அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஆமாம் நடக்கிறது!

பார்ப்பனரைத் தேடிப்பிடித்திழுத்துப் பதவி தருகின்றனர், காங்கிரஸ் பற்றுக் கொண்டவருக்கு வலிய வலியப் பதவி வழங்குகின்றனர், சர்க்கார், என்று சண்டே அப்சர்வர் எழுதி, இப்போக்கைக் கண்டித்திருக்கிறது. திருச்சி டி.பி. வேதாசலம், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் பலனை, 100க்கு 8 பேராக உள்ள பார்ப்பனர் 70 பங்கு அனுபவிக்கின்றனர். இதை மட்டுப்படுத்தத் திட்டம் வகுத்தால், காங்கிரஸ் ஏடு சீறி விழுகிறதே என்று எடுத்துக் காட்டி, எதிர்வாதமாடியவர்களைச் சாடுகிறார். தென்னிந்திய இரயில்வே கம்பெனியிலே, பார்ப்பனருக்கே, உத்தியோகங்கள் அதிகமாக வழங்கப்படுகின்றன என்பதைத் திருச்சித் தோழர் கே.ஏ.பி. விஸ்வநாதன் அவர்கள் வெளிப்படுத்தி யுள்ளார்.

நமது தோழர்கள், எடுத்துக் காட்டியவை உண்மை. நாம், சர்க்காரின் நல்ல பிள்ளையாக, நிபந்தனையின்றி உதவி செய்யும் உத்தம புத்திரர்களாக, இருப்பதனால், நமது இனத்திலே, சில சர்களும், சில சீமான்களும், சில பதவியாளரும் இருப்பதே போதும், அதுவே கட்சியின் இலட்சியம் என்று சர்க்கார் கருதும் விதத்திலே, கட்சித் தளபதிகளின் போக்கு இருப்பதால், குனிந்து கொடுப்பவர் களைக் குட்டினாலும் குற்றமில்லை என்ற முறையிலே, சர்க்கார் நடந்து கொள்கின்றனர். தோட்டத்துக் கீரை கறிக்கு உதவுவதில்லை, சர்க்காருக்கும், அவர்களை ஆதரித்துச் சள்ளைதரவோ, சாந்தியைக் குலைக்கவோ, சூது செய்து பேரம்பேசவோ ஒருபோதும் சம்மதிக்கும் சுபாவமற்ற சாதுக்கள் நிரம்பிய ஜஸ்டிஸ் கட்சி தோட்டத்துக் கீரையாக இருக்கிறது!
கல்லென்றாலும் கணவன் புல்லென்றாலும் புருஷன் என்ற பத்தினிப் பேச்சுப்போல, எப்படி இருந்தாலும், காருண்ணியமிருந்த பிரிட்டிஷ் சர்க்காரல்லவா, என்று கனிவுடன் பேசும், உத்தமர்களின் உறைவிடமாயிற்றே ஜஸ்டிஸ் கட்சி, அதை உதைத்தால் என்ன, உதாசீனம் செய்தால் என்ன, உரத்த குரலிலே கூட அழத்தெரியாது என்று சர்க்கார் கருதுகின்றனர்! பார்ப்பனருக்கோ, சர்க்காரின் நிலைமை நினைப்புயரவும் நன்கு தெரியும். மிரட்ட ஒரு கூட்டம் வேலை செய்யும், பேரம்பேச ஒரு கூட்டம் துடிக்கும். இரண்டு கணைகளுக்குமிடையே சர்க்கார் நிற்கும். கட்சியிலேயோ உழைக்க, ஒரு தலைவர் வேண்டும், ஆனால் அவர் உரைத்திடும் கொள்கை களை உதாசீனம் செய்யவேண்டும், என்ற மனப்போக்குடையோர் பலர், தளபதிகளாக உள்ளனர். ஆகவேதான், தங்குதடையின்றித், தயைதாட்சணியமின்றி, அச்சம் அயர்வின்றி, ஆரிய - ஆங்கிலேய ஆலிங்கனம், ஆனந்தமாக நடைபெறுகிறது. ஆமாம், பார்ப்பனருக் குப் பதவிதானம் ஓயாது நடக்கிறது. ஆனால் அதைத் துடைக்கத் தமிழர் என்ன செய்யப்போகிறார்கள்? தலைவரின் தாக்கீதுவரின், எத்தனை தளபதிகள் முகாம்வரத் தயாரில் உள்ளனர். மூலையில் முணுமுணுப்பவர்களும், வேலை தேடுவதில் முனைந்து நிற்பவர் களும், கலையில் இலயிப்பவர்களும், ஆரிய வலையிலே சிக்குண்டு கிடப்பவருமாக உள்ளனரே! அவர்களுக்கு, ஆரிய ஆதிக்கத்தை அறுக்கும் வழியும் வகையும் எங்கிருந்து கிளம்பும். ஒரு கிழவரை, நோயுடன் போராடும் நிலையிலே இருக்கச்செய்து, பல ஆயிரம் வாலிபர்களை ஆரிய வைரிகளாக்கி வைத்து, இடையிலே இருந்து கொண்டு இன்ப வாழ்வுபெற, எந்தக் கொள்கையை விட்டுக்கொடுக் கவும், யாரைக் காட்டிக் கொடுக்கவும், எத்தகைய அரசியல் சூதாட்டமாடவும், தளபதிகள் இருக்கும்போது, ஏன், ஆரியம் வெற்றிச் சிரிப்புடன் வீதிவலம் வராது. ஆரியம் அறிந்துதான் சிரிக்கிறது, அறுபதாண்டு கழிந்த ஒருவர் அலைகிறார், வாழ்வைப் பாழாக்கிக்கொண்டு பல வாலிபர்கள் வதைகின்றனர். ஆனால், சீமான்கள், கல்விமான்கள், இன்னமும் சற்சூத்திரராக உள்ளனர் எனவே நமக்கு ஜெயமுண்டு, பயமில்லை, என்பதை ஆரியம் நன்கு அறிந்திருக்கிறது. ஆங்கிலரும் அறிவர். பெரியார் எவ்வளவுதான் போர் தொடுப்பினும், ஓயாது உழைப்பினும், ஜஸ்டிஸ் கட்சியின் ஒய்யாரத் தலைவர்கள், ஆரியத்துக்கு, அடிமைகளாகவே உள்ளனர். எனவே, நாமும் ஆரியத்தை ஆதரிக்கும் காரியத்தைத் தளரவிடக் கூடாது என்ற யூகத்தை அறிவர், சென்னை உத்தியோக மண்டலம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் போன்ற ஸ்தாபனங்கள், இரயில்வே முதலிய நிலையங்கள், ஆலயம், மற்றும், ருசியும் பசையும் உள்ள எந்த இடத்திலேயும் ஆரியம் ஆதிக்கம் செலுத்தித்தான் வருகிறது. ஆரியரை ஏன் இப்படி ஆதரிக்கிறீர், என்று பெரியார் இராமசாமி, ஆங்கிலரைக் கேட்டால், “பெரியாரே! எங்களைக் குறைகூற வந்துவிட்டீரே, உங்கள் கட்சியின் உன்னதத் தலைவர்கள் ஆரியரை ஆதரிக்காமல் உள்ளனரோ? சர். ஆர்.கே. ஷண்முகம் அவர்களின் இல்லத்து மணவிழாவிலே ஆரியருக்கு இடமிருந்ததே, சர். இராமசாமி முதலியாரின் வீட்டுக் காரியங்களிலே ஆரியருக்கு மரியாதை கிடைத்ததே, செட்டி நாட்டரசரின் அறுபதாண்டு பூர்த்தியிலே ஆரியருக்குப் பூரி கிடைத்ததே, இவர்களெல்லாமே, ஆரியர் - திராவிடர் என்ற பிரச்னைமீது கட்டப்பட்டுள்ள கட்சியின் தலைவர்களே, இவ்வண்ணம், ஆரியத்தை நீக்க மனமின்றியிருக்கும்போது, நாங்கள் மட்டுந்தானா, ஆரியரை ஆதரிக்கக்கூடாது; இது என்ன நியாயம், பெரியாரே,” என்று ஆங்கில ஆட்சியாளர் திருப்பிக்கேட்டால், நமது தலைவர், என்ன பதிலுரைக்க முடியும். அவரை, உழைத்து அலுக்கச் செய்து, அவருடைய உரைகளை உதாசீனம் செய்வதையே, தமது வாழ்க்கை வெற்றிக்கு இரகசியம் என்று கருதும், தளபதிகள், பதில் கூறக்கோருகிறோம், ஆரியத்தின் ஆதிக்கம் நடக்கிறது, ஆமாம் நடக்கிறது, ஆனால் நீங்கள் அதைத் தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள்?
27.6.1943