்ற காரணத்தினாலே அவர்களுக்கு இன்னின்னது பேசவேண்டும் என்று தோன்றும் - வேண்டாம் வேண்டாம் என்று நான் தடுப்பேன். அவர்களையும் அழைத்துக் கொண்டு, மறுபடியும் நான் உங்களிடத்திலேதான் வருவேன் என்று எடுத்துக் கூறினேன்

இதில் என்ன அண்ணா! சந்தேகம்!! இந்தப் பதினைந்து போதும் என்றும், நாங்கள் கருதிக்கொண்டில்லை, சட்ட சபையில் அமர்ந்துவிட்டாலே சகலகாரியமும் நடை பெற்று விடும் என்றும் நாங்கள் தப்புக் கணக்குப் போடவில்லை, உங்களை உள்ளே அனுப்பிவிட்டதோடு எங்கள் வேலை முடிந்துவிட்டது என்றும் எண்ணிக் கொண்டில்லை; நாங்கள், இதுவரை பணியாற்றியதில் கிடைத்தவை,

ஆயிரத்துக்கு மேற்பட்ட கிளைக்கழகங்கள்
இலட்சத்துக்கு மேற்பட்ட கழக அன்பர்கள்
சென்னையில், அறிவகம், அழகிரி அச்சகம், திடல், நம் நாடு
பல ஊர்களிலே கழகத்துக்குச் சொந்தமான இடங்கள்

என்று பட்டியல் தயாரிக்கிறோமே பூரிப்புடன், அதிலே, புதிதாக உற்சாகத்துடன்,

பதினைந்து சட்டசபை உறுப்பினர்கள்
இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள்

என்று சேர்த்து மகிழ்கிறோம்; அந்த மகிழ்ச்சி எம்மை, மேலும் மேலும் நம்பிக்கையுடன் கழகப் பணியாற்றிடத் தூண்டுமே தவிர, படுத்து உறங்கவா வைத்துவிடும்? உனக்கேன் அப்படி ஒரு அச்சம் ஏற்பட்டது? என்று என்னைப் பார்த்துக் கேட்பது போலிருந்தது, திருச்சியில் தோழர்கள் காட்டிய மகிழ்ச்சி முழக்கம்!!

எனக்கு தம்பி, இந்தக் குறிகள் எல்லாவற்றையும்விட, அதிக நம்பிக்கை தருகிற குறி வேறொன்று உண்டு!

நாம், என்ன காரணத்திலும் சோம்பிக் கிடந்திட மாட்டோம் - நம்மைத் தூற்றுவோர் நமக்குப் பேருதவி புரிகிறார்கள்!

அவர்கள் செய்து வரும் கேலியும், காட்டி வரும் எதிர்ப்பும், கொட்டி முழக்கும் கண்டனங்களும், நம்மை, தரமும் திறமும் குறையாமல் வேலை வாங்கும் எஜமானர்களல்லவா!

அதிலும் அவர்கள், "பிரமாண்டமான' போராட்டத்தில் ஈடுபடப் போகிறார்களாமே! சும்மாவா இருப்பார்கள், உலகினரே காண்மின்! இதோ நாங்கள் உயிரைத் துரும்பென மதித்து, உடைமைகளைத் துச்சமென்று ஒதுக்கித் தள்ளிவிட்டு! உரிமையைக் காக்க, மானத்தை மீட்க, போரில் ஈடுபடுகிறோம், இந்தப் பயல்களை அனுப்பினீர்களே, என்ன ஆனார்கள்? என்ன செய்கிறார்கள்? தமிழர்கள் கண்டது என்ன? என்றெல்லாம், "பட்டாசுகளை'க் கொளுத்தி வீசியபடி அல்லவா இருப்பார்கள்!

தம்பி! நாம் கல்லக்குடிக் கிளர்ச்சியும், இரயில் நிறுத்தக் கிளர்ச்சியும், நடாத்தியபோது அவர்கள்,

இதெல்லாம் ஒரு கிளர்ச்சியா?
குப்பை! கூளம்!!

என்றெல்லாம் கேலி பேசி வந்தனரே, அதுபோல் இருக்க மாட்டோம். வீரர்காள்! களம் செல்லும் தீரர்காள்! வாகை சூடுமின்! வெற்றியின் பெருமையிலே, பிற எவருக்கும் ஒரு துளியும் பங்கு கிடைத்திடலாகாது, அனைத்தும் உமக்கே இருத்தல் வேண்டும் என்று விரும்புகிறோம். பங்குக்கு நாங்கள் வந்துவிட மாட்டோம்! பக்கம் வந்து நின்று பணிவிடை செய்தால்கூட, பிறகோர் நாள் அதனாலேயே பெரிய கஷ்டமும் நஷ்டமும், தோல்வியும் துயரமும் தந்துற்றது என்று பழிகூறுவீர்கள் - தேர்ச்சி பெற்றவர்கள் - எனவே போரிலே ஈடுபட்டு, வாகை சூடுக! திக்கு நோக்கித் தெண்டனிட்டு உலகுக்குக் கூட அறிவிக்கிறோம் - என்று கூறுகிறோம்.

போர்க்கோலம் எதுவரையில்? தேசியக் கொடி கொளுத்தக் கிளம்பிய காலை, தமிழர் தலைவரின் தாக்கீது கண்டு, கலைந்தது போலவா, இதுபோதும் என்பதுபற்றி, நமக்குக் கவலை எதற்கு? நடைபெறுகிற வரையில் காண்போம், போற்றுதலுக்குரிய தெனின், போற்றத் தயங்கப் போவதில்லை.

ஆனால், தம்பி! போர்ப் பிரகடனம், போர் அறிக்கை விளக்கம், போரில் கலந்துகொள்ள அன்பழைப்பு, போரில் சேராதிருப்போருக்குச் சாபம், போரில் ஈடுபடுவோரின் பட்டியல் வெளியிடுதல், போரில் ஈடுபடவேண்டாம் என்பதற்கு விதிவிலக்குப் பெறும் பிரமுகர்கள் பெயர் வெளியிடுதல் என்ற வழக்கமான - நாடு பலமுறை கண்டிருக்கிற, சடங்குகளின் போதெல்லாம் "சுடச்சுட' நம்மைத்தானே தாக்கப் போகிறார்கள்! போர் நடைபெறும் போதும் சரி, பிறகு போர் நிறுத்தம், நிறுத்தத்துக்கான விளக்கம், பலன் ஆராய்தல், புதுப் போருக்கு ஆயத்தப்படுத்துதல் எனும் கட்டங்களின் போதும் சரி, "கண்டனம்' நமக்குத்தானே!

இவைகளைத்தான், நான் நம்மைச் செம்மையாக வேலை செய்ய வைக்கும், சாதனங்கள் என்கிறேன்!

வேடிக்கை அல்ல, தம்பி, விசித்திரம்போலத் தோன்றும், ஆராய்ந்து பார், விளக்கமாக, உண்மை தெரியும்.

எனவே, எனக்கு நல்ல நம்பிக்கை இருக்கிறது, சட்டசபையிலே இடம் பெற்றவர்களும் சரி, வெளியே இருந்திடும் கழகக் காவலர்களும் சரி, நெறி தவற மாட்டார்கள், முறை கெட விட மாட்டார்கள் தரம் குறையாது, திறம் வளரும். ஏனெனில், எவ்வளவு நேர்மையாக நடந்துகொண்டாலும், "சபித்துக் கொட்ட' "தூற்றித் துளைக்க' ஒரு திருக்கூட்டம், சளைக்காது தொண்டாற்றிக் கொண்டிருக்கும்போது, நாம் பணியினையும் மறந்துவிட்டு நேர்மையினின்றும் தவறி விட்டால், ஏ! அப்பா! சும்மாவா விடுவார்கள்!!

எனவேதான், அந்தத் தூற்றல் - நம்மை "வேலை செய்ய வைக்கும்' - என்ற நம்பிக்கை எனக்கு.

அவர்கள், பாராட்டி விட்டால், பட்டுப்போய் விடுவோம், என்ற பயம் எனக்கு உண்டு!

அவர்கள், எப்படியோ தொலைந்து போகட்டும், நாம் நமது வேலையைப் பார்த்து கொண்டிருப்போம் என்று அலட்சியமாக இருந்து விட்டால், நாம் "மந்தமாகி' விடுவோம்!!

நமது கழகத்தைக் குறித்து, நாட்டு மக்களின் பெரும்பகுதியினர் ஆச்சரியப்படுவதே இந்தச் சூட்சமம் புரியாததால்தான்.

இவ்வளவு ஏசுகிறோம்; பொருத்தம் அர்த்தம்கூடப் பார்க்காமல் தூற்றுகிறோம்; சொல்லக் கூசும் வார்த்தைகளை வீசுகிறோம்; இவ்வளவையும் இந்தப் பயல்கள் சுமந்து கொண்டு கருமமே கண்ணாயினார் என்றல்லவா இருக்கிறார்கள் - என்று வசவாளர்களே ஆச்சரியப்படுகிறார்கள்!

நாம் அவர்களின் "அர்ச்சனை'யை எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறோம் என்கிற சூட்சமம், புரியவில்லை, பாபம்!

"ஊதுகுழல் வேண்டுமா, ஊதுகுழல்,?''

என்று கேட்டான், நடைபாதை வியாபாரி;

வேண்டாமப்பா

என்று கூறினான், அவ்வழி சென்றவன்.

பொத்தான் வேண்டுமா?
பேனா வேண்டுமா?
சாக்லெட் வேண்டுமா?
சாயப்பவுடர் வேண்டுமா?
சோப்பு, சீப்பு, கண்ணாடி, ப்ரோச், பின், வேண்டுமா?

என்று வியாபாரி, விடாமல் கேட்டுக்கொண்டே இருந்தான்.

அவ்வழி வந்தவருக்குப் பெருத்த தொல்லையாகிவிட்டது; அவர் அங்காடி வந்தது எதையும் வாங்க அல்ல; யாரையோ சந்திக்க! வியாபாரி, விடாமல் தொல்லை கொடுக்கக் கண்டு, அவர், கோபத்துடன்,

ஒன்றும் வேண்டாமப்பா, போய்த் தொலை! ஒரே தலைவலியாகிவிட்டது உன்னாலே! என்றார்.

அருமையான தலைவலி மருந்து இருக்கிறது! ஆறே அணா வேண்டுமா? என்று கேட்டானாம், வியாபாரி!

தம்பி! அந்த "ஆசாமி'யின், "சகிப்புத்தன்மை'யில் பெறத்தக்க பாடம் இருக்கிறது!!

ஒரு விஷயம், நீ, கவனித்தாயோ இல்லையோ, எனக்கு அது நெஞ்சில் பதிந்திருக்கிறது. நம்மை, இந்த அளவுக்கு அவர்கள் தூற்றிக்கொண்டு இருந்திராவிட்டால், நாட்டு மக்களில் நல்லவர்கள், நம்மிடம் இந்த அளவுக்கு நல்லெண்ணம் காட்டி ஆதரவு அளித்திருக்கக்கூட மாட்டார்கள்.

நமக்கு வாக்களித்த பதினேழு இலட்சம் மக்கள் அனைவருமே, நம்மாலே மட்டுமே நமக்கு ஆதரவாளர்களாக்கப் பட்டவர்கள் அல்ல; பெரியாரின் பெரும்படையினர், இந்தப் பதினேழு இலட்சத்தில், சில இலட்சங்களை நமக்காகத் தேடித் தயாரித்துத் தந்துள்ளனர். நான், நன்றி கூறிக்கொள்ளும் ஒவ்வொரு சமயத்திலும், இதை மறவாதிருக்கிறேன்.

தம்பி! நாம் பெற்ற வெற்றிக்கான பல காரணங்களில் இது முக்கியமானது என்பதை மட்டும் எப்போதும் மறவாதே!!

இனி, நாம் பெற்ற வெற்றிபற்றி, அனைவரும், அதன் அளவு குறைவு எனினும், ஆச்சரியத்துடன் கவனிப்பதற்குக் காரணம் இருக்கிறது.

பிற பிற கட்சிகள், நாங்களும் அமைச்சர்கள் ஆகக்கூடும்- ஆகவேண்டும் - ஆக விரும்புகிறோம் என்று சொல்கின்றன. தி. மு. க. நாங்களும் அமைச்சர்களாக முடியும் என்பதை எடுத்துச் சொல்லுகின்ற கட்சி அல்ல - எங்களுக்கென்று ஒரு தாயகம், அதற்குப் பழம்பெரும் நாகரிகம் இருந்தது, அதன் கொடி வானளாவப் பறந்தது, அதனுடைய நாவாய்கள் எத்திசையும் கடலில் செல்லும், அதனுடைய பட்டுப்பட்டாடைகளை ரோம் நாட்டிலே வாங்கி அணிந்துகொண்டார்கள், அவர்களுடைய முத்தை யவன நாட்டு மக்கள் விலைபோட்டு வாங்கினார்கள் - அதனிடத்திலே, காடு இருக்கிறது, அந்தக் காட்டிலே அகில் இருக்கிறது சந்தனம் இருக்கிறது, அந்த மண்ணைத் தோண்டினால், தங்கம் கிடைக்கிறது, இரும்பு கிடைக்கிறது, நாட்டிலே கரும்பு போட்டாலும் விளைகிறது, கட்டாக இருக்கிற புகையிலை போட்டாலும் விளைகிறது - இப்படிப் பட்ட அரும்பெரும் நாடு எங்களுக்கு உண்டு. அந்த நாட்டினுடைய துரைத்தனம் எங்களிடத்திலே இல்லை. அது ஆயிரம் ஆயிரத்தைந்நூறு மைல்களுக்கு அப்பாலே இருக்கிற டெல்லி புதிய பாதுஷாக்களிடத்திலே ஒப்படைக்கப்பட்டது. அதைத் திரும்பப் பெற்றுத் தாயகத்தைத் தனித்தரணியாக்கித் தன்னாட்சி செலுத்துவதற்கு நாங்கள் ஏற்பட்டிருக்கின்றோம் என்று சொல்கிற கழகம் தி.மு.க. ஒன்றுதான். ஆகையினாலேதான், இது பெற்ற வெற்றியைப் பற்றிப் பலபேர் ஆராய்கிறார்கள். உதாரணம் உங்களுக்குச் சொல்லவேண்டுமானால், ஆட்டினுடைய கழுத்தை வெட்டிக் கொண்டு வந்து உங்களிடத்திலே காட்டினால் ஆச்சரியத்தோடு பார்க்கமாட்டீர்கள், புலியின் நகத்தைக் கொண்டுவந்தால் "புலி நகமா' என்று ஆச்சரியத்தோடு பார்ப்பீர்கள். தி. மு. க. புலி நகத்திற்குச் சமம் - பிறபிற கட்சிகள் வெட்டுப்பட்ட ஆடுகூட அல்ல, துள்ளி ஓடுகின்ற ஆட்டுக்குட்டி என்றுகூட வைத்துக் கொள்ளுங்கள் - மக்கள் அதனைக் கவனிக்க மாட்டார்கள்.

இங்ஙனம், கவனிக்கின்றவர்கள் - அரசியல் அலுவலை தேவையுள்ள காரியம் என்று கருதுபவர்கள் - அடுத்தபடியாக "சரி, சரி - காரணம் கிடக்கட்டும், எப்படியோ 15 பேர் வந்து விட்டீர்கள்? என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்கின்றனர்.

நாலைந்து நாட்களுக்கு முன்பு உத்திரமேரூர் என்ற ஊரில் பேசும்போது, நான் இதற்குப் பதிலளிக்கும் தன்மையில் கூறியது நினைவிற்கு வருகிறது.

"எதிர்க் கட்சியில் இருந்துகொண்டு என்ன செய்யப்போகிறீர்கள்? என்று எங்களைக் கேட்கின்றனர், காங்கிரஸ் தலைவர்கள். என்ன செய்யச் சொல்கிறீர்கள்? என்று நான், அவர்களைக் கேட்கிறேன்'' - என்று அன்று பேசினேன்.

உண்மையிலேயே ஆளும் கட்சி, எதிர்க்கட்சியில் உள்ளவர்கள், என்ன செய்யவேண்டுமென்று விரும்புவர், என்பது ஆளும் கட்சியின் பண்பு, பயிற்சி நினைப்பு, நோக்கம், அந்தக் கட்சிக்கு ஜனநாயகத்திலே உள்ள நம்பிக்கை, இவைகளைப் பொறுத்து இருக்கிறது!!

இவை, ஆளுங் கட்சிக்கு எந்த வகையில் இருக்கிறதோ, யார் கண்டார்கள்?

"ரசம்' கலையாத கண்ணாடி முன் நின்று பார்த்தால்தான், "முகம்' சரியாகத் தெரியும்! ஜனநாயகப் பண்பு கெடாத நிலை ஆளுங் கட்சிக்கு இருந்தால்தான், எதிர்க் கட்சியின் தரம் தெரியும்!!

தொல்லை தரவேண்டுமென்று நாங்கள் எதிர்க்கட்சி அமைக்கவில்லை. ஆனால் நாங்கள் செய்கின்ற நல்ல காரியங்களையெல்லாம் நீங்கள் தொல்லையென்று நினைக்க வேண்டாம் என்று அவர்களை வேண்டிக் கேட்டுக்கொள்வேன். ஏனென்றால் தாய், திருவிழாக் காலத்தில் சாமியைப் பார்த்துக்கொண்டிருக்கின்ற நேரத்தில், பசிக்கின்ற குழந்தை தாயைக் கேட்கின்றது ஏதாவது வாங்கித் தரச்சொல்லி, அந்த நேரத்திலே, தாய்க்குக் குழந்தையினுடைய பசி தெரியாது, எதிரிலே இருக்கின்ற திருவிழாக் கோலந்தான் தெரியும். அந்தக் கோலத்தைப் பார்த்துக்கொண்டே பசியோடு இருக்கின்ற குழந்தை பிராண்டுகின்ற நேரத்தில், தொல்லை தருகிறாயே என்று அடித்துத் தாயே தன்னுடைய குழந்தையை தவறாக நினைக்கின்ற நேரத்தில், எதிர்க்கட்சிக்காரர்களை நாட்டை யாளுகின்ற அமைச்சர்கள் தவறாகக் கருதுவார்கள் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. தாய் தன்னுடைய குழந்தையைப் பசிக்கின்றது என்று தெரிந்தும் அது தொல்லை தருகின்ற காரணத்தினால் கண்டிப்பதானால், நாங்கள் செய்கின்ற நல்ல காரியத்தையும் தொல்லையென்று அமைச்சர்கள் கருதக்கூடும் - தோன்றும். எதிர்க்கட்சியிலே இருப்பவர்கள் எடுத்துச்சொல்லுகின்ற கருத்துக்களை எடுத்துச் சொல்லுகின்ற திட்டங்களை ஆராய்கின்ற நேரத்தில் அனுதாபத்தோடு ஆளுங்கட்சி கவனிக்க வேண்டும்.

அனுதாபத்தோடு கவனித்தால்தான் எதிர்க்கட்சிக்கு ஆளுங்கட்சியினிடத்து மதிப்புப் பிறக்கும்.

***

மாயவரத்தில், சிறப்புச் சொற்பொழிவின்போது, நான் இதுபோலக் கூறினேன். ஏன், தம்பி, சரிதானே! எதிர்க்கட்சியின் இயல்பு, போக்கு, ஆளுங்கட்சியின் தன்மையைப் பொறுத்துத் தானே அமையும்! அதைத்தான், சொன்னேன்.

விழாக்கள் போல நடத்தப்பட்டு வரும் கூட்டங்களில் இந்த விளக்கங்களை நமது தோழர்கள் தந்து வருகின்றனர்.

விழா - வெற்றி தந்த உற்சாகத்தின் விளைவு!

விழாமூலம் புதிய உற்சாகமும் கிடைக்கிறது.

எத்தனை எத்தனை புதிய கழகங்கள் அமைகின்றன தெரியுமா!!

பெறவேண்டிய வெற்றி என்றால் 15 - இடத்தை இப்போது பிடித்தோம். இனி அடுத்தமுறை 100 - இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பது மட்டும் அல்ல. அது மட்டும் நம்முடையது என்றால், தேர்தலுக்காகவே துவக்கப்பட்ட ஒரு கட்சியாக இருக்கவேண்டும். ஆனால், நம்முடைய கழகம் தேர்தலுக்காகவே மட்டும் துவக்கப்பட்ட கழகம் அல்ல. ஆகையினால் எதிர்கால வெற்றி என்று நான் கவனப்படுத்துகின்ற நேரத்தில், பிடிக்க வேண்டிய இடங்கள் இத்தனை என்று தூண்டுகின்றேன் என்று அர்த்தமல்ல. பிடிக்க வேண்டிய இடங்கள் அதிகமாகக் கிடைக் கலாம்; பெற்றுத் தருவீர்கள்; ஆனால் நாம் பெறவேண்டிய வெற்றி சட்டசபையிலே அதிகமான இடங்கள் என்பது மட்டுமல்ல, நமது தாய்த்திருநாடு நமக்குத்தான் உரியது என்ற உண்மை எந்தெந்த உள்ளத்திலே ஏறாமல் இருந்ததோ, எந்தெந்தச் செவியிலே புகாமல் இருந்ததோ, அந்தச் செவிவழி புகுந்து, அவர்களுடைய நினைவிலே நின்று, நெஞ்சத்திலே பதிந்து, அவர்களுடைய நிலைமையை மாற்றி, மனமாற்றத்தை ஏற்படுத்தித் தரவேண்டும். தாய்த் திருநாட்டை மீட்பதற்காக, நாம் எடுத்துக் கொள்ளுகின்ற பல்வேறு வகையான முயற்சிகளில், சட்டசபைக்கு போகின்ற முயற்சியும் ஒன்று. சட்டசபைக்குப் போகின்ற முயற்சியும் ஒன்று என்று நான் சொல்லுவதைவிடச் சட்டசபைக்குப் போகிற முயற்சி, பல முயற்சிகளிலே தரத்திலே சாதாரணமானது என்றும் கூறுவேன். சட்டசபைக்குள்ளே போய் "திராவிடநாடு கொடுங்கள் கொடுங்கள்' என்று அமைச்சர்களின் குரல்வளைகளைப் பிடித்து அழுத்தமுடியாது. நாங்கள் அங்கே செய்யக்கூடியதெல்லாம், விஷயங்கள் விவாதிக்கப்பட்டால் அவற்றிற்கு ஒளிதருகின்ற அளவுக்கு அறிவுத் தெளிவோடு விவாதிக்கலாம். கேடுதருகின்ற காரியத்தைக் காங்கிரஸ் அமைச்சர்கள் செய்ய முற்பட்டால், எங்களுடைய வலிவைத் திரட்டி, எங்களுடைய ஆற்றலைத் துணைக்கழைத்துக் கொண்டு அவர்களைத் தடுக்கலாம். அவர்கள் நல்ல காரியங்களைத் தப்பித் தவறிச் செய்தால், அந்த நல்ல காரியத்திற்கு அவர்களை மனமாரப் பாராட்டலாம். இவைகளைத்தான் நாங்கள் செய்யலாம்.

தாய்த் திருநாட்டை மீட்கும் பணியில், சட்டசபைக்குச் செல்லுவதென்பது தரத்திலே சாதாரண முயற்சி. ஆனால், அந்த முயற்சி தரத்திலே உயரவேண்டுமானால், நாங்கள் அங்கே உள்ளே இருக்கின்ற நேரத்தில், வெளியிலே இருக்கிற நீங்கள் கழகத்தை இப்போது இருப்பதைவிட அதிக வலிவுள்ள தாக்கினால், கழகத்திலே இப்போதுள்ள உறுப்பினர்களைப் போல் இரட்டிப்பு, மூன்று மடங்கு, நான்கு நடங்கு என்று நீங்கள் அதிகப்படுத்திக் காட்டினால், நம்முடைய கொடி பறக்காத ஊரில்லை, நம்முடைய குரல் கேட்காத பட்டிதொட்டி இல்லை என்று சொல்லத்தக்க அளவு நீங்கள் நம்முடைய பிரசாரத்தை வலிவுள்ளதாகவும் ஆக்கினால், வெளியிலே நீங்கள் கட்டிக் காக்கின்ற கோட்டையைச் சுட்டிக் காட்டிவிட்டு, உள்ளே இருக்கிற நாங்கள் ஏற்றம் பெறலாம். வெளியிலே கழகம் கலகலத்தது என்றால், உள்ளே 15 பேர் இருந்தும் பயனில்லை; 150 பேர் இருந்தும் பயனில்லை.

ஆகவே தம்பி, வெற்றிக் களிப்பிலே, விழாதரும் மகிழ்ச்சியிலே, இனி ஆகவேண்டிய காரியத்தை மறந்து விடாதே.

உனக்கும், உள்ளே சென்றுள்ளவர்களுக்கும், புதிய பொறுப்பு ஏற்பட்டுவிட்டது; புதியதோர் நிலைமை - அதற்கு ஏற்றபடி, நமது பணியின் அளவும் தரமும் வளரவேண்டும்.

உன்னால் முடியாததையா செய்யச் சொல்லுகிறேன்!!

அண்ணன்,

28-4-57