அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஏ! பொதுஜன உணர்ச்சியே!
ஆகஸ்ட் தீர்மானத்தின் பலனாக ஏற்பட்ட கலவரத்துக்குக் கடுமையான பொதுஜன உணர்ச்சியே காரணம் என, அபுல்கலாம் ஆசாத்தின் கையொப்பத்தோடு அ.இ.கா.கமிட்டியினர் பழைய வைஸ்ராய் புரபுவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கங்கிரஸ் சபையின் தூண்டுதலால் அக்கலவரம் ஏற்படவில்லையென்றும், அச்சபையின் தூண்டுதலாய் இருந்தால், இதுவரையில் நடந்ததைவிட நூறு மடங்குக்கு மேல் கேவலமான நிலைமை தேசத்தில் ஏற்பட்டிருக்கும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இக்கடிதமும, இதையொட்டிய வேறுபல அறிக்கைகளும், காங்கிரஸ் சபைக்கும் அக்கலவரத்திற்கும் தொடர்பில்லை என்பதை எப்படியாவது நிலைநாட்டிவிடலாம் என்ற எண்ணத்தோடேயே வெளியிடப்பட்டவை என்பதை நாம் எடுத்துக்ட்ட வேண்டியதில்லை. அக்கடிதமே அதை நன்கு விளக்கிக் காட்டியிருக்கிறது.

காகம் எட்காரப் பனம்பழம் விழுந்தது போல, ஆகஸ்ட்டுத தீர்மானம் நிறைவேறியதற்கும் கலவரமுண்டானதற்கும் எப்படியோ பொருதத மேற்பட்டுவிட்டதே தவிர, அத்தீர்மானம் இக்கலவரத்தை ஒருபோதும் தூண்டியதேயில்லை என்றும், பொதுஜன உணர்ச்சியே அதற்குக் காரணம் என்றும் காங்கிரஸ் சபை கூறுமாயின், அடக்க முடியாத பொதுஜன உணர்ச்சி, ஆகஸ்ட் தீர்மானம் நிறைவேறியதும் பொங்கிவழியக் காரணம் என்ன? காங்கிரஸ் சபையின் தூண்டுதலில்லாத வெறும் பொதுஜன உணர்ச்சியேதான் அக்கலவரத்திற்குக் காரணமென்றால், காங்கிரஸ் சபை, பொதுஜனங்களுடைய உணர்ச்சியை எந்தவகையில் வெளிப்படுத்துவது என்ற பயிற்சி அளித்து வைத்திருக்கிற தென்பதையே அக்கலவரம் தெளிவாக்குகிறது. இல்லையேல், இன்று சொல்லப்படும பொதுஜன உணர்ச்சி இந்த முறையில் வெளிப்படக் காரணமேயில்லை.

நாட்டு நலன் குறித்த உண்மையான உணர்ச்சி காங்கிரஸ்பாரர்களிடம் இருந்திருக்குமாயின், பொதுஜன வசதிக்காக ஏற்படுததப்பட்டுள்ள புகைவண்டி, தபால், தந்தி முதலிய இன்றியமையாப் போக்குவரத்துச சாதனங்களை அழிப்பதுதான் அடக்கமுடியாத பொதுஜன உணர்ச்சியா என்ற கேட்கிறோம். பொதுஜனங்களில் வாழ்க்கை வசதிகளைக் குலைக்கும் கருவியாக மாறுவதை இங்கன்றி வேறெங்கேனும் கண்டதுண்டா அல்லது காணத்தான் முடியுமா?

உண்மையாகவே பொதுஜனங்களின் நலனைப் பாதுகாக்கும் முறையில் யாரிடமாவது உணர்ச்சியிருக்குமானால், அவ்வுணர்ச்சி பொதுஜன நலனைப் பாதிக்கும் முறையில் ஒருபோதும் ஈடுபடாது. எனவே, ஆகஸ்ட தீர்மானம் அக்கலவரத்திற்குத் தூண்டுதலாய் இருந்ததால்தான் காங்கிரஸ் பொதுஜனங்கள் பொதுஜன வசதியைக் குலைக்கும் அழிவு வேலையைச் செய்தனர் என்ற ஓரளவு அறிவு பெற்றவரும் கூறுவர். இதனை மறுப்பவர் உண்மையை மறைப்பவரேயாவர்.

காங்கிரஸ்காரர்களிடம் இத்தகைய பொறுப்பற்ற பொதுஜன உணர்ச்சி இருப்பதால்தான், இவர்களின் கலப்பற்ற தனி அரசுரிமை வேண்டுமென்ற திராவிடர்களும் முஸ்லீம்களும் கலப்பற்ற தனி அரசுரிமை வேண்டுமென்று திராவிடர்களும் முஸ்லீம்களும் விரும்புகின்றனர் என்பதை நாம் வலியுறத்திக் கூறுகிறோம். மற்றபடி, நாம் பிரிட்டிஷாருக்காக வக்காலத்து வாங்கிப் பேசுவதாக எவரும் கருதவேண்டாம். சுய ஆட்சி பெறுவதில் காங்கிரஸ் கட்சிக்கு மற்றக் கட்சிகள் சளைத்தவை அல்ல என்பது, அன்னியரின் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்காகவே நாம் திராவிட நாட்டுப் பிரிவினயைப் பெரிதும் வற்புறுத்தி வருவதிலிருந்து நன்கு விளங்கும். ஆனால் காங்கிரஸ்காரர்போல் திராவிடர்கள் தமது உணர்ச்சியைப் பொதுஜனங்களுக்குக் கேடுண்டாக்கும் முறையில் வெளிப்படுததிச் செயல்புரியமாட்டார்கள். அடக்க முடியாத பொதுஜன உணர்ச்சி ஏற்படுமானால், அதனால் அளவிட முடியாத பொது நன்மைகள் உண்டாகும் முறையிலேயே அவ்வுணர்ச்சி வேலை செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
(05.11.44 - திராவிடநாடு)