அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஆண்டு பதிமூன்று!

ஆண்டு பதின்மூன்று! திராவிட நாடு பணியாற்றத் தொடங்கிப் பன்னிரண்டாண்டுகளைக் கடந்துவிட்டது. பதின்மூன்றாமாண்டு துவக்கம் எனும் மகிழ்ச்சியூட்டும் செய்தியைத் தாங்கிக் கொண்டு, இந்த இதழ் வருகிறது. இதுநாள் வரை அகமகிழ்ச்சியுடன் ஆதரவளித்த அன்பர்கட் கெல்லாம் நன்றியும் வணக்கமும் தெரிவித்துக் கொண்டு, மேலும் பணியாற்றும் வாய்ப்பினை அளித்திடவீர் எனும் வேண்டுகோளுடன் பன்னிரண்டாண்டுகள் பணியாற்றி இருக்கிறோம் என்பது, சாதாரண செய்தி அல்ல! அகன்ற வாய் முதலைகள் அகழி நிரம்பா! மதிற்கவரோ, வழவழப்பானது! மேலேயோ, உருக்கிய இரும்பினை மேலே ஊற்றிடும் எதிரிகள்! எனினும் அகழியைக் கடந்து, கோட்டைச் சுவரேறி, கொடிமரத்தைக் கைப்பற்றி விட்டோம் என்கிறபோது வீரப்படையி னரின் அகமும் முகமும் எங்ஙனம் மலருமோ, அதே போன்ற மகிழ்ச்சிதான், சீர்திருத்த இயக்க ஐடொன்று ஈராறு ஆண்டுகளாகத் தொடர்ந்து பணியாற்றி மேலும் பணியாற்றும் ஆற்றலுடன் விளங்குகிறது என்ற செய்தி கேட்போருக்கு ஏற்படும்.

சீர்திருத்த இயக்க ஏடுகள் எதிர்நீச்சுச் செல்பவை! எழில்தேடவும், பகட்டுக் காட்டவும் நேரம் கிடையாது, நினைப்பே ஏழாது கூறவேண்டியன வற்றைக் கூறும் சக்தி இருக்கும்போதே, தேடித் தேடி நாட்டவருக்குக் கூறிட வேண்டும், தாக்கி அழித்திட எண்ணுவோரின் கடைசி வெட்டு விழுமுன் ஊராருக்குக் கூறவேண்டிய உண்மைகளை முடிந்த அளவு உரைத்திட வேண்டும் என்ற இந்த நோக்கம் நெஞ்சிலே ததும்புபோது, நேர்த்தியான மேலட்டையும், கண்கவரும் வடிவமும் தேடித் தந்திட இயலாது. திராவிட நாடு மட்டுமல்ல, சமுதாயத்தில் பெரும் புரட்சி கண்டிடப் பணியாற்றும் எந்த ஏடும்! வைரம் இழைத்த வாளை, களம்காணாக் காவலன், சொகுசாக அணிந்துகொள்ள இயலும் - அது மட்டும்தான் இயலும்! ஆனால் களத்திலே புயலெனச் சுற்றி, வளைத்துக் கொண்ட வஞ்சகர்களை விரட்டி அடித்திடும் போரில் உடுபட்ட வீரன் கரத்திலே உள்ள வாள், செந்நிறமேறி, வளைந்தும்கூடக் காணப்படும். பன்னெடுங் காலமாகக் கப்பிக் கொண்டிருக்கும் மூடப் பழக்க வழக்கங்களை வெட்டி வீழ்த்திடும் பணிபுரியும் ஏடு, காட்டும் எழில், அதன் மூலம் நாட்டிலே பூத்திடும் புதுமைக் கருத்துக்கள் மூலமாகத்தான் தெரிய முடியுமே தவிர, கண்டால் கவர்ச்சி தரும் மினுக்கினால் அல்ல.

பதின்மூன்றாம் ஆண்டு பிறக்கிறது, படைக்கலாம் எனத்தகும் நிலையில் உள்ள ஏட்டினுக்கு, என்றால், அதொன்றே கூட வெற்றி என்று கூறத்தக்கதுதான் உலக வரலாற்றிலே தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் பணிபுரியக் கூட முடியாமல் பாதகர்களின் சூழ்ச்சிக்குப் பலியாகிப் போனவர்கள் பலப்பலர்! நாடு வர்ணாஸ்ரமப் படுகுழியில் வீழ்ந்து, நம்மவர் நம்மை நாசம் விளைவிப்போர் என்று எண்ணி அழித்திட முடிந்த காலை, திராவிட நாடு, பணியாற்றக் கிளம்பிற்று. பெரும் வசதியுடன் அல்ல, பிரமாதமான வரவேற்புடன் அல்ல, பேழையுடனோ பெரும் அச்சகத்துடனோ அல்ல ஆர்வம் ஒன்றின்றி வேறோர் அருந்தணை தேடாது, நடைபெறுகிற வரையிலே மகிழ்ச்சி என்ற எண்ணத்துடன், தேய்ந்த ஆச்செழுத்து, தொட்டால் தூளாகும் தாள், இவைகளைத் தோழமை கொண்டு, வெளி வந்தது! வென்றது! திராவிடச் சமுதாயத்துக்குத் திராவிட நாடு தோழனாயிற்று! பன்னிராண்டாண்டுகள், பண்பு கெடாத முறையிலே பணியாற்றி, ஆற்றிய பணிகண்டு நாடு மகிழ்கிறது என்பதறிந்து, மேலும் பணியாற்றும் ஆர்வத்துடன் வணக்கம் கூறிக் கொள்கிறது.

திராவிட நாடு இதழும், இன்று அதன் துணை இதழ்களாக உள்ளனவும், கொண்டுள்ள குறிக்கோள், ஒரு இதழ் எங்ஙனம் இருத்தல் இயலும் என்பதை எடுத்துக் காட்டுவதுமல்ல, ஒரு இதழ் மூலம் எவ்வளவு செல்வம் திரட்டலாம் என்பதை அறிந்திடுவதுமல்ல, சீர்திருத்தப் பணியாளன் ஒரு அதழை எங்ஙனம் பயன்படுத்துவது, அதன் மூலம், நாட்டுக்கு எத்தகைய அறிவூட்டுவது என்பதுதான். எனவேதான் திராவிட நாடு இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளாக, பணியாற்றி வந்ததில், அலுவலகத்தை அலங்கார மாளிகையாக்கினோம், அறுபது அச்சுக்கோப்போர் உள்ர், எழுபதாயிரம் பிரதிகள் வெளியிட்டோம், எட்டுப் பக்கம் விளம்பரம் நிலையாக இருக்கிறது, சென்னையில் ஓர் கிளை, கோவையில் ஓர் கோட்டம், அலுவலகப் பொறுப்பாளருக்கு திங்களொன்றுக்கு ஐந்து நூறு உதியம் என்றெல்லாம் கூறத்தக்க நிலைமை அடையவில்லை - ஆடையாததற்காக வேதனை கொள்ளவுமில்லை, வெட்கப்படவுமில்லை. துவக்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை, இந்தக் கிழமை இதழ் மூலம் நாட்டுக்கு ஏதேனும் புத்தம் புதுக் கருத்தினை மக்களை வாழவைக்கும் கருத்தினை அளித்திட முடிந்ததா - இந்தக் கிழமை இதழ் மூலம், எந்த எத்தனைச் சாடுகிறோம், எந்தப் புரட்டினை அம்பலப்படுத்தினோம், எந்த அளவுக்கு மூடத்தனத்தை முறியடித்தோம், என்பதிலேதான் தனிக் கவலை செலுத்தி வந்திருக்கிறது, இனியும் குறிக்கோள் அதுதான்!

பன்னிராண்டுகள் பணியாற்றி பதின்மூன்றாம் ஆண்டு துவக்கம் இந்த இதழ் அச்சிடும் தாள், இனிதான் அலுவலகம் வர வேண்டும் - நிலைமை அதுதான்! எனினும், கடமையைச் செய்தோம் என்ற களிப்புடனேயே, பணி நடைபெற்ற வண்ணம் இருக்கிறது.

எப்படிப்பட்ட பணி என்பதை எண்ணிப் பார்த்திடும் நாளன்றோ இது எனவே அதுபற்றிக் கூறுகிறோம் திராவிட நாடு தன் பணியின் மூலம் தமிழகத்தில் ஓர் பகுத்தறிவுப் பாசறையைக் காண எண்ணிற்று. இன்று அந்தப் பாசறை எதிரிகளும் கண்டு மெச்சத்தக்க வகையிலே அமைந்திருக்கக் காண்கிறோம்.

தமிழில் அரசியலையும் பொரளாதாரப் பிரச்சனைகளையும், உலக வரலாற்றினையும் உள்ளத்தில் கிளர்ச்சி எழத் தக்கவகையிலே தீட்டிட இயலுமா, அகம் தெரியுமா, புறம் அறிவரா? தொல்காப்பியம்தனைத் தொட்டதுண்டா? ஏதறிவர், எங்ஙனம் தமிழ் தீட்டுவர், இலக்கணம் வழுவா முறையில், இலக்கியச் செறிவு துளியேனும் உள்ள வகையில் எழுதவல்லவரோ, இவர்களெல்லாம் செவிச் சுவை உணரா மக்களன்றோ, தேன் சொட்டும் திருவாசகமும், இனிமை துள்ளும் சங்க நூற்களும், கற்பனை மணம் கமழும் கடவுட் காதைகளும அறிவரோ, இவரிடம் தமிழ் எங்ஙனம் உறவு கொள்ளும், அகவல் அறியார், அந்தாதி தெரியார், கலம்பகம் கண்டவரல்ல, கட்டளைக் கலித்துறை படித்தோரல்ல, என்ன செய்வர், எமது அகத்தியன் அருளிய தமிழ் இந்தச் சழக்கருக்குத் துணை நிற்குமா? ஏழுவாய், பயனிலை, செயப்படுபொருள் எனும் அடிப்படையேனும் அப்பழுக்கின்றி அறிவரா என்று பேசினவர்களைத் திராவிட நாடு அறியும். இன்று அவர்கள் சாட்டும் குற்றச்சாட்டு, தமிழின் அழகை முழுக்க முழுக்கப் பயன்படுத்திக் கொண்டு, மக்களை மயக்கி, தகுதிக்கு மேற்பட்ட செல்வாக்கை இவர்கள் தேடிக் கொண்டார்கள் என்பதாகும். இந்தக் குற்றச்சாட்டு ùச்தேன் போல் இனிக்கிறது. ஆனால், இதைப்பெற எத்தனை ஆண்டுகள் எத்தணை கசப்பையும் கடுகடுப்பையும், காய்ச்சலையும் கடும் எதிர்பபையும், கண்டோம், உண்டோம், என்று எண்ணுகிறோம், ஐக்கமல்ல, புன்னகை தவழ்கிறது, நம்மால் இவ்வளவையும் தாங்கிக் கொள்ள முடிந்ததே என்ற நினைப்பினால்.

பன்னிரண்டு ஆண்டுகள் பணியாற்றினேம் - ஓர் பாசறையே அமைந்துவிட்டது.

துணை அதிகமின்றிப் பயணம் துவக்கினோம். இன்றோ, தோழர்கள் அணிவகுப்புக் கண்டு ஆக மகிழ்கிறோம்! திராவிட நாடு இன்று, பாலைவனது:து நீரோடை அல்ல, பாங்கான சோûயிலே மெலலிய பஞ்காற்றெழுப்பும் பணியாளன் அந்தச் சோலைதான் எவ்வளவு சோபிதத்துடன் இன்று இருக்கிறது! எத்தணை எத்தணை துறைகளிலே, இன்று எழில் நடமிடக் காண்கிறோம்! இருளை அகற்றிடும் இன்பக் கதிர்கள், எங்கும்!! நம்பிக்கை நாதம்! விடுதலை முரசொலி! வெற்றிப் பண்! ஆம்! ஆம்!! திராவிட நாடு இன்று, வீரர் பலர் புடைசூழ ஊலா வருகிற காட்சி காண்கிறோம், ஒளி அளிக்கும் வீரர்கள்! வாரீர்!! என்று நாடு அன்புடன் அழைத்திடும் பொற்காலம் காண்கிறோம். தமிழ் அறிவரோ என்று பேசினோர், தமிழ் தந்த செல்வமப்பா இவ்வளவும் என்று பேசுமளவுக்கு, ஓர் வாய்ப்பான கட்டம் காண்கிறோம். இந்த மகிழ்ச்சியை மாலையாக அணிந்து கொண்டு, மருட்சி நிரம்பிய கண்களுடன் தமிழகத்தைக் கண்டு உரையாட, கருத்தளிக்க, கருத்துப் பெறப் புறப்பட்ட திராவிட நாடு நலம், நலமறிய ஆவா! என்ற நாட்டவரிடம் உரையாடும் நண்பனென்ற நிலையை அடைந்திருக்கிறது!

திராவிட நாடு - கொண்டுள்ள எண்ணம், திராவிடத் தனி அரசு அமைக்கப்படுகிறது என்ற வெற்றி அறிக்கையை வெளியிடும் பொன்னாள் புலருவதற்கான பணியாற்ற வேண்டும் - ஆதரவாளர்கள் அதற்கான நல்வாய்ப்பினை நல்க வேண்டும் என்பதுதான். அன்பர் அருளும் ஆதரவு, திராவிட நாடு ஆர்வம் பெற உதவுகிறது. நம்பிக்கை வளருகிறது, எனவே, உரிமையுடன் மேலும் ஆதரவு கேட்கும் முறையிலே, பேசுகிறது.

ஆற்றியுள்ள அரும் பணியினைக் காட்டி மட்டுமல்ல, இனி ஆற்றிட வேண்டிய பெரும்பணிகளை நினைவுபடுத்தி ஆதரவு கேட்கிறது.

பலப்பல வெற்றிகள் கண்டிருக்கிறோம் - இல்லை என்று எதிரியும் கூறார்.

தமிழின் இனிமையை நாடு அறியும் நற்பணியினை ஓரளவு வெற்றியுடன் செய்திருக்கிறோம்.

பழந்தமிழரின் நெறியினை அறிந்திடவும், உடையே புகுந்த ஆரியத்தைக் களைந்திடும் உறுதி பெறவும், பணியாற்றினோம்.

புராணப்புரட்டுகளை, மதத்தின் பேரால் நடைபெறும் அக்ரமங்களைச் சாடிச்சாடி, இன்று புராணிகர்கள் புதுப்பொருள் தேடவும், மடாதிபதி மக்களிடம் மன்றாடவுமான நிலைவளரக் காண்கிறோம்.

கற்பனைச் சேற்றிலே கழுத்தளவு புதைந்து போயிந்த ரசிகர்கள் கூட, திருக்குறளின் மேம்பாட்டினை எடுத்துரைத்திடும் ஏற்புடைய செயலில் உடுபடக் காண்கிறோம்.

உலகிலே நடைபெற்ற எந்த நகிழ்ச்சியையும் பற்றிக் கவலையற்றுக் கிடந்த ஓம் நமச்சிவாயங்கள், இன்று, உலக வரலாறு தேடி ஆலையும் புது ஜென்மம் எடுத்திடக் காண்கிறோம்.

இவைகள் எல்லாவற்றையும்விட, நமது இன்னுயிர் எனத்தக்க, தனி அரசு தத்துவம், இன்று எங்கும் கேட்கும் இன்பக் கவிதையாகி இருப்பதைப் பெருமிதத்துடன் காண்கிறோம். நாம் திராவிடர், வீரர் - நம்மை வீணர் வஞ்சகத்தால் வீழ்த்தினர், என்ற பேருண்மையை மக்கள் அறிந்து, இனி நாம் இடர் களைந்து விடுதலைச் சுடர் கொளுத்துவோம், தாய்த் திருநாட்டின் மீது தன்னலக்காரர் பூட்டியுள்ள தளைகளை அறுத்தொழிப்போம், அந்த திருத்தொண்டுக்கு நம்மை நாமே ஆர்ப்பணித்துக் கொள்வோம், என்று எழுச்சி பெற்ற நிலை காண்கிறோம் வாகை! வாகை! வாகை சூடியே தீருவோம்! என்ற நல்லதோர் நம்பிக்கை பெறுகிறோம். ஆம்! பெற்றுள்ள வெற்றிகள் பெருமைக்குரியன! ஆனால இனிப்பெற வேண்டிய வெற்றியுடன் ஒப்பிடும் போது...! அந்த வெற்றி! இன்பத் திராவிடம்! நமது தந்தையர் நாடு! எத்தனென்றும் ஏமாளி என்றும், உயர் குலத்தோனென்றும் தாழ்ந்தவனென்றும், முதலாளி என்றும் தொழிலாளி என்றும் உள்ள கொடுமையும் மடமையும ஒழிக்கப்பட்டு, கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப்போக என்ற குறிக்கோள் உடேறி, ஒன்றே குலம் என்ற உத்தமக் கோட்பாடு வெற்றி பெற்று, சக்திக்கேற்ற உழைப்பு தேவைக்கேற்ற வசதி என்ற தத்துவம் நடைமுறையாகி, அன்பும் அறமும் செழித்து, இன்பம் பெருக்கெடுக்கும் எழிலோவியமாகத் திராவடம் ஆரசோச்சும், அந்நாள் காணவேண்டும்! அதற்கே எந்நாளும் உழைத்திட வேண்டும், நமது ஆற்றல் அவ்வளவும், அந்தத் திருநாள் காணத்தான் செலவிடவேண்டும். எந்தத் துறையில் கிடைக்கும் வாய்ப்பும் இந்த நோக்கத்துக்கே பயன்படுத்தப்படவேண்டும். பொன்நகை முதல் புன்னகை வரையிலே, காதலிக்கும் கட்டழகிக்குத்தானே காணிக்கை இக்குவர், காதற்கடிமை உணர்ந்தோர்! ஆஅதே போல, நம் நெஞ்சிலே அரசு செலுத்தி, நமது கண்களிலே ஓர் புத்தொளியூட்டும், இலட்சியமெனும், மங்கை நல்லாளுக்கே எல்லாம்!! இடையே கடைகாட்டி இடையாட்டி, கானம்பாடி காமமூட்டி காரிகை வருவாள் - கருத்தழியக்கூடாது - அதோ! ஏன் இதயராணி என்று கூறி, குலுக்கி நடந்து வரும் கொவ்வை அதரத்தாள், வெட்கித் தலைகுனிந்து தோற்றொடச் செய்திடல் வேண்டும். பெரும் பணியாற்றிட வேண்டும் கட்டம் இது! நம்மை நாம் அறிந்து கொண்டோம், நாமிருக்கும் நாடு நமது என்பதைத் தெரிந்து கொண்டோம், இங்கு வீணர் உண்டு கொழுத்திடக் காண்கிறோம், சொந்த நாட்டில் பிறர்க்கு அடிமையாகிச் சோர்ந்து கிடப்போரைக் காண்கிறோம். விடுதலைப் போரைத் துவக்கி விட்டோம்! போர், கடுமையாக இருந்தே தீரும்! களம் கண்டு வந்துள்ளோம் - இனிக் கடும்போரில் வெற்றி காண வேண்டும், அப்பணியே பெரும்பணி, அதற்கான ஆற்றலை அளித்திடும் வாய்ப்பினை, திராவிட நாடு பெற விரும்புகிறது. அளித்திட வாரீர் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

வெண்புறா பறக்கிறது, வேடனும் உலவுகிறான்! என்று கூறத்தக்க நிலைதான் இன்று - புத்தறிவும் புத்தார்வமும் இருக்கிறது, போர்க்கோலம் பூண்ட விடுதலை வீரர்கள் உள்ளனர், எனினும் பழமையன் பாதுகாவலர்களும் ஆதிக்க வெறியர்களும் புறமுதுகிட்டு ஓடிவிடவில்லை படைக்கலத்தைக் கீழே போட்டுவிடவில்லை, பதுங்கிக் கொண்டுள்ளனர், தாக்க! வஞ்சகம் இனி வேகமாக வீசப்படும்! வழியிலே படுகுழிகள், மேலே பச்சை ஆலைப்போர்வை! இந்நிலையில், திராவிட நாடு அறப்போர் முரசு கொட்டும் அரும்பணியை, இதுவரை செய்ததைவிட முனைந்து செய்து தீரவேண்டும்.

பன்னிரண்டாண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட, இன்று உலகுக்கும் நமது மக்களுக்கும் உள்ள தொடர்புகள் அதிகம்.

உலகிலேயே, நிகழ்ச்சிகள், வேக வேகமாக நடைபெற்ற வண்ணமுள்ளன.

கருத்தலைகள் பலப்பல - பிரச்சாரப் புயலும் சாமான்யமானதல்ல.

மக்களிடை மலர்ந்துள்ள அறிவு வேட்கையை வாய்ப்பாக்கிக் கொண்டு, மோகவிடாய் கொண்டவனுக்கு நஞ்சூட்டிச் சாய்த்திடும் கெண்டை விழிக்காரிபோல, மக்கள் மனதிலே செய்திகளைப் புகுத்தி, அவர்களைச் சொக்க வைத்து, ஆமாம் சாமிகளாக்கிடலாம் என்ற தீதான திட்டமிட்டுத் திரிபவர்களும் உள்ர்!

நாடு மீட்கும் காரியம் எத்தணை ஆபத்து நிரம்பியது என்ற அச்சத்தை மூட்டி, வீரரையும் விரண்டோடச் செய்ய எண்ணும் வன்னெஞ்சர் உள்ர், கொஞ்சு மொழியும் பேசுகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில், திராவிட நாடு, உலகப் பிரச்சனைகளை மக்கள் ஏய்ந்தறிந்து திராவிடத் திருநாட்டினைப் பெறும அறப்போருக்கு அந்தப் பிரச்சனைகள் எவ்வகையில் பயன்பட வேண்டும் என்று எடுத்துரைக்கும் பணியினை மும்முரமாகச் செய்ய விரும்புகிறது.

முற்போக்குக் கட்சிகளிடையே மூண்டுவிடும் மாச்சரியங்களை மட்டுப்படுத்தவும், கட்டுக்குக் கொண்டு வரவும், இயன்றால் அடியோடு களைந்திடவும், திராவிடநாடு பணியாற்றும்.

ஆர்வம் ஆர்ப்பரிப்பு ஆகிவிடாமலும், அமைதி செயலற்ற போக்காக மாறிவிடாமலும், பார்த்துக் கொள்ள வேண்டும்.

கொள்கைப்பற்று குறைந்திடாத தன்மையும் வேண்டும் பிற கொள்கையாளர்களின் மனதை மாற்றி, நட்புரிமை கொண்டாடும் வகையில் அறிதல் வேண்டும்.

அறப்போர்த்திறனும் வளர வேண்டும், இக்கவேலைப் பயிற்சியும் நிரம்ப வேண்டும்.

போரிடும் முறையுடன் பாதுகாத்துக் கொள்ளும் பக்குவமும் தெரிந்திட வேண்டும்.

துணை தேடிப்பெறும் போக்கும் வேண்டும், துணை என்ற வடிவில், பிணி வந்து சேராமற் பார்த்துக் கொள்ளவும் வேண்டும்.

நமது இலட்சியத்தை ஆடைவதற்காக, எந்தெந்தத் துறைகளிலே துணை தேடலாம், வாய்ப்புக் காணலாம் என்ற முறையிலே ஆர்வம் வேண்டும், எதிலும் சிறைப்பட்டுவிடாத திறமையையும் பெற்றாக வேண்டும்.

ஒத்த கருத்தினர் உள்ள இடமெல்லாம் கண்டறிந்து உறவு கொண்டாடவேண்டும், அதுகாலை, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமையும் வேண்டும்.

விழிப்புணர்ச்சி நிரம்ப வேண்டும். வீண் ஆரவாரத்தில் சபலம் தட்டக் கூடாது.

பொலிவும் வலியும் தேட வேண்டும், ஆனால் அதுதான் பயணத்தின் கடைசி கட்டம் என்ற எண்ணம் எழலாகாது.

நிரம்ப வேலை இருக்கிறது, நண்பர்களே! நிரம்ப இருக்கிறது!

இதுவரை நாம் செய்தவேலை, மலையைக் குடைவது என்றால், இப்போது பெரும்பாறைகளைக் கவிபாட வைத்திட வேண்டும்.

யாழ் கிடைத்துவிட்டது, இனி இசைப் பயிற்சி வேண்டும்.

கூர்வாள் கிடைத்துவிட்டது, இனிக் குறிபார்த்து வீசும் பயிற்சி வேண்டும்.

மீசை அரும்புகிறது, இனி அற்ப ஆசைகள் அரும்பலாகாது, ஏறு! ஏறு! முன்னேறு! இலட்சியப் பாதையில்!! என்று செல்லவேண்டும்.

திராவிட நாடு இந்தக் கட்டத்தில், பணிபுரியும் வாய்ப்புப் பெறுவதை எதிர்பார்த்து, உங்கள் ஆதரவைக் கேட்கிறது.

திராவிட நாடு யாரையும் ஆனவாசியமா அலட்சியப்படுத்தாமல், ஆனால் அதேபோது எவருக்கும் அடிமைப்படாமல், யாரையும் தூற்றாமல், எவருக்கும் துதிபாடிடாமல், அதேபோது எந்த உண்மைக் கருத்தையும் எடுத்துரைப்பதிலே ஊறு நேரிடுமோ என்று அஞ்சிடாமல், மாற்றார் யாரைப் பற்றியும் பொறாமையுள்ளங் கொள்ளாமல், பொச்சரிப்புக் கொண்டோர்க்கும் பொறாமை கண்டு புன்னகையைப் பதிலாக வீசிவிட்டு, நேர்மை வழியினின்றும் நெறி தவறாமல் பன்னிரண்டாண்டுகள் பணியாற்றி வந்திருக்கிறது - இனியும் அந்த முறையிலேயே பணியாற்றும் பன்னிராண்டாண்டுப் பயிற்சி பணியின் தரத்தையும், அதனாலாய பயனையும் வளர்ச்சி அடையச் செய்திருக்கிறது என்பது எவரும் ஏற்கும் உண்மையாகும்.

எனவே, இந்தப் பதின்மூன்றாம் ஆண்டு துவக்கம், மகிழ்ச்சியும் நம்பிக்கையும் கலந்ததாக அமைகிறது.

திராவிடநாடு இன்று தனித்திருக்கும் நிலையில் இல்லை - அறிவீர்கள்.

இதோ என் இளவல், வேல்வீச்சு வல்லோன்! ஆதோ ஏன் உடன்பிறந்தோன், காதலி வீசும் பூச்செண்டை எடுத்து மகிழத்தக்க பருவத்தினன், ஆனால், அதோ எதிரி வீசிய ஏறி உட்டி, அதனை எடுத்தெறிந்துவிட்டு, புலி எனப்பாய்கிறான் பாரீர், இந்த ஏறுநடை இளைஞன், சங்க காலத் தமிழன் தனிச்சிறப்பினை விளக்கிடும் பண்பினன்! அந்தக் காளையா! கண்டீரா! அவன் கண் ஊமிழும் கனலை! புரட்டர், கள்ளமில்லா உள்ளம் படைத்தோரைக் கெடுத்திடும் போக்கினைக் கண்டு சினங் கொண்டு கிளம்பிக் களம் சென்று கடும் போரிடும் வீரன், நல்ல தம்பிகள் நாட்டை மீட்டிடும் நற்பணியாற்றிடும் தங்கக் கம்பிகள்! என்று கூறிக் களிப்படையும் மூத்த மகன் திராவிட நாடு! ஆதரவு அளித்திடும்படி கேட்கும் உரிமை கொண்டது, உங்கள் ஏடு, திராவிட நாடு ஆதரவு தந்து, அதன் பொலிவும் வலிவும் வளரச் செய்யும் பொறப்பு உம்முடையது. அதை அறிந்து நடக்கும் ஆற்றல் அறிந்தவர்கள் நீவிர்.
(4-7-54 திராவிடநாடு)