அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஆச்சாரியரின் குட்டு வெளிப்பட்டது
“இந்தி தெரியாதவர்கள் எத்தனை பேர்?” என்று கேட்டார். காந்தியார், இந்துஸ்தானிநகரில் ஒருவரும் கை தூக்கவில்லை. அப்படி என்றால் அனைவரும் இந்தி தெரிந்தவர்கள் என்று பொருளா? இல்லை! காந்தியார் அந்தக் கேள்வியைக் கேட்டதே இந்தி மொழியில்! அது யாருக்கும் தெரியாது, எனவே என்ன கேட்கிறார் என்பது தெரியாமல் அனைவரும் சும்மா இருந்தனர். பிறகு அவருடைய கேள்வி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. அப்போதுதான் பெருவாரியானவர்கள் கைகளை உயர்த்தினராம்.

வெட்கப்பட வேண்டாம் என்று ஆறுதல் கூறினராம் காந்தியார், பிறகு ஆச்சாரியார் விஷயத்தைச் சந்திக்கு இழுத்துவிட்டாராம். இந்தியிலே பேசினால் உங்களுக்குப் புரியாததிலே என்ன ஆச்சரியம் இருக்கிறது! ஆச்சாரியருக்கே இந்தியிலே பேசினால் புரியவில்லை. ஆகவே முதல் குற்றவாளி அவர். இங்கே தமிழ்பேசுகிறார், வெளி மாகாணங்களிலே இங்கிலீஷில் பேசுகிறார். இந்தியில் பேசத் தெரியவில்லை என்றார் காந்தியார்.

ஆச்சாரியாரின் குட்டு உடைப்பட்டதுகூட அல்ல வேடிக்கை, இந்தியைக் கட்டாய பாடமாக்கும் அளவு அந்த மொழியிடம் அக்கரை கொண்டு, பல ஆண்டுகள் படித்து வடநாட்டுத் தொடர்பு வைத்துக்கொண்டு, அடிக்கடி வடநாடு போய்வருபவரும். காந்தியாரின் சம்பந்தியாகிவிட்ட வருமான ஆச்சாரியாராலேயே இவ்வளவு பகிய பிறகும் இந்தியிலே பேச முடியவில்லை, பிறர் பேசினால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், மற்றவர் கதை என்னாகும்? இதிலிருந்து இந்தியின் குட்டல்லவா வெளிப்படுகிறது. பெண்கொடுத்தவரே இந்தி பேசாமலேயே வடநாட்டுக்குப் போவதும் வருவதுமாக இருக்க முடிகிறது என்றால், வாழ்விலே ஒருநாளோ இருநாளோ போய்வருவோமா வடநாட்டுக்கு என்பதே சந்தேகமாக இருக்கும் நிலையிலுள்ள திராவிட மக்களுக்கு இந்தி எதற்கு?
(திராவிட நாடு 27-1-46)