அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


1915-1951

“நம் கைகளிலே விலங்கு பூட்டிவிட்டனர். இரும்புச் சங்கிலி களால், நம் உடல்களைக் கட்டிப்போட்டுவிட்டனர். வலி தாங்க முடியவில்லை. நாடே, சிறைச்சாலையாகிவிட்டது. ஆனால் அதற்காக நாம் பயப்படவில்லை. என்னைக் கைது செய்யட்டும்-சிறைக்குள்ளே தள்ளட்டும். நான் கவலைப்படப்போவதில்லை. ஒரு நல்ல காரியத்துக்காக நான் உயிரை விட்டால்தான் என்ன? அடக்குமுறைகளைத் தாங்கிக் கிடப்பதிலும் இந்த உயிர் போனால் தான் என்ன?”

உயிர் போகட்டும்! வீராவேசத்தோடு பேசினார். எதிரே கூடியிருநதோர் இதயங்களெல்லாம் கடலலை போலப் பொங்கின. “இ“ந்த வாலிபன் யார்” என்று கேட்டனர். “என்ன வீரம்!” என்று புகழ்ந்தனர். ‘ஆகா!’ என்ற ஆரவாரம். அதைப்பீறிட்டுக் கொண்டு

‘ஒழிக அடக்குமுறை’ என்கிற ஆவேசமுழக்கம். அங்கே எழுந்தது. ஆனால் அந்த வாலிபனோ பேசிக்கொண்டிருந்தான். ஆத்திரத்தோடு பலருக்கு ஆச்சரியம்!

“அவன் மகனா இப்படிப் பேசுகிறான்!”

“புலிக்குப்பிறந்தது பூனையாகவா ஆகும்?”

இதுபோலெல்லாம், பேசலாயினர் தலைவர்கள்.

அத்தகைய ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும், அந்தவாலிபனது பேச்சு, அவர்கள் மத்தியிலே எழுப்பிற்று.

அவன் பேச்சைக் கேட்டோருக்கு மட்டுமல்ல, அவனுக்கே ஆச்சர்யமாயிருந்தது. ‘நாமா பேசினோம்’ என்று.

ஏனெனில் அவன் பொது மேடையிலே பேசியது அதுதான் முதல் தடவை.

சர்க்கார் அவசரச் சட்டத்தை எடுத்து வீசியிருந்தது. பத்திரிகைகளின் எழுத்துரிமையைப் பறிக்கும் அந்தச் சட்டத்தைக் கண்டதும் பலர் குமுறினர். ‘ஏனிந்த அடக்குமுறை’ என்று கேட்டனர். சர்க்காரின் எதேச்சாதிகாரத்தைக் கண்டிக்கவேண்டும் எனத் துடித்தனர் அதன் காரணமாக ஏற்பாடு செய்யப்பட்ட கண்டனக் கூட்டத்தில்தான், முதன்முதலில் அந்த வாலிபன் அறிமுகமானான்.
அவசரச் சட்டமா?

எழுத்துரிமையைப் பறிக்கவா?

எங்கே நடந்தது கண்டனக் கூட்டம்?

யார் அந்த புதுப் பிரசங்கி? நம் இயக்கத்திலா?

கேட்கத் தோன்றும் நாளொரு உத்திரவும், பொழுதொரு அடக்கு முறையுமாக சர்க்காரிடமிருந்து பெறும் கட்சியினராக நாம் இருப்பதால்.

மேற்படி கண்டனக் கூட்டத்திலே நாட்டுக்கு அறிமுகமான அந்த வாலிபன், நமது கழக ஆசாமியல்ல. சம்பவமும் இப்போது நடந்ததல்ல.

சர்க்காரின் எதேச்சாதிகாரத்தைக் கண்டித்துப் பேசிய அந்த வாலிபன், இன்று ஆளும் பொறுப்பிலிருக்கிறார். எந்த நாடு சிறைச்சாலையாக இருக்கிறது என்று கர்ஜித்தாரோ அந்த நாட்டின் முடிசூடா மன்னராக இருக்கிறார். அகில உலகும் இன்று அந்த வாலிபனைப் போற்றுகிறது. மேற்படி சம்பவம் பற்றி, இன்று ஆளும் தலைவராக இருக்கும் அவரே கூறுகிறார், ‘தனது சுயசரிதை’யில்.

“முதன் முதலாகப் பொதுமேடையில் பேசுமாறு தூண்டப்பட்ட இடம் அலகாபாத் 1915 ஆம் ஆண்டாயிருக்குமென்று நம்புகிறேன். தேதியும் நிகழ்ச்சியும் சரிவரக் கவனித்ததில்லை. ஆனால் சம்பவம் மட்டும் நினைவிலிருக்கிறது. நான் பேசிய முதல் கூட்டம் ஒரு கண்டனக்கூட்டம். வெள்ளை சர்க்கார் பத்திரிகைகளை அடக்கும் நோக்குடன் ஒரு புது அவசர சட்டத்தைப் பிரகடனப்படுத்தியிருந்தனர். நான் அதைக் கண்டித்தும் பேசினேன். கூட்டம் முடிந்தது. டாக்டர் தேஜ்பகதூர் சாப்ரூ என்னைக் கட்டித்தழுவினார். மேடையிலேயே என்னை அன்போடு அனைத்துக்கொண்டார்.”

மகிழ்வோடு இந்தச் சம்பவத்தைச் சித்திரித்திருக்கிறார் இந்தியாவின் பிரதமரான பண்டித நேரு.

முதன் முதலில் பொது மேடையின் அறிமுகமானதே, எழுத்துரிமையைக் காப்பதற்குத்தான்.

அவரை அரசியல் உலகுக்கு அறிமுகம் செய்து வைத்ததே, அப்போது ஆண்ட ஆங்கிலேய ஏகாதிபத்தியம் எழுத்திரிமை மீது வீசிய அடக்கு முறைதான்.

அடக்குமுறை கண்டு பொறுக்காது அரசியல் மேடை ஏறினார் நேரு.

இது 1915-ல்

இப்போது அவரே சட்டம் கொண்டு வருகிறார். பத்திரிகை யுரிமையைப் பறிக்கும் வகையில்!

இது 1951-ல்

இந்த நிகழ்ச்சியை 1.7.51 அன்று வடாற்காடு மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற பேச்சுரிமை, எழுத்துரிமை மாநாட்டில் தி.மு.க பொதுச்செயலாளர் எடுத்துச் சொல்லியபோது கூடிக் கிடந்தோர் திகைத்தனர். ‘அப்படியா?’ என்று கேட்பதுபோல.

1915-1951 இந்த இரண்டு ஆண்டுகளுக்கிடையேயும் ஏற்பட்ட நிகழ்ச்சிகள் ஒரு சுதந்திர வீரனை எத்தகைய ஏகாதிபத்திய வெறிக்குள் தள்ளிவிட்டது என்று பரிதாபப்பட்டனர்.

நேரு-எத்தகைய மாவீரர்! மக்களுடைய உரிமைகள் குறித்து அவைகளைக் காப்பதற்காக “உயிர் போயினும் தயங்கேன்” என்று வீராவேசமெழுப்பியவரன்றோ அவர்! அத்தகைய சுதந“திர ஜோதி இன்று இப்படியா நடப்பது. என்னே காலத்தின் கோலம்! என்ற எண்ணமே எல்லோரிடையிலும் எழும்பிற்று.

உண்மையில், இந்த நினைவு நம்மைமட்டுமல்ல, எல்லோரது இதயங்களையும் கலங்கவைக்கவே செய்யும்.

மக்களுடைய அடிப்படை உரிமைகள் பற்றிப் போராடிய ஒருவரே இப்போது அதே உரிமைகளை ஒழிப்பது என்றால்!

காங்கிரஸ் சர்க்கார் ஆட்சிப்பீடம் ஏறியது முதல், மனிதருடைய பேசும் உரிமையும் படும்பாடும் கொஞ்சநஞ்சமல்ல.

பத்திரிகைகளுக்கு ஜாமீன் நாடகங்களுக்குத் தடை நூல்கள் பறிமுதல், கூட்டங்களுக்கு 144 என்ற ஆளவந்தார் வீசும் அடக்குமுறை அம்புகள், ஏராளம்.

மனிதனின் அடிப்படை உரிமைகள் இவை. ஆனால் இந்தச் சுதந்திர சர்க்காரில் இவைகள் செல்லாக் காசாகிக் கொண்டுள்ளன.

இத்தீமையை எப்படி நாம் சகித்துக் கிடக்க முடியும். இருக்கும் அடக்குமுறை போதாதென்று, இப்போது புதுச்சட்டம் ஒன்றையும் இந்திய சர்க்கார் கொண்டு வந்திருக்கிறார்கள்.

இது, மேலும் பத்திரிகைகளுடைய சுதந்திரத்தையும் தன் மதிப்பையும் பறிப்பதாகும்.

இந்தச் சட்டத்திருத்தம் கண்டு அகில இந்திய பத்திரிகையாளர் சம்மேளனம் என்கிற தேசிய சம்மேளனமே தனது ஆட்சேபத்தைத் தெரிவித்திருக்கிறது.

அதோடு கண்டனத் தினம் நடத்துவதென்றும் தீர்மானித்திருக்கிறது.

மேற்படி சம்மேளனம் பிற்போக்குகளின் கூடம் என்பதும், நமக்குத் தெரியும்.

எனினும், ஆளவந்தாரின் அடக்குமுறை பற்றி உள்ளுணர்ச்சியோடு, இப்போது தனது கண்டனக் குரலை காட்டுவதென முடிவு செய்திருக்கிறது.

இந்தச் சம்மேளனம், ஆளவந்தாரின் சலுகைப் பொம்மை.

ஆனால், நாமோ, காங்கிரஸ் ஆளவந்தாரால் தினசரி தொல்லைக்கு ஆட்பட்டுத் தவிக்கும் கூட்டம்.

எனவே, நமது கண்டனத்தையும் ஆளவந்தாரின் அட்டகாசப் போக்கையும் எடுத்துக்காட்ட வேண்டும் இதுமிக மிக முக்கியம்.

இதுபற்றி தீவிரமாக ஆலோசனை செய்த பிறகு திருப்பத்தூர் மாநாட்டிலே பின்கண்ட தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருக் கிறார்கள் பெருமிதத்தோடு.

“இந்திய அரசியல் சட்டத்திலே அளிக்கப்பட்டிருந்த சாதாரண எழுத்துரிமையையும் பறிக்கும் வகையில் டில்லி சர்க்கார் அச்சட்டத்தைத் திருத்தியிருக்கும் கொடுமையை இம்மாநாடு வன்மையாகக் கண்டிப்பதுடன், சர்க்காரின் இச்செய்கையை எதிர்க்கும் வகையில் ஜூலை மாதம் இரண்டாவது வாரத்தில் நமது இயக்கத்தின் வார இதழ்களும் தமது ஒரு வெளியீட்டை நிறுத்துமாறு இம்மாநாடு வேண்டுகிறது.”

வாழப்பிறந்த மனிதன் சுதந்திரத்தோடு உலவ வேண்டுமானால், அவன் வாழும் சமூகத்தில் நீதி வேண்டும். அந்நீதி நிலைத்திருக்க வழி வேண்டும்.

சமூகத்தில் அநீதி மலிந்து, கொடுமை மிகுந்துவிட்டால், அதில் மனிதன் சுதந்திரத்தைத் தேடினால் கிடைக்குமா? சுதந்திரத்தை நாடியோடினால் முடியுமா?

சமூக நீதி தழைக்க, ஜீவாதார உரிமை எருக்குள் அவசியம்! மிக மிகத் தேவை!

இந்த உண்மையை உணர்ந்தால் தான் நீதி நிலைக்கும், நீடிக்கும், சமூகத்திலே!

சமூக நீதி, சரியாக நெறியாக நிலவ, எழுத்துரிமை தேவை, பேச்சுரிமை வேண்டும்.

சமூக நீதி உயர்ந்த மாடி-எழுத்துரிமை, பேச்சுரிமை, மாடிக்குச் செல்லக் கட்டப்பட்டுள்ள படிக்கட்டுகள்.

படிக்கட்டுகளின்றி, மாடிக்குச் செல்ல முடியாது பறந்து செல்ல நமக்கு இறக்கைகளும் இல்லை!
சமூக நீதி, நடந்து செல்ல, இரண்டு கால்கள், அவ்வுரிமைகள்!

நினைப்பதை எழுத, நெஞ்சில் பட்டதை எடுத்துக் கூற முடியவில்லை யென்றால், சமூகம் எப்படி சரியான பூமியாகும்-சருக்கிடச் செய்யும் வழுக்குப் பாறையாகத் தானே முடியும்!

சமூகம், மணற்குவியல் ஒருபிடி அள்ளுவதால், சரிவது ஏராளம். அப்படித்தான் நீதியொன்று நசித்தால், நாசம் நிரந்தரமாகி விடுகிறது, சமூகத்திலே.

அந்நீதியும், எழுத்துரிமையால் வலுப்பெறுகிறது, பேச்சுரிமையால் விளக்கமடைகிறது!

இதனால் திருப்பத்தூரில் சென்ற 30.6.51 , 1.7.51 ஆகிய இருநாட்களிலும் சமூகநீதி, எழுத்துரிமை, பேச்சுரிமை மாநாடுகள் நடத்தினர் நம் திராவிட முன்னேற்றக் கழக வீரர்கள்.

இரண்டு நாட்களிலும், கண்கள் ஓடிய பக்கங்களிலெல்லாம், கொள்கை, வெறியேறிய காளைகள், திரும்பிடும் இடம் எங்கும் திராவிடத்தின் தீட்டிய வாட்கள் நீட்டிய ஈட்டிகள் ஆம், எங்கும் திராவிடம் பெற்றதீரர்கள்-எதிரிகள் திடுக்கிடும் வகையில் பணி புரியும் சிங்க இளைஞர்கள்.

திராவிடத் தீரர்கள் மட்டுமா, அவர்களோடு போட்டி போடும் வகையில், தாய்மார்கள்! பந்தலில் பாதிக்குமேல் அவர்கள்! அந்தக் காட்சியே, அச்சமும், மடமையும், இல்லாத பெண்கள் தமிழ் நாட்டின் கண்கள் என்று நம்மை பாட வைத்துவிட்டது!

முதல்நாள் தோழர், க.அன்பழகன் எம்.ஏ. தலைமையில், சமூக நீதி கோரினர். சென்னைத் தோழர் வி.முனுசாமி, இம் மாநாட்டைத் திறந்து வைத்தார்.

இரண்டாம் நாள், எழுத்துரிமை பேச்சுரிமையை பறித்திடும் போக்கிற்கு இறுதிச் சடங்கு நடத்திட மாநாடு கூடினர். தோழர் சி.வி.எம்.அண்ணாமலை துவக்கினார். தோழர் ஈ.வே.கி.சம்பத் தலைமை ஏற்றார்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் வில்லுப்பாட்டு, நாகூர் அனீபா, சென்னை செல்லமுத்து, கஸ்தூரிபாய் இன்னிசை.

திருப்பத்தூரில் இம்மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தினர் நம் இயக்கக் காளைகள்-அவர்கள் எல்லோரும் நம் பாராட்டுதலுக்குரியவர்கள் வரவேற்புக் குழுவில் பங்கு பெற்று பணியாற்றியோர் அனைவருமே நம் வாழ்த்து விழிகளுக்கு முன்னால் அணி வகுக்கின்றனர். எனினும், தோழர் வி.பி. இராசாபாதரின் சலியா உழைப்பை நாம் மறக்க முடியாது. அவர் வெற்றிக்கு வித்து! அவரோடு, இரவு, பகல் என்று பாராமல், தொண்டாற்றிய இயக்கத்தின் ‘நாடி நரம்புகள்’ ஏராளம். வடாற்காடு மாவட்டப் பொதுச்செயலாளர் போளூர் சுப்பிரமணியம், நோய்ப்படுக்கையில் கிடக்கும் எம்.பி. வடிவேல், ஆகியோரை நம் பாராட்டுதல்கள் தழுவட்டும்... வாழ்த்துகள் அணைக்கட்டும்!

குருடனுக்கு கோல், வாழ்ந்து கெட்டோருக்கு சமூகநீதி!

ஆனால் அந்நீதிக்கோல் கொண்டு நடந்து செல்ல பாதை செப்பனிட்டதாக இருக்க வேண்டும்.

எழுதாதே! பேசாதே! எண்ணாதே! நடிக்காதே! பாடாதே! என்று கூறிவிட்டு, சமூகநீதி உண்டு என்றால் நகைப்பர்.

இதை, நேரு அறிய மாட்டாரா? அறிவார், அறிந்தும் இந்த அலங்கோலம் ஏன்?

1915 நேரு எங்கே? 1951 நேரு ஏன் இப்படி மாறினார்?

சமூக நீதியை சழ்ககர்கள் சாய்த்து விட்டாலும், சரியாக்க வேண்டும் என்று திருத்தம் கொண்டுவந்த நேரு, எழுத்துரிமையை பறித்திட முனைந்து விட்டார். இது கொடுமை தாங்காது திராவிடம்! எதிர்க்கும் தளராது திராவிடம்.

முதன் முதல் நேரு பேசிய கூட்டமே பத்திரிகை சுதந்திரத்தை, பிரிட்ஷார் பறித்திட்டனர் என்பதை மக்களுக்குக் காட்டி கண்டனக் குரல் எழுப்பியதுதான்! ஆனால் இன்று அவர் நம்மாள்வார்! இருந்தும் எழுத்துரிமையைப் பறித்துவிட்டார்.

நேரு மாறி விட்டார் மக்களோ தங்களை மதியாதோரை மாற்றி விடவும் மனந்தேறிவிட்டனர்!

1915-ல் மக்களில் ஒருவர் அதுவும், குறிப்பிடத்தக்கவர். நேரு! ஆனால் 1951 ல் மக்களை மதியாத மமதையாளர்களின் தலைவராகி விட்டார்!

முப்பத்தாறு ஆண்டுகளில் இந்தப் புயல்! அரசியல் கொந்தளிப்பு!

மனிதனின் ஜீவாதார உரிமைகளை என்றும் எவரும் பறிக்கக் கூடாது பறித்திட முடியாது!

மலருக்கு மணம், நீருக்குத் தண்மை, இலைக்குப் பசுமை-இவை இயற்கை. இதுபோல மனிதனுக்கு எண்ண, எழுத, பேச உரிமைகள் இயற்கையானவை!

இயற்கை விதியை முறித்திட்ட எந்த எதேச்சாதிகாரியும் நீண்ட நாள் வாழ்ந்ததில்லை. சரித்திரம் அத்தகையோரின் சாவுக் கதைகளைத்தான் கூறுகிறதே தவிர, மனித உரிமைகளை மதியாத மமதையாளரின் புகழ்க் கீதம் பாடவில்லை.

நேரு மறந்து விட்டார். நிலைமை மாற்றம், அவரை இந்தப் பாதைக்கு இழுத்துவந்து விட்டது! ஆனால் அவருக்கு இது பெரிய ஏமாற்றத்தைத்தான் தரும்.

அடிப்படை உரிமைகளைத் தட்டிப் பறிப்போர், நேருவானா லென்ன மேருமலை போல் உயர்ந்தவரானாலென்ன எதிர்ப்பர் மக்கள்.

திருப்பத்தூர் மாநாடு, இந்த அடக்கு முறை ஆட்சிக்கு அறை கூவல் எழுத்துரிமையை அழித்திடுவோருக்கு சவால் பேச்சுரிமை பறித்திடுவோருக்கு எச்சரிக்கை!

கண்டனத்தைத் தெரிவிக்க, ஒரு வெளியீட்டை நிறுத்துகின்றன இயக்க தினசரி, வார, மாத இதழ்கள் எதிர்ப்பை, இதன் மூலம் எதிரொலிக்கச் செய்கின்றன.

கண்டனத்தோடு மட்டும் நிறுத்தவில்லை. கண்டிப்பான எச்சரிக்கையும் விட்டிருக்கிறது. திருப்பத்தூர் மாநாடு.

இது வரை, நம் இயக்க நாடகங்கள் பலவற்றைத் தடை செய்து விட்டது. இந்தக் காங்கிரஸ் சர்க்கார்.

இந்த அடக்கு முறைப்பாணங்களை அவர்கள் வாபஸ் பெறவேண்டும் இல்லாவிட்டால், போர் துவங்கும் என்றே அறிவிக்கப்பட்டுவிட்டது.

சமுதாய இழிவுகளைப் போக்கி, அறிவு வளர்ச்சியை உண்டாக்கும் ‘இரணியன்’ ‘போர்வாள்’ ‘தூக்குமேடை’ ‘நல்லதீர்ப்பு’ போன்ற நாடகங்களுக்குத் தடை விதித்துள்ள சென்னை சர்க்காரின் போக்கை கண்டிக்கிறது.

தடையை, 1951, அக்டோபருக்குள் நீக்கிவிட வேண்டும்.

நீக்காவிட்டால் தடையைமீறி, அந்நாடகங்களை நாடெங்கும் நடத்தி பேச்சுரிமை, எழுத்துரிமை காக்க எல்லாவகையான நடவடிக்கைகளும் எடுக்கப்படவேண்டும்.

இப்படித் தீர்மானித்துள்ளனர்.

போர் முரசு கொட்டினர்! பொல்லாத பாதை போகும் ஆட்சியாளருக்கு, அவர்கள் போக்குத் தகாது எனச்சுட்டிக் காட்டினர்!

நேரு, இன்று எரிமலை மீது அமர்ந்திருக்கிறார்.

1915-ல் அவர் மக்கள் மனதை எரிமலையாக்கினார். அந்நிய ஏகாதிபத்தியத்தின் மீது ஆத்திரத்தீயை வளர்த்தார்.

ஆனால் இன்றோ, எதேச்சாதிகார எரிமலையின் மீது அமர்ந்து கொண்டு எக்காளமிடுகிறார். அது என்று வெடிக்குமோ தெரியாது!

1915ல் அவர் தந்தார் எச்சரிக்கை 1951 ல், நாடு எச்சரிக்கிறது அவரை!

1915ல், பத்திரிகைச் சுதந்திரத்தைப் பறித்திட அந்நிய ஏகாதி பத்தியத்தின் மீது சீறினார். 1951 ல், பத்திரிகைச் சுதந்திரத்தை பறித்துவிட்டுச் சிரிக்கிறார்.

(திராவிடநாடு 5.7.51)