அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


15 கோடி பாழ்!

“மாமரம் ஏறி, உச்சிக்கிளைக்கருகே இருந்த பழத்தைப் பறித்துக் கொண்டு வந்தேன். சிரமம் அதிகம் - ஆபத்தும் அதிகம். அதைப்பற்றிக் கவலைப்படாமலும், பயப்படாமலும், பழத்தை எப்படியோ கொண்டு வந்துவிட்டேன்” என்று பெருமையுடன் கூறிக்கொண்டே, வில்வக் காய்களைக் கொடுத்தான், வீராசாமி!

அட முட்டாளே! என்னடா இது, வில்வக்காயைத் தருகிறாயே- எனறு முனுசாமி கோபத்துடன் கேட்ட பிறகுதான், வீராசாமிக்கே விளங்கிற்று, தான் பறித்தது மாம்பழமன்று என்பது.

“அடடா! என்ன செய்வது. நான் மாமரம் என்றெண்ணிக் கொண்டு நான், சிரமத்தைக் கவனியாமல் ஏறித்தொலைத்தேன் - பறித்தும் தொலைத்தேன். இப்போதல்லவா தெரிகிறது, மாம்பழமன்று என்பது. என்ன செய்வது? கிடைத்தது அவ்வளவுதான்” என்றான் வீராசாமி.

வீராசாமியும் முனுசாமியும், சிறுவர்கள் - விளையாட்டுப் பருவம்; வேடிக்கைக்கூட அவ்விதம் செய்திருக்கலாம்!

நாட்டை ஆளும் மந்திரிகள், இந்த முறையில் நடக்கலாமா?

“பதினைந்து கோடி ரூபாய் செலவிட்டு, ஆஸ்திரேலியாவிலிருந்து, உணவுப் பொருளை வரவழைத்ததாம். வந்தபிறகு பார்த்தால், அவை, கெட்டுப்போன பண்டமாயிருந்தன! என்ன செய்வது? ஆஸ்திரேலியாவுக்கு எழுதியிருக்கின்றோம் - இது சரியன்று, முறையன்று - எங்களுக்கு நஷ்டஈடு கொடுத்தாக வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். கிடைக்காமோ கிடைக்காதோ தெரியவில்லை. எப்படி இருந்தாலும், கெட்டுப்போயுள்ள இந்த உணவுப்பொருளை, நாம், ஏற்றுக் கொள்ளவேண்டி நேரிடுகிறது” என்று இந்திய சர்க்காரின் உணவு மந்திரி, ஜெயராம்தாஸ் தௌலத்ராம் சென்னையில் மே 21ந் தேதி பேசியிருக்கிறார், பிரமுகர்கள் முன்னிலையில். எப்படி இருக்கிறது நியாயம்! எப்படி இருக்கிறது திறமை!

பதினைந்து கோடி ரூபாய் செலவு! பஞ்சமான இந்தக்காலத்தில், இவ்வளவு பணம் செலவழித்துப் பெற்றதோ, கெட்டுப்போன பண்டம்! இதற்குத்தானா, இவ்வளவு “கெட்டிக்கார” மந்திரிகள், இருக்கிறார்கள் - அவர்களின் புகழை எட்டுத்திக்கிலும் முரசு வேறு கொட்டுகிறார்கள்!

பதினைந்து கோடி ரூபாய் பாழானதை, கொஞ்சம்கூடப் பதறாமல், கூறுகிறார். நஷ்டஈடு கேட்டிருக்கிறோம், கிடைத்திடுமோ இல்லையோ, என்று கூறுகிறார்! பொது மக்களிடமிருந்து, வசூலிக்கப்படும் பணம், இப்படிப் பாழாகிறது - பொறுப்புணர்ச்சி பற்றிய கவலையற்றுப் பேசுகிறார் அமைச்சர்!

“நல்ல தானியமாகத்தான் அனுப்புவார்கள் என்று நம்பினோம் - பெரும்பணமும் செலவிட்டோம் - பார்க்கப் போனால், கெட்டுப்போன தானியத்தைத்தான் அனுப்பி இருக்கிறார்கள்” என்று கூறியபோது, தௌலத் ராமுக்கு, பொதுமக்கள் மனம் இதைக் கேள்விப்பட்டால், பதறாதா, கோபிக்கமாட்டார்களா, என்பது பற்றிய அச்சம் வராததற்குக் காரணம், தானியத்தில் மட்டுமல்ல, இந்த மந்திரிமார்கள் விஷயத்திலேகூட, மக்கள், நல்ல திறமையுள்ளவர்கள், தேர்தலின்போது கொடுத்த வாக்கைக் காப்பாற்றுபவர்களாகத்தான் வந்து சேருவார்கள் என்று நம்பினர், எதிர்ப்பார்த்தனர் - கிடைத்த மந்திரிகளோ, கிழக்கை மேற்காகவும், வடக்கைத் தெற்காகவும் எண்ணிக்கொண்டு, வம்புகளை விலைபேசி வாங்கிக்கொண்டு, அடக்குமுறைக்கு வரை முறையின்றித் தூபம் போடுபவர்களாகத்தானே கிடைத்தனர் - என்ன செய்துவிட்டனர் மக்கள்? - என்ன செய்ய முடிந்தது? - துரைத்தனத்தை நடத்துவதற்கு வந்தவர்கள் விஷயமே இப்படியானபோது, தானியம் கெட்டுப் போயிற்று என்றால், என்ன செய்துவிடப் போகிறார்கள் - என்ற நம்பிக்கைதான்!

நல்லதாக அனுப்புவார்கள் என்று எதிர்ப்பார்த்தனராம்! இதிலே ஆரூடம் தேவையா?

ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய சர்க்காரின் பிரதிநிதி, ஏன், இதனைச் சரியாகக் கவனித்திருக்கக்கூடாது! அதைவிட வேறு என்ன வேலையாம் அங்கே அவருக்கு?

இவ்வளவு பெருந்தொகையைச் செலவிட்டுத் தானியம் வாங்கும்போது இந்தக் காரியத்தையே, உடனிருந்து கவனிக்க, விஷயமறிந்த, ஒரு தனி அதிகாரியையே அனுப்பி இருக்கலாமே!

பொதுமக்களின் பணம் பாழாகக் கூடாது, மனம் நோகக் கூடாது, என்பதிலே அக்கரை இருந்திருக்குமானால், இப்படியா, தான்தோன்றித் தனமாக நடந்து கொண்டிருப்பார்கள். பதினைந்துகோடி! பட்டினியிலிருந்து தப்புவதற்காக, மக்கள், வெளிநாட்டுக்கு அதிகப்பணம் கொடுத்து, உணவுப்பொருள் கேட்டுப் பெறும், இந்தக் கேவலத்தினூடே, இது ஒரு வேதனை!

ஏன், இவ்வளவு பொறுப்பற்று நடந்து கொள்கிறார்கள், அமைச்சர்கள்? கேட்பார் யார்? கேட்டால் வாய்ப்பூட்டு! எழுதினால், பத்திரிகையைத் தடைசெய்! சிறையிலே பிடித்துத்தள்ளு!

இந்த அடக்குமுறைக்கு, என்னென்ன புதுப்புது மெருகு கண்டு பிடிக்கலாம் என்பதிலே கவனம் செலுத்துவதற்குத்தான் நேரம் இருக்கிறதே ஒழிய, உணவுப் பொருளை வெளியிலிருந்து தருவிப்பதைக் கவனித்து, கெட்டுப்போகாததாகத் தருவிப்போம், அதற்கென்ன வழி என்பது பற்றி யோசிக்க நேரம் ஏது அவர்களுக்கு!

கெட்டுப்போன தானியத்துக்கு, பதினைந்து கோடி ரூபாயைக் கொட்டிக் கொடுத்துவிட்டு, வெட்கமோ துக்கமோ, கூச்சமோ இன்றி, அமைச்சர் நல்லது கேட்டோம், கெட்டது கிடைத்தது! கிடைத்ததைக் கொள்வோம்; வேறென்ன செய்வோம்! என்று பேசுகிறார்.

30.5.1948