அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


22-ல் 22!
நான் என்ன சும்மாவ இருந்தேன் இதுவரையில், நரம்பு முறிய வேலை செய்து கொண்டுதானே இருந்தேன். நன்றி இல்லாத எஜமானர், நாயே! பேயே! என்று தூற்றுகிறார் என்று நொந்து கொண்டு பேசினான், மாளிகையின் வேலையாள். எஜமானர் தன்மீது சீறி விழுகிறார். தன் உழைப்பிற்கேற்ற ஊதியம் தருவதில்லை என்று சலித்துக் கொள்கிறான். உண்மையிலேயே, உழைப்பு என்னமோ அதிகந்தான்; பலன்தான் பூஜ்யம்! காலை 6 மணிமுதல் இரவு பத்துவரையில் மாளிகையிலே அங்கும் இங்கும் ஓடி ஆடி, கைகால், அலுக்கப்பாடுபடுகிறான். ஓய்வில்லை. யாராவது அவன்படும் பாடு கண்டால் பரிதாபப் படுகிறார்கள், சரியான உழைப்பாளியப்பா இவன். இவனுக்கு என்ன பணம் கொடுத்தாலும் நஷ்டமில்லை; மிகக் கஷ்டப்பட்டு வேலை செய்கிறான் என்று கூறாமல் இரார். ஆனால் அவனை வேலைக்கமர்த்தியுள்ள எஜமானனுக்குத்தானே, அவன் செய்யும் காரியத்தின் பலாபலன் தெரியும்.

ஏலே! என்னடா சத்தம் அங்கே?

ஒன்னுமில்லிங்க, கண்ணாடி டம்ளர் கீழே விழுந்தது பாருங்கோ, அந்தச் சத்தந்தான்.
அட பாவி! ஏனடா கண்ணாடிப் பாத்திரத்தைக் கீழே போட்டுவிட்டாய்?

கண்ணாடி தானுங்களே, வழவழன்னு இருக்குது, நழுவி கீழே விழுந்து போச்சிங்க.
* * *

தாண்டவா! எங்கேயடா போகிறாய்?

எங்கேயுமில்லிங்க. கொழந்தை அழுததுங்க அதைக் குளத்தங்கரைக்குத் தூக்கிக் கொண்டு போகிறேன்.

அட சனியன் பிடித்தவனே, குளத்தங்கரையிலே, குழந்தைக்கு என்னடா வேலை?
எனக்கு வேலை இருக்குதுங்களே. அழற கொழந்தையை விட்டு விட்டு எப்படி வெளியே போக மனசு வருதுங்க? நான் கொளத்திலே குளிச்சி முழுகறதுக்குள்ளே, கொழுந்தையும் அங்கே இங்கே ஆடி சந்தோஷமாயிடுங்க.

அட தடியா, நீ கொளத்திலே முழுகிக்கொண்டிருக்கும்போது குழந்தை தவறி குளத்திலே விழுந்தா என்ன செய்வது?

இது தெரியாதுங்களா? விழுந்தா தூக்கிவிட மாட்டேனுங் களா?
* * *

எஜமானனுக்கும் அந்த ஏடு பிடிக்கும் இத்தகைய போர் நித்த நித்தம், மணிக்கு மணி நடந்தவண்ணம் இருக்கும்.

ஓட்டைப் பாத்திரத்திலே நீர் நிரப்புவான், ஒடிந்த பாண்டத்தை உரியில் வைப்பான், துணி கிழியத் துவைப்பான், தோட்டத்து வாசலைத் திறந்து விட்டுத் தூங்குவான், அவன் எக்காரியம் செய்தாலும், ஏதாவதோர் நஷ்டம், நேரிட்டே தீரும். வேலை செய்யாத நேரமும் கிடையாது, ஒரு வேலையாகிலும் விவேகங் காட்டிய வாடிக்கையுங் கிடையாது. இப்படி ஒரு தடித்தாண்ட
வராயன் நமக்கென்று வந்து சேர்ந்தானே என்று வீட்டுக்குடையோன் தலைமீது அடித்துக் கொள்கிறான். இவ்வளவு பாடுபடுகிறோம், நம்மிடம் பட்சமாக இவர் இருப்பதில்லையே என்று வேலையாள் ஏங்குகிறான். வெளியே இருப்பவருக்கு என்ன தெரியும்? தாண்டவன் சளைக்காது உழைக்கிறான் என்று புகழ்ந்து வருகின்றனர்.

இவ்விதமான குடும்பக் கோலாகலத்துக்கொப்பாக இருக்கிறது காந்தியாரின், நாட்டு விடுதலை உழைப்பு! பன்னெடுங்காலம் பாடுபடுகிறார் - சிறை புகுந்தார் - என்று கூறாதார் இல்லை - கும்பி ஒரு கூட்டமும், உண்டு. ஆனால், பாடுபடுவதால் விளைந்த பயன் என்ன என்று, அச்சம் தயை தாட்சணியம், மயக்கம் இன்றி, நிறுத்துப் பார்த்துரைக்கும் எவரும், இதுவரை ஏற்பட்ட பலன் பூஜ்யம்! என்றே கூற வேண்டி வரும் - நெஞ்சிலே நேர்மையிருப்பின்.

உழைப்பு மட்டும் போதாது, பலன் வரும் விதமான பக்குவமான முறையுடன் பாடுபடவேண்டும். புறம்போக்கு நிலத்திலே, விதை தூவி விட்டால். முளை கிளம்பிப், பயிராகிக் கதிர் விடாது. அதுபோலவே, நாட்டு விடுதலையிலோ நாட்டமோ, அதற்கான உடலாட்டமோ மட்டும் போதாது. பலன் அளிக்க உழைப்பு, மதியைத் துணை கொண்டதாக இருத்தல்வேண்டும். இருந்திருப்பின், காந்தியாரின் இருபது ஆண்டுகளுக்கு மேற்பட்ட உழைப்பு, இதுவரை, பெரும்பலன் தந்திருக்கும்.

“சோவியத் நாட்டிலே, தோழர் ஸ்டாலின், 22 ஆண்டுகளிலே, இணையில்லா வெற்றி பல பெற்று, ரஷிய மக்களை வதைத்த பலப் பயங்கரப் பிரச்னைகளைத் தீர்த்து வெற்றி பெற்றார். ஆனால் காந்தியாரோ, 22 ஆண்டுகளிலே 22 பிரச்னைகளைக் கிளப்பினார், ஒன்றையாவது அவர் தீர்த்து வைக்கவில்லை, ஒன்றுக்காவது பரிகாரம் கிடைக்கக்காணோம்” என்று, டில்லி சட்டசபையிலே தோழர், ஜம்னாதாஸ் மேத்தா, கூறினார். மேத்தாவின், அந்தக் கண்டனம், காந்தி பக்தர்களுக்குக் கண்ணீர் உண்டாக்கியிருக்கக் கூடும். என்ன கர்வம் இந்த மேத்தாவுக்கு என்று அவர்கள் கர்ஜனை செய்யவுங் கூடும். ஆனால், நிதானமாக யோசித்தால் தோழர் ஜம்னாதாஸ் மேத்தா கூறியபடி, 22 வருஷத்திலே ஸ்டாலின் போன்ற தலைவர்கள் பெற்ற வெற்றியுடன், இந்த 22 ஆண்டுகளாகக் காந்தியாரின் முயற்சிகள், பலன் தராமற் போனதை ஒப்பிட்டுப் பார்த்தால், கோபம் நீங்கிச் சோகம் பிறக்கும்.

இந்து முஸ்லீம் ஒற்றுமை, சுதேசி, தீண்டாமை ஒழிப்பு, கிராமப்புனருத்தாரணம், கதர், மதுவிலக்கு, பொது மொழி, ஒத்துழையாமை சட்டமறுப்பு பதவி ஏற்பு, வார்தா திட்டம் எனும் இன்னோரன்ன பல பிரச்னைகள் காந்தியாரால் நாட்டிலே நடமாடவிடப்பட்டன, ஆனால் இன்றுவரை, ஒன்றாவது தீர்க்கப்பட முடியவில்லை. தீரும் மார்க்கமும் தெரியக்காணோம். இந்து முஸ்லீம் ஒற்றுமை எனும் பிரச்னையைக் காந்தியார் எடுத்தாண்ட விதம், தற்குறித் தாண்டவராயன், வழவழப்பான கண்ணாடிப் பாத்திரத்தை எடுத்துக் கை தவறிக் கீழே போட்டுவிட்டு, தூளைத்துடைப்பங் கொண்டு கூட்டிய கதைபோல் முடிந்தது.

ஒற்றுமை பேசி, இன்று எமக்குத் தனிநாடு தேவை என்று முஸ்லீம்கள் கேட்கும் நிலையே பலனாகக் காண்கிறார். பிற பிரச்னைகளின் கதியும் இதுபோலவே முடிந்தது. பூனா ஒப்பந்தத் திலே அன்று கையொப்பமிட்டு தனித்தொகுதி உரிமையை ஆதித்திராவிடர் இழந்ததன் காரணம் என்ன? காந்தியாரின் பட்டினிப் பயமுறுத்தல். அதே பயமுறுத்தலுக்கு இன்று ஆங்கிலேயர் விடுவித்த பதில் என்ன? “காயமே இது பொய்யடா. வெறுங் காற்றடைத்த பைய்யடா” என்று பாடினர்.

இந்த இருபத்தி இரண்டாண்டு, காந்தியாருக்கு மக்கள் தந்த ஆதரவு அலைகடல்போல் பெருகிற்று, பத்திரிகைகளின் ஒத்துழைப்பு அமோகமாக இருந்தது, நிதியோ குன்றெனக் குவிந்தது. ஆயினும் பலன் இல்லை. இவ்வளவு பலம் வேறோர் தலைவருக்குத் தரப்பட்டதுமில்லை, வேறெந்தத் தலைவருக்கும் இவ்வளவு தோல்விகள் கிடைத்ததில்லை. ஏன்? இதைத்தான் நாட்டு நண்பர்கள் என்று தங்கட்கே கூறிக்கொள்ள உரிமை உண்டு என்று நாவசைக்கும் தோழர்கள், நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மலை மழையால் கரையுமா, கரைந்தால், அது மலையன்று, மலை
போற் காணப்பட்ட மண்மேடு என்பதைக் கூறவேண்டுமா? காந்தி பக்தர்கள், 22ல் 22 என்ற இந்த மேத்தா மொழியை, ஆழ்ந்து, சிந்திக்க வேண்டுகிறோம். இந்தத் திங்கள், நாட்டு மக்களின் சிந்தனைக்குரிய வாசகம், இதைவிட வேறு தேவையுமில்லை. 22ல் 22!!

11.4.1943