அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஆள் மயக்கியும் அன்னதானமும்

தாய், சப்ரமஞ்சக் கூடத்தில்! தனயனோ, எச்சிலை பொறுக்கும் நிலையில்!! - இந்தக் காட்சியைக் கண்ட ஊரார். ஏசினார் – பேசினர்.

சிங்காரமாக வாழ்கிறாள்! சின்னஞ்சிறுசு அலைகிறான்!! என்றனர்.

அவளோ, கண்வீச்சுக் காட்டுவதும், காளையரை இழுப்பதும், காசு தந்து குலாவுவதுமாகக் காலத்தைக் கழித்தாள் ஓயாமடமாகியிருந்தது, அவள் மாளிகை! மகனோ, ‘ஒரு சோறு‘ கிடைக்காதாவென அலைந்து கிடந்தான்!

ஊராரின் பேச்சு, ஓரிருவர் மூலம் காதுக்கு எட்டிற்று அழகான காரையெடுத்துக் கொண்டு, அதில் ஒரு ஒலி பெருக்கியைப் பொருத்திக் கொண்டு, கடைத்தெருவில் திரிந்த பையனை இழுத்துக் காரில் போட்டுக் கொண்டு காலணாவுக்குக் கடலை வாங்கிக் கொடுத்து, ஊரார் நிற்குமிடமெல்லாம் சென்று, ஊராரே! உளறாதீர், இதோ பாரீர், என் மகனை நான் சீராட்டி வளர்ப்பதை, எனக்குள் அன்பினைத் தெரிந்து கொள்வீர்!“ என்று ஒலிபெருக்கி மூலம் அறிவித்துச் சென்றாள், அந்தத் தாய் என்று கேட்டல், என்னவென்றுரைப்பீர் அவளை? பதில் கூற வேண்டாம் – எனெனில், அந்தளவுக்கு வேகமுமம் ஆத்திரமும் கலந்த வார்த்தைகளே, வெளிவரும், அந்தத் தாயெனும், ‘பேய் மீது வீச!!

இழி குணத்தை விளம்பரத்தால் மறைக்க நினைக்கும், தாயின் நிலையில், சிலர் நடமாடத் துவங்கியிருக்கிறார்கள் – நாட்டில்.

அந்த ஒரு சிலர், வீதியில் அலையும் மக்களின் ‘மாதாக்களாக‘யிருக்க வேண்டியவர்கள் – மக்களைக் காமக் குரோதாதிகளுக்கு இரையாகாமற் தடுத்து மகேசுவரனின் பாதார விந்தங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டியவர்கள்.

அவர்கள் இன்று, உலகோரின் கண்களில் தங்களை உத்தமர்களென்று காட்டிக் கொள்ள வேண்டியவர்களாகி யிருக்கிறார்கள்.

உல்லாசபுரியின் ஒய்யாரப் புருஷர்களாக வாழ்கிறார்களே, அந்த மடாதிபதிகளை – ஆதீனத்துத் தம்பிரான் களைத்தான் – அறிமுகப்படுத்த விரும்புகிறோம்.

இறைவனாம் எம்பெருமானுக்கும் அவரது குழந்தைகளாம் மக்களுக்குமிடையில், ‘தொடர்பு‘ ஏற்படுத்தி வைக்க வேண்டியவர்கள், இவர்கள். சுருங்கச் சொன்னால், இகலோக இச்சைகளில் உழலும் குழந்தைகளை, சாயுச்ய பதவிக்கு அழைத்தேக வேண்டிய அன்னையின் பொறுப்பிலிருப்பவர்கள்.

இந்த அன்னைகள், ‘ஒலிபெருக்கி‘ தேடி, தமக்கு மக்கள் பாலுள்ள அன்பை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்துக்கு வந்திருக்கிறார்கள்.

ஆதீனத்தரசே! அருமருந்தே! என்று துதிபாடப்பலரும், ‘அடங்காதவனை இழுத்துவா! அரிவாளால் பதில் சொல்!‘ என்று அடக்கியொடுக்கப் பல அடியாட்களுமாகச் சூழ்ந்து நிற்க, அரசியல் தர்பார்கள் ஆரத்தியெடுக்கவும், அறிஞர் குழாம் காலடி பணியவுமான நேத்ரானந்தக் காட்சியில் திளைத்துக் கிடந்த மடாதிபதிகள், ‘தமக்கும் மக்களுக்கும்‘ இடையேயுள்ள நெருக்கத்தை விளம்பரப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டத்துக்கு வந்திருப்பது எதனால்? யாரால்? என்பதை நாடு அறியும்.

தமது தர்பார் கண்டு, வெதும்பி உள்ளம் நைந்து போனோரின் வெறுப்புக் கண்கள் தம்மீது பதியத் துவங்கிவிட்டன. அரனைக் காட்டினாலும், அறநீதிகளை எடுத்துரைத்தாலும், அவர்தம் ஆத்திரத்தைக் குறைக்க இயலாது, உலகோரும் அவர் பக்கம் ஆதரவாக நிற்பரேயன்றி நமக்கு உதவ முன்வரார். ஏனெனில் அந்தளவுக்கு நமது அட்டகாசத் தர்பாரின் காட்சிகள் எல்லோரையும் அருவருக்கச் செய்துவிட்டன என்று அறிந்ததும், தலைப்பில் குறிப்பிட்ட தாய் போலக் கிளம்பியிருக்கின்றனர் – மக்களைத் தேடிப்பிடித்து அவர்களுக்குதவ.

இப்படிக் கிளம்பியிருப்பதன் விளைவாகத்தான் இது போது பற்பலச் செய்திகளை நாம் கேள்விப்பட நேருகிறது.

இந்த மடாதிபதி, தமிழ் வளர்ச்சிக்காக இவ்வளவு கொடுத்தார்!

அவர் விமானமேறிச் சென்று இலங்கையில் சொன்மாரி பொழிந்தார்.

இவ்வளவு பேருக்கு இந்த தேதியில், அன்னதான மளிக்கப்பட்டது என்பது போன்ற நிகழ்ச்சிகளைக் கேள்விப்படுகிறோம்.

இவ்வித நன்மைகளைத் தாம் செய்வது, உலகோருக்கு எடுத்துரைக்கப்பட வேண்டுமல்லவா அதற்கென்று பல ‘ஒலி பெருக்கிகளையும்‘ இவர்கள் வாடகைக்கு அமர்த்திக் கொள்ளுகிறார்கள்.

அதனை விளக்க, இதோ, ஒரு நிகழ்ச்சி – நடைபெற்ற இடம் – குடந்தை தேதி – ஜுன் 13.

‘அன்னதான சிவன் விழா‘ திருப்பனந்தாள் காசிமடம் இளவரசு, ஸ்ரீமத் காசிவாசி மகாலிங்கம் தம்பிரான் சுவாமிகள் துவக்கி வைத்தார். ‘தருமம் தலைகாக்கும்‘ – என்பதுபற்றி தேவராஜன் பேசினார்.

பசிப்பிணி மருத்துவம் – எனும் பொருள் குறித்து டி.பி.மீனாட்சி சுந்தரம்பிள்ளை ஹாஸ்யம் ததும்பப் பேசினார்.

அன்னதான வள்ளல்கள் – எனும் தலைப்பில் கலைமகள் ஆசிரியர் கி.வா. ஜகந்நாதன் பேசினார்.

பசி தீர்த்தல் – என்பது பற்றி மு.சுந்தசேம் பிள்ளையும், அன்னதானத்தின் பெருமை குறித்து சிவாஜி ஆசிரியர் திருலோகசீதாராமும் பேசினார்.

பெருந்தொண்டு பற்றி எம்.ஆர். இந்திராவும், உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரோ என்பது பற்றி குகப்பிரியையும் சொற்பொழிவாற்றினார்.

ஹரிதா காலட்சேபங்கள் நடைபெற்றன.

சுமார் 12,000 பேருக்கு அன்னதானம் செய்யப்பட்டது.

அன்னதானம், செய்யப்பட்டது – அதற்கென ஒரு விழா நடைபெற்றது – துவக்கி வைத்தவர் ஒரு தம்பிரான் – பல ‘ஒலி பெருக்கிகள்‘ முழங்கியிருக்கின்றன.

ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது குறித்து, இதுபோன்ற செய்திகளை, அடிக்கடி கேள்விப்படுகிறோம்.

இந்த அன்னதான விழாக்களைக் குறித்து, ‘கல்வி‘ அடிக்கடி பாராட்டி எழுதுகிறது.

அன்னதானத்தைக் காணும் எவதும், ‘ஆகா! எவ்வளவு நற்பணி தருமம் தலைகாக்குமென்கிற மூத்தோர் வாக்கை யுணர்ந்து உண்டி கொடுத்தோரே உயிர்கொடுத்தோர் என்னும் மூதுரையை உணர்ந்து எத்தனை ஏழைகளுக்கு உணவளித்தார்கள்?‘ என்றே நினைப்பர்.

சிறிது சிந்தித்துப் பார்த்தால், செந்தேள் கொட்டுவது போலிருக்கும்.

அன்னதான விழா!

பல பிரசங்கங்கள்!

மீனாட்சி சுந்தரனார், ஹாஸ்யம் ததும்பப் பேசினார்!

ஹரிகதா காலட்சேபமும் நடந்தது.

என்ன பொருள் இதற்கு? ஏழைகளின் பாலுள்ள இரக்கத்தின் விளைவென்று பேதையும் கூறான். ஆயிரக் கணக்கானோருக்கு அன்னமிட்டனரென்றால், எப்போதுமா, சோறுபோட்டு உபசரிக்கிறார்கள். இல்லை! என்றோ, ஒருநாள் அதுவும், ஏழைகளின் வறுமைப் புயலைத் தீர்க்கும் ஆவலிலா? அல்ல! அல்ல!! ஒருவேளை சோறுபோட்டுவிடுவதால், அவர்களது வாழ்க்கைப் பிரச்னை, தீர்ந்துவிட முடியாது. பிறகு, எதற்கு? – குழந்தையின் கையில் ‘காலணாவுக்கு‘க் கடலை வாங்கித் தந்தாளே, தாய்! அவளை நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்!

நாட்டில் நஞ்செய் இருக்கிறது – ஆனால், அவையாவும் நஞ்சு மனம் கொண்டோர் வசம் சிக்கிக் கிடக்கிறது. அந்த நஞ்சு மனம் கொண்டோர் கூட்டத்தில், ஜடாமுடிதாரிகளும் இருக்கிறார்கள் – முடிசூடா வேந்தர்களும் இருக்கிறார்கள். அவர்கள் உண்டு கொழுக்கவும், அவர்கள் சுகமெத்தைக்கு யார் காரணமென்பதையும், உலகு அறிந்து கொள்ள ஆரம்பித்து விட்டது! ஆகவே, ‘மக்களைப் புரக்க வேண்டிய மாதாக்களாயிருக்க வேண்டிய மடாதிபதிகள், தங்கள் மீது வீசப்படும் பழிச்சொல்லினின்றும் பாதுகாப்பு தேட முற்பட்டிருக்கிறார்கள் – அதன் விளைவுதான் அன்னதான விழாக்கள்! அங்கேயொரு நன்மை – இங்கேயொரு நன்மை என்ற செய்திகள் வருவது! தர்மம் செய்தார்களாம்! ஏழைகளுக்கு அன்னதானம் அளிக்கப்பட்டதாம்! - பெருமைக்குரிய விஷயமென்று தேசீய ஏடுகள் தெந்தினா பாடுகின்றன! என்னென்னவோ பேசுகிறீர்களே! பார்த்தீர்களா, எமது ஆண்டவர் பக்தர்களின் அன்புப் பெருக்கை!‘ என்று நம் போன்றாருக்குச் சவால் விடுப்பதுபோல.

இதுவா, அவர்களுக்கு மக்கள்பாலும், நாட்டின்பாலும் வந்திருக்கிற அன்புக்கு எடுத்துக்காட்டு? ஆயிரம் ஆயிரமாக ஒருவேளைச் சோற்றுக்கு அலறியடித்து வரும் ஏழைகள் உருவானது யாரால்? மக்களையெல்லாம் படைத்த ஈசனாம் தந்தையின் சொத்தை, இவர்கள் தமக்குடையதாக ஒதுக்கி வைத்துக் கொண்டதால்தான்! அண்டசராசரங்களையும் ஆற்றையும் நிலதையும், சோலையையும் ஆண்டவன், தன் குழந்தைகளுக்காகத்தானே உண்டாக்கினான்? அவையேன், அவனது குழந்தைகளுக்குப் பயன்படாமல் போயின! மடத்துக் களஞ்சியத்தில் மூட்டையாக நிரம்பின! மடாதிபதியின் மார்பிலும் கையிலும் வைரங்களாக உருமாறின! - இதனை, எவரும் சிந்தனை செய்யார் எனும் எண்ணம் போலும், இவர்களுக்கு.

பெருமிதமாகப் பேசினராம் – அன்னதானத்தின் சிறப்பு குறித்து ஒருவன் கொடுக்கவும் மற்றொருவன் கையேந்தி வாங்கவுமான நிலைமையா ஒரு நாட்டின் செழிப்புக்கு உதாரணம்? அன்னதானம் செய்தார்களாம், ஏழைகளுக்கு, ஏழைகள், எங்கே இருந்து உற்பத்தியானார்கள்? ஆண்டவனே ஏழைகளைப் படைத்தாரா – நமது சிஷ்யர்கள் தானம் செய்வார்கள், அதனைப் பெற ஏழைகள் என்பாரும் பூலோகத்திலிருக்க வேண்டுமென்று!

‘ஆம்‘ எனக் கூறுவரா, அன்னதானிகள்.

அன்னதானம் அல்ல, மக்களின்பால் இவர்களுக்கேற்பட்டிருக்கும் அன்பைக் காட்டும் அளவுகோல்.

அவரவர்களுக்கென குவிந்து கிடக்கும் சொத்துக்களை கையேந்தி வரும் ஏழைகளுக்கெனத் தந்த வீட்டு, ‘கந்தா! கடம்பா! கச்சியேகம்பா! காமாட்சி! சுந்தரா! என்ற கிளம்பிட வேண்டும் – இதுபோது கானகங்களில்லாததால் – ஆங்காங்கே இருக்கும் அரசமரத்டியையோ, ஆற்றங்கரையையோ நோக்கி! அதுதான் ஆண்டவன்பால், அவர்களுக்கிருக்கும் பக்தியையும், மக்கள்பால் மலர்ந்த அன்பையும் எடுத்துக்காட்டும் அளவு கோலாகும்.

அதனை விடுத்து, அன்னதானம் செய்வதும், அதனை விளக்க ‘ஒலி பெருக்கி‘களை அமைப்பதும் சப்ரகூடமஞ்சத்து சல்லாபக் கேளிக்கைகளை மறைக்க முயன்றாளே இழிகுணம் படைத்தாள், அவளையே ஒக்கும். இதனை, அன்னதானிகள், உணரவேண்டும்! அன்னதானமல்ல, வேண்டியது! நல்லெண்ணதானம்!!

திராவிட நாடு – 21-6-53