அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஆச்சாரியார் வருகிறார்!

ஆச்சாரியார் வருகிறார்! அரசோச்ச வருகிறார்! பதவிப் பட்டாடை உடுத்திக் கொண்டு, சட்டசபை உறுப்பினர்கள் சிலர் பாதந்தாங்க, சிலர் பல்லக்குத் தூக்க, வேறு சிலர் சாமரம் வீச மற்றும் சிலர் ‘அடைப்பம்‘ தாங்க, பவனிக்குத் தயாராகுகிறார்!

ஆமாம் – அலுத்துவிட்டேன், மிகமிக அலுத்துவிட்டேன் – அரசியலில் இனி நுழையேன், அரே ராமா! அரே கிருஷ்ணா எனும் அருமைத் திருமந்திரங்களை உச்சரித்துக் கொண்டு உயிருக்குயிராக உள்ள பரம்பிரம்மத்தை கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பூட்டும் வண்ணம் எடுத்துரைத்து, இகத்திலே பரத்தைகக்காண, உறுதி கொண்டு விட்டேன், இனி பதவியின் பளபளப்பு, அதிகார மயக்கம், எனும் ‘மாயப் பிசாசுகள்‘ தீண்டிட விடமாட்டேன் பஜகோவிந்தம், பஜகோவிந்தம் என்று பாடிக்கொண்டிருந்தாரே, அதே ஆச்சாரியார்தான் வருகிறார்!

யானைமீது அம்பாரிகட்டி அதிலே வெல்வெட்டு மெத்தை அமைத்து அதன்மீது அலங்காரமாகச் சாய்ந்து கொண்டு சென்ற ‘மஹாராஜா‘, இத்தகைய போக போகாதிகள் வீண் மனமகக்கம், எம்மானைப் பெம்மானைக் காண வொட்டாது தடுக்கம் பாபக்கறைகள், எனவே, இவை வேண்டேன், இனிதுளசிமாலை அணிவேன், திருவாய்மொழி படிப்பேன், திருநாமம் தரிப்பேன், தீர்த்த யாத்திரை செல்வேன், கைத்தாளமிடுவேன் வேறு வீண்வேலை ஏதும் செய்வேன் அல்லேன் என்று ஊரறிய உலகறிய, உரத்த குரலில் கூறிவிட்டு அடுத்த நாளே, எருமை மீதமர்ந்து எருக்கஞ் செடி நிறைந்த காட்டைக் கடந்து சென்று இடுப்பளவு சேறுள்ள இடத்திலே இறங்கி இதுவும் ஒரு சேவைதான், என்று கூறினதாகக் கதை தீட்டவும் கூசுவர் – ஆனால் கண்ணாலே காண்கிறோம், ‘கனம்‘ ஆகிறார். இகலோகமே இலேசானது என்று கூறிக்கொண்டிருந்த ஆச்சாரியார்.

மதுவிலக்குப் பிரச்சாரத்தை கேட்போர் மனம் தெளியும் வண்ணம் செய்து கொண்டிருக்கும் சொற்பொழிவாளன், மேலும் அருமையாக மதுவால் விளையும் கேடுகளை எடுத்துக் கூறும் நோக்குடன், “பூபோட்ட கிளாசிலே போடப்பா இரண்டரை“ என்று கேட்டான், என்று நகைச்சுவைக்காகக்கூட எழுத யாரும் முயற்சிக்கமாட்டார்கள் – ஆனால், ஆச்சாரியார் இதோ கிளம்புகிறார், சென்னையில் அரசோச்ச! வீழ்ச்சிதான் – எனினும், என்செய்வது, என்கிறார்! உடலிலேயோ வலுவில்லை – உள்ளமோ, பாராமார்த்தீகத்திலே பாய்ந்து விட்டிருக்கிறது – எனினும், என் செய்வது, ‘இவாளெல்லாம், அழைக்கிறபோது ஒப்புக் கொள்ளாமலிருக்க முடியல்லே!“ என்று பேசுகிறார்.

அலுத்த ஆச்சாரியார் வருகிறார். ஆத்மார்த்த துறையிலே ஈடுபட்டு விட்டேன் என்று அறிவித்துவிட்ட ஆச்சாரியார் வருகிறார்! பட்டம், பதவி எனும் மோகம் தீண்ட முடியாத, உயர்நிலைக்கு பயணமாகிறேன் என்று பஜகோவிந்தம் பாடிக்கொண்டிருந்த ஆச்சாரியார் வருகிறார்.

வருகிற ஆச்சாரியார், கொல்லைப் புறமாக வருகிறார்!

மக்களை ஆளவருகிறார், ஆள்பவர்களை மக்கள் தெரிந்தெடுத்தபோது, அவர்களிடம் வராதவர் இன்று மக்களை ஆளவருகிறார்.

ஆளும் கட்சி காங்கிரசாக இருக்கக் கூடாது என்று நாட்டு மக்கள் தீர்ப்பளித்தான பிறகு, காங்கிரசை ஆளுங்கட்சி ஆக்கும் ‘ஆத்மார்த்த‘ வித்தை புரிய வருகிறார், ஆட்சி செய்து செய்து அலுத்துவிட்டேன் என்று கூறிய ஆச்சாரியார்.

நரியைப் பரியாக்கி, அப்பரிமீதமர்ந்து, புலிவேட்டை ஆடுவேன் என்று புகலாமல் புகன்றிடும் ‘பூஜ்யர்‘ பாரீர் என்கிறார்கள். மேளதாளங்களம், குப்பைக் கூளங்களும்.

கல்கியைக்கூட ஏமாற்றிவிட்டு ‘கனம்‘ ஆகிறார். கோவைச் சீமான் சண்முகத்திடம், ‘குல்லூக பட்டர்‘ என்ற பட்டம் பெற்றவர்.

நடவாத காரியம் என்றார் நண்பர் கல்கி – நடைபெறத்தான் செய்தது.

இந்த நாட்டிலே, எது நடைபெறவில்லை!

கண்ணைப் பெயர்த்தெடுத்து அப்பிய கண்ணப்பனுக்கு அருள்பாலித்த முக்கண்ணன், தாயைப் புணர்ந்து தகப்பனைக் கொன்று மாபதகம் செய்த ‘மறையவர் குல மாணிக்கத்தை‘ அருகம்புல்லினைப் பசுக்களுக்கு அளித்து பொற்றாமரையிலே குளித்து, எழு, என்னடி சேர்வாய் என்று கூறினாராமே – இந்த நாட்டிலே எதுவும் நடைபெறும்!

திருமணம் இந்த எழிலரசிக்கு – ஏற்ற மணாளனைக் காணோம், என்று வீட்டார் விசாரத்துடன் இருக்க, வீதிவழியே செல்லும், விபூதி ருத்ராட்சதாரி, செம்பொன்னும் ஓடும், என் நோக்கில் வேறல்ல, ஒன்றே, என்று சிந்துபாடியபடி, இத்துடியிடையாளை யாமே கடிமணம் புரிவோம் – கவலை கொள்ளற்க என்பார் – மங்களானீபவந்து கூறுவர் மரமண்டையனிர்!

எதுவும் நடைபெறும், நாடு இது – எனவேதான், இதோ ஆச்சாரியார் வருகிறார்.

அதிலும், சும்மாவா வருகிறார்!

வருக! வருக! - என்று அழைத்தார் – உதட்டைப் பிரித்துத் தலையை அசைத்தார்.

ஐயனே வருக! அரசியல் நுட்பம் உணர்ந்த மெய்யனே வருக! ஆபத்பாந்தவா வருக! அனாதரட்சகா வருக! எம்மைச் சுற்றிலும் சூறாவளி – எனவே வருக! என்றனர் – சொன்னார்களா! - கெஞ்சினர் – கதறினர் – அதற்குப் பிறகே திருச்செங்கோட்டுத் திருமுனி,திருவாய் மலர்ந்தருளினார், “அஞ்சற்க! அன்பர்காள், அஞ்சற்க இதோ புறப்படுகிறோம், கருப்புக் கண்ணாடியுடன்“ என்று.

ஏறத்தாழ புன்னைமரத்தின் மீதமர்ந்து புல்லாங்குழல் ஊதும் கண்ணனை, சேலை இழந்த சேயிழையார், இருகரம் கூப்பி, கண்ணா! மணிவண்ணா! சேலையைத் தாரீர் என்று கெஞ்சிட, மோகன முரளீதரன், தொழுதிடும் துடியிடைகளின், அகத்தின் அழகு முகத்திலே தெரிகிறதா என்பதைக் கூர்ந்து கவனித்த பிறகு, சேலையைத் தருகிற காட்சி – படம் உண்டல்லவா, ‘பக்த சிகாமணிகளின் கிரஹங்களில்‘ – அந்தப் படம், எம்பெருமானின் லீலாவிநோதக்காட்சி – அதன் அரசியல் பதிப்பு இப்போது தியாகராயநகரில் ஆச்சாரியார் இல்லத்திலே!

ஆகஸ்ட்டுத் துரோகி ஆச்சாரியார் ஒழிக! என்று அண்டம் அதிர முழக்கமிட்ட வீராதிவீரர், விருதுநகர் தீரர், காமராஜர் உட்பட சகலரும் கூடிநின்று, சாஷ்டாங்க தெண்டனிட்டு வருக! வருக! என்று கெஞ்சிக் கூத்தாடின பிறகு, துறவறத்தைத் துறந்து, தாளத்தைக் கல்கி காரியத்திலே போட்டுவிட்டு, கவர்னர் கைலாகுக்குச் சென்றார், ‘கமாகும்‘ வேதாந்தி!

பொது மக்களிடம் மார்தட்டிப் பேசினார்கள் நாங்கள் ஆளப் பிறந்தவர்கள் திறமையும் உடையவர்கள், மற்றையோரை மதியாதீர், ஆட்சிபுரியும் அருகதை உடையோர் யாமே, எனவே எமக்கே ஓட்டளியுங்கள் என்று – தியாகராய நகர் சென்று, ‘பவதிபிஷாந் தேஹி‘, ஆகிவிட்டனர்! ஆச்சாரியாரின் வாழ்நாளிலேயே வெற்றிக்களை பரிபூரணமாகத் தாண்டவமாடிய வேளை அது.

கனக விசயருக்குச் சிலை அமைத்திடும் திருப்பணியில் ஈடுபடுகிறேன், என்று சேரன் செங்குட்டுவன் கூறி, கனக விசயரின் தலையிலே ஏற்றிக்கொண்டு வந்த ‘கல்லை‘ சிற்றுளி கொண்டு செதுக்கினான், என்று ‘சிலப்பதிகாரம்‘ திருத்தி பதிப்பிக்கப்படுகிறது – செந்தமிழ் நாட்டவர்கள், சொரணையற்றுப் போனார்கள், என்று எண்ணிக் கொண்டிருக்கும் ஆணவக்காரருக்கு அரசியலிலே இடம் இன்னமும் இருப்பதால்!

ஆச்சாரியார் மகாமேதையாம்! இருக்கட்டுமே! அவரை அழைத்த நூற்றிஐம்பத்திஇரண்டு ‘உருவங்களும்‘ தத்தமது மூளையைக் கூட்டிப் பார்த்தால் கூடவா, நாட்டை ஆளும் காரியத்துக்குப் போதுமானதாகப்படவில்லை. அவ்வளவு ‘சூன்யங்கள், ஏன், பொதுமக்களின் ஓட்டுகளைப் பறித்தன! திருமணமான பிறகா, மணமகன் கூறுவது, ஐயா நான் ஆணுமல்ல, பெண்ணுமல்ல, அலி! என்று களத்திலே நின்ற பிறகா, வாள் வீசி அறியேன், என்று பேசுவது சட்டசபை உறுப்பினர்காளன பிறகா வெட்கமின்றி கூறுவது, எங்களுக்குள் ஒருவர் தலைவராக முடியவில்லை, நாடாள நாங்கள் போதாது, எங்களிலே சிலர் நரிக்குணம் கொண்டவர் உளர், சிலர் புலிக்குணம் கொண்டவர் உளர். ஆனால் அவர்போன்றார் இங்கு இல்லை, அவரிடம் இக்குணமும் இணைந்திருக்கிறது என்றா பேசுவது.

அலுத்துப் போயிருக்கும் ஆச்சாரியார், அரசியல் விவகாரங்களுக்கு அப்பாற்பட்டவராகி, இன்னிறத்தான் இவ்வண்ணத்தான் என்று சாமான்யர்களால் கண்டு கொள்ள முடியாதவரான கடவுளின் திவ்ய சொரூபத்தை மனக்கண்ணால் காணவேண்டுமென்ற ‘ஞானநிலை‘யை நாடிச்சென்று கொண்டிருப்பதாகக் கூறப்பட்ட ஆச்சாரியார், அழைக்கப்பட்டு வருகிறார்! வருகிறவோதே, தன் பொறுப்புகளையும், பாரங்களையும் தாங்கும் ிலை, உடலில், உள்ளத்தில் இருப்பதாகவாவது கூறுகிறாரா என்றால் அதுவும் இல்லை தத்தி நடக்கிறேன் – முதுமை – சோர்வு – என்று கூறிக் கொண்டு வருகிறார். என்ன அதன் பொருள்? ஏன் இதைக் கூறுகிறார்! ஏற்க இருக்கும் பெரியதோர் பொறுப்புக்குத் தேவையான திருக்கலியாண குணங்களா இவை? இல்லை! எனினும் பன்னிப் பன்னிக் கூறும் நோக்கம் என்ன?

உருக வைக்கிறாராம், தோழர்களை!

பாபம்! இவ்வளவு தள்ளாத காலத்தில், நிம்மதியாக ராமா, கிருஷ்ணா, கோவிந்தா என்று மனம் செய்து கொண்டு இருக்க வேண்டிய காலத்தில், எவ்வளவோ நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் பாடுபட்டு பாடுபட்டு எலும்புக் கூடாகிவிட்ட இந்த முதியவரை, பெரிய தொல்லை மிகுந்த பொறுப்பை ஏற்கச் சொல்கிறோம் – இந்த நிலையிலும், தன் வயோதிகம், அலுப்பு எதையும் பொருட்படுத்தாமல் சென்னை ராஜ்யத்தின் நன்மைக்காகத் தம்மை அர்ப்பணிக்க முன்வந்துள்ளனர், என்னே அவரது தியாக சுபாவம், எத்துணை நிஷ்காம கர்மீயம், என்றெல்லாம் எண்ணுவார்களாம், தன் உரை கேட்பவர்கள்!

சிலர் இதுபோல எண்ணவுங் கூடும்!

சிலர் இப்போதே இதைச் சுட்டிக்காட்டியும் பேசுகின்றனர்.

நாம், வேறொன்றைச் சுட்டிக் காட்ட விரும்கிறோம்.

“இதற்கு மேல்துரிதமாகப் போக எனக்கு உடம்பில் சக்தி இல்லை நான் இன்னமும் வேகமாகப் போகவேண்டுமென்று நினைத்தால் வட சரீரம் இதற்குமேல் இடம் கொடுக்கவில்லை. என்னுடைய 25வது வயதில் இப்பதவியை நான் ஏற்றிருந்தால் என்ன செய்திருப்பேன் என்று சொல்ல முடியாது. ஆனால் 58வது வயதில் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். இப்போது எனக்கு வயது 60 ஆய்விட்டது“ என்று கனம் முதலமைச்சர் சென்னை கொத்தவால்சாவடி கிடங்கின்மீது ஏறிக்கொண்டு பேசினார்.

புளுகு! புளுகு! ஆச்சாரியார் கொத்தவால் சாவடிப் பக்கமே வரவில்லை! - என்று கூறிச் சீறத் தோன்றும் காங்கிரஸ் நண்பர்களுக்கு மற்ற நண்பர்களும் கூட, இப்படி ஒரு கூட்டம் நடைபெற்றதாகச் செய்தியே வரவில்லையே, ஏன் இது போலஇல்லாததை எழுதுவது என்றே கேட்கத்துடிப்பர்.

பேசியவர் ஆச்சாரியார்தான் – உறுதி கூறுகிறோம் – கூட்டம் நடைபெற்றதும் கொத்தவால்சாவடியில்தான், நிச்சயமாகக் கூறுகிறோம் – வயதாகிவிட்டது எனவேதான் வல்லமையுடன் பணியாற்ற இயலவில்லை என்றுதான் கூறினார் அதுவும் உண்மை – ஆனால் பேசியது, இப்போதல்ல 1939ம் ஆண்டு ஜுலை மாதம் 2ந் தேதி!

ஆச்சாரியார், இப்போது நான் வயோதிகள் – ஆகவே அதிகமாகப் பணியாற்ற இயலாது என்று பேசுகிறாரே, இது புதிய பேச்சல்ல அவருடைய பழைய பல்லவி – 1939லேயே, சென்னை முதலமைச்சராக இருந்த போதே, அவருடைய ஆட்சியிலே ஏற்பட்ட அவதிகளைக் கண்டு அல்லல்பட்ட மக்கள் ஆயாசப்பட்ட போதே, அவர், நான் கிழவன், என்ன செய்யலாம், என்றுதான் பேசினார். அப்போது துவக்கிய பேச்ச – இப்போதும் அவருக்குப் பயன்படுகிறது.

தள்ளாத காலத்திலே, ஏன் பாபம், இந்தப் பொல்லாத வேலை – தாங்க முடியாத தொல்லை.

காங்கிரசின்பேரால் உள்ளே நுழைந்திருப்பவர்களிலே, வாலிப முடுக்கும் வயோதிகத் தளர்ச்சிக்கும் இடையேயுள்ள பருவத்தினர், திறத்தினர், ஒருவருமே கிடையாதா! அவ்வளவு பஞ்சமா! செச்சே! வெளியே சொன்னால் வெட்கக்கேடு! வெற்று நாட்டவர் கேட்டாலும் கைகொட்டிச் சிரிப்பர்! ஏன்! நூற்றிஐம்பத்து இரண்டுகளின் இல்லங்களிலே உள்ள பெண்டு பிள்ளைகள் கூடக் கேலி பேசுமே!

காளைகள் – கர்ஜனைபுரியும் சிங்கங்கள் – என்றெல்லாம் ஓட்டர்கள் முன்பு சித்தரிக்கப்பட்டவர்கள், இன்று,எம்மால் ஆகாது என்று கூறி துணைக்கு-துணைக்கா! - தலைமைக்கு, ஒரு முதியவரை, அழைப்பது. அவர் வருகிறபோதே நான் வயோதிகன்என்று பசப்புவது – இதுவா அரசியல் – ஜனநாயகம் – எந்தவகையான ஜனநாயகமோ நாம் அறியோம்.

மன்னிக்க வேண்டுமே – ஜனநாயகம் என்ற புனிதமான பதத்தை, இந்த நிலைமையிலே எடுத்து எழுதியதற்காக.

ஜனநாயகம் தெள்ளத்தெளிய எதை எதைக்கூறுகிறதோ, அவைகளுக்கு நேர்மாறாகவே, காரியமாற்றி வரும் கூட்டத்தின் பிடியிலே நாடு சிக்சிக் சீரழிந்து வருகிற இந்த நாளிலே ஜனநாயக முறையிலே இந்தக் காரியம் நடைபெறுகிறதா என்று, எண்ணிப் பார்க்கத் தொடங்குவதுதான் தவறு.

ஜனநாயகம் கூறுகிறது அகில உலகிலும் உள்ள அறிவாளர்களுக்கு நேர்மாறாகவே, காரியமாற்றி வரும் கூட்டத்தின் பிடியிலே நாடு சிக்கிச் சீரழிந்து வருகிற இந்த நாளிலே ஜனநாயக முறையிலே இந்தக் காரியம் நடைபெறுகிறதா என்று, எண்ணிப் பார்க்கத் தொடங்குவதுதான், தவறு.

ஜனநாயகம், கூறுகிறது, அகில உலகிலும் உள்ள அறிவாளர் ஏற்றுக் கொண்டுள்ளனர், ஒரு கட்சிக்கு, சட்டசபையிலே ‘மெஜாரடி‘ கிடைகக்ாவிட்டால், அந்தக் கட்சிக்கு நாடாள உரிமை கிடையாது என்று

இதோ மக்கள் கூறிவிட்டனர், காங்கிரசாட்சி வேண்டாம் என்று.

375 உறுப்பினர் கொண்ட சட்டசபையில்152 பேர் மட்டுமே. காங்கிரஸ்! ஜனநாயம் காங்கிரசுக்கு ஆளும் உரிமையைத் தரவில்லை அரசியல் நாணயம், ஆட்சிக்குக் காங்கிரசுக்கு உரிமை இல்லை என்றே கூறுகிறது – ஆயினும் என்ன – காங்கிரசல்லவா மந்திரிசபை அமைக்கிறது! முறைதானா! - என்று கேட்பீர்கள்! பேட்பர் மக்கள் – கேட்கட்டும்.கேள்வி கேட்கும் மக்கள் கிளம்பினால் ஆட்சிபுரிய கோளக்காதினரை !ஆச்சாரியாருக்குக் காது கேளாது) நியமிக்கிறேன் என்கிறார் இநதிய ஹிட்லர்.

சிறுபான்மையினருக்கு ஆட்சி உரிமை
இதற்குத் தலைமை,அலுத்துப் போன கிழவர்.
இவர், வருவதும், கொல்லைப் புறமாக!

எவ்வளவு இலட்சணமான துவக்கம் – எவ்வளவு விரைவிலே அழிவதற்கு!

கவர்னருக்கு அறிவிக்கப்பட்டது, ஐக்கிய முன்னணியில் காங்கிரஸ் கட்சியிலே இருப்பதைவிட அதிகம்பேர் உள்ளனர் என்று கருப்புக் கிளைவ் இதையா கவனிப்பார்! அவர், அனுப்பப்பட்டது! இதற்கா! ‘பழிபாவம்‘ ஏற்படுமோ, என்ற பயம் போக வேண்டுமென்றுதான் அவர், இங்கே வந்த உடனே அவசர அவரசமாக ராமேஸ்வரம் சென்ற, ‘ஒரு முழுக்கும்‘ போட்டு விட்டு வந்துவிட்டாரே! இனி என்ன அச்சம்! அழைத்தார் ஆச்சாரியாரை! கொல்லைக்கதவு திறந்திருக்கிறது. மெள்ள நுழையுங்கள், என்றார் – அதுவும் சரி, என்று கூறினார் – ஆச்சாரியார் வருகிறார்.

வருவதற்கு முன்பு ஒரு வார்த்தை நேருவைக் கேட்டுப் பாருங்கள். என்றாராம் தூதுவர்கள் சென்று கேட்டனர் – நேரு, சரி என்றாராம்! இவரும் உள்ளே நுழைந்துவிட்டார். நுழையு முன்பு ஒருவிநாடி அவருக்கு நேருவின்மீது கோபம் பிறந்திருக்கும் – அமெரிக்கா – சீனா- ரஷியா – இங்கிலாந்து – இப்படி ஏதேனும் ஓர் சீமைக்கு விசேஷ தூதராக அனுப்பக் கூடாதா நாம் அந்தக் காரியம் எதற்கும் தேவையில்லை என்று நேர எண்ணிவிட்டாரே – என்று சோகித்திருக்கிறார்.

ஆச்சாரியாரின், அனுபவம், முதுமை, இவைகளைக் கவனித்து, அவருக்கு ஓர் உயரிடம்தர வேண்டும் என்று நேர எண்ணியிருந்தால், அவரைக் குடியரசுக்குத் தலைவராக அல்லவா இருக்குமாறு அழைத்திருக்க வேண்டும். ஆச்சாரியார், பாவம், பஜகோவிந்தம் பாடியபடி இருக்கிறார். நேருவோ, பாபுராஜேந்திர பிரசாத்தைத் தலைவராக இருக்க அழைக்கிறார். இந்தக் கோபம், கொல்லைபுற நுழைவாக இருந்தால்கூடப் பரவாயில்லை என்ற அளவுக்கு, ஆச்சாரியார் உள்ளத்திலே ஒருவிதமான நிஷ்காம கர்மியத்தைக் கிளறி இருக்கக்கூடும்.

ஜனநாயத்தைப் பற்றிய நினைப்பை நீக்கிவிட்டே, இன்று இத்தகைய காரியங்கள் நடைபெற்று வருகின்றன.

மக்களால் விரட்டி அடிக்கப்பட்டவர்களைக் கவர்னர்களாக்குகிறார், நேரு, துணிவுடன் – மக்களின் முகத்திலே காரித்துப்புகிறார் – ஜனநாயகத்தைத் துச்சமென்று தூக்கி எறிகிறார்!

நாடு, எதிர்பார்த்தது, ஜனநாயக முறைப்படி இங்கு ஐக்ய முன்னணி ஆட்சிக்கு வரும், என்று

நூற்றுக்கணக்கிலே, நடைபெற்ற பொதுக்கூட்டங்களிலே, முற்போக்குக் கட்சிகள் பலகூடி ஐக்கிய முன்னணி ஆட்சியே வேண்டும் என்று இலட்சக்கணக்கிலே மக்கள் தீர்மானித்தனர்.

அந்த முன்னணி ஒரு வேலைத்திட்டத்தையும், பலமுறை கூடி விரிவா விவாதித்துத் தயாரித்தது.

கள்ளமார்க்கெட்டுக்காரரும் கொள்ளை இலாபமடிப்போனும், மத ஆதிக்கக்காரனும், இலஞ்ச இலாவணக்காரனும், நடுங்கிக் கொண்டிருந்தனர்.

இவர்களை எல்லாம்விட அதிகமான அச்சம் , டில்லி தேவைகளுக்கு ஏற்பட்டது.

கம்யூனிஸ்டு கட்சிக்கும் மற்ற முற்போக்குக் கட்சிகளுக்கும் இடையே தோழமை வளமாகிக் கொண்டு வருவது கண்டு, அமெரிக்காவின் பிடியிலே உள்ள டில்லி அச்சத்தால் தாக்கப்பட்டது.

திராவிடநாடு பிரச்சினைக்குப் பக்கபலம், பல வழிகளாலும் பலதிக்குகளிலிருந்தும், திரள்வதும், இந்த பலம், ஐக்கிய முன்னணி ஆட்சியிலே வலுவடையும் என்பதும், வடநாட்டு வியாபாரக் கோமான்களுக்குத் தெரிந்தது – திகில் பிறந்தது.

எனவே, ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்க அனுபவமிக்க ஒரு காங்கிரஸ்காரரைக் கவர்னராக்கினர் – அவர் ஆச்சாரியாரைத் துணைக்கு அழைத்துக் கொண்டார்!

ஆச்சாரியார் வருகிறார், இனி, அரசியல் நெருக்கடி இராது என்கிறார்கள் அடிவருடிகள் அதன் பொருள் இதுதான் மக்களின் விரோதிகளுக்கு உயிர் பிச்சை தருகிறோம், என்கிறது பாசீசம்.

ஆச்சாரியார், தலைமையை ஏற்றுக் கொண்டதும், வியாபார உலகு பூரிப்பும் நம்பிக்கையும் கொண்டது என்ற செய்தி, எல்லா இதழ்களிலும் வெளிவந்ததன் பொருளும் இதுதான்.

எனவே, ஆச்சாரியார் வருகிறார், என்றால் முற்போக்கு இயக்கங்களை நொறுக்க அடக்குமுறை வருகிறது என்றுதான் பொருள்.

அதிலே ஆச்சாரியார் அபாரமான திறமை கொண்டவருங்கூட.

தாய்மார்களை எல்லாம், கைக்குழந்தைகளுடன், இந்தி எதிர்ப்பின்போது, சிறையில் தள்ளிய ஈரநெஞ்சினர், வருகிறார்.

தாளமுத்து நடராஜனைப் பிணமாக்கித் தந்தவர், வருகிறார்.

பெரியாரைப் பல்லாரி சிறையிலே தள்ளி, பெல்லாரியின் கடுமையான உஷ்ணம் உடம்புக்கு நல்லது என்று சட்ட சபையிலே கேலி பேசிய, கண்ணியர் வருகிறார்.

கிரிமினர் சீர்திருத்தச் சட்டத்தை உபயோகிப்பது முறையா என்று கேட்டதற்கு, கையில் கிடைத்ததைக் கொண்டு அடிப்பேன் என்று மிரட்டிப்பேசிய மேதை வருகிறார்.

சட்டசபையிலே எதிர்க்கட்சியின் சார்பிலே கூறப்ப்டும், வாதங்களைத் துளியாவது கவனிக்கலாகாதா என்று கேட்டால், எனக்கு ஒரு காது கேளாகாது, அதைத்தான் அந்தப் பக்கம் திருப்புகிறேன் என்று நையாண்டி பேசியவர் வருகிறார்!

குட்டிக்கதைகள் கூறி, மக்களிடையே குழப்ப மனதைக் கிளரும், புராணிகள் வருகிறார்.

தொழிலாளர் இயக்கத்தைத் தாக்குவதிலே, திறமை மிக்கவர் வருகிறார்.

வைதீகர்கள், என் சதை என் இரத்தம் என்று பாசத்தோடு அழைத்த ‘பூஜாரி’ வருகிறார்!

பாகிஸ்தானைப் பலமாகக் கண்டித்த சூரர் வருகிறார்.

நாட்டுக்காக சொல்லொணாக் கஷ்ட நஷ்டத்தைப் புன்னகையுடன் ஏற்ற, சுபாஷ் சந்திரபோசை, ‘ஓட்டைப்படகு‘ என்றுகேலி பேசிய உத்தமர் வருகிறார்.

சமதர்மத் தோழர்களின் பிரச்சாரத்தைக் கண்டு கோபங்கொண்டு ‘சோற்றுக்கில்லாதார் பிரச்சாரம்‘ என்று ஜார்மொழி பேசிய சீலர் வருகிறார்.

அடக்குமுறை வீசத் தெரிந்தவர் பாமரரை மயக்கும் வித்தை அறிந்தவர்,பக்தி வேடமணிந்து மூடத்தனத்தை வளர்க்கும் ஆழமான உள்ளம் படைத்தவர் ஆள வருகிறார்.

அச்சமூட்டுவதாக அல்லவா இருக்கிறது. என்று எண்ணுவீர்கள், இல்லை இல்லை மேலும், கவனியுங்கள்.

ஆகஸ்ட் இயக்கத்திலே கலந்து கொள்ள மறுத்து, கலந்து கொண்ட காங்கிரசாரையும் கேலி பேசியவர் ஆச்சாரியார்.

அதன் பயனாக சென்றவிடமெல்லாம் வெறுப்பைக் கண்டு, மிரண்டவர் ஆச்சாரியார்.

காமராஜரிடம் கைவரிசை காட்டி கலங்கிக் கதறி, கல்கி புதிய இதழ் துவக்கியும் பயல்காணாது, பாரத காலட்சேபம் செய்யப்போகிறேன் என்று கூறி, முக்காடிட்டு ஏகிய, முதியவர், ஆச்சாரியார்.

கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கு, பய்னபடுமா என்ற சபலம் கொண்டு பொன்மலை ரயில்வே தொழிலாளர் மாநாட்டிலே கலந்து கொண்டு, ‘பொது உடைமை‘ பேசியவர், ஆச்சாரியார்.

ஆந்திரப் பிரிவினைக்கு அடியிலே பள்ளம் வெட்டி, அது தெரிந்த ஆந்திரர்கள், அவரைக் கண்ட இடத்திலெல்லாம் ஓட ஓட விரட்டி, ஓடி ஒளிந்த வீரர் வருகிறார்.

ஜனாப் ஜின்னாவின் ஒப்பற்ற அறிவாற்றலின் முன்பு, எதிர்ப்புகள் சரிவதுகண்டு காங்கிரஸ் தீர்மானிப்பதற்கு முன்பே, பாகிஸ்தான் கொடுக்கத்தான வேண்டும் என்று கூறி, லீகுக்குப் பீஸ்வாங்காத வக்கீலாக வேலைப்பார்த்தவர் ஆச்சாரியார்.

வீம்புடனும், வீறாப்புடனும் இந்தி எதிர்ப்பாளர்களை ஏசிவிட்டு, அவர்களின் சக்தி ஓங்கி வளரக் கண்டு புற்றிலிருந்து ஈசல் கிளம்புவது போலக் கிளம்புகிறார்களே என்று புலம்பியவர், ஆச்சாரியார்.

பதவிக்காலம் முடிய வீற்றிருக்க முடியாமல், பாதியிலே ஓடியவர் ஆச்சாரியார்!

அவர்தான் மீண்டும் வருகிறார்! தொட்டதுதுலங்காது – அவருடைய ஆற்றல் அது! கெஞ்சினால் மிஞ்சுவார், மிஞ்சினால் கெஞ்சுவார் – அவருடைய சுபாவம் அது.

திராவிடர்கள் மீது மோதி, அதன் ‘சுகம்‘ கண்டவர் ஆச்சாரியார்.

அவருடைய போக்கும் முறையும், நமக்குப் புதியதுமல்ல, அவைகளைச் சமாளிப்பது நமது ஆற்றலுக்கு அப்பாற்பட்டதுமல்ல.

அவரும் நாமும் முன்பு ஒரு முறை களத்திலே சந்தித்திருக்கிறோம் வடுக்கள் நமக்கு – தோல்வி அவருக்கு – இதனை அவருடைய அடிவருடிகள் அறியமாட்டார்கள் – அவர் மறுக்கமாட்டார்.

அப்போது, அவருக்கு இருந்த ‘கட்சிபலம்‘ ஜெர்மன் ரீஷ்டாக்கில், ஹிட்லருக்கு இருந்ததுபோல! எல்லாம் கதர்மயம் ஜெகத் – அப்போது இப்போது! அவருடைய வாக்கியப்படி விநாடிக்கு விநாடி வாழ்வுக்காகப் போராடவேண்டிய நிலையில் காங்கிரஸ் கட்சி.

இன்று ஆளவந்திருக்கும் காங்கிரஸ் கட்சி, பாங்கியில் பணம் இல்லாதவன் தரும் ‘செக்‘ போன்றது.

ஐக்கிய முன்னணிக்கு இனித்தான் வேலை மும்முரமாக இருக்கிறது முற்போக்காளரின் கூட்டணிக்கு இனி மும்முரமாக வேலை இருக்கிறது.

ஜனநாயகம் சித்ரவதை செய்யப்பட்டதை நாடு அறியச் செய்ய வேண்டிய பெரும்பணி இருக்கிறது.

மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை உலகு அறியச் செய்ய வேண்டும்.

அடக்குமுறைகளை ஆச்சாரியார் வீசத்தான் செய்வார் – தாங்கிக் கொள்ளும் சக்தி நமக்கு உண்டு, என்பதைத் தரணி அறியச் செய்ய வேண்டும்.

ஆச்சாரியார் ஆட்சியை ஒழித்துக்கட்ட, நம்மிடம் உள்ள ஆற்றலைத் திரட்டிக் காட்டவேண்டும்.

ஆச்சாரியார் வருகிறார், ஆண்மையாளர்களை அறைகூவி அழைக்கிறார்! ஓட்டளித்த பல இலட்சக்கணக்கான மக்களின் எண்ணத்தில் மண்ணைத் தூவிவிட்டு, ஆச்சாரியார் ஆட்சிப்பீடம் ஏறுகிறார்.

கொடுமைகளை அவித்துவிட, ஆச்சாரியார் தயங்கமாட்டார்! விழிப்பற்ற ஜனநாயகத்தைக் கண்டால் பாசீசம், பாய்ந்து கடிக்கத்தான் செய்யும் – ஆனால் அத்தகைய போராட்டங்களிலே, பாசீசம் வெற்றிபெற்றதாக வரலாறு கூறவில்லை. பாசீசத்தை வெற்றிபெற விடமாட்டோம்.

அவர்கள் மிகப் பலர், நாம் மிகச் சிலர் – முன்பு!

இப்போது அவர்கள் மிகச் சிலர் – நாம் மிகப் பலர்! மக்கள், நமது முகாமில் நமது மனதினை யாருக்கும் நாம் அடகு வைத்துவிடவில்லை நமக்கோ, நமது இயக்கத்தை நம்பிக் கொண்டிருக்கும் ஏழை மக்களுக்கோ, வாழ்வுக்கும் சாவுக்கும் வித்யாசம் கிடையாது எனவே, ஆச்சாரியார் ஆட்சியிலே ஏற்படக்கூடிய, எத்தகைய அடக்குமுறைக்கும் நாம் யாரும் களைத்துவிடப் போவதில்லை.

நாடு, நமது குரலைச் சரிவரக் கேட்கமுடியாதபடி தேசீய சந்தடி மிகுந்திருந்தபோதே, நாம் ஆச்சாரியாரை சந்தித்திருக்கிறோம் – உருகி உடல் கருகி உள்ளீரல்பற்றி எரியும் நோய்பிடித்த நிலையில் உள்ள காங்கிரசுக்குத் தலைமை பூண்டு இன்றுவரும் ஆச்சாரியாரின் ஆட்சியை ஒழித்துக் கட்டுவது, முயன்றால், எளிதானதுதான் – சந்தேகம் வேண்டாம்.

ஆச்சாரியார் வருகிறார் – பஞ்சம் பரவுகிறது!

ஆச்சாரியார் வருகிறார் – கம்யூனிஸ்டு – முற்போக்காளர் கூட்டுறவு வளருகிறது!

ஆச்சாரியார் வருகிறார் – திராவிட இன எழுசசி வீறுகொண்டு எழுகிறது.

ஆச்சாரியார் வருகிறார் – திராவிடநாடு திராவிடருக்கே ஆகப்போகிறது. எனவே, தயாராகுங்கள், இருள் கப்பிக் கொள்கிறது, விடிவெள்ளி காணப்போகிறீர்கள் என்று கூறுகிறோம். திராவிட முன்னேற்றக் கழகம், அக்ரமமான முறையிலே அமைக்கப்படும் ஆச்சாரியார் மந்திரிசபையை மக்களின் விரோதி என்றே தீர்மானிக்கிறது. இதனை மாற்றி அமைக்க, எந்த முற்போக்காளர் தீட்டும் திட்டமும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவைப் பெறும், என்று உறுதி கூறுகிறோம்.

நாடாள வருகிறார், ஆச்சாரியார்!

நாட்டினரே! திராவிட நாடு திராவிடருக்கே என்ற முழக்கம் திக்கெட்டும் கேட்கட்டும், கோளக்காதையும துளைத்துக் கொண்டு செல்லுமளவுக்கு, மக்களின் எழுச்சிக் குரல் ஓங்கட்டும் வாழ்க ஜனநாயகம்! ஒழிக பாசீசம்!

திராவிட நாடு – 6-4-52