அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்



ஆள் தேவை!
எண்ணிக்கை:-
எத்தனை ஆயிரம் ஆட்கள் கிடைத்தாலும் வேலை தரப்படும்

யோக்யதாம்சம்:- அக்கம்பக்கம் பார்த்து, அரவம் கேட்டதும் பதுங்கி, ஆளில்லாச் சமயத்திலே சுறுசுறுப்பாக வேலை செய்யும் திறமையும் அனுபவமும் வாய்ந்த வாலிபர்கள் தேவை. தமிழ் எழுதத் தெரிந்தால் போதும்.

வேலை நேரம்:-
ஊர் அடங்கியதும் ஆரம்பம், கோழி கூவியதும் முடியும்.

ஓய்வு நேரம்:-
காலடிச்சத்தமோ, யாரடா அது என்ற குரலோ கேட்கும்போதெல்லாம் ஒய்வு எடுத்துக்கொள்ளலாம்.

கருவி:- வேலைக்குக் கரித்துண்டு இருந்தால் போதும்.

கூலி:-
தற்போது கைச்செலவுக்கு மட்டுமே தரப்படும். கம்பெனி தயாரிக்கும் சரக்கு இலாபத்துக்கு விற்றால், பிறகு தாராளமாகக் கூலி தரப்படுவதோடு, புதிய வேலையும் தரப்படும்.

மனு அனுப்புமிடம்:-
ஆச்சாரியார் அன்கோ, மாம்பலம், சென்னை.
பரதா! இது என்ன விளம்பரமப்பா? ஆச்சாரியார் கம்பெனியா? அதற்கு ஆட்களா? அவர்களுக்குக் கரித்துண்டு கருவியா, கருக்கலிலே வேலையா? காலடிக்கு ஓய்வா? இது என்ன கதை! என்ன விளம்பரம்! என்று கேட்கும் தோழரகளுக்குக் கூறுகிறான், உண்மையிலேயே, பலருக்கு வழிவகை கிடைக்கட்டுமே என்ற நல்லெண்ணத்துடனே, விவேகமுள்ள ஒரு நிபுணர் சமயம் பார்த்துத் துவக்கும் கம்பெனியை உங்கட்கு அறிமுகப்படுத்துகிறேன், நகைச்சுவைக்கல்ல! உங்களுக்கு வேறு வேலைகள் இருக்கும், இந்தப்புதிய கம்பெனிக்குத் தேவையான அனுபவமும இராது, எனவே உங்கட்கு இந்த விளம்பரம் பயன் தராதிருக்கலாம். ஆனால், பாவம் பலபேர் இருக்கிறார்கள், இச்சமயம் தவறினால் மறுசமயம் வாய்ப்பதரிது என்ற நிலையிலே. அவர்களுக்காகவே நான் ஆச்சாரியார் கம்பெனியைப் பற்றிச் சில விளக்கம் தெரிவிக்கிறேன், நான் கூறுவது போதவில்லையென்றால், மேலும் தகவல் தெரிந்துகொள்ள ஜனாப் அல்லாபிச்சை என்ற விலாசத்துக்க எழுதிக் கேளுங்கள். விளங்கக்கூற வேண்டுமா, சரி கேளுங்கள் தோழர்களே! நீங்கள் (நானுந்தான்) ஆச்சாரியாருக்கு மூப்பு மேலிட்டுவிட்டது, முறுக்குத் தளர்ந்துவிட்டது, சலிப்பு மிகுந்துவிட்டது, சங்கடம் வளர்ந்துவிட்டது, வேலை குறைந்துவிட்டது, மாலைக்காலமும் மறைந்துவிட்டது, இனி அவரால் ஒன்றுமாகாது, காலியான எரிமலைபோல், வரண்டுவிட்ட நீர்நிலைபோல் சருகான வாழைபோல், சாறற்றுப் போய்விட்டார் என்று எண்டிணனோம். துப்பாக்கியிலே தோட்டா இல்லை என்று நினைத்தோம். இவ்வளவும் பொய், எனக்கா புத்தி துட்சண்யம் இல்லை, இதோ பார் என் சமர்த்தை, என்று கூறுவதுபோலப், பலமான மக்கமேளத்தோடு, விமரிசையாக ஒரு புதிய கம்பெனியைத் துவக்கியிருக்கிறார், வேலைக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் செய்தும் இருக்கிறார், ஜரூராக நடத்தப்போகிறோம் இந்தக் கம்பெனியை!

ஆச்சாரியார் ஆரம்பித்த கம்பெனிகள் அனந்தமாயிற்றே, தொட்டது துலங்காததால் தானே, தொள்ளாயிரம் ஆரம்பிக்கிறார், அவருடைய கம்பெனியிலே வேலைக்கு அமர்ந்தால், நல்லதா, என்ற என்னைக் கேட்டுப் பயனில்லை. அவரையே கேட்டுப் பாருங்கள்.

என்ன கம்பெனி? அதற்குக் கரித்துண்டு கருவியா? என்னய்யா வேடிக்கை, என்று கேட்குமுன், நானே கூறுகிறேன் நண்பர்களே, வல்லவனுக்குப் புல்லும் ஆயுதமாமே, அதுபோலக் கரித்துண்டு போதுமாம், இந்தக் கம்பெனி ஆட்களுக்கு! வேலை நேரத்தைப் பற்றிநான் தந்துள்ள குறிப்பு, உங்கட்குக் கொஞ்சம் சந்தேகத்தை உண்டாக்கக் கூடும். ஊரடங்கிக் கோழி கூவுமுன், காலடிச்சத்தம் கேட்டால் ஓய்வெடுத்து, சற்றுமுற்றும் பார்த்து வேலை செய்வது என்றால் உங்களின் சூட்சமத்தை உபயோகப்படுத்தி, ஓஹோ! கன்னக்கோல் வேலையா? என்று கேட்காதீர்கள். பஞ்சமா பாதகத்திலே ஒன்றான கனவினைத் தூண்டுவாரா, சக்கரவர்த்தி ராசகோபாலாக்காரியார்! கள்ளர்களை அவர் கூப்பிடவில்லை! வாஞ்சனையுடன், அன்று இராமன் வானர வேனையை வாத்சல்யத்துடன் அழைத்ததுபோல.

அதசரி, பரதா! அரசியல் நேருக்கடியைத் துர்க்க அல்லும் பகலும் பாடுபட்டு, அசுவத்தைத் தேடிக்கொண்டு அரசாங்கத்தாரை அறைகூவி அழைத்துக் கொண்டு, ஆகாகான் அரண்மனைக் கதவிகளைத் நிறக்கத் திருப்பாசுரம் பாடித்திருத்தாளம் போட்டுத் திருத்துழாய் மாலை குலுங்கத் திருத்தாண்டவம் புரிந்து கொண்டு, பாகிஸ்தானை ஆதரிக்கவும் லீகுக்கு லாலி பாடவும், ஜனாப் ஜின்னாவின் புகழ்பற்றி ஜாவளி அமைத்தும், வெளிநாட்து தலைவர்களுக்கு மகஜர் விடுத்தும், தேசிய சர்க்காருக்குத் தவங்கிடந்தும் வந்தாரே, அதே வேலையை விட்டு விட்டு, வேறு கம்பெனி துவங்கிய காரணம் என்ன! என்று கேட்பீரேல், நான் என்ன பதில் கூறுவது தோழர்களே! எட்டடிக் குச்சுக்குள்ளே, முருகய்ய, எத்தனைநாள் இருப்பேன், என்ற தெம்மாங்குபோல, எத்தனை தடவைதான் அவர் புதிய டில்லிக்கும் அலகாபாத்துக்கும், பம்பாய்க்கும்விம்லாவுக்கும், கால்கடுக்கச் செல்வார், குரல் கடுக்கக் கூவுவார், கைவலிக்க எழுதுவார், பாவம், உழைத்து ஒரு பலனைக் கானோமே என்று சலித்திருந்த சமயத்திலே, சரியானதோர் சமயம் வாய்த்தது, அவருக்கு வேலை கிடைத்தது, நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வயகம் என்று மற்றவரையும் அழைக்கிறார்.

சாமான்யமானதல்ல சார்! நேசநாடுகள் அச்சுநாட்டுக் கொட்டத்தை அடக்கும் போரை எவ்வளவு முக்கியமானது என்று கருதுகின்றனரோ, அவ்வளவு முக்கியமானது நான் ஆரம்பிக்கம் இந்தக் காரியம் என்று, கம்பெனியின் துவக்கவிழாவிலேயே வறிவிட்டார். என்ன போர்? என்ன வேலை? என்றா கேட்கிறீர்கள்; கொஞ்சம் பொறுமை காட்டுங்கள் தோழர்களே, அவசரப்படேல்!

ஆலமரத்தை ஆறுமாதம் சுற்றியும் அடிவயிறு கனக்காதது கண்டவளுக்குக் கவலை பிறந்ததாம்; பார்த்தாள், ஆலமரத்தைச் சுற்றி அலுப்பதைவிட வேலமரத்து விறகொடிப்போம் என்றெண்ணினாளாம். ஓர் நாள், வீடு திரும்பும்போது, கைகாலில் இரத்தக் கீறல்களுடன் வந்து சேர்ந்தாளாம், வேலமரத்து முள்விடுமா சும்மா? அதுபோல ஆச்சாரியார், பதவியைத் தேடித்தேடி அலுத்தார், இப்போது, புதிய கம்பெனி துவக்கிவிட்டார், பலன் வேலமரத்திலே வேலைதேடியவளுக்கு உண்டானதுபோல. நஷ்டக்கணக்காக முடியும் என்றே நான் நினைக்கிறேன். அப்படியொன்றம் நான் நினைப்பது தவறாகப் போவதுமில்லை. ஆச்சாரியாரின் வேலைகளும் அவர் போடும் திட்டப்படி நடப்பதில்லை. ஆனால் இந்த மதுவிலக்குத் திட்டமிருக்கிறதே அதைப் பொறுத்தவரையிலே. ஆச்சாரியாரின் காரியம் திட்டப்படிதான் நிறைவேறியிருக்றிது, முழுப்பொய்! அவர் மது விலக்குக்கச் சட்டம் செய்தார், அதுதான் இப்போது மட்டந்தட்டிவிட்டார்களே சர்க்கார், நீ அவர் போட்ட திட்டப்படி நடக்கிறது என்று கூறகிறாயே, என்று என் மீது போபியாதீர் தோழர்களே, உண்மையிலே, ஆச்சாரியாரின் திட்டப்டியேதான் காரியம் நடந்திருக்கிறது.

மதுவிலக்குச் செய்யவேண்டியது சரியே. ஆனால் அது நடக்குமா? ஜனங்கள் கள்ளத்தனமாகக் குடிக்கவும், கள்ளச்சரக்கு விற்பனையும் அதிகரிக்கவுமாகிவிடுமே. குடிப்பவன் சமுதாயத்திலே குறையவேண்டு மானால் அறிவு பெருக வேண்டுமே. கள்ளுக்கடைகளை மடிவிட்டால் போதுமா? கடையிலே விற்ற கள், வீட்டுப்புறக்கடைகளிலே விற்கப்படும் நிலை ஏற்பட்டால் என்ன செய்வது?

ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.
அதைப் பற்றி நமக்கென்ன கவலை சார்? போலீசார் கவனித்துக்கொள்ளட்டும்.

ஆச்சாரியார்.
மதுவிலக்குச் சட்டம் செய்தும் பயன் எற்படவில்லை. திருட்டுத்தனமாகக் குடிப்பதும், குடிவகைகளை விற்பதும் அதிகரிக்கிறது என்ற புகார் கிளம்புமே

காங்கிரஸ் எம்.எல்.ஏ.
பேஷாகக் கிளம்பட்டுமே! அது நம்மை என்ன செய்யும்?

ஆச்சாரியார்.
நாம் போட்ட சட்டம் பியோஜன மில்லை என்று ஏற்படாதோ?

காங்கிரஸ் எம்.எல்.ஏ.
ஏற்படட்டுமே, அதனால் குடிமுழுகி விடுமா? மதுவிலக்கப்போன்ற சட்டங்க்ள் பரிபூரண வெற்றிபெற வேண்டுமானால், காங்கிரஸ் கட்சிக்கு, மாகாண ஆட்சி கிடைத்ததுபோலவே, மத்திய சர்க்காரிலும் ஆட்சி கிடைக்க வேண்டும் என்று விரச்சாரம் வெய்யவும், அதிகாரத்தைக் கேட்கவும், வெள்ளைக்காரரைக் கண்டிக்கவும், தங்கமான சந்தர்ப்பமல்லவா அது.

ஆச்சாரியார்.
அப்படியா விஷயம்? சட்டம் ஒழுங்காக நடைபெறவில்லை என்று ஜனங்கள் சலித்துக் கொண்டால்?

காங்கிரஸ் எம்.எல்.ஏ.
ஜனங்களுக்காகச் சலிப்பு எப்படி ஏற்படும்? நான் வருஷத்திற்கு இரண்டு ஜில்லா மதுவிலக்கு, என்ற சட்டம் பிறப்பித்தபடி இருப்பேன். அந்த வருஷம் பூராவும் அதைப்பற்றிப் புகழ்வார்கள். சலிப்பு வளர்வதற்குள், வேறு இரண்டு ஜில்லாவிலே மதுவிலக்கு ஏற்படுத்துவேன். உடனே அதைப்புகழ ஆரம்பிப்பார்கள். எப்படி ஜனங்கள் சலிக்க முடியும்? நேரம் ஏது?
ஆச்சாரியார்
ஓகோ! அதற்காகத்தான், ஒரே அடியாக. மாகாணம் பூராவும் மதுவிலக்கை ஏற்படுத்தாமல். கொஞ்சமாகச் செய்கிறீர்களா?

கா.எம்.எல்.ஏ.
உமக்குப் புரியாது அந்தத் திட்டத்தின் சூட்சமசக்தி. அந்தச் சட்டம் நாம் பதவியிலிருக்கும் வரையிலே நமக்குப் புகழைக் கொடுக்கும். எதுமட்டுமா? நாம் பதவியை இழந்துவிட்டோமானால். மறுபடியும் பதவிக்குவர வழிசெய்யும்.

ஆச்சாரியார்
அது எப்ப?

கா.எம்.எல்.ஏ.
இது தெரிவில்லையா? நாம் பதவியை விட்டு வெளியேறியதும், நாங்கள் அரும்பாடுபட்டு நிறைவேற்றிய மதுவிலக்குச் சட்டத்தைக் கவனிக்கவில்லை, இப்போதி ருக்கும் சர்க்கார். ஆகவே கற்றம் அதிகரிக்கிறது. சர்க்காருக்கு இதிலே சிரத்தை இல்லை. ஆகவே நாங்கள் மறுபடியும் பதவிக்குச் சென்றாக வேண்டும். பதவிமீது ஆசையல்ல, மது விலக்கு மீதுள்ள ஆசையினால் பதவி என்று பாரத்தை சுமக்க முன் வருகிறோம் என்று பிரசாரம் செய்தால் பதவி நம் காலடியிலே வந்து விழாதோ?

ஆச்சாரியார்
ஆஹா! ஆச்சாரியாரே! அபூர்வமான மூளை உம்முடையது.

கா.எம்.எல்.ஏ.
அதை நீர் எனக்கச் சொல்ல வேண்டுமோ! கவர்னரே சொன்னார். அது இருக்கட்டும்? இந்தச் சட்டத்திலே உள்ள மற்றோர் ஜீவசக்தி என்ன தெரியுமோ? இந்தச் சட்டத்திலே உள்ள மற்றோர் ஜீவசக்தி என்ன தெரியுமோ? இது நடைமுறைக்கு ஏற்றதல்ல. சட்டம் வெற்றி பெறாது.

ஆச்சாரியார்
சட்டம் வெற்றி பெறாது என்பதுதானா அதன் ஜீவசக்தி! புளிப்பை இனிப்பு எனக்புகல்வதா?

கா.எம்.எல்.ஏ.
பைத்யம் நீர். சட்டம் வெற்றிபெறக் கூடியதல்ல ஆகையால். நாம் பதவியை விட்டுவிலகி வேறு எவரேனும் பதவிக்க வந்தால். அவர்கள் இந்த இபயோகமற்ற சட்டத்தைக் காட்டிக்கொண்டு அழுவதைவிட, அதனை சத்துசெய்துவிடுவோம் என்ற எண்ணிச் சட்டத்தை ரத்தச் செய்வர். உடனே நாம் கிளர்ச்சி செய்யலாம். கண்டிக்கவும், கூட்டங்கள் போடவும், அறிக்கை விடவும் வசதி கிடைக்கும், நமக்கும், பதவிக்குத் திரும்பிவர வழி ஏற்படும். புண்யவான்கள் கள்ளுக் கடைகளை ஒழித்தார்கள். பாவிகள் வந்து பழயபடி கடையைத் திறந்தார்கள் என்று ஜனங்கள் ஆத்திரத்தோடு கூறும் நிலையை உண்க்க, இந்தச் சட்டத்திலே வழி இருக்கிறது.

ஆச்சாரியார்
பேஷ்! பேஷ்!! ஆச்சாரியாரே, உமது திறமையே திறமை. அந்தக்காலத்துக் கௌடலியர் உம்மிடம் தோற்றுத்தான் போவார். நமக்குப் புகழும், நம் எதிர்க்ட்சிக்கு இகழ்ச்சியும் வாங்கித்தரவல்ல சட்டத்தைச் செய்த உமது திறமையை என்னென்பேன்!

கா.எம்.எல்.ஏ.
மதுவிலக்குச் சட்டத்தின்போது; நான் மேலே தீட்டியிள்ளபடி, அன்பர் ஆச்சாரியார், காங்கிரஸ் எம்.எல்.ஏ.யுடன் பேசினாரோ இல்லையோ. அவர் மனத்திற்குள்ளாகவே இதுபோன்ற கேள்வியும் பதிலும் கிளம்பிக் கிளம்பி வேலை செய்திருக்கும் என்று நினைக்கிறேன். மதுவிலக்குச் சட்டம், தன் கட்சிக்கு மதிப்புத் தருவதோடு எதிர்கட்சிக்கு இடிவாங்கித் தரக்கூடியதாக இருக்கும் விதமாகவே ஆச்சாரியார் அமைத்தார். மதுவிலக்கு உண்மையிலேயே வெற்றிபெற வேண்டுமென்ற எண்ணம் ஆச்சாரியாருக்கு இருந்திருப்பின். ஏக காலத்திலே மாகாணம் புராவிலும் மதுவிலக்குச் சட்டத்தை இயற்றி, அதனால் விளையக்கூடிய நஷ்டத்தை ஈடுகட்ட, வழிவகை செய்துகொண்டு இருக்கலாம். சர்வ கட்சிகளையும் முன்கூட்டியே கலந்து ஆலோசித்து. எந்தவிதமாகச் சட்டத்தை அமைத்தால், வெற்றி பெறும் என்பது பற்றி முடிவு செய்திருக்கலாம். மதுவிலக்குக்கேற்ற மனப்பான்மையை நாட்டிலே உண்டாக்கி யிருக்காலம், அவை ஏதும் செய்யாது மந்திரவாதி, போலைக் கொண்டு சுழற்றி, கோவெனக் கூவி. விபூதியைத் தூவி, பாவிபரப் இங்கு இல்லை. ஆகவே மந்திரம் பலிக்கும் என்று ஆவி எழுச் சொல்லித் தோலைப் பாம்பாக்கிக் கொட்டையைச் செடியாக்கிக் காட்டி, வித்தை அத்தனையும் ஒருவேளை சோற்றுக்குத்தான் என்று கூறிக் காசுகேட்கும் விதமாகவே ஆச்சாரியார், அதிகாரம் என்ற மந்திரக் கோலால், அபூர்வமான சட்டத்தை அரை விநாடியிலே சிருஷ்டித்தார். பாம்பு பழையபடி பெட்டிக்கும். தோல். வழக்கப்படி ஜோல்னா பைக்கும் போச் சேருவதுபோல. ஆச்சாரியாரின் சட்டமும், மட்டந்தட்டப்பட்டுக் கெட்டுப்போய்விட்டது. மந்திரவாதியின் நிலைபோலவே ஆச்சாரியாருக்கு இன்று ஏற்பட்டுவிட்டது. மந்திரவாதிக்கும் ஆச்சாரியாருக்கும் மட்டுமல்ல, மகேஸ்வரன் சிவபிரானுக்கே அதேநிலைதான் ஏற்பட்டது. மாணிக்கவாசகரின் பாசுரத்தைப் பரிசாகப் பெற்று, நரியைப் பரியாக்கினார். ஆனால், ஒரே இரவிலே, பரிமீண்டும் நரியாகிக் கனைத்து ஊளையுடத் தொடங்கி, கெம்பீரமான நடைமாறிக் கோணற்கூத்து துவங்கி வெளியே ஓடுமுன்பு, அங்கு இருந்த குதிரைகளையும் கடித்துக் கன்றுவிட்டதாகத்தான் கதை! சாதாரண கதையல்ல, கடவுட் கதை! முரடனிடம் பிச்சைக்குச் சென்றாளாம், பட்டை நாமத்தோடும், பளபளப்பான செம்போடும். அக்கம்பக்கத்திலே, கிடைத்த அரிசியும் கொஞ்சம் அதிலே இருந்ததாம். பட்டை நாமக்காரன் பிச்சை கேட்டது கண்ட முரடன், தடியனே! உனக்க நாமமும் நா அசைவும் தவிர வேறு யோக்யதை கிடையாதா? என்று கடிந்துரைத்துவிட்டு, செம்பையும் தூக்கிக் கொண்டு போனானாம். செம்புக்கச் செம்பும்போய், கோவிந்தா, செம்பிலிருந்த அரிசியும் போச்சே, கோவிந்தா! என்று கதறிக்கொண்டே சென்றானாம், பட்டை நாமக்காரன். அதபோல், பரிநரியானதுடன், முன்பு இருந்த பரியும் போச்சே பரமசிவம்! என்று அன்ற அழுதிருப்பார்கள். ஆச்சாரியாரின் சட்டமும், மந்திரவாதியின் தந்திரம்போல, மகேஸ்வரனின் ஜாலவித்தைபோல. பூத்து உதிர்ந்துவுட்டது, முளைத்துக் கருகிவிட்டது.

மதுவிலக்கச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போதே, நமது தலைவர்கள், ஜயா, ஆச்சாரியாரே! இந்தச் சட்டம் நிலைக்காது. உமது நினைப்பு நடக்காது, உண்மையிலே மதுவிலக்கு ஏற்படும் விதமாகச் சட்டம் அமையவில்லை என்று கூறினால். ஆச்சாரியார் கேலி செய்தார். ஆனால், பிற்கால நடவடிக்கைகள், நமது தலைவர்களின் சொல்லை நிரூபித்துக் காட்டிற்று. கள்ளச் சாராயக் கடைகள் காடுமேடுகளிலும், சத்திரம் சாவடிகளிலும் உண்டாகிவிட்டன. கடைக்குப் போய்க் கள் தேடவதற்குப் பதிலாகக் குடி. குடிகாரனைத் தேடிக்கொண்டு வீடுவரத் தொடங்கிற்று. ஆயிரத்திலொருவர், அகப்பட்டவர் என்ற முறையிலே, சிலர் சிக்கிக் கொண்டனர், சிக்காத பேர்வழிகள் சிரித்தனர். இந்த நிலையிலே சட்டம் செல்லாக்காசாகி விடவே. இப்போது சர்க்கார். சட்டம் அமுலில் இருக்கவேண்டியதில்லை என்று. உத்தரவு பிறப்பித்துவிட்டனர். இது, ஆச்சாரியாரின் திட்டப்படி நிறவேறியதேயாகும்! அவர் எண்ணத்தின்படியே, இன்று, சர்க்காரைக் கண்டிக்கவும், காங்கிரஸ் கட்சிக்குப் பலம் தேடவும், இது ஓர் சிலாக்கியமான சந்தர்ப்பமாகிவிட்டது. கடந்த பத்து நாட்களாக, ஆச்சாரியார் கம்பெனி, ஆரம்பமாகிவிட்டது.

மதுவிலக்குச் சட்டத்தை மகத்தான முகூர்த்தநாள் குறித்துத் துவக்கியது, அமெரிக்க சர்க்கார். மதுவிலக்குச் சட்டத்தை அமுல்நடத்தப் பிரத்யேக அதியாரிகள் கிளம்பினர். பூனைக்கால் ஜான்சன் எனும் பிரசாரத் தலைவரின் படை ஒருபுறம், சர்க்கார் சிப்பந்திகள் ஓர் புறம், போலீஸ் மற்றோர்புறம், அந்தச் சட்டத்துக்கு அரணாக அமைந்தது. ஆனால் வரண்ட அமெரிக்காவிலே வாய்க்கால்கள் தோன்றிவிட்டன, பூமிக்கடியே, புகைத் திரைக்குப் பின்னாலே. பூலோகரம்பைகளின் படுக்கை அறையிலே. சீமான்களின் சிங்காரத் தோட்டங்களிலே. பல்வேறு இடங்க்ளிலே மதுபானக் கள்ளக் கடைகள் தோன்னிவிட்டன, சட்டம் பயனற்றது கண்ட அமெரிக்க சர்க்கார். அதனை ரத்து செய்துவிட்டனர். சட்டம் இயற்றியதும், சட்டத்தை ரத்து செய்ததும் அமெரிக்க சர்க்காரே. எனவே, கண்டிக்கவோ கலகமூட்டவோ யாருக்கும் நினைப்பில்லை. இஅங்கே, சட்டமியற்றியது ஆச்சாரியார். அதை ரத்து செய்தது வெள்ளைக்கார சர்க்கார். எனவே. கண்டிக்க இதனைப் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது. ஆச்சாரியார் அன்று நமது தலைவர்கள் கூறிய அறிவுரைகளைக் கேட்டாரில்லை. எங்கே, நமது கட்சியினர் அதிகாரத்துக்கு வந்துவிடுகின்றனரோ, என்று அஞ்சி, அஞ்சி வாழ்ந்தார். ஆண்டால் நாங்கள் ஆளுவோம், இல்லையானால் துப்பாக்கி முனையே ஆளும் என்று கூறினார். ஆங்கில ஆலோசர் ஆட்சி ஏற்பட்டதும் ஆசி கூறினார், ஆதரித்தார், மற்றக் கட்சிகள் முலாம் பூசப்பட்ட பித்தளை, மோசடி. ஆலோசகர் ஆட்சியோ, வெறும் பித்தளை. ஆகவே அதிலே மோசமில்லை என்ற குட்டிக்கதை கூறினார். ஆலோசகர் ஆட்சி நீடித்தால் நல்லதே என்ற தொனியிலே பேசினார். இப்படிப்பட்டவர் இன்று ஜஸ்டிஸ் கட்சி பதவிக்கு வந்திருந்தாலும் பாதகம் ஏற்பட்டிருக்காது! என்ற ஆயாசத்தோடு கூறுகிறார். ஏதோ பாவம். கஷ்டகாலத்திலேனும் நீதிக்கட்சியின் நினைப்பு அவருக்கு வருகிறதே என்ற ஆறுதல் எனக்கு.

சரி! மதுவிலக்குச் சட்ட ரத்துக்கும், ஆச்சாரியாரின் புதுக்கம்பெனிக்கும் என்ன தொடர்பு என்பீர்கள்? இப்போது, சர்க்காரின் தீர்மானத்தை மாற்ற, ஒரு கிளர்ச்சி துவக்கப் போகிறாராம், ஆச்சாரியார்! பட்டாளத்திலே சேராதே! பணத்தைப் பாங்கியில் போடாதே! என்று கூவும் விரர்களுக்கு மீண்டுமோர் சான்ஸ்! அது மட்டுமல்ல! பட்டாலத்திளே சேர்ராதே! பனத்தை பங்கியில் போட்டாதே! என்று (தமிழைக் கொலை செய்து) கவர்களிலே கரியினால் எழுதி வந்தார்களே, ஏகாதிபத்ய ஒழிப்பு வீரர்கள். அவர்களுக்க மறுபடியும்யயய அருமையான வேலை தருகிறார் ஆச்சாரியார். ஆளக்கொரு கரித் தண்டு எடுத்துக்கொண்டு, மதுவிலக்குப் பிரதேசங்களுக்குச் சென்று. சுவர்களிலே, கீறல் போடவேண்டுமாம், கள்ளுக்கடை வேண்டாம் என்று!

இரவு வேளைகளிலே, இப்பக்கம் அப்பக்கம் பார்த்துக் கரித்துண்டினால் வெள்ளைச் சுவரினைப் பாழாக்கும் இந்தக் கண்டா, சர்க்கார் தமது முடிவை மாற்றிக்கொள்வர், என்றுதான் நீங்கள் கேட்பீர்கள். நானம் கேட்பேன். ஆனால் ஆச்சாரியாரின் மூளைத்திறந்தான் அலாதியானதாயிற்றே! அடுத்த வருஷம் அவரே கூறுவார், இந்தத் திட்டம் பயனில்லை என்ற. தாதித்துவரும் அவருடைய தீட்சண்ய புத்தி எனக்கத் தெரியும். எனவே, கரிபூகம் படைக்குக் கமாண்டராகும் ஆச்சாரியார், அடுத்த வருஷம் படையைக் கலைத்துவிடுவார். அதற்கள் ஆள்வேவை! அறிவை ஒதுக்கி வைத்துவிட்டு, அதிலே சேர யார் முன்வருவார்கள் என்ற கேட்பீர்கள்? இந்தத் தரித்திரம் பிடித்த நாட்டிலே எதற்கத்தான் ஆள் கிடைக்க மாட்டார்கள்? மலம் எடுக்க ஆள் இருக்கும் நாடல்லவோ இது! இங்க கரிக்கோடிடவா ஆள் கிடைக்காது!

பரிதாபம்! பாராளும் மன்றங்களையும் நிர்வாக சபை களையும், கவர்னரின் கொலு மண்டபங்களையும் வைசிராயின் மாளிகைகளையும் வலம்வந்த ஆச்சாரியாருக்கு இன்று, இத்தகைய கதைக்குதவாத வேலைக்கு ஆள் தேடும் காலம் வந்ததே, என் செய்வது! யாருக்காவது பாடத் தெரிந்தால் (கொஞ்சம் உரத்த குரலிலேயே பாடக் கோருகிறேன், அவருக்கு ஒரு காது கேளாது) பாடுங்கள்,

மஞ்சள் கருப்பாச்சுதே
மருக்கொழுந்தும் வேம்பாச்சுதே!
என்ற இலாவணியை!!

(திராவிட நாடு - 05.12.1943)