அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஆம்!கேட்டுக்கொள்ளத்தான் வேண்டும்!
காரசாரமான வார்த்தைகள்! கடுமையான கண்டனம்! வேகமாக கோபமாகத்தான் பேசியிருக்கிறார்கள். ஆனால் என்போன்ற இந்துக்கள், பொறுமையுடன், அந்தக் கண்டனத்தைக் கேட்டுக்கொள்ளத்தான் வேண்டும் என்று, டில்லை சட்டசபையிலே, சர் இராமசாமி முதலியார் கூறினார். பழங்குடி மக்கள் படும் துயரத்தை எடுத்துக் கூறியும், அவர்களின் விடுதலைக்கு வழிவகுக்குமாறு சர்க்காரை வற்புறுத்தியும், புதிய உலக அமைப்புன் திட்டங்கள் தீட்டும்போது, பழங்குடி மக்களின் நலனுக்கேற்றவைகளைச் சேர்க்கும்படியும், தோழர் சிவராஜ், பேசினார். அவரை ஆதரித்துப் பலர் பேசினர்.

தீண்டாதார் என்று திமிர்வாதக்காரரால் அழைக்கப்படும், பழங்குடி மக்களின் நலனைக் குறித்துச சட்டசபைகளும் பாராளும் மன்றங்களும் அதிகமாகக் கவனம் செலுத்தவில்லை. பத்தாயிரம் கோடி ரூபாய் திட்டமென்ன, தங்கத்துககும் நோட்டுக்கும் உள்ள தொடர்பு பற்றிய விவாதமென்ன, வியாபார சம்பந்தமான விஷயங்களென்ன, வைசிராய் நில்வாக சபையின் உயிரைப் பற்றிய ஆரூடங்கள் என்ன, இவை போன்றவைகளிலே, தங்களின் கவனத்தைச் செலுத்துவதே சிறந்ததென்று கருதுவதும், நாட்டின் உயிர்நாடி நலிவதை மறப்பதும், வாடிக்கையாக இருந்து வந்தது. இதனை, நமது சிவலாஜ் போக்கினார், தடித்த தோலருககும் கரீல் என உறைக்கும்படி சரியான சவுக்கடி தந்தார். வைதீகங்களுக்கு வாட்டமாகத்தான் இருக்கும். வர்ணாஸ்ரமும் ஜாதிக் கொடுமையும், பழங்குடி மக்களைப் பாழ்செய்கிறது என்று ஒருவர் பேசினது கேட்டு, அதே சட்டசபையிலே திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் ஓர் சனாதனி, தீண்டாதாரின் நிலைமையைச் சீராக்க வேண்டியதுதான், ஆனால் இவர்கள் ஜாதி முறையைக் கண்டித்துப் பேசியது என்கோன்றாருககு மிக்க வருத்தத்தைக் கொடுககிறது என்று கூறினாராம். அவருடைய பேச்சைக்கொண்டுதான் நாம் அவரைக் கோயில்கொண்டு எழுந்தருளி இருக்கிறார், என்று கூறினோம், அந்த உருவம், கன்னெஞ்சம் படைத்தது என்பது விளங்குவதால்! நாட்டைத் திண்டாட வைப்பவரைக் கொண்டாடித் துதிக்கும் கோணற்குணாளர்களுக்கு, பழங்குடி மக்களின் பரிதாபத்துக்குரிய நிலைக்குக் காரணம், பாழான ஜழதிமுறைதான், என்ற உண்மை, மனவேதனையைத்தான் உண்டாக்கும். பிடிபட்ட கள்ளன் உதைபட்டு அலறுவதுபோல, அவர்கள் கூவித்தான் கிடப்பார்கள். நாம் சிவராஜ் அவர்கள் சீறிப் பேசினதை வரவேற்கிறோம், பாராட்டுகிறோம், இதுபோல இடித்துரைகள் அடிக்கடி அந்த மன்றங்களிலே நிகழத்தான் வேண்டும். நெடுநாளைய நோய், தீண்டாமை, அதை நீக்கக் காரமான மருந்து தேவை. புண்ணின் மீது பனி நீர் தெளிப்பது பயன் தராகு. பரிமளம் பத்தே விநாடியில் போய்விடும், புண்போகாது. பழங்குடி மக்களை ஜாதி படுததிவரும் பாடு, இன்றும் குறைந்துவிட்டது என்று நேர்மையில் விருப்பமுள்ளவர் எவரும் கூற முடியாது. குறைக்க முயற்சி நடக்கிறது என்று கூறலாம், குறைவது போலத் தெரிகிறது என்று சொல்லலாம், அதற்கு தேல் கூறல் மிகையாகும். ஏகாதிபத்தியத்தின் கொடுமைகளைப் பற்றி அண்டம் அதிரப் பேசினீர்களே, எங்கள் பழங்குடி மக்களை, ஜாதி இந்துக்களாகிய நீங்கள் படுததும்பாடு, பற்றி எண்ணிப் பார்த்தீர்களா? என்று கன்னத்தில் அறைந்தது போலக் கேட்டார், பழங்குடி மக்களின் பாதுகாவலர் ஒருவர்.

இவ்விதமான காரசாரமான கண்டனங்களைக் கேட்டுக் கனபாடிகள் கொதித்திருப்பர். சர்.இராமசாமி முதலியார், கோபங்கொள்ளவில்லை. சர்க்கார் பழங்குடி மக்களின் துயர்போக்க முனைவர் என்று உறுதி கூறிவிட்டு, இதுகாறும் பழங்குடி மக்களை இநதுமதமும் அதன் விளைவாக ஜாதியும் படுததிய பாடு அதிகம். அந்தக் கொடுமையைச் செய்ததற்காக இதுவும் கேட்க வேண்டியதுதான் இதற்கு மேலும் கேட்டுக் கொள்ளவேண்டியதுதான். என்ற விதமாகப் பேசி இருக்கிறார். ஆம்! கேட்டுக்கொள்ளத்தான் வேண்டும். பழங்குடி மக்களை ஜாதி இந்துக்கள் கொடுமைப்படுத்தியதற்குப், பழங்குடி மக்கள் சொல்லம்பு தொடுத்ததோடு நின்றனரே என்பதற்காக அவர்களின் பொறுமைக் குணத்திற்கும் பண்புக்கும் பாராட்டுவதோடு வணக்கஞ் செலுத்தவும் ஜழதி இந்துக்கள் கடமைப்பட்டவர்கனே என்றம் கூறுவோம். உலகிலே வேறு எங்கும், பலசாலிகளைப் பலவீனர்கள் அடிமைகளாக்கியதில்லை, பாடுபடும் இனத்தைப் பராரியாக்கி அதனைப் பாவம், புண்யம் என்று கூறித் தப்பித்துக் கொண்டதில்லை, பலகோடி மக்களாக உள்ள பழங்குடி மக்களை இந்தப் புண்யபூமியில்தான் மதத்தின் பெயரால் அடக்கி ஒடுக்கினர். இக்கொடுஞ் செயலுக்காக, வெட்கித் தலை குனியத்தான் வேண்டும. துக்கத்தால் இரத்தக் கண்ணீர் வடிக்கத்தான் வேண்டும். ஆம்! ஆனால் அது மட்டும போதாது, எந்த வருணாஸ்ரமும் ஜாதிபேதமும், அந்தக்ப பழங்குடி மக்களை இவ்வளவு கேவலமான நிலைமைக்குக் கொண்டு வந்ததோ, அந்த வர்ணாஸ்ரமத்தையும அதன் பிறப்பிடமான ஆரியத்தையும் அழிக்கத் துணிவு கொள்ளவேண்டும். ஈரமும் வேண்டும, வீரமும் வேண்டும். பழங்குடி மக்கள் படுதுயர்கண்டு நெஞ்சிலே ஈரம் தோன்றவேண்டும், அவர்களை இந்த நிலைக்குக் கொண்டுவந்த இந்துமத ஏகாதிபத்திய இறுமாப்பாளர்களை எதிர்க்க வீரம் வேண்டும். அதுதான் அறப்போர்! அந்த அறப்போருக்கேற்ற ஆற்றல் பிறக்க வேண்டுமானால் சர்.இராமசாமி முதலியார் கூறியதுபோல என்னைப்போன்ற இந்துக்கள் என்று பேசி, இந்துப்பட்டியிலே இடந்தேடிக்கொண்டு பயனில்லை. நான் ஓர் திராவிடன், ஆரியத்தால் தீண்டப்பட்ட, அதனால் உருமாறிய, உணர்ச்சி குன்றிய, திராவிடத்தைத் தழைக்கச் செய்வேன், என்ற சூள் உரைத்து திராவிட இன எழுச்சிக்குப் பாடுபட வேண்டும். பரிதாபத்துக்குரிய பழங்குடி மக்கள், வேறு யாருமல்ல, நமது இனத்தவர், திராவிடர்!!
(திராவிடநாடு - 26.03.1944)