அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


1942 - 1948

1942
கமலா:- ஏண்டி, காந்தா! உன் புருஷன் இப்படிச் சிக்கிக்கொண்டு தவிக்கிறாரே. புத்தி சொல்லி இருக்கக்கூடாதோ! அசடே! என்னமோ, தேச சேவை, தேச சேவைன்னு சொல்லிண்டு, தண்டவாளத்தைப் போய்ப் பெயர்த்தா, சும்மா இருப்பாளோ, சர்க்கார்லே - துரதிர்ஷ்டம், சிக்கிண்டா போலீசிலே.

காந்தா:- ஆமாம், அவர் வந்த வழி அது. அதற்கு என்னடிம்மா செய்யலாம். என்னமோ போறாத வேளை. ஆனா, பிடித்த போலீஸ் ஆபீசர், பேசாமே அவரைச் சிறைச் சாலைக்கு அழைத்துச் சொல்லாமப் படிக்கு...

கமலா:- அதைப்பத்திச் கொல்லத் தாண்டி வந்தேன்...

காந்தா:- கொஞ்சங்கூட ஈவு இரக்கம் இல்லாமப்படிக்கு, எங்க ஆத்துக் காரரை அடிச்சி இம்சித்தானாம் அந்த ஆபீசர்.

கம:- இதைக் கேளடி, காந்தா..

கா:- கேட்டதிலிருந்து வயிறு எரியறது. அவனுக்குப் பகவான் சரியாகக் கூலி தரமாப் போவாரா...

கம:- காந்தா, சபிக்காதே, இதைக் கேள்டி...

காந்:- தண்டவாளத்தைப் பேர்த்தா, என்னடிம்மா? அவர் என்ன கொள்ளைக் கூட்டமா, கொலைகாரக் கூட்டமா? தேச சேவையிலே அதுவும் ஒண்ணு என்று எண்ணிச் செய்தார். சட்டத்திலே அது குத்தம்னு இருந்தா, அதன்படி தண்டிக்கறது - இம்சிக்கிறதா அதுக்காக? மனுஷத்தனம் இல்லாமே... என் வயிறு எரியறதேடி... அவன் வாழ்வானா...

க:- காந்தா! காந்தா! உன் வாயினாலே, சபிச்சிடாதே... வேண்டாம்... இதைக் கேளடி... ஆபீசர் வேறே யாரும் இல்லே, என் தம்பி தாண்டி..

கா: உன் தம்பியா! ஏண்டி கமலா! உன் தம்பியா, மிருகம்போல நடந்துண்டான். ஏண்டி! அவன் மனுஷன் தானாடி! கல்நெஞ்சக்காரன் ...குழந்தை குட்டிகள் இருக்கோடி அவனுக்கு, இப்படிச் செய்ய எப்படீ மனசு வந்தது?

க:- அதைச் சொல்லத்தானேடி வந்தேன் - அழாதே - போறாத வேளை - என் தம்பி, இம்சித்திருக்க மாட்டானாம் - ஆனா, மேலதிகாரிகள் கூடவே இருந்ததாலே, கொஞ்சம் கடுமையா நடந்துகொள்ள வேண்டிவந்ததாம்.

கா:- என் வயித்தெரிச்சலைக் கிளறாதேடி... கொஞ்சம் கடுமையாம், கொஞ்சம்! கால் எலும்பு முறிந்து போச்சின்னு டாக்டர் சொல்கிறான், நீ, உன் தம்பிக்காகப் பரிஞ்சு பேசறியே, பிரமாதமா... மேலதிகாரி இருந்தா என்னடி! இவன் மனுஷனா இருந்தா, சார்! இவரை எனக்குத் தெரியும் நன்னா - இவர் சாது - கெட்ட காரியம் செய்ய மாட்டார்னு, சொல்லி இருப்பானே - நாக்குப் புழுத்தாப் போகும்...?

க:- உன்புருஷன் அடிபட்டது கேட்ட துக்கத்தாலே ஆத்திரமாப் பேசறே, காந்தா! மேலதிகாரிகளிடம், இதுபோலப் பேசினா, உத்தியோகம் நிலைக்குமோ...

கா:- உத்தியோகம் - உத்தியோகம்! பாழாப்போன உத்தியோகத்துக்காக, உத்தமிகளோட வயிறு எரிஞ்சாலும் பரவாயில்லைன்னு நடந்து கொள்றதோ, கமலா! நோக்கு, முன்னமே தெரியாது, அந்த ஆபீசர்யாருன்னு... உன் தம்பிதானா, அந்தப் படுபாவி - அவன் வாழமாட்டாண்டி ... வயிறு எரிஞ்சி சொல்றேன்... அவன் குடும்பம் விளங்காதுடி... என் திருமாங்கல்யத்துமேலே ஆணைவைச்சிச் சொல்றேண்டி - அவன் வாழமாட்டான், வாழமாட்டான், வாழமாட்டான்...

க:- காந்தா! உன்னிடம் வந்து நான் நாலுநாழியா, நிலைமையை விளக்கிச் சொல்லிண்டிருக்க இருக்க, நீ, என் எதிரிலேயே, வாய்க்கு வந்த படி எல்லாம் சபிச்சிக் கொண்டே - தர்மமில்லை இது. ஆமாம், அவ்வளவு தான் சொல்வேன், ஆபீசர்னா, அவன், அவனோட டியூடியைச் சரிவரச் செய்யவேண்டாமோ? உன் ஆத்துக்காரரு, என்னமோ, தண்டவாளத்துக்கு அடியிலே சுயராஜ்யம் பதுங்கிண்டிருக்கிறமாதிரி எண்ணிண்டு, அதைப் பெயர்த்தா சர்க்கார், தண்டிக்கிறா, சாபிச்சிக்கொட்டறியே! என் தம்பி, என்னசெய்ய முடியும்? உத்தியோகம் அப்படிப் பட்டது...

கா:- உத்தியோகம் பெரிய ஆபீசர் நிலைக்கும்படி உத்தியோகம். நன்னா நிலைக்கும். இப்ப, இவன்போன்றவர், செய்கிற அக்ரமத்துக்கு...

கம:- ஆண்டவன் கூலிகொடுப்பார்னுதான் சபிக்கிறயே...

கா:- ஆண்டவன், அப்பறமா செய்வார், இப்ப, இன்ன கொஞ்சநாள்லே, சுயராஜ்யம் வந்ததும்பார் அவா படப்போற பாடுகளை யோகமா இருக்கும். இவாளுக்கெல்லாம் - இப்ப இவா செய்ற அக்ரமத்துக்கெல்லாம், வட்டியும் முதலுமாத் தீர்த்துத் தந்துவிட்டுத் தாண்டி, மறுவேலை பார்ப்பா! இந்தக் கண்ணாலே, அதைப் பார்க்கத்தானே போறேன் - இந்தக் காதாலே அதைக் கேள்விப்படாமலா இருக்கப்போறேன். ஓரேவரியிலே இவருடைய உத்தியோகமெல்லாம், ‘டிஸ்மிஸ்’ ஆகி, இவாளுடைய நடவடிக்கைகளை விசாரித்து, தண்டிக்காம இருக்கப்
போறாளோ! எங்க ஆத்துக்காரருக்கு ஏற்பட்ட கஷ்டத்துக்காக, நான் அழறபோது, என்னைத் தேத்த வந்துட்டயே, தம்பிக்கு ஏத்த அக்கா, நீ, அதுபோல உன் தம்பி, நாளைக்கு சுயராஜ்யசர்க்கார்லே மாட்டிண்டு, திண்டாடி, தேம்பறபோது, நான், வர்ரேண்டி, உங்க ஆத்துக்கு, உனக்குத் தேறுதல் சொல்ல...

கம:- போதும், வாயை மூடுடி- என்னமோ, பால்ய சினேகமாச்சேன்னு, உன்னோடே வந்து பேசினேன் - இங்கிதம் பெரியாமப்படிக்கு உளறிண்டிருக்கே - இங்கே வந்ததே பிசகு.... உன்னிடம் சமாதானம் பேசினது அதைவிடப் பிசகு... சுயராஜ்ய சர்க்காரிலே, உங்க ஆத்துக்காரார், போட்டதுதான் சட்டமா இருக்கப் போறதாக்கும் - சொப்பனம் கண்டுண்டு இருடி -சொப்பனம்.

கா:- சொப்பனமில்லே -ஜோதி டம்டி, முண்டே!

க:- சோப்பன மில்லேடி, ஆறுதல்.

கா:-போடி வெளியே, பொட்டி முண்டே...

க:- நாய் நுழையுமாடி உன் வீட்டிலே... வா யாடி.. அக்ரமக்காரி, என்னடி இது விளக்குமாத்தைத் தூக்கிண்டு வருகிறே... அடிப்பாவி... வேண்டாம்... விநாசகாலே விபரீத புத்தின்னு ஆடுகிறே! அழிஞ்சு போயிடுவே...

1948

காந்தா:- கமலம்! கமலம்!

க:- அடடே! காந்தாவா? வாடிம்மா, வா. எவ்வளவோ காலமாச்சு பார்த்து. ஏதோ விஷக்கடி வேளை நாம் இருவரும், பால்ய சினேகமா இருந்தும், முன்னே, வீணாசண்டை போட்
டுண்டோம், எனக்கு மனசு நிம்மதியே இல்லை. பம்பாய்க்குப் போன பிறகு கூட அடிக்கடி, எனக்கு உன் கவனமேதான்....

காந்:- ஏண்டி, பழைய குப்பையைக் கிளறிண்டிருக்கே. நீ, பம்பாயிலே இருந்து வந்திருக்கேன்னு, பார்வதி சொன்னதும், உன்னைப் பார்க்கவேணும்னு ஒரே ஆவலா இருந்தது. சௌக்யந்தானே...?

க:- இருக்கேண்டி, காந்தா! உன் க்ஷேம லாபம் எப்படி...

கா:- பகவான், ஏதோ கடைக்கண்ணாலேயாவது பார்க்காமப் போவாரோ? சௌக்யந்தான்! ஆத்துக்காரர்...

க:- ஆமாண்டி, எப்படி இருக்கார் உங்க ஆத்துக்காரர்...?

கா:- அவர் M.ஃ.அ. ஆகி இருக்கிறார்.

க:- பேப்பர்லே, அதைப் பார்த்தேண்டி... M.ஃ.அ. ஆகிவிட்டால் போதுமா? ஏதோ மாதச் சம்பளம் உண்டுன்னு சொல்றா, ஆனா அவருடைய, யோக்யதைக்கும் சேவைக்கும், குணத்துக்கும், இதுதானா... ஒரு பிரமாதம்...

கா:- அவருக்கு, நல்ல மதிப்போன்னோ, ஊரிலே?

க:- மதிப்பு இருக்கட்டும், வேறே விசேஷம் உண்டா? ஏதாவது சொத்து சேர்த்தாரோ? நிலபுலம் கிடைத்ததோ?

கா:- தியாகிகளுக்காக ஐந்து ஏக்கர் தந்தாளே, அந்தத் திட்டத்தின்படி, இவருக்கும் கிடைத்திருக்கு.

கம:- அதைத்தான் கேட்டேன், ஏதோ பாவம், கஷ்டம் பல அனுபவித்து, காலைக்கூடமுறிச்சிண்டாரே, 42லே, இப்ப அவருடைய ‘ராஜ்யம்’ இருக்கே, ஏதாவது, பயன் கிடைக்காமலா போகும்னு, எண்ணிண்டு தான் கேட்டேன்.

கா:- ஏண்டி கமலா! நாற்பத்தி ரெண்டிலே என்புருஷனை, நீ கூடத்தானே, கேவலமாக எண்ணிண்டே கேலியாகப்பேசினே - தேச சேவை, தேசசேவைன்னு சொல்லிண்டு, வாழ்வைக்
கெடுத்துக் கொள்றாரே, இது என்ன பைத்தியக்காரவேலைன்னு கண்டிச்சயே, கவனமிருக்கோ?

க:- ஆமாம்... அப்ப யார்கண்டா, சுயராஜ்யம் வரும், இவாளுக்கெல்லாம் சுகம் வரும்னு..

கா:- அவர் புத்தி தீட்சணியத்தோடுதான், அந்தக் காலத்திலேயே வேலை செய்திருக்கார். 42லே, தண்டவாளம் பெயர்த்திராவிட்டா, இப்போ, அயன் ஐந்து ஏக்கர் கிடைத்திருக்குமோ- என்கிற அல்பவிஷயமாக அல்லடி நான் சொல்றது. எங்க ஆத்துக்காரர் போன்றவா சேவை செய்ததாலேதானே, தேசத்துக்குச் சுயராஜ்யம் கிடைச்சிருக்கு. ஜனங்களெல்லாம் க்ஷேமமாயிருக்கா!
க:- சந்தேகமென்ன! அவாளுடைய சேவையால்தான், நாடு, சுகப்பட்டது. அவா நாற்பத்தி ரெண்டிலே, செய்த காரியத்தை உலகமே புகழ்றதே - அவர்களுக்கு, அதற்காகத் தானே மரியாதை, மதிப்பு, மானியம் தரப்பட்டிருக்கு.

காந்:- கமலா! நான்கூட 1942லே பயந்துதான் போயிருந்தேன்... ஆத்துக்காரரை, அசடுன்னுதான், எண்ணிக்கொண்டிருந்தேன் - இப்பத்தான் தெரியறது, அவருடைய அபாரமான முன்யோசனை. கிடக்கு, உன் தம்பி, எப்படி இருக்கான் - இப்ப சுயராஜ்ய சர்க்கார் நடக்கறதே - இவன் போன்றவாளுக்கு, விசாரணை, தண்டனை இருக்குமே, 1942-லே கடுமையாக நடந்துண்டவனாச்சே - என்ன செய்தா, உன் தம்பியை?

கம:-ஒண்ணுமில்லேடி காந்தா! பயப்படாதே. 1942-லே, என் தம்பி பெரிய ஆபத்தான நிலைமையிலேயும் பயப்படாமல் படிக்கு, தன் உத்தியோக காரியத்தைக் கவனித்தான்னு சொல்லி, சர்க்கிள் உத்தியோகமும் ஒரு தங்கமெடலும் கொடுத்திருக்கா, சர்க்காரிலே...

காந்:- நிஜமாகவாச் சொல்றே...?

கம:- ஆமாண்டி காந்தா! இப்ப, தம்பி, சர்க்கிளாகத்தான் இருக்கான். அவனுக்கும் 1942-தான், யோகம் கொடுத்தது - உன் ஆத்துக்காரருக்கும் அதே 42-தான், யோகம் தந்திருக்கு.

காந்:- பாரேண்டி அதியத்தை.. காலை முறிச்சவனுக்கும் இலாபம் கிடைச்சிருக்கு, கால் முறிக்கப்பட்டவருக்கும் இலாபம் கிடைச்சிருக்கு - தண்டவாளத்தைக் காப்பாத்தினான்னு உன் தம்பிக்குச் சார்க்காரிலே பரிசு கிடைத்தது - தண்டவாளத்தைப் பெயர்த்தார்னு எங்க ஆத்துக்காரருக்கு 4 ஏக்கர் கிடைத்திருக்கு.

13.3.1949